search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருக்கார்த்திகை"

    • முருகப்பெருமான் விரும்பி அமர்ந்த மலை பழனி மலை.
    • அறுபடை வீடுகளுள் 3-ம் படைவீடாக விளங்குகிறது.

    கலியுக கடவுள் என பக்தர்களால் அழைக்கப்படும் முருகப்பெருமான் விரும்பி அமர்ந்த மலை பழனி மலை ஆகும். இது அறுபடை வீடுகளுள் 3-ம் படைவீடாக விளங்குகிறது. இத்திருத்தலத்தில் திருக்கார்த்திகை, பங்குனிஉத்திரம், தைப்பூசம், சூரசம்ஹாரம் உள்ளிட்ட திருவிழாக்கள் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    இதில் தைப்பூச திருவிழாவுக்கு மற்ற திருவிழாக்களை காட்டிலும் அதிக அளவில் பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து பழனியாண்டவனை தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர். பொதுவாக தைப்பூச திருவிழா வெற்றி விழா எனவும் அழைக்கப்படுகிறது.

    "தை பிறந்தால் வழி பிறக்கும்" என்ற வழக்காடு சொல்லுக்கு ஏற்ப இந்த தைப்பூச நன்னாளில் தங்கள் வேண்டுதல்களை நிறைவேறும் வகையில் வேண்டிக் கொள்ளும் பக்தர்களின் வாழ்வில் ஒளி ஏற்றப்படும் திருநாளாக தைப்பூசம் அமைகிறது.

    தை மாதத்தில் பூச நட்சத்திரத்தோடு நிறைந்த முழுமதி கூடும் மங்கல நாள் அன்று முருகப்பெருமானை வேண்டி கொண்டாடப்படும் வெற்றித் திருவிழாவாக தைப்பூசம் திகழ்கிறது. சூரர்களை அழித்து உலக உயிரினங்களை துன்பத்தில் இருந்து மீட்ட தினமே தை மாதத்தில் வரும் பூச நட்சத்திர நாளாகும்.

    இதனைப் போற்றும் விதமாக தைப்பூச திருவிழா ஆண்டுதோறும் முருகன் கோவில்களில் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது. பழனியில், உபகோவிலான பெரியநாயகி அம்மன் கோவிலில் 10 நாட்கள் தைப்பூச திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படும். தைப்பூச நாளில் பக்தர்கள் முருகப்பெருமானை மனமுருக வேண்டினால் பூரண அருள் பெறலாம்.

    • திருகார்த்திகை என்றாலே இரண்டு விசயம் கண்டிப்பாக இருக்கும்.
    • பனை ஓலையில் செய்த கொழுக்கட்டை.

    தென் தமிழகத்தில் திருகார்த்திகை என்றாலே இரண்டு விசயம் கண்டிப்பாக இருக்கும். முதலாவது கொழுக்கட்டை அதுவும் பனை ஓலையில் செய்த கொழுக்கட்டை. இரண்டாவது வீட்டை சுற்றி விளக்கு வைப்பது. கொஞ்சம் விடலை பசங்க இருந்தா மூன்றாவதாக சொக்க பனை.

    திருகார்த்திகை அன்று காலையில் எழுந்ததும் நமக்கு கொடுக்கிற முக்கியமான வேலையே எங்கேயாவது இரண்டு சருவை பனை ஓலை வாங்கிட்டு வந்துரு என்பது தான். ஒரு சருவை ஓலை என்பது ஒரு பனை மட்டையில் உள்ள ஓலையில் பாதிக்கும் கொஞ்சம் குறைவு. இரண்டு சருவை ஓலை என்றால் கிட்ட தட்ட முக்கால்வாசி ஓலை. ஆனால் ஒரே மட்டையில் இரண்டு சருவை ஓலையை வெட்டமாட்டார்கள். முத்தின ஓலையில் கொழுக்கட்டை செய்தால் கொழுக்கட்டையில் இலைவாசம் அதிகமாக இருக்கும். கொஞ்சம் குருத்தோலை அல்லது சமீபத்தில் வெளிவந்த ஓலை தான் வெட்ட வேண்டும். அப்படி பார்த்தால் அதிகபட்சமாம 4 ஓலை தான் தேரும். அதற்கு மேல் வெட்டினால் அது மரத்தை மொட்டை அடிப்பதற்கு சமம்.

     பச்சரிசியை நனையவச்சி இடிச்சி பெருங்கண் சல்லடையாள் (மாவு பரபரன்னு இருக்கும்) சலிச்சி வச்சிக்கனும். கிராமங்களில் கொழுக்கட்டை முன்றுவித சுவைகளில் செய்வார்கள். சர்க்கரையில் (அச்சுவெல்லம்) செய்த கொழுக்கட்டை கொஞ்சம் வெளீரிய மஞ்சள் நிறத்தில் இருக்கும். சீனியில் செய்த கொழுக்கட்டை வெண்மையாக இருக்கும். கருப்பட்டியில் செய்தது கொஞ்சம் அடர் பிரவுன் நிறத்தில் இருக்கும். மூன்றின் சுவையும் வெவ்வேறானவை.

    இதற்கு மேலும் சுவைக்காக தேங்காய்பூ, சிறுபயத்தம் பருப்பு, ஏலக்காய் எல்லாம் சேர்துக்கலாம். இடித்தமாவோடு தேங்காய்ப்பூ, பயத்தம் பருப்பு, ஏலக்காய் சேர்த்து அதோடு சீனி, சர்க்கரை, கருப்பட்டியை தனித்தனியாக விரசி (கலந்து) கெட்டியா வச்சிப்பாங்க. கொஞ்சம் மாவு கலவையை எடுத்து நறுக்கி வைத்த பனை ஏட்டில் சரியாக மத்தியில் வைச்சி, இன்னொரு இலையால் மூடனும். மூடினதும் நூல் போல் கிழித்துவைத்திருந்த பனை இலக்கை (ஒலை) வைத்து கட்டி தனியாக வைக்கனும். இதுல கொஞ்சம் டெக்னிக்கல் விசயம் எல்லாம் இருக்கு.

    மாவுக்கலவையில் நிறைய நீர் விடக்கூடாது. அடுத்து ஓலையில் மாவும் நிறைய வைக்க கூடாது. கட்டிய ஓலையை நீராவியில் போட்டு வேக வைக்கும் பொழுது அதனுளிருக்கும் சர்க்கரை, சீனி, கருப்பட்டி மூன்றும் உருக ஆரம்பிக்கும் அப்பொழுது மாவோடு சேர்ந்து இரண்டு பக்கமும் சிறிது தூரம் ஓடும். அதிகமான மாவும், அதிகமான தண்ணீரும் மாவை ஓலையை விட்டு வெளியே தள்ளிவிடும். மாவு வைத்து கொடுக்கும் வேலைக்கு என்னைய கூப்பிட மாட்டாங்க. நமக்கு கையும் வாயும் சும்மா இருக்காது. வச்சிமுடிக்கிறதுக்குள்ள கால்வாசி மாவு காணாம போய்டும். எனக்கு கொடுக்குற டிபார்ட்மெண்ட், மாவு ஓலைய இன்னொரு ஒலைய வச்சி மூடி கட்டு போடறது தான். எல்லா ஓலையையும் வச்சி கட்டி முடிச்சதும் மீதி ஏதாவது மாவு இருந்தா அதில் மா(வு)விளக்கு வைப்பார்கள்.

    இரண்டடி உயரம் உள்ள ஒரு பானைய எடுத்து அதுக்குள்ள வைக்கிற கொழுக்கட்டை ஓலை கீழே இறங்காம இருக்க கால்வாசி பானையில சிறிய கம்பு வைத்து ஊடுகட்டி, அதுக்குள்ள நறுக்கி உபயோகமில்லாமல் போன ஓலைய போட்டு பரப்பி, கொஞ்சம் தண்ணீர் ஊற்றி, கொழுக்கட்டை ஓலைய அடுக்கி வச்சி துணிய வச்சி வண்டுகட்டி அதுக்கு மேல ஒரு மூடிய போட்டு அடுப்பில் வச்சிட்டா, நீராவியிலே வெந்துடும். வெந்ததும் ஓலைய பிரிச்சி கொழுக்கட்டைய உடைஞ்சிடாம தனியா எடுத்து ஒரு தட்டில் வச்சி முதல்ல சாமிக்கும், பிறகு முன்னோருக்கும் படச்சிட்டு, ஆசாமிகிட்ட நீட்டுனா உடனே காலியாயிடும். பொதுவா கொழுக்கட்டைய அடுத்தநாள் சாப்பிட்டா சுவை அதிகமா இருக்கும்.

    இந்த வேலை நடந்துக்கிட்டு இருக்குறப்பவே, இன்னொருபக்கமாக வீட்டை அலங்காரம் செய்யும் வேலையும் நடக்கும். வேற ஒன்னும் இல்ல வீட்டுக்குள்ள அங்க அங்க மாக்கோலம் போட்டு வைப்பாங்க. இந்த மாக்கோலம் போடுறது கூட ஒரு கலை தான்.

    பச்சரிசிய ஊறவச்சி அம்மியில மை போல அரைக்கனும் கூடவே கொஞ்சம் மஞ்சளும், நிறத்திற்காக. மை போல அரச்ச அரிசியில நீர் சேர்த்து கொஞ்சம் கட்டியாவும் கட்டியா இல்லாத மாதிரியும் கலக்கி வச்சிக்குவாங்க.

    சிறிய வெள்ளை துணியை எடுத்து இந்த கலவையில முக்கி பெருவிரலுக்கும் ஆள்காட்டி விரலுக்கும் நடுவில் பிடித்து கோலம் போடனும். இந்த கோலம் ஒரு ரெண்டு வாரத்துக்கும் மேலே அழியாம இருக்கும். அதுக்கு அப்புறமும் கோலம் போட்ட தடம் அந்த இடத்தில் இருக்கும்.

    அடுத்து பப்பாளி மரத்தில் இருந்து நல்ல இளம் பிச்சி இலையா ஒரு இலைய பறிச்சி இலையும் காம்பும் சேரும் இடத்துல சின்ன அளவு வட்டமா வெட்டிக்கிட்டு, நரம்பு தவிர உள்ள இருக்குற பச்சை இலையை வெட்டி எடுத்துக்கணும். இது எதுக்குன்னு கேக்கறியலா, இத அப்படியே அந்த கலைவையில தொட்டு கதவில் ஒரு அமுத்து அமுத்தி எடுத்தா கதவில் ஒரு நட்சத்திரம் இருக்குற மாதிரி தெரியும். அதுக்கு நடுவுல ஒரு குங்கும பொட்டு. இப்படி கதவுல நல்லா இடம் விட்டு வச்சா பார்க்க அழகா இருக்கும்.

    அடுத்தது சொக்கப்பனை. நல்லா இருட்டுனதும் ஊருல இருக்குற கோவிலுக்கு முன்னாடி சொக்க பனை ஏத்தனும். ஒரு 8 அடி நீளமான கம்பு அல்லது தென்னம்மட்டைய ஒலை இல்லாம எடுத்துக்கனும். காய்ந்த பனை ஓலைய கொய்து (சின்ன சின்னதா நீளவாக்கில்) வச்சிக்கனும். இப்போ பனை ஒலையை தென்னமட்டையில வச்சி கட்டணும். முதல் கட்டு உச்சியில வச்சி கட்டணும். அடுத்த கெட்டு அதுக்கு அடியில வச்சி கெட்டனும்.

    கிட்ட தட்ட பூ இதழ் இருக்குமே அதுமாதிரி ஒரு ஒரு வட்டமா வச்சி கீழ ஒரு 2 அடி இடம் விட்டுட்டு கட்டணும். அப்படி கட்டும் போது நடு நடுவுல சில்லாட்டைய (பனை மட்டையின் கீழ் வலை போன்று மரத்தை கவ்வி பிடிக்க இருக்கும் ஒரு அமைப்பு) வச்சிக்கனும் கூடவே கொஞ்சம் உப்பு. இதை ரொம்ப இருக்கி கெட்ட கூடாது. கட்டுன மாதிரியும் இருக்கனும், கட்டாத மாதிரியும் இருக்கனும்.

    7 மணிக்கு கோவில் பூசை முடிஞ்சதும் பூசாரி ஒரு கற்பூரத்தை கொளுத்தி நீட்டுவார், அதுல இன்னொரு ஓலைய (கைப்பந்தம்) நீட்டி தீ வாங்கி அப்படியே நட்டு வச்சிருக்க சொக்க பனையின் மேல் பாகத்தில் (உச்சியில) நெருப்ப வச்சிடனும். மெதுவா எரிஞ்சிகிட்டே வரும். நாம் உப்பு போட்டு வச்சிருப்போமே அங்க வந்ததும் இந்த உப்பு எல்லாம் வெடிக்க ஆரம்பிக்கும் அது வெடிக்கும் போது இதுவரைக்கும் எரிஞ்சி கனகனன்னு இருக்கும் ஒலை எல்லாம் நெருப்பு பொரியா பறக்கும். அடுத்து சில்லாட்டை வர்ர இடமும் அப்படி நெருப்பு பொரி பறக்கும்.

    கும்மிருட்டுள சொக்கபனை மட்டும் எரியும் அப்போ அப்போ நெருப்பு பொரி (புஸ்வானம்) பறக்கும். பார்க்கறதுக்கு ரொம்ப சந்தோசமா இருக்கும்.

    எங்க தாத்தா-பூட்டன் காலத்துல பாதி பனைமரத்த வெட்டி வச்சி எரிப்பாங்களாம், ராத்திரி பூரா நின்னு எரியுமாம். இப்படி பனைய வெட்டி எரிச்சதால இதற்கு பெயர் சொக்கபனை. சொக்கன் பனை என்பது மருவி சொக்கப்பனை ஆகியிருக்கவும் வாய்ப்பிருக்கு. இப்போ ஒரு பனை இலைக்கை (ஓலையில் ஒரு இலை) கூட கொழுத்த முடியாது. ஏன்னா இப்போ பனைமரமே இல்லப்பா!

    அடுத்தநாள் காலையிலே கொழுக்கட்டை பரிமாற்றங்கள் வேறு நடக்கும். சுற்றத்தார் வீட்டுக்கு கொடுக்குறதும் அவங்க நமக்கு கொடுக்கறதும், ஏன் இவங்க வீட்டுல கொலுக்கட்ட இவ்வளவு சின்னதா இருக்கு, ஏன் இனிப்பே இல்லை, ஏன் இவ்ளோ இனிப்பு போட்டுருக்காங்க, இந்த கொழுக்கட்டைய கடிக்க முடியலேயே பல்லு போய்டும் போல இருக்கு என்று எல்லார் வீட்டிலும் அங்கலாச்சிக்குவாங்க. அது ஒரு தனிக்கதை.

    • கடுமையான பனிப்பொழிவால் பூக்கள் உற்பத்தி மிக குறைந்துள்ளது.
    • கடந்த சில நாட்களுக்கு முன்பு மல்லிகைப்பூ ரூ.2 ஆயிரத்துக்கு விற்பனையானது.

    ஆரல்வாய்மொழி :

    குமரி மாவட்டத்தில் புகழ்பெற்ற பூச்சந்தை தோவாளையில் உள்ளது. ஆரல்வாய்மொழி, ஆவரைகுளம், மாடநாடநாடார் குடியிருப்பு, புதியம்புத்தூர், ராதாபுரம், வடக்கன்குளம், காவல்கிணறு ஆகிய பகுதியிலிருந்து பிச்சிப்பூ.

    சங்கரன்கோவில், ராஜபாளையம்,மதுரை மானாமதுரை, திண்டுக்கல், கொடைரோடு, வத்தலகுண்டு ஆகிய ஊர்களில் இருந்து மல்லிகை பூ. பெங்களூர், ஓசூர், ராயக்கோட்டை ஆகிய ஊர்களில் இருந்து மஞ்சள் கிரேந்தி பட்டரோஸ். திருக்கண்ணங்குடி அம்பாசமுத்திரம், தென்காசி, புளியங்குடி, புளியரை ஆகிய ஊர்களில் இருந்து பச்சை துளசி. தோவாளை, செண்பகராமன் புதூர், ராஜாவூர், மருங்கூர், கோழிக்கோடு பொத்தை ஆகிய ஊர்களில் இருந்து சம்பங்கி, அரளி, கோழிக்கொண்டை, அருகம்புல், கனகாம்பரம், தாமரை. சேலத்தில் இருந்து அரளிப்பூ பூச்சந்தைக்கு வந்து பின்னர் மாநிலம், மாவட்டம் முழுவதும், கேரளாவுக்கும் விற்பனையாகிறது.

    கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையினாலும் கடுமையான பனிப்பொழிவால் பூக்கள் உற்பத்தி மிக குறைந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு மல்லிகைப்பூ ரூ.2 ஆயிரத்துக்கு விற்பனையானது.

    இந்நிலையில் இன்று திருக்கார்த்திகையை முன்னிட்டு தோவாளை பூச்சந்தையில் ஒரு கிலோ பிச்சிப்பூ ரூ. 1500, மல்லிகைப்பூ ரூ.1500, அரளி ரூ.200 சேலம்அரளி ரூ. 200, சம்பங்கி ரூ.100, ரோஜா பாக்கெட் ரூ.30, பட்டர் ரோஸ் ரூ. 150, கனகாம்பரம் ரூ.500, துளசி ரூ.30, கொழுந்து ரூ.150, மஞ்சள் கிரோந்தி ரூ.90, சிவப்பு கிரோந்தி ரூ.100-க்கும் விற்பனையானது. மேலும் மற்ற பூக்களும் விலை உயர்ந்து காணப்படுகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

    • நாளை மறுநாள் சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி நடக்கிறது
    • 9 மணிக்கு கொடி இறக்குதல் மற்றும் மவுன பலி நிகழ்ச்சியும், மாபெரும் இன்னிசை கச்சேரி நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

    என். ஜி. ஓ. காலனி :

    குமரி மாவட்டம் பறக்கை அருகே உள்ள புல்லுவிளை யில் பெருமாள் சாமி கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலுக்கு அந்தப் பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர்.

    இந்தக் கோவிலில் திருக்கார்த்திகை திருவிழா கடந்த 19-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் காலை 6:30 மணிக்கு சிறப்பு பூஜையும், நண்பகல் 12 மணிக்கு அலங்கார தீபாராதனையும், மாலை 5 மணிக்கு பஜனையும், இரவு 7 மணிக்கு சிறப்பு பூஜையும், 7.30 மணிக்கு சாமி, வாகனத்தில் கோவிலை சுற்றி வலம் வருதல் ஆகியவையும் நடக்கிறது.

    விழாவின் 6-ம் நாளான நேற்று மாலை 5 மணிக்கு முகிலன்விளை ஸ்ரீ பிரம்ம சக்தி அம்மன் பஜனை குழுவினரின் பக்தி இன்னிசை பாடல்கள் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. 7-ம் நாளான இன்று (சனிக்கிழமை) காலை 6.30 மணிக்கு கடல் நீராட செல்லுதல் நிகழ்ச்சியும், 8 மணிக்கு பெருமாள் சுவாமிக்கு அபிஷேகம் மற்றும் 21 வகை காய்கறிகள் படைத்து பூஜையும், பகல் 12 மணிக்கு சிறப்பு பூஜையும், பகல் 1 மணிக்கு பிரசாதம் வழங்குதலும் நடைபெற்றது. ெதாடர்ந்து மாலை 6 மணிக்கு சிறப்பு பூஜையும், 7 மணிக்கு பெருமாள் சுவாமி உற்சவராக ஆஞ்சநேயர் வாகனத்தில் திருக்கோவிலை சுற்றி வலம் வருதல் நிகழ்ச்சியும், 7.30 மணிக்கு பிரசாதம் வழங்குதலும், 8:00 மணிக்கு சமயவகுப்பு மாணவ, மாணவி யரின் கலை நிகழ்ச்சி களும் நடை பெறுகிறது.

    விழாவின் 8-ம் நாளான நாளை காலை 6.30 மணிக்கு சிறப்பு பூஜையும், 7 மணிக்கு பக்தர்கள் சிங்காரி மேளதா ளத்துடன் சொக்கப்பனை வெட்ட செல்லுதல் நிகழ்ச்சியும், பகல் 11 மணிக்கு சொக்கப்பனை நாட்டுதல் நிகழ்ச்சியும், 12 மணிக்கு திருக்கார்த்திகை சிறப்பு பூஜையும், 1 மணிக்கு மகா அன்னதானமும், மாலை 6 மணிக்கு திருக்கார்த்திகை தீபம் ஏற்றுதல் போட்டியும், இரவு 8 மணிக்கு ராஜமேளமும், 9 மணிக்கு சாஸ்தா கதை வில்லிசையும், 11 மணிக்கு சாஸ்தாவுக்கு பூஜையும், 11.30 மணிக்கு பெருமாள் சுவாமி கதை வில்லிசையும், நள்ளிரவு 1 மணிக்கு பெருமாள் சுவாமிக்கு அலங்கார தீபாரா தனையும் நடைபெறுகிறது.

    9-ம் திருநாளான நாளை மறுநாள் (27-ந் தேதி) அதிகாலை 4 மணிக்கு பெருமாள் சுவாமி உற்சவராக ஆஞ்சநேயர் வாகனத்தில் பக்தர்கள் புடை சூழ மேளதாளத்துடன் வீதி உலா வருதல் நிகழ்ச்சியும், 4.30 மணிக்கு சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சியும், 5:30 மணிக்கு வான வேடிக்கையும், 6.30 மணிக்கு சிறப்பு பூஜையும், 8 மணிக்கு ராஜ மேளமும், 9 மணிக்கு வில்லிசையும், பகல் 1 மணிக்கு பெருமாள் சுவாமி மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு அலங்கார தீபாராதணைகளும், மாலை 3 மணிக்கு வண்ண கோலப் போட்டியும், பிற்பகல் 3:30 மணிக்கு பெருமாள் சுவாமி உற்சவரராக சிங்காரி மேளதாளத்துடன் பக்தர்கள் புடை சூழ வீதி உலா வருதல் நிகழ்ச்சியும், இரவு 7 மணிக்கு பெருமாள் சுவாமி மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு அலங்கார தீபாராதனையும், 8:30 மணிக்கு சோமாண்டி கதை வில்லிசையும் நடைபெறு கிறது.

    விழாவின் 10-ம் நாளான 28-ம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 7 மணிக்கு வில்லிசையும், நண்பகல் 12.30 மணிக்கு அலங்கார தீபாராதனையும், இரவு 7 மணிக்கு பெருமாள் சுவாமி உற்சவரராக கருடர் வாகனத்தில் திருக்கோவிலை சுற்றி வலம் வருதல் நிகழ்ச்சியும், 7:30 மணிக்கு சிறப்பு பூஜையும், 8.30 மணிக்கு பிரசாதம் வழங்குதலும், 9 மணிக்கு கொடி இறக்குதல் மற்றும் மவுன பலி நிகழ்ச்சியும், அதனைத் தொடர்ந்து மாபெரும் இன்னிசை கச்சேரி நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

    திருக்கார்த்திகை திரு விழாவிற்கான ஏற்பாடுகளை ஊர் தலைவர் நாகராஜன், துணைத் தலைவர் சுரேஷ், செயலாளர் அய்யப்பன், துணைச் செயலாளர் ஸ்ரீதரன், பொருளாளர் பாஸ்கர் மற்றும் ஊர் நிர்வாகிகள் ஊர் பொதுமக்கள் இணைந்து செய்து வருகின்றனர்.

    • கார்த்திகை மாதம் என்பதே ஒரு சிறப்பு மிக்க மாதம்.
    • திருவண்ணாமலையில் ஏற்றக்கூடிய தீபம் மிக சிறப்பு மிக்க தீபம்.

    கார்த்திகை தீபம் அது சாதாரண தீபமல்ல.

    ஏனென்றால் திருவண்ணாமலையில் ஏற்றக்கூடிய தீபம் மிக சிறப்பு மிக்க தீபம்.

    கார்த்திகை மாதத்தில் கார்த்திகை நட்சத்திரத்தில் ஏற்றக்கூடிய தீபம்.

    கார்த்திகை விளக்கீடு என்பது கார்த்திகை மாத பௌர்ணமி நாளும் கார்த்திகை நட்சத்திரமும் சேர்ந்த

    திருக்கார்த்திகை நாளில் தமிழர்கள் தமது இல்லங்களிலும் கோவில்களில் பிரகாசமான

    தீபங்களை ஏற்றி மகிழ்ச்சியாகக் கொண்டாடும் ஒரு தீபத் திருநாள் ஆகும்.

    கார்த்திகை மாதம் என்பதே ஒரு சிறப்பு மிக்க மாதம்.

    ஏனென்றால் இந்தக் கார்த்திகை மாதத்தில்தான் நம்முடைய உடம்பில் உள்ள நாடி நரம்புகளெல்லாம்

    சம ஓட்டத்தில் இருக்கும் என்று சொல்வார்கள்.

    அப்படி நாடி நரம்புகள் சம ஓட்டத்தில் இருக்கும் போது தியானம் செய்யாதவர்களுக்கும் ஞானம் சித்தியாகும்.

    அப்பொழுது இறைவன் ஒளிப்பிழம்பாக வெளிப்படுகிறான்.

    இந்தக் கார்த்திகை மாதத்தில்தான் அண்ணாமலையார் எல்லாம் வல்ல ஆவுடையார் சிவனே ஒளிப்பிழம்பாக வெளிப்படுவதாக ஐதீகம்.

    • அந்நிலையில், சிவபெருமான் சோதிப் பிழம்பாகத் தோன்றினார்.
    • இருவரும் அடிமுடி தேடிக் காணமுடியாமல் சிவபெருமானே முழுமுதற் கடவுள் என்று ஏற்றுக்கொண்டனர்.

    படைத்தல் தொழிலை செய்யும் பிரம்மனும் காத்தல் தொழிலை செய்யும் விஷ்ணுவும்

    நானே பெரியவன் என்று வாதாடிப் போரிட்டனர்.

    அந்நிலையில், சிவபெருமான் சோதிப் பிழம்பாகத் தோன்றினார்.

    அடியையும் முடியையும் தேடும்படி அசரீரி கூறியது.

    இருவரும் அடிமுடி தேடிக் காணமுடியாமல் சிவபெருமானே முழுமுதற் கடவுள் என்று ஏற்றுக்கொண்டனர்.

    அவர்கள் இருவரும் தாம் கண்ட சோதியை எல்லோரும் காணும்படி காட்டியருள வேண்டும் என்று

    விண்ணப்பிக்க அவர் திருக்கார்த்திகை நட்சத்திரத்தன்று காட்டியருளினார்.

    இந்தத் தத்துவத்தை விளக்குவதே கார்த்திகை விளக்கீடு ஆகும்.

    • கோவில்களில் திருகார்த்திகை அன்று காலை 4 மணிக்கு பரணி தீபம் ஏற்றப்படும்.
    • வாசலில் 2 தீபமும், பூஜை அறையில் 5 தீபமும் ஏற்ற வேண்டும்.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத் திருவிழாவில் நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4 மணிக்கு பரணி தீபம் ஏற்றப்படுகிறது.

    மாலை 6 மணிக்கு அண்ணாமலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படுகிறது.அதிகாலையில் பரணி தீபம் அண்ணாமலையார் கருவறையில் ஏற்றப்பட்டு, பின்னர் அர்த்த மண்டபத்தில் 5 தீபங்களாக இவை காட்டப்படும்.

    கார்த்திகை மாத பரணி நட்சத்திரத்தில் இந்த தீபம் காட்டப்படுவதால் `பரணி தீபம்' என்றுபெயர் பெற்றது.

    அருணாசலேஸ்வரர் கோவிலில் பரணி தீப தரிசனத்திற்காக 2500 முதல் 3000 பக்தர்கள் வரை கோவிலுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.

    நாளை சனிக்கிழமை நள்ளிரவு 12 மணி முதல் தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். இதற்கான ஏற்பாடுகள் கோவிலில் செய்யப்பட்டுள்ளது.

    திருக்கார்த்திகைக்கு முந்திய நாளான பரணி நட்சத்திரத்தன்று இல்லம் எங்கும் மாலை விளக்கேற்றி, இறைவன் சன்னிதியிலும் விளக்கேற்றி வழிபட வேண்டும்.

    கோவில்களில் திருகார்த்திகை அன்று காலை 4 மணியளவில், பரணி தீபம் ஏற்றப்படும். வாசலில் 2 தீபமும், பூஜை அறையில் 5 தீபமும் ஏற்ற வேண்டும். இந்த 5 தீபங்களையும் வட்டமாக எல்லாம் திசையும் ஒளி படும் படி ஏற்ற வேண்டும்.

    இந்த விளக்கில் நெய் ஊற்றி ஏற்றினால் சிறப்பு. இந்த பரணி தீபத்தினை வீட்டில் நாம் ஏற்றினால் நம் முன்னோர்களின் ஆசிர்வாதம் கிடைக்கும். நாம் செல்லும் உலகங்களில் எம்னுடைய வதம் இன்றி துன்பம் இன்றி இருக்கலாம் என்பது ஐதீகம்.

    இந்த பரணி தீபத்தின் முக்கியமான சிறப்பு என்னவென்றால் பஞ்சபூதம் நமக்கு உறுதுணையாக இருக்கும் என்பதுதான். இந்த பரணி தீபம் 5 விளக்குகளைக்கொண்டு ஏற்றப்படுகிறது.

    அப்படி ஏற்றுவதினால் அகமும் புறமும் சிறப்பாக செயல்படும் மகிழ்வாக இருப்போம் என்பது ஐதீகம் மேலும் பஞ்சபூதங்களான நீர், நெருப்பு, காற்று உள்ளிட்ட அனைத்தும் அளவாக நமக்கு கிடைக்க வேண்டிதான் இந்த பரணி தீபம் ஏற்றப்படுவதாக சொல்லப்படுகிறது.

    நமது வீட்டு பூஜையறை யில் ஒரு முக தீபம் ஏற்றினால் மத்திம பலன் தரும். 2 முக தீபம் ஏற்றினால் குடும்பம் ஒற்றுமை தரும். 3 முக தீபம் ஏற்றினால் புத்திர சுகம் தரும். 4 முக தீபம் ஏற்றினால் பசு, பூமி சுகம் தரும். 5 முக தீபம் ஏற்றினால் செல்வம் பெருகும்.

    திருவண்ணாமலையில் நேற்று பஞ்சரத தேரோட்டம் நடந்தது. இதில் ஆயிரக்க ணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். நாளை மறுநாள் மகாதீபம் ஏற்றப்படுவதால் வெளியூர்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிந்து வருகின்றனர்.

    திருவண்ணாமலையில் 9 இடங்களில் தற்காலிக பஸ் நிலையம் அமைக்கப்ப ட்டுள்ளது. பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்ய ப்பட்டுள்ளன. 16 கிலோமீட்டர் தூரம் கொண்ட கிரிவல பாதையில் கூடுதலாக கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

    மேலும் 14 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தங்கும் விடுதி, ஆட்டோக்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    • கார்த்திகை மாதம் சிவாலயங்கள் தோறும் சிவனுக்கு சங்காபிஷேகம் நடத்தப்படும்.
    • சிவபெருமான் அக்னி பிழம்பாக காட்சி தந்து அருள்வதாக ஐதீகம்.

    சோமவார விரதம் மேற்கொள்ளும் அதேநாளில் சிவாலயங்கள் தோறும் சிவனுக்கு சங்காபிஷேகம் நடத்தப்படும். எனவே சோமவார விரதம் இருப்பவர்கள் அன்றைய தினம் கோவிலுக்கு சென்று சங்காபிஷேகத்தை பார்த்து சிவனை தரிசிக்க வேண்டும். கார்த்திகை மாதத்தில் பவுர்ணமி திதியுடன் கார்த்திகை நட்சத்திரம் கூடும் நேரம் `திருக்கார்த்திகை' திருநாளாக கொண்டாடப்படுகிறது.

    அன்றைய தினம் சிவபெருமான் அக்னி பிழம்பாக காட்சி தந்து அருள்வதாக ஐதீகம். இதன் காரணமாகவே ஆலயங்களிலும், வீடுகளிலும் தீபங்கள் ஏற்றி வழிபடுகிறோம்.

    இந்நாளில் சிவனின் உடல் அதிக வெப்பத்தை தாங்கும் விதமாக, அதற்கு முன்னதாக வரும் திங்கட்கிழமைகளில் (சோம வாரம்) சிவனுக்கு, சங்காபிஷேக பூஜை நடத்தி குளிர்விக்கப்படுகிறது. சங்காபிஷேகம் பார்த்தால் கஷ்டங்கள் விலகும்.

    இந்த அபிஷேகத்தால் உலகில் வெப்பம் தணிந்து குளிர்ச்சி ஏற்படும். தேவையான அளவுக்கு மழை பொழியும் என்பதும் சங்காபிஷேகத்தின் நோக்க மாகும். சங்கு செல்வத்தின் அம்சமாக பார்க்கப்படுகிறது. அதனால் செல்வ அபிவிருத்திக்காகவும் சங்காபிஷேகம் செய்வார்கள். அப்படி தரிசிப்பவர்களுக்கு லட்சுமி கடாட்சம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

    பல்வேறு சிறப்பம்சங்களை கொண்ட வலம்புரி சங்கில் பாலை நிரப்பி, இறை வனை நீராடினால் ஆயிரம் யாகங்கள் செய்த பலனை அடையலாம். அதில் கங்கை நீரை நிரப்பி அபிஷேகம் செய்தால், பிறவி பிணியை அறுக்கலாம் என்று பத்ம புராணம் கூறுகிறது.

    ஏழு பிறவிகளில் செய்த வினைகளில் இருந்து மீளலாம் என்று கந்த புராணமும் சொல்கிறது. இதன் காரணமாகவே சங்கை கொண்டு சங்காபிஷேகம் பெரிய பெரிய சிவாலயங்களில் நடத்தப்படுகிறது.

    கார்த்திகை சோம வார நாட்களில் 108 அல்லது 1008 என்ற எண்ணிக்கைகள் கொண்ட சங்குகளில் புனித நீரை நிரப்பி புஷ்பங்கள் வைப்பார்கள். ஒரு கும்பத்தில் சிவபெருமானை ஆவாகணம் செய்து வேத பாராயணங்கள் செய்து, பின்பு அந்த நீரைக் கொண்டு சிவபெருமானை அபிஷேகம் செய்வார்கள்.

    1008 சங்குகளை வைத்து அதற்குரிய தேவதைகளை ஆவாகணம் செய்து, மந்திரங்களை உச்சரித்து செய்யப்படும் சங்காபிஷேகத்திற்கு 'சகஸ்தர சங்காபிஷேகம்' என்று பெயர். 108 சங்குகளை கொண்டு அதற்குரிய தேவதைகளை ஆவாகணம் செய்து, மந்திரங்களை உச்சரித்து செய்யப்படும் சங்காபிஷேகத்திற்கு `அஷ்டோத்ர சங்காபிஷேகம்' என்று பெயர்.

    ஓம்கார சொரூபமான சங்கில் நாம் எந்த வேதா மூர்த்தத்திற்கு அபிஷேகம் செய்கிறோமோ, அந்த வேதா மூர்த்தம் தனது அருள் நிலையின் பூரணப் பிரகாசத்தை அடைந்து, பூஜையின் முழுமையான பலன்களை வாரி வழங்கக்கூடியதாகும்.

    இதன் அடிப்படையிலேயே கோவில்களில் சங்காபிஷேகம் நடத்தப்படுகிறது. சங்காபிஷேகத்தை பார்ப்பவர்களின் வாழ்வில் அவ்வப்போது எதிர்படும் கஷ்டங்கள் வந்த சுவடு தெரியாமல் விலகிச் செல்லும்.

    • இந்த ஆண்டு திருக்கார்த்திகை தீப திருவிழா வருகிற 26-ந்தேதி கொண்டாடப்படுகிறது.
    • திண்டுக்கல் அருகே நொச்சிஓடைப்பட்டியில் விதவிதமான விளக்குகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

    திண்டுக்கல்:

    கார்த்திகை மாதத்தில் 30 நாட்களும் பெரும்பாலான வீடுகளில் தீபம் ஏற்றி வழிபாடு நடத்துவது வழக்கம். திருக்கார்த்திகை நாளில் அனைத்து கோவில்களிலும் லட்சதீபம் ஏற்றப்பட்டு வழிபாடு செய்வார்கள். இந்த ஆண்டு திருக்கார்த்திகை தீப திருவிழா வருகிற 26-ந்தேதி கொண்டாடப்படுகிறது.

    அன்றுமுதல் 3 நாட்கள் வீடுகள் மற்றும் கோவி ல்களில் விளக்குகளால் அலங்காரம் செய்து வழிபாடு செய்யப்படும். அதனைமுன்னிட்டு திண்டுக்கல் அருகே நொச்சிஓடைப்பட்டியில் விதவிதமான விளக்குகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

    இந்த தொழிலில் ஈடுபட்:டு வரும் கஜேந்திரன் என்பவர் கூறுகையில், கார்த்திகை விழாவை முன்னிட்டு களிமண்ணால் ஆன விளக்குகள் தயாரித்து வருகிறோம். இந்த வருடம் புது வரவாக அன்னவிளக்கு அறிமுகம் செய்யப்பட்டு ள்ளது. முறத்தில் அன்னலட்சுமி விளக்கு வைத்து தயாரித்துள்ளோம்.

    இது பெண்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. இதுதவிர வழக்கமாக தயாரிக்கப்படும் கார்த்திகை விளக்குகளும் தயாரிக்கப்பட்டு வருகிறது. ரூ.5 முதல் ரூ.500 வரை விலையில் விளக்குகள் விற்பனைக்கு உள்ளன. பஞ்சமுக விநாயகர், மயில்விளக்கு, கஜமுக விளக்கு, தொகுப்பு விளக்கு, தாமரைவிளக்கு உள்ளிட்ட விளக்குகளும் தயாரித்து வருகிறோம்.

    திண்டுக்கல் மட்டுமின்றி சென்னை, தஞ்சாவூர், கோவை உள்ளிட்ட வெளிமாவட்டங்களுக்கும் விளக்குகள் அனுப்பப்பட்டு வருகிறது. 3 இன்ச் முதல் 2 அடி வரை உயரம் கொண்ட விளக்குகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. இடையில் பெய்த மழை காரணமாக விளக்குகள் தயாரிக்கும பணி சற்று தாமதமானது. தற்போது நல்ல வெயில் அடித்து வருவதால் விளக்குகளை உலர வைக்க ஏதுவாக உள்ளது.

    கடந்த வருடத்தை காட்டிலும் இந்த வருடம் விளக்குகள் விற்பனை அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம் என்றார்.

    • சிறிய விளக்குகள் முதல் பெரிய விளக்குகள் வரை பலதரப்பட்ட வகைகளில் தயார் செய்யப்பட்டுள்ளது.
    • சிறிய அளவிலான ஆயிரம் அகல் விளக்குகள் ரூ.800-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    குடிமங்கலம்:

    இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான திருக்கார்த்திகை தீபத்திருவிழா வருகிற 26-ந்தேதி கொண்டாடப்படுகிறது. கார்த்திகை தீபத்திருவிழா அன்று வீடுகளில் வரிசையாக தீபங்கள் ஏற்றி அழகுபடுத்துவது வழக்கம். இது போல் கோவில்களில் பக்தர்கள் புதிய விளக்குகளில் தீபங்கள் ஏற்றுவார்கள். கார்த்திகை தீபத் திருவிழா நெருங்கி வரும் நிலையில் திருப்பூர் மாவட்டம் உடுமலை பூளவாடி பகுதியில் அகல் விளக்குகள் தயாரிக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

    சிறிய விளக்குகள் முதல் பெரிய விளக்குகள் வரை பலதரப்பட்ட வகைகளில் தயார் செய்யப்பட்டுள்ளது. சிறிய அளவிலான ஆயிரம் அகல் விளக்குகள் ரூ.800-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் அகல்விளக்குகள் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு விற்பனைக்காக கொண்டு சென்று விற்பனை செய்யப்படுகிறது. இது தவிர கேரளா, ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கும் அகல் விளக்குகள் விற்பனைக்காக கொண்டு செல்லப்படுகிறது.

    அகல் விளக்கு தயாரிப்பு குறித்து மண்பாண்ட தொழிலாளி ரஞ்சித் கூறியதாவது:-

    உடுமலை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அகல் விளக்குகள் தயாரிப்பதற்கு கோதவாடி, கொழுமம் ஆகியவற்றில் உள்ள குளத்து மண் பயன்படுத்தப்படுகிறது. அங்கு மண் எடுப்பதில் சிரமம் உள்ளது. பூளவாடியில் இரண்டு குடும்பங்கள் மட்டுமே மண்பாண்ட தொழில் செய்து வருகிறோம். அரசின் சார்பில் அடையாள அட்டை இருந்தும் மண் எடுக்க முடியவில்லை. மண் எடுப்பதற்கான வழிமுறைகளை எளிதாக்க வேண்டும் என்பது மண்பாண்ட தொழிலாளர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. இந்த ஆண்டு அகல் விளக்கு விற்பனை அமோகமாக உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • திருப்பரங்குன்றத்தில் தீப திருவிழா கொடியேற்றத்துடன் நாளை தொடங்குகிறது.
    • திருக்கார்த்திகை தீபத்திருவிழா விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம்.

    திருப்பரங்குன்றம்,

    திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதத்தில் 10 நாட்கள் திருக்கார்த்திகை தீபத்திருவிழா விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம்.

    இந்த ஆண்டிற்கான திருக்கார்த்திகை தீபதிருவிழா நாளை (28-ந்தேதி) தொடங்கி அடுத்த மாதம் (டிசம்பர்) 7-ந்தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. முதல் நாளான நாளை பகல் 12.15 மணிக்கு மேல் 12.30 மணிக்குள் கும்ப லக்னத்தில் தங்கமுலாம் பூசப்பட்ட கொடிமரத்தில் கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்குகிறது.

    தினமும் காலையில் தங்க சப்பரத்திலும், இரவில் வெள்ளி பூத வாகனம், அன்ன வாகனம், சேஷ வாகனம், வெள்ளி ஆட்டுக்கிடா வாகனம், தங்கமயில் வாகனம், தங்க குதிரைவாகனம் என்று தினமும் ஒரு வாகனத்தில் தெய்வானையுடன் முருக ப்பெருமான் எழுந்தருளி நகர் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்கள்.

    திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 5-ந்தேதி (திங்கட்கிழமை) இரவு 8 மணிக்கு மேல் 8.15 மணிக்குள் கடக லக்னத்தில் கோவிலுக்குள் 6 கால் மண்டபத்தில் முருகப்பெருமானுக்கு பட்டாபிஷேகம் நடக்கிறது.

    திருவிழாவின் விசேஷ நிகழ்ச்சியாக 6-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) பகல் 11.15 மணிக்கு மேல் 11.30 மணிக்குள் கும்ப லக்னத்தில் சிறிய தேரோட்டம் நடக்கிறது.திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக (6-ந்தேதி) மாலை 6 மணிக்கு மேல் கோவிலுக்குள் பாலதீபமும், மலையில் மகா கார்த்திகை தீபமும் ஏற்றப்படுகிறது.

    இரவு 8 மணியளவில் சன்னதி தெருவில் 16 கால் மண்டபம் அருகே சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி நடக்கிறது. திருவிழாவின் நிறைவாக வருகிற 7-ந்தேதி (புதன்கிழமை) பகல் 12 மணிக்கு சரவண பொய்கையில் ஆறுமுகநாத சுவாமி கோவில் வளாகத்தில் தீர்த்த உற்சவம் நடக்கிறது.

    கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தேரோட்டம் நடைபெறவில்லை. இந்த ஆண்டு வருகிற 6-ந்தேதி வழக்கம்போல தேரோட்டம் நடக்கிறது. திருவிழாவிற்கான ஏற்பாடு களை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.

    • நாடு முழுவதும் திருக்கார்த்திகை எனப்படும் தீபத்திருநாள் டிசம்பர் 6-ந் தேதி கொண்டாடப்படுகிறது
    • கோவில்களில் ஏற்றப்படும் பெரிய அகல் விளக்குகள் போன்ற பல்வேறு வடிவங்களில் விளக்குகள் தயாரித்து வருகின்றனர்.

    வடமதுரை:

    நாடு முழுவதும் திருக்கார்த்திகை எனப்படும் தீபத்திருநாள் டிசம்பர் 6-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தீப விளக்குகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே உள்ள வெள்ள பொம்மன்பட்டி யில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

    இதில் 4 குடும்பத்தினர் பல ஆண்டுகளாக தொடர்ந்து விளக்குகள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் வீடுகளில் ஏற்றப்படும் விளக்குகள், கோவில்களில் ஏற்றப்படும் பெரிய அகல் விளக்குகள் போன்ற பல்வேறு வடிவங்களில் விளக்குகள் தயாரித்து வருகின்றனர்.

    இது தவிர சாமி சிலைகள், களி மண்ணால் ஆன அடுப்பு, மண்பானைகள், சிறிய மற்றும் பெரிய பானைகளும் தயாரித்து வருகின்றனர். இந்த கிராமத்தைச் சேர்ந்த பூசாரி செல்வம் (வயது 52), ஜெகநாதன் (45) ஆகியோர் பண்டிகைக்கு குறைந்த அளவு நாட்களே இருப்ப தால் மும்முரமாக விளக்கு கள் தயாரித்து வருகின்றனர்.

    இது குறித்து அவர்கள் தெரிவிக்கையில், கொரோனா ஊரடங்கு தளர்வுக்கு பின்பு இந்த ஆண்டு கோவில்களில் வழிபாடு நடத்த முழுமை யான அனுமதி வழங்க ப்பட்டுள்ளது. இதனால் விளக்குகள் ஆர்டர் அதிகரித்துள்ளது. மேலும் சீசன் காலங்களில் மழை பெய்து வந்ததால் தயாரித்த பொருட்களை காயவைக்க முடியாத நிலை ஏற்பட்டது. தற்போது பகலில் வெயில் அடிப்பதாலும் மழையின் தாக்கம் குறைந்துள்ள தாலும் விளக்குகள் காய வைப்பதில் இருந்த சிக்கல் நீங்கியுள்ளது.

    ஆனால் போதிய களிமண் கிடைக்காததால் உற்பத்தி பாதிக்கப்பட்டு வருகிறது. தமிழக அரசு இத்தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு தடையின்றி களிமண் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மற்ற நாட்களில் இத்தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்க வேண்டும் என்றனர்.

    ×