search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "CM Edappadi Palaniswami"

    மலேசியாவில் மீட்கப்பட்ட தமிழக கராத்தே வீரர்கள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை இன்று முகாம் அலுவலகத்தில் சந்தித்து தங்களது நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொண்டார்கள்.
    சென்னை:

    தமிழக அரசு விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மலேசியா நாட்டின் செலாங்கூரில் மே 12 முதல் 19 வரை நடைபெற்ற உலக கராத்தே சாம்பியன்ஷிப் போட்டியில் ஆவடியைச் சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டு பதக்கங்களை வென்றனர்.

    கராத்தே போட்டியில் வெற்றி பெற்ற 16 மாணவர்கள், அவர்களது 2 பயிற்சியாளர்கள், அம்மாணவர்களின் பெற்றோர்கள் உள்ளிட்ட 29 பேர் தாயகம் திரும்ப முடியாமல், 22.5.2019 அன்று கோலாலம்பூர் விமான நிலையத்தில் தவிக்கும் செய்தியை அறிந்து, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அந்த 29 பேர் சென்னை திரும்ப அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    அதன்படி, மலேசியாவில் உள்ள இந்திய தூதரகத்தின் உதவியுடன் தமிழ்நாடு அரசு அவர்களுக்கான இருப்பிட வசதி, உணவு, சென்னை திரும்ப விமான பயணச் சீட்டுகள் உள்ளிட்ட அனைத்து உதவிகளையும் துரிதமாக வழங்கிட நடவடிக்கை மேற்கொண்டது. தமிழ்நாடு அரசு மேற்கொண்ட துரித நடவடிக்கையின் காரணமாக 29 நபர்கள் பாதுகாப்பாக 23.5.2019 அன்று சென்னை திரும்பினர்.

    பாதுகாப்பாக சென்னை திரும்ப, தமிழ்நாடு அரசு துரித நடவடிக்கை எடுத்தமைக்காக அந்த கராத்தே போட்டியில் கலந்து கொண்ட மாணவர்கள், பயிற்சியாளர்கள், பெற்றோர்கள் உள்ளிட்ட 29 பேர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை இன்று முகாம் அலுவலகத்தில் சந்தித்து தங்களது நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொண்டார்கள்.

    அம்மாவின் அரசு கடந்த இரண்டு ஆண்டுகளில் வெளிநாடுகளில் பணிபுரிந்த தமிழகத்தைச் சார்ந்த தொழிலாளர், மீனவர்கள் உள்ளிட்ட 221 நபர்களை மீட்டு பத்திரமாக தாயகம் அழைத்துவரப்பட்டுள்ளனர்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு போனில் பேசிய மர்மநபர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொடைக்கானல் வரும்போது அவரை பார்த்துக்கொள்கிறோம் என்று வெடிகுண்டு மிரட்டல் விடுத்தார். #Edapapdipalaniswami

    சென்னை:

    சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு மர்ம போன் ஒன்று வந்தது. அதில் பேசிய நபர் தனது பெயர் குருசங்கர் என்றும் திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டில் இருந்து பேசுவதாகவும் தெரிவித்தார்.

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொடைக்கானல் வரும்போது அவரை பார்த்துக்கொள்கிறோம் என்று வெடிகுண்டு மிரட்டல் விடுத்தார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் மிரட்டல் விடுத்த நபரை பிடிக்க நடவடிக்கை எடுத்தனர். குருசங்கரை பிடிக்க வத்தலகுண்டு விரைந்துள்ளனர்.

    சென்னை தேனாம்பேட்டை அப்பல்லோ ஆஸ்பத்திரி அருகே நேற்று இரவு மர்ம சூட்கேஸ் ஒன்று கிடந்தது. அதில் வெடிகுண்டு பொருட்கள் ஏதேனும் இருக்கலாம் என்கிற சந்தேகத்தின் பேரில் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இதனையடுத்து வெடிகுண்டு நிபுணர்களுடன் விரைந்து சென்ற போலீசார் சோதனை நடத்தினர். சோதனைக்கு பின்னர் சூட்கேசில் எதுவும் இல்லை என்பதும், அது காலியான சூட்கேஸ் என்றும் தெரிய வந்தது. இதன் பிறகே போலீசார் நிம்மதி பெருமூச்சு விட்டனர். #Edapapdipalaniswami

    தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சிறப்பாக உள்ளது என்று முதலமைச்சர் பழனிசாமி எடப்பாடி மற்றும் கொங்கணாபுரம் பகுதியில் மேற்கொண்ட பிரசாரத்தின்போது கூறினார். #LokSabhaElections2019 #EdappadiPalaniswami
    எடப்பாடி:

    சேலம் பாராளுமன்ற தொகுதி அ.தி.மு.க வேட்பாளரை ஆதரித்து எடப்பாடி மற்றும் கொங்கணாபுரம் பகுதியில் நேற்று இரவு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

    தமிழகத்தில் தற்போது சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது. இதற்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் செயல்பாட்டினையே உதாரணமாக கூறலாம். கடந்த தி.மு.க ஆட்சி காலத்தில், மதுரை மாநகருக்குள் நுழையமுடியாமல் இருந்த தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தற்போது மதுரை நகரில் அதிகாலையில் எந்த ஒரு அச்சமும் இன்றி நடைபயிற்சி மேற்கொண்டு வருகிறார்.

    இதுவே தற்போது தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சிறப்பாக உள்ளது என்பதற்கு முன் உதாரணமாக கூறலாம். மு.க.ஸ்டாலின் தினந்தோறும் மிக தரக்குறைவான வார்த்தைகளால் என்னை திட்டி பிரசாரம் செய்து வருகிறார்.

    அவர் ஒரு கட்சியின் தலைவர் என்ற நிலையினை அறிந்து பண்புடன் பேசவேண்டும். தமிழகத்தில் அ.தி.மு.க தலைமையிலான கூட்டணி மக்கள் நலம் காக்கும் சிறப்பான கூட்டணி. ஆனால் தி.மு.க சந்தர்ப்பவாத கூட்டணியாக அமைத்துள்ளது. தி.மு.க மக்கள் நலனை ஒருபோதும் கருத்தில் கொண்டதில்லை. இதற்கு உதாரணமாக அண்மையில் பொங்கல் பரிசாக குடும்ப அட்டைதாரர்களுக்கு தமிழக அரசு ரூ.1000 வழங்கியதை தடுக்க பல்வேறு முயற்சி செய்தததையே கூறலாம்.

    அதேபோல் தமிழக ஏழை தொழிலாளர்களுக்கு அரசு 2000 ரூபாய் வழங்கும் திட்டத்தினை தடுக்க பல்வேறு முயற்சிகள் செய்து தோல்வி கண்டுள்ளனர்.

    நான் தமிழக முதல்வராக பதவி ஏற்ற தினத்திலிருந்து, மாநிலம் முழுவதும் சுமார் 35 ஆயிரம் போராட்டங்கள் நடைபெற்றுள்ளன. இதில் பெரும் பகுதி மு.க.ஸ்டாலினால் ஆட்சிக்கு நெருக்கடி கொடுக்கும் விதமாக தூண்டப்பட்டவையாகும்.

    இப்போராட்டங்களுக்கு உரிய முறையில் தீர்வுகண்டு தமிழகத்தில் தற்போது நல்லாட்சி நடைபெற்று வருகிறது. வர இருக்கும் பாராளுமன்ற தேர்தலுக்காக தி.மு.க சூழ்ச்சிகரமான தேர்தல் அறிக்கையினை வெளியிட்டுள்ளது. கடந்த காலத்தில் நிலமற்ற விவசாயிகளுக்கு 2 ஏக்கர் நிலம் அளிப்பதாக கூறிய தி.மு.க.வினர் தமிழகத்தில் எத்தனை நபர்களுக்கு 2 ஏக்கர் நிலம் வழங்கினார்கள் என கூறமுடியுமா?

    அதே தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினால் பிரதமர் வேட்பாளராக அறிமுகம் செய்யப்பட்ட, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கர்நாடக மாநிலத்தில் பிரசாரம் செய்யும்போது மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் கர்நாடகத்தில் மேகதாது அணை கட்டப்படும் எனவும், காவிரி மேலாண்மை ஆணையம் கலைக்கப்படும் என கூறி பிரசாரம் செய்துள்ளார்.

    தமிழகத்தை பாலைவனமாக மாற்றும் எண்ணம் கொண்டவருக்கு நாம் வாக்களிக்கலாமா? தமிழக மக்கள் சிந்தித்து பார்க்க வேண்டும்.

    விரைவில் நகர மற்றும் கிராமப்புற பகுதியில் வாழும் வீடு இல்லாத குடும்பங்களுக்கு, அரசு சார்பில் புதிய வீடுகள் கட்டித்தரப்படும். பொள்ளாச்சியில் நடைபெற்ற மனித தன்மை அற்ற அந்த நிகழ்வினை வன்மையாக கண்டிக்கிறோம். அதில் ஈடுபட்ட குற்றவாளிகள் யாராக இருப்பினும் சட்டத்தின் முன் நிறுத்தி அரசு கடுமையான தண்டனையை பெற்றுத்தர தயாராக உள்ளது.

    எடப்பாடி தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்ட அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கல்வியியல் கல்லூரி, அரசு பாலிடெக்னிக்கல்லூரி, 11 கிலோ மீட்டர் தூர புறவழிச்சாலை, புதிய குடிநீர் திட்டம், புதிய நெடுஞ்சாலை கோட்ட அலுவலகம், மின்வாரிய கோட்ட அலுவலகம் மற்றும் சரபங்கா ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட புதிய பாலங்கள், புதிய தரம் உயர்த்தப்பட்ட அரசு மருத்துவமனைகள் மற்றும் புதிய கால்நடை மருத்துவமனைகள் உள்ளிட்ட பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை வழங்கிய அ.தி.மு.க. அரசின் மக்கள் நலத்திட்டப்பணிகள் தொடர்ந்திடவும், காவிரி உபரி நீரினை கொண்டு எடப்பாடி மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் உள்ள நீர் நிலைகளை நிரப்புவதற்கான புதிய பாசனத்திட்டத்தினை நிறைவேற்றிடவும், நதி நீர் இணைப்புத் திட்டத்தின் மூலம் காவிரி கோதாவரி ஆற்றினை இணைப்பதன் வாயிலாக தமிழகம் முழுவதும் பாசன வசதி பெருகும்.

    இவ்வாறு அவர் பேசினார்.  #LokSabhaElections2019 #EdappadiPalaniswami

    கந்தன் சாவடியில் அ.தி.மு.க. வேட்பாளர் ஜெயவர்தனை ஆதரித்து முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்தார். #LokSabhaElections2019 #EdappadiPalaniswami
    சென்னை:

    அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தீவிர பிரசாரம் செய்து வருகிறார். தென்சென்னை தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் டாக்டர் ஜெ.ஜெயவர்தனை ஆதரித்து சோழிங்கநல்லூர் தொகுதி கந்தன்சாவடி பகுதியில் திறந்த ஜீப்பில் வீதி வீதியாக சென்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆதரவு திரட்டினார். பிரசாரத்தின்போது முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில்,

    காவிரி பிரச்சனைக்காக. பாராளுமன்றத்தை முடக்கியவர்கள் அ.தி.மு.க. எம்.பிக்கள். தி.மு.க. எம்.பிக்கள் எதற்கும் குரல் எழுப்பியதில்லை. ஸ்டாலின் தனது தந்தையை பயன்படுத்தி தி.மு.க.வின் தலைவர் ஆனவர். ஆனால் நான் படிப்படியாக உயர்ந்து முதல்வர் ஆனேன்.

    காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை அரசிதழில் வெளியிட தி.மு.க. எந்த முயற்சியும் எடுக்கவில்லை. நாட்டு மக்களை பாதுகாக்க மீண்டும் மோடி ஆட்சிக்கு வர வேண்டும்.

    தி.மு.க. ஆட்சியில், பாராளுமன்றத்தில் போதிய நிதி இருந்தும் மக்களுக்கு எந்த திட்டங்களும் செயல்படுத்தவில்லை. அதிகாரம் தான் அவர்கள் கண்ணுக்கு தெரிந்தது தவிர, மக்கள் கண்ணுக்கு தெரியவில்லை.

    ஆனால் அதிமுக அரசு கிடைத்த உரிமையை முறையாக பயன் படுத்தியது. நாட்டில் உள்ள மக்களை பாதுகாக்க மீண்டும் மோடி ஆட்சிக்கு வர வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பிரசாரத்தில் மாவட்ட செயலாளர்கள் விருகை ரவி எம்.எல்.ஏ., சிட்லபாக்கம் ராஜேந்திரன், தி.நகர் சத்யா எம்.எல்.ஏ., மற்றும் ஆர்.நட்ராஜ் எம்.எல்.ஏ., ஆதிராஜாராம், கமலகண்ணன், பெரும்பாக்கம் ராஜசேகர், ஸ்ரீராமஜெயம், மூவேந்தர், பா.ஜனதா நிர்வாகிகள் காளிதாஸ், டால்பின் ஸ்ரீதர், மோகன்ராஜா, பா.ம.க. நிர்வாகிகள் சகாதேவன், விவேல், லோகநாதன், ராம்குமார், சிவகுமார், தே.மு.தி.க. வி.சி. ஆனந்தன், பிரபாகரன், தினகரன், முருகன்., த.மா.கா. மாவட்ட தலைவர் கொட்டிவாக்கம் முருகன், மனோகர், சத்தியநாராயணன், புதிய நீதி கட்சி துரைராஜ், ரமேஷ், ஜெகன், புரட்சி பாரதம் கட்சி ராஜி, ஆதிவேந்தன், மற்றும் கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர். #LokSabhaElections2019 #EdappadiPalaniswami

    மக்களின் ஆதரவு அலை நாளுக்கு நாள் பெருகி வருவதால் 40 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி வெற்றி பெறும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். #LSPolls #EdappadiPalaniswami
    சென்னை:

    அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    பாராளுமன்ற தேர்தலுக்காக அ.தி.மு.க. அமைத்திருக்கும் மெகா கூட்டணியும், அ.தி.மு.க. தமிழக மக்களுக்கு தேர்தல் அறிக்கையாக அளிக்கப்பட்டிருக்கும் வாக்குறுதிகளும், அ.தி.மு.க. கூட்டணி களமிறக்கியிருக்கும் தலைசிறந்த தகுதிபடைத்த வேட்பாளர்களின் அணிவகுப்பும் தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க.வின் கூட்டணியே பிரமாண்ட வெற்றி பெறும் என்பதனை இப்போதே முன்கூட்டி சொல்லும் விதமாக மக்களிடம் எழுந்திருக்கும் ஏகோபித்த ஆதரவு அலை நாளுக்கு நாள் பெருகி வருவதை நினைத்து உண்மையிலேயே மகிழ்ச்சி அடைகிறேன்.

    குறிப்பாக கோதாவரி ஆற்றுநீரின் உபரி தண்ணீர் கடலில் கலந்து வீணாவதை கிருஷ்ணா-காவிரி இணைப்பு மூலமாக தடுத்து, தமிழகத்தை பசுமை கொஞ்சும் பகுதியாக மாற்றிட கோதாவரி-காவிரி இணைப்பு திட்டம், 7 பேர் விடுதலை, வறுமை கோட்டுக்கு கீழ் வாழும் மக்களுக்கு மாதம் ரூ.1,500 வாழ்வாதார உதவி போன்ற நமது தேர்தல் வாக்குறுதிகள் ஒட்டுமொத்த தமிழக மக்களாலும் உற்று நோக்கப்பட்டு, அவர்களின் உளமார்ந்த வரவேற்பை பெற்றிருக்கிறது.



    வரலாறு காணாத வகையில் வாகை கனி கொய்து வங்கத்து கடலோரம் துயில் கொண்டிருக்கும் நம் தங்கத்தாரகையாம் ஜெயலலிதா, அவரது வலப்புறத்தில் சந்தனப்பேழையில் சாய்ந்துறங்கும் அ.தி.மு.க. நிறுவனர் எம்.ஜி.ஆர்., திராவிட இயக்கங்களின் வெற்றித் தேரோட்டத்துக்கு வித்திட்ட அண்ணா ஆகியோரது புகழடி பொற்பாதங்களில் 40 தொகுதிகளின் வெற்றியை சமர்ப்பிப்போம் என்கிற குருதி கலந்த உறுதியை நம் கட்சியின் ஒன்றரை கோடி தொண்டர்களும் உளமார எடுத்திடவேண்டும்.

    40 பாராளுமன்ற தொகுதிகளின் வெற்றியையும், 18 சட்டமன்ற தொகுதியின் இடைத்தேர்தல் வெற்றியையும் ஒருசேர ஈட்டுவதன் மூலம் நூறாண்டு காலம் அ.தி.மு.க. ஆளும் என்கிற ஜெயலலிதாவின் கனவை நாம் நனவாக்க வேண்டும். இதற்காக இப்பொழுதே மடைதிறந்த வெள்ளமென அ.தி.மு.க. சிப்பாய்கள் படை புறப்படட்டும். மக்கள் திலகம், மகராசி அம்மா ஆகியோரது நல்லாசி நமக்கிருக்க நாற்பதும் நமதாகும். நாளை திருநாடும் நமக்கென ஆகும் என்பதை சொல்லி, வாகை கனி கொய்திட புறப்படும் எனது அருமை அ.தி.மு.க.வின் போர்ப்படை வீரர்களை வாழ்த்துகிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.  #LSPolls #EdappadiPalaniswami

    அதிமுக கூட்டணியில் தொகுதி ஒதுக்கீடு இன்னும் முடிவடையாத நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தேமுதிக தலைவர் விஜயகாந்தை சந்தித்து பேசினார். #ParliamentElections #VijayakanthEPS
    சென்னை:

    பாராளுமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிக இடம்பெற்றுள்ளது. நீண்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு தேமுதிகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அ.தி.மு.க. கூட்டணியில் பிற கட்சிகளுக்கான தொகுதி பங்கீடும் சுமுகமாக முடிவடைந்துள்ளது. இதனையடுத்து எந்த கட்சிக்கு எந்தெந்த தொகுதிகள் என்ற பட்டியல் நாளை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில், தமிழக முதலமைச்சரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி இன்று தேமுதிக தலைவர் விஜயகாந்தை சந்தித்தார். சாலி கிராமத்தில் உள்ள விஜயகாந்தின் வீட்டில் இந்த சந்திப்பு நடைபெற்றது. அப்போது விஜயகாந்துக்கு பொன்னாடை போர்த்தியும், மலர்ச்செண்டு கொடுத்தும் நலம் விசாரித்தார் முதல்வர்.



    உடல்நலம் குறித்து விசாரித்த முதல்வருக்கு விஜயகாந்த் பொன்னாடை அணிவித்தார். பின்னர் இருவரும் தேர்தல் பணிகள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக பேசினர். இந்த சந்திப்பின்போது அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், கடம்பூர்  ராஜூ உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    பாராளுமன்ற தேர்தலில் தே.மு.தி.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் இன்னும் இரண்டு நாட்களில் வெளியாகும் என  எதிர்பார்க்கப்படுகிறது. #ParliamentElections #VijayakanthEPS

    நம் தாய் மொழியாம் தமிழ் மொழியை போற்றி பாதுகாத்து, வளர்த்திட நாம் அனைவரும் பாடுபட வேண்டுமென்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உலகத் தாய்மொழி தினத்தை யொட்டி வாழ்த்து தெரிவித்துள்ளார். #InternationalMotherLanguageDay
    சென்னை:

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உலகத் தாய்மொழி தினத்தை யொட்டி வாழ்த்து செய்தி அனுப்பி உள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

    மக்கள் தங்கள் தாய்மொழிகளைப் போற்றி பாதுகாத்து அடுத்த தலைமுறையினருக்கு கொண்டுசெல்ல வேண்டும் என்ற உயரிய நோக்கில், யுனெஸ்கோ நிறுவனம் ஆண்டு தோறும் பிப்ரவரி 21-ம் நாளை உலகத் தாய்மொழி நாளாக அறிவித்துள்ளது.

    திராவிட மொழிகளுக்கெல்லாம் தாய்மொழியாகவும், சீரிளமை குன்றாத மொழியாகவும், வளமையும் தூய்மையும் மிக்க மொழியாகவும், மொழிக்கு மட்டுமல்லாமல் வாழும் நெறிக்கும் இலக்கணம் வகுத்த மொழியாகவும், உலக மொழிகள் அனைத்திலும் தொன்மை மிக்க மொழியாகவும் விளங்குகின்ற நம் தாய்மொழியாம் தமிழ் மொழியை இந்த இனிய நாளில் போற்றிட நாம் அனைவரும் கடமைப்பட்டுள்ளோம்.

    தமிழுக்கும், தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கும் வளம் சேர்க்கும் வகையில் தொண்டாற்றி வரும் தமிழறிஞர்களை போற்றிச் சிறப்பிக்கும் வகையில், அம்மாவின் வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசு, தமிழறிஞர்கள், புலவர்களின் பெயர்களில் பல்வேறு விருதுகளைத் தோற்றுவித்து ஆண்டுதோறும் தமிழறிஞர்களுக்கு வழங்கிச் சிறப்பித்து வருகிறது.

    இந்த ஆண்டு முதல், அயோத்திதாசப் பண்டிதர், மறைமலையடிகள் ஆகியோரின் பெயர்களில் புதிய விருதுகள் தோற்றுவிக்கப்பட்டுள்ளன. அத்துடன், சங்ககாலப் புலவர்களை நினைவு கூரும்விதமாக, தமிழ் கவிஞர் நாளாக கொண்டாடப்படும் ஏப்ரல் 29-ம் தேதி அப்புலவர்களின் நினைவுத் தூண்களுக்கு மாலை அணிவித்து மலர் தூவிச் சிறப்பு செய்யப்பட்டு வருகிறது.

    பல்வேறு வகையில் தமிழ் மொழிக்காக பாடுபட்டவர்களுக்கும், பாடுபடுபவர்களுக்கும் பயன்படும் வகையில் பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது.

    உலகத் தாய்மொழி நாளான இந்த இனிய நாளில், நம் தாய் மொழியாம் தமிழ் மொழியை போற்றி பாதுகாத்து, வளர்த்திட நாம் அனைவரும் பாடுபட வேண்டுமென்று உங்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார். #InternationalMotherLanguageDay

    நீலகிரி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் 61½ கிலோ பறிமுதல் செய்யப்பட்டது.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூர், கூடலூர், நெல்லியாளம் ஆகிய 4 நகராட்சிகள், 11 பேரூராட்சிகள், 4 ஊராட்சி ஒன்றியங்கள் அடங்கிய மொத்தம் 4 மண்டலங்களில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை தவிர்க்கும் வகையில் சோதனை நடத்தப்பட்டது.

    இதற்காக ஊட்டி, குன்னூர், கூடலூர் மற்றும் கோத்தகிரி மண்டலங்களில் நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் மற்றும் துணை ஆட்சியர் நிலை அலுவலர்கள் குழுக்களாக பிரிந்து சோதனை செய்தனர். இதில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் 61½ கிலோ பறிமுதல் செய்யப்பட்டது. அபராத தொகையாக ரூ.1 லட்சத்து 26 ஆயிரம் விதிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டது. எனவே வியாபாரிகள், பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் நீலகிரி மாவட்டத்தின் சுற்றுச்சூழலை பாதுகாக்க ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர். 
    ஜெயங்கொண்டம் பகுதியில் உள்ள கடைகளில் பிளாஸ்டிக் பைகள், கப்புகள் பறிமுதல் செய்யப்பட்டது.
    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள தா.பழூர் கடைவீதிகளில் மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரில், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் பிளாஸ்டிக் பைகள், கப்புகளால் ஏற்படும் தீமைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். கடைவீதியில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள், கப்புகள் ஆகியவற்றை உபயோகப்படுத்த கூடாது என கடை உரிமையாளரிடம் கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பின்னர் ஆய்வு மேற்கொண்ட சுகாதார ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி, ஊராட்சி செயலாளர் இளங்கோவன் மற்றும் துப்புரவு பணியாளர்கள் கடைக்காரர்களிடம் இருந்த 13 கிலோ எடை உள்ள பிளாஸ்டிக் பைகள், கப்புகளை பறிமுதல் செய்தனர்.

    இதேபோல் ஜெயங்கொண்டம் கடை வீதிகளில் உள்ள கடைக்காரர்களிடம் பிளாஸ்டிக் பைகள், கப்பு களால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். தொடர்ந்து அப்பகுதிகளில் ஆய்வு செய்த நகராட்சி துப்புரவு ஆய்வாளர் சிவராமகிருஷ்ணன், சுகாதார ஆய்வாளர் திருநாவுக்கரசு ஆகியோர் கடைக்காரர்களிடம் இருந்த பிளாஸ்டிக் பைகள், கப்புகளை பறிமுதல் செய்தனர்.
    சென்னையில் இன்று நடைபெற்ற குடியரசு தின விழாவில், வீர தீர செயல்களுக்கான பதக்கங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார். #RepublicDay #RepublicDay2019 #BraveryAwards
    சென்னை:

    நாட்டின் 70வது குடியரசு தினத்தை முன்னிட்டு சென்னை கடற்கரை சாலையில் கோலாகலமாக விழா நடைபெற்றது. விழாவின் துவக்கமாக, ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தேசியக்கொடியை ஏற்றி வைத்து, பல்வேறு படைப்பிரிவினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

    அதன்பின்னர் வீரதீர செயல்களுக்கான பதக்கங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார். சென்னை திருமங்கலம் டிவி நகரைச் சேர்ந்த சூர்யகுமார், தேனி மாவட்டம் போடிநாயக்கனூரைச் சேர்ந்த ரஞ்சித் குமார், தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு மேலையூரைச் சேர்ந்த ஸ்ரீதர் ஆகியோருக்கு வீர தீர செயல்களுக்கான அண்ணா பதக்கம் வழங்கப்பட்டது.



    2018ம் ஆண்டு ஏப்ரல் 17-ம் தேதி மருத்துவர் அமுதாவிடம் செயின் பறித்து தப்பி ஓடிய கொள்ளையனை துரத்திச் சென்று மடக்கிப் பிடித்த, துணிச்சல் மிக்க செயலுக்காக சூரியகுமாருக்கும், 2018 மார்ச் 11ல் குரங்கணி தீ விபத்தில் 8 பேரை காப்பாற்றியதற்காக ரஞ்சித்குமாருக்கும், 2018 டிசம்பர் மாதம் 2ம் தேதி வெள்ளங்கி ஏரியில் விழுந்த 3 பெண்கள் மற்றும் 3 குழந்தைகளை காப்பாற்றியதற்காக ஸ்ரீதருக்கும் அண்ணா பதக்கங்கள் வழங்கப்பட்டுள்ளன.

    மேலும், கள்ளச்சாராயத்தை கட்டுப்படுத்தும் பணியில் சிறப்பாக செயல்பட்ட 5 காவலர்களுக்கு காந்தியடிகள் பதக்கங்களையும் முதலமைச்சர் வழங்கினார். இதேபோல் புதுக்கோட்டை வடக்கு செட்டியாபட்டியைச் சேர்ந்த விவசாயி சேவியருக்கு வேளாண்மைத்துறை சிறப்பு விருது வழங்கப்பட்டது.

    விருது பெற்றவர்கள் முதலமைச்சருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். அதன்பின்னர் மாணவ, மாணவிகளின் கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. #RepublicDay #RepublicDay2019 #BraveryAwards
    சென்னையில் இன்று இரண்டாவது உலக முதலீட்டாளர் மாநாட்டை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார். #EdappadiPalaniswami #GlobalInvestorsMeet2019 #GIM2019
    சென்னை:

    சென்னையில் கடந்த 2015-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 9, 10-ந் தேதிகளில் முதல் முறையாக உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட்டது. மாநாட்டின் நிறைவு நாள் அன்று ரூ.2 லட்சத்து 42 ஆயிரம் கோடி அளவுக்கு முதலீடுகள் ஈர்க்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

    இந்த நிலையில், 2-வது உலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில் இன்று தொடங்கியது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்கி, மாநாடு மற்றும் கண்காட்சியை துவக்கி வைத்தார். துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலை வகித்தார்.



    சிறப்பு விருந்தினராக மத்திய பாதுகாப்புத் துறை மந்திரி நிர்மலா சீதாராமன் கலந்துகொண்டு, ‘தமிழ்நாடு வானூர்தி மற்றும் பாதுகாப்பு தொழில் கொள்கை -2019’-ஐ வெளியிட்டு பேசுகிறார். மதியம் 2 மணி முதல் பல்வேறு தலைப்புகளின் கீழ் துறை சார்ந்த கருத்தரங்கங்கள் நடைபெறுகின்றன. மாநாட்டில் பல்வேறு நாடுகளின் தூதர்கள், முன்னணி தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர்.

    2-வது நாளான நாளை (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு கருத்தரங்கங்களுடன் உலக முதலீட்டாளர்கள் மாநாடு தொடங்குகிறது. மதியம் 3 மணிக்கு நிறைவு விழா நிகழ்ச்சி நடைபெறுகிறது. தலைமை விருந்தினராக துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கலந்துகொண்டு பேசுகிறார். சிறப்பு விருந்தினர்களாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மத்திய இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொள்கிறார்கள்.

    அதனைத் தொடர்ந்து, தமிழகத்தில் தொழில் தொடங்க விரும்பும் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட இருக்கின்றன. சுமார் ரூ.2.5 லட்சம் கோடி அளவுக்கு முதலீடுகளை ஈர்க்கும் வகையில் ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.  #EdappadiPalaniswami #GlobalInvestorsMeet2019 #GIM2019
    தனது சொந்த கிராமமான எடப்பாடியை அடுத்துள்ள சிலுவம்பாளையத்தில் குடும்பத்துடன் பொங்கல் பண்டிகையை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொண்டாடினார். #EdappadiPalaniswami
    எடப்பாடி:

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சேலம் மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்.

    நேற்று அவர் தனது சொந்த கிராமமான, எடப்பாடியை அடுத்துள்ள சிலுவம்பாளையத்தில் குடும்பத்துடன் பொங்கல் பண்டிகையை கொண்டாடினார். முன்னதாக சிலுவம்பாளைம் வந்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கிராம மக்கள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    மேளதாளம் முழங்க ஊர்மக்களுடன் நடந்து சென்ற அவர் தனது தனது வீட்டருகே உள்ள முருகன் ஆலயத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் குடும்பத்துடன் பங்கேற்றார்.

    ஆலய வளாகத்தில் முதல்வரின் மனைவி ராதா மற்றும் குடும்ப உறுப்பினர்கள் பாரம்பரிய முறைப்படி பொங்கல் வைத்தனர். பின்னர் பொதுமக்களுக்கு எடப்பாடி பழனிசாமி பொங்கல் வழங்கினார்.

    இதைத் தொடர்ந்து தனது விவசாய தோட்டத்தில் நடைபெற்ற பொங்கல் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அங்கு அலங்கரிக்கப்பட்ட பசு மாடுகளுக்கு பூஜை செய்து வணங்கினார்.

    மாடுகளுக்கு வெல்லம், கரும்பு, பழங்களை கொடுத்தார். அவர் தொடர்ந்து அப்பகுதியில் உள்ள முருகன் ஆலயத்தில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் கலந்துகொண்டு குடும்பத்தினருடன் சாமிதரிசனம் செய்தார்.

    பின்னர் அங்கு நடைபெற்ற அன்னதான நிகழ்ச்சியில் எடப்பாடி பழனிசாமி ஊர் மக்களுடன் அமர்ந்து சமபந்தி விருந்து உண்டார்.

    பொங்கல் பண்டிகையினையொட்டி சிலுவம்பாளையம் கிராமத்தில் நடைபெற்ற கிராமிய கலை நிகழ்ச்சிகளை தொடங்கிவைத்த எடப்பாடி பழனிசாமி அங்கு நடைபெற்ற சிலம்பாட்டம், காவடி ஆட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை கண்டு ரசித்தார்.

    பின்னர் அவர் தனது தாயார் தவசாயி அம்மாளிடம் குடும்பத்துடன் ஆசிபெற்றார். இதைத் தொடர்ந்து எடப்பாடி நெடுஞ்சாலைத்துறை பயணியர் விடுதியில் எடப்பாடி பழனிசாமி கட்சி நிர்வாகிகளுக்கு பொங்கல் வாழ்த்துகூறி அவர்களுடன் கலந்துரையாடினார்.

    தொடர்ந்து பொதுமக்களிடம் குறைகள் கேட்டு மனுக்கள் வாங்கினார். #EdappadiPalaniswami
    ×