search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "pond"

    • குட்டையின் கரை பகுதியில் மழை பெய்து சேரும் சகதியுமாக இருந்ததால், அதில் பஸ்சின் முன் சக்கரம் இறங்கி விபத்து ஏற்பட்டது.
    • வார்டு உறுப்பினர் முத்துக்குமார் மற்றும் பொதுமக்கள், அங்கிருந்த பொக்லைன்எந்திரத்துடன் பஸ்சை க மீட்டனர்.

     பல்லடம்:

    பல்லடம் அரசு போக்குவரத்துக் கழக பஸ் எண் 30. இந்த பஸ் பல்லடம்- திருப்பூர் வழித்தடத்தில் சேடபாளையம், ஆறுமுத்தாம்பாளையம்ய, கரைப்புதூர், வழியாக திருப்பூர் சென்று வருகிறது. இந்த நிலையில் நேற்று பல்லடத்தில் இருந்து திருப்பூர் நோக்கி சென்று கொண்டிருந்ததபோது ஆறுமுத்தாம்பாளையத்தில் உள்ள குட்டை அருகே செல்லும்போது எதிரே வந்த காருக்கு வழி விடுவதற்காக ஓட்டுநர் பஸ்சை ரோட்டின் ஓரமாக ஓட்டினார்.

    இதில், குட்டையின் கரை பகுதியில் மழை பெய்து சேரும் சகதியுமாக இருந்ததால், அதில் பஸ்சின் முன் சக்கரம் இறங்கி விபத்து ஏற்பட்டது. இதனால் பஸ் லேசாக சாய்ந்த நிலையில் இருந்தது.பஸ்சில் இருந்த பயணிகள் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். இது குறித்து தகவல் அறிந்த வார்டு உறுப்பினர் முத்துக்குமார் மற்றும் பொதுமக்கள், அங்கிருந்த பொக்லைன்எந்திரத்துடன் பஸ்சை க மீட்டனர். அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், விடுமுறை நாளில் இந்த விபத்து ஏற்பட்டதால் அதிர்ஷ்டவசமாக எந்த சேதமும் இல்லை. இதுவே மற்ற நாளில் நடந்திருந்தால் பள்ளி செல்லும் மாணவ, மாணவிகள் உள்பட பொதுமக்கள் நிறைய பேர் பயணம் செய்திருப்பார்கள். அவர்கள் விபத்தில் சிக்கி இருந்தால் வேறு நிலை ஏற்பட்டிருக்கும், அதிர்ஷ்டவசமாக அப்படி ஏதும் நடக்கவில்லை. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • திருமூர்த்திமலை பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
    • அமராவதி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் ஆற்றில் 6832 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகர் மற்றும் மாவட்டத்தில் நேற்று முன்தினம் காலை முதல் நேற்று மாலை வரை இடைவிடாமல் தொடர்ந்து மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் குளம் போல் மழைநீர் தேங்கியது. சிதலமடைந்த சாலைகள் சகதிக்காடாக மாறின.

    மாவட்டத்திற்குட்பட்ட உடுமலை, பல்லடம், தாராபுரம், காங்கயம், அவினாசி உள்பட அனைத்து பகுதிகளிலும் மழைநீடித்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதுடன் வீடுகளுக்குள் முடங்கினர். சில இடங்களில் குளம்போல் தண்ணீர் தேங்கியுள்ளதால் அதனை அகற்றும் பணியில் உள்ளாட்சி பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

    உடுமலை வனப்பகுதியில் பெய்த மழை காரணமாக திருமூர்த்திமலை பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

    உடுமலை அமராவதி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் ஆற்றில் 6832 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.இதனால் கரையோர மக்கள் பாதுகாப்புடன் இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    மாவட்டம் முழுவதும் நேற்று மாலை வரை மழை பெய்த நிலையில் அதன்பிறகு நின்றது. இன்று காலை மாவட்டம் முழுவதும் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. இரவு முழுவதும் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவியதால் முதியவர்கள் பாதிக்கப்பட்டனர். தாராபுரம், காங்கயம் பகுதியில் 20க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்தன.

    மாவட்டம் முழுவதும் நேற்று பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் விவரம் வருமாறு :- திருப்பூர் வடக்கு-16, அவினாசி-6, பல்லடம் -32, ஊத்துக்குளி-6, காங்கயம்-28, தாராபுரம்-43, மூலனூர்-34, குண்டடம்-25 திருமூர்த்தி அணை -27, அமராவதி அணை- 39, உடுமலை-38.20, மடத்துக்குளம் -76, திருப்பூர் கலெக்டரேட்-7, வெள்ளகோவில் ஆர்.ஐ. அலுவலகம் -35, திருமூர்த்தி அணை (ஐ.பி.) -25, திருப்பூர் தெற்கு-15, கலெக்டர் முகாம் அலுவலகம் - 20.40,உப்பாறு அணை -75, நல்லதங்காள் ஓடை -34,வட்டமலைக்கரை ஓடை- 56.40. மாவட்டம் முழுவதும் மொத்தம் 638மி.மீ. மழை பெய்துள்ளது.

    கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு மற்றும் கரூர் ஆகிய மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழையின் காரணமாக நொய்யலாற்றின் நீர்பிடிப்பு பகுதிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் திருப்பூர் நொய்யல் ஆற்றில் உள்ள நல்லம்மன் கோவிலை வெள்ளம் சூழ்ந்தது. இதனால் பொதுமக்கள் கோவிலுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

    நொய்யல் ஆற்றில் திடீரென்று மழை நீர் வெள்ளம் அதிக அளவில் வருவதால் ஒரத்துப்பாளையம் அணையில் தண்ணீர் தேக்கி வைக்கப்படாமல் நேற்று காலை முதல் வரும் மழை நீர் அப்படியே திறந்து விடப்பட்டு வருகிறது. இதனால் நத்தக்காடையூர் அருகே புதுவெங்கரையாம்பாளையம் கிராமத்தில் செல்லும் நொய்யல் ஆற்றில் நேற்று மதியம் 12 மணி முதல் மழைநீர் திடீரென்று அதிக அளவில் வந்து ஆற்றின் இரு கரைகளையும் தொட்டபடி சீறி பாய்ந்து கரைபுரண்டு செல்கிறது. இதனால் இப்பகுதியில் உள்ள நொய்யல் ஆற்று தாழ்வான தரைப்பாலம் மழைநீரில் மூழ்கியது. இதன் காரணமாக தரை பாலத்தின் வழியாக செல்லும் பகுதிக்கான சாலையில் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது. இதனால் கனரக, இருசக்கர வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன.

    இன்று காலை திருப்பூர் மாநகர் மற்றும் மாவட்டத்தில் மீண்டும் மழை பெய்தது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் சிரமமடைந்தனர். மேலும் தொடர் மழையால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளதுடன் குளம், குட்டைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மழைநீரை பயன்படுத்தி சாகுபடி பணிகளிலும் ஈடுபட்டுள்ளனர்.

    • பக்தர்களின் வசதிக்காக தங்கும் விடுதி அமைக்க வேண்டும்.
    • சிங்காரவேலவர் கோவில் குளத்தை சீரமைக்க கோரிக்கை.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் விற்குடி வீரட்டேசுவர சுவாமி கோவிலில் கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான மக்கள் வருவதால், அங்குள்ள ஏற்பாடுகளை முகம்மது ஷாநவாஸ் எம்.எல்.ஏ. பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அங்கு வரும் பக்தர்களின் வசதிக்காக தங்கும் விடுதி அமைக்க வேண்டும் என்று கோவில் நிர்வாகத்தின் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

    இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரின் கவனத்திற்கு எடுத்துச் சென்று அந்தக் கோரிக்கை நிறைவேற நடவடிக்கை எடுப்பதாக எம்.எல்.ஏ உறுதியளித்தார்.

    அப்போது தி.மு.க ஒன்றிய செயலாளர் ஆர்.டி.எஸ் சரவணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    அதைத் தொடர்ந்து சிக்கல் சிங்காரவேலவவர் கோவிலுக்கு சென்று, கந்தசஷ்டி விழா ஏற்பாடு களை பார்வையிட்டார்.

    மேலும், சிங்காரவேலவர் கோவில் குளத்தை உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் சீரமைக்க கோரிக்கை வைத்துள்ளது தொடர்பாக அங்கு ஆய்வு மேற்கொண்டார்.

    ஆய்வின் போது, தி.மு.க ஒன்றிய செயலாளர் ஆனந்த், விடுதலை சிறுத்தை கட்சி மாவட்ட பொறுப்பாளர் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    • மாடுகள் குளத்தில் இறங்கும்போது சகதியில் சிக்கி கொள்வதால் வெளியே வர முடியாமல் அவை இறந்து போவது வாடிக்கையாகிவிட்டது
    • தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து மாடுகளை உயிருடன் மீட்டனர்.

    உடன்குடி:

    உடன்குடி அனல்மின் நிலைய பின்புறம் உப்பு நீர் தேங்கி சேறும், சகதியுமாக மாறிவிட்டது. இது எல்லப்பநாயக்கன் குளத்தின் உபரிநீர் தேங்கும் தாழ்வான நீர்ப்பிடிப்பு பகுதி என்பதால் அதன் தரையை உயர்த்த சுற்றுவட்டார பகுதிகளில் மணல் அள்ளி நிரப்பினர். தற்போது ஆபத்தான பகுதியாகிவிட்டது

    காடுகளில் மேய்ச்சலுக்கு செல்லும் மாடுகள் தண்ணீர் குடிக்க குளத்தில் இறங்கும்போது கால்கள் சகதியில் சிக்கி கொள்வதால் வெளியே வர முடியாமல் அவை இறந்து போவது வாடிக்கையாகிவிட்டது. மேலும் இதுஆட்கள் அதிகம் நடமாடாத காட்டுப்பகுதி என்பதால் அதிகம் வெளியே தெரிவதில்லை.

    இந்த நிலையில்ஒரு பள்ளத்தில் மாடுகள் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்ததைப் பார்த்த பக்கத்து தோட்டக்காரர் சிவலூர்ஜெயராஜ் உடனடியாக திருச்செந்தூர் தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினருக்கு இதுபற்றி தகவல் கொடுத்தார். அவர்கள் விரைந்து வந்து மாடுகளை உயிருடன் மீட்டனர். இதில் ஒரு மாடு பலியாகி விட்டது.

    • மழை பெய்ததன் பயனாக ராசாத்தா கோவில் குட்டை பாதி அளவு மழைநீரால் நிரம்பி பார்ப்பதற்கு ரம்மியமாக காட்சியளிக்கிறது.
    • ட்டையின் உள்புறமும், வெளிபுறமும் அதிக அளவில் சீமைக்கருவேல மரங்கள் வளர்ந்து நிற்கின்றன.

    அனுப்பர்பாளையம்:

    திருப்பூரை அடுத்த திருமுருகன்பூண்டி நகராட்சி ராக்கியாபாளையம் ராசாதாத்தா கோவில் அருகே வருவாய்துறைக்கு சொந்தமான குட்டை உள்ளது. இந்த குட்டையின் பரப்பளவு 4.82 ஏக்கராகும். கடந்த 2 மாதமாக திருப்பூர் மற்றும் சுற்று வட்டாரத்தில் மழை பெய்ததன் பயனாக ராசாத்தா கோவில் குட்டை பாதி அளவு மழைநீரால் நிரம்பி பார்ப்பதற்கு ரம்மியமாக காட்சியளிக்கிறது. மேலும் குட்டையை சுற்றி பச்சை பசேலென மரங்கள் பசுமையாக அமைந்துள்ளது. ஆனால் குட்டையின் உள்புறமும், வெளிபுறமும் அதிக அளவில் சீைமக்கருவேல மரங்கள் வளர்ந்து நிற்கின்றன.

    திருப்பூர் சுற்று வட்டாரத்தில் பெரிய அளவிலான குளம், குட்டைகள் இல்லாத நிலையில் 4 ஏக்கர் பரப்பளவிலான குட்டையை பராமரித்து பொதுமக்களுக்கு பயனுள்ள வகையில் பொழுதுபோக்கு அம்சத்துடன் கூடிய திட்டமாக மாற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

    • அன்சூர் குளம் கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.
    • குளத்தின் மூலம் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட விளைநிலங்களுக்கு நிலத்தடி நீர் வெகுவாக கிடைக்கிறது.

    மேட்டுப்பாளையம் 

    மேட்டுப்பாளையம் அருகே காரமடை ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட வெள்ளியங்காடு ஊராட்சியில் அன்சூர் குளம் உள்ளது. இந்தக் குளம் கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இதற்கு பில்லூர் அணை மற்றும் வெள்ளியங்காடு- மஞ்சூர் செல்லும் சாலையில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் இருந்து வரும் மழை நீர் வருகிறது. குளத்தின் மூலம் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட விளைநிலங்களுக்கு நிலத்தடி நீர் வெகுவாக கிடைக்கிறது.

    இதில் 50 ஆண்டுகளுக்கு மேலாக மேட்டுப்பாளையம் மீனவர் கூட்டுறவு சங்க நிர்வாகிகள் மீன் குஞ்சுகளை விட்டு அதனை வளர்த்து விற்பனைக்கு எடுத்து செல்கின்றனர். இதன் மூலம் சுமார் 200க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தங்களது வாழ்வாதாரங்களை மேம்படுத்தி வருகின்றனர். இந்த சூழ்நிலையில் அரசு சார்பில் இக்குளத்தை பராமரித்து இங்கே டீசல் படகு விடுவதாக தெரிவித்து வருகின்றனர். அவ்வாறு டீசல் படகு குளத்தில் விட்டால் இதிலுள்ள மீன் குஞ்சுகளை விட்டு வளர்த்து பராமரித்து வரும் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கும்.

    மேலும் டீசல் படகினால் மீன் குஞ்சுகள் இறக்கும் சூழ்நிலை உருவாகும். இதனால் இதனை நம்பியுள்ள 200-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இது தொடர்பாக உரிய ஆய்வு நடத்தி குளத்தில் உள்ள மீன் குஞ்சுகள் இறக்காமல் டீசல் படகுகளை இக்குளத்தில் பயன்படுத்தாமல் துடுப்பு மூலம் பயன்படுத்தும் படகை உபயோகிக்க வேண்டும். மேலும் இதன் மூலம் மீனவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென மேட்டுப்பாளையம் மீனவர் சங்க உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    இதுகுறித்து மேட்டுப்பாளையம் மீனவர் கூட்டுறவு சங்க இயக்குனர் மீன் நடராஜ் கூறியதாவது:-

    இக்குளத்தில் 3 தலைமுறைகளுக்கு மேலாக மீனவர்கள் மீன் குஞ்சுகளை விட்டு வளர்த்து அதனை பிடித்து விற்பனை செய்து வருகிறோம் இக்குளத்தை சுற்றுலாத்தலமாக மாற்றுவது வரவேற்கத்தக்கது. ‌ ஆனால் இக்குளத்தை நம்பி 200-க்கும் மேற்பட்ட மீனவர்களின் குடும்பங்கள் உள்ளன. அவர்களின் வாழ்வாதாரம் தடைபடாமல் தொடர்ந்து குளத்தில் மீன்பிடிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் குளத்தில் டீசல் படகுக்கு மாற்றாக துடுப்புப் படகை பயன்படுத்த அரசு ஆலோசனை நடத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    • முத்தண்ணன் குளத்தில் ஆண் உடல் ஒன்று மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • 55 வயது மதிக்கத்தக்க ஆண் யார்? எந்த ஊர் என்பது போன்ற விவரங்கள் தெரியவில்லை.

    கோவை

    கோவை ஆர்.எஸ்.புரம் தடாகம் ரோட்டில் உள்ள முத்தண்ணன் குளத்தில் ஆண் உடல் ஒன்று மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் ஆர்.எஸ்.புரம் போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    சுமார் 55 வயது மதிக்கத்தக்க ஆண் யார்? எந்த ஊர் என்பது போன்ற விவரங்கள் தெரியவில்லை. மேலும் அவர் குளத்தில் தவறி விழுந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என சிங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தூத்துக்குடி தாளமுத்துநகர் அருகே உள்ள துப்பார்பட்டியை சேர்ந்தவர் பரமசிவன் (வயது59). கூலி தொழிலாளி.
    • பரமசிவன் நேற்று காலை குளித்துவிட்டு வருவதாக அப்பகுதியில் உள்ள குளத்திற்கு சென்றார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி தாளமுத்துநகர் அருகே உள்ள துப்பார்பட்டியை சேர்ந்தவர் பரமசிவன் (வயது59). கூலி தொழிலாளி. இவரது மனைவி கிருஷ்ணம்மாள். இவர்களுக்கு மகன் மற்றும் மகள்கள் உள்ளனர்.

    இந்நிலையில் பரமசிவன் நேற்று காலை குளித்துவிட்டு வருவதாக அப்பகுதியில் உள்ள குளத்திற்கு சென்றார். ஆனால் நீண்ட நேரமாகியும் அவர் வீட்டிற்கு திரும்பி வராததால் சந்தேகமடைந்த குடும்பத்தினர் அவரை தேடி சென்றனர். அப்போது குளத்து தண்ணீரில் பரமசிவன் மிதந்தபடி இறந்து கிடந்தார்.

    தகவலறிந்து சம்பவ இடத்திற்கு தாளமுத்துநகர் இன்ஸ்பெக்டர் மணிமாறன் மற்றும் போலீசார் விரைந்து சென்று பரமசிவன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோ தனைக்காக தூத்துக்குடி அரசு மருத் துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இது தொடர்பாக போலீ சார் வழக்குப் பதிவு செய்து அவர் எப்படி இறந்தார்? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சங்கரன்கோவில் அருகே பனை விதை நடும் விழா நடைபெற்றது.
    • வரகுணராமபுரம் கண்மாய் கரையில் 500 பனை விதைகள் நடப்பட்டது.

    சங்கரன்கோவில்:

    153-வது மகாத்மா காந்தி பிறந்த நாள் முன்னிட்டு சங்கரன்கோவில் அருகே பனை விதை நடும் விழா நடைபெற்றது. தென்காசி மாவட்டம் திருவேங்கடம் வட்டம் அழகாபுரி ஊராட்சி உட்பட்ட வரகுணராமபுரம் கிராமத்தில் உள்ள கண்மாய் கரையில் 500 பனை விதைகள் நடப்பட்டது. நிகழ்விற்கு சிறப்பு அழைப்பாளராக அழகாபுரி ஊராட்சி மன்ற தலைவர் கணேசன் கலந்து கொண்டார். நிகழ்வு ஏற்பாடுகளை அறக்கட்டளை நிறுவனர் மதுரிதா செய்திருந்தாார். சமூக ஆர்வலர் மா.சந்திரசேகரன் மற்றும் ஊர் மக்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

    • குறுக்குபாளையம் என்ற இடத்தில் குளம் உள்ளது.
    • விவசாய நிலங்கள் மற்றும் குடிநீர் குழாய் நீர் நிலை உயரும்.

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவில் அருகே உள்ள குறுக்குபாளையம் என்ற இடத்தில் குளம் உள்ளது. இந்த குளத்திற்கு மழைக்காலங்களில் வெள்ளகோவிலில் இருந்து வரும் மழை நீர் மூலனூர் ரோடு, சின்னக்கரை வழியாக குறுக்குபாளையத்தில் உள்ள குளத்திற்கு வந்து சேரும்.இந்த குளத்தில் தண்ணீர் நிற்பதால் அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்கள் மற்றும் குடிநீர் குழாய் நீர் நிலை உயரும். தற்போது குளத்தில் தண்ணீர் தேங்கி நிற்கின்றது.

    இந்தநிலையில் குளத்தில் உள்ள மீன்கள் செத்து மிதக்கின்றன. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீன்கள் இறந்தது குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • ஆலங்குளம் தாலுகா சிவலார்குளம் பஞ்சாயத்தில் திருவேங்கடப்பேரி குளம் உள்ளது.
    • குளத்தில் 360 யூனிட் கரம்பை மண் எடுப்பதற்கு தென்காசி மாவட்ட கலெக்டர் ஆகாஷ் சிற்றாறு வடிநில உப கோட்ட செயற்பொறியாளர் முன்னிலையில் ஆலங்குளத்தை சேர்ந்த ஒருவருக்கு அனுமதி வழங்கி உள்ளார்.

    ஆலங்குளம்:

    ஆலங்குளம் தாலுகா சிவலார்குளம் பஞ்சா யத்தில் திருவேங்கடப்பேரி குளம் உள்ளது.

    மண் எடுக்க அனுமதி

    இந்த குளத்தில் 360 யூனிட் கரம்பை மண் எடுப்பதற்கு தென்காசி மாவட்ட கலெக்டர் ஆகாஷ் சிற்றாறு வடிநில உப கோட்ட செயற்பொறியாளர் முன்னிலையில் ஆலங்குளத்தை சேர்ந்த ஒருவருக்கு அனுமதி வழங்கி உள்ளார்.

    அதன்படி கடந்த 6-ந் தேதி முதல் 10-ந்தேதி வரை காலை 8 மணியில் இருந்து மாலை 6 மணி வரை அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு கரம்பை மண் எடுக்க அனுமதி வழங்கப்பட்டது. இந்த நிலையில் அனுமதி காலம் முடிந்த பின்னரும் அந்த குளத்தில் மண் எடுக்கப்பட்டு வருவதாக புகார் எழுந்தது.

    தாசில்தார் விசாரணை

    இதுகுறித்து தகவல் அறிந்த ஆலங்குளம் தாசில்தார் பரிமளம் மற்றும் அதிகாரிகள் அங்கு சென்று விசாரித்தனர். அவர்களுடைய அனுமதி சீட்டை வாங்கி பார்த்தபோது அதில் 12-ந் தேதி முதல் நாளை மறுநாள்(16-ந்தேதி) வரை கூடுதலாக 5 நாட்கள் கரம்பை மண் எடுப்பதற்கு அனுமதி இருந்தது.

    எனினும் அந்த அனுமதி சீட்டு போலியானதா என்று தாசில்தார் சந்தேகம் அடைந்து விசாரித்து வருகிறார். இதற்கிடையே மாவட்ட கலெக்டர் அனுமதியின்றி பொதுப்பணித்துறை அதிகாரிகள் மூலமாக அனுமதி சீட்டு வழங்கப்பட்டுள்ளதாகவும், உதவி செயற்பொறியாளர் கையொப்பமிட்டு போலியாக அனுமதி சீட்டு தயாரித்து அங்கு கரம்பை மண் எடுப்பதாகவும் தாசில்தாரிடம் சமூக ஆர்வலர்கள் புகார் கூறினர்.

    இதையடுத்து அந்த அனுமதி சீட்டுகளை பறிமுதல் செய்து கலெக்டரின் அனுமதி இன்றி வழங்கப்பட்டதா என்று தாசில்தார் விசாரணை நடத்தி வருகிறார்.

    • கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் துார் வாரும் பணி மேற்கொள்ள திட்டமிடப்பட்டது.
    • நகராட்சி ஆணையாளர் மற்றும் பல்லடம் தாசில்தாரிடம் கோரிக்கை மனு அளித்திருந்தனர்.

    பல்லடம் :

    பல்லடம் - பொள்ளாச்சி ரோட்டில் உள்ள வடுகபாளையம் பகுதியில் குட்டை உள்ளது .இந்தக்குட்டையை பல்லடம் நகராட்சி நிர்வாகம் சார்பில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் துார் வாரும் பணி மேற்கொள்ள திட்டமிடப்பட்டது.

    குட்டை துார் வாரும் பணி நடந்து வரும் சூழலில் இங்குள்ள புறம்போக்கு இடத்தில் தனி நபர்களுக்கு புதிதாக வழித்தடம் தடம் விட்டு பணிகள் மேற்கொள்வதாக குற்றச்சாட்டு எழுந்தது. எனவே குட்டையை அளவீடு செய்து சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என வார்டு கவுன்சிலர்கள் ஈஸ்வரமூர்த்தி (காங்கிரஸ்), சசிரேகா ரமேஷ்குமார் (பா.ஜ.க,) ஆகியோர் நகராட்சி ஆணையாளர் மற்றும் பல்லடம் தாசில்தார் நந்தகோபாலிடம் கோரிக்கை மனு அளித்திருந்தனர். மனுவை பெற்றுக் கொண்ட தாசில்தார் விரைவில் அளவீடு பணி மேற்கொள்ளப்படும் என தெரிவித்திருந்தார். இந்தநிலையில் குட்டையை அளவீடு செய்து உரிய விசாரணை மேற்கொண்டு அறிக்கையை சமர்ப்பிக்குமாறு பொங்கலுார் ஆர்.ஐ., கேத்தனூர் வி.ஏ.ஓ. ஆகியோருக்கு உத்தரவிட்டுள்ளார்.

    ×