search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    வீடு புகுந்து பெண் கவுன்சிலர் - கணவர், மகனை அரிவாளால் வெட்டிய கும்பல்: முகமூடி அணிந்து சென்று வெறிச்செயல்
    X

    வீடு புகுந்து பெண் கவுன்சிலர் - கணவர், மகனை அரிவாளால் வெட்டிய கும்பல்: முகமூடி அணிந்து சென்று வெறிச்செயல்

    • வேகமாக வந்த கும்பல் தாங்கள் கொண்டு வந்திருந்த அரிவாளால் கவுன்சிலர் சித்ராவையும், அவரது கணவரையும் சரமாரியாக வெட்டியது.
    • ராஜா உள்ளிட்ட 5 பேரும் தப்பிச் சென்று விட்டனர். அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

    கோவை:

    கோவை அருகே உள்ள மலுமிச்சம்பட்டி அருகே உள்ள அவ்வையார் நகர் 2-வது வீதியைச் சேர்ந்தவர் ரவிக்குமார் (வயது 47). இவரது மனைவி சித்ரா (44). தி.மு.க.வைச் சேர்ந்த இவர் மலுமிச்சம்பட்டி பஞ்சாயத்து கவுன்சிலராக உள்ளார். இவருக்கு மோகன் (24) என்ற மகன் உள்ளார்.

    நேற்று இரவு 9.30 மணிக்கு வீட்டில் சித்ரா, கணவர் ரவிக்குமார், மகன் மோகன் ஆகியோர் இருந்தனர். அவர்கள் சாப்பிட்டு விட்டு தூங்குவதற்காக தயாராகிக் கொண்டு இருந்தனர்.

    அப்போது முகமூடி அணிந்தபடி வந்த 5 பேர் கும்பல் திடீரென வீட்டுக்குள் திபு, திபுவென புகுந்தனர். அவர்களை பார்த்து சித்ராவும், அவரது கணவரும் சத்தம் போட்டனர். நீங்கள் யார், எதற்காக வீட்டுக்குள் வருகிறீர்கள் என சத்தம் போட்டனர். அதற்குள் வேகமாக வந்த கும்பல் தாங்கள் கொண்டு வந்திருந்த அரிவாளால் கவுன்சிலர் சித்ராவையும், அவரது கணவரையும் சரமாரியாக வெட்டியது. இதனை தடுப்பதற்காக மகன் மோகன் ஓடி வந்தார். அவரையும் அந்த கும்பல் வெட்டியது. இதில் 3 பேருக்கும் தலை, கை, கால் என உடல் முழுவதும் காயம் ஏற்பட்டது. இதனால் 3 பேரும் சத்தம் போட்டனர்.

    அவர்களது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு திரண்டனர். அவர்களை பார்த்ததும் முகமூடி கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியது. காயம் அடைந்து உயிருக்கு போராடிய தாய்-தந்தை, மகன் ஆகிய 3 பேரையும் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    இந்த சம்பவம் குறித்து செட்டிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். கவுன்சிலர் சித்ரா கடந்த 6 மாதத்துக்கு முன்பு 3.5 சென்ட் நிலம் வாங்கி இருந்தார். இந்த நிலத்தை மலுமிச்சம்பட்டி அம்பேத்கர் நகரில் பெட்டிக்கடை நடத்தி வரும் ராஜா (23) என்ற வாலிபர் புரோக்கராக செயல்பட்டு வாங்கிக் கொடுத்துள்ளார். இதற்காக புரோக்கர் ராஜாவுக்கு 2 சதவீத கமிஷன் பேசப்பட்டு இருக்கிறது. ஆனால் அந்த கமிஷனை சித்ரா கொடுக்கவில்லை என தெரிகிறது. இதனால் அடிக்கடி சித்ரா குடும்பத்தினரை சந்தித்து ராஜா தகராறு செய்துள்ளார்.

    இந்தநிலையில் தான் நேற்று இரவு ராஜா தனது ஆதரவாளர்கள் 4 பேரை அழைத்துக் கொண்டு முகமூடி அணிந்து சித்ரா வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கு சித்ரா உள்பட குடும்பத்தினரை 3 பேரையும் அரிவாளால் வெட்டியது தெரியவந்தது.

    ராஜா உள்ளிட்ட 5 பேரும் தப்பிச் சென்று விட்டனர். அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள். நள்ளிரவில் தி.மு.க. பெண் கவுன்சிலர் ஒருவர் முகமூடி கும்பல் வெட்டப்பட்ட சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    Next Story
    ×