search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போக்குவரத்துத்துறை"

    • 25 சேவைகள் நேற்று முதல் முழுக்க முழுக்க இணைய வழியில் கொண்டு வரப்பட்டுள்ளன.
    • சேவைகளை பெறுவதற்கு ஆதார் அட்டையில் உள்ள பெயர், முகவரி உள்ளிட்ட அனைத்து விவரங்களும் சரியாக இருப்பதை பொதுமக்கள் உறுதி செய்ய வேண்டும்.

    சென்னை:

    ஓட்டுநர் உரிமம், வாகனம் சார்ந்த 31 சேவைகளை இனி இணைய வழியில் பெறலாம் என போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக போக்குவரத்துத்துறை சார்ந்த உயர் அதிகாரிகள் கூறியதாவது:-

    தமிழகம் முழுவதும் உள்ள 91 வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களிலும், 54 வாகன போக்குவரத்து ஆய்வாளர் அலுவலகங்களிலும் பொதுமக்கள் தங்களது சேவைகளை எவ்வித சிரமமும் இன்றி பெறும் வகையில், கணினிமயமாக்கும் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

    வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் சார்ந்த 48 சேவைகளில் முதற்கட்டமாக ஏற்கனவே ஓட்டுநர் உரிமம் புதுப்பித்தல், ஓட்டுநர் உரிமத்தில் முகவரி மாற்றம், பழகுநர் உரிமம் பெறுதல் உள்ளிட்ட 6 சேவைகள் முற்றிலுமாக இணைய வழியில் கொண்டு வரப்பட்டு செயல்பாட்டில் உள்ளன.

    மீதமுள்ள 42 சேவைகளும் இணைய வழியில் கொண்டு வரப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் சா.சி.சிவசங்கர் அறிவித்தார். அந்த வகையில், 25 சேவைகள் நேற்று முதல் முழுக்க முழுக்க இணைய வழியில் கொண்டு வரப்பட்டுள்ளன. அதன்படி, நகல் பழகுநர் உரிமம், நகல் ஓட்டுநர் உரிமம், ஓட்டுநர் உரிமத்தில் பெயர் மாற்றம், பன்னாட்டு ஓட்டுநர் உரிமம், வாகனத்துக்கான தற்காலிக பதிவெண், அனுமதி சீட்டில் (பெர்மிட்) பெயர் மாற்றம், அனுமதி சீட்டை ஒப்படைத்தல் போன்ற 25 சேவைகளை முற்றிலும் இணைய வழியில் மட்டுமே பெற முடியும். மீதமுள்ள 17 சேவைகளையும் இணைய வழியில் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை தேசிய தகவல் மையம் எடுத்து வருகிறது.

    சேவைகளை பெறுவதற்கு ஆதார் அட்டையில் உள்ள பெயர், முகவரி உள்ளிட்ட அனைத்து விவரங்களும் சரியாக இருப்பதை பொதுமக்கள் உறுதி செய்ய வேண்டும். விவரங்கள் மாறுபட்டிருந்தால் சேவையை பெற இயலாது. தற்போது அமலுக்கு வந்துள்ள 31 சேவைகளையும் https://tnsta.gov.in என்ற போக்குவரத்து ஆணைய இணைய தளத்தில் பயன்படுத்திக் கொள்ளலாம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • கொரோனா காலத்தில் பணிபுரிந்த தொழிலாளர்களை சிறப்பிக்கும் வகையில், சிறப்பு ஊக்கத் தொகை.
    • முதலமைச்சரின் உத்தரவின் பேரில் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

    போக்குவரத்து தொழிலாளர்களின் சிறப்பு ஊக்கத் தொகை, 14வது ஊதிய ஒப்பந்தத்தின்படி ஊதிய நிலுவைத் தொகையை வழங்க தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

    ஜனவரி 2022ம் ஆண்டு முதல் ஜூலை 2022 வரை உள்ள காலத்திற்கான ஊதிய நிலுவைத் தொகையான ரூ.171.05 கோடி வழங்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    கொரோனா காலத்தில் பணிபுரிந்த தொழிலாளர்களை சிறப்பிக்கும் வகையில், சிறப்பு ஊக்கத் தொகையாக ரூ.17.15 கோடியை வழங்கவும் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    மேலும், முதலமைச்சரின் உத்தரவின் பேரில் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

    • கோயம்பேடு காய்கனி அங்காடி பஸ் நிலையம் வந்து செல்லும் போது மாதவரம் பஸ் நிலையத்தில் உள்ளே சென்று பயணிகளை ஏற்றிச் செல்ல வேண்டும் என்று பணீந்திர ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.
    • போக்குவரத்து துறை செயலாளர் பணீந்திர ரெட்டி மாதவரம் பஸ் நிலையத்தில் ஆய்வு செய்தார்.

    சென்னை:

    சென்னை கோயம்பேட்டில் இருந்து வட சென்னை பகுதிகளுக்கு, தமிழகம் மற்றும் ஆந்திராவின் எல்லையோர பகுதிகளுக்கும் பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த பஸ்கள் மாதவரம் பஸ் நிலையத்திற்குள் நுழையாமல் ஜி.என்.டி. சாலையில் இருந்து பயணிகளை ஏற்றிச் செல்வதாக புகார்கள் வந்தன. இதனால் பயணிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டனர்.

    இந்த நிலையில் போக்குவரத்து துறை செயலாளர் பணீந்திர ரெட்டி மாதவரம் பஸ் நிலையத்தில் ஆய்வு செய்தார். அப்போது கோயம்பேட்டில் இருந்து செல்லும் விழுப்புரம் அரசு போக்குவரத்து கழக பஸ்கள், திருவள்ளூர் மண்டலத்தின் கீழ் உள்ள பணி மனைகளில் இருந்து இயக்கப்படும் பஸ்கள் மாதவரம் பஸ் நிலையத்துக்குள் செல்லாமல் இருப்பதை அறிந்தார்.

    இதையடுத்து கோயம்பேட்டில் இருந்து சுண்ணாம்பு குளம், அண்ணாமலை சேரி, தேர்வாய், கல்லூர், பிளேஸ்பாளையம், சத்தியவேடு, புத்தூர், மையூர், முக்கரம்பாக்கம் ஆகிய இடங்களுக்கு செல்லும் தமிழக அரசு பஸ்கள் நாளை (4-ந் தேதி) முதல் கோயம்பேடு காய்கனி அங்காடி பஸ் நிலையம் வந்து செல்லும் போது மாதவரம் பஸ் நிலையத்தில் உள்ளே சென்று பயணிகளை ஏற்றிச் செல்ல வேண்டும் என்று பணீந்திர ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.

    • மாணவர்கள் சீருடை அல்லது பள்ளிகளில் வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை நடத்துனர்களிடம் காண்பித்து பயணிக்க அனுமதிக்க வேண்டும்.
    • அடையாள அட்டைகளை வைத்து இருக்கும் மாணவர்களை பேருந்தில் இருந்து இறக்கி விட்டால் நடத்துனர்கள் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்படுகிறது.

    சென்னை:

    சென்னை மாநகர போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் அனைத்து கிளை மேலாளர்கள், கண்டக்டர்களுக்கு அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    மாணவர்-மாணவியர்களுக்கான கட்டணமில்லா புதிய பேருந்து பயண அட்டைக்கான விபரங்கள் சேகரித்து, அச்சடித்து, லேமினேஷன் செய்து வழங்குதலில் உள்ள கால அளவு போன்றவற்றினை கருத்தில் கொண்டு, மாநகர போக்குவரத்து கழக பேருந்துகளில் பள்ளி மாணவ-மாணவியர்கள் சீருடை அல்லது பள்ளிகளில் வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை நடத்துனர்களிடம் காண்பித்து தத்தம் இருப்பிடத்தில் இருந்து பயிலும் பள்ளி வரையிலும் சென்று வர அனுமதிக்க வேண்டும்.

    அதே போன்று, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, அரசு இசைக் கல்லூரி, அரசு கவின் கலைக் கல்லூரி, அரசினர் கட்டிடக் கலை மற்றும் சிற்பக் கலை கல்லூரி (மாமல்லபுரம்) அரசு பல்தொழில்நுட்ப கல்லூரி, அரசு தொழில் பயற்சி நிலைய மாணவ-மாணவியர்கள் தங்களது கல்வி நிறுவனத்தால் வழங்கிய புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை அல்லது மாநகர போக்குவரத்து கழகத்தில் 2022-2023-ம் ஆண்டில் வழங்கப்பட்ட கட்டணமில்லா பேருந்து பயண அட்டையை மாநகர போக்குவரத்து கழக நடத்துனர்களிடம் காண்பித்து தத்தம் இருப்பிடத்தில் இருந்து பயிலும் கல்வி நிறுவனம் வரை மாநகர போக்குவரத்து கழகத்தால் கட்டணமில்லா பயண அட்டை வழங்கப்படும் வரை கட்டணமின்றி பயணிக்க அனுமதிக்க வேண்டும் என்று அனைத்து மாநகர போக்குவரத்து கழக நடத்துனர்களுக்கும் உத்தரவிடப்படுகிறது.

    இந்த உத்தரவினை மீறி சீருடையில் உள்ள மாணவர்களை அல்லது மேற்கூறிய அடையாள அட்டைகளை வைத்து இருக்கும் மாணவர்களை பேருந்தில் இருந்து இறக்கி விட்டால் நடத்துனர்கள் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • கடந்த 10 ஆண்டுகால அ.தி.மு.க. ஆட்சியில் போக்குவரத்துத்துறை ஒட்டுமொத்தமாக சீரழிந்து போய் இருந்தது.
    • எவ்வளவு நிதிச்சுமை இருந்தாலும் உங்களின் கோரிக்கையை அரசு நிச்சயம் நிறைவேற்றித்தரும்.

    சென்னை:

    அடையாரில் உள்ள தனியார் மண்டபத்தில் நேற்று, போக்குவரத்துத்துறை சார்பில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் 2022-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் நவம்பர் மாதம் வரை பணிபுரிந்து ஓய்வுபெற்ற, விருப்ப ஓய்வுபெற்ற, இறந்த பணியாளர்கள் என மொத்தம் 3 ஆயிரத்து 414 பேருக்கு வருங்கால வைப்புநிதி, பணிக்கொடை, விடுப்பு ஒப்படைப்பு, ஓய்வூதிய ஒப்படைப்பு உள்ளிட்ட பணப் பலன்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில், போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் முன்னிலையில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பயனாளிகளுக்கு காசோலைகளை வழங்கினார்.

    இதைத்தொடர்ந்து, நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-

    கடந்த 10 ஆண்டுகால அ.தி.மு.க. ஆட்சியில் போக்குவரத்துத்துறை ஒட்டுமொத்தமாக சீரழிந்து போய் இருந்தது. இதை சீரமைக்கும் வகையில் முதலமைச்சர் பல்வேறு திட்டங்களை அமல்படுத்தி வருகிறார். போக்குவரத்துத்துறையில் முதலமைச்சர் வகுத்துக்கொடுக்கும் திட்டங்களை அமைச்சர் சிவசங்கர் சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். போக்குவரத்துத்துறையில் பல திட்டங்களை தொடங்கி வைக்கும் வாய்ப்பை அமைச்சர் சிவசங்கர் எனக்கு வழங்கியுள்ளார்.

    முந்தைய அ.தி.மு.க. ஆட்சியில் பணியாளர்களின் சம்பள விகிதம் சீர்குலைக்கப்பட்டது. இது ஊதிய குழுவின் பரிந்துரையின்படி பே-மெட்ரிக்ஸ் முறையில் தற்போது மீண்டும் வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் 5 சதவீதம் ஊதிய உயர்வு வழங்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, போக்குவரத்து துறையில் பணிபுரிந்த 6 ஆயிரத்து 281 நபர்களுக்கு வருங்கால வைப்புநிதி, பணிக்கொடை, விடுப்பு ஒப்படைப்பு உள்ளிட்டவற்றை வழங்கிட உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து, 2-வது கட்டமாக 3 ஆயிரத்து 414 பேருக்கு ஓய்வூதிய பலன்கள் வழங்கப்பட உள்ளது.

    இதன் அடையாளமாக 612 பேருக்கு இன்று ரூ.171 கோடியே 23 லட்சம் மதிப்பிலான பணப்பலன்கள் வழங்கப்பட்டு வருகிறது. சுகாதாரம், கல்வி போன்ற துறைகள் எப்படி மக்களுடன் நேரடி தொடர்பில் இருக்கிறதோ அதுபோல போக்குவரத்துத்துறை மக்களுடன் நேரடி தொடர்பில் இருக்கிறது. போக்குவரத்துத்துறை ஊழியர்களின் சிக்கல்களை சரிசெய்யும் அரசாக திராவிட மாடல் அரசு செயல்பட்டு வருகிறது.

    தொழிற்சங்கங்களின் கோரிக்கைகளுக்கு அரசு உடனடியாக செவி சாய்த்து தீர்வு கண்டு வருகிறது. பஸ்களில் பெண்களுக்கு கட்டணமில்லா பயணம் என்ற நமது திட்டத்தை கர்நாடகாவில் புதிதாக அமைந்துள்ள காங்கிரஸ் அரசும் அமல்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் இந்த திட்டம் அறிமுகம் செய்யப்பட்ட பின்னர் பஸ்களில் பயணம் செய்யும் பெண்களின் எண்ணிக்கை 40 சதவீதத்தில் இருந்து 70 சதவீதமாக உயர்ந்துள்ளது. எவ்வளவு நிதிச்சுமை இருந்தாலும் உங்களின் கோரிக்கையை அரசு நிச்சயம் நிறைவேற்றித்தரும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த நிகழ்ச்சியில், தொ.மு.ச. பேரவை பொதுச்செயலாளர் சண்முகம் எம்.பி., த.வேலு எம்.எல்.ஏ., போக்குவரத்துத்துறை கூடுதல் செயலாளர் பணீந்திரரெட்டி மற்றும் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

    • பள்ளி, கல்லூரி மாணவர்களை பேருந்தில் பயணம் செய்ய அனுமதிக்காமல் இறக்கிவிடும் நடத்துநர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
    • பள்ளி மாணவர்கள் சீருடை அல்லது கட்டணமில்லா பஸ் பயண அட்டை வைத்திருந்தால், நடத்துநர்கள் மாணவர்களை இலவசமாக பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும்.

    சென்னை:

    தமிழகத்தில் இலவச பஸ் பாஸ் மூலம் தினமும் லட்சக்கணக்கான பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பஸ் பயணம் செய்து வருகின்றனர்.

    இந்நிலையில் பள்ளி, கல்லூரி மாணவர்களை பேருந்தில் பயணம் செய்ய அனுமதிக்காமல் இறக்கிவிடும் நடத்துநர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

    அத்துடன் பள்ளி மாணவர்கள் சீருடை அல்லது 2019-2020 ஆண்டில் வழங்கப்பட்ட கட்டணமில்லா பஸ் பயண அட்டை வைத்திருந்தால், நடத்துநர்கள் மாணவர்களை இலவசமாக பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

    • மகளிருக்கான இலவச பஸ் பயணத்திட்டத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் 4.72 கோடி பேர் பயணம் செய்துள்ளனர் என்று போக்குவரத்துத்துறை அரசு முதன்மைச் செயலாளர் தகவல் தெரிவித்துள்ளார்.
    • உரிய நேரத்தில் அலுவலர்கள், பணியாளர்கள், டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்கள் பணிக்கு வந்துள்ளனரா? என்பதை ஆய்வு செய்தார்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக பணிமனை மற்றும் புதிய பஸ் நிலையத்தில் போக்குவரத்துத்துறை அரசு முதன்மைச் செயலாளர் டாக்டர். மு.கோபால் ஆய்வு செய்தார்.

    தமிழ்நாடு முதல்-அமைச்சர் ஆட்சிப்பொறுப் பேற்றவுடன், மகளிருக்கான கட்டணமில்லா பஸ் திட்டத்தினை தொடங்கி வைத்தார். இந்த திட்டமானது விழுப்புரம் மாவட்டத்தில் சிறப்பான முறையில் செயல்பட்டு வருவதை அறிந்து கொள்ளும் விதமாக, விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் பேருந்துகளில் உள்ள மகளிரிடம் இத்திட்டத்தின் பயன் குறித்து கேட்டறிந்ததுடன், மகளிர் அனைவரும் தினமும் பஸ்களில் பயணம் செய்யும்போது நடத்துநர்கள் இலவச பயணச்சீட்டு வழங்குகிறார்களா? எனவும், நடத்துநர்கள் தங்களிடம் கனிவான முறையில் நடந்து கொள்கிறார்களா? என கேட்டறிந்தார்.

    மேலும், விழுப்புரம் மாவட்டத்தில் தினமும் 244 சாதாரண டவுன் பஸ்கள் இயக்கப்படுகின்றன. ஒரு நாளைக்கு சுமார் 1.38 லட்சம் பெண்கள் பயணிக்கின்றனர். இது சாதாரண நகரப் பேருந்துகளில் பயணிப்பவர்களில் 65.97 சதவீதம் ஆகும். இத்திட்டத்தின் மூலம் மாவட்டத்தில் இதுநாள்வரை 4.72 கோடி பேர் பயணம் மேற்கொண்டுள்ளனர் என தெரிவித்தார். முன்னதாக, போக்குவரத்துத்துறை அரசு முதன்மை செயலாளர் அவர்கள், விழுப்புரம் மற்றும் திண்டிவனம் அரசு போக்குவரத்துக் கழக பணிமனையில் ஆய்வு மேற்கொண்டதுடன், பேருந்துகள் நல்ல முறையில் பராமரிக்கப்பட்டு வருகிறதா? என்பதை மத்திய புதுப்பிக்கும் தொழிற்கூடம், டயர் பிரிவு மற்றும் தகுதி சான்று பிரிவுகளில் ஆய்வு செய்ததுடன், உரிய நேரத்தில் அலுவலர்கள், பணியாளர்கள், டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்கள் பணிக்கு வந்துள்ளனரா? என்பதை ஆய்வு செய்தார். 

    மேலும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் ஆரம்பிக்கும் முடியும் நேரங்களில் பஸ்களை சரியானநேரத்தில் இயக்கவேண்டும் எனவும், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பஸ்படிக்கட்டுகளில் பயணம் மேற்கொள்ள தவாறு பார்த்துக்கொள்ள வேண்டும் எனவும், பஸ் நிறுத்தத்தில் பஸ்களை நிறுத்தி பயணிகளை ஏற்றிச்செல்ல வேண்டும் எனவும், அதிகப்படியான பயணிகள் பயணிக்கும் வழித்தடங்களில் கூடுதல் பஸ்களை இயக்கிடவும் அலுவலர்களுக்கு போக்குவரத்துத்துறை அரசு முதன்மை செயலாளர் டாக்டர்.மு.கோபால் அறிவுறுத்தினார். தொடர்ந்து, விழுப்புரம் மாவட்ட கலெக்டர் பெருந்திட்ட வளாகத்தில் உள்ள சுற்றுலா மாளிகையில், போக்குவரத்துத்துறை அரசு முதன்மைச் செயலாளர் டாக்டர். மு.கோபால், விழுப்புரம் மாவட்டத்தில் போக்குவரத்துத்துறையின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட கலெக்டர் மோகனிடம் கேட்டறிந்தார். இந்த நிகழ்ச்சியில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக (விழுப்புரம்) லிட்., மேலாண் இயக்குநர் ஜோசப் டயஸ், மற்றும் போக்குவரத்துக் கழக அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • 281 வழக்குகளில் இருசக்கர வாகனங்களில் அதிக சத்தத்துடன் வைக்கப்பட்டிருந்த ஹாரன்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
    • நகரங்களில் ஒலியின் அளவானது பகலில் 65 டெசிபலும், இரவில் 50 டெசிபலும் இருக்க வேண்டும்.

    சென்னை:

    சென்னை மாநகர போக்குவரத்து போலீசார் கடந்த மாதம் 27ஆம் தேதி முதல் 3 ஆம் தேதி வரை ஒலி மாசுபாடு எதிர்ப்பு பேரணியை நடத்தி வந்தனர். இது தொடர்பாக 572 வழக்குகளை பதிவு செய்துள்ள போலீசார், அதில் 281 வழக்குகளில் இருசக்கர வாகனங்களில் அதிக சத்தத்துடன் வைக்கப்பட்டிருந்த ஹாரன்களை பறிமுதல் செய்தனர்.

    சென்னை மாநகர போலீசார் உதவியுடன் தனியார் தொண்டு நிறுவனம் சென்னை மாநகரில் பல்வேறு இடங்களில் நடத்திய சோதனையில் ஒலி மாசுபாடு அளவு இயல்பை விட 30 சதவீதம் அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது.

    நகரங்களில் ஒலியின் அளவானது பகலில் 65 டெசிபலும், இரவில் 50 டெசிபலும் இருக்க வேண்டும் என்பது தான் சுற்றுச்சூழல் துறையின் விதியாகும். ஆனால் தற்போதைய கணக்கெடுப்பின்படி சென்னை மாநகரில் 85 டெசிபல் ஒலி அளவு பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • பேருந்தை சாலையின் நடுவில் பிற வாகனங்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் நிறுத்தக்கூடாது.
    • அனைத்து ஓட்டுநர், நடத்துநர்களும் உரிய பேருந்து நிறுத்தத்தில் பயணிகளை ஏற்றி, இறக்கிவிட வேண்டும்.

    சென்னை:

    போக்குவரத்துத்துறை அரசு பேருந்து ஓட்டுநர்களுக்கு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. அதில் கூறியிருப்பதாவது:

    * பேருந்தை சாலையின் நடுவில் பிற வாகனங்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் நிறுத்தக்கூடாது.

    * பேருந்து நிறுத்தத்தை விட்டு பேருந்தை தள்ளி நிறுத்துவதால், பயணிகள் கீழே விழுந்து காயம் ஏற்படும் சூழ்நிலையும் சில நேரங்களில் மரண விபத்தும் ஏற்பட ஏதுவாகிறது.

    * அனைத்து ஓட்டுநர், நடத்துநர்களும் உரிய பேருந்து நிறுத்தத்தில் பயணிகளை ஏற்றி, இறக்கிவிட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×