search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "councillor"

    • காங்கிரஸ் தலைவர் ஒருவர் வீட்டுக்கு வெளியே அந்த கட்சியின் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தது.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்தவர் தேதீப்யாராவ். இவர் சந்திரசேகர ராவ் கட்சி மாநகராட்சி கவுன்சிலராக உள்ளார்.

    இந்த நிலையில் ஐதராபாத்தில் காங்கிரஸ் தலைவர் ஒருவர் வீட்டுக்கு வெளியே அந்த கட்சியின் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தது. அதனை தேதீப்யா மாநகராட்சி ஊழியர்கள் மூலம் அகற்றினார்.

    இதனால் அவரது ஆதரவாளர்களுக்கும் காங்கிரஸ் கட்சியினருக்கும் இடையே திடீரென மோதல் ஏற்பட்டது. அப்போது காரில் ஏறி தேதீப்யா ராவ் செல்ல முயன்றார். பெண்கள் சிலர் அவரை காருக்குள் புகுந்து தாக்கினர்.

    இதில் அவர் படுகாயம் அடைந்தார். இது பற்றி தகவல் அறிந்த ஜூப்ளிகில்ஸ் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சமாதானம் செய்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கவுன்சிலரின் கண்களில் மிளகாய் பொது தூவிவிட்டு கொலை செய்துள்ளனர்.
    • சம்பவம் நடைபெற்ற பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு.

    திண்டுக்கல் மாநகராட்சியின் 25வது வார்டு கவுன்சிலர் சிவக்குமாரின் தந்தை நாகராஜன். மார்க்கெட்டிற்கு சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.

    அப்போது, திடீரென நாகராஜனை சூழ்ந்த மர்ம நபர்கள் ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    மர்ம நபர்கள் விரட்டியபோது கவுன்சிலரின் கண்களில் மிளகாய் பொது தூவிவிட்டு, வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    கொலை சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

    மேலும், சம்பவம் நடைபெற்ற பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த சம்பவம் முன்பகை காரணமாக கொலை நடைபெற்றதா ? அல்லது தொழில் போட்டி காரணமா ? என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • மாணவியும் தெரிந்தவர் தானே என வீட்டிற்குள் சென்றார்.
    • புகாரின் பேரில் போலீசார் 14 வயது சிறுமியிடம் தவறாக நடக்க முயன்ற முன்னாள் தி.மு.க. கவுன்சிலர் நாகராஜை கைது செய்தனர்.

    கோவை:

    கோவை கவுண்டம்பாளையத்தை சேர்ந்தவர் 14 வயது சிறுமி. இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    கடந்த 11-ந் தேதி மாணவி பள்ளிக்கு சென்று விட்டு அவரது வீட்டிற்கு நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது அந்த பகுதியில் வசிக்கும் தி.மு.க. முன்னாள் கவுன்சிலர் நாகராஜ் (வயது 64) மாணவியிடம் நைசாக பேச்சு கொடுத்து அவரது வீட்டிற்கு அழைத்து சென்றார்.

    மாணவியும் தெரிந்தவர் தானே என வீட்டிற்குள் சென்றார்.

    அங்கு வைத்து மாணவியிடம் நாகராஜ் தவறாக நடக்க முயன்றார். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி அங்கு இருந்து தப்பி வெளியே ஓடி வந்தார்.

    பின்னர் நடந்த சம்பவங்களை பெற்றோரிடம் கூறி மாணவி கதறி அழுதார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் இதுகுறித்து மத்திய அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் 14 வயது சிறுமியிடம் தவறாக நடக்க முயன்ற முன்னாள் தி.மு.க. கவுன்சிலர் நாகராஜை போலீசார் கைது செய்தனர். அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்ததி ஜெயிலில் அடைத்தனர்.

    • ஆம்னி பஸ் நிலையத்திற்கு முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா பெயர் சூட்டப்படுகிறது.
    • கடைகளுக்கு மறு ஏலம் விடலாம் என கூறி எதிர்ப்பு தெரிவித்து மேயருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாநகராட்சியில் இன்று அவசர கூட்டம் நடைபெற்றது. மேயர் சண். ராமநாதன் தலைமை தாங்கினார். துணை மேயர் அஞ்சுகம்பூபதி, ஆணையர் மகேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாநகராட்சி அலுவலர்கள் ,கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் முதலாவதாக புதிதாக ஆணையராக பொறுப்பேற்றுக் கொண்ட மகேஸ்வரி பேசும்போது, நான் டி.என்.பி.எஸ்.சி குரூப் -2 தேர்வில் மாநில அளவில் முதலிடம் பிடித்து அரசு பணியில் சேர்ந்தேன். பெரியகுளம் நகராட்சி, தர்மபுரி நகராட்சிகளில் பணிபுரிந்த போது சிறப்பாக பணியாற்றியதற்காக பல்வேறு விருதுகளை பெற்றேன். திடக்கழிவு மேலாண்மை திட்டத்திலும் தேசிய, மாநில அளவில் விருதுகள் பெற்றுள்ளேன். அதேபோல் தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையராக கடந்த சில நாட்களுக்கு முன்பு பொறுப்பேற்று பணிபுரிந்து வருகிறேன். தஞ்சாவூர் மாநகராட்சியிலும் சிறப்பாக பணிபுரிந்து பல்வேறு விருதுகளை பெற கடுமையாக உழைப்பேன் என்றார்.

    இதனை தொடர்ந்து கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து மேயர் சண். ராமநாதன் பேசியதாவது:-

    தஞ்சை புதிய பஸ் நிலையம் அருகே ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட ஆம்னி பஸ் நிலையத்தை முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்த பஸ் நிலையத்திற்கு முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா பெயர் சூட்டப்படுகிறது.

    தஞ்சை மாவட்டம் ஈச்சங்கோட்டை வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்திற்கு பசுமைப் புரட்சியை ஏற்படுத்திய எம். எஸ். சுவாமிநாதன் பெயர் வைத்ததற்கும், தஞ்சை மேரிஸ் கார்னர் உயர்மட்ட மேம்பாலத்தை ராமநாதன் மருத்துவமனை வரை நீட்டிக்க உத்தரவிட்டதற்கும் முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், துறை அமைச்சர் ஆகியோருக்கு மனமார்ந்த பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

    தஞ்சாவூர் சரபோஜி மார்க்கெட், பழைய பஸ் நிலையத்தில் உள்ள கடைகளில் வாடகை அதிகம் இருப்பதாக ஏலம் எடுத்தவர்கள் கூறியிருந்தனர். எனவே அவர்களின் வேண்டுகோளை ஏற்று மறு ஏலம் விட்டு குறைந்த வாடகைக்கு விடப்பட்டுள்ளது.

    பெரிய கோவிலில் மாமன்னர் ராஜராஜ சோழன் சதயவிழா வரும் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு மாமன்னர் சோழன் சிலைக்கு மின்அலங்காரம், மரப்படிகள், தடுப்புகள் ஆகியவற்றை தற்காலிகமாக அமைத்து தரும் பணிகள் மேற்கொள்ள ரூ.14 லட்சம் அங்கீகரிக்கவும் ஒப்பந்த புள்ளிகள் கோரி தொடர் நடவடிக்கை மேற்கொள்ளவும் அனுமதிக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    அப்போது கவுன்சிலர்கள் நீலகண்டன் ,உஷா, காந்திமதி, கண்ணுக்கினியாள் உள்ளிட்ட சிலர் மாமன்ற கூட்டத்தில் விவாதிக்காமல் எப்படி கடைகளுக்கு மறு ஏலம் விடலாம் என கூறி எதிர்ப்பு தெரிவித்து மேயருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

    இதையடுத்து மாநகராட்சியில் மேற்கண்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாகவும், முறைப்படி தான் ஏலம் நடந்ததாகவும் , கூட்டம் முடிவடைந்து விட்டதாகவும் கூறி மேயர் சண்.ராமநாதன் வெளியேறினார்.

    அப்போது கவுன்சிலர்கள் பேசும் மைக் திடீரென அணைக்கப்பட்டது. எங்களது உரிமைகள் பற்றி பேச முன்னறிவிப்பு இன்றி எப்படி மைக் அணைக்கலாம் என கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.

    இதையடுத்து எதிர்ப்பு தெரிவித்த கவுன்சிலர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். தஞ்சை மாநகராட்சி அவசரக் கூட்டத்தில் நடந்த இந்த அமளி சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

    • சோழவந்தான் பேரூராட்சி கவுன்சிலருக்கு பாராட்டு விழா நடந்தது.
    • முடிவில் கணேசன் நன்றி கூறினார்.

    சோழவந்தான்

    சோழவந்தான் பேரூராட்சி 8-வது வார்டு கவுன்சிலர் டாக்டர் மருதுபாண்டியன். இவரது பொதுப்பணியை பாராட்டும் வகையிலும், தொடர்ந்து 2-வது ஆண்டாக லயன்ஸ் கிளப் தலைவராக தேர்ந்ெதடுக்கப்பட்டதை கவுரவிக்கும் வகையில் பாராட்டு விழா நடந்தது. விழாவுக்கு அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர் முன்னேற்ற சங்க சோழவந்தான் கிளை தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். மகளிர் குழு சொர்ணம், கோதை, பாமா, நல்லி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிட்டு வரவேற்றார். கோவில் அர்ச்சகர் கண்ணபிரான், பிரசாந்த் சர்மா ஆகியோர் பூஜைகள் செய்து பிரசாதம் வழங்கி னர். ராமநவமி கமிட்டி நிர்வாகி காசி விஸ்வநாதன், அய்யப்ப சேவா சங்க செயலாளர் தாமோதரன், கணேசன், தங்கப்பாண்டியன் ஆகியோர் கவுரவித்தனர். முடிவில் கணேசன் நன்றி கூறினார்.

    • தி.மு.க. பெண் கவுன்சிலர்-கணவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
    • இருதரப்பினர் கொடுத்த புகாரின் அடிப்படையில் விருதுநகர் மேற்கு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் நேருஜி நகரை சேர்ந்தவர் தி.மு.க. நிர்வாகி மூர்த்தி (வயது33). இவரது மனைவி ஆஷா (31). இவர் விருதுநகர் நகராட்சியில் 5-வது வார்டு தி.மு.க. கவுன்சிலராக உள்ளார்.

    நேற்று இவரது வார்டு பகுதியில் விநாயகர் சிலைகள் வைப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வந்தது. இதனை ஆஷா தனது செல்போனில் வீடியோ எடுத்து கொண்டிருந்தார். அந்த சமயம் அதே பகுதியை சேர்ந்த மாரீஸ்வரிக்கும், மகேஷ்குமார் என்பவருக்கும் பணம் கொடுக்கல்-வாங்கல் தொடர்பாக பிரச்சினையில் ஈடுபட்டனர். அப்போது தி.மு.க. கவுன்சிலர் ஆஷா தங்களை தான் வீடியோ எடுப்பதாக நினைத்து மாரீஸ்வரி தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதில் இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

    அப்போது தி.மு.க. பெண் கவுன்சிலர் ஆஷா, அவரது கணவர் மூர்த்தி ஆகியோர் தாக்கப்பட்டனர். இதில் காயமடைந்த 2பேரும் விருதுநகர் அரசு ஆஸ்பத்தி ரியில் சிகிச்சை பெற்றனர். இந்த பிரச்சினையில் தானும் தாக்கப்பட்டதாக மாரீஸ்வரி விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். இவர்களும் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர். இருதரப்பினர் கொடுத்த புகாரின் அடிப்படையில் விருதுநகர் மேற்கு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • நகர மன்ற தலைவர் எஸ்.எஸ்.ஜெயமூர்த்தி மூலம் பள்ளி தலைமை ஆசிரியர் ஆனந்தனிடம் வழங்கப் பட்டது.
    • தமிழ்நாடு முதல்-அமைச்சர் அறிவித்த முதல் மாதம் மதிப்பூதியம் ரூ.5 ஆயிரத்தை அரசு பள்ளியின் வளர்ச்சிக்காக வழங்கினார்.

    புதுச்சேரி:

    கோட்டக்குப்பம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 76-வது சுதந்திரதின விழா நடந்தது. விழாவில் கலந்து கொண்ட கோட்டக்குப்பம் நகராட்சி சின்னகோட்டக் குப்பம் 14-வது வார்டு நகர மன்ற கவுன்சிலர் ஸ்டாலின் சுகுமார், நகர மன்ற உறுப்பி னர்களுக்கு வழங்குவதாக தமிழ்நாடு முதல்-அமைச்சர் அறிவித்த முதல் மாதம் மதிப்பூதியம் ரூ.5 ஆயிரத்தை அரசு பள்ளியின் வளர்ச்சிக்காக வழங்கினார்.

    இதனை கோட்டக்குப்பம் நகர மன்ற தலைவர் எஸ்.எஸ்.ஜெயமூர்த்தி மூலம் பள்ளி தலைமை ஆசிரியர் ஆனந்தனிடம் வழங்கப் பட்டது.

    இந்நிகழ்ச்சியில் நகர்மன்ற துணைத் தலைவர் ஜீனத்பிவி முபாரக் மற்றும் கவுன்சிலர்கள், பள்ளி ஆசிரியர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • வேகமாக வந்த கும்பல் தாங்கள் கொண்டு வந்திருந்த அரிவாளால் கவுன்சிலர் சித்ராவையும், அவரது கணவரையும் சரமாரியாக வெட்டியது.
    • ராஜா உள்ளிட்ட 5 பேரும் தப்பிச் சென்று விட்டனர். அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

    கோவை:

    கோவை அருகே உள்ள மலுமிச்சம்பட்டி அருகே உள்ள அவ்வையார் நகர் 2-வது வீதியைச் சேர்ந்தவர் ரவிக்குமார் (வயது 47). இவரது மனைவி சித்ரா (44). தி.மு.க.வைச் சேர்ந்த இவர் மலுமிச்சம்பட்டி பஞ்சாயத்து கவுன்சிலராக உள்ளார். இவருக்கு மோகன் (24) என்ற மகன் உள்ளார்.

    நேற்று இரவு 9.30 மணிக்கு வீட்டில் சித்ரா, கணவர் ரவிக்குமார், மகன் மோகன் ஆகியோர் இருந்தனர். அவர்கள் சாப்பிட்டு விட்டு தூங்குவதற்காக தயாராகிக் கொண்டு இருந்தனர்.

    அப்போது முகமூடி அணிந்தபடி வந்த 5 பேர் கும்பல் திடீரென வீட்டுக்குள் திபு, திபுவென புகுந்தனர். அவர்களை பார்த்து சித்ராவும், அவரது கணவரும் சத்தம் போட்டனர். நீங்கள் யார், எதற்காக வீட்டுக்குள் வருகிறீர்கள் என சத்தம் போட்டனர். அதற்குள் வேகமாக வந்த கும்பல் தாங்கள் கொண்டு வந்திருந்த அரிவாளால் கவுன்சிலர் சித்ராவையும், அவரது கணவரையும் சரமாரியாக வெட்டியது. இதனை தடுப்பதற்காக மகன் மோகன் ஓடி வந்தார். அவரையும் அந்த கும்பல் வெட்டியது. இதில் 3 பேருக்கும் தலை, கை, கால் என உடல் முழுவதும் காயம் ஏற்பட்டது. இதனால் 3 பேரும் சத்தம் போட்டனர்.

    அவர்களது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு திரண்டனர். அவர்களை பார்த்ததும் முகமூடி கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியது. காயம் அடைந்து உயிருக்கு போராடிய தாய்-தந்தை, மகன் ஆகிய 3 பேரையும் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    இந்த சம்பவம் குறித்து செட்டிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். கவுன்சிலர் சித்ரா கடந்த 6 மாதத்துக்கு முன்பு 3.5 சென்ட் நிலம் வாங்கி இருந்தார். இந்த நிலத்தை மலுமிச்சம்பட்டி அம்பேத்கர் நகரில் பெட்டிக்கடை நடத்தி வரும் ராஜா (23) என்ற வாலிபர் புரோக்கராக செயல்பட்டு வாங்கிக் கொடுத்துள்ளார். இதற்காக புரோக்கர் ராஜாவுக்கு 2 சதவீத கமிஷன் பேசப்பட்டு இருக்கிறது. ஆனால் அந்த கமிஷனை சித்ரா கொடுக்கவில்லை என தெரிகிறது. இதனால் அடிக்கடி சித்ரா குடும்பத்தினரை சந்தித்து ராஜா தகராறு செய்துள்ளார்.

    இந்தநிலையில் தான் நேற்று இரவு ராஜா தனது ஆதரவாளர்கள் 4 பேரை அழைத்துக் கொண்டு முகமூடி அணிந்து சித்ரா வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கு சித்ரா உள்பட குடும்பத்தினரை 3 பேரையும் அரிவாளால் வெட்டியது தெரியவந்தது.

    ராஜா உள்ளிட்ட 5 பேரும் தப்பிச் சென்று விட்டனர். அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள். நள்ளிரவில் தி.மு.க. பெண் கவுன்சிலர் ஒருவர் முகமூடி கும்பல் வெட்டப்பட்ட சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    • முதியோர் இல்லங்களுக்கு வழங்கிட 145-வது வார்டு கவுன்சிலர் டி.சத்தியநாதன் முடிவு செய்தார்.
    • மாநகராட்சி கமிஷனர் ராதா கிருஷ்ணனை சந்தித்து இதற்கான கடிதத்தை வழங்கினார்.

    சென்னை, ஆக.6-

    சென்னை மாநகராட்சி கவுன்சிலர்களுக்கு ஜூலை மாதம் முதல் மதிப்பூதியம் ரூ.10 ஆயிரம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாதமும் வழங்கப்படும் இந்த தொகையை மாநகராட்சி மூலம் நடத்தப்படும் காப்பகங்கள், அங்கீகரிக்கப்பட்ட முதியோர் இல்லங்களுக்கு வழங்கிட 145-வது வார்டு கவுன்சிலர் டி.சத்தியநாதன் முடிவு செய்தார்.

    கவுன்சிலர் பதவி வகிக்கும் வரை உள்ள காலத்திற்கான தொகையை ஆதரவற்றவர்களுக்காக வழங்கினால் மன நிறைவுடன் உணவு சாப்பிடுவார்கள் என கருதி அத்தொகையை மாநகராட்சிக்கே திருப்பி கொடுத்துள்ளார். மாநகராட்சி கமிஷனர் ராதா கிருஷ்ணனை சந்தித்து இதற்கான கடிதத்தை வழங்கினார்.

    • நாமக்கல் மாவட்டம் வேலூர் பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளது.
    • வேலூர் பேரூராட்சி பா.ம.க., கவுன்சிலர் சுகந்தி பேரூராட்சி அலுவலகம் முன்பு தனி ஒருவராக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    பரமத்தி வேலூர்:

    வேலூர் பேரூராட்சி பா.ம.க., கவுன்சிலர் சுகந்தி பேரூராட்சி அலுவலகம் முன்பு தனி ஒருவராக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    நாமக்கல் மாவட்டம் வேலூர் பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளது. இதில் கடந்த உள்ளாட்சி தேர்தலில் 17- வது வார்டு கவுன்சிலராக பா.ம.க.,வை சேர்ந்த சுகந்தி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    நேற்று மதியம் பேரூராட்சி அலுவலகத்திற்கு தனியாக வந்த கவுன்சிலர் சுகந்தி, பேரூராட்சி அலுவலக நுழைவாயில் முன்பு நின்று கொண்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது கவுன்சிலர் சுகந்தி கூறியதாவது:-எனது வார்டில் 450 வீடுகளில் 3000 பேர் வசித்து வருகின்றனர்.

    6 மாதங்களாக பேரூராட்சி தூய்மை பணியாளர்கள், எனது வார்டுக்கு சரிவர வருவதில்லை. பலமுறை பேரூராட்சி நிர்வாக அதிகாரியிடம் புகார் கொடுத்துள்ளேன் .ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    மேலும் எனது வார்டில் சாக்கடை தண்ணீர் தேங்கி கொசு உற்பத்தியாகும் இடமாக உள்ளது. இங்குள்ள குடிநீர் சின்டெக்ஸ் டேங்க் தொட்டி உடைந்து கீழே விழும் நிலையில் உள்ளது. எனது வார்டில் கொசு மருந்து அடித்து பல மாதங்கள் ஆகின்றது. ஒவ்வொரு முறையும் வந்து கூறும் போது செயல் அலுவலர் செய்து தருவதாக உத்தரவாதம் அளிக்கின்றார் .ஆனால் எந்த பணியும் நடக்கவில்லை. இதேபோல் தொடர்ந்தால் எனது கவுன்சிலர் பதவியை ராஜினாமா செய்ய முடிவு எடுத்துள்ளேன். நாமக்கல் மாவட்ட நிர்வாகம் இதற்கு தீர்வு காண வேண்டும் என்பதே எங்களின் கோரிக்கையாகும். இவ்வாறு அவர் கூறினார்.

    தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட கவுன்சிலர் சுகந்தி யிடம் பேரூராட்சி அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுத்து அனைத்து பணிகளையும் செய்து தருவதாக பேசி சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • மண்டல உதவி கமிஷனர் நவேந்திரன் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் கவுன்சிலர்கள் கலந்துகொண்டனர்.
    • விடுபட்ட பாதாள சாக்கடை பணிகளை அதிகாரிகள் விரைந்து முடிக்க நடவடிக்கை மேற்காொள்ள வேண்டும்.

    திருவொற்றியூர்:

    திருவொற்றியூர் மண்டல குழு கூட்டம் மண்டல குழு தலைவர் தி.மு.தனியரசு தலைமையில் நடைபெற்றது. மண்டல உதவி கமிஷனர் நவேந்திரன் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் கவுன்சிலர்கள் கலந்துகொண்டனர்.

    கூட்டத்தில் மக்களின் அடிப்படை வசதிகளுக்காக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் தெரு பலகைகள் அமைப்பது, திருவொற்றியூர் மண்டல அலுவலக மேல்தளத்தை ரூ. 75 லட்சம் செலவில் புதுப்பித்தல், நெட்டுகுப்பம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில், ரூ. 15.46 லட்சம் செலவில் மேற்கூரை அகற்றுதல் மற்றும் கட்டமைக்கும் பணி உட்பட 33 தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. மேலும் கவுன்சிலர்களுக்கு மாதம் ரூ. 10 ஆயிரம் மதிப்பூதியம் வழங்குவதாக அறிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. கவுன்சிலர்களின் கேள்விக்கு பதிலளித்து மண்டல குழு தலைவர் தனியரசு பேசியதாவது:-

    குடிநீர் வினியோகத்தில் ஏற்பட்டுள்ள நிலைமையை சரி செய்ய வேண்டும். வார்டுகளுக்கு, தனி உதவி பொறியாளர்கள் நியமிக்கப் படுவார்கள். விடுபட்ட பாதாள சாக்கடை பணிகளை அதிகாரிகள் விரைந்து முடிக்க நடவடிக்கை மேற்காொள்ள வேண்டும்.

    திருவொற்றியூர் மார்க்கெட் 8 கோடி ரூபாய் செலவில் 2 அடுக்குமாடியுடன் நவீனப்படுத்தப்படும். அதிகாரிகள், கவுன்சிலர்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • பல்வேறு பகுதிகளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
    • பொதுமக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

    கூடுவாஞ்சேரி:

    நல்லம்பாக்கம் நடுநிலை பள்ளி வளாகத்தில் மாற்றுத்திறனாளி மாணவர்கள் உட்பட அனைத்து தரப்பு மாணவர்களுக்கும் சேர்த்து 5 லட்சம் செலவில் கழிப்பறை கட்டிடத்தை மாவட்ட கவுன்சிலர் திறந்து வைத்தார்.

    செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட வண்டலூர் அடுத்த நல்லம்பாக்கம் ஊராட்சியில், நல்லம்பாக்கம், கண்டிகை, காந்திநகர், மல்ரோசாபுரம், அம்பேத்கார் நகர், வலம்புரி நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில், ஊராட்சிக்கு உட்பட்ட நல்லம்பாக்கம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் 210 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இதில் பள்ளி வளாகத்தில் மாவட்ட ஊராட்சிகளின் 15-வது நிதி குழு மானியம் தூய்மை திட்டத்தின் கீழ் 5 லட்சம் மதிப்பில் மாற்றுத்திறனாளி மாணவர்கள் உட்பட ஆண்கள் பெண்கள் என அனைத்து தரப்பு மாணவர்களுக்கும் சேர்த்து கழிப்பறை கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டது.

    அதன் திறப்பு விழா இன்று காலை நடைபெற்றது. இதில் ஊராட்சி மன்ற தலைவர் லட்சுமணன் தலைமை தாங்கினார். துணை தலைவர் ஹேமமாலினிவாசு, ஒப்பந்ததாரர் எல்லப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி செயலர் அரிகிருஷ்ணன் அனைவரையும் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட கவுன்சிலர் கஜா என்ற கஜேந்திரன் கலந்துகொண்டு 5 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட புதிய கழிப்பறையை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து மாணவ, மாணவிகளின் பயன்பாட்டிற்கு கொடுத்தார். இதில் ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள், பள்ளி ஆசிரியர், ஆசிரியைகள் உட்பட பொதுமக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

    ×