search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விற்பனை"

    • தமிழக அரசின் நடவடிக்கையால் புதுச்சேரிக்கு குறைவான பன்னீர் கரும்புகளே வந்துள்ளது.
    • பொங்கல் பண்டிகையில் முக்கியமாக படையலில் வைக்கப்படும் கரும்பு புதுச்சேரியில் விளைவிப்பதில்லை.

    புதுச்சேரி:

    பொங்கல் பண்டிகை நாளை மறுநாள் (திங்கட் கிழமை) கொண்டாடப்படுகிறது.

    விழாவில் புதுபானையில் பொங்கலிட்டு வழிபடுவது வழக்கம். இதில் பன்னீர் கரும்பு, மஞ்சள் முக்கிய பொருளாக இடம் பெறும். இதுதவிர சர்க்கரைவள்ளி கிழங்கு, பிடிகரணை, நாட்டு பூசணிக்காய் பொங்கல் படையலில் வைக்கப்படும்.

    பொங்கல் பண்டிகையில் முக்கியமாக படையலில் வைக்கப்படும் கரும்பு புதுச்சேரியில் விளைவிப்பதில்லை. புதுவையையொட்டியுள்ள தமிழக பகுதியான கடலூர் மாவட்டத்தில் சிதம்பரம், புவனகிரி, பண்ருட்டி, பாலுார், கண்டரகோட்டை, குறிஞ்சிப்பாடி. நடுவீரப்பட்டு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து விளைவிக்கப்படும் பன்னீர் கரும்பை வரவழைத்து வியாபாரிகள் விற்பனை செய்வார்கள்.

    தற்போது பொங்கல் பண்டிகையொட்டி தமிழகத்தில் ரேஷன் கார்டுகளுக்கும் ரூ. 1000 மற்றும் பன்னீர் கரும்பு உள்ளிட்ட பொங்கல் பொருட்கள் வழங்கப்படுகிறது.

    இதற்காக தமிழக அரசு விவசாயிகளிடம் இருந்து பன்னீர் கரும்புகளை நேரடியாக கொள்முதல் செய்கிறது விவசாயிகளிடம் கரும்பின் ஒரு உயரத்தை பொருத்து ரூ.36 வரை விலை நிர்ணயித்து பெறப்படுகிறது. பெரும்பாலான விவசாயிகள் தமிழக அரசு அதிகரிகளிடம் பன்னீர் கரும்புகளை விற்பனை செய்துள்ளனர்.

    தமிழக அரசின் நடவடிக்கையால் புதுச்சேரிக்கு குறைவான பன்னீர் கரும்புகளே வந்துள்ளது. இவை உழவர் சந்தை உள்ளிட்ட சில இடங்களில் விற்பனை செய்யப்பட்டது. அங்கு, ஒரு ஜோடி கரும்பு ரூ.150 முதல் 200-க்கு விற்பனையானது.

    பூக்கள் விலையும் அதிகரித்து இருந்தது. சாமந்தி கிலோ ரூ.140 முதல் ரூ.200 வரையிலும், ரோஜா ரூ.200-க்கு விற்பனை செய்யப்பட்டது. காட்டுமல்லி (காக்கட்டான்) கிலோ ரூ. 700, அலரி பூ கிலோ ரூ. 200-க்கும், அரும்பு கிலோ ரூ. 2000-க்கும், குண்டுமல்லி கிலோ ரூ.2500-க்கு விற்பனை செய்யப்பட்டது.

    அதுபோல் மஞ்சள் கொத்தும் விலை அதிகரித்தது. மஞ்சள் கொத்து ஒன்று ரூ.20 முதல் ரூ.40 சர்க்கரை வள்ளி கிழங்கு கிலோ ரூ.50, நாட்டு பூசணிக்காய் கிலோ ரூ.30-க்கு, தேங்காய் ரூ. 15 முதல் ரூ.20-க்கும், முழு வாழை இலை ஒன்று ரூ.10-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    கரும்புவரத்து குறைவால் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. இன்றும் நாளையும் கூடுதலாக பன்னீர் கரும்புலோடு வரும்போது, விலை குறைய வாய்ப்பு உள்ளதாக தெரிவித்தனர். 

    • நேற்று நள்ளிரவில் 10-க்கும் மேற்பட்ட லாரிகளில் கரும்பு விற்பனைக்கு குவிந்துள்ளது.
    • சிறப்பு சந்தையில் குடி தண்ணீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

    போரூர்:

    பொங்கல் பண்டிகை வருகிற 15-ந் தேதி(திங்கட்கிழமை)கொண்டாடப்படுகிறது.

    இதையொட்டி கரும்பு மஞ்சள் கொத்து இஞ்சி கொத்து உள்ளிட்ட பொங்கல் பொருட்கள் அனைத்தையும் ஒரே இடத்தில் வாங்கி சென்றிட வசதியாக கோயம்பேடு மார்கெட்டில் சிறப்பு சந்தை தொடங்கப்பட்டு உள்ளது.

    போக்குவரத்து நெரிசலை கட்டுபடுத்தும் விதமாக மார்கெட் பின்புறம் உள்ள "ஏ" சாலை மற்றும் மளிகை மார்க்கெட் வளாகம் என 2 இடங்களாக பிரிக்கப்பட்டு சிறப்பு சந்தைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில் கோயம்பேடு மார்கெட்டில் செயல்படும் பொங்கல் சிறப்பு சந்தைக்கு கரும்பு, மஞ்சள் கொத்துக்கள் அதிகஅளவு விற்பனைக்கு வரத்தொடங்கி உள்ளன.

    நேற்று நள்ளிரவில் 10-க்கும் மேற்பட்ட லாரிகளில் கரும்பு விற்பனைக்கு குவிந்துள்ளது. இதேபோல் திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி பகுதியில் இருந்து 6-க்கும் மேற்பட்ட மினி வேன்கள் மூலம் மஞ்சள் கொத்து விற்பனைக்கு வர தொடங்கி உள்ளது.

    இதனால் சிறப்பு சந்தையில் பொங்கல் பொருட்கள் விற்பனை களை கட்ட தொடங்கி உள்ளது. மார்க்கெட்டிற்கு வரும் சில்லரை வியாபாரிகள் கரும்பு, மஞ்சள் கொத்துகளை தங்களது வாகனங்களில் வாங்கி செல்ல தொடங்கி உள்ளனர்.

    நாளை நள்ளிரவு முதல் விழுப்புரம், கடலூர், பாண்டிச்சேரி, சேலம் ஆகிய பகுதிகளில் இருந்து 300-க்கும் மேற்பட்ட லாரிகளில் கரும்பு விற்பனைக்கு குவியும் எனவும், மஞ்சள் கொத்து உள்ளிட்ட பொங்கல் விற்பனை பொருட்களும் ஏராளமான வாகனங்களில் குவியும் என்று வியாபாரிகள் தெரிவித்து உள்ளனர். இன்று காலை சிறப்பு சந்தையில் 15 கரும்புகள் கொண்ட ஒருகட்டு கரும்பு ரூ.500 வரை விற்பனை செய்யப்படுகிறது. 10 எண்ணிக்கை கொண்ட மஞ்சள் கொத்து ரூ.120 வரை விற்பனை ஆகிறது.

    இதுகுறித்து அங்காடி நிர்வாக குழு அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    கோயம்பேடு மார்க்கெட்டில் சில்லரை வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் ஒரே இடத்தில் பொங்கல் பொருட்கள் அனைத்தையும் எளிதாக வாங்கி சென்றிடும் வகையில் சிறப்பு சந்தை அமைக்கப்பட்டு உள்ளது.வருகிற 17-ந் தேதி வரை சிறப்பு நடக்க உள்ளது. காய்கறி மற்றும் பழ மார்கெட்டில் காய்கறி பழங்கள் உள்ளிட்ட பொருட்களை வாங்கிய பின்னர் மார்கெட் பின்புறம் உள்ள "ஏ" சாலையில் செயல்பட்டு வரும் சிறப்பு சந்தையில் கரும்பு, மஞ்சள் கொத்து உள்ளிட்ட பொங்கல் பொருட்களை வாங்கி செல்லும் வகையில் திட்டமிட்டு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது

    இதன் மூலம் மார்கெட்டை ஒட்டியுள்ள சாலைகளில் தேவையற்ற போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது தவிர்க்கப்படும். சிறப்பு சந்தையில் குடி தண்ணீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

    மார்கெட் வளாகத்தில் ஆங்காங்கே பொங்கல் சிறப்பு சந்தை நடக்கும் இடங்கள் பற்றிய விபரங்கள் அடங்கிய பதா கைகள் வைக்கப்ப ட்டள்ளன. மேலும் ஒலி பெருக்கி மூலம் சிறப்பு சந்தை பற்றி தகவல் தெரிவித்து வருகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கரும்பு, மஞ்சள் குலை விற்கும் பகுதிகளில் மண் பானைகளையும் விற்பனைக்கு வைத்திருப்பார்கள்.
    • சென்னையில் மட்டும் 500-க்கும் மேற்பட்ட மண்பானை விற்பனை கடைகள் உள்ளன.

    தை மகளை வரவேற்க மக்கள் தயாராகி வருகிறார்கள்.

    பொங்கல் என்றாலே புதுப்பானை புத்தரிசி, செங்கரும்பு, மஞ்சள் குலை இவைகள் தான் நினைவுக்கு வரும். மண் பானை கிராமங்களில் மட்டுமல்லாமல் நகரத்திலும் மக்களிடம் மண் வாசனை மாறாமல் இடம் பிடித்து உள்ளது. சென்னையில் பொங்கல் பண்டிகைக்காக ஏராளமான மண் பானைகள் விற்பனைக்காக வந்து குவிந்து உள்ளன. சென்னையில் மட்டும் 500-க்கும் மேற்பட்ட மண்பானை விற்பனை கடைகள் உள்ளன. இது தவிர தற்காலிக நடை பாதை கடைகளும் இன்னும் ஒன்றிரண்டு நாளில் தொடங்கும்.

    கரும்பு, மஞ்சள் குலை விற்கும் பகுதிகளில் மண் பானைகளையும் விற்பனைக்கு வைத்திருப்பார்கள். நகர மயமாகிவிட்டாலும் மக்களிடம் பாரம்பரியமான முறையில் மண் பானையில் பொங்கலிடும் ஆர்வம் அதிகம் இருப்பதாக மண் பானைகள் மொத்த விற்பனையாளரான கோடம்பாக்கத்தை சேர்ந்த உஷா கூறினார். இப்போது பள்ளிகளில் பாரம்பரிய விழாக்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதால் சுமார் 100 கிராம் பச்சரிசி மற்றும் வெல்லத்தை போட்டு பொங்கல் வைப்பதற்காக சிறிய ரக பானைகள் அதிக அளவில் விற்பனையாவதாக தெரிவித்தார்.

    இந்த பானைகளின் விலை ரூ.50 தான். வர்ணம் பூசாத பானைகள், வர்ணம் பூசப்பட்ட பானைகள் என்று சிறியது முதல் பெரியது வரை அதாவது கால்கிலோ அரிசி முதல் 5 கிலோ அரிசி வரை பொங்கல் வைக்கும் அளவிற்கு பானைகள் விற்பனைக்கு வந்துள்ளன.

    இதில் 5 கிலோ அரிசியை பொங்கலிடும் வகையிலான வர்ணம் பூசப்பட்ட பெரிய பானையின் விலை ரூ.1500. வர்ணம் பூசப்படாத மண் பானைகள் ரூ.30 முதல் ரூ.200 வரை விற்பனையாகிறது.

    வெளியூர்களில் இருந்து ஆயிரக்கணக்கான பானைகளை கொள்முதல் செய்து விற்பனைக்கு தயாராக வைத்துள்ளார்கள். மழை குறுக்கிடாவிட்டால் வியாபாரம் களைகட்டும் என்கிறார்கள் வியாபாரிகள்.

    • தினமும் 100-க்கும் மேற்பட்ட லாரிகளில் காய்கறிகள் வரும் நிலையில் நேற்று 20 லாரிகளே வந்துள்ளன.
    • வரத்து குறைவு மற்றும் திருமண சீசன் காலம் ஆகியவற்றால் காய்கறிகளின் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    திருவனந்தபுரம்:

    தமிழகத்தில் சமீபத்தில் ஏற்பட்ட மழை மற்றும் வெள்ளம் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த பாதிப்பு அண்டை மாநிலமான கேரளாவிலும் எதிரொலித்துள்ளது. அங்கு அத்தியாவசிய தேவை பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. அதில் குறிப்பாக காய்கறிகள் கடும் ஏற்றத்தை சந்தித்துள்ளது. தமிழகத்தில் இருந்து காய்கறிகள் கேரளாவுக்கு செல்வது குறைந்துள்ளதால் தான் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    தமிழகத்தில் இருந்து செல்லும் முருங்கைக்காய் வரத்து குறைவு காரணமாக கேரளாவில் ஒரு கிலோ ரூ.170-க்கு விற்கப்படுகிறது. கடந்த வாரம் இதன் விலை ரூ.90 ஆக இருந்தது.

    பச்சை மிளகாய் விலையும் உயர்வை சந்தித்துள்ளது. கடந்த வாரம் ரூ.40-க்கு விற்கப்பட்ட நிலையில் இன்று ரூ.80 ஆக உயர்ந்து உள்ளது. அதே நேரம் இஞ்சியின் விலை ரூ.240-ல் இருந்து கிலோ ரூ.140 ஆக குறைந்துள்ளது. வயநாட்டில் இருந்து இஞ்சியின் வரத்து அதிகமாக உள்ளதே இந்த விலை வீழ்ச்சிக்கு காரணமாக உள்ளது.

    ஆலப்புழா மார்க்கெட்டுகளுக்கு தினமும் 100-க்கும் மேற்பட்ட லாரிகளில் காய்கறிகள் வரும் நிலையில் நேற்று 20 லாரிகளே வந்துள்ளன. வரத்து குறைவு மற்றும் திருமண சீசன் காலம் ஆகியவற்றால் காய்கறிகளின் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    • குடும்பத்துடன் ஓட்டலுக்கு சென்று ஐதராபாத் பிரியாணி சாப்பிட்டனர்.
    • பாகுபலி சாப்பாடு சாப்பிட்டால் ரூ.1 லட்சம் ரொக்க பரிசு வழங்கப்படும்

    திருப்பதி:

    ஐதராபாத் பிரியாணி பெயரைக் கேட்டாலே ருசிக்க தோன்றும். சுவையான இந்த பிரியாணியை பலரும் விரும்பி சாப்பிடுகின்றனர்.

    இந்த நிலையில் ஐதராபாத்தில் பிரபல ஓட்டல் நிர்வாகம் ஒன்று தற்போது 3 இடங்களில் புதிய கிளைகளை திறந்தது. இங்கு 2 ரூபாய்க்கு பிரியாணி வழங்கப்படும் என அறிவிப்பை வெளியிட்டது.

    இதனைக் கண்ட அசைவ பிரியர்கள் ஓட்டல் முன்பு குவிந்தனர். அப்போதுதான் ஓட்டல் நிர்வாகம் ஒரு நிபந்தனையை விதித்தது. அது என்னவென்றால் பழைய 2 ரூபாய் நோட்டுகள் தந்தால் மட்டுமே 2 ரூபாய்க்கான பிரியாணி வழங்கப்படும் என தெரிவித்தது.

    இதனை கேட்ட வாடிக்கையாளர்கள் பலர் ஏமாற்றத்துடன் திரும்பினர். ஒரு சிலர் தங்கள் வீடுகளில் வைத்திருந்த பழைய 2 ரூபாய் நோட்டுகளை எடுத்துக் கொண்டு குடும்பத்துடன் ஓட்டலுக்கு சென்று ஐதராபாத் பிரியாணி சாப்பிட்டனர்.

    இது குறித்து ஓட்டல் நிர்வாகத்தினர் கூறுகையில்:-

    பொதுமக்களிடம் இன்னும் பழைய 2 ரூபாய் நோட்டுகள் இருக்கிறதா என்பதை கண்டறிய இந்த நூதன விற்பனையை தொடங்கினோம். இதுவரை எங்களிடம் 120 ரூபாய் மதிப்பிலான 2 ரூபாய் நோட்டுகள் வந்துள்ளன. இதற்கு நல்ல வரவேற்பும் கிடைத்துள்ளது.

    எங்கள் உணவகம் சார்பில் 30 நிமிடங்களில் 30-க்கும் மேற்பட்ட உணவுகள் கொண்ட பாகுபலி சாப்பாடு சாப்பிட்டால் ரூ.1 லட்சம் ரொக்க பரிசு வழங்கப்படும் என அறிவித்துள்ளோம்.

    இதன் விலை ரூ.1,999 இந்த கட்டணத்தை செலுத்தி 30 நிமிடங்களில் 30-க்கும் மேற்பட்ட உணவுகளை சாப்பிட்டவர்களுக்கு ரூ.1 லட்சம் ரொக்க பரிசை வழங்கி வருகிறோம். இதுவரை இந்த போட்டியில் 7 பேர் மட்டுமே வெற்றி பெற்றுள்ளனர்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • தேங்காய் கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.29.05-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.23.88-க்கும், சராசரி விலையாக ரூ.26.35-க்கும் என மொத்தம் ரூ.39ஆயிரத்து 736-க்கு விற்பனையானது.
    • 2-ம் தரம் தேங்காய் பருப்பு கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.85.19-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.61.19-க்கும், சராசரி விலையாக ரூ.80.99-க்கும் என மொத்தம் ரூ.9 லட்சத்து 10 ஆயிரத்து 765-க்கு விற்பனையானது.

    பரமத்திவேலூர்:

    சாலைப்புதூரில் வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது. இங்குஇந்த வாரம் நடந்த ஏலத்தில் 15.41 குவிண்டால் எடை கொண்ட 4 ஆயிரத்து 510 தேங்காய் விற்பனைக்கு வந்தது. இதில் தேங்காய் கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.29.05-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.23.88-க்கும், சராசரி விலையாக ரூ.26.35-க்கும் என மொத்தம் ரூ.39ஆயிரத்து 736-க்கு விற்பனையானது.

    அதேபோல் 119.90 குவிண்டால் எடை கொண்ட 255 மூட்டை தேங்காய் பருப்பு விற்பனைக்கு வந்தது. இதில் முதல் தரம் தேங்காய் பருப்பு கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.89.19-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.81.29-க்கும், சராசரி விலையாக ரூ.88.39-க்கும் விற்பனையானது.

    2-ம் தரம் தேங்காய் பருப்பு கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.85.19-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.61.19-க்கும், சராசரி விலையாக ரூ.80.99-க்கும் என மொத்தம் ரூ.9 லட்சத்து 10 ஆயிரத்து 765-க்கு விற்பனையானது.

    அதேபோல் 30.08 குவிண்டால் எடை கொண்ட 41 மூட்டை எள் விற்பனைக்கு வந்தது. எள் கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.162.29-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.128.69-க்கும், சராசரி விலையாக ரூ.159.69-க்கும் என மொத்தம் ரூ.4 லட்சத்து 65 ஆயிரத்து 704-க்கு விற்பனையானது.

    இதன்படி சாலைப்புதூர் அரசு வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் வேளாண் பொருட்கள் மொத்தம் ரூ.14 லட்சத்து 16 ஆயிரத்து 205-க்கு விற்பனையானது.

    • விரலி மஞ்சள் குவிண்டால் ரூ.14 ஆயிரத்து 499-க்கு விற்பனையானது.
    • இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மஞ்சள் சந்தை யில் கடந்த ஜூலை முதல் மஞ்சள் விலை உயரத் தொடங்கியது. குவிண்டால் ரூ.10 ஆயிரத்துக்கு கீழ் விற்பனையாகி வந்த மஞ்சள் விலை ரூ.14 ஆயிரத்தை தொட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    இந்நிலையில் ஆகஸ்ட் முதல் வாரத்தில் மஞ்சள் விலை ரூ.15 ஆயிரத்து 422-க்கு விற்பனையானது. 13 ஆண்டுகளுக்கு பிறகு மஞ்சள் விலை ரூ.15 ஆயிரத்தை கடந்து உச்ச த்தை தொட்டது. தொடர்ந்து மஞ்சள் விலையில் சரிவு ஏற்பட்டு ரூ.12 ஆயிரம் முதல் ரூ.13 ஆயிரம் வரை விற்பனையானது.

    இந்நிலையில் கோபி கூட்டுறவு சங்கத்தில் நேற்று நடந்த ஏலத்தில் விரலி மஞ்சள் அதிகபட்சமாக குவிண்டால் ஒரு ரூ.14 ஆயிரத்து 499-க்கு விற்பனையானது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    இந்த விலை உயர்வு மற்ற சந்தைகளில் எதிரொலிக்கவில்லை என்றாலும் வரும் காலங்களில் மஞ்சள் விலை உயரும் என்ற எதிர்பார்ப்பு விவசாயிகளிடையே ஏற்பட்டுள்ளது.

    பெருந்துறை ஒழுங்குமுறை விற்பனை கூடத்துக்கு 878 மூட்டை மஞ்சள் வரத்தான நிலையில் 797 மூட்டைகள் விற்பனையானது. விரலி மஞ்சள் குவிண்டால் ரூ.9,192 முதல் ரூ.13 ஆயிர த்து 569, கிழங்கு மஞ்சள் ரூ.8,599 முதல் ரூ.11,889 வரை விற்பனையானது.

    ஈரோடு ஒழுங்குமுறை விற்பனை கூடத்துக்கு 2397 மூட்டை மஞ்சள் வரத்தான நிலையில் 1,050 மூட்டைகள் விற்பனையானது. விரலி மஞ்சள் குவிண்டால் ரூ.8,589 முதல் ரூ.13 ஆயிரத்து 589, கிழங்கு மஞ்சள் ரூ.7,599 முதல் ரூ.11,913 வரை விற்பனையானது.

    ஈரோடு கூட்டுறவு சங்கத்துக்கு 382 மூட்டை மஞ்சள் வரத்தான நிலையில் 264 மூட்டைகள் விற்பனையானது. விரலி மஞ்சள் குவிண்டால் ரூ.7,189 முதல் ரூ.13 ஆயிரத்து 600, கிழங்கு மஞ்சள் ரூ.6,879 முதல் ரூ.12,200 வரை விற்பனையானது.

    • முதல்கட்டமாக மாநிலத்தில் உள்ள 108 ரேசன் கடைகள் கே-ஸ்டோர்களாக மாறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • கேரள நீர்ப்பாசன உள்கட்டமைப்பு மேம்பாட்டு கழகம் தயாரிக்கும் ஹில்லி அக்வா என்ற பெயரில் தரமான தண்ணீர் பாட்டில் வழங்கப்பட உள்ளது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் சுமார் 2 ஆயிரம் ரேசன் கடைகள் உள்ளன. இதன் மூலம் பொதுமக்களுக்கு கோதுமை உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்தநிலையில் கேரள மாநிலத்தில் உள்ள ரேசன் கடைகளில் மக்களுக்கு வங்கி மற்றும் பிற ஆன்லைன் சேவைகளை வழங்கும் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டு உள்ளன.

    ரேசன் கடைகள் மூலம் கூடுதல் பொருட்கள் மற்றும் டிஜிட்டல் சேவைகளை வழங்குவதற்காக கே-ஸ்டோர்கள் என மறுபெயரிடவும் கேரள அரசு முடிவு செய்திருக்கிறது. முதல்கட்டமாக மாநிலத்தில் உள்ள 108 ரேசன் கடைகள் கே-ஸ்டோர்களாக மாறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கே-ஸ்டோர்கள் தொடங்கப்பட்ட பிறகு அதன் மூலமாக ரூ10ஆயிரம் வரையிலான பரிவர்த்தனைகள், பயன்பாட்டு பில் செலுத்துதல் (மின்சாரம் மற்றும் தண்ணீர் உள்பட), 5கிலோ எடையுள்ள சிறிய எல்.பி.ஜி. சிலிண்டர்கள், சபரி மற்றும் மில்மா தயாரிப்புகள் வழங்குதல் உள்ளிட்டவைகள் பொது மக்களுக்கு கிடைக்கும்.

    இந்நிலையில் ரேசன் கடைகள் மூலமாக பொது மக்களுக்கு தண்ணீர் பாட்டில்கள் விற்பனை செய்ய கேரள அரசு முடிவு செய்துள்ளது.

    அதன்படி ஒரு லிட்டர் தண்ணீர் பாட்டில் 10 ரூபாய்க்கு வழங்கப்படும். மாநில நீர்ப்பாசன துறையின் கீழ் இயங்கும் பொதுத்துறை நிறுவனமான கேரள நீர்ப்பாசன உள்கட்டமைப்பு மேம்பாட்டு கழகம் தயாரிக்கும் ஹில்லி அக்வா என்ற பெயரில் தரமான தண்ணீர் பாட்டில் வழங்கப்பட உள்ளது.

    இந்த தண்ணீர் பாட்டில் வெளிச்சந்தையில் இது ரூ15 வரை விற்கப்படுகிறது. சபரிமலை சீசனை கருத்தில் கொண்டு முதல்கட்டமாக கோட்டயம், இடுக்கி மற்றும் பத்தனம்திட்டா மாவட்டங்களில் உள்ள ரேசன் கடைகளுக்கு தண்ணீர் பாட்டில்கள் விற்பனைக்கு அறிமுகப்படுததப்படுகிறது.

    அதன் தொடர்ச்சியாக மற்ற மாவட்டங்களில் உள்ள ரேசன் கடைகளிலும் தண்ணீர்பாட்டில் விற்பனையை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

    • குட்கா விற்ற 10 கடைகளுக்கு உணவு விற்பனை அனுமதி ரத்து செய்யப்பட்டது.
    • ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

    மதுரை

    மதுரை நகரில் தடை செய்யப் பட்ட குட்கா, புகை யிலை பொருட்கள் விற்பனை சட்டவிரோதமாக நடைபெற்று வருவதாக அதி காரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து மாவட்ட கலெக்டர் அறிவு றுத்தலின்படி உணவு பாது காப்பு அலுவலர் ஜெய ராம்பாண்டியன் தலைமை யில் அதிகாரிகள் மதுரை நகர் முழுவதும் கடைகளில் அதிரடி சோதனை நடத்தி னர்.

    நகர் பகுதிகளில் 9 குழுக் களாகவும், புறநகர் பகுதி களில் 10 குழுக்களாகவும் பிரிந்து இந்த சோதனை நடந்தது. மொத்தம் 206 கடைகளில் சோதனை நடத்தப்பட்டது. அப்போது 16 கடைகளில் தடை செய்யப்பட்ட குட்கா, புகை யிலை பொருட்கள் விற்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    அந்த கடைகளில் இருந்து 6.5 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட் டது. மேலும் 16 கடைக ளுக்கும் ரூ.1 லட்சத்து 10 அபராதம் விதிக்கப்பட்டது. 10 கடைகளுக்கு உணவு பொருட்கள் விற்பனை செய்யும் அனுமதியும் ரத்து செய்யப்பட்டது. அதற்கான நோட்டீசை உரிமையா ளர்களிடம் அதிகாரிகள் வழங்கினர்.

    இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், மதுரை நகர் பகுதிகளில் குட்கா, புகை யிலை பொருட்கள் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப் படும். இதுபோன்ற சட்ட விரோதமாக விற்பனை செய்யும் கடை உரிமம் ரத்து செய்யப்படும். அபராதமும் விதிக்கப்படும். இனி இது போன்ற ஆய்வுகள் மதுரை நகரில் அடிக்கடி மேற் கொள்ளப்படும் என தெரிவித்தனர்

    • கடுமையான பனிப்பொழிவால் பூக்கள் உற்பத்தி மிக குறைந்துள்ளது.
    • கடந்த சில நாட்களுக்கு முன்பு மல்லிகைப்பூ ரூ.2 ஆயிரத்துக்கு விற்பனையானது.

    ஆரல்வாய்மொழி :

    குமரி மாவட்டத்தில் புகழ்பெற்ற பூச்சந்தை தோவாளையில் உள்ளது. ஆரல்வாய்மொழி, ஆவரைகுளம், மாடநாடநாடார் குடியிருப்பு, புதியம்புத்தூர், ராதாபுரம், வடக்கன்குளம், காவல்கிணறு ஆகிய பகுதியிலிருந்து பிச்சிப்பூ.

    சங்கரன்கோவில், ராஜபாளையம்,மதுரை மானாமதுரை, திண்டுக்கல், கொடைரோடு, வத்தலகுண்டு ஆகிய ஊர்களில் இருந்து மல்லிகை பூ. பெங்களூர், ஓசூர், ராயக்கோட்டை ஆகிய ஊர்களில் இருந்து மஞ்சள் கிரேந்தி பட்டரோஸ். திருக்கண்ணங்குடி அம்பாசமுத்திரம், தென்காசி, புளியங்குடி, புளியரை ஆகிய ஊர்களில் இருந்து பச்சை துளசி. தோவாளை, செண்பகராமன் புதூர், ராஜாவூர், மருங்கூர், கோழிக்கோடு பொத்தை ஆகிய ஊர்களில் இருந்து சம்பங்கி, அரளி, கோழிக்கொண்டை, அருகம்புல், கனகாம்பரம், தாமரை. சேலத்தில் இருந்து அரளிப்பூ பூச்சந்தைக்கு வந்து பின்னர் மாநிலம், மாவட்டம் முழுவதும், கேரளாவுக்கும் விற்பனையாகிறது.

    கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையினாலும் கடுமையான பனிப்பொழிவால் பூக்கள் உற்பத்தி மிக குறைந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு மல்லிகைப்பூ ரூ.2 ஆயிரத்துக்கு விற்பனையானது.

    இந்நிலையில் இன்று திருக்கார்த்திகையை முன்னிட்டு தோவாளை பூச்சந்தையில் ஒரு கிலோ பிச்சிப்பூ ரூ. 1500, மல்லிகைப்பூ ரூ.1500, அரளி ரூ.200 சேலம்அரளி ரூ. 200, சம்பங்கி ரூ.100, ரோஜா பாக்கெட் ரூ.30, பட்டர் ரோஸ் ரூ. 150, கனகாம்பரம் ரூ.500, துளசி ரூ.30, கொழுந்து ரூ.150, மஞ்சள் கிரோந்தி ரூ.90, சிவப்பு கிரோந்தி ரூ.100-க்கும் விற்பனையானது. மேலும் மற்ற பூக்களும் விலை உயர்ந்து காணப்படுகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

    • புடலங்காய், தக்காளி விலையும் உயர்ந்தது
    • தற்போது ரூ.3500 முதல் ரூ.4000-க்கு வரை விற்பனை ஆகிறது

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் அப்டா மார்க்கெட் கனகமூலம் சந்தைக்கு குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், நெல்லை மற்றும் மேட்டுப்பாளையம், ஓசூர், திண்டுக்கல் பகுதிகளிலிருந்தும் காய்கறிகள் விற்பனைக்காக கொண்டுவரப்படுகிறது.

    காய்கறிகளின் வரத்து குறைந்ததையடுத்து கடந்த சில நாட்களாகவே காய்கறிகளின் விலை அதிகரித்துள்ளது. குறிப்பாக வெள்ளரிக்காய், புடலங்காயின் விலை இரு மடங்கு உயர்ந்துள்ளது. குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், நெல்லை மாவட்டத்தில் இருந்தும் வெள்ளரிக்காய் விற்பனைக்கு கொண்டுவரப்படுகிறது. தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக வெள்ளரிக்காய் உற்பத்தி குறைந்துள்ளது.

    வெள்ளரிக்காயின் வரத்தை குறைய தொடங்கியதையடுத்து விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு கிலோ வெள்ளரிக்காய் ரூ.20-க்கு விற்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் படிப்படியாக உயர்ந்து கடந்த வாரம் கிலோ ரூ.50 ஆக விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் தற்போது ஒரு கிலோ வெள்ளரிக்காய் ரூ.100-க்கு விற்பனையா னது.

    வெள்ளரிக்காய் விலை புதிய உச்சத்தை தொட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். அப்டா மார்க்கெட்டில் ஒரு மூடை வெள்ளாரிக்காய் சில நாட்களுக்கு முன்பு ரூ.300 முதல் ரூ.400-க்கு விற்கப்பட்டு வந்த நிலையில் தற்போது ரூ.3500 முதல் ரூ.4000-க்கு வரை விற்பனை ஆகிறது. இதேபோல் புடலங்காய் விலையும் இரு மடங்கு உயர்ந்துள்ளது.

    மழை காரணமாக புடலை செடிகள் சேதமடைந்ததையடுத்து காய்கறிகளின் வரத்து குறைவாகவே இருந்து வருகிறது. புடலங்காய் ஒரு கிலோ ரூ.35-க்கு விற்கப்பட்டு வந்த நிலையில் தற்பொழுது ரூ.70 ஆக உயர்ந்துள்ளது. இதேபோல் தக்காளியின் விலையும் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது.

    ஒரு கிலோ தக்காளி கடந்த வாரம் ரூ.25-க்கு விற்கப்பட்டு வந்த நிலையில் தற்போது ரூ.50-க்கு விற்பனையானது. இதேபோல் சிறிய வெங்காயத்தின் விலையும் உயர்ந்துள்ளது. சிறிய வெங்காயத்தின் வரத்து குறைந்துள்ளதையடுத்து விலை உயர்ந்து வருகிறது. ஒரு கிலோ சிறிய வெங்காயம் ரூ.120-க்கு விற்பனை செய்யப்பட்டது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் கிலோ ரூ.40 உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர். பீன்ஸ், சேனை விலையும் அதிகரித்து காணப்படுகிறது.

    நாகர்கோவில் மார்க்கெட்டில் விற்பனையான காய்கறி களின் விலை விவரம் வருமாறு:-

    வெள்ளரிக்காய் ரூ.100, புடலங்காய் ரூ.70, இளவங்காய் ரூ.40, சேனை ரூ.85, தக்காளி ரூ.55, பல்லாரி ரூ.60, பீன்ஸ் ரூ.120, கேரட் ரூ.60, சிறிய வெங்காயம் ரூ.120, கத்தரிக்காய் ரூ.50, வழுதலங்காய் ரூ.60, இஞ்சி ரூ.160 பூடு ரூ.300, மிளகாய் ரூ.70, பூசணிக்காய் ரூ.30, முட்டைக்கோஸ் ரூ.30, வெண்டைக்காய் ரூ.20-க்கு விற்பனையானது.

    இதுகுறித்து வியாபாரி ஒருவர் கூறுகையில், தற்பொழுது காய்கறிகளின் வரத்து குறைவாக உள்ளதால் விலை உயர்ந்துள்ளது. தற்போது கார்த்திகை மாதம் என்பதால் பெரும்பாலான பொதுமக்கள் சைவ உணவே சாப்பிட்டு வருகிறார்கள். இதனால் காய்கறிகள் அதிகம் தேவைப்படுகிறது. காய்கறிகள் தேவை அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் வரத்து குறைவாக உள்ளதால் வழக்கத்தைவிட விலை உயர்ந்து காணப்படுகிறது. தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் காய்கறிகளின் விலை மேலும் உயர வாய்ப்புள்ளது என்றார்.

    • அண்ணாமலையார் கோவிலில் இருந்து பார்பதற்காக கோவில் இணைய தளத்தில் முன்பதிவு வசதி செய்யப்பட்டு இருந்தது.
    • 10.2 மணிக்கு முடிந்தது. 2 நிமிடத்தில் ஆயிரத்து 700 அனுமதி சீட்டுகளும் விற்று தீர்ந்தன.

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் நிர்வாகம் சார்பில் பரணி தீபம் மற்றும் மகா தீபம் ஆகியவற்றை அண்ணாமலையார் கோவிலில் இருந்து பார்பதற்காக கோவில் இணைய தளத்தில் முன்பதிவு வசதி செய்யப்பட்டு இருந்தது.

    நாளை அதிகாலை ஏற்றப்படும் பரணி தீப தரிசனம் காண 500 ரூபாய் விலையில் 500 அனுமதி சீட்டுகளும், நாளை மாலை அண்ணாமலை உச்சியில் ஏற்றப்படும் மகா தீப தரிசனம் காண 600 ரூபாய் விலையில் 100 அனுமதி சீட்டுகளும், 500 ரூபாய் விலையில் ஆயிரம் அனுமதி சீட்டுகளும் ஆன்லைனில் வெளியிடப்பட்டது.

    இதற்கான முன்பதிவு நேற்று காலை 10 மணிக்கு தொடங்கியது. 10.2 மணிக்கு முடிந்தது. 2 நிமிடத்தில் ஆயிரத்து 700 அனுமதி சீட்டுகளும் விற்று தீர்ந்தன.

    இந்த இணையதளத்தில் அனுமதி சீட்டு பெற முயன்ற பெரும்பாலான பக்தர்கள் ஒரு அனுமதி சீட்டினை மட்டுமே பெறமுடிந்தது. இதனால் பக்தர்கள் அதிர்ச்சியடைந்தனர். 

    ×