search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Thirukarthikai"

    • முருகப்பெருமான் விரும்பி அமர்ந்த மலை பழனி மலை.
    • அறுபடை வீடுகளுள் 3-ம் படைவீடாக விளங்குகிறது.

    கலியுக கடவுள் என பக்தர்களால் அழைக்கப்படும் முருகப்பெருமான் விரும்பி அமர்ந்த மலை பழனி மலை ஆகும். இது அறுபடை வீடுகளுள் 3-ம் படைவீடாக விளங்குகிறது. இத்திருத்தலத்தில் திருக்கார்த்திகை, பங்குனிஉத்திரம், தைப்பூசம், சூரசம்ஹாரம் உள்ளிட்ட திருவிழாக்கள் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    இதில் தைப்பூச திருவிழாவுக்கு மற்ற திருவிழாக்களை காட்டிலும் அதிக அளவில் பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து பழனியாண்டவனை தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர். பொதுவாக தைப்பூச திருவிழா வெற்றி விழா எனவும் அழைக்கப்படுகிறது.

    "தை பிறந்தால் வழி பிறக்கும்" என்ற வழக்காடு சொல்லுக்கு ஏற்ப இந்த தைப்பூச நன்னாளில் தங்கள் வேண்டுதல்களை நிறைவேறும் வகையில் வேண்டிக் கொள்ளும் பக்தர்களின் வாழ்வில் ஒளி ஏற்றப்படும் திருநாளாக தைப்பூசம் அமைகிறது.

    தை மாதத்தில் பூச நட்சத்திரத்தோடு நிறைந்த முழுமதி கூடும் மங்கல நாள் அன்று முருகப்பெருமானை வேண்டி கொண்டாடப்படும் வெற்றித் திருவிழாவாக தைப்பூசம் திகழ்கிறது. சூரர்களை அழித்து உலக உயிரினங்களை துன்பத்தில் இருந்து மீட்ட தினமே தை மாதத்தில் வரும் பூச நட்சத்திர நாளாகும்.

    இதனைப் போற்றும் விதமாக தைப்பூச திருவிழா ஆண்டுதோறும் முருகன் கோவில்களில் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது. பழனியில், உபகோவிலான பெரியநாயகி அம்மன் கோவிலில் 10 நாட்கள் தைப்பூச திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படும். தைப்பூச நாளில் பக்தர்கள் முருகப்பெருமானை மனமுருக வேண்டினால் பூரண அருள் பெறலாம்.

    • திருகார்த்திகை என்றாலே இரண்டு விசயம் கண்டிப்பாக இருக்கும்.
    • பனை ஓலையில் செய்த கொழுக்கட்டை.

    தென் தமிழகத்தில் திருகார்த்திகை என்றாலே இரண்டு விசயம் கண்டிப்பாக இருக்கும். முதலாவது கொழுக்கட்டை அதுவும் பனை ஓலையில் செய்த கொழுக்கட்டை. இரண்டாவது வீட்டை சுற்றி விளக்கு வைப்பது. கொஞ்சம் விடலை பசங்க இருந்தா மூன்றாவதாக சொக்க பனை.

    திருகார்த்திகை அன்று காலையில் எழுந்ததும் நமக்கு கொடுக்கிற முக்கியமான வேலையே எங்கேயாவது இரண்டு சருவை பனை ஓலை வாங்கிட்டு வந்துரு என்பது தான். ஒரு சருவை ஓலை என்பது ஒரு பனை மட்டையில் உள்ள ஓலையில் பாதிக்கும் கொஞ்சம் குறைவு. இரண்டு சருவை ஓலை என்றால் கிட்ட தட்ட முக்கால்வாசி ஓலை. ஆனால் ஒரே மட்டையில் இரண்டு சருவை ஓலையை வெட்டமாட்டார்கள். முத்தின ஓலையில் கொழுக்கட்டை செய்தால் கொழுக்கட்டையில் இலைவாசம் அதிகமாக இருக்கும். கொஞ்சம் குருத்தோலை அல்லது சமீபத்தில் வெளிவந்த ஓலை தான் வெட்ட வேண்டும். அப்படி பார்த்தால் அதிகபட்சமாம 4 ஓலை தான் தேரும். அதற்கு மேல் வெட்டினால் அது மரத்தை மொட்டை அடிப்பதற்கு சமம்.

     பச்சரிசியை நனையவச்சி இடிச்சி பெருங்கண் சல்லடையாள் (மாவு பரபரன்னு இருக்கும்) சலிச்சி வச்சிக்கனும். கிராமங்களில் கொழுக்கட்டை முன்றுவித சுவைகளில் செய்வார்கள். சர்க்கரையில் (அச்சுவெல்லம்) செய்த கொழுக்கட்டை கொஞ்சம் வெளீரிய மஞ்சள் நிறத்தில் இருக்கும். சீனியில் செய்த கொழுக்கட்டை வெண்மையாக இருக்கும். கருப்பட்டியில் செய்தது கொஞ்சம் அடர் பிரவுன் நிறத்தில் இருக்கும். மூன்றின் சுவையும் வெவ்வேறானவை.

    இதற்கு மேலும் சுவைக்காக தேங்காய்பூ, சிறுபயத்தம் பருப்பு, ஏலக்காய் எல்லாம் சேர்துக்கலாம். இடித்தமாவோடு தேங்காய்ப்பூ, பயத்தம் பருப்பு, ஏலக்காய் சேர்த்து அதோடு சீனி, சர்க்கரை, கருப்பட்டியை தனித்தனியாக விரசி (கலந்து) கெட்டியா வச்சிப்பாங்க. கொஞ்சம் மாவு கலவையை எடுத்து நறுக்கி வைத்த பனை ஏட்டில் சரியாக மத்தியில் வைச்சி, இன்னொரு இலையால் மூடனும். மூடினதும் நூல் போல் கிழித்துவைத்திருந்த பனை இலக்கை (ஒலை) வைத்து கட்டி தனியாக வைக்கனும். இதுல கொஞ்சம் டெக்னிக்கல் விசயம் எல்லாம் இருக்கு.

    மாவுக்கலவையில் நிறைய நீர் விடக்கூடாது. அடுத்து ஓலையில் மாவும் நிறைய வைக்க கூடாது. கட்டிய ஓலையை நீராவியில் போட்டு வேக வைக்கும் பொழுது அதனுளிருக்கும் சர்க்கரை, சீனி, கருப்பட்டி மூன்றும் உருக ஆரம்பிக்கும் அப்பொழுது மாவோடு சேர்ந்து இரண்டு பக்கமும் சிறிது தூரம் ஓடும். அதிகமான மாவும், அதிகமான தண்ணீரும் மாவை ஓலையை விட்டு வெளியே தள்ளிவிடும். மாவு வைத்து கொடுக்கும் வேலைக்கு என்னைய கூப்பிட மாட்டாங்க. நமக்கு கையும் வாயும் சும்மா இருக்காது. வச்சிமுடிக்கிறதுக்குள்ள கால்வாசி மாவு காணாம போய்டும். எனக்கு கொடுக்குற டிபார்ட்மெண்ட், மாவு ஓலைய இன்னொரு ஒலைய வச்சி மூடி கட்டு போடறது தான். எல்லா ஓலையையும் வச்சி கட்டி முடிச்சதும் மீதி ஏதாவது மாவு இருந்தா அதில் மா(வு)விளக்கு வைப்பார்கள்.

    இரண்டடி உயரம் உள்ள ஒரு பானைய எடுத்து அதுக்குள்ள வைக்கிற கொழுக்கட்டை ஓலை கீழே இறங்காம இருக்க கால்வாசி பானையில சிறிய கம்பு வைத்து ஊடுகட்டி, அதுக்குள்ள நறுக்கி உபயோகமில்லாமல் போன ஓலைய போட்டு பரப்பி, கொஞ்சம் தண்ணீர் ஊற்றி, கொழுக்கட்டை ஓலைய அடுக்கி வச்சி துணிய வச்சி வண்டுகட்டி அதுக்கு மேல ஒரு மூடிய போட்டு அடுப்பில் வச்சிட்டா, நீராவியிலே வெந்துடும். வெந்ததும் ஓலைய பிரிச்சி கொழுக்கட்டைய உடைஞ்சிடாம தனியா எடுத்து ஒரு தட்டில் வச்சி முதல்ல சாமிக்கும், பிறகு முன்னோருக்கும் படச்சிட்டு, ஆசாமிகிட்ட நீட்டுனா உடனே காலியாயிடும். பொதுவா கொழுக்கட்டைய அடுத்தநாள் சாப்பிட்டா சுவை அதிகமா இருக்கும்.

    இந்த வேலை நடந்துக்கிட்டு இருக்குறப்பவே, இன்னொருபக்கமாக வீட்டை அலங்காரம் செய்யும் வேலையும் நடக்கும். வேற ஒன்னும் இல்ல வீட்டுக்குள்ள அங்க அங்க மாக்கோலம் போட்டு வைப்பாங்க. இந்த மாக்கோலம் போடுறது கூட ஒரு கலை தான்.

    பச்சரிசிய ஊறவச்சி அம்மியில மை போல அரைக்கனும் கூடவே கொஞ்சம் மஞ்சளும், நிறத்திற்காக. மை போல அரச்ச அரிசியில நீர் சேர்த்து கொஞ்சம் கட்டியாவும் கட்டியா இல்லாத மாதிரியும் கலக்கி வச்சிக்குவாங்க.

    சிறிய வெள்ளை துணியை எடுத்து இந்த கலவையில முக்கி பெருவிரலுக்கும் ஆள்காட்டி விரலுக்கும் நடுவில் பிடித்து கோலம் போடனும். இந்த கோலம் ஒரு ரெண்டு வாரத்துக்கும் மேலே அழியாம இருக்கும். அதுக்கு அப்புறமும் கோலம் போட்ட தடம் அந்த இடத்தில் இருக்கும்.

    அடுத்து பப்பாளி மரத்தில் இருந்து நல்ல இளம் பிச்சி இலையா ஒரு இலைய பறிச்சி இலையும் காம்பும் சேரும் இடத்துல சின்ன அளவு வட்டமா வெட்டிக்கிட்டு, நரம்பு தவிர உள்ள இருக்குற பச்சை இலையை வெட்டி எடுத்துக்கணும். இது எதுக்குன்னு கேக்கறியலா, இத அப்படியே அந்த கலைவையில தொட்டு கதவில் ஒரு அமுத்து அமுத்தி எடுத்தா கதவில் ஒரு நட்சத்திரம் இருக்குற மாதிரி தெரியும். அதுக்கு நடுவுல ஒரு குங்கும பொட்டு. இப்படி கதவுல நல்லா இடம் விட்டு வச்சா பார்க்க அழகா இருக்கும்.

    அடுத்தது சொக்கப்பனை. நல்லா இருட்டுனதும் ஊருல இருக்குற கோவிலுக்கு முன்னாடி சொக்க பனை ஏத்தனும். ஒரு 8 அடி நீளமான கம்பு அல்லது தென்னம்மட்டைய ஒலை இல்லாம எடுத்துக்கனும். காய்ந்த பனை ஓலைய கொய்து (சின்ன சின்னதா நீளவாக்கில்) வச்சிக்கனும். இப்போ பனை ஒலையை தென்னமட்டையில வச்சி கட்டணும். முதல் கட்டு உச்சியில வச்சி கட்டணும். அடுத்த கெட்டு அதுக்கு அடியில வச்சி கெட்டனும்.

    கிட்ட தட்ட பூ இதழ் இருக்குமே அதுமாதிரி ஒரு ஒரு வட்டமா வச்சி கீழ ஒரு 2 அடி இடம் விட்டுட்டு கட்டணும். அப்படி கட்டும் போது நடு நடுவுல சில்லாட்டைய (பனை மட்டையின் கீழ் வலை போன்று மரத்தை கவ்வி பிடிக்க இருக்கும் ஒரு அமைப்பு) வச்சிக்கனும் கூடவே கொஞ்சம் உப்பு. இதை ரொம்ப இருக்கி கெட்ட கூடாது. கட்டுன மாதிரியும் இருக்கனும், கட்டாத மாதிரியும் இருக்கனும்.

    7 மணிக்கு கோவில் பூசை முடிஞ்சதும் பூசாரி ஒரு கற்பூரத்தை கொளுத்தி நீட்டுவார், அதுல இன்னொரு ஓலைய (கைப்பந்தம்) நீட்டி தீ வாங்கி அப்படியே நட்டு வச்சிருக்க சொக்க பனையின் மேல் பாகத்தில் (உச்சியில) நெருப்ப வச்சிடனும். மெதுவா எரிஞ்சிகிட்டே வரும். நாம் உப்பு போட்டு வச்சிருப்போமே அங்க வந்ததும் இந்த உப்பு எல்லாம் வெடிக்க ஆரம்பிக்கும் அது வெடிக்கும் போது இதுவரைக்கும் எரிஞ்சி கனகனன்னு இருக்கும் ஒலை எல்லாம் நெருப்பு பொரியா பறக்கும். அடுத்து சில்லாட்டை வர்ர இடமும் அப்படி நெருப்பு பொரி பறக்கும்.

    கும்மிருட்டுள சொக்கபனை மட்டும் எரியும் அப்போ அப்போ நெருப்பு பொரி (புஸ்வானம்) பறக்கும். பார்க்கறதுக்கு ரொம்ப சந்தோசமா இருக்கும்.

    எங்க தாத்தா-பூட்டன் காலத்துல பாதி பனைமரத்த வெட்டி வச்சி எரிப்பாங்களாம், ராத்திரி பூரா நின்னு எரியுமாம். இப்படி பனைய வெட்டி எரிச்சதால இதற்கு பெயர் சொக்கபனை. சொக்கன் பனை என்பது மருவி சொக்கப்பனை ஆகியிருக்கவும் வாய்ப்பிருக்கு. இப்போ ஒரு பனை இலைக்கை (ஓலையில் ஒரு இலை) கூட கொழுத்த முடியாது. ஏன்னா இப்போ பனைமரமே இல்லப்பா!

    அடுத்தநாள் காலையிலே கொழுக்கட்டை பரிமாற்றங்கள் வேறு நடக்கும். சுற்றத்தார் வீட்டுக்கு கொடுக்குறதும் அவங்க நமக்கு கொடுக்கறதும், ஏன் இவங்க வீட்டுல கொலுக்கட்ட இவ்வளவு சின்னதா இருக்கு, ஏன் இனிப்பே இல்லை, ஏன் இவ்ளோ இனிப்பு போட்டுருக்காங்க, இந்த கொழுக்கட்டைய கடிக்க முடியலேயே பல்லு போய்டும் போல இருக்கு என்று எல்லார் வீட்டிலும் அங்கலாச்சிக்குவாங்க. அது ஒரு தனிக்கதை.

    • கோவில்களில் திருகார்த்திகை அன்று காலை 4 மணிக்கு பரணி தீபம் ஏற்றப்படும்.
    • வாசலில் 2 தீபமும், பூஜை அறையில் 5 தீபமும் ஏற்ற வேண்டும்.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத் திருவிழாவில் நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4 மணிக்கு பரணி தீபம் ஏற்றப்படுகிறது.

    மாலை 6 மணிக்கு அண்ணாமலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படுகிறது.அதிகாலையில் பரணி தீபம் அண்ணாமலையார் கருவறையில் ஏற்றப்பட்டு, பின்னர் அர்த்த மண்டபத்தில் 5 தீபங்களாக இவை காட்டப்படும்.

    கார்த்திகை மாத பரணி நட்சத்திரத்தில் இந்த தீபம் காட்டப்படுவதால் `பரணி தீபம்' என்றுபெயர் பெற்றது.

    அருணாசலேஸ்வரர் கோவிலில் பரணி தீப தரிசனத்திற்காக 2500 முதல் 3000 பக்தர்கள் வரை கோவிலுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.

    நாளை சனிக்கிழமை நள்ளிரவு 12 மணி முதல் தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். இதற்கான ஏற்பாடுகள் கோவிலில் செய்யப்பட்டுள்ளது.

    திருக்கார்த்திகைக்கு முந்திய நாளான பரணி நட்சத்திரத்தன்று இல்லம் எங்கும் மாலை விளக்கேற்றி, இறைவன் சன்னிதியிலும் விளக்கேற்றி வழிபட வேண்டும்.

    கோவில்களில் திருகார்த்திகை அன்று காலை 4 மணியளவில், பரணி தீபம் ஏற்றப்படும். வாசலில் 2 தீபமும், பூஜை அறையில் 5 தீபமும் ஏற்ற வேண்டும். இந்த 5 தீபங்களையும் வட்டமாக எல்லாம் திசையும் ஒளி படும் படி ஏற்ற வேண்டும்.

    இந்த விளக்கில் நெய் ஊற்றி ஏற்றினால் சிறப்பு. இந்த பரணி தீபத்தினை வீட்டில் நாம் ஏற்றினால் நம் முன்னோர்களின் ஆசிர்வாதம் கிடைக்கும். நாம் செல்லும் உலகங்களில் எம்னுடைய வதம் இன்றி துன்பம் இன்றி இருக்கலாம் என்பது ஐதீகம்.

    இந்த பரணி தீபத்தின் முக்கியமான சிறப்பு என்னவென்றால் பஞ்சபூதம் நமக்கு உறுதுணையாக இருக்கும் என்பதுதான். இந்த பரணி தீபம் 5 விளக்குகளைக்கொண்டு ஏற்றப்படுகிறது.

    அப்படி ஏற்றுவதினால் அகமும் புறமும் சிறப்பாக செயல்படும் மகிழ்வாக இருப்போம் என்பது ஐதீகம் மேலும் பஞ்சபூதங்களான நீர், நெருப்பு, காற்று உள்ளிட்ட அனைத்தும் அளவாக நமக்கு கிடைக்க வேண்டிதான் இந்த பரணி தீபம் ஏற்றப்படுவதாக சொல்லப்படுகிறது.

    நமது வீட்டு பூஜையறை யில் ஒரு முக தீபம் ஏற்றினால் மத்திம பலன் தரும். 2 முக தீபம் ஏற்றினால் குடும்பம் ஒற்றுமை தரும். 3 முக தீபம் ஏற்றினால் புத்திர சுகம் தரும். 4 முக தீபம் ஏற்றினால் பசு, பூமி சுகம் தரும். 5 முக தீபம் ஏற்றினால் செல்வம் பெருகும்.

    திருவண்ணாமலையில் நேற்று பஞ்சரத தேரோட்டம் நடந்தது. இதில் ஆயிரக்க ணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். நாளை மறுநாள் மகாதீபம் ஏற்றப்படுவதால் வெளியூர்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிந்து வருகின்றனர்.

    திருவண்ணாமலையில் 9 இடங்களில் தற்காலிக பஸ் நிலையம் அமைக்கப்ப ட்டுள்ளது. பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்ய ப்பட்டுள்ளன. 16 கிலோமீட்டர் தூரம் கொண்ட கிரிவல பாதையில் கூடுதலாக கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

    மேலும் 14 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தங்கும் விடுதி, ஆட்டோக்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    • கார்த்திகை மாதம் சிவாலயங்கள் தோறும் சிவனுக்கு சங்காபிஷேகம் நடத்தப்படும்.
    • சிவபெருமான் அக்னி பிழம்பாக காட்சி தந்து அருள்வதாக ஐதீகம்.

    சோமவார விரதம் மேற்கொள்ளும் அதேநாளில் சிவாலயங்கள் தோறும் சிவனுக்கு சங்காபிஷேகம் நடத்தப்படும். எனவே சோமவார விரதம் இருப்பவர்கள் அன்றைய தினம் கோவிலுக்கு சென்று சங்காபிஷேகத்தை பார்த்து சிவனை தரிசிக்க வேண்டும். கார்த்திகை மாதத்தில் பவுர்ணமி திதியுடன் கார்த்திகை நட்சத்திரம் கூடும் நேரம் `திருக்கார்த்திகை' திருநாளாக கொண்டாடப்படுகிறது.

    அன்றைய தினம் சிவபெருமான் அக்னி பிழம்பாக காட்சி தந்து அருள்வதாக ஐதீகம். இதன் காரணமாகவே ஆலயங்களிலும், வீடுகளிலும் தீபங்கள் ஏற்றி வழிபடுகிறோம்.

    இந்நாளில் சிவனின் உடல் அதிக வெப்பத்தை தாங்கும் விதமாக, அதற்கு முன்னதாக வரும் திங்கட்கிழமைகளில் (சோம வாரம்) சிவனுக்கு, சங்காபிஷேக பூஜை நடத்தி குளிர்விக்கப்படுகிறது. சங்காபிஷேகம் பார்த்தால் கஷ்டங்கள் விலகும்.

    இந்த அபிஷேகத்தால் உலகில் வெப்பம் தணிந்து குளிர்ச்சி ஏற்படும். தேவையான அளவுக்கு மழை பொழியும் என்பதும் சங்காபிஷேகத்தின் நோக்க மாகும். சங்கு செல்வத்தின் அம்சமாக பார்க்கப்படுகிறது. அதனால் செல்வ அபிவிருத்திக்காகவும் சங்காபிஷேகம் செய்வார்கள். அப்படி தரிசிப்பவர்களுக்கு லட்சுமி கடாட்சம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

    பல்வேறு சிறப்பம்சங்களை கொண்ட வலம்புரி சங்கில் பாலை நிரப்பி, இறை வனை நீராடினால் ஆயிரம் யாகங்கள் செய்த பலனை அடையலாம். அதில் கங்கை நீரை நிரப்பி அபிஷேகம் செய்தால், பிறவி பிணியை அறுக்கலாம் என்று பத்ம புராணம் கூறுகிறது.

    ஏழு பிறவிகளில் செய்த வினைகளில் இருந்து மீளலாம் என்று கந்த புராணமும் சொல்கிறது. இதன் காரணமாகவே சங்கை கொண்டு சங்காபிஷேகம் பெரிய பெரிய சிவாலயங்களில் நடத்தப்படுகிறது.

    கார்த்திகை சோம வார நாட்களில் 108 அல்லது 1008 என்ற எண்ணிக்கைகள் கொண்ட சங்குகளில் புனித நீரை நிரப்பி புஷ்பங்கள் வைப்பார்கள். ஒரு கும்பத்தில் சிவபெருமானை ஆவாகணம் செய்து வேத பாராயணங்கள் செய்து, பின்பு அந்த நீரைக் கொண்டு சிவபெருமானை அபிஷேகம் செய்வார்கள்.

    1008 சங்குகளை வைத்து அதற்குரிய தேவதைகளை ஆவாகணம் செய்து, மந்திரங்களை உச்சரித்து செய்யப்படும் சங்காபிஷேகத்திற்கு 'சகஸ்தர சங்காபிஷேகம்' என்று பெயர். 108 சங்குகளை கொண்டு அதற்குரிய தேவதைகளை ஆவாகணம் செய்து, மந்திரங்களை உச்சரித்து செய்யப்படும் சங்காபிஷேகத்திற்கு `அஷ்டோத்ர சங்காபிஷேகம்' என்று பெயர்.

    ஓம்கார சொரூபமான சங்கில் நாம் எந்த வேதா மூர்த்தத்திற்கு அபிஷேகம் செய்கிறோமோ, அந்த வேதா மூர்த்தம் தனது அருள் நிலையின் பூரணப் பிரகாசத்தை அடைந்து, பூஜையின் முழுமையான பலன்களை வாரி வழங்கக்கூடியதாகும்.

    இதன் அடிப்படையிலேயே கோவில்களில் சங்காபிஷேகம் நடத்தப்படுகிறது. சங்காபிஷேகத்தை பார்ப்பவர்களின் வாழ்வில் அவ்வப்போது எதிர்படும் கஷ்டங்கள் வந்த சுவடு தெரியாமல் விலகிச் செல்லும்.

    • ஒட்டன்சத்திரம் பகுதியில் அகல்விளக்குகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
    • குறைந்த லாபம் கிடைத்தபோதும் இதனை சில தொழிலாளர்கள் தொடர்ந்து செய்து வருகின்றனர். தங்களுக்கு அரசு உதவவேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ஒட்டன்சத்திரம்:

    கார்த்திைக மாதத்தில் வரும் கார்த்திகை திருகார்த்திகை என கொண்டாடப்படுகிறது. அப்போது வீடுகளில் பல்வேறு அகல்விளக்குகள் ஏற்றி பொதுமக்கள் வழிபாடுவார்கள். காலமாற்றத்தால் மெழுகுவர்த்தி மற்றும் ரெடிமேடு விளக்குகளை பயன்படுத்த தொடங்கினர்.

    இருந்தபோதும் சில கிராமப்பகுதிகளில் தற்போதும் அகல்விளக்குகளை வீடு முழுவதும் ஏற்றி பொதுமக்கள் திருகார்த்திகையை கொண்டாடி வருகின்றனர். ஒட்டன்சத்திரம் பகுதியில் அகல்விளக்குகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    கார்த்திகை மாதத்தில் கார்மேக கூட்டங்கள் மழைபொழியும். காந்தல் மலர்கள் மலரும். இந்த மாதத்தில் கொண்டாடப்படும் திருக்கார்த்திகைக்கு தனிச்சிறப்பு உள்ளது. இந்தியா மட்டுமல்லாது இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் உள்பட பல்வேறு வெளிநாடுகளிலும் கொண்டாடப்பட்டு வருகிறது.

    ஒட்டன்சத்திரம் அருகே சாமியார்புதூர், சீரங்கவுண்டன்புதூர், நால்ரோடு, ஆயக்குடி ஆகிய பகுதிகளில் தொழிலாளர்கள் அகல்விளக்குகள் தயாரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். 1000 விளக்குகள் ரூ.700-க்கு மொத்த வியாபாரிகளால் கொள்முதல் செய்யப்படுகிறது.

    இங்கிருந்து மூலனூர், ஒட்டன்சத்திரம், திண்டுக்கல், மதுரை,தாராபுரம், நத்தம் உள்பட பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

    தினசரி 1000-க்கும் மேற்பட்ட விளக்குகளை தயாரித்து வருகின்றனர். தற்போது ரெடிமேடு மற்றும் மெழுகுவிளக்குகளை பொதுமக்கள் அதிகம் பயன்படுத்துவதால் அகல்விளக்குகள் விற்பனை மந்தமாகவே உள்ளது. குறைந்த லாபம் கிடைத்தபோதும் இதனை சில தொழிலாளர்கள் தொடர்ந்து செய்து வருகின்றனர். தங்களுக்கு அரசு உதவவேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • வள்ளியூர் அருகே உள்ள மாவடி உள்ளிட்ட கிராமங்களில் ஏராளமான மண்பானை தொழிலாளர்கள் மண் விளக்குகள் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
    • கடந்த 2ஆண்டுகள் கொரோனா காலகட்டத்தில் திரு கார்த்திகை களையிழந்து காணப்பட்டதாலும் இந்த ஆண்டும் மண் கிடைக்காமல் எங்களுடைய வாழ்வாதாரம் முற்றிலும் களையிழந்து காணப்படுவதாக மண்பானை தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

    வள்ளியூர்:

    கார்த்திகை தீபத்திருநாள் வருகிற 6-ந்தேதி கொண்டாடப்படுகிறது. அன்று பொதுமக்கள் தங்களது வீடுகள், வர்த்தக நிறுவனங்கள் மற்றும் கோவில்களில் தீபம் ஏற்றி வழிபாடு செய்வார்கள். வள்ளியூர் அருகே உள்ள மாவடி உள்ளிட்ட கிராமங்களில் ஏராளமான மண்பானை தொழிலாளர்கள் மண் விளக்குகள் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இங்குள்ள தொழிலாளர்கள் நம்பியாற்று தண்ணீரை வைத்து சிறிய மண் விளக்குகள் மண்பானை உள்ளிட்ட பொருட்கள் செய்வதால் நெல்லை மாவட்டத்தில் இதற்கு தனி மவுசு உண்டு.

    இங்கு தயார் செய்யப்படும் விளக்குகள் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு விற்பனைக்காக அனுப்பப்படு கின்றன.

    சில வருடங்களாக அரசு மண் எடுப்பதற்கு தடை விதித்த நிலையில் மண்ணில்லாமல் திருவிளக்கு உற்பத்தி செய்ய முடியாமலும் போதிய வருமானம் இல்லாமலும் மண் பானைத் தொழிலாளர்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர். அரசு அறிவித்த நிவாரணம் கூட தங்களுக்கு கிடைப்பதில்லை எனவும் கண்ணீர் மல்க அவர்கள் தெரிவித்தனர்.

    தலைமுறை தலைமுறையாக இந்த தொழிலை செய்யும் இவர்கள் தற்போதைய காலத்தில் உரிய மண் எடுக்க அனுமதி அளித்தால் எங்களுடைய வாழ்வாதாரம் தடைப்படாமல் தொழிலை நீடிப்போம் என்றும் தெரிவித்தனர். கடந்த 2ஆண்டுகள் கொரோனா காலகட்டத்தில் திரு கார்த்திகை களையிழந்து காணப்பட்டதாலும் இந்த ஆண்டும் மண் கிடைக்காமல் எங்களுடைய வாழ்வாதாரம் முற்றிலும் களையிழந்து காணப்படுவதாக மண்பானை தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

    ×