search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "pond"

    • கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் துார் வாரும் பணி மேற்கொள்ள திட்டமிடப்பட்டது.
    • நகராட்சி ஆணையாளர் மற்றும் பல்லடம் தாசில்தாரிடம் கோரிக்கை மனு அளித்திருந்தனர்.

    பல்லடம் :

    பல்லடம் - பொள்ளாச்சி ரோட்டில் உள்ள வடுகபாளையம் பகுதியில் குட்டை உள்ளது .இந்தக்குட்டையை பல்லடம் நகராட்சி நிர்வாகம் சார்பில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் துார் வாரும் பணி மேற்கொள்ள திட்டமிடப்பட்டது.

    குட்டை துார் வாரும் பணி நடந்து வரும் சூழலில் இங்குள்ள புறம்போக்கு இடத்தில் தனி நபர்களுக்கு புதிதாக வழித்தடம் தடம் விட்டு பணிகள் மேற்கொள்வதாக குற்றச்சாட்டு எழுந்தது. எனவே குட்டையை அளவீடு செய்து சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என வார்டு கவுன்சிலர்கள் ஈஸ்வரமூர்த்தி (காங்கிரஸ்), சசிரேகா ரமேஷ்குமார் (பா.ஜ.க,) ஆகியோர் நகராட்சி ஆணையாளர் மற்றும் பல்லடம் தாசில்தார் நந்தகோபாலிடம் கோரிக்கை மனு அளித்திருந்தனர். மனுவை பெற்றுக் கொண்ட தாசில்தார் விரைவில் அளவீடு பணி மேற்கொள்ளப்படும் என தெரிவித்திருந்தார். இந்தநிலையில் குட்டையை அளவீடு செய்து உரிய விசாரணை மேற்கொண்டு அறிக்கையை சமர்ப்பிக்குமாறு பொங்கலுார் ஆர்.ஐ., கேத்தனூர் வி.ஏ.ஓ. ஆகியோருக்கு உத்தரவிட்டுள்ளார்.

    • கங்கை கொண்டானில் இருந்து இன்று காலை கான்கீரிட் கலவையை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று அம்பையை நோக்கி சென்றது.
    • திடீரென லாரி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து அங்குள்ள குளத்தில் கவிழ்ந்தது

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் கங்கை கொண்டானில் இருந்து இன்று காலை கான்கீரிட் கலவையை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று அம்பையை நோக்கி சென்றது. லாரியை கொடியன்குளத்தை சேர்ந்த திவாகர் ஓட்டிச்சென்றார்.

    நெல்லையை அடுத்த கோபாலசமுத்திரம் பிராஞ்சேரி அருகே வந்தபோது திடீரென லாரி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து அங்குள்ள குளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் லாரியின் மேல்பகுதி தண்ணீரில் மூழ்கியது. இதில் அதிர்ஷ்டவசமாக டிரைவர் உயிர் தப்பினார்.

    விபத்துக்குறித்து முன்னீர்பள்ளம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • குளம் போல் தேங்கிய தண்ணீரில் டிரான்ஸ்பார்மர்கள் மிதக்கிறது.
    • குறிப்பிட்ட அளவு தண்ணீர் வடிந்தபின் மீதமுள்ள தண்ணீர் வெளியேற முடியாமல் 3 நாட்களாக தேங்கி உள்ளது.

    வாடிப்பட்டி

    வாடிப்பட்டி பகுதியில் 2 நாட்களுக்கு முன்பு 95 மில்லி மீட்டர் மழை கொட்டி தீர்த்தது. பல இடங்களில் தண்ணீர் குளம் போல் தேங்கி காட்சியளித்தது. வாடிப்பட்டி மயானம் முன்பு தாதம்பட்டிக்கு செல்லும் சாலையோரம் 2 டிரான்ஸ்பார்மர்கள் உள்ளன.

    அந்த டிரான்ஸ்பார்மர்களுக்கு கீழ் பகுதியில் உள்ள பள்ளத்தில் தண்ணீர் குளம் போல் தேங்கியுள்ளது. அதன் எதிர்புறம் சாலையில் தண்ணீர் வடிந்து செல்ல தற்காலிகமாக வடிகால் அமைக்கப்பட்டது. அந்த வடிகால் சாலையின் மட்டத்திற்கு உள்ளது. அதனால் குறிப்பிட்ட அளவு தண்ணீர் வடிந்தபின் மீதமுள்ள தண்ணீர் வெளியேற முடியாமல் 3 நாட்களாக தேங்கி உள்ளது. 

    • 15 அடி உயரமுள்ள பாலத்தில் முழுவதுமாக மழைநீர் நிரம்பியுள்ளது.
    • 30க்கும் மேற்பட்ட குடியிருப்புகளை சேர்ந்த பொதுமக்கள் சுரங்கப் பாதையை பயன்படுத்தி வருகின்றனர்.

    உடுமலை :

    திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சிக்கு உட்பட்ட பெரியார் நகரில் ரெயில்வே சுரங்க நடைபாதை உள்ளது. இந்த பாதை நகரின் வடக்கு, தெற்கு பகுதி மக்களை இணைப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் சுமார் 15 அடி உயரமுள்ள பாலத்தில் முழுவதுமாக மழைநீர் நிரம்பியுள்ளது. மழை நீரை வெளியேற்றுவதற்கான ஏற்பாடுகள் தோல்வியடைந்ததால் அவ்வழியை பயன்படுத்த முடியாமல் வெகு தொலைவு சென்று தேவையான இடங்களுக்கு மக்கள் செல்ல வேண்டியுள்ளது.

    இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, பழநியாண்டவர் நகர், ஜீவா நகர், தாண்டாகவுண்டன்தோட்டம், காந்திபுரம் உட்பட 30க்கும் மேற்பட்ட குடியிருப்புகளைச் சேர்ந்த பொதுமக்கள் இந்த சுரங்கப் பாதையை பயன்படுத்தி வருகின்றனர். தற்போது பாதை முடக்கப்பட்டுள்ளதால், நகருக்குள் சென்று போக்குவரத்து நெரிசலை சந்தித்து செல்ல வேண்டியுள்ளது. இப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • மழை வளம் அதிகரிக்க மரம் வளர்க்கும் பணிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
    • 9 குளங்களில் பணி முடிந்து விட்டது.

    கோவை:

    நாட்டின் 75-வது சுதந்திர தின அமுத பெருவிழாவை முன்னிட்டு கோவை மாவட்டத்தில் 75 குளம், குட்டைகள் ஏற்படுத்துதல், புனரமைத்தல் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    இது குறித்து ஆய்வு கூட்டம் மத்திய அரசின் ஜல் சக்தி அபியான் திட்டகுழு இணை செயலாளர் டாக்டர் பாலாஜி தலைமையில் நடந்தது. அப்போது அவர் பேசியதாவது:-

    ஜல்சக்தி அபியான் திட்டத்தில் நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தும் வகையில் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. மழைநீர் சேகரிப்பு அமைப்புகள், பண்ணை குட்டை அமைத்தல், சிறு தடுப்பணைகள், விவசாய நிலையங்களில் வரப்பு அமைத்தல், மழை வளம் அதிகரிக்க மரம் வளர்க்கும் பணிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

    இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்தில் அதிர்த சரோவர் திட்டத்தில் 75 குளங்கள் அமைப்பு மற்றும் சீரமைக்கப்பட உள்ளன. தற்போது 22 குளங்களில் சீரமைப்பு பணிகள் நிறைவு பெற்றுள்ளது. 14 குளங்கள் அமைக்கும் பணி தொடங்கியதில் 9 குளங்களில் பணி முடிந்து விட்டது.

    குளங்களில் இருந்து நீர் வெளியே செல்லும் கால்வாய்களில் நீர் கால் பகுதியை கண்டறிந்து மீள் நிரப்பு புழை அமைக்கும் போது நிலத்தடி நீர் மட்டம் உயரும்.

    இதற்கு முக்கியத்தும் அளித்து பணிகள் செய்ய வேண்டும். குளங்களை சீரமைக்கும் போது கரைகளை மிக உறுதி தன்மை கொண்டதாக பலப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

    இதில் கலெக்டர் சமீரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முக மை திட்ட இயக் குனர் கவிதா மற்றும் அரசு அலுவ லர்கள் கலந்து கொண்டனர். 

    • மறுகாலின் சுவர்களில் கற்கள் பெயர்ந்து இடிந்து விழுந்துள்ளன. இதனை சீரமைக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
    • குளம் உடைந்தால் காந்திநகர், செட்டிமேடு பகுதிகளில் கடும் பாதிப்பு ஏற்படும் என்றும் விவசாயிகள் கவலையுடன் கூறுகின்றனர்.

    களக்காடு:

    களக்காடு அருகே உள்ள செங்களாகுறிச்சி குளத்தின் மூலம் 400 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. பொதுப் பணித்துறையினரின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த குளத்தின் மறுகால் போதிய பராமரிப்பு இல்லாமல் காணப்படுகிறது.

    மறுகாலின் சுவர்களில் கற்கள் பெயர்ந்து இடிந்து விழுந்துள்ளன. இதனை சீரமைக்க வேண்டும் என்று விவசாயிகள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    இதுபோல குளத்தின் மறுகாலில் ஆங்காங்கே விரிசல்கள் ஏற்பட்டுள்ளது. தற்போது குளத்தின் நீர்மட்டம் அதிகளவில் இல்லை.

    மழை பெய்து தண்ணீர் வரத்து அதிகரித்தால், விரிசல்களில் உடைப்பு ஏற்படும் சூழல் நிலவுவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். குளம் உடைந்தால் அருகில் உள்ள காந்திநகர், செட்டிமேடு பகுதிகளில் கடும் பாதிப்பு ஏற்படும் என்றும் விவசாயிகள் கவலையுடன் கூறுகின்றனர்.

    எனவே பழுதடைந்துள்ள குளத்தின் மறுகாலை சீரமைக்க அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • தொண்டியில் குளத்திற்குள் கழிவுநீர் விடப்படுவதால் சாக்கடையாக மாறிவருகிறது.
    • சுற்றுலாப்பயணிகளும், வாகன ஓட்டிகளும் மூக்கைப்பிடித்துக்கொண்டு இந்த பகுதியைக் கடக்கும் நிலை உள்ளது.

    தொண்டி

    ராமநாதபுரம் மாவட்டம். தொண்டியில் கிழக்கு கடற்கரை சாலையும், தொண்டி-மதுரை சாலையும் சந்திக்கும் இடத்தில் வண்ணாங்குளம் உள்ளது. இந்த குளத்தை பொதுமக்கள் குளிப்பதற்கு பயன்படுத்துகின்றனர்.

    சில மாதங்களில் பெய்த மழையால் இந்த குளம் நீர் நிறைந்து காணப்பட்டது. அதில் கரையே தெரியாத அளவிற்கு ஆகாய தாமரை படர்ந்து குளிக்க பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.

    மேலும் குளத்திற்குள் கழிவுநீர் விடப்படுவதால் குளம் கழிவுநீர் சாக்கடையாக மாறிவருகிறது. அந்த பகுதியை கடந்தால் துர்நாற்றம் வீசுகிறது. பொதுமக்களும், இந்த வழியாக பயணிக்கும் சுற்றுலாப்பயணிகளும், வாகன ஓட்டிகளும் மூக்கைப்பிடித்துக்கொண்டு இந்த பகுதியைக் கடக்கும் நிலை உள்ளது.

    ஆகாய தாமரையால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட குளத்தை சுத்தப்படுத்தி, ஆழப்படுத்தி முன்பு போல் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும்.

    அதற்கு முன்னதாக குளத்தை சுகாதாரத்துறையினர் பார்வையிட்டு நோய் தொற்று ஏற்படாமலிருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

    • களக்காடு ஒன்றியத்திற்கு ட்பட்ட கோதைச்சேரியில் வேட்டைக்காரன் குளம் உள்ளது.
    • களக்காடு யூனியன் நிர்வாகத்திற்கு உள்பட்ட இந்த குளம் மீன் வளர்ப்பதற்காக ஏலம் விடப்பட்டது.

    களக்காடு:

    களக்காடு ஒன்றியத்திற்கு ட்பட்ட கோதைச்சேரியில் வேட்டைக்காரன் குளம் உள்ளது. களக்காடு யூனியன் நிர்வாகத்திற்கு உள்பட்ட இந்த குளம் மீன் வளர்ப்பதற்காக ஏலம் விடப்பட்டது.

    இதனை வடுகட்சி மதிலை சேர்ந்த முத்துப்பாண்டியன் (55) என்பவர் குத்தகைக்கு எடுத்து மீன்கள் வளர்த்து வந்தார். இந்நிலையில் குளத்தில் ஆங்காங்கே குவியல் குவியலாக மீன்கள் இறந்து மிதக்கின்றன.

    மீன்கள் இறப்பிற்கு என்ன காரணம் என்பது தெரியவில்லை. குளத்தில் விஷம் அல்லது வேறு ஏதேனும் ரசாயன பொருட்கள் கலக்கப் பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

    இதனால் ரூ.2 லட்சம் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக முத்துப்பாண்டியன் தெரிவித்துள்ளார்.

    மேலும் இந்த குளத்தில் அருகில் உள்ள கிராம மக்கள் ஆடு மாடுகளை தண்ணீர் அருந்த கொண்டு செல்வது வழக்கம்.

    மீன்கள் இறந்து மிதப்பதால் குலத்திற்கு தண்ணீர் குடிக்க ஆடு மாடுகளை கொண்டு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    • மக்கள் பல்வேறு பயன்பாடுகளுக்கு பயன்படுத்தி வந்தனர்.
    • ஆகாயதாமரை, செடி, கொடிகள் அகற்றி சுத்தம் செய்யப்பட்டது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் நகரம் கீழவீதியில் அமைந்துள்ளது தேரடி குளம். இந்த குளத்தை அப்பகுதி மக்கள் பல்வேறு பயன்பாடுகளுக்கு பயன்படுத்தி வந்தனர். சமீப காலமாக ஆகாய தாமரை, செடி கொடிகள் படர்ந்து பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் குளம் காணப்பட்டது.

    இது குறித்து 13-வது வார்டு நகா்மன்ற உறுப்பினர் மயில்வாகனன் கோரிக்கையை ஏற்று வேதாரண்யம் நகராட்சி தலைவா் புகழேந்தி, ஆணையர் ஹேமலதா ஆகியோர் உத்தரவின் பேரில் ஆகாயதாமரை, செடி, கொடிகள் அகற்றி சுத்தம் செய்யப்பட்டது.

    ஆட்களோடு வார்டு கவுன்சிலர் மயில்வாகணன் இறங்கி வேலை செய்தது பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றது.

    • இறந்து கிடந்த குழந்தை பெண் குழந்தை என்பதும், அது பிறந்து 2 நாட்களே ஆகியிருக்கும் என்பதும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த குழந்தை யாருடையது? அதனை குளத்தில் வீசியவர்கள் யார்? என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

    நெல்லை:

    நெல்லையை அடுத்த சுத்தமல்லி அருகே மேலதிருவேங்கடநாதபுரம் கிராமம் உள்ளது.

    இங்குள்ள குளத்தில் பச்சிளம் குழந்தை ஒன்று இறந்த நிலையில் கிடப்பதாக சுத்தமல்லி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக போலீசார் அங்கு விரைந்து சென்று குளத்தில் இறந்த நிலையில் கிடந்த குழந்தை உடலை மீட்டனர்.

    அந்த குழந்தை பெண் குழந்தை என்பதும், அது பிறந்து 2 நாட்களே ஆகியிருக்கும் என்பதும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

    இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த குழந்தை யாருடையது? அதனை குளத்தில் வீசியவர்கள் யார்? என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

    மேலும் அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காமிராக்களையும் ஆய்வு செய்து வருகின்றனர்.

    • நொய்யல் நீராதாரத்தை அடிப்படையாக கொண்ட குளங்களில், இன்னும் நீர் நிரம்பியிருக்கிறது.
    • குளம், குட்டைகள் தூர்வாரப்பட்டதும், நீர் சேமிப்பு அதிகரித்திருப்பதற்குக் காரணமாக அமைந்தது.

    உடுமலை :

    தென்மேற்குப் பருவ மழை தீவிரம் அடைந்து வருகிறது. இந்த மழை திருப்பூர் மாவட்டத்தில் குளம், குட்டை உள்ளிட்ட நீர்நிலைகள் மீண்டும் நிறைவதற்கும், நிலத்தடி நீர் மட்டம் உயர்வதற்கும் பயன்படும். உள்ளாட்சிகளின் குடிநீர் வினியோகத்திற்குப் பற்றாக்குறை ஏற்படாத நிலையையும் பாசன நீராதாரத்திற்கு குறையில்லாத சூழலையும் உருவாக்கும்.

    ஏற்கனவே வடகிழக்குப் பருவமழை சராசரியைக் காட்டிலும் மாவட்டத்தில் அதிக அளவில் பெய்துள்ளது. இதனால்கடந்த கோடைக்காலத்தை குடிநீர்த்தட்டுப்பாடு இன்றி கடக்க முடிந்தது. நொய்யல் நீராதாரத்தை அடிப்படையாக கொண்ட குளங்களில், இன்னும் நீர் நிரம்பியிருக்கிறது. ஊராட்சிகளில் உள்ள பல்வேறு குளம், குட்டைகள், மழை காரணமாக, நீர் நிரம்பியிருந்தது. குளம், குட்டைகள் தூர்வாரப்பட்டதும், நீர் சேமிப்பு அதிகரித்திருப்பதற்குக் காரணமாக அமைந்தது. சமீப காலமாக மாவட்டத்தில் உள்ள தன்னார்வ அமைப்புகள், அரசுடன் இணைந்து நீர்நிலைப்பராமரிப்பில் அக்கறை காட்டி வருகிறது. சிறிய மாற்றம் என்றாலும்கூட, அது பெரிய பயனை அளித்திருக்கிறது.

    கோவை, நீலகிரி மாவட்டங்களில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்திருப்பதும் திருப்பூர் மாவட்டத்துக்கு அதிக பயன்களை அளிக்கிறது.குறிப்பாக, பில்லூர், பி.ஏ.பி., அணைகள் நிறைந்தால் திருப்பூர் மாவட்டத்திற்குத் தடையற்ற குடிநீர் ஆதாரத்துக்கும், பாசன நீராதாரத்திற்கும் வழிவகுக்கிறது.

    தமிழக - கேரள எல்லைப் பகுதியில் உள்ள பில்லூர் அணை முழு கொள்ளளவை எட்டிவிடும். பவானியாற்றின் கரையோர பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களில் இருக்குமாறு உள்ளாட்சி நிர்வாகங்கள் அறிவுறுத்தியுள்ளன.பி.ஏ.பி., திட்ட முக்கிய அணைகளில் ஒன்றான சோலையாறு அணையும் நிரம்பும் நிலையில் உள்ளது. அணையில் இருந்து தண்ணீர் பரம்பிக்குளம்அணைக்கு திறந்து விடப்படுகிறது. பரம்பிக்குளம், ஆழியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்திருக்கிறது.இது திருப்பூர் மாவட்ட விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

    மழைக்காலத்தில் உள்ளாட்சி நிர்வாகங்கள் மழைநீர் சேமிப்பில் அக்கறை காட்ட வேண்டும். வீடுகள்தோறும் மழைநீர் சேமிப்புக்கான அமைப்புகளைச் செம்மைப்படுத்த வேண்டியது அவசியம். சிறுதுளி பெருவெள்ளம்என்பதை உணர்த்த வேண்டும். மழைநீரை வீணாக்காமல் பயன்படுத்துவது அவசியமானது. இதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பும் தேவை.நிலத்தடி நீர் உயர்வதன் மூலம், பாசனத்திற்கும், குடிநீருக்கும், பிற உபயோகங்களுக்கும் தண்ணீர் தாராளமாக கிடைக்கும்.

    • பல ஏக்கர் பரப்பில் பரந்து விரிந்து கிடக்கும் இக்குளத்தில், நொய்யல் ஆற்றிலிருந்து வரும் தண்ணீர் நிரம்பியுள்ளது.
    • பொழுது போக்கும் விதமாக பல இளைஞர்களும் இங்கு மீன் பிடிக்கின்றனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் - மங்கலம் ரோட்டில் ஆண்டிபாளையம் குளம் உள்ளது. பல ஏக்கர் பரப்பில் பரந்து விரிந்து கிடக்கும் இக்குளத்தில், நொய்யல் ஆற்றிலிருந்து வரும் தண்ணீர் நிரம்பியுள்ளது.

    இக்குளத்தின் கரையில் பலரும் தூண்டில் போட்டு மீன் பிடிக்கின்றனர். பள்ளி விடுமுறை நாட்களிலும் சிறுவர்களும், பிற நாட்களில் பொழுது போக்கும் விதமாக பல இளைஞர்களும் இங்கு மீன் பிடிக்கின்றனர்.பெரும்பாலான சிறுவர்கள் சுற்றுப்பகுதியில் வசிக்கும் நிலையில், விடுமுறை நாட்களில் நண்பர்கள் குழுவாகச் சேர்ந்து நீண்ட நேரம் இங்கு வந்து மீன் பிடிக்கின்றனர். இந்த குளம் தற்போது முழுமையாக நீர் நிரம்பி நிற்கிறது.மீன் பிடிக்கும் ஆர்வத்தில் குளத்தில் உள்ளநிலை குறித்து புரிதல் இன்றியும், கரைகளில் விளையாட்டுத் தனமாக ஓடிப்பிடித்தும் விளையாடுகின்றனர்.இந்த குளத்தில் உள்ள நீரில் ஏற்கனவே சில உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளன. இந்நிலையில் ஆபத்தை அறியாமல் சிறுவர்கள் இங்கு வந்து மீன் பிடித்து விளையாடுவது ஆபத்தை விலை கொடுத்து வரவழைப்பது போல் உள்ளது.

    இதைத் தவிர்க்கும் வகையில் குளத்துக்கு பாதுகாப்பு ஏற்படுத்துவதோடு சிறுவர்கள் குளத்தின் கரையில் ஒன்று சேர்ந்து இது போல் செயல்படுவது தவிர்க்க வேண்டும். அவ்வகையில் உரிய கண்காணிப்பு மேற்கொள்ள வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

    ×