search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பக்தர்கள்"

    • பக்தர்கள் வெயிலையும் பொருட்படுத்தாமல் சாமி தரிசனம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் விரைந்து சென்றனர்.
    • இன்று சித்ரா பவுர்ணமி சுந்தர மகாலிங்கம் சாமிக்கு பால், பழம், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 21 வகையான அபிஷேகங்கள் நடைபெறுகிறது.

    வத்திராயிருப்பு:

    வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் உள்ளது. அமாவாசை, பவுர்ணமிக்கு தலா 3 நாட்கள், பிரதோஷத்திற்கு 2 நாட்கள் என மாதத்திற்கு 8 நாட்கள் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள்.

    கடந்த 21-ந்தேதி முதல் நாளை வரை 4 நாட்களுக்கு பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள். இன்று சித்ரா பவுர்ணமியையொட்டி நள்ளிரவு முதல் சென்னை, கோவை, மதுரை, திருச்சி, விருதுநகர், தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பிற மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஏராளமான வாகனங்களில் வருகை தந்து தானிப்பாறை வனத்துறை கேட் முன்பு குவிந்தனர்.

    பக்தர்கள் கூட்டம் அதிகரித்ததை அடுத்து இன்று காலை 6 மணிக்கு வனத்துறை கேட் திறந்து விடப்பட்டு பக்தர்களின் உடமைகளை வனத்துறையினர் தீவிர சோதனை செய்து பாலித்தீன் கேரிப்பை போன்றவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் எளிதில் தீப்பற்றக் கூடிய பொருட்கள் கொண்டு செல்கிறார்களா? மது மற்றும் போதை பொருட்கள் கொண்டு செல்லப்படுகிறதா? என்பதையும் சோதனை செய்தனர்.

    பக்தர்கள் வெயிலையும் பொருட்படுத்தாமல் சாமி தரிசனம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் விரைந்து சென்றனர். இன்று சித்ரா பவுர்ணமி சுந்தர மகாலிங்கம் சாமிக்கு பால், பழம், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 21 வகையான அபிஷேகங்கள் நடைபெறுகிறது. அபிஷேகம் முடிந்ததும் சாமி அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற உள்ளது. பக்தர்கள் பக்தியுடன் சாமி தரிசனம் செய்தனர். மொட்டை உள்ளிட்ட நேர்த்திக் கடன்களை செலுத்தினர். இரவில் பக்தர்கள் தங்குவதற்கு அனுமதி இல்லை.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சுந்தர மகாலிங்கம் சாமி பரம்பரை அறங்காவலர் ராஜா என்ற பெரியசாமி, செயல் அலுவலர் ராமகிருஷ்ணன் ஆகியோர் செய்திருந்தனர். சித்ரா பவுர்ணமியையொட்டி வத்திராயிருப்பு, ஸ்ரீவில்லிபுத்தூர், விருதுநகர் உள்ளிட்ட இடங்களில் இருந்து தானிப்பாறைக்கு அரசு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

    • வைகை ஆற்றில் இறங்குவதற்காக கள்ளழகர் மதுரை வந்தடைந்தார்.
    • ஏராளமான பக்தர்கள் திரண்டு அழகரை எதிர்கொண்டு வரவேற்றனர்.

    மதுரை:

    இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா கடந்த 12-ந்தேதி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    அழகர்கோவில் சார்பில் தல்லாகுளம் பெருமாள் கோவிலில் கடந்த 8-ந் தேதி முகூர்த்தக்கால் ஊன்றி திருவிழா ஆரம்பமானது.

    மீனாட்சி அம்மன் கோவிலில் கடந்த 19-ந்தேதி பட்டாபிஷேகமும், 20-ந்தேதி திக்கு விஜயமும் நடந்தன. மீனாட்சி அம்மன்-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நேற்று முன்தினமும், நேற்று காலை தேரோட்டமும் கோலாகலமாக நடைபெற்றன.

    சித்திரை திருவிழாவுக்காக அழகர்மலையில் இருந்து சுந்தரராஜ பெருமாள், கள்ளழகர் வேடம் பூண்டு கண்டாங்கி பட்டு உடுத்தி, கையில் கைத்தடி, நேரிக்கம்பு ஏந்தி தங்கப்பல்லக்கில் நேற்று முன்தினம் மாலை மதுரையை நோக்கி புறப்பட்டார்.

    பொய்கைக்கரைப்பட்டி, கள்ளந்திரி, அப்பன்திருப்பதி, கடச்சனேந்தல் பகுதிகளில் உள்ள மண்டபங்களில் எழுந்தருளி நேற்று காலை 6 மணி அளவில் மதுரையை அடுத்த மூன்றுமாவடிக்கு வந்தார்.

    அங்கு கள்ளழகரை வரவேற்கும் எதிர்சேவை நடந்தது. அழகர்வேடம் அணிந்த பக்தர்கள், தோல் பைகளில் இருந்த தண்ணீரை பீய்ச்சி அடித்து, கள்ளழகரை வர்ணித்து பாடல்கள் பாடி அதிர்வேட்டுகள் முழங்க எதிர்கொண்டு வரவேற்றனர். பின்னர் அங்கிருந்து புதூர், டி.ஆர்.ஓ. காலனி, ரிசர்வ்லைன், ரேஸ்கோர்ஸ், அவுட்போஸ்ட் வழியாக வழிநெடுகிலும் அமைக்கப்பட்டு இருந்த மண்டகப்படிகளில் கள்ளழகர் எழுந்தருளினார். கள்ளழகர் வருகையால் மதுரை மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைக்கிறது.

    நேற்று இரவு 10 மணியளவில் தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாசலபதி கோவிலுக்கு வந்தார். நள்ளிரவில் திருமஞ்சனமாகி தங்கக்குதிரை வாகனத்தில் எழுந்தருளினார். ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து ஆண்டாள் சூடிக்கொடுத்து கொண்டு வரப்பட்ட மாலை, கள்ளழகருக்கு அணிவிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

    பின்னர் இன்று அதிகாலை 2.30 மணி அளவில் தல்லாகுளம் கருப்பணசாமி கோவிலுக்கு வந்து, தங்கக்குதிரையில் அமர்ந்தவாறே ஆயிரம் பொன் சப்பரத்தில் கள்ளழகர் எழுந்தருளினார். அதன்பின் 3 மணிக்கு வைகை ஆற்றை நோக்கி புறப்பட்டார்.

    இந்நிலையில் இன்று அதிகாலை தங்கக்குதிரை வாகனத்தில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார். முன்னதாக வண்டியூர் வீரராகவப்பெருமாள் முன்கூட்டியே அங்கு வந்திருந்து கள்ளழகரை வரவேற்க எழுந்தருளி இருந்தார். இதனைத்தொடர்ந்து கள்ளழகர் வைகை ஆற்றில் பக்தர்களுக்கு காட்சி அளித்து வருகிறார்.

    வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் அந்த கண்கொள்ளா காட்சியை கண்டு தரிசிப்பதை பக்தர்கள் பெரும் பாக்கியமாக கருதுகிறார்கள்.

    அந்த உன்னத காட்சியை காண மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், தேனி மாவட்டங்கள் உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பல லட்சம் பக்தர்கள் மதுரை மாநகரில் குவிந்துள்ளனர்.

    வைகை ஆற்றில் நேற்று இரவு முதலே பக்தர்கள் கூட தொடங்கினர். கள்ளழகர் வேடம் அணிந்த பக்தர்கள் விடிய, விடிய கள்ளழகரை வர்ணனை செய்து ஆடிப்பாடி மகிழ்ந்தனர். தீப்பந்தம் ஏந்தியும், தோலினால் செய்த பைகளில் தண்ணீரை நிரப்பி பீய்ச்சி அடித்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    • கோவிலுக்கு நாள் ஒன்றுக்கு சராசரியாக ஒரு லட்சம் பேர் வருவதாக கணக்கிடப்பட்டுள்ளது.
    • ஒரே நேரத்தில் 25 ஆயிரம் பேர் தங்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    அயோத்தி:

    உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் கடந்த ஜனவரி மாதம் 22-ந்தேதி பாலராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. பிரமாண்டமாக நடத்தப்பட்ட இந்த நிகழ்வில் பிரபலங்கள் உள்பட லட்சக்கணக்கானோர் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து தினமும் ஏராளமான பக்தர்கள் பாலராமரை தரிசனம் செய்து வருகின்றனர்.

    இதுகுறித்து ஸ்ரீராம ஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா பொதுசெயலாளர் சம்பத் ராய் கூறியதாவது:-

    அயோத்தி ராமர் கோவிலில் பால ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்ட நாள்முதல் இதுவரை 1½ கோடி பேர் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்து ராமபிரானை தரிசித்துள்ளனர். கோவிலுக்கு நாள் ஒன்றுக்கு சராசரியாக ஒரு லட்சம் பேர் வருவதாக கணக்கிடப்பட்டுள்ளது.

    கோவில் கீழ்தளம் கட்டுமான பணி முழு அளவில் முடிந்துள்ளது. முதல் தளத்தில் விடுபட்ட கட்டுமான பணி வேகமாக நடந்து வருகிறது.

    கோவிலை சுற்றி 14 அடி உயரத்தில் காம்பவுண்டு சுவர் விரைவில் கட்டி முடிக்கப்படும். கோவில் வளாகத்தில் 600 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. இதனை உள்ளூர் மக்களே அவரவர் அக்கறை எடுத்து தண்ணீர் ஊற்றி பராமரித்து வருகின்றனர். ஒரே நேரத்தில் 25 ஆயிரம் பேர் தங்கும் வசதி ஏற்படுத்தப் பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • பவுர்ணமி நாட்களில் கிரிவலம் செல்லும் பக்தர்கள் கூட்ட எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
    • முன்னேற்பாடு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளையும் விரைந்து செயல்படுத்த வேண்டும்.

    சென்னை:

    பா.ம.க. கவுரவ தலைவர் ஜி.கே.மணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    திருவண்ணாமலையில் பவுர்ணமி நாட்களில் கிரிவலம் செல்லும் பக்தர்கள் கூட்ட எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதன் அடிப்படையில் நாளை சித்ரா பவுர்ணமி (செவ்வாய்க்கிழமை) அதிகாலையில் 4.16 மணி முதல் அடுத்த நாள் 24-ந்தேதி அதிகாலை 5.47 மணி உள்ளதால் கூட்டம் அலை மோதும்.

    தற்போது கடுமையான வறட்சியும், சுட்டெரிக்கும் வெயில் நிலவுவதால் கோவில் நிர்வாகமும், இந்து சமய அறநிலையத்துறையும், காவல் துறையும் முன்னேற்பாடு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளையும் விரைந்து செயல்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • கோயிலின் கருவறைக்கு அருகில் பணியில் ஈடுபட்டுள்ள காவலர்கள், பூசாரிகள் போல உடை அணிந்து பணியாற்றி வருகின்றனர்
    • காவி நிறத்திலான இந்த புதிய சீருடை முறையை சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் கண்டித்துள்ளார்

    காசி விஸ்வநாதர் கோவில் உலகப் புகழ் பெற்ற வழிபாட்டுத்தலங்களில் ஒன்றாக உள்ளது. இங்கு தினசரி ஆயிரக்கணக்கானோர் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

    இப்போது காசி விஸ்வநாதர் கோவிலுக்குள் பணியமர்த்தப்பட்டுள்ள காவல்துறை அதிகாரிகளுக்கு காவி மற்றும் சிவப்பு நிறத்திலான புதிய சீருடைகள் வழங்கப்பட்டுள்ளது. பக்தர்கள் பூசாரிகளை போல காவி உடையிலான சீருடை அணிந்து காவலர்கள் பணியாற்றி ஏற்படுத்தியுள்ளது.

    இது குறித்து பேசிய வாரணாசி காவல் ஆணையர் மோஹித் அகர்வால், நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மக்கள் கோவிலுக்கு வந்து செல்கின்றனர். இங்கு அனைத்து நாளும் கூட்டம் அதிகமாக இருப்பதால் அனைவரும் கடவுளை சிக்கல் இன்றி தரிசனம் செய்ய வேண்டும் என்று விரும்புகிறோம். அதன் காரணமாக கூட்டத்தை கட்டுப்படுத்தும் பணியில் காவலர்கள் ஈடுபட்டுள்ளனர்.

    சில நேரங்களில் காவலர்கள் தங்கள் வலுக்கட்டாயமாக தள்ளுவதாக சில புகார் தெரிவிக்கின்றனர். ஆனால் பூசாரிகள் பக்தர்களை தடுத்தால் அதை அவர்கள் பணிவுடன் ஏற்றுக் கொள்வார்கள். அதற்காகவே இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    கோவிலின் கருவறைக்கு அருகில் பணியில் ஈடுபட்டுள்ள காவலர்கள், பூசாரிகள் போல உடை அணிந்து பணியாற்றி வருகின்றனர். இவர்கள் பக்தர்களிடம் கனிவாக எடுத்து சொல்லி கூட்டத்தை நகர செய்வார்கள். கோயிலின் மற்ற பகுதியில் காவலர்கள், சீருடை அணிந்தே பணியாற்றுகின்றனர்" என்று அவர் தெரிவித்துள்ளார்.

    காவி நிறத்திலான இந்த புதிய சீருடை முறையை கண்டித்துள்ள சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ், "காவல் துறையின் வழக்கத்தின்படி இது சரியா? பூசாரிகளை போல காவலர்கள் உடை அணிந்து பணி செய்யலாமா? இந்த உத்தரவை பிறப்பித்தவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

    மேலும், 'இதை சமூக விரோத சக்திகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளவும் வாய்ப்பு உள்ளது. இதனால் மக்களுக்கு பாதிப்பு ஏற்படலாம். அதன் பின்னர் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநில அரசின் பதில் என்னவாக இருக்கும்? இது கண்டனத்துக்குரியது" என்று கூறியுள்ளார்.

    • கோவில் கருவறை மற்றும் வளாகம் முழுவதும் தூய்மைப்படுத்தும் கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெற உள்ளது.
    • நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 24 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மார்ச் மாதத்தில் ரூ.118 கோடி உண்டியல் வருவாய் கிடைத்தது. இதன் மூலம் கடந்த 25 மாதங்களாக தொடர்ந்து ரூ.100 கோடியை தாண்டி உண்டியல் வசூலாகி உள்ளது.

    வருகிற 9-ந் தேதி யுகாதி ஆஸ்தானத்தையொட்டி தெலுங்கு வருட பிறப்பு கொண்டாடப்பட உள்ளது. இதனால் திருப்பதி ஏழுமலையான் கோவில் நாளை காலை 6 மணி முதல் 11 மணி வரை கோவில் கருவறை மற்றும் வளாகம் முழுவதும் தூய்மை ப்படுத்தும் கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெற உள்ளது.

    இதனால் நாளை வி.ஐ.பி. பிரேக் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. நாளை காலை 6 மணி முதல் 12 மணி வரை பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படமாட்டார்கள்.

    தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்ததால் ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் தரிசனத்திற்காக கொண்டுவரும் பரிந்துரை கடிதங்களை தேவஸ்தானம் ரத்து செய்தது.

    இதனால் ரேணிகுண்டா விமான நிலையம் மற்றும் திருப்பதி தேவஸ்தானத்தில் விற்பனை செய்யப்பட்டு வரும் ஸ்ரீ வாணி அறக்கட்டளை டிக்கெட்டுகள் அதிக அளவில் விற்பனையாகின்றன.

    அதன்படி கடந்த 15 நாட்களில் ரூ.22.75 கோடிக்கு ஸ்ரீவாணி டிக்கெட்டு விற்பனையாகி உள்ளது.

    திருப்பதியில் நேற்று 81, 224 பேர் தரிசனம் செய்தனர். 24,093 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.4.35 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

    நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 24 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

    • மகாசிவராத்திரியை முன்னிட்டு பிப்ரவரி மாதம் முதல் மே மாதம் இறுதி வரை பக்தர்கள் மலையேற வனத்துறை அனுமதி வழங்கி வருகிறது.
    • மலையடிவாரத்தில் உள்ள டாக்டர்கள் குழுவினர், பக்தர்களை பரிசோதித்து மலையேற அனுமதித்து வந்தனர்.

    கோவை:

    கோவை மாவட்டம் பூண்டி அருகே வெள்ளியங்கிரி மலை உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியான இங்குள்ள 7 மலைகளை கடந்து மலை உச்சியில் இருக்கும் சுயம்புலிங்கத்தை வழிபடுவதை பக்தர்கள் வழக்கமாக கொண்டு வருகிறார்கள்.

    இங்கு மலையேறுவதற்காக தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகிறார்கள். மலையேற சிரமமாக இருக்கும் என்பதால் மலையேறுபவர்கள் கையில் கம்பை ஊன்றியபடியே செல்வார்கள். ஒவ்வொரு ஆண்டும் மகாசிவராத்திரியை முன்னிட்டு பிப்ரவரி மாதம் முதல் மே மாதம் இறுதி வரை பக்தர்கள் மலையேற வனத்துறை அனுமதி வழங்கி வருகிறது.

    இவ்வாறு வெள்ளியங்கிரி மலையேறும் போது மூச்சுத்திணறல் ஏற்பட்டு ஒரு மாதத்தில் மட்டும் 5 பக்தர்கள் பலியானார்கள். ஏற்கனவே அவர்கள் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் உள்ளிட்டவைகளால் பாதிக்கப்பட்டு இருந்து மலையேறும் போது உடல்நிலை ஒத்துக் கொள்ளாமல் அவர்கள் இறந்தது தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து வனத்துறையினர் பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து மலையேற அனுமதித்து வருகிறார்கள். இதயநோய், மூச்சுத்திணறல், உடல் பருமன், நீரிழிவு நோய், வயது முதிர்ந்தவர்கள், உடல் நிலை சரியில்லாதவர்கள், கொரோனாவில் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் வெள்ளியங்கிரி மலையேற வேண்டாம் என கேட்டுக் கொண்டனர். இதற்காக மலையடிவாரத்தில் உள்ள டாக்டர்கள் குழுவினர், பக்தர்களை பரிசோதித்து மலையேற அனுமதித்து வந்தனர்.

    இந்நிலையில் வெள்ளியங்கிரி மலையேறிய மேலும் ஒரு பக்தர் மரணம் அடைந்தார். சென்னை முகப்பேரைச் சேர்ந்தவர் ரகுராம் (வயது 50). தனியார் வேலைவாய்ப்பு மையம் நடத்தி வந்தார். தீவிர ஆன்மீக ஈடுபாடு கொண்டவர்.

    இவரும், அவரது பகுதியில் வசிக்கும் 15 பேரும் சென்னையில் இருந்து ஒரு வேன் மூலம் வெள்ளியங்கிரி மலையேறுவதற்காக நேற்று இரவு கோவை மாவட்டம் வந்தனர். பின்னர் அவர்கள் மலையேற தொடங்கினர். 4 மலைகளை கடந்து 5-வது மலைக்கு சென்ற நிலையில் ரகுராமுக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. அந்த இடத்திலேயே அவர் மயங்கி விழுந்தார்.

    இதனால் அவருடன் சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அங்குள்ள மலைவாழ் மக்களின் உதவியுடன் ரகுராமை மீட்டு அடிவாரத்துக்கு கொண்டு வந்தனர். முகாமில் இருந்த மருத்துவர்கள், ரகுராமை சோதித்து பார்த்து அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து ஆலாந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ரகுராமின் உடல் பிரேத பரிசோதனை க்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. ஏற்கனவே 5 பேர் இறந்தநிலையில் நேற்று ரகுராமும் மரணம் அடைந்ததால் சாவு எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.

    • அறுபத்து மூவர் விழா இன்று பிற்பகல் 3.30 மணி அளவில் தொடங்கி நடைபெற உள்ளது
    • உணவு பொருட்களை சாப்பிடும் பக்தர்கள் குப்பைகளை சாலையில் வீசாமல் இருப்பதற்காக சாலையோரம் 340 குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன.

    சென்னை:

    சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் பங்குனி பெருவிழா கடந்த 16-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. நேற்று தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது. காலை 8 மணி அளவில் திருத்தேருக்கு கபாலீஸ்வரர், கற்பகாம்பாள் எழுந்தருளினர்.

    காலை 9 மணி அளவில் பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க தேரோட்டம் தொடங்கியது. 96 அடி உயரம், 300 டன் எடை கொண்ட தேரை, ஏராளமான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் 'சம்போ மகாதேவா' என்ற கோஷத்துடன் வடம் பிடித்து இழுத்தனர். 4 மாட வீதிகளில் வலம்வந்த தேர், பிற்பகல் 1.30 மணி அளவில் நிலையை வந்தடைந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

    பங்குனி பெருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான அறுபத்து மூவர் விழா இன்று பிற்பகல் 3.30 மணி அளவில் தொடங்கி நடைபெற உள்ளது. வெள்ளி விமானத்தில் 63 நாயன்மார்களோடு இறைவன் வலம் வரும் காட்சியை காண, சென்னை, புறநகர் பகுதிகள் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மயிலாப்பூரில் குவிந்துள்ளனர். இன்று காலை முதலே மயிலாப்பூருக்கு பக்தர்கள் வரத் தொடங்கினார்கள். நேரம் செலச்செல்ல பக்தர்களின் வருகை அதிகரித்தது.

    மயிலாப்பூர் கோவிலில் இருந்து சில கிலோ மீட்டருக்கு பக்தர்கள் கூட்டமாகவே காட்சி அளித்தது. இதையொட்டி பக்தர்களுக்கு பல்வேறு இடங்களில் அன்னதானம், குளிர்பானம், பிஸ்கட், இனிப்பு வகைகள் உள்ளிட்டவை இன்று காலை முதலே வழங்கப்பட்டு வருகிறது. கோவிலை சுற்றியுள்ள தெற்கு மாடவீதி, வடக்கு மாட வீதி, கிழக்கு மாடவீதி, ராமகிருஷ்ண மடம் சாலை உள்ளிட்ட பல பகுதிகளில் பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் குளிர்பானங்கள் வழங்கப்பட்டன.

     

    மயிலாப்பூர் கோவிலுக்கு வந்த பக்தர்கள் அனைவருக்குமே ஒவ்வொரு பகுதியிலும் இந்த உணவு பொருட்கள் வழங்கப்பட்டன. இதனால் மயிலாப்பூர் பகுதியே பக்தர்கள் வெள்ளமாக காணப்பட்டது.

    மேலும் உணவு பொருட்களை சாப்பிடும் பக்தர்கள் குப்பைகளை சாலையில் வீசாமல் இருப்பதற்காக சாலையோரம் 340 குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. இவற்றில் 102 தொட்டிகள் 1,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மிகப்பெ ரிய தொட்டிகள் ஆகும்.

    பக்தர்கள் தாங்கள் சாப்பிட்ட உணவுப்பொருட்களின் குப்பைகளை இந்த தொட்டிகளில் போட்டனர். குப்பைகளை அப்புறப்படுத்துவதற்காக 10 பேட்டரி வாகனங்கள், 4 இலகு ரக மோட்டார் வாகனங்களும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன.

    மேலும் பக்தர்கள் குப்பை களை தொட்டிகளில் போடுமாறு 100-க்கும் மேற்பட்ட மாண வர்கள், தன்னார்வலர்கள் விழிப்புணர்வில் ஈடுபட்டனர். 3 ஷிப்டுகளாக 269 தூய்மை பணியாளர்கள் குப்பைகளை அகற்றும் பணியிலும் ஈடுப டுத்தப்பட்டு உள்ளனர். மேலும் மயிலாப்பூரில் லட்சக்கணக்கான பகதர்கள் திரண்டதால் ஆயிரக்கணக்கான போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

    • மகாபாரத சொற்பொழிவு மற்றும் அக்னி வசந்த உற்சவ பெருவிழா நடைபெற்றது .
    • துரியோதனன் வேடமணிந்து படுகள நிகழ்வை சிறப்பாக செய்து காண்பித்தனர்.

    திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த கீழ்பாலூர் கிராமத்தில் மகாபாரத சொற்பொழிவு மற்றும் அக்னி வசந்த உற்சவ பெருவிழா நடைபெற்றது .

    125 அடியில் அமைக்கப்பட்டிருந்த துரியோதனன் படுகளம் அருகே நாடக கலைஞர்கள் பீமன் மற்றும் துரியோதனன் வேடமணிந்து படுகள நிகழ்வை சிறப்பாக செய்து காண்பித்தனர்.

    24 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் துரியோதனன் படுகளம் நிகழ்ச்சியை காண கீழ்பாலூர் மற்றும் சுற்று வட்டார பகுதியில் இருந்து பல்லாயிரக்கணக்கான பொதுமக்களும் பக்தர்களும் கலந்து கொண்டு துரியோதனன் படுகளத்தை கண்டுகளித்தது குறிப்பிடத்தக்கது.

    • மார்ச் 9ஆம் தேதி தொடங்கிய விழா வருகின்ற மார்ச் 22ஆம் தேதி வரை வெகு விமர்சையாக நடைபெறுகிறது.
    • பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த கேளூர் சித்தேரி கிராமத்தில் அமைந்துள்ள பழமை வாய்ந்த வரலாற்று சிறப்புமிக்க அருள்மிகு ஸ்ரீ பூங்காவனத்தம்மன் ரத உற்சவ விழா விமர்சையாக நடைபெற்றது.

    மார்ச் 9ஆம் தேதி தொடங்கிய விழா வருகின்ற மார்ச் 22ஆம் தேதி வரை வெகு விமர்சையாக நடைபெறுகிறது இந்நிலையில் இன்று பங்குனி ஐந்தாம் நாள் ரத உற்சவ தேர் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது இந்நிகழ்வில் அலங்கரிக்கப்பட்ட பூங்காவனத்தம்மன் தேரில் அமர்ந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

    இந்நிகழ்வை காண போளூர், கேளூர், துறிஞ்சிகுப்பம், சந்தவாசல், தேப்பனந்தல் அணைப்பேட்டை விளக்கனந்தல், கஸ்தம்பாடி, சமத்துவபுரம், கட்டிப்பூண்டி, ஆத்துவம்பாடி பால்வார்த்து வென்றான் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.



    • விழாவில் முதல்-அமைச்சர் ரங்கசாமி, அமைச்சர் லட்சுமி நாராயணன் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    • அங்கிருந்தவர்கள் அந்த பெண்ணை மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி வம்பா கீரப்பாளையத்தில் பிரசித்தி பெற்ற அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மயான கொள்ளை உற்சவம் மிக சிறப்பாக நடைபெறும்.

    அதுபோல் இந்த ஆண்டு மயான கொள்ளை உற்சவம் கடந்த 9-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வந்தது. விழாவில் முக்கிய நிகழ்ச்சியான மயான கொள்ளை விழா நேற்று மாலை நடைபெற்றது. இந்த விழாவில் முதல்-அமைச்சர் ரங்கசாமி, அமைச்சர் லட்சுமி நாராயணன் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    இந்நிலையில் அங்குள்ள சன்னியாசி தோப்பு சுடுகாட்டில் மயான கொள்ளை முடிந்து சிறப்பு அலங்காரத்தில் அம்மன் வீதி உலா நடந்தது. அப்போது சாமி சப்பரம் எதிர்பாராத விதமாக மேலே சென்ற உயர்மின் அழுத்த கம்பியில் உரசியது. இதனால் சாமியை தூக்கிவந்த இளைஞர்களை மின்சாரம் தாக்கியது.

    இதனால் சுதாரித்துக் கொண்ட இளைஞர்கள் சாமியை கீழே வைத்தனர். உடனடியாக மின்சாரமும் துண்டிக்கப்பட்டது.

    இந்த தகவல் பரவியதும் அங்கிருந்த பக்தர்கள் அலறியடித்து நாலாபுறமும் சிதறி ஓடினர். இதில் கூட்ட நெரிசலில் சிக்கி ஒரு பெண் மயங்கி விழுந்தார். அங்கிருந்தவர்கள் அந்த பெண்ணை மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஆன்லைன் மூலம் புக்கிங் செய்தாலும் கோவில் நிர்வாகம் சார்பில் பஞ்சாமிர்தம் அவர்கள் வீடுகளுக்கே அனுப்பி வைத்து வருகின்றனர்.
    • கடந்த மாதம் கெட்டுப்போன பஞ்சாமிர்தங்கள் கள்ளிமந்தயத்தில் உள்ள கோசாலையில் கொட்டி அழிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    பழனி:

    பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில் சார்பில் பஞ்சாமிர்த பிரசாதம் தயாரிக்கப்பட்டு பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. கோயில் நிர்வாகம் சார்பில் நவீன எந்திரங்கள் மூலம் பஞ்சாமிர்தம் தயாரிக்கப்பட்டு மலை மீது குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இது தவிர ஆன்லைன் மூலம் புக்கிங் செய்தாலும் கோவில் நிர்வாகம் சார்பில் பஞ்சாமிர்தம் அவர்கள் வீடுகளுக்கே அனுப்பி வைத்து வருகின்றனர்.

    இந்நிலையில் இன்று காலை கோயிலுக்கு சொந்தமான லாரியில் 30 க்கும் மேற்பட்ட கேன்களில் அடைத்து பஞ்சாமிர்தம் எடுத்துச் செல்லப்பட்டது. இதை அறிந்ததும் அடிவாரம் பகுதி மக்கள் லாரியை தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். பஞ்சாமிர்தம் கெட்டுப்போன நிலையில் எடுத்துச் செல்லப்படுகிறதா? அல்லது முறைகேடாக வேறு இடத்திற்கு பஞ்சாமிர்தம் எடுத்துச் செல்லப்பட்டதா என கேள்வி எழுப்பினர். இது குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு அடிவாரம் போலீசார் விரைந்து வந்தனர்.

    மேலும் பஞ்சாமிர்தம் கொண்டு செல்லப்பட்ட லாரியை போலீஸ் நிலையத்திற்கு எடுத்துச் சென்றனர். ஏற்கனவே தைப்பூச காலத்தில் தயாரிக்கப்பட்ட பஞ்சாமிர்தங்கள் தேக்கம் அடைந்து கோயிலுக்கு பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டதாக இந்து அமைப்புகள் குற்றம் சாட்டினர்.

    இந்த நிலையில் மீண்டும் பஞ்சாமிர்தம் விற்பனையாகாமல் தேக்கமடைந்து அதனை அழிப்பதற்காக கோவில் ஊழியர்கள் எடுத்துச் சென்றபோது பொதுமக்கள் சிறை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தது பழனியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே கடந்த மாதம் கெட்டுப்போன பஞ்சாமிர்தங்கள் கள்ளிமந்தயத்தில் உள்ள கோசாலையில் கொட்டி அழிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    பொதுவாகவே பஞ்சாமிர்தம் கெட்டுப்போகாது என்ற எண்ணம் பக்தர்களிடையே நிலவி வருகிறது. இந்நிலையில் கெட்டுப்போன பஞ்சாமிர்தம் கொட்டி அழிக்கப்படுவதாக வரும் தகவல்களால் பக்தர்களும் அதிர்ச்சியடைந்து வருகின்றனர். 

    ×