search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tamil Nadu govt"

    • கொரோனா காலத்தில் பணிபுரிந்த தொழிலாளர்களை சிறப்பிக்கும் வகையில், சிறப்பு ஊக்கத் தொகை.
    • முதலமைச்சரின் உத்தரவின் பேரில் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

    போக்குவரத்து தொழிலாளர்களின் சிறப்பு ஊக்கத் தொகை, 14வது ஊதிய ஒப்பந்தத்தின்படி ஊதிய நிலுவைத் தொகையை வழங்க தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

    ஜனவரி 2022ம் ஆண்டு முதல் ஜூலை 2022 வரை உள்ள காலத்திற்கான ஊதிய நிலுவைத் தொகையான ரூ.171.05 கோடி வழங்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    கொரோனா காலத்தில் பணிபுரிந்த தொழிலாளர்களை சிறப்பிக்கும் வகையில், சிறப்பு ஊக்கத் தொகையாக ரூ.17.15 கோடியை வழங்கவும் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    மேலும், முதலமைச்சரின் உத்தரவின் பேரில் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

    • அடுத்த மாதம் முதல் மீண்டும் மின் கட்டணத்தை உயர்த்த மின்சார வாரியம் முடிவு செய்திருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன.
    • மின்சாரக் கட்டண உயர்வால் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ஏற்பட்டிருக்கும் பாதிப்புகளை சொல்லிமாளாது.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் நுகர்வோர் விலைக்குறியீடு உயர்வின் அடிப்படையில் மின் கட்டணத்தை உயர்த்த மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி அளித்திருப்பதால், அடுத்த மாதம் முதல் மீண்டும் மின் கட்டணத்தை உயர்த்த மின்சார வாரியம் முடிவு செய்திருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. 10 மாதங்களில் மீண்டும் ஒரு மின்கட்டண உயர்வு என்பது மக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல் ஆகும்.

    மின்சாரக் கட்டண உயர் வால் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ஏற்பட்டிருக்கும் பாதிப்புகளை சொல்லிமாளாது. மின்சாரக் கட்டண உயர்வை தாங்கிக் கொள்ள முடியாமல் ஏராளமான சிறு, குறு நிறுவனங்கள் மூடப்பட்டிருக்கின்றன. அதே போல், விசைத்தறி உரிமையாளர்களும் மின் கட்டண உயர்வின் தாக்கங்களை தாங்க முடியாமல் தொழிலை விட்டு வெளி யேறிவிட்டனர். சிறு வணிகர்களுக்கு கிடைக்கும் லாபத்தில் பெரும்பகுதி மின் கட்டணம் செலுத்துவதற்கே செலவாகி விடுகிறது. இத்தகைய சூழலில் மின்சாரக் கட்டணம் மீண்டும் ஒருமுறை உயர்த்தப்பட்டால், வணிகர்கள், சிறு, குறு தொழில் முனைவோர் உள்ளிட்ட அனைவரும் மீள முடியாத பொருளாதார நெருக்கடியில் சிக்கிக் கொள்வார்கள்.

    அதுமட்டுமின்றி, தமிழ்நாட்டில் 90 சதவீத மக்களின் வருமானம் ஆண்டுக்கு 2 சதவீதம் கூட உயருவதில்லை. அப்படிப்பட்ட மக்களால் 4.70 சதவீத மின்கட்டண உயர்வை சமாளிக்க முடியாது. தமிழ்நாட்டின் வரலாற்றில் 10 மாதங்களில் இரண்டாவது முறையாக மின்சாரக் கட்டணத்தை உயர்த்துவது இதுவரை நிகழ்ந்ததில்லை.

    எனவே, மின்சாரக் கட்டணத்தை ஜூலை மாதம் முதல் உயர்த்தும் முடிவை மின்சார வாரியம் கைவிட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    • சிறப்பு பயிற்சி வகுப்பு நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும்.
    • கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளின் அடிப்படையில் கற்றல் கற்பித்தல் பணிகளை தொடர வேண்டும்

    சென்னை:

    அனைத்து அரசுப் பள்ளிகளிலும் பள்ளி மேலாண் மைக்குழு கூட்டத்தை வருகிற 9-ந் தேதி (வெள்ளிக் கிழமை) மதியம் 3 மணிக்கு நடத்திட வேண்டும் என்று பள்ளிக் கல்வி மாநில திட்ட இயக்குனர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

    இந்த கல்வி ஆண்டில் பள்ளி இடைநிற்றல் இல்லாமல் மாணவர்கள் தமது படிப்பை தொடர்வதையும், அனைத்து வகை அரசு பள்ளிகளிலும் குழந்தைகள் தடையின்றி சேர்க்கப்படுவதையும், பள்ளி மேலாண்மை குழு கூட்டத்தில் கலந்தாலோசித்து மாணவர் சேர்க்கையை உறுதிப்படுத்த வேண்டும்.

    பள்ளியின் அருகில் உள்ள வீடுகளில் யாரேனும் மாற்றுத் திறன் குழந்தைகள் பள்ளியில் சேராமல் இருப்பது தெரிந்தால் அக்குழந்தையின் பெற்றோரை மேலாண்மை குழுவினர் சந்தித்து பள்ளியில் சேர்க்க ஊக்குவிக்க வேண்டும். சிறப்பு பயிற்சி வகுப்பு நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும். துணைத் தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி வழங்குதல் 'இல்லம் தேடி கல்வி' திட்டத்தை தொடருதல் உள்ளிட்டவை குறித்து இதில் விவாதிக்க வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.

    கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளின் அடிப்படையில் கற்றல் கற்பித்தல் பணிகளை தொடர வேண்டும் என்று அதில் கூறப்பட்டு உள்ளது.

    • 200 லட்சம் லிட்டர் பாமாயில் கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்த புள்ளியை வெளியிட்டதாக தெரிய வருகிறது.
    • தேங்காய்க்கு உரிய விலை கிடைக்காமல் நஷ்டம் ஏற்பட்டு கடனாளியாக உள்ளனர்.

    பல்லடம் :

    பாமாயில் இறக்குமதி ஒப்பந்தத்தை தமிழக அரசு கைவிட வேண்டும் என உழவர் உழைப்பாளர் கட்சித் தலைவர் செல்லமுத்து வலியுறுத்தி உள்ளார். இதுகுறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- தமிழ்நாடு அரசு நுகர்பொருள் வாணிப கழகம் சமீபத்தில் 200 லட்சம் லிட்டர் பாமாயில் கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்த புள்ளியை வெளியிட்டதாக தெரிய வருகிறது.இது தென்னை விவசாயிகளுக்கு வேதனை அளிக்கிறது. தமிழ்நாட்டில் லட்சக்கணக்கான தென்னை விவசாயிகள் தேங்காய்க்கு உரிய விலை கிடைக்காமல் நஷ்டம் ஏற்பட்டு கடனாளியாக உள்ளனர். கொப்பரைக்கும் உரிய விலை கிடைப்பதில்லை.

    எனவே நீண்ட காலமாக ரேஷன் கடைகளில் பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணெய் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகிறோம். சமீபத்தில் கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய உணவுத்துறை அமைச்சர் ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். இந்த நிலையில், நுகர் பொருள் வாணிபக் கழகத்தின் இந்த பாமாயில் ஒப்பந்த புள்ளி அறிவிப்பு விவசாயிகளுக்கு அதிர்ச்சி அளிக்கிறது. தென்னை விவசாயிகளை காப்பாற்றவும், உள்ளூர் வணிகத்தை ஊக்குவிக்ககவும், தமிழ்நாடு அரசு பாமாயில் இறக்குமதி ஒப்பந்த புள்ளியை ரத்து செய்து, ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் தென்னை விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் உரம், இடுபொருள்களுக்கு அரசு மானியம் வழங்க வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • காலி மது பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம் சோதனை அடிப்படையில் அமல்படுத்தப்பட்டது.
    • பாட்டில்களை விற்பனை செய்து ஈட்டும் வருவாய் குறித்த விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய உத்தரவு

    சென்னை:

    டாஸ்மாக் கடைகளில் காலி மது பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை சோதனை அடிப்படையில் கோவை மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் அமல்படுத்த வேண்டும் என டாஸ்மாக் நிர்வாகத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதுகுறித்த அறிக்கையை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர். அதன்படி காலி மது பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம் சோதனை அடிப்படையில் அமல்படுத்தப்பட்டது.

    இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மலைப்பகுதிகளில் காலி மது பாட்டில்களை திரும்ப பெறும்திட்டம் திருப்தி அளிக்கும் வகையில் அமல்படுத்தப்படடுள்ளதாக தமிழ்நாடு அரசுக்கு உயர் நீதிமன்றம் பாராட்டு தெரிவித்தது.

    மேலும், திரும்பப் பெறும் பாட்டில்களை விற்பனை செய்து ஈட்டும் வருவாய் குறித்த விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்யவும் உத்தரவு பிறப்பித்தது.

    கோவை மற்றும் பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் ஏப்ரல் 1ம் தேதி முதல் இந்த திட்டத்தை அமல்படுத்த வேணடும் என டாஸ்மாக் நிர்வாகத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    • நிதி ஒதுக்கீடு உயிர் நீர் இயக்கம் (ஜல் ஜீவன் மிஷன்), அம்ரூத் 2.0 மற்றும் மூலதன மானிய நிதியின்கீழ் வழங்கப்படும்.
    • கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் சுமார் 1.28 லட்சம் மக்கள் பயன்பெறுவர்.

    சென்னை:

    தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் உயிர் நீர் இயக்கம் (ஜல் ஜீவன் மிஷன்), அம்ரூத் 2.0 மற்றும் மூலதன மானிய நிதியின் (CGF) கீழ் ரூ.255.64 கோடி மதிப்பீட்டிலான அண்ணாமலை நகர் பேரூராட்சி கடலூர் மாவட்டம், சிதம்பரம் மற்றும் பரங்கிபேட்டை, நகராட்சி, குமாராட்சி ஒன்றியங்களைச் சார்ந்த 10 ஊராட்சிகளுக்கு கொள்ளிடம் ஆற்றினை நீராதாரமாகக் கொண்ட கூட்டுக் குடிநீர் திட்டத்தினை செயல்படுத்த தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

    தமிழ்நாடு அரசின் நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் கடலூர் மாவட்டம், சிதம்பரம் நகராட்சி, அண்ணாமலைநகர் பேரூராட்சி மற்றும் பரங்கிபேட்டை, குமராட்சி ஒன்றியங்களைச் சார்ந்த கணக்கரப்பட்டு, கவரப்பட்டு, நக்கரவந்தன்குடி, டி.எஸ்.பேட்டை, ஜெயங்கொண்டபட்டினம், கீழகுண்டலாபாடி, பெராம்பட்டு, சிவபுரி மற்றும் வரகூர் ஆகிய 10 ஊராட்சிகளுக்கு கொள்ளிடம் ஆற்றினை நீராதாரமாகக் கொண்டு புதிதாக அமைக்கப்படவுள்ள 2 நீர் சேகரிப்பு கிணறுகள் மூலம் 2,078 வீடுகளுக்கு குடிநீர் இணைப்புகளுடன் கூடிய கூட்டுக் குடிநீர் அபிவிருத்தி திட்டம் செயல்படுத்த நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, நாள் ரூ.255.64 கோடிக்கு நிர்வாக ஒப்புதல் 14.12.2022-ல் வழங்கப்பட்டுள்ளது.

    இத்திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு உயிர் நீர் இயக்கம் (ஜல் ஜீவன் மிஷன்), அம்ரூத் 2.0 மற்றும் மூலதன மானிய நிதியின்கீழ் வழங்கப்படும். இத்திட்டத்தின் மூலம், சுமார் 1.28 லட்சம் மக்கள் பயன்பெறுவர். மேலும், நாளொன்றுக்கு நபர் ஒருவருக்கு நகராட்சி பகுதிகளில் 135 லிட்டர் வீதமும், பேரூராட்சி பகுதிகளில் 90 லிட்டர் வீதமும் மற்றும் ஊரக பகுதிகளில் 55 லிட்டர் வீதமும் குடிநீர் வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சாய ஆலைகளுக்கு போதிய அளவு ஆா்டா்கள் இல்லாமல் மந்தமான நிலையில் உள்ளது.
    • 50 சதவீத வேலைவாய்ப்பு குறைவாக உள்ளது.

    திருப்பூர் :

    மின் கட்டண உயா்வு அறிவிப்பை தமிழக அரசு திரும்பப்பெற வேண்டும் என்று திருப்பூா் சாய ஆலை உரிமையாளா்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

    இது குறித்து தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சாய ஆலை உரிமையாளா்கள் சங்கத்தின் தலைவா் பி.காந்திராஜன், செயலாளா் முருகசாமி ஆகியோா் அனுப்பியுள்ள மனுவில் கூறியுள்ளதாவது:- திருப்பூா் பின்னலாடை தொழிலானது நூல் விலை அதிகரிக்கும்போது கடுமையாகப் பாதிக்கப்படுகிறது. இதன் காரணமாக சாய ஆலைகளுக்கும் போதிய அளவு ஆா்டா்கள் இல்லாமல் மந்தமான நிலையில் உள்ளது. இதனால் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 50 சதவீத வேலைவாய்ப்பு குறைவாக உள்ளது. மேலும் சாயத் தொழிலுக்கு தேவையான மூலப்பொருள்களின் விலையும் கடுமையாக உயா்ந்துள்ளது.

    இத்தகைய சூழ்நிலையில் மின் கட்டணத்தை உயா்த்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளது பின்னலாடைத் தொழிலின் வளா்ச்சியை வெகுவாகப் பாதித்துள்ளது. ஆகவே மின் கட்டண உயா்வை தமிழக அரசு திரும்பப்பெற வேண்டும் என்று தெரிவித்துள்ளனா்

    • இந்த தேர்வு நாளை(ஞாயிற்றுக்கிழமை) காலை 9.30 க்கு தொடங்கி 12.30 மணி வரை நடைபெற உள்ளது.
    • தேர்வுக்கான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் தேர்வாணைய குழு உறுப்பினர் பாலுசாமி தலைமையில் நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 4 பணியிடங்களுக்கான போட்டித்தேர்வினை 56,223 தேர்வர்கள் எழுத உள்ளனர். அறை ஒன்றுக்கு 20 தேர்வர்கள் வீதம் தேர்வு எழுத ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.

    இதற்காக நாமக்கல் வட்டத்தில் 43 தேர்வு மையங்களில் 13,722 தேர்வர்களும், ராசிபுரம் வட்டத்தில் 47 தேர்வு மையங்களில் 13,978 தேர்வர்களும், மோகனூர் வட்டத்தில் 8 தேர்வு மையங்களில் 2,239 தேர்வர்களும், சேந்தமங்கலம் வட்டத்தில் 17 தேர்வு மையங்களில் 4,318 தேர்வர்களும், திருச்செங்கோடு வட்டத்தில் 42 தேர்வு மையங்களில் 12,048 தேர்வர்களும், பரமத்திவேலூர் வட்டத்தில் 23 தேர்வு மையங்களில் 6,612 தேர்வர்களும், குமாரபாளையம் வட்டத்தில் 11 தேர்வு மையங்களில் 3,306 தேர்வர்களும் என மொத்தம் 132 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள 191 தேர்வு மையங்களில் 56,223 தேர்வர்களும் போட்டித்தேர்வினை எழுதுகின்றனர்.

    இந்த தேர்வு நாளை(ஞாயிற்றுக்கிழமை) காலை 9.30 க்கு தொடங்கி 12.30 மணி வரை நடைபெற உள்ளது. இந்த தேர்வுகளை எழுதும் தேர்வர்கள், தேர்வு மையத்திற்கு காலை 8.30 மணிக்கு தவறாமல் வந்து விடவேண்டும். தேர்வர்களின் புகைப்படம், பெயர், பதிவு எண் உள்ளிட்ட விவரங்கள் சரிபார்க்கும் பணிகள் மேற்கொள்ளப்படும். 9 மணிக்கு தேர்வு மைய கதவுகள் பூட்டப்படும் என்பதால் அதற்கு முன் வரும் தேர்வர்கள் மட்டுமே தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள்.

    தேர்வுக்கான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் தேர்வாணைய குழு உறுப்பினர் பாலுசாமி தலைமையில் நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த தேர்வின்போது அலுவலர்கள் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்த குறும்பட விளக்க காட்சி ஒளிபரப்பப்பட்டது.

    • முதலீட்டாளர்கள் மாநாட்டில் ராம்ராஜ் காட்டன் நிறுவனம் சார்பாக ரூ.1000 கோடிக்கான தொழில் முதலீட்டில், நூற்பு நெசவு மற்றும் பதப்படுத்தும் ஆலையை அமைக்க ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.
    • முதல்-அமைச்சரிடம் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ராம்ராஜ் காட்டன் நிறுவனர் கே.ஆர்.நாகராஜன் வழங்கினார்.

    திருப்பூர் :

    சென்னையில் உள்ள தாஜ் கோரமண்டல் ஓட்டலில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் ராம்ராஜ் காட்டன் நிறுவனம் சார்பாக ரூ.1000 கோடிக்கான தொழில் முதலீட்டில் 4 ஆயிரம் ேபருக்கு வேலைவாய்ப்பு, நூற்பு நெசவு மற்றும் பதப்படுத்தும் ஆலையை அமைக்க ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ராம்ராஜ் காட்டன் நிறுவனர் கே.ஆர்.நாகராஜன் வழங்கினார். இதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசின் தொழில் முதலீட்டு வழிகாட்டு குழுவின் தலைமை நிர்வாக அதிகாரி பூஜா குல்கர்னி செய்திருந்தார். இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் குறித்து கே.ஆர்.நாகராஜன் கூறும்போது , தமிழக அரசுடன் இணைந்து செயல்படுத்தவிருக்கும் தொழில் முதலீடுகள் மூலமாக இ்ன்னும் பல்லாயிரக்கணக்கான நெசவாளர்களுக்கு முழுமையான வேலைவாய்ப்பு அமைவதுடன், தொழில் முன்னேற்றத்தில் தமிழகத்தை வளர்ச்சிப்பாதையில் அழைத்து செல்ல பேருதவியாக இருக்கும் என்றார்.

    • வனத்துறையில் வனக்காப்பாளர்கள் முழுமையாக களப்பணியாற்றுபவர்கள்.
    • வனக்காப்பாளர்களுக்கு வாரத்தில் ஒரு நாள் சுழற்சி அடிப்படையில் விடுப்பு, மாவட்டத்துக்குள் பயணிக்க இலவச பேருந்து பயண அட்டை செய்துதர வேண்டும்.

    திருப்பூர் :

    வனத்துறையில் வனக்காப்பாளர்கள் முழுமையாக களப்பணியாற்றுபவர்கள். குறிப்பிட்ட வனப்பகுதியில் வனவிலங்குகள் வந்தால் அவற்றை கண்காணிப்பது, யானை, புலி, சிறுத்தை உள்ளிட்டவைகளிடமிருந்து மீட்புப்பணி, மரம் உள்ளிட்டவை விழுந்தால் அவற்றை சீரமைப்பது உட்பட அனைத்து பணிகளையும் வனக்காப்பாளர்கள் தான் செய்வார்கள். 24 மணிநேர களப்பணியாளர்கள். வனவர்கள் 4 முதல் 5 வனக்காப்பாளர்களை கண்காணிப்பதுதான் பணி. தமிழகம் முழுவதும் 8 முதல் 12 ஆண்டுகள் பணியாற்றிய வனக்காப்பாளர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்படவில்லை. அதற்கான ஊதியமும் கிடைக்கவில்லை.

    இது தொடர்பாக வனத்துறையில் பணியாற்றும் திருப்பூரை சேர்ந்த சிலர் கூறும்போது, 2010-ம் ஆண்டு ஆகஸ்டு 15-ந்தேதி தொடங்கி 2013-ம் ஆண்டு ஆகஸ்டு 14-ந்தேதி வரை நேரடி நியமன வனக்காப்பாளர்களாக பணியில் சேர்ந்த வனக்காப்பாளர்களின் எண்ணிக்கை, சுமார் 300 ஆகும். தமிழ்நாடு வனச்சார்நிலை பணி விதிகளின்படி, தகுதிகாண் பருவம் முடித்து பணி வரன்முறைசெய்து 6 மாத வனக்காப்பாளர் பயிற்சி நிறைவு செய்து, குற்றத்தாள்கள் ஏதும் இல்லாமல் 8 ஆண்டுகள் பணி நிறைவு செய்திருந்தால், வனவராக பதவி உயர்வு பெறலாம் என்பது விதி.

    அதன்படி கடந்த 2019-ம் ஆண்டு ஆக. 15-ம் தேதியோடு 220 பேரும், 2020-ம் ஆண்டு ஆக. 15-ம் தேதியோடு 63 பேர், கடந்த ஆண்டு ஆக. 15-ம் தேதியோடு 10 பேர் முழுத்தகுதி பெற்றுள்ளனர். இதில் அதிகப்படியான பணியாளர்கள் பணியில் சேரும்போது, சுமார் 35 வயது மேற்பட்டவராகவும், 40 வயதுக்கு உட்பட்டராகவும் வேலைவாய்ப்பு அலுவலகத்தின் மூலம் பிளஸ் 2 அறிவியல் பாடப்பிரிவு தேர்வு பெற்றதின் அடிப்படையில், பணி அமர்த்தப்பட்டுள்ளனர். தற்போது அவர்கள் 47 வயது முதல் 52 வயதை எட்டி உள்ளனர். இந்நிலையில் கொரோனா பெருந்தொற்று காரணமாக, அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 58-லிருந்து 60 ஆக உயர்த்தி அரசாணை வெளியிட்டது.

    தமிழக வனத்துறையில் வனக்காவலர், வனக்காப்பாளர், வனவர் மற்றும் வனச்சரக அலுவலர் உள்ளிட்ட அனைத்து பதவிகளுக்கும் நேரடி நியமனம் மூலமாக பணியாளர்களை தேர்வு செய்வதாலும், வனவர் பணி இடமானது குறைவாக உள்ளது. வனவர் பதவி உயர்வுக்கு காத்திருக்கும் வனக்காப்பாளர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாலும், வனக்காப்பாளர்கள் 12 ஆண்டுகள் பணி நிறைவு செய்தும், ஒருமுறை கூட பதவி உயர்வு வழங்கப்படவில்லை. அதேபோல் இதில் பலர் 50 வயதை எட்டியதால், வனவர் பதவி உயர்வுக்கு காத்திருக்கும் 300 வனக்காப்பாளர்களின் நலன் கருதி, நேரடி நியமன வனவர் பணி நியமனத்தை நிறுத்தி வைக்க வேண்டும். ஒருமுறை விதிதளர்வின் படி, அனைவரையும் வனவராக பதவி உயர்வு வழங்க வேண்டும். அதேபோல் போலீசாருக்கு வழங்கியதை போல், வனக்காப்பாளர்களுக்கு வாரத்தில் ஒரு நாள் சுழற்சி அடிப்படையில் விடுப்பு, மாவட்டத்துக்குள் பயணிக்க இலவச பேருந்து பயண அட்டை உள்ளிட்ட வசதிகளை செய்துதர வேண்டும் என்றனர்.

    • கோவில் மண்டபங்களில் நடக்கும் திருமணங்களுக்கு வாடகையும் வாங்காமல் திருமணங்கள் நடத்த அனுமதிக்கப்பட்டு வருகிறது.
    • இத்திட்டத்தின் கீழ் நடைபெறும் திருமணங்களில், மணமக்களுக்கு புத்தாடைகள் கோவில் சார்பாக வழங்கப்படும் என்று அரசு அறிவித்து உள்ளது.

    சென்னை:

    கோவில்களில் நடைபெறும் திருமணங்களில் மணமக்களில் ஒருவர் மாற்றுத்திறனாளியாக இருந்தால், கட்டணம் ஏதுமின்றி திருமணம் நடத்தப்படுகிறது.

    கோவில் மண்டபங்களில் நடக்கும் திருமணங்களுக்கு வாடகையும் வாங்காமல் திருமணங்கள் நடத்த அனுமதிக்கப்பட்டு வருகிறது.

    இப்போது இத்திட்டத்தின் கீழ் நடைபெறும் திருமணங்களில், மணமக்களுக்கு புத்தாடைகள் கோவில் சார்பாக வழங்கப்படும் என்று அரசு அறிவித்து உள்ளது.

    இந்த திட்டத்தை செயல்படுத்த தேவையான நிதியை கோவில் வரவு-செலவு திட்டத்தில் ஒதுக்கீடு செய்யும் கோவில் நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இப்பணிகளில் தனிக்க வனம் செலுத்தி கண்காணிக்கவும் மண்டல இணை ஆணையர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் பெட்ரோல் விலையில் 5 ரூபாய் குறைப்பதாக சொன்னது தி.மு.க. தான் என முன்னாள் மத்திய மந்திரி பொன் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
    நாகர்கோவில்:

    நாகர்கோவிலில் உள்ள பாரதிய ஜனதா அலுவலகத்தில் முன்னாள் மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    குமரி மாவட்டத்தில் 1982-ம் ஆண்டு மதரீதியான கலவரத்தால் ஏற்பட்ட வடுவை ஆறவைக்க கடந்த 40 ஆண்டுகளாக முயற்சி செய்து வருகிறோம். மதம், சாதி மற்றும் அரசியல் ரீதியாக மீண்டும் பிரச்சினை ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் மிக கவனமாக உள்ளோம்.

    ஆனால் துரதிர்ஷ்ட வசமாக சில சம்பவங்கள் குமரி மாவட்டத்தில் மீண்டும் ஒரு பிரச்சனையை உருவாக்க தூண்டுகோலாக அமைந்து விடுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.

    கடந்த 19-ந் தேதி இரவு 10 மணிக்கு சில சாதாரண பிரச்சினையில் ஒரு தம்பதியர் தாக்கப்பட்டுள்ளனர். பிரச்சினயைில் சமரசம் செய்ய முயன்ற வரும் தாக்கப்பட்டுள்ளார்.

    இந்த விஷயத்தில் போலீசார் முறையாக நடக்கவில்லை. இதை வைத்து பார்க்கும்போது குமரி மாவட்டத்தில் மீண்டும் ஒரு கலவரத்தை தூண்டும் வகையில் போலீசார் செயல்படுவது போல தெரிகிறது. போலீசார் தங்களது கடமையை சரியாக செய்ய வேண்டும்.

    முதல்-அமைச்சர் தலையிட்டு இந்த பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும். இந்த கோரிக்கையை வலியுறுத்தி நாளை(24-ந்தேதி) திங்கள்சந்தையில் போராட்டம் நடத்தப்பட உள்ளது.

    மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரியை குறைத்துள்ளது. தமிழகத்தில் பெட்ரோல் விலையில் 5 ரூபாய் குறைப்பதாக சொன்னது தி.மு.க. தான். தேர்தல் அறிக்கையில் கூறியபடி விலையை தமிழக அரசு குறைக்க வேண்டும்.

    பெட்ரோல் விலை உயர்வு

    பேரறிவாளனை கோர்ட்டு விடுதலை செய்தது. ஆனால் அவரை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கட்டி அணைத்து உள்ளார். அவர் என்ன செய்கிறார் என்பதை உணர்ந்து தான் செய்கிறாரா? என்று தெரிய வில்லை. பேரறிவாளன் விடுதலையை கண்டித்து காங்கிரஸ் ஏன் போராட்டம் நடத்தவில்லை. தி.மு.க.வுக்கு எதிராக பேசிவரும் அண்ணாமலை வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் போகும் என்று ஒரு அமைச்சர் சொல்லி இருப்பதாக தெரிகிறது.அந்த அமைச்சருக்கும் வீடு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின்போது எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ., மாவட்ட தலைவர் தர்மராஜ், மாநிலச் செயலாளர் மீனாதேவ், பொருளாளர் முத்துராமன் உள்பட பலர் உடனிருந்தனர்.

    ×