search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tamil Nadu govt"

    • வனத்துறையில் வனக்காப்பாளர்கள் முழுமையாக களப்பணியாற்றுபவர்கள்.
    • வனக்காப்பாளர்களுக்கு வாரத்தில் ஒரு நாள் சுழற்சி அடிப்படையில் விடுப்பு, மாவட்டத்துக்குள் பயணிக்க இலவச பேருந்து பயண அட்டை செய்துதர வேண்டும்.

    திருப்பூர் :

    வனத்துறையில் வனக்காப்பாளர்கள் முழுமையாக களப்பணியாற்றுபவர்கள். குறிப்பிட்ட வனப்பகுதியில் வனவிலங்குகள் வந்தால் அவற்றை கண்காணிப்பது, யானை, புலி, சிறுத்தை உள்ளிட்டவைகளிடமிருந்து மீட்புப்பணி, மரம் உள்ளிட்டவை விழுந்தால் அவற்றை சீரமைப்பது உட்பட அனைத்து பணிகளையும் வனக்காப்பாளர்கள் தான் செய்வார்கள். 24 மணிநேர களப்பணியாளர்கள். வனவர்கள் 4 முதல் 5 வனக்காப்பாளர்களை கண்காணிப்பதுதான் பணி. தமிழகம் முழுவதும் 8 முதல் 12 ஆண்டுகள் பணியாற்றிய வனக்காப்பாளர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்படவில்லை. அதற்கான ஊதியமும் கிடைக்கவில்லை.

    இது தொடர்பாக வனத்துறையில் பணியாற்றும் திருப்பூரை சேர்ந்த சிலர் கூறும்போது, 2010-ம் ஆண்டு ஆகஸ்டு 15-ந்தேதி தொடங்கி 2013-ம் ஆண்டு ஆகஸ்டு 14-ந்தேதி வரை நேரடி நியமன வனக்காப்பாளர்களாக பணியில் சேர்ந்த வனக்காப்பாளர்களின் எண்ணிக்கை, சுமார் 300 ஆகும். தமிழ்நாடு வனச்சார்நிலை பணி விதிகளின்படி, தகுதிகாண் பருவம் முடித்து பணி வரன்முறைசெய்து 6 மாத வனக்காப்பாளர் பயிற்சி நிறைவு செய்து, குற்றத்தாள்கள் ஏதும் இல்லாமல் 8 ஆண்டுகள் பணி நிறைவு செய்திருந்தால், வனவராக பதவி உயர்வு பெறலாம் என்பது விதி.

    அதன்படி கடந்த 2019-ம் ஆண்டு ஆக. 15-ம் தேதியோடு 220 பேரும், 2020-ம் ஆண்டு ஆக. 15-ம் தேதியோடு 63 பேர், கடந்த ஆண்டு ஆக. 15-ம் தேதியோடு 10 பேர் முழுத்தகுதி பெற்றுள்ளனர். இதில் அதிகப்படியான பணியாளர்கள் பணியில் சேரும்போது, சுமார் 35 வயது மேற்பட்டவராகவும், 40 வயதுக்கு உட்பட்டராகவும் வேலைவாய்ப்பு அலுவலகத்தின் மூலம் பிளஸ் 2 அறிவியல் பாடப்பிரிவு தேர்வு பெற்றதின் அடிப்படையில், பணி அமர்த்தப்பட்டுள்ளனர். தற்போது அவர்கள் 47 வயது முதல் 52 வயதை எட்டி உள்ளனர். இந்நிலையில் கொரோனா பெருந்தொற்று காரணமாக, அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 58-லிருந்து 60 ஆக உயர்த்தி அரசாணை வெளியிட்டது.

    தமிழக வனத்துறையில் வனக்காவலர், வனக்காப்பாளர், வனவர் மற்றும் வனச்சரக அலுவலர் உள்ளிட்ட அனைத்து பதவிகளுக்கும் நேரடி நியமனம் மூலமாக பணியாளர்களை தேர்வு செய்வதாலும், வனவர் பணி இடமானது குறைவாக உள்ளது. வனவர் பதவி உயர்வுக்கு காத்திருக்கும் வனக்காப்பாளர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாலும், வனக்காப்பாளர்கள் 12 ஆண்டுகள் பணி நிறைவு செய்தும், ஒருமுறை கூட பதவி உயர்வு வழங்கப்படவில்லை. அதேபோல் இதில் பலர் 50 வயதை எட்டியதால், வனவர் பதவி உயர்வுக்கு காத்திருக்கும் 300 வனக்காப்பாளர்களின் நலன் கருதி, நேரடி நியமன வனவர் பணி நியமனத்தை நிறுத்தி வைக்க வேண்டும். ஒருமுறை விதிதளர்வின் படி, அனைவரையும் வனவராக பதவி உயர்வு வழங்க வேண்டும். அதேபோல் போலீசாருக்கு வழங்கியதை போல், வனக்காப்பாளர்களுக்கு வாரத்தில் ஒரு நாள் சுழற்சி அடிப்படையில் விடுப்பு, மாவட்டத்துக்குள் பயணிக்க இலவச பேருந்து பயண அட்டை உள்ளிட்ட வசதிகளை செய்துதர வேண்டும் என்றனர்.

    • கோவில் மண்டபங்களில் நடக்கும் திருமணங்களுக்கு வாடகையும் வாங்காமல் திருமணங்கள் நடத்த அனுமதிக்கப்பட்டு வருகிறது.
    • இத்திட்டத்தின் கீழ் நடைபெறும் திருமணங்களில், மணமக்களுக்கு புத்தாடைகள் கோவில் சார்பாக வழங்கப்படும் என்று அரசு அறிவித்து உள்ளது.

    சென்னை:

    கோவில்களில் நடைபெறும் திருமணங்களில் மணமக்களில் ஒருவர் மாற்றுத்திறனாளியாக இருந்தால், கட்டணம் ஏதுமின்றி திருமணம் நடத்தப்படுகிறது.

    கோவில் மண்டபங்களில் நடக்கும் திருமணங்களுக்கு வாடகையும் வாங்காமல் திருமணங்கள் நடத்த அனுமதிக்கப்பட்டு வருகிறது.

    இப்போது இத்திட்டத்தின் கீழ் நடைபெறும் திருமணங்களில், மணமக்களுக்கு புத்தாடைகள் கோவில் சார்பாக வழங்கப்படும் என்று அரசு அறிவித்து உள்ளது.

    இந்த திட்டத்தை செயல்படுத்த தேவையான நிதியை கோவில் வரவு-செலவு திட்டத்தில் ஒதுக்கீடு செய்யும் கோவில் நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இப்பணிகளில் தனிக்க வனம் செலுத்தி கண்காணிக்கவும் மண்டல இணை ஆணையர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு உடனடியாக மின் இணைப்பு வழங்கும்படி தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. #SterlitePlant #NGT #SC
    புதுடெல்லி:

    தமிழக அரசால் மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை, சில நிபந்தனைகளுடன் மீண்டும் திறக்க அனுமதி அளித்து தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டது. இதனையடுத்து ஆலையைத் திறக்கவும், மின்சாரம் வழங்கவும் அனுமதி கோரி வேதாந்தா நிறுவனம் சார்பில் தமிழக அரசுக்கு மனு அளிக்கப்பட்டது. ஆனால் தமிழக அரசு எந்த பதிலும் அளிக்கவில்லை.

    இதையடுத்து ஆலையைத் திறக்க உத்தரவிடக் கோரி வேதாந்தா நிறுவனம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அதில், தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டும், ஆலையை திறக்க உத்தரவிடுவதற்கு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மறுத்து வருவதாக வேதாந்தா நிறுவனம் கூறியிருந்தது.

    இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வேதாந்தா நிறுவனம் சார்பில் தங்கள் தரப்பு கோரிக்கை முன்வைக்கப்பட்டது.



    இதையடுத்து, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு தமிழக அரசு உடனடியாக மின் இணைப்பு வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்தது.

    மேலும், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர், போலீஸ் பாதுகாப்புடன் சென்று ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது. ஆலை பராமரிப்பு மற்றும் நிர்வாக ரீதியிலான பணிகளுக்கு மட்டுமே ஆலையை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. #SterlitePlant #NGT #SC
    கஜா புயல் தாக்குதலில் முன் எச்சரிக்கை நடவடிக்கையால் உயிர் சேதம் பெருமளவில் தடுக்கப்பட்டதாக சட்டசபையில் முதலமைச்ச் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். #TNAssembly #GajaCyclone #EdappadiPalaniswami
    சென்னை:

    சட்டசபையில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கஜா புயல் தாக்குவதற்கு முன்பாக அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து பேசியதாவது:-

    கஜா புயலால் பாதிக்கப்பட்ட போது எந்த அதிகாரியும் அந்தப் பகுதியிலே வரவில்லை என்ற ஒரு குற்றச்சாட்டை ஒரு உறுப்பினர் இங்கே பதிவு செய்துள்ளார். அது தவறானது. வருவாய்த்துறை அமைச்சர் சொன்னதைப்போல, கஜா புயல் வருவதற்கு முன்பாகவே, இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்த கருத்தின் அடிப்படையிலே, என் தலைமையிலே இருமுறை கூட்டம் கூட்டப்பட்டு, அந்தக் கூட்டத்திலே மூத்த அமைச்சர்கள், தலைமைச் செயலாளர், மூத்த இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகள் எல்லாம் கலந்து கொண்டு, புயல் ஏற்பட்டால் நாம் என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை எல்லாம் ஆலோசித்து, அந்த ஆலோசனையின்படி அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கும், புயலால் பாதிக்கப்படக்கூடிய அந்த மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு எல்லாம் அறிவுறுத்தப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது.

    அதுமட்டுமல்லாமல், வருவாய்த் துறை அமைச்சர் சொன்னதைப் போல, புயல் ஏற்படக்கூடிய அந்த மாவட்டங்களிலே, அந்த மாவட்ட அமைச்சர்கள் அங்கேயே தங்கியிருந்து, அந்தப் புயல் வருகின்ற போது, மக்கள் எந்தவிதத்திலும் பாதிக்கக்கூடாது அதற்கு முன் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.

    அவர்களுக்கு துணையாக மூத்த இந்திய ஆட்சிப் பணியாளர்களும் முன் கூட்டியே அனுப்பி வைக்கப்பட்டனர். முன்கூட்டியே அனுப்பி வைக்கப்பட்ட காரணத்தினாலே, அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்த காரணத்தினாலே, அனைத்து மின் இணைப்புகளும் புயல் அடிப்பதற்கு முன்பாக 6 மணிக்கு  மணிக்கே நிறுத்தப்பட்டு விட்டன.

    போக்குவரத்து இயக்கம் எல்லாம் நிறுத்தப்பட்டது. அதுமட்டுமல்லாமல், இந்த புயல் கடுமையாக பாதிக்கக்கூடும் என்று இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்த கருத்தின் அடிப்படையிலே, குடிசையில் வாழ்ந்த மக்கள், தாழ்வான பகுதியிலே வாழ்ந்த மக்களை எல்லாம், அதிகாரிகள் தான் அழைத்து வந்து பாதுகாப்பான முகாம்களில் தங்க வைத்திருக்கிறார்கள்.

    கோப்புப்படம்

    கிட்டத்தட்ட 81, 948 நபர்கள் 471 முகாம்களிலே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தங்க வைத்ததன் காரணமாக உயிர் சேதம் பெருமளவு தடுக்கப்பட்டு இருக்கிறது. ஆகவே, அதிகாரிகள் எல்லாம் வந்த காரணத்தினாலே தான் இந்த நடவடிக்கைகள் எல்லாம் எடுக்கப்பட்டு இருக்கிறது.

    ஆகவே, கஜா புயல் ஏற்பட்ட போது யாரும் வரவில்லை என்ற உறுப்பினரின் குற்றச்சாட்டு தவறு. வருவதற்கு முன்பாகவே, அங்கே இருக்கின்ற மாவட்ட அமைச்சர்கள், மூத்த இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகள், வருவாய் துறை அதிகாரிகள், மின்சாரத் துறை அதிகாரிகள், வேளாண் துறை அதிகாரிகள் இன்னும் பல்வேறு துறை சேர்ந்த அதிகாரிகள் எல்லாம் அங்கே அனுப்பி வைக்கப்பட்டு, புயல் ஏற்படுவதற்கு முன்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு, மக்களை காப்பாற்ற வேண்டுமென்ற அடிப்படையிலே, அரசு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு இருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார். #TNAssembly #GajaCyclone #EdappadiPalaniswami
    தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் போடப்படுவதில் தனக்கு நம்பிக்கை இல்லை என்று பொன். மாணிக்கவேல் தெரிவித்துள்ளார். #IGPonManickavel
    சென்னை:

    சென்னை எழும்பூரில் உள்ள சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் பங்கேற்ற நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

    ஓய்வு பெறுவதையொட்டி ரெயில்வே போலீசில் சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கும், குற்றவாளிகளை பிடித்துக் கொடுத்த பொதுமக்களுக்கும் பொன். மாணிக்கவேல் வெகுமதிகளை வழங்கினார். அப்போது அவர் போலீசார் மத்தியில் பேசியதாவது:-

    போலீஸ் துறையில் பணியாற்றும் இன்ஸ்பெக்டர்கள் பணிச்சுமையுடனேயே பணியாற்றுகின்றனர். ஆண்டுக்கு சராசரியாக 600 வழக்குகள் பதிவாகின்றன. இதனால் அனைத்து வழக்குகளையும் விசாரிப்பதற்கு போலீசாருக்கு போதுமான நேரம் கிடைப்பதில்லை. கொலை வழக்குகளை விசாரித்து முடிப்பதற்கு 3 மாதங்களுக்கு மேல் ஆகும்.

    ஒரு வழக்கை பதிவு செய்யும் போது போலீசார் மிகுந்த கவனமுடன் செயல்பட வேண்டும். அரசு வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடத்தி சட்டநுணுக்கங்களையும் தெரிந்து கொள்ள வேண்டும். அப்போதுதான் நீதிமன்றங்களில் வழக்கை திறம்பட நடத்த முடியும். நீதிமன்றத்தை எப்போதும் மதித்து செயல்பட வேண்டும்


    ஒரு வழக்கை பதிவு செய்யும் அதிகாரி எக்காரணம் கொண்டும் குற்றவாளிகளை தப்ப விட்டு விடக் கூடாது. கோர்ட்டில் குற்றத்தை நிரூபித்து தண்டனை வாங்கிக் கொடுக்க வேண்டும். தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் போடப்படுகிறது. ஆனால் அதில் எனக்கு நம்பிக்கை இல்லை. ஏனென்றால் 2 அல்லது 3 மாதங்களில் குண்டர் சட்டத்தை உடைத்துக் கொண்டு குற்றவாளிகள் வெளியில் வந்து விடுகிறார்கள்.

    தமிழக அரசுக்கும் எனக்கும் எந்த பிரச்சனையும் இல்லை. சில அதிகாரிகளால்தான் பிரச்சனை. முழுமன நிறைவோடு பணி ஓய்வு பெறுகிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார். #PonManickavel
    கஜா புயல் நிவாரணத்துக்கு 14 ஆயிரம் கோடி ரூபாய் தேவை என்று உள்துறை அமைச்சகத்திடம் தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. #GajaCyclone #GajaCycloneRelief #HomeMinistry
    புதுடெல்லி:

    தமிழகத்தின் கடலோர மாவட்டங்களை சமீபத்தில் தாக்கிய கஜா புயல் வரலாறு காணாத வகையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்த புயல் காரணமாக டெல்டா மாவட்டங்களை சேர்ந்த மக்கள் மிகுந்த இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். உயிர் சேதமும், பொருட்சேதமும் ஏற்பட்டு அவர்களின் வாழ்வாதாரம் முற்றிலும் முடங்கியுள்ளது. மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. புயல் நிவாரணத்துக்கு மாநில அரசு 1000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி உள்ளது.



    இந்நிலையில், ‘கஜா’ புயல் பாதிப்பு குறித்து விளக்கவும், சேத மதிப்பு தொடர்பான விவரங்களை பிரதமர் நரேந்திர மோடியிடம் தெரிவித்து மீட்பு மற்றும் நிவாரண பணிகளுக்கு தேவையான நிதியை பெற்று வருவதற்கும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்றார். அவருடன் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மற்றும் உயர் அதிகாரிகள் சென்றனர்.

    இன்று காலை பிரதமர் மோடியை தமிழக முதல்வர் சந்திக்க உள்ள நிலையில், கஜா புயல் சேத விவரம் மற்றும் தேவைப்படும் நிவாரணம் தொடர்பான தமிழக அரசின் சார்பில் உள்துறை அமைச்சகத்திடம் அறிக்கை  அளிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கை உள்துறை அமைச்சகத்தின் பரிசீலனையில் உள்ளது.

    அதில், கஜா புயல் நிவாரணத்துக்கு தமிழக அரசு 14 ஆயிரம் கோடி ரூபாய் கேட்டிருப்பதாகவும், இடைக்கால நிவாரணமாக 1500 கோடி ரூபாய் ஒதுக்கும்படி கோரிக்கை வைத்திருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. #GajaCyclone #GajaCycloneRelief #HomeMinistry
    தமிழகத்தில் கோரத்தாண்டவம் ஆடிய கஜா புயல் ஏற்படுத்திய பாதிப்புகளை சீரமைப்பது தொடர்பாக போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். #GajaCyclone #Edappadipalaniswami
    சென்னை:

    கஜா புயலால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களிடம் இன்று காலை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்டறிந்தார்.

    பின்னர், கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் போர்க்கால அடிப்படையில்  நடவடிக்கை எடுக்க வேண்டும்.  மின்சாரத்துறை, பேரிடர் மற்றும் மீட்புத்துறை, சுகாதாரத்துறைகளின் பணிகளை முடுக்கி விட வேண்டும்.


    கஜா புயலால் ஏற்பட்ட சேதங்களை கணக்கிட்டு தகுந்த நடவடிக்கை எடுக்கவும்,  புயலால் பாதிக்கப்பட்டோர், நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டோருக்கு தேவையான உதவிகளை செய்யவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.  #GajaCyclone #Edappadipalaniswami
    பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலையில் உறுதியாக இருக்கிறோம் என்று துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார். #ADMK #OPanneerSelvam
    பெரியகுளம்:

    பெரியகுளம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் தொடர்பான அ.தி.மு.க. ஆலோசனை கூட்டம் நேற்று பெரியகுளத்தில் நடந்தது. இந்த கூட்டத்தில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்- அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் உள்பட 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழக அரசின் சார்பில் 2 முறை கவர்னரிடம் பரிந்துரை செய்து உள்ளோம். அமைச்சரவை கூட்டத்தில் அவர்களை விடுதலை செய்வது என முடிவு செய்யப்பட்டு உள்ளது. எனவே அவர்களை விடுதலை செய்வதில் உறுதியாக இருக்கிறோம்.


    ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் குடிசைகளை மாற்றி 13 லட்சம் வீடுகள் கட்டிக் கொடுக்க திட்டம் தீட்டப்பட்டு இருந்தது. இதில் 3¾ லட்சம் வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. வரும் 2022-ம் ஆண்டுக்குள் தமிழகத்தில் 13 லட்சம் வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டு குடிசைகள் இல்லாத தமிழகமாக மாற்றப்படும்.

    தமிழகத்தில் எந்தவொரு தொகுதியும் புறக்கணிக்கப்படவில்லை. 234 தொகுதிகளிலும் மாவட்ட கலெக்டரின் நேரடி பார்வையில் அனைத்து திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இரட்டை இலை சின்னம் துரோகிகள் கைவசம் உள்ளது என்று சிலர் கூறுவது தவறு. 18 எம்.எல்.ஏ.க்களின் பதவி போன விரக்தியில் அவர்கள் பேசுகின்றனர்.

    வடகிழக்கு பருவமழை குறித்தும், வர இருக்கிற கஜா புயலால் சராசரி அளவை காட்டிலும் அதிக பாதிப்புகள் இருக்கலாம் என்பதை கருத்தில் கொண்டும் அனைத்து அதிகாரிகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தயார் நிலையில் உள்ளனர். ஓ.பி.எஸ்., இ.பி.எஸ்.க்கு பதவி கொடுத்தவர் சசிகலா என்று தினகரன் கூறுகிறார். எனக்கு பதவி கொடுத்தவர் ஜெயலலிதாதான். எங்களுக்கு அரசியல் ரீதியான எதிர்க்கட்சி தி.மு.க.தான். துரோகி கட்சி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம். வரும் இடைத்தேர்தலில் 20 தொகுதிகளிலும் அ.தி.மு.க. அமோக வெற்றி பெற்று இரட்டை இலையை வெற்றி சின்னமாக மாற்றுவோம்.

    இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் கூறினார். #ADMK #OPanneerSelvam 
    விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று பாசனத்துக்காக மணிமுத்தாறு அணை வருகிற 7-ந்தேதி முதல் 145 நாட்களுக்கு திறக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். #TNCM #Edappadipalaniswami #ManiMutharDam
    சென்னை:

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    மணிமுத்தாறு அணை பெருங்கால் பாசன நீரினைப் பயன்படுத்துவோர் சங்கத்தினர் உள்ளிட்ட திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திர வட்ட வேளாண் பெருமக்களின் வேண்டுகோளினை ஏற்று, அம்பாசமுத்திரம் வட்டத்திலுள்ள பெருங்கால் பாசனம் மூலம் பாசனம் பெறும் நேரடி மற்றும் மறைமுகப் பாசனப் பகுதிகளுக்கு கார் பருவ சாகுபடிக்கு 7.11.2018 முதல் 31.3.2019 வரை 145 நாட்களுக்கு மணிமுத்தாறு அணையிலிருந்து 399.60 மில்லியன் கன அடிக்கு மிகாமல் நீர் இருப்பு மற்றும் நீர் வரத்தினைப் பொறுத்து தேவைக்கேற்ப தண்ணீரை திறந்து விட நான் ஆணையிட்டுள்ளேன்.

    இதனால், திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் வட்டத்திலுள்ள 2756.62 ஏக்கர் பாசன நிலங்கள் பாசன வசதி பெறும். மேலும், விவசாயப் பெருமக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு, உயர் மகசூல் பெற வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #TNCM #Edappadipalaniswami #ManiMutharDam
    தமிழக அரசுக்கு எதிராக வழக்குகளை தொடுக்க தி.மு.க. வக்கீல்கள் செலவு மற்றும் கோர்ட்டு வகைக்காக ரூ.11 கோடிவரை செலவழித்துள்ளதாக பொதுக்குழுவில் தாக்கல் செய்யப்பட்ட கணக்கு தணிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #DMK #DMKGeneralMeeting
    சென்னை:

    தமிழக அரசுக்கு எதிராக தி.மு.க. பல்வேறு வழக்குகளை கோர்ட்டில் தொடர்ந்து இருந்தது.

    அமைச்சர், போலீஸ் உயர் அதிகாரிகள் தொடர்புடைய குட்கா ஊழல் வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க கோரி வழக்கு தொடர்ந்தது.

    எடப்பாடி பழனிசாமி அரசுக்கு எதிராக வாக்களித்த துணை முதல்-மந்திரி ஓ.பன்னீர்செல்வம் மற்றும் 10 எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி வழக்கு தொடர்ந்தது. இது தவிர தமிழக அரசுக்கு எதிராக தி.மு.க. பல்வேறு வழக்குகளை கோர்ட்டில் தொடுத்தது.

    இந்த நிலையில் தமிழக அரசுக்கு எதிராக வழக்குகளை தொடுக்க தி.மு.க. வக்கீல்கள் செலவு மற்றும் கோர்ட்டு வகைக்காக ரூ.11 கோடிவரை செலவழித்துள்ளது. தி.மு.க. பொதுக்குழுவில் தாக்கல் செய்யப்பட்ட கணக்கு தணிக்கையில் இதுபற்றி தெரிவிக்கப்பட்டுள்ளதாக தி.மு.க. கணக்கு தணிக்கை குழு உறுப்பினர் தெரிவித்தார்.


    ஆர்.கே. நகர் தேர்தல் பிரசாரத்துக்கு ரூ.10 லட்சம் செலவழிக்கப்பட்டது பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேபோல தி.மு.க.வுக்கு வந்த பணம் விவரம், செலவழித்த மற்ற விவரம் ஆகியவை பற்றியும் குறிப்பிடப்பட்டு உள்ளது.

    ஆண்டு தோறும் கணக்கு தணிக்கை தி.மு.க. பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்டு தேர்தல் கமி‌ஷனிடம் அனுப்பப்படும். பின்னர் வருமான வரி கணக்கு தாக்கல் செய்யப்படும். #DMK #DMKGeneralMeeting
    பசுமை வழிச்சாலை திட்டம் தொடர்பாக தமிழக அரசை கண்டித்து திருவண்ணாமலையில் தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் 5 எம்.எல்.ஏ.க்கள் கலந்துகொண்டனர்.
    திருவண்ணாமலை:

    சென்னை - சேலம் பசுமை வழிச்சாலை திட்டத்தை எதிர்த்து போராடும் மக்கள் மீதான அ.தி.மு.க. அரசின் நடவடிக்கையை கண்டித்து நேற்று திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்துக்கு திருவண்ணாமலை தெற்கு மாவட்ட செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான எ.வ.வேலு தலைமை தாங்கினார். வடக்கு மாவட்ட செயலாளர் ஆர்.சிவானந்தம், எம்.எல்.ஏ.க்கள் கு.பிச்சாண்டி, மு.பெ.கிரி, கே.வி.சேகரன், எஸ்.அம்பேத்குமார், மாவட்ட அவைத் தலைவர் வேணுகோபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஆர்ப்பாட்டத்தில் எ.வ.வேலு எம்.எல்.ஏ. பேசியதாவது:-

    பசுமை வழிச்சாலை தொடர்பாக விவசாயிகளின் கருத்து கேட்கவில்லை. மக்களை துன்புறுத்தி நிலங்களை பெறக்கூடாது. திருவண்ணாமலை மாவட்டத்தில் 6 இடங்களில் காப்புக்காடுகள் உள்ளன. பசுமை வழிச்சாலையினால் காப்புக்காடுகள் பாதிப்புக்கு உள்ளாகும். பசுமை வழிச்சாலையினால் திருவண்ணாமலை மாவட்டத்துக்கு தான் அதிகம் பாதிப்பு. 122 கிலோ மீட்டர் சாலை அமைக்க 1100 ஹெக்டர் விவசாய நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது.

    ஜெயலலிதா முதல் - அமைச்சராக இருந்த போது மேம்பாலங்கள் அமைப்பது தொடர்பாக அறிவித்து இருந்தார். அந்த திட்டங்களை நிறைவேற்ற முன்வராமல், பசுமை வழிச்சாலை திட்டத்துக்கு முதல் - அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆர்வம் காட்டுவதன் நோக்கம் என்ன.

    மக்களுக்கு விருப்பம் இல்லாத திட்டத்தை கைவிட்டு விட்டு மாற்று வழிகளை கையாள வேண்டும் என்று தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதில் தலைமை செயற்குழு உறுப்பினர் ஸ்ரீதரன், மாவட்ட பொருளாளர் எஸ்.பன்னீர்செல்வம், நகர செயலாளர் கார்த்திவேல்மாறன், டாக்டர் எ.வ.வே.கம்பன், மாவட்ட அமைப்பாளர் அண்ணாதுரை உள்பட பலர் கலந்துகொண்டனர். 
    ×