search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கவுன்சிலர்"

    • வேகமாக வந்த கும்பல் தாங்கள் கொண்டு வந்திருந்த அரிவாளால் கவுன்சிலர் சித்ராவையும், அவரது கணவரையும் சரமாரியாக வெட்டியது.
    • ராஜா உள்ளிட்ட 5 பேரும் தப்பிச் சென்று விட்டனர். அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

    கோவை:

    கோவை அருகே உள்ள மலுமிச்சம்பட்டி அருகே உள்ள அவ்வையார் நகர் 2-வது வீதியைச் சேர்ந்தவர் ரவிக்குமார் (வயது 47). இவரது மனைவி சித்ரா (44). தி.மு.க.வைச் சேர்ந்த இவர் மலுமிச்சம்பட்டி பஞ்சாயத்து கவுன்சிலராக உள்ளார். இவருக்கு மோகன் (24) என்ற மகன் உள்ளார்.

    நேற்று இரவு 9.30 மணிக்கு வீட்டில் சித்ரா, கணவர் ரவிக்குமார், மகன் மோகன் ஆகியோர் இருந்தனர். அவர்கள் சாப்பிட்டு விட்டு தூங்குவதற்காக தயாராகிக் கொண்டு இருந்தனர்.

    அப்போது முகமூடி அணிந்தபடி வந்த 5 பேர் கும்பல் திடீரென வீட்டுக்குள் திபு, திபுவென புகுந்தனர். அவர்களை பார்த்து சித்ராவும், அவரது கணவரும் சத்தம் போட்டனர். நீங்கள் யார், எதற்காக வீட்டுக்குள் வருகிறீர்கள் என சத்தம் போட்டனர். அதற்குள் வேகமாக வந்த கும்பல் தாங்கள் கொண்டு வந்திருந்த அரிவாளால் கவுன்சிலர் சித்ராவையும், அவரது கணவரையும் சரமாரியாக வெட்டியது. இதனை தடுப்பதற்காக மகன் மோகன் ஓடி வந்தார். அவரையும் அந்த கும்பல் வெட்டியது. இதில் 3 பேருக்கும் தலை, கை, கால் என உடல் முழுவதும் காயம் ஏற்பட்டது. இதனால் 3 பேரும் சத்தம் போட்டனர்.

    அவர்களது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு திரண்டனர். அவர்களை பார்த்ததும் முகமூடி கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியது. காயம் அடைந்து உயிருக்கு போராடிய தாய்-தந்தை, மகன் ஆகிய 3 பேரையும் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    இந்த சம்பவம் குறித்து செட்டிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். கவுன்சிலர் சித்ரா கடந்த 6 மாதத்துக்கு முன்பு 3.5 சென்ட் நிலம் வாங்கி இருந்தார். இந்த நிலத்தை மலுமிச்சம்பட்டி அம்பேத்கர் நகரில் பெட்டிக்கடை நடத்தி வரும் ராஜா (23) என்ற வாலிபர் புரோக்கராக செயல்பட்டு வாங்கிக் கொடுத்துள்ளார். இதற்காக புரோக்கர் ராஜாவுக்கு 2 சதவீத கமிஷன் பேசப்பட்டு இருக்கிறது. ஆனால் அந்த கமிஷனை சித்ரா கொடுக்கவில்லை என தெரிகிறது. இதனால் அடிக்கடி சித்ரா குடும்பத்தினரை சந்தித்து ராஜா தகராறு செய்துள்ளார்.

    இந்தநிலையில் தான் நேற்று இரவு ராஜா தனது ஆதரவாளர்கள் 4 பேரை அழைத்துக் கொண்டு முகமூடி அணிந்து சித்ரா வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கு சித்ரா உள்பட குடும்பத்தினரை 3 பேரையும் அரிவாளால் வெட்டியது தெரியவந்தது.

    ராஜா உள்ளிட்ட 5 பேரும் தப்பிச் சென்று விட்டனர். அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள். நள்ளிரவில் தி.மு.க. பெண் கவுன்சிலர் ஒருவர் முகமூடி கும்பல் வெட்டப்பட்ட சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    • முதியோர் இல்லங்களுக்கு வழங்கிட 145-வது வார்டு கவுன்சிலர் டி.சத்தியநாதன் முடிவு செய்தார்.
    • மாநகராட்சி கமிஷனர் ராதா கிருஷ்ணனை சந்தித்து இதற்கான கடிதத்தை வழங்கினார்.

    சென்னை, ஆக.6-

    சென்னை மாநகராட்சி கவுன்சிலர்களுக்கு ஜூலை மாதம் முதல் மதிப்பூதியம் ரூ.10 ஆயிரம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாதமும் வழங்கப்படும் இந்த தொகையை மாநகராட்சி மூலம் நடத்தப்படும் காப்பகங்கள், அங்கீகரிக்கப்பட்ட முதியோர் இல்லங்களுக்கு வழங்கிட 145-வது வார்டு கவுன்சிலர் டி.சத்தியநாதன் முடிவு செய்தார்.

    கவுன்சிலர் பதவி வகிக்கும் வரை உள்ள காலத்திற்கான தொகையை ஆதரவற்றவர்களுக்காக வழங்கினால் மன நிறைவுடன் உணவு சாப்பிடுவார்கள் என கருதி அத்தொகையை மாநகராட்சிக்கே திருப்பி கொடுத்துள்ளார். மாநகராட்சி கமிஷனர் ராதா கிருஷ்ணனை சந்தித்து இதற்கான கடிதத்தை வழங்கினார்.

    • நாமக்கல் மாவட்டம் வேலூர் பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளது.
    • வேலூர் பேரூராட்சி பா.ம.க., கவுன்சிலர் சுகந்தி பேரூராட்சி அலுவலகம் முன்பு தனி ஒருவராக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    பரமத்தி வேலூர்:

    வேலூர் பேரூராட்சி பா.ம.க., கவுன்சிலர் சுகந்தி பேரூராட்சி அலுவலகம் முன்பு தனி ஒருவராக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    நாமக்கல் மாவட்டம் வேலூர் பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளது. இதில் கடந்த உள்ளாட்சி தேர்தலில் 17- வது வார்டு கவுன்சிலராக பா.ம.க.,வை சேர்ந்த சுகந்தி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    நேற்று மதியம் பேரூராட்சி அலுவலகத்திற்கு தனியாக வந்த கவுன்சிலர் சுகந்தி, பேரூராட்சி அலுவலக நுழைவாயில் முன்பு நின்று கொண்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது கவுன்சிலர் சுகந்தி கூறியதாவது:-எனது வார்டில் 450 வீடுகளில் 3000 பேர் வசித்து வருகின்றனர்.

    6 மாதங்களாக பேரூராட்சி தூய்மை பணியாளர்கள், எனது வார்டுக்கு சரிவர வருவதில்லை. பலமுறை பேரூராட்சி நிர்வாக அதிகாரியிடம் புகார் கொடுத்துள்ளேன் .ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    மேலும் எனது வார்டில் சாக்கடை தண்ணீர் தேங்கி கொசு உற்பத்தியாகும் இடமாக உள்ளது. இங்குள்ள குடிநீர் சின்டெக்ஸ் டேங்க் தொட்டி உடைந்து கீழே விழும் நிலையில் உள்ளது. எனது வார்டில் கொசு மருந்து அடித்து பல மாதங்கள் ஆகின்றது. ஒவ்வொரு முறையும் வந்து கூறும் போது செயல் அலுவலர் செய்து தருவதாக உத்தரவாதம் அளிக்கின்றார் .ஆனால் எந்த பணியும் நடக்கவில்லை. இதேபோல் தொடர்ந்தால் எனது கவுன்சிலர் பதவியை ராஜினாமா செய்ய முடிவு எடுத்துள்ளேன். நாமக்கல் மாவட்ட நிர்வாகம் இதற்கு தீர்வு காண வேண்டும் என்பதே எங்களின் கோரிக்கையாகும். இவ்வாறு அவர் கூறினார்.

    தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட கவுன்சிலர் சுகந்தி யிடம் பேரூராட்சி அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுத்து அனைத்து பணிகளையும் செய்து தருவதாக பேசி சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • மண்டல உதவி கமிஷனர் நவேந்திரன் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் கவுன்சிலர்கள் கலந்துகொண்டனர்.
    • விடுபட்ட பாதாள சாக்கடை பணிகளை அதிகாரிகள் விரைந்து முடிக்க நடவடிக்கை மேற்காொள்ள வேண்டும்.

    திருவொற்றியூர்:

    திருவொற்றியூர் மண்டல குழு கூட்டம் மண்டல குழு தலைவர் தி.மு.தனியரசு தலைமையில் நடைபெற்றது. மண்டல உதவி கமிஷனர் நவேந்திரன் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் கவுன்சிலர்கள் கலந்துகொண்டனர்.

    கூட்டத்தில் மக்களின் அடிப்படை வசதிகளுக்காக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் தெரு பலகைகள் அமைப்பது, திருவொற்றியூர் மண்டல அலுவலக மேல்தளத்தை ரூ. 75 லட்சம் செலவில் புதுப்பித்தல், நெட்டுகுப்பம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில், ரூ. 15.46 லட்சம் செலவில் மேற்கூரை அகற்றுதல் மற்றும் கட்டமைக்கும் பணி உட்பட 33 தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. மேலும் கவுன்சிலர்களுக்கு மாதம் ரூ. 10 ஆயிரம் மதிப்பூதியம் வழங்குவதாக அறிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. கவுன்சிலர்களின் கேள்விக்கு பதிலளித்து மண்டல குழு தலைவர் தனியரசு பேசியதாவது:-

    குடிநீர் வினியோகத்தில் ஏற்பட்டுள்ள நிலைமையை சரி செய்ய வேண்டும். வார்டுகளுக்கு, தனி உதவி பொறியாளர்கள் நியமிக்கப் படுவார்கள். விடுபட்ட பாதாள சாக்கடை பணிகளை அதிகாரிகள் விரைந்து முடிக்க நடவடிக்கை மேற்காொள்ள வேண்டும்.

    திருவொற்றியூர் மார்க்கெட் 8 கோடி ரூபாய் செலவில் 2 அடுக்குமாடியுடன் நவீனப்படுத்தப்படும். அதிகாரிகள், கவுன்சிலர்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • 30 ஏக்கராக இருந்த இந்த ஏரி தற்போது 17 ஏக்கராக சுருங்கி விட்டதாக கூறப்படுகிறது.
    • குண்டூர் ஏரிக்கரையில் வசிப்பவர்களை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து அவர்கள் கோஷங்கள் எழுப்பினர்.

    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு நகராட்சி 27-வது வார்டு பகுதியில் உள்ள குண்டூர் ஏரி ரூ.3 கோடி மதிப்பில் தூர்வாரப்பட்டு கரைகள் சீரமைக்கப்பட்டு உள்ளது. 30 ஏக்கராக இருந்த இந்த ஏரி தற்போது 17 ஏக்கராக சுருங்கி விட்டதாக கூறப்படுகிறது.

    இந்த ஏரிக்கரையில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக வீடுகட்டி நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரி தொகையை முறையாக செலுத்தி 53 குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். அவர்களை அகற்ற நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் செங்கல்பட்டு நகராட்சி கூட்டம் நகர மன்ற தலைவர் தேன்மொழி நரேந்திரன் தலைமையில் நடைபெற்றது. ஆணையர் சவுந்தர் ராஜன் முன்னிலை வகித்தார் கூட்டம் தொடங்கியதும் அ.தி.மு.க.கவுன்சிலர்கள் பானுப்பிரியா, சிந்தியா சுரேஷ், பவித்ரா சிவராஜன் சரிதாகுமார் ஆகியோர் தரையில் அமர்ந்து திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். குண்டூர் ஏரிக்கரையில் வசிப்பவர்களை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து அவர்கள் கோஷங்கள் எழுப்பினர். இதனால் நகராட்சி கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    நகர மன்ற தலைவர் தேன்மொழி நரேந்திரன், ஆணையர் சவுந்தர்ராஜன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதைத்தொடர்ந்து அ.தி.மு.க.கவு ன்சிலர்கள் போராட்டத்தை கைவிட்டனர். பின்னர் நகராட்சி கூட்டம் தொடர்ந்து நடைபெற்றது.

    • குமரி சங்கமம் நிகழ்ச்சியில் மேடையில் அனுமதிக்காததால் முடிவு
    • கவுன்சிலர் ரோஸிட்டாவிற்கு மேடையில் இடம் அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் நாகராஜா திடலில் குமரி மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் குமரி சங்கமம் நிகழ்ச்சி நடந்தது. மாநில பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு பேசினார்.

    கூட்டத்தில் மாவட்டம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கலந்துகொண்டனர். இந்த கூட்டம் 2024 பாராளுமன்ற தேர்தலுக்கு உத்வேகமாக அமைந்துள்ளதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

    இந்த நிலையில் நாகர்கோவில் மாநகராட்சி 24-வது வார்டு கவுன்சிலர் ரோஸிட்டா, நாகர்கோவில் கிழக்கு மாநகர பொருளாளர் திருமால் ஆகியோர் தங்களது பதவியை ராஜினாமா செய்வதாக மாநில தலைவர் அண்ணாமலைக்கும், மாவட்ட தலைவருக்கும் கடிதம் அனுப்பி உள்ளனர்.

    இது பாரதிய ஜனதாவி னர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கவுன்சிலர் ரோஸிட்டா மற்றும் திருமால் ஆகியோர் பதவியை ராஜினாமா செய்வதற்கான காரணம் குறித்து பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. அண்ணாமலை கலந்து கொண்ட கூட்டம் நடைபெற்ற பகுதி 24-வது வார்டுக்குட்பட்ட பகுதி ஆகும்.

    எனவே கவுன்சிலர் ரோஸிட்டாவிற்கு மேடையில் இடம் அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதையடுத்து மாநில தலைவர் அண்ணாமலைக்கு அணிவிக்க ஆளுயர ரோஜாப்பூ மாலை மற்றும் செங்கோலும் தயார் செய்து வைத்திருந்தார்.

    ஆனால் ரோஸிட்டாவை மேடையில் அனுமதிக்க வில்லை. இதனால் அண்ணாமலைக்கு போட வாங்கி வைக்கப்பட்டிருந்த மாலை மற்றும் செங்கோலை வழங்க முடியவில்லை. இது அவருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலை யில் தான் அண்ணாமலைக்கு வாங்கி வைக்கப்பட்டிருந்த மாலையை கவுன்சிலர் ரோஸிட்டா மற்றும் பா.ஜ.க. நிர்வாகிகள் சிலர் ஊர்வலமாக சென்று வேப்பமூட்டில் உள்ள காமராஜர் சிலைக்கு அணிவித்துள்ளனர்.

    • 50-வது வார்டு கவுன்சிலர் அய்யப்பன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
    • புத்தேரியை சேர்ந்த சகாயம் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் நாகராஜா திடலில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் குமரி சங்கமம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பாரதிய ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு பேசினார்.

    அவரை வரவேற்கும் வகையில் நாகர்கோவில் நகரின் பல்வேறு பகுதிகளிலும் விளம்பர பதாகைகள் கட்டப்பட்டிருந்தது. ஒழுகினசேரி சந்திப்பு பகுதியில் எந்த ஒரு அனுமதியும் இல்லாமல் விளம்பரப்பதாகைகள் வைத்திருப்பதாக வந்த தகவலையடுத்து மாநகராட்சி அதிகாரிகள் அங்கு சென்று பார்வையிட்டனர்.

    அப்போது அங்கு விளம்பர பதாகைகள் வைத்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து மாநகராட்சி இளநிலை பொறியாளர் கெபின்ஜாய் கோட்டார் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் பாரதிய ஜனதா கட்சியின் மீனவர் பிரிவு மாநில செயலாளரும் பெருங்கோட்ட பொறுப்பாளருமான புத்தேரியை சேர்ந்த சகாயம் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    இதே போல் வடசேரி சந்திப்பில் விளம்பர பலகைகள் வைத்திருந்ததாக வடசேரி போலீசில் புகார் செய்யப்பட்டது. புகாரின் பேரில் சகாயம், நாகர்கோ வில் மாநகராட்சி 50-வது வார்டு கவுன்சிலர் அய்யப்பன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    • பல்வேறு பகுதிகளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
    • பொதுமக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

    கூடுவாஞ்சேரி:

    நல்லம்பாக்கம் நடுநிலை பள்ளி வளாகத்தில் மாற்றுத்திறனாளி மாணவர்கள் உட்பட அனைத்து தரப்பு மாணவர்களுக்கும் சேர்த்து 5 லட்சம் செலவில் கழிப்பறை கட்டிடத்தை மாவட்ட கவுன்சிலர் திறந்து வைத்தார்.

    செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட வண்டலூர் அடுத்த நல்லம்பாக்கம் ஊராட்சியில், நல்லம்பாக்கம், கண்டிகை, காந்திநகர், மல்ரோசாபுரம், அம்பேத்கார் நகர், வலம்புரி நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில், ஊராட்சிக்கு உட்பட்ட நல்லம்பாக்கம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் 210 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இதில் பள்ளி வளாகத்தில் மாவட்ட ஊராட்சிகளின் 15-வது நிதி குழு மானியம் தூய்மை திட்டத்தின் கீழ் 5 லட்சம் மதிப்பில் மாற்றுத்திறனாளி மாணவர்கள் உட்பட ஆண்கள் பெண்கள் என அனைத்து தரப்பு மாணவர்களுக்கும் சேர்த்து கழிப்பறை கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டது.

    அதன் திறப்பு விழா இன்று காலை நடைபெற்றது. இதில் ஊராட்சி மன்ற தலைவர் லட்சுமணன் தலைமை தாங்கினார். துணை தலைவர் ஹேமமாலினிவாசு, ஒப்பந்ததாரர் எல்லப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி செயலர் அரிகிருஷ்ணன் அனைவரையும் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட கவுன்சிலர் கஜா என்ற கஜேந்திரன் கலந்துகொண்டு 5 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட புதிய கழிப்பறையை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து மாணவ, மாணவிகளின் பயன்பாட்டிற்கு கொடுத்தார். இதில் ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள், பள்ளி ஆசிரியர், ஆசிரியைகள் உட்பட பொதுமக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

    • திடக்கழிவு மேலாண்மை பணிகள் மேற்கொள்ள ரூ. 3.90 லட்சத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
    • இந்தத்திட்டத்தில் முறைகேடுகள் நடைபெற வாய்ப்புள்ளதாக நாங்கள் சந்தேகிக்கிறோம்.

    பல்லடம் :

    பல்லடம் நகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை பணிகள் ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என்று நகர்மன்ற உறுப்பினர்கள் ஈஸ்வரமூர்த்தி, சௌந்தர்ராஜன், பாலகிருஷ்ணன், ராஜசேகரன், ருக்மணி சேகர், விஜயலட்சுமி, சுகன்யா ஜெகதீஷ், பாமிதா கயாஸ், சசிரேகா ரமேஷ், ஈஸ்வரி உள்ளிட்ட 10 நகர்மன்ற உறுப்பினர்கள் நகராட்சி ஆணையாளரிடம் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:- கடந்த மே 30ந்தேதி நடைபெற்ற நகர் மன்ற கூட்டத்தில், தீர்மானம் எண் 20ன் படி திடக்கழிவு மேலாண்மை பணிகள் மற்றும் அதன் தொடர்பான பணிகள் மேற்கொள்ள ரூ. 3.90 லட்சத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்தத் தீர்மானத்தில் பல்வேறு குளறுபடிகள் உள்ளது தற்போது தெரிய வருகிறது. திடக்கழிவு மேலாண்மை பணிகளை ஒப்பந்தம் விடுவதற்கு மிக அவசரம் காட்டியது, ஒப்பந்ததாரரின் உரிய விபரங்கள் இல்லாதது போன்ற குளறுபடிகள் உள்ளதால், இந்தத்திட்டத்தில் முறைகேடுகள் நடைபெற வாய்ப்புள்ளதாக நாங்கள் சந்தேகிக்கிறோம்.

    எனவே நகராட்சி நிர்வாகம் சட்ட விதி 164ன் படி பெரும்பான்மையான நகர் மன்ற உறுப்பினர்கள் இந்த தீர்மானத்தை எதிர்க்கிறோம். எனவே அந்த தீர்மானத்தை ரத்து செய்து மீண்டும் நகர் மன்ற கூட்டத்தை நடத்தி அந்தத் தீர்மானத்தின் மீது விவாதம் நடத்தி, உரிய விளக்கம் அளித்து பின்னர் நிறைவேற்றலாம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மின் கம்பத்தை புதிய இடத்தில் வைப்பதற்கு அரசுக்கு ரூ .68 ஆயிரத்து 210 செலுத்த வேண்டுமென மின்சாரம் வாரியம் தெரிவித்தது.
    • பொதுமக்களிடம் இருந்து 40 ஆயிரம் நிதி உதவி பெற்று உதவி மின் பொறியாளரிடம் வழங்கினார்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகராட்சி 24 -வது வார்டு சாமுண்டிபுரம் சலவைக்காரர் 3 வது வீதியில் பல ஆண்டுகளாக போக்குவரத்துக்கு இடையூறாக 3 மின் கம்பம் இருந்தது. இதனை மாற்றுவதற்கு மின்சார வாரியத்திடம் கோரிக்கை வைத்தனர்.ஆனால் மின் கம்பத்தை மாற்றி புதிய இடத்தில் வைப்பதற்கு அரசுக்கு ரூ .68 ஆயிரத்து 210 செலுத்த வேண்டுமென மின்சாரம் வாரியம் தெரிவித்தது.

    உடனடியாக ம.தி.மு.க. கவுன்சிலர் நாகராஜின் முயற்சியில்இப்பிரச்சனைக்கு தீர்வு காணும் விதமாக அப்பகுதி பொதுமக்களிடம் கலந்து ஆலோசித்து அவர்கள் ஒத்துழைப்புடன் மின்சார வாரியத்துக்கு கட்ட வேண்டிய தொகை ரூ. 68,210யை பொதுமக்களிடம் இருந்து 40 ஆயிரம் நிதி உதவி பெற்று மீதமுள்ள ரூ.28 ஆயிரத்தை தனது சொந்த நிதியிலிருந்து கொடுத்து உதவி மின் பொறியாளரிடம் வழங்கினார். அப்போது மாமரத்து வீதியைச் சார்ந்த கோபி என்ற பழனி குமார் , உதவியாளர் சதாசிவம் ஆகியோர் உடனிருந்தனர்.

    • மாநகராட்சி சுடுகாடுகளில் புதைக்க, எரிக்க எவ்வித கட்டணமும் கிடையாது. முற்றிலும் இலவசமாக செய்யப்படுகிறது.
    • சில இடங்களில் பணம் வாங்குவதாக புகார் வருகிறது. உடல் அடக்கம், எரிப்பு தொடர்பான நடைமுறைகள் ஆன்லைன் வழியாக செயல்படுத்தும் திட்டம் பரிசீலனையில் உள்ளது என்றார்.

    சென்னை:

    சென்னை மாநகராட்சி மன்ற கூட்டம் மேயர் ஆர்.பிரியா தலைமையில் இன்று நடந்தது. துணை மேயர் மகேஷ்குமார், கமிஷனர் ராதாகிருஷ்ணன் ஆகிேயார் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் கேள்வி நேரம் மற்றும் நேரம் இல்லாத நேரத்தில் தங்கள் பகுதியில் உள்ள பிரச்சினைகள் குறித்து கவுன்சிலர் பேசினார்கள்.

    92-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர்கள் திலகர் பேசும்போது:- எனது வார்டில் குடிநீர் வாரிய இடம், வீட்டு வசதி வாரியத்திற்கு சொந்தமான இடங்களில் சமூக விரோத செயல்கள் நடக்கின்றன. அந்த இடங்களை ஆய்வு செய்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.

    கிறிஸ்தவ கல்லறை பிரச்சினை பெரிதாக உள்ளது. அங்கு தனிநபர் ஒருவர் உடலை அடக்கம் செய்ய ரூ.10 ஆயிரம் வரை பணம் வசூலிக்கிறார். இந்து சுடுகாட்டில் ஆக்கிரமிப்பு உள்ளது. சுடுகாட்டில் பிணத்தை புதைக்க, எரிக்க ரூ.40 ஆயிரம், ரூ.50 ஆயிரம் கேட்பதாக புகார் வருகிறது.

    விதிமுறை மீறி வீடுகள் கட்டப்பட்டு இல்லாத உரிமையாளர்களிடம் சிலர் பணம் கேட்கிறார்கள்.

    இதேபோல் சாலையை வெட்டி கேபிள் போடுவதாக குடிநீர், மின்சார வாரிய அதிகாரிகள் எவ்வித தகவலும் இல்லாமல் ஈடுபடுகிறார்கள் என்று அ.தி.மு.க. கவுன்சிலர்கள் குற்றம் சாட்டினர்.

    இதற்கு மேயர் பிரியா பதிலளித்து கூறியதாவது:-

    சின்ன சின்ன விஷயங்களை எல்லாம் மண்டல அளவில் சரி செய்து முடிக்க வேண்டும். மன்றத்திற்கு கொண்டு வரக்கூடாது கவுன்சிலர்கள் கூறும் புகார்களை அதிகாரிகள் உடனே சரி செய்ய வேண்டும்.

    திரும்ப திரும்ப மன்றத்தில் குற்றம் சாட்டுவது சரியாக இருக்காது. மாநகராட்சி சுடுகாடுகளில் புதைக்க, எரிக்க எவ்வித கட்டணமும் கிடையாது. முற்றிலும் இலவசமாக செய்யப்படுகிறது.

    ஆனால் ஒரு சில இடங்களில் பணம் வாங்குவதாக புகார் வருகிறது. உடல் அடக்கம், எரிப்பு தொடர்பான நடைமுறைகள் ஆன்லைன் வழியாக செயல்படுத்தும் திட்டம் பரிசீலனையில் உள்ளது என்றார்.

    கூட்டத்தில் அடையார் காந்திநகர் கால்வாய்கரை சாலையில் புதிதாக அமைய உள்ள பூங்காவிற்கு கலைஞர் மு.கருணாநிதி பூங்கா என்று பெயர் சூட்டுவது, மாநகராட்சி உயர்நிலை மற்றும் மேல் நிலைப்பள்ளியில் படிக்கும் 29 ஆயிரம் மாணவர்களுக்கு 4 வண்ண கலரில் டீ-சர்ட் வழங்குவது உள்ளிட்ட 66 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    சேலம் அருகே பரோட்டா கேட்டு ஓட்டல் உரிமையாளர் மீது தாக்குதல் நடத்திய தி.மு.க. கவுன்சிலர் மகன் உள்பட 4 பேர் மீது புகார் செய்யப்பட்டது.

    சேலம்:

    சேலம் மாவட்டம் தாரமங்கலம் கோணகாபாடி பகுதியை சேர்ந்தவர் வேலுச்சாமி. தனியார் பஸ் டிரைவர். இவரது மகன் செந்தில்குமார். இவர் சேலம் மெயின் ரோடு தண்டுமாரியம்மன் கோவில் அருகே கடந்த 6 மாதத்திற்கு முன்பு ஓட்டல் கடை வைத்து நடத்தி வருகிறார்.

    கடந்த திங்கட்கிழமை தாரமங்கலம் நகராட்சி 6-வது வார்டு திமுக கவுன்சிலர் செல்வி மகன் அரவிந்த் என்பவர் செந்தில்குமார் கடைக்குச் சென்று பரோட்டா வாங்கி சாப்பிட்டுள்ளார். அப்போது பரோட்டா இலவசமாக கேட்டதாக கூறப்படுகிறது. இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது.

    இந்த நிலையில் சாப்பிட்டு விட்டு சென்ற அரவிந்த் அடுத்த நாள் மது போதையில் கூட்டாளிகள் 4 பேருடன் செந்தில்குமாரின் ஓட்டலுக்கு வந்து தகராறில் ஈடுபட்டு அவரை சரமாரியாக தாக்கினர்.

    இதில் செந்தில்குமாரின் கண் மற்றும் நுரையீரல் பகுதியில் பாதிப்பு ஏற்பட்டு சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து தாரமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. ஆனால், போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    இதுகுறித்து செந்தில்குமார் கூறும்போது திமுக கவுன்சிலர் செல்வி மகன் அரவிந்த் மற்றும் அவரது கூட்டாளிகள் 4 பேர் இலவசமாக பரோட்டா கேட்டு என்னை தகாத வார்த்தையில் பேசி அடித்தனர். இதுபற்றி நான் போலீசில் கொடுத்த வழக்கை திரும்பப் பெறுமாறும், இல்லை என்றால் ஓட்டலை நடத்த முடியாது எனக் கூறி மிரட்டி வருகின்றனர். இதனால் மீண்டும் கடை நடத்த பயமாக உள்ளது. எனவே காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து மீண்டும் கடையை நடத்த பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றார்.

    ×