search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Meetupalayam"

    • 17 ஊராட்சிகளில் காந்திஜெயந்தியையொட்டி கிராம சபை கூட்டங்கள் நடைபெற்றது.
    • வாகனங்களை பிடித்து கொடுப்பவர்களுக்கு ரூ.1,000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

    கோவை:

    மேட்டுப்பாளையம் அருகே காரமடை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 17 ஊராட்சிகளில் காந்திஜெயந்தியையொட்டி கிராம சபை கூட்டங்கள் நடைபெற்றது. இதையொட்டி மேட்டுப்பாளையம் அருகே பெள்ளேபாளையம் ஊராட்சியில் நடந்த கூட்டத்தில் ஊராட்சி தலைவர் சிவக்குமார் தலைமை தாங்கினார். காரமடை வட்டார வளர்ச்சி அலுவலர் கோபால் முன்னிலை வகித்தார்.

    கூட்டத்தில் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கோழி கழிவுகளை குடியிருப்பு, சாலையோரத்தில் கொட்டப்படும் வாகனங்களை பிடித்து கொடுப்பவர்களுக்கு ரூ.1,000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

    தூய்மை பணியாளர்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் குப்பைகளை தரம்பிரித்து வாங்க வேண்டும். இதில் பிளாஸ்டிக் கழிவுகள் கிலோ ரூ.8-க்கு விலை கொடுத்து ஊராட்சி நிர்வாகம் வாங்கப்படும். அந்த தொகை தூய்மை பணியாளர்களுக்கு ஊதியமாக வழங்கப்படும். வேளாண்மை துறை அதிகாரிகள் மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்படும் விதைகள் மலட்டு தன்மையாக உள்ளது. இதுதொடர்பாக அதிகாரிகளிடம் கேட்டால் அதற்கு மாற்று வழி சொல்ல தெரியாமல் களத்திற்கு வரும் வேளாண்மை அதிகாரிகள் தவிக்கின்றனர்.

    ரேசன் கடைகளில் பணியாளர்கள் பொதுமக்களுக்கு தரமான பொருட்களை வழங்க வேண்டும். இதோடு பொதுமக்கள் யாரும் ரேசன் அரிசை விற்பனை செய்ய கூடாது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

    இதேபோல் சிக்காரம்பாளையம் ஊராட்சியில் தலைவர் ஞானசேகரன், இலுப்பநத்தத்தில் ரங்கசாமி, பெள்ளாதியில் சிவக்குமார் தலைமையில் கிராமசபை கூட்டம் நடந்தது.

    • அன்சூர் குளம் கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.
    • குளத்தின் மூலம் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட விளைநிலங்களுக்கு நிலத்தடி நீர் வெகுவாக கிடைக்கிறது.

    மேட்டுப்பாளையம் 

    மேட்டுப்பாளையம் அருகே காரமடை ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட வெள்ளியங்காடு ஊராட்சியில் அன்சூர் குளம் உள்ளது. இந்தக் குளம் கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இதற்கு பில்லூர் அணை மற்றும் வெள்ளியங்காடு- மஞ்சூர் செல்லும் சாலையில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் இருந்து வரும் மழை நீர் வருகிறது. குளத்தின் மூலம் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட விளைநிலங்களுக்கு நிலத்தடி நீர் வெகுவாக கிடைக்கிறது.

    இதில் 50 ஆண்டுகளுக்கு மேலாக மேட்டுப்பாளையம் மீனவர் கூட்டுறவு சங்க நிர்வாகிகள் மீன் குஞ்சுகளை விட்டு அதனை வளர்த்து விற்பனைக்கு எடுத்து செல்கின்றனர். இதன் மூலம் சுமார் 200க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தங்களது வாழ்வாதாரங்களை மேம்படுத்தி வருகின்றனர். இந்த சூழ்நிலையில் அரசு சார்பில் இக்குளத்தை பராமரித்து இங்கே டீசல் படகு விடுவதாக தெரிவித்து வருகின்றனர். அவ்வாறு டீசல் படகு குளத்தில் விட்டால் இதிலுள்ள மீன் குஞ்சுகளை விட்டு வளர்த்து பராமரித்து வரும் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கும்.

    மேலும் டீசல் படகினால் மீன் குஞ்சுகள் இறக்கும் சூழ்நிலை உருவாகும். இதனால் இதனை நம்பியுள்ள 200-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இது தொடர்பாக உரிய ஆய்வு நடத்தி குளத்தில் உள்ள மீன் குஞ்சுகள் இறக்காமல் டீசல் படகுகளை இக்குளத்தில் பயன்படுத்தாமல் துடுப்பு மூலம் பயன்படுத்தும் படகை உபயோகிக்க வேண்டும். மேலும் இதன் மூலம் மீனவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென மேட்டுப்பாளையம் மீனவர் சங்க உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    இதுகுறித்து மேட்டுப்பாளையம் மீனவர் கூட்டுறவு சங்க இயக்குனர் மீன் நடராஜ் கூறியதாவது:-

    இக்குளத்தில் 3 தலைமுறைகளுக்கு மேலாக மீனவர்கள் மீன் குஞ்சுகளை விட்டு வளர்த்து அதனை பிடித்து விற்பனை செய்து வருகிறோம் இக்குளத்தை சுற்றுலாத்தலமாக மாற்றுவது வரவேற்கத்தக்கது. ‌ ஆனால் இக்குளத்தை நம்பி 200-க்கும் மேற்பட்ட மீனவர்களின் குடும்பங்கள் உள்ளன. அவர்களின் வாழ்வாதாரம் தடைபடாமல் தொடர்ந்து குளத்தில் மீன்பிடிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் குளத்தில் டீசல் படகுக்கு மாற்றாக துடுப்புப் படகை பயன்படுத்த அரசு ஆலோசனை நடத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    • தூரிப்பாலம் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன.
    • கூந்தல் பனை இப்போது அதிகளவில் விற்பனை நோக்கில் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

    மேட்டுப்பாளையம்

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம்-குன்னூர் சாலையில் கல்லார் மற்றும் தூரிப்பாலம் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன.

    இப்பகுதி அடர்ந்த வனப்பகுதியில் உள்ளதால் வனத்தில் இருந்து காட்டு யானை, காட்டுப்பன்றி, மான், காட்டெருமை, சிறுத்தை, குரங்கு உள்ளிட்ட பல்வேறு வனவிலங்கு கள் இங்குள்ள விளைநிலங்க ளுக்குள் நுழைந்து பொதும க்களையும், விவசாயி களையும் அவ்வப்போது அச்சுறுத்தி வருகின்றன.

    கல்லாறு பகுதியில் வாழை, பாக்கு, பலாப்பழங்கள் அதிக அளவில் உள்ளதால் காட்டு யானைகள் இதனை ருசிக்க தொடர்ந்து வனத்தில் இருந்து வெளியேறி வருகின்றன.

    இதுமட்டுமல்லாமல் திருமண மண்டபங்களில் அலங்காரத்திற்கு பயன்படுத்தப்படும் கூந்தல் பனை இப்போது அதிகளவில் விற்பனை நோக்கில் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இதனை யானைகள் விரும்பி சாப்பிடுவதால் யானைகள் இதே பகுதியில் தொடர்ந்து ஒரு வாரத்திற்கு மேலாக நடமாடி வருகின்றன.

    இந்த நிலையில் நேற்று இரவு வனத்தை விட்டு வெளியேறிய காட்டு யானைகள் கூட்டம் கல்லாறு பகுதியில் உள்ள தோட்டத்தில் நின்றிருந்த 100 தென்னை மரங்கள், 60 பாக்கு மரங்கள் மற்றும் ஏராளமான கூந்தல் பனை மரங்களை சேதப்படுத்தி அட்டகா–சத்தில் ஈடுபட்டுள்ளன.

    இதனால் விவசாயிகள் பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இது குறித்து ஆய்வு செய்து பாதிக்கப்பட்ட விவசாயிக்கு உரிய இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்துள்ளனர்.

    • தென்திருப்பதி திருமலை ஸ்ரீவாரி கோவிலில் வருடாந்திர நவராத்திரி பிரமோற்சவ விழா கொடி ஏற்றம் நடைபெற்றது.
    • பெரிய சேஷ வாகனத்தில் மலையப்ப சுவாமி ஸ்ரீதேவி, பூதேவியுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    மேட்டுப்பாளையம்

    மேட்டுப்பாளையம் அருகே தென்திருப்பதி திருமலை ஸ்ரீவாரி கோவிலில் வருடாந்திர நவராத்திரி பிரமோற்சவ விழா கொடி ஏற்றம் நடைபெற்றது.

    இதையொட்டி நேற்று மாலை 6.15 மணிக்கு அங்குரார்ப்பணம் நிகழ்ச்சியும், செவ்வாய்க்கிழமை மாலை 5. 30 மணிக்கு கொடி ஏற்றமும், இரவு 8 மணிக்கு பெரிய சேஷ வாகனத்தில் மலையப்ப சுவாமி ஸ்ரீதேவி, பூதேவியுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    தொடர்ந்து புதன்கிழமை சின்ன சேஷ வாகனம், ஸ்நபன திருமஞ்சனம், அன்னபக்‌ஷி வாகனம், 29-ந் தேதி சிம்ம வாகனம், முத்துப்பந்தல் வாகனம், 30-ந் தேதி கற்ப விருட்ச வாகனம், சர்வ பூபாள வாகனம்,

    அக்டோபர் 1-ந் தேதி ஸ்ரீ வாரிக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் மாலை சமர்ப்பித்து, மலையப்ப சுவாமி மோகினி திருக்கோலத்தில் கருட சேவை நடக்கும்.

    தொடர்ந்து 2-ந் தேதி அனுமந்த வாகனமும், வஸந்தோற்சவம், தங்க ரதம், கஜ வாகனம், 4-ந் தேதி திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.  

    • இந்த கிராமத்தில் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
    • விளைநிலத்தில் பயிரிடப்பட்டிருந்த அவரை மொச்சை பயிர்களை மான்கள் கூட்டம் சேதப்ப டுத்தியது.

    மேட்டுப்பாளையம்,

    மேட்டுப்பாளையம் அருகே வெள்ளியங்காடு அடுத்துள்ளது ஆதிமதையனூர் கிராமம். இந்த கிராமத்தில் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

    இந்த பகுதி மக்கள் விவசாயம் செய்து வாழ்க்கை நடத்தி வருகின்றனர். இந்த கிராமம் அடர்ந்த வனத்தையொட்டி இருப்பதால் அடிக்கடி சிறுத்தை, யானை, மான் உள்ளிட்ட வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி வருகிறது.

    அவ்வாறு வரும் வனவிலங்குகள் கிராமத்தில் உள்ள விளைநிலங்களில் பயிரிடப்பட்டிருக்கும் பயிர்களை தின்றும், கால்களால் மிதித்தும் சேதப்படுத்தி வருவது தொடர் கதையாக உள்ளது.

    கடந்த ஒரு மாத காலமாக இந்த பகுதியில் 8 காட்டு யானைகள் கூட்டமாக சுற்றி திரிகின்றன. இவை அவ்வப்போது விளைநிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. ஆதிமதையனூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் அய்யாசாமி, செந்தில்குமார், ஸ்ரீதர், சுலோச்சனா. இவர்கள் அந்த பகுதியில் உள்ள தங்கள் விளைநிலங்களில் வாழை பயிரிட்டுள்ளனர்.

    இந்த நிலையில் நேற்று இரவு காட்டு யானைகள் கூட்டம் இந்த விளைநிலங்களுக்குள் புகுந்து பயிரிடப்பட்டிருந்த 1000த்திற்கும் மேற்பட்ட வாழை பயிர்களை தின்றும், பிடுங்கி எறிந்தும் சேதப்படுத்தியது.

    இதேபோல், அதே பகுதியை சேர்ந்த சம்பத்குமார், ராமசாமி, கிருஷ்ணசாமி, தம்பு, ராஜேந்திரன் ஆகியோரின் விளைநிலத்தில் பயிரிடப்பட்டிருந்த அவரை மொச்சை பயிர்களை மான்கள் கூட்டம் சேதப்ப டுத்தியது.

    இதனால் விவசாயி களுக்கு தலா ரூ.30 ஆயிரம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே தங்கள் பகுதிகளில் வனத்துறையினர் தீவிர ரோந்து பணி மேற்கொள்ள வேண்டும். மேலும் சேதம் அடைந்த பயிர்களுக்கு வனத்துறையினர் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • பவானி ஆற்றில் 40 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் இருப்பதாக தகவல் வந்தது.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மேட்டுப்பாளையம்

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே பில்லூர் அணை அருகில் பவானி ஆற்றில் 40 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் இருப்பதாக அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

    இத்தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீஸ் மற்றும் வருவாய் துறையினர் ஆணின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பில்லூர் அணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    • மேட்டுப்பாளையத்தில் உள்ள 9 அரசு தொடக்கப்ப ள்ளியில் உள்ள 1,119 மாணவ, மாணவிகளுக்கு காலை உணவு திட்டம் வழங்கப்படுகிறது.
    • மாணவ, மாணவிகளுக்கு ரவை, சேமியா கேசரி குழந்தைகளுக்கு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் வருவாய் வட்டாட்சியர் மாலதி, நகராட்சி

    மேட்டுப்பாளையம்

    மேட்டுப்பாளையத்தில் உள்ள 9 அரசு தொடக்கப்ப ள்ளியில் உள்ள 1,119 மாணவ, மாணவிகளுக்கு தமிழக முதல்-அமைச்சரின் பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவு திட்டம் தொடக்க விழா நடூர் நகரவை தொடக்கப்பள்ளியில் நடைபெற்றது. இதற்கு நகர மன்ற தலைவர் மெஹரிபாபர்வீன் அஷ்ரப் அலி தலைமை தாங்கினார்.

    நிகழ்ச்சிக்கு துணைத்தலைவர் அருள்வடிவு முனுசாமி, வருவாய் கோட்டாச்சியர் பூமா ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து மாணவ, மாணவிகளுக்கு ரவை, சேமியா கேசரி குழந்தைகளுக்கு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் வருவாய் வட்டாட்சியர் மாலதி, நகராட்சி பொறியாளர் சோமசுந்தரம், உதவி பொறியாளர் அனிதா, நகர செயலாளர்கள் முகமதுயூனுஸ், முனுசாமி, நகர மன்ற உறுப்பினர் குழு தலைவர் முகமதுஉசேன், நகர மன்ற உறுப்பினர்கள் ஓ.கே.நடராஜ், சிவமலர், சுமதி, விஜய்கான்டீபன், உமாராணி கணேசன், ரவிக்குமார், வருவாய் ஆய்வாளர் சசிகுமார், கிராம நிர்வாக அலுவலர் யாசர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.  

    • இந்த கிராமத்தில் 70-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன.
    • இப்பகுதியில் உள்ள ஓடையை சுற்றி முட்புதர்கள் அதிகளவில் வளர்ந்துள்ளன.

    மேட்டுப்பாளையம்:

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே பெள்ளேபாளையம் ஊராட்சியில் உள்ளது பட்டக்காரனூர் கிராமம். இந்த கிராமத்தில் 70-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன.

    இக்கிராமத்தினை சுற்றி விளைநிலங்கள் உள்ளன. மேலும் இப்பகுதியில் உள்ள ஓடையை சுற்றி முட்புதர்கள் அதிகளவில் வளர்ந்துள்ளன. இந்த புதர்களில் இருந்து அவ்வப்போது அதிகளவில் பாம்புகள் குடியிருப்புகளில் நுழைந்து பொதுமக்களை பயமுறுத்தி வருகின்றன.

    இதனிடையே பட்டகாரனூர் பகுதியிலுள்ள ஒரு வீட்டின் முன்பு நேற்று மாலை 2 சாரை பாம்புகள் பின்னி பினைந்து நடனமாடியது. இதனையறிந்து அப்பகுதியில் பொதுமக்கள் திரண்டனர்.

    வீட்டின் வாசல் முன்பு 2 பாம்புகளும் நடனமாடி கொண்டு இருப்பதை கண்டு அப்பகுதியினர் செல்போன்களில் புகைப்படம் எடுத்தனர்.இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் சென்று வேடிக்கை பார்த்து சப்தம் எழுப்பியும் கூட அதனை பொருட்டாக நினைக்காமல் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக அந்த வீட்டின் சுவர் பகுதியிலேயே நடனமாடியாது.

    இதனை அந்த பகுதி மக்கள் அனைவரும் வேடிக்கை பார்த்து சென்றனர். கடந்தாண்டும் இதே பகுதியில் சாரை பாம்புகள் நடனமாடியது. இந்த நிலையில் தற்போது பாம்புகள் நடமாடியது அப்பகுதி மக்களிடம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலாக பயன்பாட்டில் பொது கிணறு ஒன்று உள்ளது.
    • கிணறு சாலையின் ஓரத்தில் அமைந்துள்ளதால் தற்போது எந்தவித பாதுகாப்பும் இன்றி தடுப்புகள் மட்டுமே அமைக்கப்பட்டுள்ளது.

    மேட்டுப்பாளையம்:

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே காரமடை ஊராட்சி ஒன்றியத்தில் சிக்காரம் பாளையம் ஊராட்சி உள்ளது.

    இந்த ஊராட்சிக்குட்பட்ட 10-வது வார்டில் தெக்கலூர் பகுதியில் ஊராட்சிக்கு சொந்தமான பொது கிணறு ஒன்று உள்ளது. சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலாக பயன்பாட்டில் இந்த கிணறு இருந்து வந்துள்ளது.

    கிராமத்தின் நடுவில் அமைந்துள்ள இந்த கிணற்றில் இருந்து பல ஆண்டுகளாக மக்கள் தண்ணீர் எடுத்து பயன்படுத்தி வந்துள்ளனர். ஆரம்ப காலத்தில் கயிற்றால் வாளி மூலம் தண்ணீர் எடுத்து வந்தனர். பிற்காலத்தில் ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் மின்மோட்டார்கள் வைத்து தண்ணீர் எடுத்தனர்.

    இதன்மூலம் அப்பகுதியில் வசிக்கும் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு பயனடைந்து வந்தனர். இந்நிலையில் கடந்த 10 மாதங்களுக்கு முன்பு பெய்த பருவமழை காலங்களில் கனமழை காரணமாக இந்த கிணற்றின் பக்கவாட்டு சுவர்கள் இடிந்து விழுந்துள்ளது. இதனை சீரமைத்து தர வேண்டுமென மாவட்ட நிர்வாகத்திற்கு பலமுறை வலியுறுத்தப்பட்டது.

    ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதன்மூலம் கிராமத்தின் நடுவில் உள்ள கிணறு சாலையின் ஓரத்தில் அமைந்துள்ளதால் தற்போது எந்தவித பாதுகாப்பும் இன்றி தடுப்புகள் மட்டுமே அமைக்கப்பட்டுள்ளது.

    இரவு நேரங்களில் வீடுகளுக்கு மோட்டார் சைக்கிளில் வருவோர் தவறி கிணற்றினுள் விழும் நிலை உள்ளதாகவும் அதேபோல் குழந்தைகள், சிறுவர்கள் யாரேனும் இந்த கிணற்றில் விழும் அபாயம் நிலையில் உள்ளது.

    எனவே இதன்மூலம் உயிரிழப்புகள் ஏற்படும் முன் கிணற்றின் பக்கவாட்டு சுவரை அமைத்து தர வேண்டும் என மாவட்ட, காரமடை ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்தை பலமுறை வலியுறுத்தி உள்ளனர். இதன்படி ஒன்றிய கவுன்சிலர் சாமிநாதன், வார்டு உறுப்பினர் அமாவாசை ஆகியோர் இது குறித்து பலமுறை வலியுறுத்தி உள்ளனர்.

    • விலங்குகள் வாகனங்களில் அடிபட்டு இறப்பதும் தொடர்கதையாகி வருகிறது.
    • அகத்தியர் பீடம் அருகே 1½ வயது மதிக்கத்தக்க புள்ளிமான் ஒன்று உயிரிழந்து கிடந்தது.

    மேட்டுப்பாளையம் 

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே ஓடந்துரை, அகத்தியர் பீடம், ஊட்டி-குன்னூர் சாலை, கல்லார் காட்டேஜ் மற்றும் குடியிருப்பு பகுதிகள் உள்ளன. இந்த பகுதிகளையொட்டி அடர்ந்த வனப்பகுதி உள்ளது.

    இந்த வனப்பகுதிகளில் உள்ள காட்டு யானை, புள்ளிமான், சிறுத்தை, கடமான், காட்டு பன்றி உள்ளிட்ட வனவிலங்குகள் உணவு தேடியும், தண்ணீருக்காகவும் குடியிருப்பு பகுதிக்கு வருவது வழக்கம்.அப்படி வரும் போது விலங்குகள் வாகனங்களில் அடிபட்டு இறப்பதும் தொடர்கதையாகி வருகிறது.


    இந்த நிலையில் அகத்தியர் பீடம் அருகே 1½ வயது மதிக்கத்தக்க புள்ளிமான் ஒன்று உயிரிழந்து கிடந்தது. இதனை அந்த பகுதியில் மாடுகள் மீது ஆசிட் வீசப்பட்டதை விசாரிப்பதற்காக வந்த தாசில்தார் மாலதி பார்த்தார். உடனடியாக அவர் சம்பவம் குறித்து, வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தார்.

    தகவலின் பேரில் வனத்துறையினர் விரைந்து வந்து, புள்ளிமானை கைப்பற்றினர். இந்த பகுதியில் 20-க்கும் ேமற்பட்ட நாய்கள் சுற்றி திரிகிறது. இதனால் நாய்கள் கடித்ததில் இறந்து இருக்கலாம் என சந்தேகிக்கின்றனர்.

    இருப்பினும் நாய்கள் கடித்ததால் தான் இறந்ததா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த 1 மாதத்தில் மட்டும் இந்த பகுதியில் 3 மான்கள் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • ரூ.90 ஆயிரம் மதிப்புள்ள எருமை மாடு ஒன்று வளர்த்து வருகிறார்.
    • வெள்ளிங்கிரி மேட்டுப்பாளையம் போலீசில்புகார் அளித்தார்.

    மேட்டுப்பாளையம் 

    மேட்டுப்பாளையம் அருகே நெல்லித்துறை சாலை சமயபுரம் அண்ணாநகரை சேர்ந்தவர் வெள்ளியங்கிரி (32). விவசாயி. இவர் ரூ.90 ஆயிரம் மதிப்புள்ள எருமை மாடு ஒன்று வளர்த்து வருகிறார். கடந்த மே மாதம் 27-ந் தேதி இவரது மாடு காணாமல் போனது.

    இந்த நிலையில் நேற்று பத்ரகாளியம்மன் சாலை வேல் நகர் பகுதியை சேர்ந்த கோவிந்தன் என்பவரது மாட்டு கொட்டகையில் மாடு கட்டியிருந்ததை பார்த்த அவர் அங்கு சென்று விசாரித்தார். அதற்கு கோவிந்தன் இது உங்களின் எருமைமாடு என்பது எனக்கு தெரியாது. நான் இதனை கல்லாறு பகுதியை சேர்ந்த ராஜ்குமார் (46) என்பவரிடம் விலைக்கு வாங்கினேன் என்றார்.

    இதையடுத்து வெள்ளியங்கிரி கல்லாறு சென்று ராஜ்குமாரிடம் விசாரித்தார். அப்போது ராஜ்குமார் இந்த எருமை மாடு உன்னுடையது தான், நான் தான் எடுத்து வந்து விற்றேன். உன்னால் என்ன செய்ய முடியும் என்று வெள்ளியங்கிரியை மிரட்டினார்.

    இது தொடர்பாக வெள்ளிங்கிரி மேட்டுப்பாளையம் போலீசில்புகார் அளித்தார். மேட்டுப்பாளையம் காவல் உதவி ஆய்வாளர் முருகநாதன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • இன்று காலை நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 12 ஆயிரம் கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது.
    • ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ, துணி துவைக்கவோ கூடாது எனவும், பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனவும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    கோவை:

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ளது பில்லூர் அணை. இந்த அணை 100 அடி கொள்ளளவு கொண்டதாகும். நீலகிரி மற்றும் அணை நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில வாரங்களாக மழை பெய்து வருகிறது.

    இதன் காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன்பு 10 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்தது. அணையின் நீர்மட்டம் 96 அடியாக இருந்தது. அதன்பின்னர் அணையின் நீர்மட்டம் வெகுவாக குறைந்தது.

    இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக நீலகிரி மாவட்டத்தில் பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பில்லூர் அணைக்கும் நீர்வரத்தும் அதிகரித்து காணப்பட்டது.

    இன்று காலை நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 12 ஆயிரம் கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் அணையின் நீர்மட்டமும் வேகமாக உயர்ந்து முழு கொள்ளளவான 100 அடியில் 97 அடியை எட்டியது.

    இதையடுத்து அணையின் பாதுகாப்பு கருதி அணையில் இருந்து, 12 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் பவானி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

    பவானி ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்ததை அடுத்து, பவானி ஆற்றின் கரையோரப்பகுதிகளான தேக்கம்பட்டி, மேட்டுப்பாளையம், நெல்லித்துறை, ஆலாங்கொம்பு வச்சினம்பாளையம், சிறுமுகை உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தாசில்தார் மாலதி,மேட்டுப்பாளையம் காவல் ஆய்வாளர் சண்முகம் ஆகியோர் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ, துணி துவைக்கவோ கூடாது எனவும், பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனவும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    ×