search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Pinarayi Vijayan"

    • குடியுரிமை திருத்தச்சட்டம் மக்களை மத ரீதியாக பிளவுபடுத்தும் சட்டம்
    • மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், குடியுரிமை திருத்தச் சட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது.

    "குடியுரிமை திருத்தச்சட்டம் மக்களை மத ரீதியாக பிளவுபடுத்தும் சட்டம். சிறுபான்மையினரை இரண்டாம் தர குடிமக்களாகக் கருதும் குடியுரிமை திருத்தச் சட்டம் கேரளாவில் அமல்படுத்தப்படாது என்று உறுதியாக கூறுகிறோம்" என்று அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

    மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், குடியுரிமை திருத்தச் சட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது. 2019ம் ஆண்டு பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் குடியுரிமை திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. 4 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது குடியுரிமை திருத்தச் சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    2014 டிசம்பர் 31-க்கு முன்னதாக பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்காளதேச நாடுகளில் இருந்து இந்தியாவில் புலம்பெயர்ந்த முஸ்லிம்கள் அல்லாத சிறுபான்மையினரான இந்துக்கள், சீக்கியர்கள், சமணர்கள், பவுத்த மதத்தினர், பார்சிகள், கிறிஸ்தவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க குடியுரிமை திருத்தச் சட்டம் வகை செய்கிறது.

    குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றன. இதில் 100-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். இதனால் இந்த சட்டத்தை அமல்படுத்துவதற்கான விதிமுறைகளை மத்திய அரசு வெளியிடவில்லை. அதன் காரணமாக இந்த சட்டம் அப்போது அமலுக்கு வரவில்லை.

    • கேரளாவில் மார்ச் 7 ஆம் தேதி மாநில அரசுக்கு சொந்தமான ஓடிடி தளத்தை தொடங்கினர்
    • Cspace-ன் பிரதான நோக்கமே நல்ல சினிமாவை ஊக்குவிக்கவும் தயாரிப்பாளர்கள் மற்றும் பார்வையாளர்களின் நலன்களைப் பாதிக்காமல் இருக்க வேண்டும் என்பதுதான்

    கேரளாவில் மார்ச் 7 ஆம் தேதி மாநில அரசுக்கு சொந்தமான ஓடிடி தளத்தை தொடங்கினர். இதனை கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் துவக்கி வைத்தார். இத்தளத்திற்கு Cspace என்று பெயரிட்டுள்ளனர். மலையாள சினிமாவை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்ல இந்த முயற்சியை துவங்குகிறோம் என்று அப்போது பினராயி கூறினார். இது கலை மற்றும் கலாச்சார மதிப்புள்ள திரைப்படங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க ஒரு பாதையாக அமையும் என்றும், பிற ஓடிடி தளம் அனைத்தும் வியாபார நோக்கத்துடன பெரிய கமர்ஷியல் படங்களை மட்டும் வாங்குகின்றன., CSpace தரமான திரைப்படங்களை வீட்டிற்கு கொண்டு வரும் ஒரு ஊடகமாக முத்திரை பதிக்க உள்ளது என்றும் கூறினார்.

    Cspace ஓடிடி தளத்தில் ஏற்கனவே தியேட்டரில் வெளியான படங்களை மட்டும்தான் இடம்பெறும். அதனால் தியேட்டருக்கு சென்று பார்க்கும் பார்வையாளர்களை அது பாதிக்காத வண்ணம் இது செயல்படும் என்று கூறப்பட்டுள்ளது.

    Cspace-ன் பிரதான நோக்கமே நல்ல சினிமாவை ஊக்குவிக்கவும் தயாரிப்பாளர்கள் மற்றும் பார்வையாளர்களின் நலன்களைப் பாதிக்காமல் இருக்க வேண்டும் என்பதுதான்.

    மாநில, தேசிய மற்றும் சர்வதேச விருதுகளை வென்ற படமும் இதில் இடம்பெரும் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதன் முதல் கட்டமாக 42 படங்கள் Cspace ஓடிடி தளத்தில் இடம்பெறவுள்ளது. அதில் 35 முழு நீள படங்களும், 6 ஆவணப் படங்களும்,1 குறும்படமும் இடம்பெறவுள்ளது.

    சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்ட திரைப்படங்களை இந்த ஓ.டி.டி. தளத்தில் வெளியிடவும் திட்டமிட்டிருக்கிறார்கள்.

    பே பெர் வியூ என்ற அடிப்படையில் இந்த ஓடிடி தளம் இயங்கவுள்ளது. ஃபீட்சர் (Feature)படங்களை பார்க்க ரூ.75, குறும்படங்களை பார்க்க குறைவான கட்டணங்கள் வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்டணத்தில் பாதி தொகை அந்த படத்தின் தயாரிப்பளருக்கு சென்றடையும் என்று குறிப்பிட்டுள்ளனர். Cspace-ன் app-ஐ கூகுள் ப்ளே ஸ்டோர், ஆப் ஸ்டோரில் இருந்து நாம் டவுன்லோட் செய்துக்கொள்ளலாம்.

    இந்த Cspace ஓடிடி தளம் வெளியானதால் சிறிய பட்ஜெட் படங்களுக்கும், வணிக சமரசமின்றி எடுக்கப்படும் யதார்த்தப் படைப்புகளுக்கும் பெரும் வரமாக இருக்கப்போகிறது என்று எதிர்பார்க்கப்படுகிறது.



     


    • முடிவில்லா மகிழ்ச்சி, தொடர் வெற்றிகளையும் பெற விழைகிறேன் என பினராயி விஜயன் கூறியுள்ளார்.
    • தமிழ்நாட்டின் முதல்வர் மு.க.ஸ்டாலின் நீடூழி வாழ அவரது பிறந்தநாளில் வாழ்த்துகிறேன் என கமல்ஹாசன் கூறியுள்ளார்.

    சென்னை:

    தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று தனது 71-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி அவருக்கு பிரதமர் மோடி, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

    இதே போல், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், அன்புத்தோழர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்துகள். நமது அரசிலமைப்பின் கூறான ஜனநாயகம் மற்றும் மதச்சார்பற்ற விழுமியங்களைப் பாதுகாப்பதில் உங்களின் உறுதியான நிலைப்பாடு ஊக்கமளிக்கிறது. முடிவில்லா மகிழ்ச்சி, தொடர் வெற்றிகளையும் பெற விழைகிறேன் என கூறியுள்ளார்.

    மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன், சமூகநீதி, மகளிர் மேம்பாடு, இளைஞர் நலம், தொழில் வளர்ச்சி என தமிழ்நாட்டை வளர்ச்சிப் பாதையில் செலுத்தி வரும் எனது அன்பிற்கினிய நண்பர், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர், தமிழ்நாட்டின் முதல்வர் மு.க.ஸ்டாலின் நீடூழி வாழ அவரது பிறந்தநாளில் வாழ்த்துகிறேன் என கூறியுள்ளார்.

    இந்நிலையில், நடிகரும், தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவருமான விஜய் எக்ஸ் தள பக்கத்தில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

    • காங்கிரஸ் கட்சியில் தலைவர்கள் நாளை இருப்பார்களா இல்லையா என்பது உறுதியாக தெரியவில்லை.
    • கோவிலுக்குச் செல்வது, பஜனைகள் பாடுவது ஆகியவை ஒவொருவரது தனிப்பட்ட விருப்பங்கள் என்றார்.

    திருவனந்தபுரம்:

    கேரளாவின் கண்ணூரில் நடந்த நிகழ்ச்சியில் முதல் மந்திரி பினராயி விஜயன் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:

    காங்கிரஸ் கட்சியில் தலைவர்கள் நாளை இருப்பார்களா இல்லையா என்பது உறுதியாக தெரியவில்லை.

    அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு விழாவிற்கு பிரதமர் மோடி சென்றார். அதேநாளில் கோவிலில் தியானம் செய்ய காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவரான ராகுல் காந்தி போராட்டம் நடத்தினார்.

    கோவிலுக்குச் செல்வது, பிரார்த்தனை செய்வது, பஜனைகள் பாடுவது ஆகியவை ஒருவரது தனிப்பட்ட விருப்பங்கள். நாங்கள் யாரும் அதை எதிர்க்கவில்லை.

    ஆனால் அவர்கள் பார்வையிடத் தேர்ந்தெடுத்த தேதி மற்றும் நேரம் மற்றும் இதன்மூலம் அவர்கள் தெரிவிக்க முயற்சிக்கும் செய்தியில் தான் பிரச்சனை உள்ளது என குறிப்பிட்டார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கேரளாவில் ஆளுநர் ஆரிப் முகமது கானுக்கும், ஆளும் இடதுசாரி கூட்டணி அரசுக்கும் மோதல் போக்கு நீடித்து வருகிறது.
    • ஆளுநர் செல்லும் இடங்களில் இந்திய மாணவர் கூட்டமைப்பு கருப்பு கொடி போராட்டங்களை நடத்தி வருகிறது.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் ஆளுநர் ஆரிப் முகமது கானுக்கும், ஆளும் இடதுசாரி கூட்டணி அரசுக்கும் மோதல் போக்கு நீடித்து வருகிறது. ஆளுநர் செல்லும் இடங்களில் அவருக்கு எதிராக இந்திய மாணவர் கூட்டமைப்பு கருப்பு கொடி போராட்டங்களை நடத்தி வருகிறது.

    பல்கலைக்கழகங்களின் வேந்தராக உள்ள ஆளுநர், தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ். வேட்பாளர்களை கேரளாவில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு தள்ளுவதாக இந்திய மாணவர் அமைப்பு குற்றம் சாட்டி வருகிறது.

    இந்நிலையில், ஆளுநர் ஆரிப் முகமது கான் கூறுகையில், எனக்கு எதிராக கருப்பு கொடி போராட்டத்தை நடத்துமாறு இந்திய மாணவர் சங்கத்தை முதல் மந்திரி பினராயி விஜயன்தான் கூறுகிறார்.

    அவர்கள் என் அருகில் வராமல் இருக்க காவல்துறையைப் பயன்படுத்துகிறார். என்னை தொட்டால் என்ன விளைவுகள் ஏற்படும் என்று அவருக்கு தெரியும். இனி நான் பயப்பட மாட்டேன் என்பதை பினராயி விஜயன் உணரவேண்டும். அவர் அனைவரையும் பலி கொடுக்க விரும்புகிறார். காவல்துறையினரை துன்புறுத்துவதும், இளைஞர்களை சுரண்டுவதும் எனக்கு வருத்தம் அளிக்கிறது என தெரிவித்தார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நிதிப்பகிர்வில் மத்திய அரசு பாரபட்சம் காட்டுவதால் போராட்டம் நடத்தும் சூழல் ஏற்பட்டுள்ளது.
    • மாநிலங்கள் இருப்பதும், மாநிலங்களுக்கு முதல் மந்திரிகள் இருப்பதும் பிரதமருக்கு பிடிக்கவில்லை என்றார் மு.க.ஸ்டாலின்.

    சென்னை:

    மத்திய அரசுக்கு எதிராக டெல்லி ஜந்தர்மந்தரில் கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் தலைமையில் இன்று போராட்டம் நடந்தது. இந்தப் போராட்டத்தில் காணொளி வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

    நிதிப்பகிர்வில் மத்திய அரசு பாரபட்சம் காட்டுகிறது. போராட்டம் நடத்தும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலை மத்திய அரசு செயல்பாடுகளை கண்டும் காணாமல் இருக்கும் பா.ஜ.க. மாநில முதல் மந்திரிகளுக்கும் ஏற்படும்.

    மாநிலங்கள் இருப்பதும், மாநிலங்களுக்கு முதல் மந்திரிகள் இருப்பதும் பிரதமர் மோடிக்கு பிடிக்கவில்லை.

    மோடி பிரதமர் ஆனதும் கல்வி, மொழி, நிதி, சட்ட உரிமையைப் பறித்தார். இதற்கு காரணமான மத்திய பா.ஜ.க. அரசு, மக்களுக்கு பதில் சொல்ல வேண்டிய நாள் வெகு தொலைவில் இல்லை.

    முந்தைய காலத்தில் பிரதமர்கள் மாநில அரசுகளை மதித்தார்கள். ஆனால் பிரதமர் மோடி மதிப்பதில்லை.

    மாநில அரசுகளிடம் மத்திய அரசு காட்டும் பாகுபாடு ஆக்சிஜனை நிறுத்துவதற்கு சமம். கேரளாவில் இருந்து மக்கள் பணியாற்ற வேண்டிய கேரள முதல் மந்திரியை டெல்லி வந்து போராட்டம் நடத்த பா.ஜ.க. அரசு வைத்துள்ளது.

    கூட்டாட்சி தத்துவத்தை பேணிக் காப்பதற்காக இந்தியா கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. அனைவரும் ஒன்றாக இணைந்து பா.ஜ.க.வை வெளியேற்றுவோம் என தெரிவித்தார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மத்திய அரசுக்கு எதிராக கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் டெல்லி ஜந்தர்மந்தரில் இன்று போராட்டத்தில் ஈடுபட்டார்.
    • போராட்டத்தில் ஆம் ஆத்மி முதல் மந்திரிகளான அரவிந்த் கெஜ்ரிவால், பகவந்த்மான் ஆகியோர் பங்கேற்றனர்.

    புதுடெல்லி:

    மத்திய அரசை கண்டித்து கர்நாடகா முதல்-மந்திரி சித்தராமையா டெல்லியில் நேற்று போராட்டம் நடத்தினார். இதில் மாநில மந்திரிகள், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்றனர்.

    இந்த நிலையில் மத்திய அரசுக்கு எதிராக கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் டெல்லி ஜந்தர்மந்தரில் இன்று போராட்டத்தில் ஈடுபட்டார். பேரணியாக சென்று அவர் போராட்டத்தில் ஈடுபட்டார். கேரள மாநில மந்திரிகள், எம்.எல்.ஏ.க்கள் என ஏராளமானவர்கள் அவருடன் ஊர்வலமாக சென்றனர்.

    இந்த போராட்டத்தில் ஆம் ஆத்மி முதல் மந்திரிகளான அரவிந்த் கெஜ்ரிவால் (டெல்லி), பகவந்த்மான் (பஞ்சாப்) ஆகியோர் பங்கேற்றனர்.

    கேரளாவுக்கு மத்திய அரசு பாரபட்சம் காட்டுவதாக பினராயி விஜயன் போராட்டத்தின்போது குற்றம்சாட்டினார்.

    • மாநிலங்களின் குரல்வளையை நெரிக்க ஒன்றிய அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ள கேரள அரசுக்குப் பாராட்டு.
    • இந்திய அரசமைப்பின் 293-வது பிரிவின் கீழ் தனக்குள்ள அதிகாரத்தை ஒன்றிய அரசு தவறாகப் பயன்படுத்தி வருகிறது.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனுக்கு இன்று ஒரு கடிதம் எழுதி உள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

    மாநில அரசுகளின் நிதி நிர்வாகத்தில் தன்னிச்சையான மற்றும் பாரபட்சமான கட்டுப்பாட்டைச் செயல்படுத்தி, மாநிலங்களின் குரல்வளையை நெரிக்க ஒன்றிய அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ள கேரள அரசுக்குப் பாராட்டு தெரிவித்துக் கொள்கிறேன்.

    ஒன்றிய அரசு சில காலமாகவே மாநில அரசுகளுக்கு எதிராக இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தாலும், கடந்த சில ஆண்டுகளில் நிலைமை வேகமாக மோசமடைந்துள்ளது. மாநிலங்களின் நிதி நிர்வாகத்தில் இத்தகைய மறைமுகக் கட்டுப்பாடுகள் அகற்றப்பட வேண்டும் என்பதில் முற்போக்கான மாநிலங்களிடையே தெளிவான, ஒருமித்த கருத்து உருவாகி உள்ளது.

    மாநிலங்களின் பொதுச் செலவினங்களுக்கு நிதியளிப்பதற்கான பொதுக்கடன் என்பது, இந்திய அரசமைப்புச் சட்டத்தின்படி, மாநில சட்டமன்றத்தின் தனிப்பட்ட அதிகார வரம்பிற்கு உட்பட்டது இருப்பினும், மாநிலங்கள் கடன் வாங்குவதற்கான வாய்ப்புகளைக் கட்டுப்படுத்த, இந்திய அரசமைப்பின் 293-வது பிரிவின் கீழ் தனக்குள்ள அதிகாரத்தை ஒன்றிய அரசு தவறாகப் பயன்படுத்தி வருகிறது. இந்தப் பிரிவின்படி, ஒன்றிய அரசிடம் முன் அனுமதி பெற வேண்டும் என்ற ஷரத்து, மாநில அரசின் நிதிப் பொறுப்பு மற்றும் வரவு-செலவு மேலாண்மை விதிகளின்படி வரையறுக்கப் பட்ட நிதிப்பற்றாக்குறையை நேர் செய்யும் மாநில அரசின் முனைப்புகளை தடுக்கும் கருவியாக ஒன்றிய அரசால் மாற்றப்பட்டுள்ளது. இதன் விளைவாக அரசமைப்பு சட்டத்தை உருவாக்கியவர்கள் கருதிய நிதிக் கூட்டாட்சியின் அடிப்படைக்கே மாபெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது.

    ஏற்கனவே ஜி.எஸ்.டி. அமலாக்கத்தின் மூலம் மாநிலங்களின் நிதித் தன்னாட்சி கடுமையாக குறைக்கப்பட்டுள்ள நேரத்தில் இத்தகைய பாரபட்சமான மற்றும் அரசியலமைப்பிற்கு முரணான நடவடிக்கைகளை ஒன்றிய அரசு முன்னெடுத்து வருகிறது. சரக்குகள் மற்றும் சேவைகள் வரி அமலுக்கு முந்தைய காலகட்டத்தை ஒப்பிடுகையில், ஆண்டொன்றுக்கு 20,000 கோடி ரூபாய் வருவாய்ப் பற்றாக்குறையை தமிழ்நாடு அரசு எதிர்கொண்டு வருகிறது, இழப்பீட்டுத் திட்டத்தை நீட்டிக்க ஒன்றிய அரசு மறுத்து வருகிறது. ஒருமித்த கருத்துடைய முற்போக்கான மாநில அரசுகள் இதனை எதிர்க்க வேண்டும்.

    நிதிக் கூட்டாட்சித் தத்துவத்தைப் பாதுகாப்பதில் கேரள அரசின் உறுதிப்பாட்டை தான் முழுமையாக ஆதரிப்பதோடு தமிழ்நாடு அரசு தனது முழு ஒத்துழைப்பை கேரள அரசுக்கு வழங்கத் தயாராக உள்ளது, இந்த முக்கியமான சவாலை எதிர்கொள்ள கேரள அரசின் நடவடிக்கைகளோடு, தமிழ் நாடு அரசின் முயற்சிகளையும் ஒருங்கிணைத்துக் கொள்ள வேண்டும்.

    இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார்.

    • காவல்துறையை முதல்-மந்திரி கட்டுப்படுத்துகிறார் என தெரிவித்தார்.
    • கவர்னர், முதிர்ச்சியையும் விவேகத்தையும் காட்ட வேண்டும்.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் ஆளும் பினராயி விஜயன் தலைமையிலான இடதுசாரி அரசுக்கும், கவர்னர் ஆரிப் முகமது கானுக்கும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கிடையில் கவர்னர் ஆரிப் முகமது கான் மாநிலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்குச் செல்லும் போது, இந்திய மாணவர் அமைப்பினர் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

    நேற்று கொல்லம் மாவட்டத்தில் கொட்டாரக்கரை பகுதியில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க காரில் வந்தார். அப்போது அவரது காரை கருப்புக்கொடியுடன் இந்திய மாணவர் அமைப்பினர் வழிமறித்து, கோ பேக் என கோஷமிட்டனர்.

    போராட்டக்காரர்களை போலீசார் தடுத்து நிறுத்திய போது, யாரும் எதிர்பார்க்காத விதமாக காரில் இருந்து இறங்கிய கவர்னர் ஆரிப் முகமது கான், பாதுகாப்பு வளையத்தை மீறி, சாலையோரம் இருந்த டீக்கடையில் போடப்பட்டிருந்த நாற்காலியை எடுத்து சாலையில் போட்டு அமர்ந்தார்.

    போலீசார் தனக்கு சரியான பாதுகாப்பு அளிக்கவில்லை என குற்றம் சாட்டிய அவர், தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சுமார் 2 மணி நேரம் அவர் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், போராட்டக்காரர்கள் மீது போடப்பட்ட எப்.ஐ.ஆரை போலீசார் காண்பித்தனர். அதன்பிறகே கவர்னர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். முன்னதாக அவர் கூறுகையில், கேரளாவில் காவல்துறை நன்றாக உள்ளது. ஆனால் அவர்களை சரியாக செயல்பட அனுமதிக்கவில்லை. காவல்துறையை முதல்-மந்திரி கட்டுப்படுத்துகிறார் என தெரிவித்தார்.


    இந்த சூழலில் அவருக்கு மத்திய அரசின் இசட் பிளஸ் சி.ஆர்.பி.எப். பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனிடம் கேட்ட போது, அவர் கூறியதாவது:-

    மாநிலத்தின் தலைவர் என்ற முறையில் கவர்னருக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது. அந்தப் பாதுகாப்பு வேண்டாம் என்று அவர் கூறுகிறார். அவர் வித்தியாசமான முறையில் விஷயங்களை கையாளுகிறார். பதவியில் இருப்பவர்களுக்கு எதிராக பல்வேறு விதமான எதிர்ப்புகள் இருக்கும்.

    போராட்டக்காரர்களுக்கு எதிராக போலீசார் எடுத்த நடவடிக்கை என்ன என்பதை தெரிந்து கொள்வதற்காக கவர்னர், சாலையில் இறங்குவது வேடிக்கையாக உள்ளது. எந்த அதிகார பதவியும் சட்டத்திற்கு மேலானது அல்ல. கவர்னர், முதிர்ச்சியையும் விவேகத்தையும் காட்ட வேண்டும்.

    எங்காவது எப்.ஐ.ஆருக்காக ஸ்டிரைக் பார்த்திருக்கிறீர்களா? கவர்னர், கேரளாவுக்கு சவால் விடுகிறார். ஞானம் தன்னால் பெற முடியாது. அனுபவத்தில் தான் வர வேண்டும். தற்போது அவருக்கு சி.ஆர்.பி.எப். பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. அவர்களால் வழக்கு எதுவும் பதிவு செய்ய முடியுமா? கேரளாவில் சில ஆர்.எஸ்.எஸ்.காரர்களுக்கு மத்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. அந்தப் பட்டியலில் தற்போது கவர்னரும் சேர்ந்துள்ளார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தொடர்ந்து பேசிய பினராயி விஜயன், அரசியல் சாசனங்களுக்கு சவால் விடுத்து கூட்டாட்சி கொள்கைகளை குழிதோண்டி புதைக்கும் மத்திய அரசின் முயற்சிகளுக்கு எதிராக அனைவரும் ஒருங்கிணைந்து குரல் எழுப்ப வேண்டியது அவசியம் என்றார்.

    வருகிற 8-ந் தேதி டெல்லியில் மத்திய அரசுக்கு எதிராக நடைபெற உள்ள போராட்டத்திற்கு முன்னதாக ஒருங்கிணைந்த போராட்டம் இருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • குடியரசு தின விழாவில் கவர்னர் ஆரீப் முகமது கான், முதல்-மந்திரி பினராயி விஜயன் மற்றும் மந்திரிகள் கலந்து கொண்டனர்.
    • மாலையில் கவர்னர் ஆரீப் முகமது கான், தேநீர் விருந்து அளித்தார்.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் முதல்-மந்திரி பினராயி விஜயன் தலைமையிலான அரசுக்கும், கவர்னர் ஆரீப் முகமது கானுக்கும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்த நிலையில் நேற்று நடைபெற்ற குடியரசு தின விழாவில் கவர்னர் ஆரீப் முகமது கான், முதல்-மந்திரி பினராயி விஜயன் மற்றும் மந்திரிகள் கலந்து கொண்டனர்.

    விழாவில் பேசிய கவர்னர், மத்திய அரசின் சாதனைகளை வலியுறுத்தி பேசினார். கருத்து வேறுபாடுகள் வன்முறையாக மாறுவது, ஜனநாயக துரோகம் என்றும் அவர் பேசினார்.

    தொடர்ந்து மாலையில் கவர்னர் ஆரீப் முகமது கான், தேநீர் விருந்து அளித்தார். இந்த விருந்தினை கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் மற்றும் மந்திரிகள் புறக்கணித்தனர்.

    கடந்த மாதம் புதிய மந்திரிகள் கணேஷ்குமார் மற்றும் ராமச்சந்திரன் கடனப்பள்ளி ஆகியோர் பதவி பிரமாணத்தின்போது கவர்னர் கொடுத்த தேநீர் விருந்தையும் முதல்-மந்திரி பினராயி விஜயன் மற்றும் மந்திரிகள் புறக்கணித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • மத்திய அரசை கண்டித்து டெல்லி ஜந்தர் மந்தரில் பிப்ரவரி 8-ந்தேதி கேரள மாநில முதல்-மந்திரி பினராயி விஜயன் தலைமையில் போராட்டம் நடக்க உள்ளது.
    • கேரள மாநில மந்திரிகள், இடதுசாரி கூட்டணி கட்சிகளின் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்கிறார்கள்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநில அரசுக்கும், அந்த மாநில கவர்னருக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கு இருந்து வருகிறது. இதன் காரணமாக கவர்னருக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

    கேரள மாநிலத்தை மத்திய அரசு தொடர்ந்து புறக்கணித்து வருவதாக பினராயி விஜயன் தலைமையிலான அரசு தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. இந்நிலையில் கேரளாவை புறக்கணித்து வரும் மத்திய அரசை கண்டித்து டெல்லி ஜந்தர் மந்தரில் பிப்ரவரி 8-ந்தேதி கேரள மாநில முதல்-மந்திரி பினராயி விஜயன் தலைமையில் போராட்டம் நடக்க உள்ளது.

    இதில் கேரள மாநில மந்திரிகள், இடதுசாரி கூட்டணி கட்சிகளின் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்கிறார்கள். இந்த போராட்டத்தில் கலந்து கொள்ள காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் பினராயி விஜயன் தலைமையில் நடக்கும் இந்த போராட்டத்தில் பங்கேற்குமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை கேரள மாநில தொழில்துறை மந்திரி ராஜீவ் நேற்று சந்தித்தார்.

    அப்போது மு.க.ஸ்டாலினிடம், கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் வழங்கிய அழைப்பு கடிதத்தை அவர் வழங்கினார்.

    பினராயி விஜயன், தனது மாநில மந்திரியை நேரில் அனுப்பி அழைப்பு விடுத்திருப்பதால் மத்திய அரசுக்கு எதிராக பினராயி விஜயன் தலைமையில் டெல்லியில் பிப்ரவரி 8-ந்தேதி நடக்க இருக்கும் போராட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கலாம் என்று கருதப்படுகிறது.

    • அடுத்த 2½ ஆண்டுகளுக்கான மந்திரிகளாக நேற்று கடனம்பள்ளி ராமச்சந்திரன் மற்றும் கணேஷ்குமார் ஆகியோர் பதவியேற்றனர்.
    • கவர்னர் மாளிகையில் அவர்களுக்கு கவர்னர் ஆரிப் முகம்மதுகான் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தலைமையிலான இடது ஜனநாயக முன்னணியின் (எல்.டி.எப்.) ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்டு, ஜனநாயக கேரள காங்கிரஸ், இந்திய தேசிய காங்கிரஸ் (எஸ்), கேரள காங்கிரஸ் (பி) ஆகிய கட்சிகள் இடம் பெற்றுள்ளன.

    இந்த கட்சிகளுக்கு தலா ஒரு எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். இவர்களில் 2 பேருக்கு, முதல் 2½ ஆண்டுகளும், மேலும் உள்ள 2 பேருக்கு அடுத்த 2½ ஆண்டுகளும் மந்திரி பதவி வழங்குவது என தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தையின்போது ஒப்பந்தம் செய்யப்பட்டது. அதன்படி முதல் 2½ ஆண்டுகள் முடிவடைந்த நிலையில் அடுத்த 2½ ஆண்டுகளுக்கான மந்திரிகளாக நேற்று கடனம்பள்ளி ராமச்சந்திரன் மற்றும் கணேஷ்குமார் ஆகியோர் பதவியேற்றனர்.

    திருவனந்தபுரத்தில் உள்ள கவர்னர் மாளிகையில் அவர்களுக்கு கவர்னர் ஆரிப் முகம்மதுகான் பதவி பிரமாணம் செய்து வைத்தார். இந்த விழாவில் கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் உள்பட மந்திரிகள் அனைவரும் கலந்துகொண்டனர். தொடர்ந்து கவர்னர் ஆரிப் முகம்மது கான் தேநீர் விருந்து அளித்தார்.

    இந்த விருந்தை முதல்-மந்திரி பினராயி விஜயன் மற்றும் மந்திரிகள் புறக்கணித்தனர். புதிதாக பொறுப்பேற்ற மந்திரிகள் கணேஷ்குமார், கடனம்பள்ளி ராமச்சந்திரன் ஆகியோருடன் வனத்துறை மந்திரி சசீந்திரன் மட்டும் தேநீர் விருந்தில் பங்கேற்றனர்.

    முன்னதாக பதவியேற்பு விழாவுக்காக டெல்லியில் இருந்து கவர்னர் ஆரிப் முகம்மது கான் விமானம் மூலம் திருவனந்தபுரம் வந்தார். விமான நிலையத்தில் இருந்து கவர்னர் மாளிகைக்கு அவர் காரில் புறப்பட்டபோது, இந்திய மாணவர் கூட்டமைப்பினர் கருப்பு கொடி காட்ட முயன்றனர். அவர்களை தடுத்த போலீசார் 4 பேரை கைது செய்தனர்.

    ×