search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "body recovery"

    • நண்பர்களே மதுபோதையில் அடித்து கொன்றுவிட்டு உடலை கல்லை கட்டி கிணற்றில் வீசி இருப்பது தெரியவந்தது.
    • பிரபல ரவுடி ஸ்ரீதரின் உறவினர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம், பல்லவர் மேடு பகுதியை சேர்ந்தவர் கிரிதரன் (வயது30). இவர் மறைந்த பிரபல ரவுடி ஸ்ரீதர்தனபாலின் அக்காள் மகன் ஆவார்.

    இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் 13-ந்தேதி தேதி வீட்டில் இருந்து வெளியே சென்றவர் பின்னர் திரும்பி வரவில்லை. அவர் மாயமாகி இருந்தார்.

    இதுகுறித்து சிவகாஞ்சி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். ஆனால் மாயமான கிரிதரன் குறித்து எந்த தகவலும் கிடைக்காமல் இருந்தது.

    இதற்கிடையே அவரை நண்பர்களே மதுபோதையில் அடித்து கொன்றுவிட்டு உடலை கல்லை கட்டி கிணற்றில் வீசி இருப்பது தெரியவந்தது.

    இது தொடர்பாக கிரதரனின் நண்பர்களான பல்லவர்மேடு பகுதியை சேர்ந்த கார்த்திக், ஆகாஷ், ஹரிஷ், தாமோதரன் ஆகிய 4 பேரை கைது செய்தனர். அவர்கள் கொடுத்த தகவலின் படி புதுப்பாளையம் அருகே பாழடைந்த வீட்டுக்குப் பின்புறத்தில் உள்ள கிணற்றில் வீசப்பட்ட கிரிதரன் உடலை எலும்புக்கூடாக மீட்டனர். அவர் மாயமாகி 7 மாதத்துக்கு பின்னர் உடல் மீட்கப்பட்டு உள்ளது.

    கிரிதரன் மாயமான ஜனவரி மாதம் 13-ந்தேதி நண்பர்களான ஹரிஷ் உள்பட 4 பேருடன் மதுகுடித்து உள்ளார். அப்போது கிரிதரனுக்கும் அவரது நண்பர்களுக்கும் இடையே யார் பெரியவர்கள் என்று வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலில் கிரிதரனை நண்பர்களே அடித்து கொலை செய்து உள்ளனர். பின்னர் உடலில் கல்லை கட்டி அருகில் உள்ள கிணற்றில் வீசி சென்று உள்ளனர். மேலும் இதுபற்றி வெளியில் தெரியாமல் இருப்பதற்காக கிணற்றின் மேல் பகுதியில் மரக்கிளைகளையும் வெட்டிபோட்டு இருக்கிறார்கள்.

    இதனால் கிரிதரன் கொலையுண்டது வெளியில் தெரியாமல் இருந்தது. இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு கிரிதரனின் நண்பர்கள் மதுபோதையில் இருந்தபோது கிரிதரணை கொலை செய்து உடலை கிணற்றில் வீசி இருப்பதாக உளறி உள்ளனர்.

    இதன் பின்னரே கிரிதரன் கொலையுண்ட தகவல் போலீசுக்குதெரிந்தது. கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்றும் மேலும் விசாரணை நடந்து வருகிறது. பிரபல ரவுடி ஸ்ரீதரின் உறவினர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • கடலூர் அருகே சொர்ணாவூர் அணைக்கட்டில் மூழ்கி பலியான வாலிபர் உடல் மீட்கப்பட்டது.
    • தீயணைப்பு படை வீரர்கள் மற்றும் போலீசார் விரைந்து சென்று தேடுதல் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அருகே தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே சொர்ணாவூர் அணைக்கட்டு உள்ளது. சம்பவத்தன்று இந்த அணைக்கட்டில் புதுவை மாநிலம் அரியாங்குப்பம் பகுதியைச் சேர்ந்த உதயகுமரன் (வயது 35) என்பவர் தனது நண்பர்கள் 4 பேருடன் குளித்தார். அப்போது உதயகுமரன் தண்ணீரில் மூழ்கினார். அதிர்ச்சி அடைந்த 4 நண்பர்களும் உதயகுமரனை காப்பாற்ற முயன்றனர். ஆனால் அவர்களால் முடியவில்லை.

    இதுகுறித்து நெல்லிக்குப்பம் தீயணைப்பு நிலையத்திற்கும், வளவனூர் போலீசாருக்கும் தகவல் தெரியப்பட்டது. தகவல் அறிந்த தீயணைப்பு நிலைய அலுவலர் சிவா தலைமையிலான தீயணைப்பு படை வீரர்கள் மற்றும் போலீசார் விரைந்து சென்று தேடுதல் பணியில் ஈடுபட்டு வந்தனர். ஆனால் உடலை கண்டுபிடிக்க முடியவில்லை. இன்று காலையும் தேடுதல் வேட்டை தொடர்ந்தது அப்போது அணைக்கட்டு ஓரத்தில் இறந்த நிலையில் உதயகுமரன் உடல் மீட்கப்பட்டது. இந்த உடலை தீயணைப்பு நிலைய வீரர்கள் மீட்டு வளவனூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து வளவனூர் போலீசார் வழக்குபதிந்து விசாரிக்கிறார்கள்.

    • இறந்து கிடந்த குழந்தை பெண் குழந்தை என்பதும், அது பிறந்து 2 நாட்களே ஆகியிருக்கும் என்பதும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த குழந்தை யாருடையது? அதனை குளத்தில் வீசியவர்கள் யார்? என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

    நெல்லை:

    நெல்லையை அடுத்த சுத்தமல்லி அருகே மேலதிருவேங்கடநாதபுரம் கிராமம் உள்ளது.

    இங்குள்ள குளத்தில் பச்சிளம் குழந்தை ஒன்று இறந்த நிலையில் கிடப்பதாக சுத்தமல்லி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக போலீசார் அங்கு விரைந்து சென்று குளத்தில் இறந்த நிலையில் கிடந்த குழந்தை உடலை மீட்டனர்.

    அந்த குழந்தை பெண் குழந்தை என்பதும், அது பிறந்து 2 நாட்களே ஆகியிருக்கும் என்பதும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

    இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த குழந்தை யாருடையது? அதனை குளத்தில் வீசியவர்கள் யார்? என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

    மேலும் அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காமிராக்களையும் ஆய்வு செய்து வருகின்றனர்.

    திருப்பூரில் விவசாயி கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் தலையில் பலத்த காயங்களுடன் பிணமாக கிடந்தார். அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருப்பூர்:

    திருப்பூர் அனுப்பர்பாளையம் நெருப்பெரிச்சல் பகுதியில் உள்ளது ஜி.என். பாலன் நகர். இந்த பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 50). விவசாயி. இவரது மனைவி கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார்.

    சுப்பிரமணியுடன் அவரது மகள் ஸ்வேதா (14) வயது வசித்து வருகிறார். ஸ்வேதா இரவு நேரத்தில் அதே பகுதியில் உள்ள பாட்டி வீட்டில் தூங்குவது வழக்கம். சுப்பிரமணியின் தாய் தான் காலை, மாலை சாப்பாடு சமைத்து சுப்பிரமணிக்கு கொடுப்பார்.

    இன்று காலை வழக்கம்போல் மகனுக்கு சாப்பாடு கொடுக்க வீட்டுக்கு சென்றார். வீட்டின் கேட்டு பூட்டப்பட்டிருந்தது. சந்தேகம் அடைந்த தாய் சத்தம்போட்டு அழைத்தார். பதில் எதுவும் வரவில்லை.

    அதிர்ச்சியடைந்த அவர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது சுப்பிரமணி கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் தலையில் பலத்த காயங்களுடன் பிணமாக கிடந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்ததும் அனுப்பர்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேலு தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சுப்பிரமணியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாணை நடத்தி வருகிறார்கள். சுப்பிரமணி தனியே இருப்பதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் அவரிடம் பணம், நகை அதிகம் இருக்கும் என்று நுழைந்தபோது கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு காரணமா? என்று தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஓசூரில் மாயமான அடகு கடை உரிமையாளர் ரெயில் தண்டவாளத்தில் பிணமாக மீட்கப்பட்டார். தனது சாவுக்கு காரணமானவர் யார் என பெயரை வாட்ஸ் அப்பில் வெளியிட்டு அவர் இறந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
    ஓசூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் எம்.ஜி. ரோட்டை சேர்ந்தவர் ஹேமந்த்குமார் சோனி (வயது 51). இவர் அந்த பகுதியில் நகை அடகு கடை நடத்தி வந்தார். இவருக்கு கைலாஷ் என்ற மகனும், தீபிகா சோனி என்ற மகளும் உள்ளனர். இவர்களில் கைலாஷ் தனியாக நகை அடகு கடை நடத்தி வருகிறார். தீபிகா சோனி தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை செய்து வருகிறார்.

    ஹேமந்த்குமார் சோனி நேற்று முன்தினம் மாலை கடையை பூட்டி விட்டு வெளியே சென்றார். அதன் பிறகு அவர் வீடு திரும்பவில்லை. அவரது மோட்டார் சைக்கிள் ஓசூர் சந்திர சூடேஸ்வரர் மலைக்கோவில் அருகில் கண்டெடுக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவருடைய மகள் தீபிகா சோனி இது குறித்து ஓசூர் டவுன் போலீசில் புகார் செய்தார்.

    இந்த நிலையில் நகை அடகு கடை உரிமையாளர்கள் அசோசியேசனின் வாட்ஸ் அப் குரூப் ஒன்றில் ஹேமந்த் குமார் சோனி பெயரில் குறுந்தகவல் (மெசேஜ்) ஒன்று வந்தது. அதில் தனது சாவிற்கு எம்.ஜி. ரோட்டில் அலுமினியம் கம்பெனி நடத்தி வரும், மங்கல் என்பவர் தான் காரணம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

    இதனால் ஹேமந்த் குமார் சோனியை அவரது உறவினர்கள், போலீசார் நேற்று முன்தினம் இரவு முழுவதும் தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் கெலமங்கலம் - ஓசூர் ரெயில் நிலையங்களுக்கு இடையே, ரெயிலில் அடிபட்டு இறந்த நிலையில், நேற்று காலை ஹேமந்த்குமார் சோனி பிணமாக கிடந்தார். இது குறித்து தகவல் அறிந்த ஓசூர் ரெயில்வே போலீசார் அங்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    ஹேமந்த் குமார் சோனி தற்கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள். அவரது மரணம் தொடர்பாக மங்கல் என்பவரிடம் விசாரணை நடத்த ஓசூர் டவுன் போலீசார் முடிவு செய்துள்ளனர். ஓசூரில் மாயமான நகை அடகு கடை உரிமையாளர் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    மேலப்பாளையத்தை சேர்ந்த கார் டிரைவரை மர்ம நபர்கள் கடத்திக்கொலை செய்து உடலை காட்டுப்பகுதியில் வீசி சென்றவர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சாத்தான்குளம்:

    சாத்தான்குளம் அருகே உள்ள பன்னம் பாறை-பேய்குளம் ரோட்டில் உள்ள காட்டுப்பகுதியில் நேற்று இரவு 10 மணி அளவில் சுமார் 35 வயது மதிக்கத்தக்க ஒரு வாலிபர் உடலில் காயங்களுடன் பிணமாக கிடந்தார். அவர் நீலக்கலரில் ஜீன்ஸ் பேண்ட் அணிந்திருந்தார். சட்டை அணியவில்லை.

    இதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து சாத்தான்குளம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், பிணமாக கிடந்த வாலிபரின் உடலை மீட்டு விசாரணை நடத்தினர். வாலிபரின் உடலில் உருட்டுக்கட்டையால் தாக்கிய காயங்கள் இருந்தன.

    ஆகவே அவரை யாரோ மர்மநபர்கள் அடித்து கொலை செய்துள்ளது தெரியவந்தது. ஆனால் கொலை செய்யப்பட்ட அந்த வாலிபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்று முதலில் தெரியவில்லை. இதையடுத்து மகிபாலனின் உடலைமீட்டு பிரேத பரிசோதனைக்காக சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

    வாலிபரின் பேண்ட் பாக்கெட்டை சோதனை செய்த போது அதில் பாளை பெருமாள்புரத்தை சேர்ந்த ஒரு பெண்ணின் முகவரி இருந்தது. அந்த முகவரிக்கு சென்று போலீசார் விசாரணை நடத்தியதில், அந்த பெண்ணின் தங்கையான மீரா என்பவரின் கணவரான மேலப்பாளையத்தை சேர்ந்த மகிபாலன்(வயது 33) என்பவரே கொலை செய்யப்பட்டு கிடந்தவர் என்பது தெரிய வந்தது.

    அவர் சொந்தமாக கார் வைத்து ஓட்டி வந்துள்ளார். அவருக்கு 3 வயதில் ஒரு மகனும் உள்ளான். மகிபாலன் கொலை குறித்து சாத்தான்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கொன்றது யார்? எதற்காக கொலை செய்தனர்? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மகிபாலன் நேற்று முன்தினம் வீட்டில் இருக்கும்போது அவரது வீட்டிற்கு 2 பேர் வந்து சாத்தான்குளத்திற்கு சவாரி செல்லவேண்டும் என்று கூறியுள்ளனர். இதையடுத்து அவர்களை தனது காரில் அழைத்துக்கொண்டு மகிபாலன் சென்றுள்ளார். அதன்பிறகு அவர் வீட்டிற்கு திரும்பி வரவில்லை.

    இந்நிலையில் மகிபாலன் நேற்று இரவு சாத்தான்குளம் அருகே பிணமாக மீட்கப்பட்டார். ஆகவே அவரை சவாரி அழைத்து சென்றவர்கள், சாத்தான்குளத்திற்கு கடத்தி சென்று அடித்து கொலை செய்திருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர்.

    மேலும் மகிபாலன் காரையும் காணவில்லை. ஆகவே கொலையாளிகள் அவரது காரை கடத்தி சென்றிருக்கலாம் என தெரிகிறது. மகிபாலனின் மனைவி மீராவிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.


    அப்போது மேலப்பாளையத்தில் சில வீடுகளில் நகைகள் கொள்ளை போனது தொடர்பாக தனது கணவர் மீது சிலர் சந்தேகப்பட்டதாகவும், அது தொடர்பாக தங்களது குடும்பத்திற்கும், அங்குள்ள சிலருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாகவும், ஆகவே அவர்கள் தனது கணவரை கடத்தி கொலை செய்திருப்பார்கள் என கூறியிருக்கிறார்.

    ஆகவே மகிபாலன் முன்விரோதம் அல்லது வேறு எதுவும் காரணத்திற்காக கடத்தி கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  

    ×