search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கேரள அரசின் நடவடிக்கைகளுக்கு தமிழக அரசு முழு ஒத்துழைப்பு அளிக்கும்: மு.க.ஸ்டாலின் கடிதம்
    X

    கேரள அரசின் நடவடிக்கைகளுக்கு தமிழக அரசு முழு ஒத்துழைப்பு அளிக்கும்: மு.க.ஸ்டாலின் கடிதம்

    • மாநிலங்களின் குரல்வளையை நெரிக்க ஒன்றிய அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ள கேரள அரசுக்குப் பாராட்டு.
    • இந்திய அரசமைப்பின் 293-வது பிரிவின் கீழ் தனக்குள்ள அதிகாரத்தை ஒன்றிய அரசு தவறாகப் பயன்படுத்தி வருகிறது.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனுக்கு இன்று ஒரு கடிதம் எழுதி உள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

    மாநில அரசுகளின் நிதி நிர்வாகத்தில் தன்னிச்சையான மற்றும் பாரபட்சமான கட்டுப்பாட்டைச் செயல்படுத்தி, மாநிலங்களின் குரல்வளையை நெரிக்க ஒன்றிய அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ள கேரள அரசுக்குப் பாராட்டு தெரிவித்துக் கொள்கிறேன்.

    ஒன்றிய அரசு சில காலமாகவே மாநில அரசுகளுக்கு எதிராக இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தாலும், கடந்த சில ஆண்டுகளில் நிலைமை வேகமாக மோசமடைந்துள்ளது. மாநிலங்களின் நிதி நிர்வாகத்தில் இத்தகைய மறைமுகக் கட்டுப்பாடுகள் அகற்றப்பட வேண்டும் என்பதில் முற்போக்கான மாநிலங்களிடையே தெளிவான, ஒருமித்த கருத்து உருவாகி உள்ளது.

    மாநிலங்களின் பொதுச் செலவினங்களுக்கு நிதியளிப்பதற்கான பொதுக்கடன் என்பது, இந்திய அரசமைப்புச் சட்டத்தின்படி, மாநில சட்டமன்றத்தின் தனிப்பட்ட அதிகார வரம்பிற்கு உட்பட்டது இருப்பினும், மாநிலங்கள் கடன் வாங்குவதற்கான வாய்ப்புகளைக் கட்டுப்படுத்த, இந்திய அரசமைப்பின் 293-வது பிரிவின் கீழ் தனக்குள்ள அதிகாரத்தை ஒன்றிய அரசு தவறாகப் பயன்படுத்தி வருகிறது. இந்தப் பிரிவின்படி, ஒன்றிய அரசிடம் முன் அனுமதி பெற வேண்டும் என்ற ஷரத்து, மாநில அரசின் நிதிப் பொறுப்பு மற்றும் வரவு-செலவு மேலாண்மை விதிகளின்படி வரையறுக்கப் பட்ட நிதிப்பற்றாக்குறையை நேர் செய்யும் மாநில அரசின் முனைப்புகளை தடுக்கும் கருவியாக ஒன்றிய அரசால் மாற்றப்பட்டுள்ளது. இதன் விளைவாக அரசமைப்பு சட்டத்தை உருவாக்கியவர்கள் கருதிய நிதிக் கூட்டாட்சியின் அடிப்படைக்கே மாபெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது.

    ஏற்கனவே ஜி.எஸ்.டி. அமலாக்கத்தின் மூலம் மாநிலங்களின் நிதித் தன்னாட்சி கடுமையாக குறைக்கப்பட்டுள்ள நேரத்தில் இத்தகைய பாரபட்சமான மற்றும் அரசியலமைப்பிற்கு முரணான நடவடிக்கைகளை ஒன்றிய அரசு முன்னெடுத்து வருகிறது. சரக்குகள் மற்றும் சேவைகள் வரி அமலுக்கு முந்தைய காலகட்டத்தை ஒப்பிடுகையில், ஆண்டொன்றுக்கு 20,000 கோடி ரூபாய் வருவாய்ப் பற்றாக்குறையை தமிழ்நாடு அரசு எதிர்கொண்டு வருகிறது, இழப்பீட்டுத் திட்டத்தை நீட்டிக்க ஒன்றிய அரசு மறுத்து வருகிறது. ஒருமித்த கருத்துடைய முற்போக்கான மாநில அரசுகள் இதனை எதிர்க்க வேண்டும்.

    நிதிக் கூட்டாட்சித் தத்துவத்தைப் பாதுகாப்பதில் கேரள அரசின் உறுதிப்பாட்டை தான் முழுமையாக ஆதரிப்பதோடு தமிழ்நாடு அரசு தனது முழு ஒத்துழைப்பை கேரள அரசுக்கு வழங்கத் தயாராக உள்ளது, இந்த முக்கியமான சவாலை எதிர்கொள்ள கேரள அரசின் நடவடிக்கைகளோடு, தமிழ் நாடு அரசின் முயற்சிகளையும் ஒருங்கிணைத்துக் கொள்ள வேண்டும்.

    இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார்.

    Next Story
    ×