search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    இணைய தளம் மூலம் ஓட்டுநர் உரிமம் உள்பட 31 சேவைகளை பெறலாம்- போக்குவரத்துத்துறை தகவல்
    X

    இணைய தளம் மூலம் ஓட்டுநர் உரிமம் உள்பட 31 சேவைகளை பெறலாம்- போக்குவரத்துத்துறை தகவல்

    • 25 சேவைகள் நேற்று முதல் முழுக்க முழுக்க இணைய வழியில் கொண்டு வரப்பட்டுள்ளன.
    • சேவைகளை பெறுவதற்கு ஆதார் அட்டையில் உள்ள பெயர், முகவரி உள்ளிட்ட அனைத்து விவரங்களும் சரியாக இருப்பதை பொதுமக்கள் உறுதி செய்ய வேண்டும்.

    சென்னை:

    ஓட்டுநர் உரிமம், வாகனம் சார்ந்த 31 சேவைகளை இனி இணைய வழியில் பெறலாம் என போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக போக்குவரத்துத்துறை சார்ந்த உயர் அதிகாரிகள் கூறியதாவது:-

    தமிழகம் முழுவதும் உள்ள 91 வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களிலும், 54 வாகன போக்குவரத்து ஆய்வாளர் அலுவலகங்களிலும் பொதுமக்கள் தங்களது சேவைகளை எவ்வித சிரமமும் இன்றி பெறும் வகையில், கணினிமயமாக்கும் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

    வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் சார்ந்த 48 சேவைகளில் முதற்கட்டமாக ஏற்கனவே ஓட்டுநர் உரிமம் புதுப்பித்தல், ஓட்டுநர் உரிமத்தில் முகவரி மாற்றம், பழகுநர் உரிமம் பெறுதல் உள்ளிட்ட 6 சேவைகள் முற்றிலுமாக இணைய வழியில் கொண்டு வரப்பட்டு செயல்பாட்டில் உள்ளன.

    மீதமுள்ள 42 சேவைகளும் இணைய வழியில் கொண்டு வரப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் சா.சி.சிவசங்கர் அறிவித்தார். அந்த வகையில், 25 சேவைகள் நேற்று முதல் முழுக்க முழுக்க இணைய வழியில் கொண்டு வரப்பட்டுள்ளன. அதன்படி, நகல் பழகுநர் உரிமம், நகல் ஓட்டுநர் உரிமம், ஓட்டுநர் உரிமத்தில் பெயர் மாற்றம், பன்னாட்டு ஓட்டுநர் உரிமம், வாகனத்துக்கான தற்காலிக பதிவெண், அனுமதி சீட்டில் (பெர்மிட்) பெயர் மாற்றம், அனுமதி சீட்டை ஒப்படைத்தல் போன்ற 25 சேவைகளை முற்றிலும் இணைய வழியில் மட்டுமே பெற முடியும். மீதமுள்ள 17 சேவைகளையும் இணைய வழியில் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை தேசிய தகவல் மையம் எடுத்து வருகிறது.

    சேவைகளை பெறுவதற்கு ஆதார் அட்டையில் உள்ள பெயர், முகவரி உள்ளிட்ட அனைத்து விவரங்களும் சரியாக இருப்பதை பொதுமக்கள் உறுதி செய்ய வேண்டும். விவரங்கள் மாறுபட்டிருந்தால் சேவையை பெற இயலாது. தற்போது அமலுக்கு வந்துள்ள 31 சேவைகளையும் https://tnsta.gov.in என்ற போக்குவரத்து ஆணைய இணைய தளத்தில் பயன்படுத்திக் கொள்ளலாம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    Next Story
    ×