search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காய்கறிகள்"

    • தற்போது தக்காளிக்கு உரிய விலை கிடைக்காத நிலையில் ஆங்காங்கே சாலையில் கொட்டும் அவலம் ஏற்பட்டுள்ளது.
    • ஆண்டின் பெரும்பாலான மாதங்களில் விலை சரிவை சந்திப்பதும் விவசாயிகள் நஷ்டமடைவதும் தொடர்கதையாகவே உள்ளது.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம், குடிமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் காய்கறிகள் சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். குறிப்பாக தக்காளி, சின்ன வெங்காயம் அதிக அளவில் சாகுபடி செய்து வருகின்றனர். இந்நிலையில் அடிக்கடி ஏற்படும் விலை சரிவு விவசாயிகளின் வாழ்க்கையை அதல பாதாளத்துக்கு தள்ளி வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். தற்போது தக்காளிக்கு உரிய விலை கிடைக்காத நிலையில் ஆங்காங்கே சாலையில் கொட்டும் அவலம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:-

    மடத்துக்குளம், குடிமங்கலம் வட்டாரங்களில் சாகுபடி செய்யப்படும் தக்காளி உடுமலை தினசரி சந்தைக்கு கொண்டு வரப்படுகிறது. அங்கிருந்து வியாபாரிகள் மூலம் தமிழகத்தின் பிற மாவட்டங்களுக்கு கொண்டு சென்று விற்பனை செய்யப்படுகிறது. கேரள மாநிலத்தின் சில பகுதிகளுக்கும் இங்கிருந்து தக்காளி அனுப்பி வைக்கப்படுகிறது. வரத்து மற்றும் தேவையை பொறுத்து தினசரி விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.

    ஆண்டின் பெரும்பாலான மாதங்களில் விலை சரிவை சந்திப்பதும் விவசாயிகள் நஷ்டமடைவதும் தொடர்கதையாகவே உள்ளது. தற்போது 14 கிலோ கொண்ட ஒரு பெட்டி தக்காளி ரூ.80 முதல் ரூ.150 வரையே விற்பனையாகிறது. இதனால் போக்குவரத்து, சுங்கம், கூலி என செலவு செய்து சந்தைக்கு கொண்டு வந்து நஷ்டத்துடன் திரும்புவதை விட சாலை ஓரத்தில் வீசி எறிவதே சிறந்தது என்று விவசாயிகள் முடிவு செய்து விடுகின்றனர்.

    பல விவசாயிகள் விரக்தியின் உச்சத்தில், டிராக்டர்கள் மூலம் தக்காளி செடிகளை அழிக்க தொடங்கியுள்ளனர். ஆண்டுதோறும் ஏற்படும் இந்த நிலையால் தக்காளி செடிகள் மட்டும் அழிக்கப்படுவதில்லை. விவசாயிகளின் வாழ்வாதாரமும், எதிர்காலமும் சேர்ந்தே அழிந்து போகிறது. இந்தநிலை ஏற்படாமல் தவிர்க்க உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால் விவசாயம் மட்டுமல்லாமல் விவசாயியும் சேர்ந்தே அழியும் நிலை உருவாகி விடும்.

    எல்லா பொருட்களின் விலைவாசியும் 10 ஆண்டுகளுக்குள் பல மடங்கு விலை உயர்ந்துள்ளது.ஆனால் ஒரு கட்டு கீரை ரூ.10 லிருந்து ரூ.15 ஆக உயர்த்தப்பட்டால் அது அநியாய விலையாக பார்க்கப்படுகிறது. உற்பத்தி செலவு பல மடங்கு அதிகரித்துள்ள நிலையில் ஒரு கிலோ தக்காளி ரூ.50-க்கு விற்கப்பட வேண்டும். ஆனால் ரூ.5-க்கும் ரூ.10-க்கும் அள்ளி கொடுத்து விட்டு விவசாயி மூலையில் முடங்கி கிடக்க வேண்டிய நிலை உள்ளது. இதனால் மடத்துக்குளம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் தக்காளியை கொட்டி உள்ளனர்.

    எனவே விவசாய விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். உடுமலையில் தக்காளி சந்தை உருவாக்கி, இருப்பு வைக்கவும், உரிய விலை கிடைக்கும் பகுதிகளுக்கு அனுப்பி வைக்கவும், மதிப்புக் கூட்டுப்பொருட்கள் உற்பத்தியை ஊக்குவிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு விவசாயிகள் கூறினர்.

    • சாலையோர வியாபாரிகளை நிரந்தரமாக அப்புறப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • மறியல் போராட்டத்தின் காரணமாக பல்லடம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    திருப்பூர்:

    திருப்பூர் தென்னம் பாளையத்தில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கு தினமும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் தாங்கள் விளைவித்த பொருட்களை விற்பனைக்கு கொண்டு வருகிறார்கள். இந்த நிலையில் தென்னம் பாளையம் பகுதியில் சாலையோரம் வியாபாரிகள் பலர் கடைகள் அமைத்து காய்கறிகள் விற்பனை செய்வதால் விவசாயிகளுக்கு விற்பனை பாதிக்கப்பட்டு வருவதாகவும் , இதனால் சந்தை பகுதிகளில் வியாபாரிகள் ரோட்டோரம் காய்கறி கடைகளை அமைக்க கூடாது என விவசாயிகள் அதிகாரிகளிடம் தொடர்ந்து புகார் தெரிவித்து வந்தனர்.

    மேலும் கடந்த ஒரு வார காலமாக விவசாயிகள் உழவர் சந்தைக்கு செல்லாமல் சாலையோர வியாபாரிகளுக்கு போட்டியாக திருப்பூர் பல்லடம் சாலையிலேயே கடைகள் அமைத்து வியாபாரம் செய்து வந்தனர். இதன் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டதை தொடர்ந்து, நேற்று முன்தினம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் பேச்சு வார்த்தை நடைபெற்றது .

    பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால் இன்று காலை திருப்பூர் பல்லடம் சாலை தென்னம் பாளையத்தில் சாலையோர வியாபாரிகளை நிரந்தரமாக அப்புறப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி விவசாயிகள் காய்கறிகளை சாலையில் கொட்டி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒரு மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற இந்த மறியல் போராட்டத்தின் காரணமாக பல்லடம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இதையடுத்து போலீசார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. இந்நிலையில் சாலையோர வியாபாரிகளை அப்புறப்படுத்தக் கூடாது எனவும் மாநகராட்சி நிர்வாகம் சாலையோர வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி பல்லடம் சாலை டி.கே.டி பேருந்து நிறுத்தம் அருகே சாலையோர வியாபாரிகளும் போட்டி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் மேலும் பரபரப்பு ஏற்பட்டது.

    • அண்டை மாநிலமான கேரளாவிற்கு அதிக அளவில் காய்கறிகள் விற்பனை செய்யப்படுகிறது.
    • 2 நாட்களை கடந்தும் லாரிகளில் இருந்து பல்லாரி இறக்கப்படாமல் இருப்பதால் அவை அழுகும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது.

    தென்காசி:

    தென்காசி மாவட்டத்தில் மிகப்பெரிய காய்கறி சந்தையாக விளங்கி வரும் பாவூர்சத்திரம் பெருந்தலைவர் காமராஜர் தினசரி மார்க்கெட்டில் காய்கறிகள் அதிக அளவில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

    அண்டை மாநிலமான கேரளாவிற்கு அதிக அளவில் காய்கறிகள் விற்பனை செய்யப்படுகிறது.

    பொங்கல் பண்டிகையையொட்டி ரூ.35 முதல் 40 வரை ஒரு கிலோ பல்லாரி விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் கடந்த வாரம் ரூ.25, ரூ.20 என படிப்படியாக குறைந்த நிலையில் தற்போது ஒரு கிலோ ரூ.10 முதல் ரூ.15 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    பாவூர்சத்திரம் மார்க்கெட்டுக்கு மராட்டிய மாநிலத்தில் இருந்து அதிகளவில் பல்லாரி கொள்முதல் செய்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தற்போது மராட்டிய மாநிலத்தில் பல்லாரி விளைச்சல் அதிகரிப்பால் அதிகளவில் லாரிகள் மூலம் தென் மாவட்டங்களுக்கு விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன.

    இதனால் பாவூர்சத்திரம் மார்க்கெட்டில் பல்லாரி விலை ரூ.10 முதல் ரூ.15 ஆக வீழ்ச்சி அடைந்துள்ளதாலும் போதிய விற்பனை நடை பெறாததாலும் பாவூர்சத்திரம் மார்க்கெட் பகுதி மற்றும் நெல்லை-தென்காசி 4 வழிச்சாலை ஓரங்களில் 10-க்கும் மேற்பட்ட லாரிகளில் லோடுகள் இறக்காமல் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    2 நாட்களை கடந்தும் லாரிகளில் இருந்து பல்லாரி இறக்கப்படாமல் இருப்பதால் அவை அழுகும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது.

    • மூளையை அழற்சி பாதிப்புகளில் இருந்து பாதுகாக்கும்.
    • ரத்த ஓட்டத்தை மேம்படுத்தும்.

    வானவில்லில் ஒளிரும் ஏழு வண்ணங்களை போலவே நிறத்தோற்றம் கொண்ட காய்கறிகள், பழங்களை உண்ணும் வழக்கத்தை பின்பற்றுவது `ரெயின்போ டயட்' எனப்படுகிறது. வெவ்வேறு நிறம் கொண்ட தாவரங்கள், மரங்களில் விளையும் பொருட்கள் வெவ்வேறு வைட்டமின்கள், அதிக அளவு ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆரோக்கிய நன்மைகளை வழங்கக்கூடியவை.

    சிவப்பு நிற உணவுகள்:

    தக்காளி, தர்பூசணி, கிரேப் புரூட், கொய்யா, கிரான்பெர்ரி, ஆப்பிள், டிராகன் பழம் போன்றவை.

    ஆரோக்கிய நன்மைகள்:

    பக்கவாதம், மார்பக புற்றுநோய் போன்ற சில வகை புற்றுநோய்களின் அபாயத்தை குறைப்பதன் மூலம் இதய ஆரோக்கியத்தை பாதுகாக்க துணை புரிகின்றன.

    மஞ்சள்-ஆரஞ்சு உணவுகள்:

    கேரட், மாம்பழம், சர்க்கரை வள்ளிக் கிழங்கு, பூசணி, பப்பாளி, ஆப்ரிகாட், வாழைப்பழம் போன்றவை.

    ஆரோக்கிய நன்மைகள்:

    வீக்கத்தைக் குறைக்கவும், பார்வைத்திறனை மேம்படுத்தவும், நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுவாகவும், சருமத்தை ஆரோக்கியமாக பராமரிக்கவும் உதவுகின்றன.

    நீலம்-ஊதா-இண்டிகோ உணவுகள்:

    நீல நிற பெர்ரி பழம், கத்திரிக்காய், கருப்பு நிற பெர்ரி, பிளம்ஸ் போன்றவை.

    ஆரோக்கிய நன்மைகள்:

    போலேட், வைட்டமின் பி நிறைந்த இந்த உணவுகள் விரைவில் வயதான தோற்றம் ஏற்படுவதை எதிர்த்து போராட உதவுகின்றன. ஞாபகத் திறனை மேம்படுத்தவும், ரத்த அழுத்தத்தை குறைக்கவும் வழிவகுக்கின்றன. இதய நோய்கள் மற்றும் மூட்டுவலி அபாயத்தையும் குறைக்கின்றன.

    பச்சை உணவுகள்:

    பீன்ஸ், கொண்டைக்கடலை, பருப்பு, புரோக்கோலி, முட்டைக்கோஸ் போன்றவை.

    ஆரோக்கிய நன்மைகள்:

    இவைகளில் போலிக் அமிலம், வைட்டமின் கே மற்றும் ஒமேகா-3 போன்றவை நிறைந்துள்ளன. உடலில் கொழுப்பு மற்றும் ரத்த அழுத்தத்தை குறைக்கவும், எலும்புகளை வலுவாக வைத்திருக்கவும் உதவிபுரிகின்றன.

    இந்த உணவு ஆரோக்கியமானதா?

    ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் ஆய்வின்படி, `ரெயின்போ டயட்' எனப்படும் வானவில் வண்ண உணவுகள் மூளையின் ஆரோக்கியத்தை அதிகரிக்கவும், நினைவாற்றல் இழப்பைத் தடுக்கவும் உதவுகின்றன. அத்துடன் பிளாவனாய்டுகள் நிறைந்த வண்ணமயமான உணவுகள் மூளையை அழற்சி பாதிப்புகளில் இருந்து பாதுகாக்கும். ரத்த ஓட்டத்தை மேம்படுத்தும். அறிவாற்றல் செயல்பாட்டை மேம்படுத்தவும் செய்யும்.

    • சாகுபடி செய்யும் காய்கறிகள் மற்றும் கீரை வகைகளை அரசு மாணவர்கள் விடுதிக்கு இலவசமாக வழங்கி வருகின்றனர்.
    • இயற்கை முறையில் பயிர்களை சாகுபடி செய்து வருகின்றனர்.

    பெருந்துறை:

    பெருந்துறை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வேளாண் பிரிவில் 50 மாணவர்கள் பயின்று வருகின்றனர். இதையடுத்து அந்த பள்ளியிலேயே காய்கறி தோட்டம் அமைக்கப்பட்டு உள்ளது.

    இந்த காய்கறி தோட்டத்தில் ஆண்டு தோறும் தக்காளி, வெண்டை, பூசணிக்காய், சுரைக்காய், அவரை, கீரை வகைகள் போன்றவற்றை சாகுபடி செய்து வருகின்றனர்.

    இதை தொடர்ந்து மாணவர்கள் சிறு குழுக்களாக பிரிந்து விதைப்பு முதல் அறுவடை வரை மாணவர்களே முழுவதும் ஈடுபட்டு வேலை செய்கின்றனர்.

    மேலும் எவ்வித ரசாயன உரங்களையோ, பூச்சிக் கொல்லிகளையோ பயன்படுத்தாமல் இயற்கை முறையில் பயிர்களை சாகுபடி செய்து வருகின்றனர். மாணவர்களுக்கு வேளாண் ஆசிரியர் கந்தன், கைலாஷ் மாணவர்களுக்கு வழிகாட்டி வருகின்றனர். இவ்வாறு சாகுபடி செய்யும் காய்கறிகள் மற்றும் கீரை வகைகளை, மதிய உணவு திட்டத்திற்கும், அரசு மாணவர்கள் விடுதிக்கு இலவசமாக வழங்கி வருகின்றனர்.

    அந்த வகையில் சாகுபடி செய்திருந்த சிறுகீரை, அரைக் கீரை வகைகளை அறுவடை செய்யப்பட்டது. இந்த கீரை வகைகளை தலைமை ஆசிரியர் ரவி, மதிய உணவுத் திட்டத்திற்கு மாணவர்கள் வழங்கினர். இவ்வாறு காய்கறிகளை சாகுபடி செய்வது மாணவர்கள் செய்முறை வகுப்பிற்கும், அவர்கள் பிற்கால வாழ்வியலுக்கும், மேலும் விவசாயத்தில் மாணவர்களின் உற்சாகத்தை அதிகரிக்கும் வகையிலும் அமைகிறது என பள்ளி தலைமை ஆசிரியர் கூறினார்.

    • உணவு விரைவாக செரிமானமாக வேண்டும்.
    • உணவின் வகையை பொறுத்து செரிமான முறை அமையும்.
    உண்ணும் உணவு விரைவாக செரிமானமாக வேண்டும். அப்போதுதான் குடல் ஆரோக்கியம் பாதுகாக்கப்படும். வயது, பாலினம், வளர்சிதை மாற்றம், உணவின் வகை உள்ளிட்டவற்றை பொறுத்து செரிமான செயல்முறை அமையும். இருப்பினும் சாப்பிடும் உணவை பொறுத்து செரிமான செயல்முறை 24 மணி நேரம் முதல் 72 மணி நேரம் வரை நடைபெறலாம் என்பது உணவியலாளர்களின் கருத்தாக

    இருக்கிறது. எந்தெந்த உணவுகள் எவ்வளவு நேரத்தில் செரிமானமாகும் என்பது பற்றி பார்ப்போம்.

     தண்ணீர்

    தண்ணீர் விரைவாக செரிமானம் ஆகக்கூடியது. இருப்பினும் வயிறு நிரம்பியுள்ளதை பொறுத்து அது ஜீரணமாகும் நேரம் மாறுபடும். வெறும் வயிற்றில் தண்ணீர் பருகினால் ஐந்து நிமிடங்களுக்குள் அது உறிஞ்சப்பட்டுவிடும். ஆனால் அதிக அளவு உணவு சாப்பிட்டு விட்டு அதன் பிறகு தண்ணீர் பருகினால் அது உறிஞ்சப்படுவதற்கு சில மணி நேரமாகிவிடும்.

     ஜூஸ்

    பழச்சாறு பருகினால் அது சுமார் 20 நிமிடங்களில் ஜீரணமாகிவிடும். அதில் இருக்கும் சத்துக்கள் விரைவாக உறிஞ்சப்பட்டு உடல் உறுப்புகளை சென்றடைந்துவிடும். அதன் மூலம் ஆரோக்கியம் வலுப்படும். ஸ்மூத்திகளை பருகினால் அவை செரிமானம் ஆவதற்கு சுமார் 30 நிமிடங்கள் தேவைப்படும். எந்த உணவுகளை உட்கொண்டாலும் அதனுடன் இது போன்ற நார்ச்சத்துமிக்க உணவுகளையும் அடிக்கடி சாப்பிட வேண்டும். அவைதான் செரிமான மண்டலத்திற்கு சிறந்தவை.

     பழங்கள்

    முலாம்பழம், ஆரஞ்சு, திராட்சை மற்றும் வாழைப்பழங்கள் சுமார் 30 நிமிடங்களில் செரிமானமாகிவிடும். ஆப்பிள், பேரிக்காய், கிவி, செர்ரி போன்றவை ஜீரணமாக சுமார் 40 நிமிடங்கள் செலவாகும். தர்பூசணி பழம் விரைவாக செரிமானமாகக்கூடியது. அதில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் 20 நிமிடங்களுக்குள்ளாகவே செரிமான செயல்முறை ஒட்டுமொத்தமாக நடைபெற்று முடிந்துவிடும். குடல் இயக்கம் சுமூகமாக நடைபெறுவதற்கும் உதவி புரியும். அதேவேளையில் செரிமான பிரச்சினைகளை தவிர்ப்பதற்கு உணவுகளுடன் பழங்களை சேர்த்து உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.

     காய்கறிகள்

    பழங்களை விட காய்கறிகள் ஜீரணிக்க சற்று கூடுதல் நேரம் தேவைப்படும். இருப்பினும் கீரை, வெள்ளரிக்காய், குடை மிளகாய், தக்காளி உள்ளிட்ட நீர்ச்சத்து அதிகம் கொண்ட காய்கறிகள் செரிமானமாகி வயிற்றை விட்டு வெளியேற சுமார் 30 நிமிடங்கள் ஆகலாம். முட்டைக்கோஸ், காலிபிளவர், புரோக்கோலி உள்ளிட்ட காய்கறிகள் 40 நிமிடங்களில் செரிக்கப்படும். கேரட், பீட்ரூட் உள்ளிட்ட வேர் காய்கறிகள் செரிமானமாக சுமார் 50 நிமிடங்கள் எடுத்துக்கொள்ளும். உருளைக்கிழங்கு, சர்க்கரைவள்ளிக்கிழங்கு, சோளம் போன்றவை செரிமானமாக சுமார் ஒரு மணி நேரம் எடுத்துக்கொள்ளும்.

     தானியங்கள்

    பழுப்பு அரிசி, ஓட்ஸ் போன்ற தானியங்கள் செரிமானமாகி வயிற்றில் இருந்து வெளியேற சுமார் ஒன்றை மணி நேரம் ஆகலாம். அதுபோல் பருப்பு வகைகள், பீன்ஸ் போன்றவை செரிமானமாவதற்கு இரண்டு மணி நேரத்திற்கு மேல் தேவைப்படும்.

     இறைச்சி

    எண்ணெய் இல்லாத மீன் வகைகள், கடல் உணவுகளை சாப்பிட்டால் அவை 30 நிமிடங்களுக்குள் செரிமானமாகிவிடும். அதே நேரத்தில் சால்மன், மத்தி போன்ற கொழுப்பு நிறைந்த மீன்கள் செரிமானம் அடைவதற்கு 50 நிமிடங்கள் எடுத்துக்கொள்ளும். ஆடு, கோழி, மாடு, பன்றி போன்றவைகளின் இறைச்சிகளை உட்கொண்டால் அவை ஜீரணமாவதற்கு 4 முதல் 6 மணி நேரமாகும். சில சமயங்களில் முழுமையாக செரிமானம் ஆவதற்கு 24 மணி நேரத்திற்கும் மேலாகும்.

     பால் பொருட்கள்

    கொழுப்பு நீக்கப்பட்ட பால் மற்றும் குறைந்த கொழுப்புள்ள பாலாடைக்கட்டிகள் ஜீரணிக்க சுமார் 2 மணி நேரமாகும். கெட்டியான பாலாடைக்கட்டிகள் ஜீரணமாக5 மணி நேரம் கூட ஆகலாம். முட்டையின் மஞ்சள் கரு மட்டும் ஜீரணமாகுவதற்கு 30 நிமிடங்கள் எடுத்துக்கொள்ளும். முழு முட்டையும் செரிமானமாவதற்கு சுமார் 45 நிமிடங்களாகும்.

     நட்ஸ்கள்-விதைகள்

    எள், சூரியகாந்தி, பூசணி விதைகள் ஜீரணமாக சுமார் 2 மணி நேரம் தேவைப்படும். பச்சை வேர்க்கடலை, பாதாம், முந்திரி பருப்புகள், அக்ரூட் பருப்புகள் போன்றவை ஜீரணமாகுவதற்கு சுமார் 3 மணி நேரம் எடுத்துக்கொள்ளும்.

    • 2 மினி லாரிகளை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.
    • மினி லாரிகளில் இருந்த 3 பேரையும் பிடித்து விசாரணை நடத்தினர்.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் பகுதியில் இருந்து ஏராளமான வாகனங்களில் அண்டை மாநிலமான கேரளாவுக்கு காய்கறிகள் கொண்டு செல்லப்படுகிறது.

    அதுமட்டுமல்லாமல் பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களும் கொண்டு செல்லப்படுகிறது. இவ்வாறு செல்லும் லோடு வாகனங்களில் பொருட்களுக்கு இடையே அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் கடத்தப்பட்டு அவ்வப்போது சோதனையின் போது சிலர் சிக்கி கொள்கின்றனர்.

    இந்நிலையில் காய்கறிகள் ஏற்றிக்கொண்டு வரும் மினி லாரியில் குட்கா கடத்தி கொண்டுவரப்படுவதாக பாவூர்சத்திரம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்து. உடனடியாக போலீசார் பாவூர்சத்திரம் அருகே உள்ள சிவகாமிபுரம் விலக்கில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அவ்வழியே காய்கறிகளை ஏற்றி சென்ற 2 மினி லாரிகளை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா சுமார் 32 மூட்டைகளில் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. அதன் மதிப்பு ரூ. 3.35 லட்சம் என்பதும், மொத்த எடை 391 கிலோ என்றும் தெரியவந்தது. இதையடுத்து மினி லாரிகளில் இருந்த 3 பேரையும் பிடித்து விசாரணை நடத்தினர்.

    அதில் அவர்கள் கீழப்பாவூரை சேர்ந்த முருகன்(31), ஆரியங்காவூர் சத்தியமூர்த்தி (35) மற்றும் அரியப்புரத்தை சேர்ந்த முருகன் (39) என்பது தெரிய வந்தது.

    இதையடுத்து அவர்கள் 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்த போலீசார், கைது செய்து அவர்களை சிறையில் அடைத்தனர். இதில் தொடர்புடைய மேலும் 4 பேர் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வலைவீசி தேடி வருகின்றனர். கடத்தலுக்கு பயன்படுத்திய 2 மினி லாரிகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    • தினமும் 100-க்கும் மேற்பட்ட லாரிகளில் காய்கறிகள் வரும் நிலையில் நேற்று 20 லாரிகளே வந்துள்ளன.
    • வரத்து குறைவு மற்றும் திருமண சீசன் காலம் ஆகியவற்றால் காய்கறிகளின் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    திருவனந்தபுரம்:

    தமிழகத்தில் சமீபத்தில் ஏற்பட்ட மழை மற்றும் வெள்ளம் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த பாதிப்பு அண்டை மாநிலமான கேரளாவிலும் எதிரொலித்துள்ளது. அங்கு அத்தியாவசிய தேவை பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. அதில் குறிப்பாக காய்கறிகள் கடும் ஏற்றத்தை சந்தித்துள்ளது. தமிழகத்தில் இருந்து காய்கறிகள் கேரளாவுக்கு செல்வது குறைந்துள்ளதால் தான் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    தமிழகத்தில் இருந்து செல்லும் முருங்கைக்காய் வரத்து குறைவு காரணமாக கேரளாவில் ஒரு கிலோ ரூ.170-க்கு விற்கப்படுகிறது. கடந்த வாரம் இதன் விலை ரூ.90 ஆக இருந்தது.

    பச்சை மிளகாய் விலையும் உயர்வை சந்தித்துள்ளது. கடந்த வாரம் ரூ.40-க்கு விற்கப்பட்ட நிலையில் இன்று ரூ.80 ஆக உயர்ந்து உள்ளது. அதே நேரம் இஞ்சியின் விலை ரூ.240-ல் இருந்து கிலோ ரூ.140 ஆக குறைந்துள்ளது. வயநாட்டில் இருந்து இஞ்சியின் வரத்து அதிகமாக உள்ளதே இந்த விலை வீழ்ச்சிக்கு காரணமாக உள்ளது.

    ஆலப்புழா மார்க்கெட்டுகளுக்கு தினமும் 100-க்கும் மேற்பட்ட லாரிகளில் காய்கறிகள் வரும் நிலையில் நேற்று 20 லாரிகளே வந்துள்ளன. வரத்து குறைவு மற்றும் திருமண சீசன் காலம் ஆகியவற்றால் காய்கறிகளின் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    • பெரிய வெங்காயத்தின் விலை ஒரு மாதத்துக்கு பின்னர் மீண்டும் உயரத் தொடங்கி இருக்கிறது.
    • பெரிய வெங்காயம் வழக்கத்தை விட பாதி அளவே வருகிறது.

    போரூர்:

    மிச்சாங் புயல் மற்றும் மழை பாதிப்பு காரணமாக உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளதால் கோயம்பேடு சந்தைக்கு வரும் கத்தரிக்காய், வெண்டைக்காய், பாகற்காய், கோவக்காய் உள்ளிட்ட பச்சை காய்கறிகளின் வரத்து வெகுவாக குறைந்து விலையும் அதிகரித்து உள்ளது.

    இதேபோல் பெரிய வெங்காயத்தின் விலையும் ஒரு மாதத்துக்கு பின்னர் மீண்டும் உயரத் தொடங்கி இருக்கிறது. கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வழக்கத்தை விட தற்போது 50 சதவீத வெங்காயம் மட்டுமே வருவதாக மொத்த வியாபாரிகள் தெரிவித்து உள்ளனர். இதனால் பெரிய வெங்காயம் விலை ரூ.50-ஐ தாண்டி விற்பனை செய்யப்படுகிறது.

    சில்லரை விற்பனை கடை களில் ஒரு கிலோ பெரிய வெங்காயம் ரூ.65 வரை விற்பனை ஆகிறது. கடந்த அக்டோபர் மாத இறுதியில் வெங்காயத்தின் விலை ரூ.100-ஐ தொட்டது குறிப்பிடத்தக்கது.

    கத்தரிக்காய் கிலோ ரூ.60-க்கும், சின்ன வெங்காயம் கிலோ ரூ.80 முதல் ரூ.90 வரை விற்பனை செய்யப்படுகிறது.

    இதுகுறித்து வியாபாரிகள் கூறும்போது, புயல், மழை காரணமாக ஆந்திரா பகுதியில் இருந்து வரும் காய்கறி, வெங்காயம் வரத்து குறைந்து உள்ளது. இதனால் விலை அதிகரித்து உள்ளது. பெரிய வெங்காயம் வழக்கத்தை விட பாதி அளவே வருகிறது. வரும் நாட்களில் இதன் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்றனர்.

    • வெண்டை ரூ.60, சின்னவெங்காயம்-ரூ.90க்கு விற்பனை
    • வரத்து குறைவு காரணமாக விலைகள் உயர்ந்தன

    கோவை,

    கோவை காய்கறி மார்க்கெட்டுக்கு ஊட்டி, மேட்டுப்பாளையம், ெதாண்டாமுத்தூர், ஆலாந்துறை, ஓட்டன் சத்திரம் மற்றும் கர்நாடகாவில் இருந்து காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன.

    கடந்த சில நாட்களாக தமிழகம் மற்றும் பல மாநிலங்களிலும் கனமழை பெய்து வருகிறது. மேலும் தீபாவளியை யொட்டி தொடர்ச்சியாக விடுமுறை இருந்ததால் வாகன போக்குவரத்தும் குறைந்து விட்டது.

    இதனால் கர்நாடகாவில் இருந்து கோவை மார்க்கெட்டுக்கு வழக்கமாக கொண்டு வரப்படும் காய்கறிகள் வரத்து வெகுவாக குறைந்து விட்டது. மேலும் பல காய்கறிகள் வரவே இல்லை.

    இதன் காரணமாக கோவை மார்க்கெட்டுகளில் காய்கறிகளின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது. முக்கிய காய்கறிகளின் விலை 20 சதவீதம் விலை அதிகரித்து காணப்படு கிறது.

    சின்னவெங்காயம் கிலோ ரூ.90க்கும், பீன்ஸ் கிலோ ரூ.100க்கு விற்பனையாகிறது. கடந்த சில தினங்க ளாக கிலோ ரூ.15க்கு விற்பனையாகி வந்த வெண்டைக்காய் இன்று கிலோ ரூ.60க்கு விற்பனையாகி வருகிறது.

    கோவை மார்க்கெட்டில் விற்பனையாகும் மற்ற காய்கறிகளின் விலை கிலோவில் வருமாறு:-

    கேரட்-ரூ.40, பீன்ஸ்-ரூ.100, முட்டைகோஸ்-ரூ.20, பீட்ரூட்-ரூ.40, சவ்சவ்-ரூ.20, வெள்ளைபூசணி, அரசாணி-ரூ.15, எலுமிச்சை-ரூ.70, உருளைகிழங்கு-ரூ.50, சேப்பக்கிழங்கு-ரூ.80, சின்னவெங்காயம்-ரூ.90, பெரிய வெங்காயம்-ரூ.60, இஞ்சி-ரூ.100, சிறுகிழங்கு-ரூ.80க்கு விற்பனையாகிறது.

    தக்காளி ரூ.50க்கும், ஆப்பிள் தக்காளி-ரூ.60க்கும், மிளகாய்-ரூ.40, பாகற்காய்-ரூ.40, வெண்டைக்காய்-ரூ.60க்கும், கத்தரி-ரூ.32, அவரை-ரூ.50, முருங்கைக்காய்-ரூ.60க்கு விற்பனையாகி வருகிறது.

    இதுகுறித்து வியாபாரிகள் கூறும்போது, வரத்து குறைவு காரணமாக அனைத்து காய்கறிகளின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது. வரும் நாட்களில் விலை குறைய வாய்ப்புள்ளது என தெரிவித்தனர்.

    • தொடர்ந்து மழை பெய்ததால் அதிகாலை முதல் மார்க்கெட் வளாகம் முழுவதும் வியாபாரிகள் இல்லாமல் வெறிச் சோடி காணப்பட்டது.
    • குறிப்பாக பீன்ஸ், கேரட், கத்திரிக்காய், முட்டை கோஸ் அதிக அளவில் தேங்கியதால் வியாபாரிகள் கவலை அடைந்தனர்.

    போரூர்:

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று இரவு முதல் விட்டு, விட்டு பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வியாபாரிகள் வருகை பாதியாக குறைந்தது. நள்ளிரவில் விறு விறுப்பாக தொடங்கிய காய்கறி விற்பனை பின்னர் மந்தமாகி போனது. தொடர்ந்து மழை பெய்ததால் அதிகாலை முதல் மார்க்கெட் வளாகம் முழுவதும் வியாபாரிகள் இல்லாமல் வெறிச் சோடி காணப்பட்டது.

    இதன்காரணமாக மார்க்கெட்டில் காய்கறிகள் விற்ப னை பாதியாக குறைந்தது. மூட்டை, மூட்டையாக காய்கறிகள் விற்பனை ஆகாமல் தேங்கியது. குறிப்பாக பீன்ஸ், கேரட், கத்திரிக்காய், முட்டை கோஸ் அதிக அளவில் தேங்கியதால் வியாபாரிகள் கவலை அடைந்தனர்.

    வியாபாரிகள் வருகை குறைந்ததால் கத்தரிக்காய், பீன்ஸ், ஊட்டி கேரட், முட்டை கோஸ், கோவக்காய் ஆகிய பச்சை காய்கறிகளின் விலை கடும் வீழ்ச்சி அடைந்தன. மொத்த விற்பனையில் உஜாலா கத்தரிக்காய் ஒரு மூட்டை (80கிலோ) ரூ.500-க்கும், ஊட்டி கேரட் ஒரு மூட்டை (80கிலோ) ரூ.600-க்கும், கோவக்காய் ஒரு மூட்டை (55கிலோ) ரூ.400-க்கும், மூட்டை கோஸ் ஒரு மூட்டை (50கிலோ) ரூ.350-க்கும் விற்கப்பட்டது. அதனையும் வாங்கிச்செல்ல வியாபாரிகள் வரவில்லை. ஆனாலும் சின்ன வெங்காயம் மற்றும் பெரிய வெங்காயத்தின் விலை தொடர்ந்து ஏறுமுகமாகவே இருந்து வருகிறது.மொத்த விற்பனை கடைகளில் ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ.100-க்கும், பெரிய வெங்காயம் ரகத்தை பொறுத்து ஒரு கிலோ ரூ.50 முதல் ரூ.58வரையிலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெளி மார்க்கெட்டில் உள்ள காய்கறி கடைகளில் சின்ன வெங்காயம் ஒரு கிலோ ரூ.130-க்கும், பெரியவெங்காயம் ரூ.70-க்கும் விற்பனை ஆகி வருகிறது.

    இதுகுறித்து வியாபாரிகள் கூறும்போது, கோயம்பேடு சந்தைக்கு இன்று காலை 450க்கும் மேற்பட்ட லாரிகளில் காய்கறிகள் விற்பனைக்கு வந்து இருந்தன. ஆனால் அதிகாலை முதல் தொடர்ந்து மழை பெய்ததால் வியாபாரி கள் வருகை குறைந்தது. வழக்கமாக நடைபெறும் விற்பனையில் 50 சதவீத காய்கறிகள் மட்டுமே விற்று உள்ளது. ஏராளமான காய்கறிகள் மூட்டை, மூட்டையாக தேங்கி கிடக்கிறது. இதனால் கடந்த சிலநாட்களாக உச்சத் தில் இருந்த பீன்ஸ் விலை குறைந்து உள்ளது என்றார்.

    கோயம்பேடு மார்க்கெட் டில் இன்றைய காய்கறி மொத்த விற்பனை விலை விபரம் (கிலோவில்) வருமாறு:-

    உஜாலா கத்தரிக்காய்-ரூ.8, பீன்ஸ்-ரூ.40, அவரைக் காய்-ரூ.45, வெண்டைக்காய்-ரூ.25, வெள்ளரிக்காய்-ரூ.15, பன்னீர் பாகற்காய்-ரூ.30, கோவக்காய்-ரூ.7, ஊட்டி கேரட்-ரூ.15, சுரக்காய்-10, பீட்ரூட்-ரூ.20, முட்டை கோஸ்-ரூ.8, முருங்கைக் காய்-ரூ.80 முள்ளங்கி-ரூ.20, ஊட்டி சவ்சவ்-ரூ.12, நூக்கல் -ரூ.25, புடலங்காய்-ரூ.10, பீர்க்கங்காய்-ரூ.30, குடை மிளகாய்-ரூ.30, இஞ்சி-ரூ.95, பச்சை மிளகாய்-ரூ.40, தக்காளி-ரூ.22, உருளைக் கிழங்கு-ரூ.18.

    • காய்கறிகள், பழங்கள், இனிப்பு வகைகள், மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டது.
    • ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்து வருகின்றனர்.

    தஞ்சாவூர்:

    உலக பாரம்பரிய சின்னமாக விளங்கும் தஞ்சாவூர் பெரிய கோவில் கட்டிட கலைக்கு சிறந்த எடுத்துகாட்டாள விளங்குகிறது. தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள், சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.

    பெரிய கோவிலில் கருவறையில் உள்ள பெருவுடையார் மிகப்பெரிய லிங்கத்திருமேனியாகும். 6 அடி உயரமும், 54 அடி சுற்றளவும் கொண்ட பீடமும், அதன்மேல் 13 அடி உயரம், 23 அடி சுற்றளவும் உள்ள லிங்கமும் என தனித்தனி கருங்கற்களினால் செதுக்கப்பட்டு இணைக்கப்பட்டுள்ளன. இத்தகைய பல்வேறு சிறப்புகள் வாய்ந்த பெருவுடையாருக்கு ஐப்பசி மாத பவுர்ணமியில் அன்னாபிஷேகம் நடைபெறும்.

    அதன்படி இன்று ஐப்பசி மாத பவுர்ணமி என்பதால் பிற்பகலில் அன்னாபிஷேகம் நடைபெற்றது. இதற்காக பக்தர்கள் வழங்கிய 1500 கிலோ அரிசி சாதமாக தயார் செய்யப்பட்டன. பின்னர் தயார் செய்யப்பட்ட சாதம் பெருவுடையார் திருமேனி முழுவதும் சாத்தப்பட்டன.

    இதையடுத்து 500 கிலோ காய்கறிகள், பழங்கள், இனிப்பு வகைகள், மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டது. மாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். இரவில் லிங்கத்தில் இருந்து எடுக்கப்பட்ட அன்னம் பக்தர்கள், கால்நடைகளுக்கு பிரசாதமாக வழங்கப்படும்.

    இரவு 7 மணி வரை தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவர். இரவு சந்திரகிரகணம் என்பதால் 8 மணிக்கே நடை சாத்தப்பட உள்ளது.

    ×