search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "படுகாயம்"

    • மக்கள் மீது அடுத்தடுத்து வந்த கார்கள் மோதியதால் பெரும் விபத்து.
    • சிலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்.

    இலங்கையின் பதுளை மாவட்டத்தில் கார் பந்தய திடலில் இன்று கார் பந்தயப் போட்டி நடைபெற்றது.

    ஏற்பட்ட விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 21 பேர் காயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    காயம் அடைந்தவர்கள் தியத்தலாவ, பண்டாரவளை மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இதில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    கார் பந்தயத்தின்போது, கார் செல்வதற்கான பாதையைவிட்டு விலகி பார்வையாளர்கள் மீது மோதியுள்ளது. விபத்துக்குள்ளான காரை சூழ்ந்த மக்கள் மீது அடுத்தடுத்து வந்த கார்கள் மோதியதில் பெரும் விபத்து ஏற்பட்டது.

    இதனால், உயிரிழப்புகளும், படுகாயங்களும் அதிகளவில் பதிவாகியுள்ளது. கண்ணிமைக்கும் நேரத்திற்குள் விபத்து நடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

    • காயமடைந்த நவீன்குமாரை உடனடியாக மீட்டு மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
    • கீழவளவு போலீசார் வழக்குப்பதிவு செய்து காரில் தப்பிச் சென்ற 4 பேர் கும்பலை தீவிரமாக தேடி வருகின்றனர்.

    மேலூர்:

    மதுரை மாவட்டம் மேலூர் அருகேயுள்ள கீழவளவு பகுதியை சேர்ந்தவர் நவீன்குமார் (வயது30). இவர் வெளிநாடுகளுக்கு அவ்வப்போது வேலைக்கு சென்று வருவது வழக்கம். உள்ளூரிலும் பல்வேறு வேலை பார்த்து வந்துள்ளார்.

    இந்தநிலையில் நேற்று இரவு சுமார் 9 மணியளவில் கீழவளவு பஸ் நிறுத்தம் அருகே தனது நண்பர் ஒருவரின் காரில் நவீன்குமார் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார். பேருந்து நிறுத்தம் என்பதால் அருகில் செயல்படும் ஆட்டோ ஸ்டாண்ட் கண்ணன் என்பவர் தனது ஆட்டோவுடன் நின்றிருந்தார். நவீன்குமார் அமர்ந்திருந்த கார், பஸ் நிறுத்தம் அருகே உள்ள சத்தியமூர்த்தி (40) என்பவரின் ஜெராக்ஸ் கடை முன்பாக நின்றிருந்தது.

    இரவு 9 மணி என்பதால் கடையை அடைக்கும் பணியில் சத்தியமூர்த்தி ஈடுபட்ட படி கடை வாசலில் நின்றிருந்தார். அப்போது அவ்வழியாக கார் ஒன்று மின்னல் வேகத்தில் வந்து நவீன்குமார் அமர்ந்திருந்த கார் அருகே வந்து நிறுத்தப்பட்டது. அந்த காரில் இருந்த 4 பேர் கொண்ட கும்பல் கண்ணிமைக்கும் நேரத்தில் நவீன் குமாரை நோக்கி டிபன் பாக்ஸ் வெடிகுண்டை வீசியது.

    இதை சற்றும் எதிர்பாராத நவீன்குமார் நிலை தடுமாறினார். டிபன் பாக்ஸ் வெடிகுண்டு வெடித்து சிதறியதில் காரின் கண்ணாடிகள் சுக்கு நூறாக நொறுங்கின. இந்த சம்பவத்தில் நவீன்குமார் படுகாயமடைந்தார். டிபன் பாக்ஸ் வெடிகுண்டு வெடித்ததில் அருகில் நின்றிருந்த ஆட்டோ டிரைவர் கண்ணனும் காயமடைந்தார்.

    அதேபோல் ஜெராக்ஸ் கடை வாசலில் நின்றிருந்த உரிமையாளர் சத்திய மூர்த்திக்கும் காயம் ஏற்பட்டது. இதனை சற்றும் எதிர்பாராத அந்த பகுதியை சேர்ந்தவர்கள் தங்களது கடைகளை அடைத்துவிட்டு சென்றனர். சிலர் மட்டுமே சம்பவம் நடந்த இடத்தில் கூடினர். இதற்கிடையே டிபன் பாக்ஸ் வெடிகுண்டை வீசிய கும்பல் தாங்கள் வந்த காரில் தப்பி சென்றனர். இதையடுத்து அப்பகுதி போர்க்களம் போல் காட்சியளித்தது.

    தகவலறிந்த மேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரீத்தி, இன்ஸ்பெக்டர் ஜோதிபாசு மற்றும் கீழவளவு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணையிலும், மீட்பு பணியிலும் ஈடுபட்டனர். அங்கு திரண்டிருந்த கூட்டத்தை கலைந்து செல்ல செய்தனர். காயமடைந்த நவீன்குமாரை உடனடியாக மீட்டு மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    மேலும் டிபன் பாக்ஸ் வெடிகுண்டு வீச்சு தாக்குதல் சம்பவத்தில் காயமடைந்த ஆட்டோ டிரைவர் கண்ணன், ஜெராக்ஸ் கடை உரிமையாளர் சத்தியமூர்த்தி ஆகியோர் சிகிச்சைக்காக மேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் வெளிநாட்டில் பணியாற்றியபோது நவீன்குமாருக்கு மற்றொரு கும்பலுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக முன்விரோதம் இருந்துள்ளது. புகையிலை பொருட்கள் விற்பனை தொடர்பாக இந்த விரோதம் ஏற்பட்டுள்ளது. இந்த பகை காரணமாக நவீன்குமாரை கொலை செய்வதற்காக டிபன் பாக்ஸ் வெடிகுண்டை கும்பல் வீசி சென்றிருக்கலாம் என்பது தெரியவந்துள்ளது.

    இதுகுறித்து கீழவளவு போலீசார் வழக்குப்பதிவு செய்து காரில் தப்பிச் சென்ற 4 பேர் கும்பலை தீவிரமாக தேடி வருகின்றனர். மக்கள் நடமாட்டம் மிகுந்த பஸ் நிறுத்தம் அருகே சினிமா பாணியில் டிபன் பாக்ஸ் வெடிகுண்டை வீசி சென்ற சம்பவம் கீழவளவு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் வினீஷ், ஷெரின் இருவரும் படுகாயமடைந்தனர்.
    • நாட்டு வெடிகுண்டு தயாரித்தபோது வெடி விபத்து நடந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கண்ணூர் பானூர் புளியந்தோடு பகுதியை சேர்ந்தவர் வினீஷ்(வயது25), புத்தூர் பகுதியை சேர்ந்தவர் ஷெரின்(25). இவர்கள் இருவரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தொண்டர்கள் ஆவர்.

    இந்நிலையில் இவர்களின் ஒருவரது வீட்டின் மாடியில் இன்று அதிகாலை நாட்டு வெடிகுண்டு வெடித்தது. இதில் வினீஷ், ஷெரின் ஆகிய இருவரும் படுகாயமடைந்தனர். ஒருவரின் கைகள் துண்டிக்கப்பட்டன. மற்றொருவருக்கு முகத்தில் படுகாயம் ஏற்பட்டது.

    இதுகுறித்து தகவலறிந்த அக்கம்பக்கத்தினர் அங்கு சென்று படுகாயமடைந்து கிடந்த இருவரையும் மீட்டு கண்ணூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்பு அரசு ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டனர். அங்கு இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நாட்டு வெடிகுண்டு தயாரித்தபோது வெடி விபத்து நடந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

    இது தொடர்பாக தகவலறிந்த போலீசார், சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். நாட்டு வெடிகுண்டு வெடித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தொண்டர்கள் இருவர் படுகாயமடைந்த சம்பவம் கண்ணூர் மட்டுமின்றி மாநிலம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • கோவிலில் சுவாமி தரிசனம் முடித்த பின்னா் நேற்று மாலையில் அங்கிருந்து சென்னை நோக்கி காரில் புறப்பட்டனா்.
    • விபத்தில் காரில் இருந்த 6 பேரும் படுகாயம் அடைந்தனா். இதில் காரின் முன் பகுதி அப்பளம் போல் நொறுங்கியது.

    ஆத்தூர்:

    சென்னை அம்பத்தூரை சேர்ந்தவர் சேகா்(வயது 42). இவர் தனது குடும்பத்தினருடன் சென்னையில் இருந்து திருச்செந்தூருக்கு கோவிலுக்கு ஒரு காரில் வந்தார்.

    அப்போது அவருடன் அவரது மனைவி நித்திய கலா (41), அவர்களது மகள் தீக்ஷித் (13), மகன் ரித்விக்(8) ஆகியோரும், உறவினர்களான வனஜா(61), காா்த்திக் (40) ஆகியோரும் வந்திருந்தனர். காரை சேகர் ஓட்டி சென்றார்.

    கோவிலில் சுவாமி தரிசனம் முடித்த பின்னா் நேற்று மாலையில் அங்கிருந்து சென்னை நோக்கி காரில் புறப்பட்டனா். திருச்செந்தூர்-தூத்துக்குடி மெயின் ரோட்டில் பழைய காயல் அருகே கார் சென்ற போது எதிர்பாராதவிதமாக எதிரே வந்த லாரி மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் காரில் இருந்த 6 பேரும் படுகாயம் அடைந்தனா். இதில் காரின் முன் பகுதி அப்பளம் போல் நொறுங்கியது.

    இதுகுறித்து தகவல் அறிந்த ஆத்தூர் போலீசார் அங்கு விரைந்து சென்று காரின் இடிபாட்டில் சிக்கிய 6 பேரையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த விபத்து தொடர்பாக ஆத்தூா் போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவரான நாமக்கல் மாவட்டம் சோ்ந்தமங்கலம் தாலுகாவை சேர்ந்த ராமசாமி (40) என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • துருக்கி ஆதரவு பெற்ற குர்தீஷ் இன கிளர்ச்சியாளர் குழுவினர் அடிக்கடி தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • அஜாஜ் நகரில் கடைசியாக 2 ஆண்டுகளுக்கு முன் கார் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது.

    துருக்கி எல்லையையொட்டிய சிரியா நாட்டின் அஜாஜ் நகரில் உள்ள பிரபல சந்தை ஒன்றில் நிறுத்தப்பட்டிருந்த காரில் நேற்று திடீரென வெடிகுண்டு வெடித்தது.

    இந்த வெடிகுண்டு சம்பவத்தில், 8 பேர் உயிரிழந்தனர். 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த மீட்பு குழுவினர், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து, மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டு உள்ளனர்.

    இந்த சம்பவத்திற்கு எந்தவொரு அமைப்பும் உடனடியாக பொறுப்பேற்கவில்லை. சிரியாவில் அதிபர் பஷார் அல் ஆசாத் தலைமையிலான அரசுக்கு எதிராக, துருக்கி ஆதரவு பெற்ற குர்தீஷ் இன கிளர்ச்சியாளர் குழுவினர் அடிக்கடி தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர்.

    போரால் பெரிதும் பாதிக்கப்பட்ட சிரியாவில், இந்த நகரில் கடைசியாக 2 ஆண்டுகளுக்கு முன் கார் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. அதன்பின்னர், நிலைமை அமைதியாக காணப்பட்டது.

    இந்நிலையில், இந்த பகுதியில் குண்டுவெடிப்பு சம்பவம் ஏற்பட்டு உள்ளது. சிரியாவின் வடமேற்கு எல்லை பகுதியில் உள்ள முக்கிய நகரங்களில், கடந்த சில ஆண்டுகளாக மக்கள் நெருக்கடியான பகுதிகளில் அடிக்கடி குண்டுவெடிப்புகள் நடத்தப்பட்டு வந்தன.

    • ரமலான் தொடங்கியதில் இருந்து நாடு முழுவதும் பல குண்டு வெடிப்பு.
    • காலை 8 மணியளவில் வங்கி வெளியே காத்திருந்த மக்களை குறிவைத்து குண்டு வெடித்துள்ளது.

    ஆப்கானிஸ்தானின் காந்தஹார் நகரில் இன்று நடந்த தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 12 பேர் பேர் படுகாயமடைந்துள்ளனர்.

    மார்ச் 11 அன்று இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமலான் தொடங்கியதில் இருந்து நாடு முழுவதும் பல குண்டு வெடிப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதில், சில சம்பவங்களை தலிபான் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

    மத்திய காந்தஹார் நகரத்தில் உள்ள நியூ காபூல் வங்கிக் கிளைக்கு வெளியே இன்று காலை 8 மணியளவில் காத்திருந்த மக்கள் குழுவை குறிவைத்து வெடித்துள்ளது.

    இதுகுறித்து கந்தஹார் மாகாணத்தின் தகவல் மற்றும் கலாச்சார இயக்குனர் இனாமுல்லா சமங்கானி கூறுகையில்" தற்கொலைப் படை தாக்குதலில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். 12 பேர் படுகாயமடைந்துள்ளனர்.பொதுவாக மக்கள் தங்கள் சம்பளத்தைப் பெறுவதற்காக வங்கியில் கூடுகிறார்கள். அப்போது குண்டு வெடித்துள்ளது. காயமடைந்தவர்கள் கொண்டு செல்லப்பட்ட நகரின் மருத்துவமனையில் நிலைமை கட்டுப்பாட்டில் உள்ளது" என்றார்.

    இதற்கிடையே, தலிபான் அதிகாரிகள் வங்கிக்கு வெளியே உள்ள பகுதியை சுற்றி வளைத்தனர். பத்திரிக்கையாளர்களை அங்கிருந்து வெளியேற்றியுள்ளனர்.

    இருப்பினும், குண்டுவெடிப்பை அடுத்து ஆம்புலன்ஸ்களில் மயக்கமடைந்தவர்கள் அல்லது இறந்தவர்களின் உடல்கள் ஏற்றப்பட்டதாகவும், சம்பவ இடத்தில் தீயணைப்பு வீரர்கள் மற்றும் பாதுகாப்புப் பணியாளர்கள் அப்பகுதியை சுத்தம் செய்து கொண்டிருந்தனர், அங்கு இரத்தம், உடைகள் மற்றும் காலணிகள் தரையில் சிதறிக்கிடந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

    • மீட்பு படையினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
    • மக்கள் தொழிற்சாலை வாயிலுக்கு வெளியே ஓடுவதை பார்க்க முடிந்தது.

    ஹரியானா மாநிலம் ரேவாரி மாவட்டத்தில் உள்ள பெரிய தொழில் மையமான தருஹேராவில் உள்ள லைஃப் லாங் நிறுவனத்தில் கொதிகலன் வெடித்து விபத்து ஏற்பட்டது.

    இதில், 40க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் படுகாயமடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். 

    இதுதொடர்பாக வெளியான வீடியோ ஒன்றில், வானத்தில் புகை மூட்டத்துடன் மக்கள் தொழிற்சாலை வாயிலுக்கு வெளியே ஓடுவதை பார்க்க முடிந்தது.

    இதுகுறித்து சிவில் சர்ஜன் டாக்டர் சுரேந்தர் யாதவ் கூறுகையில், " ரேவாரி, தாருஹேராவில் உள்ள ஒரு தொழிற்சாலையில் கொதிகலன் வெடித்துள்ளது. பலருக்கு தீக்காயம் ஏற்பட்டுள்ளது.

    சுமார் 40 பேர் காயமடைந்துள்ளனர். இதில் ஒருவருக்கு காயம் தீவிரமாக உள்ள நிலையில் மேலும், ஒரு தீவிர ரோஹ்தக்கிற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார்" என்றார்.

    • மேற்கு வங்காள முதல் மந்திரியாக மம்தா பானர்ஜி பதவி வகித்து வருகிறார்.
    • தலையில் காயத்துடன் மம்தா பானர்ஜி உள்ள புகைப்படம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    கொல்கத்தா:

    மேற்கு வங்காள முதல் மந்திரியாக மம்தா பானர்ஜி பதவி வகித்து வருகிறார். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும் இருந்து வருகிறார்.

    இந்நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எக்ஸ் தளத்தில், மம்தா பானர்ஜி மருத்துவமனையில் நெற்றியில் காயத்துடன் உள்ள புகைப்படத்தை வெளியிட்டுள்ளது. மம்தா பானர்ஜி விரைவில் நலம்பெற வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளது.

    நெற்றியில் காயத்துடன் மம்தா பானர்ஜி உள்ள புகைப்படம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    • பள்ளப்பட்டி பகுதியில் வந்தபோது திடீரென பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது.
    • 6 பேரின் நிலைமை மோசமாக இருந்ததால் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    மேலூர்:

    நெல்லை மாவட்டம் புளியங்குடி பகுதியை சேர்ந்த 42 பெண்கள் உள்பட 50 பேர் தனியார் பஸ்சில் இன்று காலை மேல் மருவத்தூர் கோவிலுக்கு புறப்பட்டனர். மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி 4 வழிச்சாலையில் காலை 10 மணியளவில் பஸ் வந்து கொண்டிருந்தது. அங்குள்ள பள்ளப்பட்டி பகுதியில் வந்தபோது திடீரென பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. அதே வேகத்தில் ரோட்டோர பள்ளத்தில் பஸ் பாய்ந்து தலைக்குப்புற கவிழ்ந்தது. அப்போது பஸ்சுக்குள் இருந்த பயணிகள் கூக்குரலிட்டனர். உடனே அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து பஸ்சில் சிக்கியவர்களை மீட்டனர். இந்த விபத்தில் பெண்கள் உள்பட 26 பேர் படுகாயமடைந்தனர்.

    இவர்கள் 108 ஆம்புலன்சு மூலம் மேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதில் 6 பேரின் நிலைமை மோசமாக இருந்ததால் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    இந்த விபத்து தொடர்பாக கொட்டாம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் வினோபா, ஏட்டு தெய்வேந்திரன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு மாநகர காவல் ஆணையர் விரைந்து ஆய்வு.
    • 10 விநாடிகளில் இரண்டு முறை வெடி சத்தம் கேட்டதாக தகவல்.

    கர்நாடகா மாநிலம், பெங்களூரு வைட் பீல்ட் பகுதியில் உள்ள ராமேஸ்வரம் கஃபே உணவகத்தில் இன்று வெடி விபத்து ஏற்பட்டது. வெடி விபத்தில், உணவகத்தில் இருந்த 3 ஊழியர்கள் மற்றும் ஒரு வாடிக்கையாளர் என 4 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு மாநகர காவல் ஆணையர் விரைந்து ஆய்வு செய்தார். மேலும், வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் தேசிய புலனாய்வு முகமை அமைப்பினர் ஆய்வு நடத்தியுள்ளனர்.

    இதில், சிலிண்டர் வெடிக்கவில்லை என்று முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. 10 விநாடிகளில் இரண்டு முறை வெடி சத்தம் கேட்டதாக கூறப்படுகிறது.

    இந்த சம்பவம், கை கழுவும் இடத்தில் நடந்துள்ளதாக தகவல் வெளியானது. வாடிக்கையாளர் விட்டுச் சென்ற பையில் வெடித்ததாக உணவகத்தின் உரிமையாளர் கூறியதாக எம்.பி தேஜஸ்வி சூர்யா எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 

    மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள காயம் அடைந்தவர்களிடமும் தேசிய புலனாய்வு முகமே அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே உணவகத்தில் நடந்தது குண்டுவெடிப்புதான் என கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர்,"முதற்கட்ட விசாரணையில் மேலோட்டமாக பார்க்கும் போது IED குண்டு வெடிப்பு போல் தெரிகிறது. ஆனால், இது சிலிண்டர் இல்லை. காவல்துறை முறையான அறிக்கை வழங்கிய பிறகுதான் எந்த தகவலும் தெரிவிக்க முடியும்" என்றார்.

    • காவல்துறை உயர் அதிகாரிகள் விசாரணை நடத்துகின்றனர்.
    • 3 ஊழியர்கள் மற்றும் ஒரு வாடிக்கையாளர் படுகாயம்.

    கர்நாடகா மாநிலம்,பெங்களூரு வைட் பீல்ட் பகுதியில் உள்ள ராமேஸ்வரம் கஃபே உணவகத்தில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது.

    வெடி விபத்தில், உணவகத்தில் இருந்த 3 ஊழியர்கள் மற்றும் ஒரு வாடிக்கையாளர் என 4 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு காவல்துறை உயர் அதிகாரிகள் விசாரணை நடத்துகின்றனர்.

    மேலும், உணவத்தில் சிலிண்டர் வெடித்ததா ? அல்லது வேறு ஏதேனுமா என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் மயில்சாமி, சேது, தனுஷ், ஹரீஸ் ஆகிய 4 இளைஞர்கள் மீது போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்தனர்.
    • போலீசார் குவிக்கப்பட்டு தீவிரமாக கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

    மேட்டூர்:

    மேட்டூர் அருகே கொளத்தூர் கோட்டை மடுவு பகுதியில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பள்ளி முடிந்து வீடு சென்ற சிறுமிகளை ஒரு தரப்பை சேர்ந்த இளைஞர்கள் கேலி, கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது.

    இதனால் ஆத்திரம் அடைந்த மற்றொரு தரப்பை சேர்ந்தவர்கள் மற்றும் பள்ளி மாணவியின் பெற்றோர், உறவினர்கள் நேற்று அந்த இளைஞர்களை அடித்து உதைத்துள்ளனர். இதில் படுகாயம் அடைந்த மயில்சாமி (வயது 22) சேலம் அரசு ஆஸ்பத்திரியிலும், சேது (20) தனுஷ் (24) ஆகிய 2 பேர் சிகிச்சைக்காக மேட்டூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

    இதுகுறித்து இளைஞர்கள் கொடுத்த புகாரின் பேரில் கொளத்தூர் போலீசார் 7 பேர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இதில் குமார், ரத்தினகுமார் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்து மேட்டூர் போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தலைமறைவாக உள்ள 5 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

    இதற்கிடையே சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் மயில்சாமி, சேது, தனுஷ், ஹரீஸ் ஆகிய 4 இளைஞர்கள் மீது போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்தனர். மேலும் அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க கருங்கல்லூர், காவேரிபுரத்தில் போலீசார் பாதுகாப்பு பணிகள் மேற்கொண்டு வருகின்றனர். போலீசார் குவிக்கப்பட்டு தீவிரமாக கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

    ×