search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பில்லூர் அணை நிரம்பியது-பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு
    X

    பில்லூர் அணை நிரம்பியது-பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு

    • இன்று காலை நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 12 ஆயிரம் கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது.
    • ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ, துணி துவைக்கவோ கூடாது எனவும், பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனவும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    கோவை:

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ளது பில்லூர் அணை. இந்த அணை 100 அடி கொள்ளளவு கொண்டதாகும். நீலகிரி மற்றும் அணை நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில வாரங்களாக மழை பெய்து வருகிறது.

    இதன் காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன்பு 10 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்தது. அணையின் நீர்மட்டம் 96 அடியாக இருந்தது. அதன்பின்னர் அணையின் நீர்மட்டம் வெகுவாக குறைந்தது.

    இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக நீலகிரி மாவட்டத்தில் பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பில்லூர் அணைக்கும் நீர்வரத்தும் அதிகரித்து காணப்பட்டது.

    இன்று காலை நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 12 ஆயிரம் கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் அணையின் நீர்மட்டமும் வேகமாக உயர்ந்து முழு கொள்ளளவான 100 அடியில் 97 அடியை எட்டியது.

    இதையடுத்து அணையின் பாதுகாப்பு கருதி அணையில் இருந்து, 12 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் பவானி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

    பவானி ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்ததை அடுத்து, பவானி ஆற்றின் கரையோரப்பகுதிகளான தேக்கம்பட்டி, மேட்டுப்பாளையம், நெல்லித்துறை, ஆலாங்கொம்பு வச்சினம்பாளையம், சிறுமுகை உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தாசில்தார் மாலதி,மேட்டுப்பாளையம் காவல் ஆய்வாளர் சண்முகம் ஆகியோர் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ, துணி துவைக்கவோ கூடாது எனவும், பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனவும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    Next Story
    ×