என் மலர்
இந்தியா

டெல்லியில் அடுத்த மாதம் நடத்தும் போராட்டத்துக்கு மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு விடுத்த பினராயி விஜயன்
- மத்திய அரசை கண்டித்து டெல்லி ஜந்தர் மந்தரில் பிப்ரவரி 8-ந்தேதி கேரள மாநில முதல்-மந்திரி பினராயி விஜயன் தலைமையில் போராட்டம் நடக்க உள்ளது.
- கேரள மாநில மந்திரிகள், இடதுசாரி கூட்டணி கட்சிகளின் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்கிறார்கள்.
திருவனந்தபுரம்:
கேரள மாநில அரசுக்கும், அந்த மாநில கவர்னருக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கு இருந்து வருகிறது. இதன் காரணமாக கவர்னருக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
கேரள மாநிலத்தை மத்திய அரசு தொடர்ந்து புறக்கணித்து வருவதாக பினராயி விஜயன் தலைமையிலான அரசு தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. இந்நிலையில் கேரளாவை புறக்கணித்து வரும் மத்திய அரசை கண்டித்து டெல்லி ஜந்தர் மந்தரில் பிப்ரவரி 8-ந்தேதி கேரள மாநில முதல்-மந்திரி பினராயி விஜயன் தலைமையில் போராட்டம் நடக்க உள்ளது.
இதில் கேரள மாநில மந்திரிகள், இடதுசாரி கூட்டணி கட்சிகளின் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்கிறார்கள். இந்த போராட்டத்தில் கலந்து கொள்ள காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பினராயி விஜயன் தலைமையில் நடக்கும் இந்த போராட்டத்தில் பங்கேற்குமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை கேரள மாநில தொழில்துறை மந்திரி ராஜீவ் நேற்று சந்தித்தார்.
அப்போது மு.க.ஸ்டாலினிடம், கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் வழங்கிய அழைப்பு கடிதத்தை அவர் வழங்கினார்.
பினராயி விஜயன், தனது மாநில மந்திரியை நேரில் அனுப்பி அழைப்பு விடுத்திருப்பதால் மத்திய அரசுக்கு எதிராக பினராயி விஜயன் தலைமையில் டெல்லியில் பிப்ரவரி 8-ந்தேதி நடக்க இருக்கும் போராட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கலாம் என்று கருதப்படுகிறது.






