search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குண்டர் சட்டத்தின் மீது எனக்கு நம்பிக்கை இல்லை- பொன்.மாணிக்கவேல்
    X

    குண்டர் சட்டத்தின் மீது எனக்கு நம்பிக்கை இல்லை- பொன்.மாணிக்கவேல்

    தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் போடப்படுவதில் தனக்கு நம்பிக்கை இல்லை என்று பொன். மாணிக்கவேல் தெரிவித்துள்ளார். #IGPonManickavel
    சென்னை:

    சென்னை எழும்பூரில் உள்ள சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் பங்கேற்ற நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

    ஓய்வு பெறுவதையொட்டி ரெயில்வே போலீசில் சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கும், குற்றவாளிகளை பிடித்துக் கொடுத்த பொதுமக்களுக்கும் பொன். மாணிக்கவேல் வெகுமதிகளை வழங்கினார். அப்போது அவர் போலீசார் மத்தியில் பேசியதாவது:-

    போலீஸ் துறையில் பணியாற்றும் இன்ஸ்பெக்டர்கள் பணிச்சுமையுடனேயே பணியாற்றுகின்றனர். ஆண்டுக்கு சராசரியாக 600 வழக்குகள் பதிவாகின்றன. இதனால் அனைத்து வழக்குகளையும் விசாரிப்பதற்கு போலீசாருக்கு போதுமான நேரம் கிடைப்பதில்லை. கொலை வழக்குகளை விசாரித்து முடிப்பதற்கு 3 மாதங்களுக்கு மேல் ஆகும்.

    ஒரு வழக்கை பதிவு செய்யும் போது போலீசார் மிகுந்த கவனமுடன் செயல்பட வேண்டும். அரசு வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடத்தி சட்டநுணுக்கங்களையும் தெரிந்து கொள்ள வேண்டும். அப்போதுதான் நீதிமன்றங்களில் வழக்கை திறம்பட நடத்த முடியும். நீதிமன்றத்தை எப்போதும் மதித்து செயல்பட வேண்டும்


    ஒரு வழக்கை பதிவு செய்யும் அதிகாரி எக்காரணம் கொண்டும் குற்றவாளிகளை தப்ப விட்டு விடக் கூடாது. கோர்ட்டில் குற்றத்தை நிரூபித்து தண்டனை வாங்கிக் கொடுக்க வேண்டும். தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் போடப்படுகிறது. ஆனால் அதில் எனக்கு நம்பிக்கை இல்லை. ஏனென்றால் 2 அல்லது 3 மாதங்களில் குண்டர் சட்டத்தை உடைத்துக் கொண்டு குற்றவாளிகள் வெளியில் வந்து விடுகிறார்கள்.

    தமிழக அரசுக்கும் எனக்கும் எந்த பிரச்சனையும் இல்லை. சில அதிகாரிகளால்தான் பிரச்சனை. முழுமன நிறைவோடு பணி ஓய்வு பெறுகிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார். #PonManickavel
    Next Story
    ×