search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சென்னையில் விற்பனைக்கு குவிந்துள்ள பொங்கல் பானைகள்
    X

    சென்னையில் விற்பனைக்கு குவிந்துள்ள பொங்கல் பானைகள்

    • கரும்பு, மஞ்சள் குலை விற்கும் பகுதிகளில் மண் பானைகளையும் விற்பனைக்கு வைத்திருப்பார்கள்.
    • சென்னையில் மட்டும் 500-க்கும் மேற்பட்ட மண்பானை விற்பனை கடைகள் உள்ளன.

    தை மகளை வரவேற்க மக்கள் தயாராகி வருகிறார்கள்.

    பொங்கல் என்றாலே புதுப்பானை புத்தரிசி, செங்கரும்பு, மஞ்சள் குலை இவைகள் தான் நினைவுக்கு வரும். மண் பானை கிராமங்களில் மட்டுமல்லாமல் நகரத்திலும் மக்களிடம் மண் வாசனை மாறாமல் இடம் பிடித்து உள்ளது. சென்னையில் பொங்கல் பண்டிகைக்காக ஏராளமான மண் பானைகள் விற்பனைக்காக வந்து குவிந்து உள்ளன. சென்னையில் மட்டும் 500-க்கும் மேற்பட்ட மண்பானை விற்பனை கடைகள் உள்ளன. இது தவிர தற்காலிக நடை பாதை கடைகளும் இன்னும் ஒன்றிரண்டு நாளில் தொடங்கும்.

    கரும்பு, மஞ்சள் குலை விற்கும் பகுதிகளில் மண் பானைகளையும் விற்பனைக்கு வைத்திருப்பார்கள். நகர மயமாகிவிட்டாலும் மக்களிடம் பாரம்பரியமான முறையில் மண் பானையில் பொங்கலிடும் ஆர்வம் அதிகம் இருப்பதாக மண் பானைகள் மொத்த விற்பனையாளரான கோடம்பாக்கத்தை சேர்ந்த உஷா கூறினார். இப்போது பள்ளிகளில் பாரம்பரிய விழாக்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதால் சுமார் 100 கிராம் பச்சரிசி மற்றும் வெல்லத்தை போட்டு பொங்கல் வைப்பதற்காக சிறிய ரக பானைகள் அதிக அளவில் விற்பனையாவதாக தெரிவித்தார்.

    இந்த பானைகளின் விலை ரூ.50 தான். வர்ணம் பூசாத பானைகள், வர்ணம் பூசப்பட்ட பானைகள் என்று சிறியது முதல் பெரியது வரை அதாவது கால்கிலோ அரிசி முதல் 5 கிலோ அரிசி வரை பொங்கல் வைக்கும் அளவிற்கு பானைகள் விற்பனைக்கு வந்துள்ளன.

    இதில் 5 கிலோ அரிசியை பொங்கலிடும் வகையிலான வர்ணம் பூசப்பட்ட பெரிய பானையின் விலை ரூ.1500. வர்ணம் பூசப்படாத மண் பானைகள் ரூ.30 முதல் ரூ.200 வரை விற்பனையாகிறது.

    வெளியூர்களில் இருந்து ஆயிரக்கணக்கான பானைகளை கொள்முதல் செய்து விற்பனைக்கு தயாராக வைத்துள்ளார்கள். மழை குறுக்கிடாவிட்டால் வியாபாரம் களைகட்டும் என்கிறார்கள் வியாபாரிகள்.

    Next Story
    ×