search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Groundwater"

    • 80 சென்டிமீட்டர் அளவுக்கு கிழக்குப் பகுதியில் சாய்ந்து உள்ளதாக விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர்.
    • நிலத்தடி நீரை மறு பகிர்வு செய்வதே இந்த பூமியின் சாய்வுக்கான முதன்மை காரணியாக கண்டறிந்துள்ளனர்.

    புதுடெல்லி:

    மனிதர்கள் நிலத்துக்கு அடியில் இருக்கும் தண்ணீரை அளவுக்கு அதிகமாக உறிஞ்சி வெளியேற்றி வருவதன் காரணமாக பூமி 1993 2020 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் 80 சென்டிமீட்டர் அளவுக்கு கிழக்குப் பகுதியில் சாய்ந்து உள்ளதாக விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர்.

    அமெரிக்க புவியியல் ஒன்றியத்தின் நாளிதழான ஜியோ பிஸிக்கல் ரிசர்ச் லெட்டர்சில் வெளியாகி உள்ள ஆய்வு முடிவுகள் இதனைத் தெரிவித்துள்ளது. மேற்கண்ட கால கட்டத்தில் மக்கள் 2,150 ஜிகாடன் நிலத்தடி நீரை 6 மில்லி மீட்டர் (0.24 அங்குலம்) கடல் மட்டத்திற்கு சமமாக உயர்த்தி உள்ளதாக கண்டுபிடித்துள்ளனர்.

    கடந்த காலங்களில் துருவங்களின் சறுக்கல் கடல் நீரோட்டங்கள் மற்றும் பூமிக்கு அடியில் ஆழமான வெப்பமான பாறைகளின் வெப்ப சலனம் போன்ற இயற்கை இடர்பாடுகளால் மட்டுமே மேற்கண்ட மாற்றங்கள் ஏற்பட்டது. ஆனால் புதிய ஆராய்ச்சி முடிவுகள் நிலத்தடி நீரை மறு பகிர்வு செய்வதே இந்த பூமியின் சாய்வுக்கான முதன்மை காரணியாக கண்டறிந்துள்ளனர்.

    மேலும் பூமியின் சுழற்சி துருவம் உண்மையில் நிறைய மாறுதல்களை கண்டுள்ளது என ஆய்வுக்கு தலைமை தாங்கிய சியோல் தேசிய பல்கலைக்கழகத்தின் புவி இயற்பியலாளர் கி. வியோன் சியோ தெரிவித்துள்ளார். இதனை ஆய்வில் ஈடுபடாத ஜெட் பிரபல்சன் ஆய்வகத்தின் ஆராய்ச்சி விஞ்ஞானி சுரேந்தரும் ஒப்புக் கொண்டுள்ளார்.

    இவ்வாறு நிலத்தடி நீரை அதிகமாக உறிஞ்சியதால் ஏற்பட்ட மாற்றங்களால் பருவங்கள் மாறும் அபாயம் இல்லை. அதே வேளையில் புவியியல் நேர அளவீடுகளில் துருவ சறுக்கல் காலநிலையில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    காலநிலை தொடர்பான காரணங்களில் நிலத்தடி நீரின் பகிர்வு உண்மையில் பூமி சுழற்சி சறுக்கலில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை ஆய்வு உறுதிப்படுத்தி உள்ளதாக விஞ்ஞானி சியோ கூறியுள்ளார். மேலும் மத்திய அட்சரேகையில் இருந்து தண்ணீரை மறு பகிர்வு செய்வது துருவ சறுக்கலை கணிசமாக பாதிக்கிறது.

    பெரும்பாலான மறு பகிர்வு வட அமெரிக்கா மற்றும் வடமேற்கு இந்திய பகுதியில் நிகழ்ந்துள்ளது. இந்த இரண்டு பகுதிகளும் மத்திய அட்சரேகைகளில் அமைந்துள்ளன. பூமியின் சுழற்சியை மாற்றுவதில் நீரின் பங்கு இருப்பதாக கடந்த 2016-ல் கண்டுபிடிக்கப்பட்டது.

    ஆனால் இப்போது வரை அதன் சறுக்கல்களுக்கான நிலத்தடி நீரின் பங்களிப்பு குறித்து ஆய்வு செய்யப்படவில்லை. இதுவே முதன் முறை என தெரிவித்துள் ளனர்.

    ஆனால் நிலத்தடி நீர் மட்டம் குறைவதை தடுக்க பல நாடுகள் பல்வேறு திட்டங்களை தீட்டுவதன் மூலம் பூமியின் சுழற்சி மாற்றத்தை மீண்டும் மாற்ற இயலும் என விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

    இதன் பிசிகல் ரிசர்ச் லெட்டர்ஸ் இதழில் வெளியிடப்பட்ட 2021 ஆய்வில், 1995-ம் ஆண்டில் துருவ சறுக்கலின் திசை தெற்கிலிருந்து கிழக்கு நோக்கி நகர்ந்தது. அதே போன்று 1995-2020 வரையிலான சராசரி சாய்வின் வேகம் 1981-95 காலகட்டத்தை ஒப்பிடும்போது 17 மடங்கு வேகமாக இருந்ததாக தெரிவித்துள்ளனர்.

    கடந்த 50 ஆண்டுகளில் மனிதர்கள் நீர் நிலைகளில் இருந்து 18 ட்ரில்லியன் டன் தண்ணீரை மாற்றாமல் பிரித்தெடுத்துள்ளதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

    • திருமூர்த்திமலை பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
    • அமராவதி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் ஆற்றில் 6832 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகர் மற்றும் மாவட்டத்தில் நேற்று முன்தினம் காலை முதல் நேற்று மாலை வரை இடைவிடாமல் தொடர்ந்து மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் குளம் போல் மழைநீர் தேங்கியது. சிதலமடைந்த சாலைகள் சகதிக்காடாக மாறின.

    மாவட்டத்திற்குட்பட்ட உடுமலை, பல்லடம், தாராபுரம், காங்கயம், அவினாசி உள்பட அனைத்து பகுதிகளிலும் மழைநீடித்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதுடன் வீடுகளுக்குள் முடங்கினர். சில இடங்களில் குளம்போல் தண்ணீர் தேங்கியுள்ளதால் அதனை அகற்றும் பணியில் உள்ளாட்சி பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

    உடுமலை வனப்பகுதியில் பெய்த மழை காரணமாக திருமூர்த்திமலை பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

    உடுமலை அமராவதி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் ஆற்றில் 6832 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.இதனால் கரையோர மக்கள் பாதுகாப்புடன் இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    மாவட்டம் முழுவதும் நேற்று மாலை வரை மழை பெய்த நிலையில் அதன்பிறகு நின்றது. இன்று காலை மாவட்டம் முழுவதும் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. இரவு முழுவதும் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவியதால் முதியவர்கள் பாதிக்கப்பட்டனர். தாராபுரம், காங்கயம் பகுதியில் 20க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்தன.

    மாவட்டம் முழுவதும் நேற்று பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் விவரம் வருமாறு :- திருப்பூர் வடக்கு-16, அவினாசி-6, பல்லடம் -32, ஊத்துக்குளி-6, காங்கயம்-28, தாராபுரம்-43, மூலனூர்-34, குண்டடம்-25 திருமூர்த்தி அணை -27, அமராவதி அணை- 39, உடுமலை-38.20, மடத்துக்குளம் -76, திருப்பூர் கலெக்டரேட்-7, வெள்ளகோவில் ஆர்.ஐ. அலுவலகம் -35, திருமூர்த்தி அணை (ஐ.பி.) -25, திருப்பூர் தெற்கு-15, கலெக்டர் முகாம் அலுவலகம் - 20.40,உப்பாறு அணை -75, நல்லதங்காள் ஓடை -34,வட்டமலைக்கரை ஓடை- 56.40. மாவட்டம் முழுவதும் மொத்தம் 638மி.மீ. மழை பெய்துள்ளது.

    கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு மற்றும் கரூர் ஆகிய மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழையின் காரணமாக நொய்யலாற்றின் நீர்பிடிப்பு பகுதிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் திருப்பூர் நொய்யல் ஆற்றில் உள்ள நல்லம்மன் கோவிலை வெள்ளம் சூழ்ந்தது. இதனால் பொதுமக்கள் கோவிலுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

    நொய்யல் ஆற்றில் திடீரென்று மழை நீர் வெள்ளம் அதிக அளவில் வருவதால் ஒரத்துப்பாளையம் அணையில் தண்ணீர் தேக்கி வைக்கப்படாமல் நேற்று காலை முதல் வரும் மழை நீர் அப்படியே திறந்து விடப்பட்டு வருகிறது. இதனால் நத்தக்காடையூர் அருகே புதுவெங்கரையாம்பாளையம் கிராமத்தில் செல்லும் நொய்யல் ஆற்றில் நேற்று மதியம் 12 மணி முதல் மழைநீர் திடீரென்று அதிக அளவில் வந்து ஆற்றின் இரு கரைகளையும் தொட்டபடி சீறி பாய்ந்து கரைபுரண்டு செல்கிறது. இதனால் இப்பகுதியில் உள்ள நொய்யல் ஆற்று தாழ்வான தரைப்பாலம் மழைநீரில் மூழ்கியது. இதன் காரணமாக தரை பாலத்தின் வழியாக செல்லும் பகுதிக்கான சாலையில் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது. இதனால் கனரக, இருசக்கர வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன.

    இன்று காலை திருப்பூர் மாநகர் மற்றும் மாவட்டத்தில் மீண்டும் மழை பெய்தது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் சிரமமடைந்தனர். மேலும் தொடர் மழையால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளதுடன் குளம், குட்டைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மழைநீரை பயன்படுத்தி சாகுபடி பணிகளிலும் ஈடுபட்டுள்ளனர்.

    • பல்லடம் அரசு கலைக் கல்லூரியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது
    • நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துவது அவசியம் குறித்து விளக்கிக் கூறப்பட்டது.

    பல்லடம் :

    தமிழ்நாடு நீர்வளத்துறை கோவை கோட்டம் சார்பில், ஜல் சக்தி அபியான் தேசிய நீரியல் திட்டம் மூலம் நிலத்தடி நீரை செறிவூட்டல் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி பல்லடம் அரசு கலைக் கல்லூரியில் நடைபெற்றது.

    நீரியல் திட்ட உதவி இயக்குனர் புவனேஸ்வரி தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் முனியன், உதவி செயற்பொறியாளர்கள் கீதா, வனிதா, ஸ்ரீராம்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மனித சங்கிலியை பல்லடம் நகராட்சி தலைவர் கவிதாமணி ராஜேந்திர குமார் துவக்கி வைத்தார். இதில் கல்லூரி மாணவ, மாணவிகள், கலந்து கொண்டனர். முன்னதாக மாணவ மாணவிகளிடம் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தும் வழிமுறைகள், நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துவது அவசியம் குறித்து விளக்கிக் கூறப்பட்டது.

    • அன்னப்பராஜா மேல்நிலைப்பள்ளியில் நிலத்தடி நீர் விழிப்புணர்வு முகாம் நடந்தது.
    • முகாமில் கலந்துகொண்டவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

    ராஜபாளையம்

    ராஜபாளையத்தில் நிலத்தடி நீர் விழிப்புணர்வு முகாம் அன்னப்பராஜா நினைவு மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. பள்ளிச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி ராஜா தலைமை தாங்கினார். பரமக்குடி நிலநீர் உப கோட்டத்தின் பொறியாளர் சந்திரன் முன்னிலை வகித்து ஜல் சக்தி அபியான் குறித்து பேசினார்.

    தலைமையாசிரியர் ரமேஷ் வரவேற்றார். ராம்கோ சிமெண்ட் தோட்டக்கலைப் பிரிவின் பொறியாளர் ஈஸ்வரன், ராம்கோ டெக்ஸ்டைல் மண்டல மக்கள் தொடர்பு அலுவலர் சுரேஷ்குமார், தன்னார்வ தொண்டு நிறுவனமான துளி அமைப்பின் தலைவர் ராம்குமார், விஷ்ணு ஆகியோரும் பேசினர். நிலத்தடி நீர் மேலாண்மை குறித்த விழிப்புணர்வு காணொளிக் காட்சிகள் காண்பிக்கப்பட்டன. மாணவர்களுக்குவினாடி வினாப் போட்டிகள் நடத்தப்பட்டு அதில் சிறப்பிடம் பெற்றவர்களுக்குப் பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டு முகாமில் கலந்துகொண்டவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

    விருதுநகர் நீர்வளத்துறை நிலநீர்ப்பிரிவு அலுவலர் சந்திரமோகன் நன்றி கூறினார். முகாமிற்கான ஏற்பாடுகளை தலைமையாசிரியர் உள்ளிட்ட சமூக அறிவியல் மன்ற ஆசிரியர்-ஆசிரியைகள் செய்திருந்தனர்.

    • அணைப்புதூர் உள்ளிட்ட சில இடங்களில் உள்ள நல்லாற்றில், வெள்ளம் ததும்பி நிற்கிறது.
    • நிலத்தடி நீர்மட்டம் அதிகரிக்கும் என விவசாயிகள், பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

    அவிநாசி :

    கோவை மாவட்ட எல்லையான அன்னூரில் உருவாகி அவிநாசியை கடந்து திருமுருகன்பூண்டி வழியாக, செல்லும் நல்லாறு திருப்பூரில் நொய்யல் ஆற்றுடன் இணைகிறது. அவிநாசி, திருமுருகன்பூண்டி உள்ளிட்ட பல இடங்களில் ஆற்றின் கரையை ஒட்டியுள்ள வீடு, ஓட்டல் மற்றும் கடைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் ஓடையில் கலப்பதால் ஓடை மாசடைந்துள்ளது.

    இருப்பினும், அணைப்புதூர் உள்ளிட்ட சில இடங்களில் உள்ள நல்லாற்றில், வெள்ளம் ததும்பி நிற்கிறது. மழை மறைவு பகுதியாக அவிநாசி இருந்தும், சில ஆண்டுகளாக பருவமழை பெய்து வருகிறது. நீர் நிலைகள், குளம், குட்டைகள் நிரம்பி வருகின்றன.ஒரு காலத்தில் நல்லாற்று நீர், சுற்றியுள்ள பகுதியில் உள்ள விவசாய நிலங்களின் பாசன தேவையையும் பூர்த்தி செய்துள்ளது. எனவே நல்லாறு துவங்கும் இடத்தில் இருந்து முடியும் இடம் வரை சுத்தம் செய்து, தூர்வாரினால், நீர் வளம் பெருகுவதுடன், நிலத்தடி நீர்மட்டம் அதிகரிக்கும் என விவசாயிகள், பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

    லாரி மற்றும் குடிநீர் கேன் உற்பத்தியாளர் ஸ்டிரைக் காரணமாக ஓட்டல் மற்றும் தொழிற்சாலைகள் மூடப்பட்டன. #WaterCan #DrinkingWater

    சென்னை:

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சட்ட விரோதமாக நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவதை தடுக்க உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

    இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் வணிக நோக்கில் சட்டவிரோதமாக நிலத்தடிநீர் உறிஞ்சப்படுவதை தடை செய்வதுடன், வணிக நோக்கத்தில் சட்டவிரோதமாக நிலத்தடி நீர் எடுப்பதை முறைப்படுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

    இதனால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்றும், இந்த தடையை நீக்க வேண்டும் எனவும் தமிழ்நாடு தண்ணீர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

    அவர்களது கோரிக்கை ஏற்கப்படாததால் சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் நேற்று முன்தினம் திடீர் வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினர்.

    இன்று 3-வது நாளாக அவர்களது போராட்டம் தொடர்கிறது. இதனால் சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் தண்ணீர் தட்டுப்பாடு அபாயம் உருவாகி உள்ளது.

    இதற்கிடையே நிலத்தடிநீர் எடுக்க விதிக்கப்பட்ட நிபந்தனைகளை எதிர்த்து தமிழகம் முழுவதும் குடிநீர் கேன் உற்பத்தியாளர்களும் நேற்று மாலை முதல் உற்பத்தியை நிறுத்தி போராட்டத்தில் குதித்தனர்.

    சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் ஆகிய 3 மாவட்டங்களில் சுமார் 650 குடிநீர் கேன் உற்பத்தி நிறுவனங்கள் இயங்கி வருகின்றன.


    திருவள்ளூர் மாவட்டத்தில் மட்டும் 350 நிறுவனங்கள் உள்ளன. நாள் ஒன்றுக்கு 5 லட்சம் குடிநீர் கேன் மாவட்டம் முழுவதும் சப்ளை செய்யப்பட்டு வந்தது.

    வேலை நிறுத்தம் காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் குடிநீர் கேன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ரூ,. 25-க்கு விற்கப்பட்ட தண்ணீர் கேன் தற்போது ரூ. 90 முதல் ரூ. 100 வரை விற்கப்படுகிறது.

    தண்ணீர் லாரி உரிமையாளர்ளை தொடர்ந்து, குடிநீர் கேன் உற்பத்தியாளர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளதாக தமிழ்நாடு முழுவதும் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளது.

    தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க பொது மக்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் நீர் நிரப்பம் நிலையங்களில் இருந்து இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை லாரிகளில் தண்ணீர் பெற்றுக் கொள்ளலாம் என்று குடிநீர் வாரியம் அறிவித்தது. இருப்பினும் சென்னை புறநகர் பகுதிகளில் இப்போதே தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது.

    திருவள்ளூர் மாவட்டத் தில் பூந்தமல்லி, செந்நீர் குப்பம், செங்குன்றம், அத்திப்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தனியார் குடிநீர் லாரிகள் நிலத்தடி நீரை உறிஞ்சி வட சென்னை, தி.நகர், வடபழனி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டல்கள், மருத்துவமனைகள், உணவு விடுதிகளுக்கு வினியோகித்து வந்தன.

    தண்ணீர் லாரிகள் வேலை நிறுத்தம் காரணமாக தற்போது அந்த இடங்களுக்கு தண்ணீர் சப்ளை முழுவதும் பாதிக்கப்பட்டு உள்ளது.

    திருவேற்காடு, நூம்பல், அயனம்பாக்கம், வானகரம் பகுதிகளில் உள்ள தனியார் தொழிற்சாலைகள், ஓட்டல்கள் மற்றும் 100-க்கும் மேற்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகளில் தண்ணீர் இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

    தண்ணீர் இல்லாததால் ஓட்டல்கள், தொழிற் சாலைகள் மூடப்படும் அபாயத்தில் உள்ளது.

    இதேபோல காஞ்சீபுரம் மாவட்டத்தில் கேளம்பாக்கம், படூர், வாணியஞ்சாவடி, மேலக் கோட்டையூர், ஏகாட்டூர், தாழம்பூர், சிறுசேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அடுக்குமாடி குடியிருப்பு, விடுதிகளில் தண்ணீர் தட்டுப்பாடு உள்ளது. சிறுசேரி தொழிற்பூங்கா பகுதியில் உள்ள தொழிற்சாலைகளில் போதுமான தண்ணீர் இல்லாததால் உற்பத்தி பாதிக்கப்பட்டு இருக்கிறது. சில தொழில் நிறுவனங்கள் ஊழியர்களுக்கு விடுமுறை அளித்து கம்பெனியை மூடி உள்ளதாகவும் தெரிகிறது.

    குடிநீர் கேன் உற்பத்தியாளர்கள் போராட்டத்தால் கடைகளுக்கு தண்ணீர் கேன் அனுப்புவது முற்றிலும் நிறுத்தப்பட்டு உள்ளன.

    இதனால் பொது மக்களுக்கு குடிநீர் கேன் சப்ளை போதிய அளவு கிடைக்கவில்லை. பெரும்பாலான வீடுகளில் குடிநீர் கேன் பயன்படுத்தி வருவதால் அவர்கள் தண்ணீர் கிடைக்காமல் தவித்து வருகின்றனர்.

    பல இடங்களில் தண்ணீர் கேன் விலை பலமடங்கு உயர்த்தி விற்கப்படுகிறது.

    சென்னை தி.நகர், கிண்டி, வேளச்சேரி, ஓ.எம்.ஆர்., பகுதியில் உள்ள ஓட்டல்கள் தண்ணீர் இல்லாமல் மூடப்பட்டுள்ளன.

    இது தொடர்பாக கேன் குடிநீர் உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் முரளி சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    குடிநீர் என்பது பொது மக்களின் அத்தியாவசிய அடிப்படை தேவைகளில் ஒன்று. வேலை நிறுத்தத்தால் பொது மக்கள் மட்டுமின்றி சிறு குறு நிறுவன முதலாளி கள் முதல் சாதாரண தொழி லாளர்கள் வரை பாதிக்கப் பட்டுள்ளனர்.

    2013-ம் ஆண்டு வெளியிடப்பட்ட அரசாணை செல்லும் என்ற உத்தரவே வேலை நிறுத்தத்துக்கு காரணம். மதுபான ஆலை, குளிர்பான ஆலை, தோல் ஆலைகளுடன் குடிநீர் ஆலை களை ஒப்பிடக் கூடாது.

    இவ்வாறு அவர் கூறி னார்.

    லாரி உரிமையாளர்கள், குடிநீர் கேன் உற்பத்தியாளர்கள் போராட்டம் மேலும் நீடிக்கும் பட்சத்தில் குடிநீர் தட்டுப்பாடு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். இதனை எதிர் கொள்ள குடிநீர் வாரிய அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள். #WaterCan #DrinkingWater

    2020-ம் ஆண்டுக்குள் சென்னை, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களில் நிலத்தடி நீர் முற்றிலும் வற்றிவிடும் அபாயம் இருப்பதாக நிதி ஆயோக்கின் அறிக்கையில் அதிர்ச்சித்தகவல் வெளியாகி உள்ளது.
    புதுடெல்லி:

    இந்தியாவின் நிலத்தடி நீர்மட்டம், குடிநீர் தேவை மற்றும் மாநிலங்களின் நீர் மேலாண்மை உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை ஆய்வு செய்து முதன் முதலாக நிதிஆயோக் அமைப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளது. மத்திய நீர்வளத்துறை மற்றும் குடிநீர் மற்றும் கழிவுநீரகற்றல் அமைச்சகங்களுடன் இணைந்து தயாரிக்கப்பட்ட ‘ஒன்றிணைந்த நீர் மேலாண்மை குறியீடு’ என்ற அந்த அறிக்கையை நீர்வளத்துறை மந்திரி நிதின் கட்காரி நேற்று வெளியிட்டார்.

    நிதி ஆயோக்கின் இந்த அறிக்கை இந்திய மாநிலங்களின் நீர் மேலாண்மை குறைபாட்டை அப்பட்டமாக விளக்கி இருப்பதுடன், குடிநீர் தட்டுப்பாட்டால் இந்தியா சந்திக்கப்போகும் இன்னல்களையும் அதிர்ச்சிகரமாக எடுத்துரைத்து உள்ளது. இதில் முக்கியமாக 2030-ம் ஆண்டுக்குள் இந்தியாவின் தண்ணீர் தேவை 2 மடங்கு அதிகரிக்கும் எனவும், இதனால் கோடிக்கணக்கான மக்கள் மிகுந்த துயரத்துக்கு உள்ளாவார்கள் எனவும் குறிப்பிடப்பட்டு உள்ளது.

    அந்த அறிக்கை மேலும் கூறுகையில், ‘இந்தியாவின் தண்ணீர் தேவையில் 40 சதவீதத்தை பூர்த்தி செய்யும் நிலத்தடி நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. 2020-ம் ஆண்டுக்குள் சென்னை, டெல்லி, பெங்களூரு, ஐதராபாத் உள்ளிட்ட 21 நகரங்களில் நிலத்தடி நீர் முற்றிலும் தீர்ந்துவிடும். இதனால் அந்த நகரங்களில் வசிக்கும் 10 கோடிக்கும் அதிகமான மக்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும். இந்த நிலை தொடர்ந்தால் 2050-ம் ஆண்டுக்குள் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6 சதவீதம் அளவுக்கு சரிவு ஏற்படும்’ என எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.

    இந்தியாவில் தற்போது சுமார் 60 கோடி பேர் கடும் குடிநீர் பற்றாக்குறையை சந்தித்து வருவதாகவும், நாட்டின் 70 சதவீத நீர் நிலைகள் மாசடைந்து இருப்பதாகவும் கூறியுள்ள நிதி ஆயோக், பாதுகாப்பான குடிநீர் இல்லாததால் ஆண்டுக்கு 2 லட்சம் பேர் மரணமடைந்து வருவதாகவும் கூறியுள்ளது.

    நீர் மேலாண்மை விவகாரத்தில் இந்திய மாநிலங்களை, பொது மாநிலங்கள், வடகிழக்கு மற்றும் இமயமலை மாநிலங்கள் என இரண்டாக நிதி ஆயோக் பிரித்துள்ளது. இதில் பொது மாநிலங்கள் பட்டியலில் குஜராத், மத்திய பிரதேசம், ஆந்திரா, கர்நாடகா மற்றும் மராட்டிய மாநிலங்கள் முதல் 5 இடங்களில் உள்ளன.

    வடகிழக்கு மாநிலங்களில் திரிபுரா முதலிடத்திலும், இமாசல பிரதேசம், சிக்கிம், அசாம் போன்ற மாநிலங்கள் அடுத்தடுத்த இடங்களையும் பெற்றுள்ளன. ஜார்கண்ட், அரியானா, உத்தரபிரதேசம் மற்றும் பீகார் மாநிலங்கள் மிகவும் மோசமான நீர் மேலாண்மையை கொண்டிருப்பதாக நிதி ஆயோக்கின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது. #tamilnews
    இந்தியாவில் உள்ள 16 மாநில நிலத்தடி நீரில் யுரேனிய வி‌ஷம் பரவியுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. #WorldHealthOrganization
    புதுடெல்லி:

    அமெரிக்காவில் உள்ள டியூக் பல்கலைக்கழக நிபுணர்கள் இந்தியாவில் நிலத்தடிநீர் ஆய்வு மேற்கொண்டனர். ஆறுகள், கிணறுகள், குளங்கள் மற்றும் ஏரிகளில் இருந்து எடுக்கப்பட்ட தண்ணீரில் இந்த ஆராய்ச்சி நடத்தப்பட்டது.

    அதில் இந்தியாவில் உள்ள 16 மாநில நிலத்தடி நீரில் யுரேனியா வி‌ஷம் பரவி கிடப்பது கண்டறியப்பட்டது. ராஜஸ்தான் மற்றும் குஜராத் மாநிலங்களில் 324 கிணறுகளில் உள்ள தண்ணீரில் ஆய்வு நடத்தப்பட்டது. அவற்றில் மிக அதிக அளவில் யுரேனிய வி‌ஷம் உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    ஒரு லிட்டர் குடிநீரில் 30 மைக்ரோ கிராம் யுரேனியம் இருக்க வேண்டும். ஆனால் அது அளவுக்கு அதிகமாக உள்ளது. இத்துடன் சேர்த்து நைட்ரேட் மாசுவும் கலந்து உள்ளது.

    பல மாநிலங்களில் இருந்து எடுக்கப்படும் தண்ணீரில் சரளை கற்கள், சேறு மற்றும் சகதி உள்ளிட்டவைகளின் கலவை உள்ளது. இவை யுரேனியம் அதிகம் உள்ள கிரானைட் பாறைகளில் இருந்து கிடைக்கிறது.

    பஞ்சாப், அரியானா, ராஜஸ்தான், உத்தரபிரதேசம், மே.வங்காளம், குஜராத், ஜார்கண்ட், சத்தீஸ்கர், தெலுங்கானா, ஆந்திர பிரதேசம், கர்நாடகா, தமிழ்நாடு உள்ளிட்ட 16 மாநில நிலத்தடி நீரில் யுரேனிய வி‌ஷம் பரவியுள்ளது.



    இத்தகைய நிலத்தடிநீர் குடிநீர் மட்டுமின்றி விவசாயத்துக்கும் பயன்படுத்தப்படுகிறது. இதனால் காய்கறிகள், பழங்கள் மற்றும் கீரைகளில் யுரேனியத்தின் கதிர்வீச்சு பாதிப்பு ஏற்படும். இதனால் உடல் நலக்கோளாறுகள் ஏற்படும். எனவே இப்பகுதிகளில் உள்ள நிலத்தடி நீரில் அதிக அளவில் யுரேனியம் பாதிப்பு ஏற்படாமல் தடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் வலியுறுத்தியுள்ளது. #WorldHealthOrganization
    ×