என் மலர்
இந்தியா

SIR: என்னை தகனம் செய்யுங்கள்.. இறந்தவர்கள் பட்டியலில் தனது பெயர் சேர்க்கப்பட்டதால் மயானம் கிளம்பிய கவுன்சிலர்
- நான் ஒரு மக்கள் பிரதிநிதி, எனக்கே இந்த நிலை என்றால் சாமானிய மக்களின் கதி என்ன?
- வரைவு வாக்காளர் பட்டியலில் சுமார் 58 லட்சம் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
மேற்கு வங்கத்தில் உயிருடன் இருக்கும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் (TMC) கட்சி கவுன்சிலர் ஒருவரை, தேர்தல் ஆணையம் இறந்துவிட்டதாக வாக்காளர் பட்டியலில் குறிப்பிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தை போல மேற்கு வங்கத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன. நேற்று வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில், கொல்கத்தா அருகே உள்ள டங்குனி நகராட்சியின் 18-வது வார்டு கவுன்சிலரான சூர்யா தே என்பவரின் பெயர் இறந்தவர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டிருந்தது.
தான் உயிருடன் இருப்பதை நிரூபிக்கவும், தேர்தல் ஆணையத்தின் அலட்சியத்தை கண்டிக்கவும் கவுன்சிலர் சூர்யா தே தனது ஆதரவாளர்களுடன் நேரடியாக ஒரு மயானத்திற்குச் சென்றார்.
அங்கிருந்த அதிகாரிகளிடம், "அரசு என்னை இறந்துவிட்டதாக அறிவித்துவிட்டதால், முறைப்படி இப்போது என்னை இங்கேயே தகனம் செய்துவிடுங்கள்" என கூறி வினோதப் போராட்டத்தில் ஈடுபட்டார்.
"நான் ஒரு மக்கள் பிரதிநிதி, எனக்கே இந்த நிலை என்றால் சாமானிய மக்களின் கதி என்ன?" என்று சூர்யா தே கேள்வி எழுப்பியுள்ளார்.
நேற்று வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் சுமார் 58 லட்சம் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ள நிலையில் இந்த சம்பவம் அம்மாநில அரசியலில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.






