search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "namakkal"

    25 ஆண்டுகளுக்கு முன்பு தந்தை கொல்லப்பட்டத்தற்கு பழிக்குப்பழியாக மகன் தனது நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்த சம்பவம் நாமக்கல்லில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
    நாமக்கல்:

    நாமக்கல்-சேந்தமங்கலம் ரோட்டில் உள்ள தாதம்பட்டிமேடு பகுதியை சேர்ந்தவர் நல்லுசாமி (வயது 50). மரம் வெட்டும் தொழிலாளி. கடந்த 10-ந்தேதி இவர் பரமத்திரோடு காவேட்டிப்பட்டியில் உள்ள ஒரு லாரி பட்டறை அருகே அரிவாளால் வெட்டி கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார்.

    இது குறித்து அவரது மகன் சுரேஷ்(26) நாமக்கல் போலீசில் புகார் செய்தார். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து தலைமறைவாக இருந்த போதுப்பட்டி காலனியை சேர்ந்த குட்டி என்கிற தமிழ் செல்வன்(39), அவரது நண்பர்கள் லட்சுமி நகரை சேர்ந்த குமார் என்கிற ஜெயக்குமார்(42), போதுப்பட்டி காலனியை சேர்ந்த வினோத்குமார்(32) மற்றும் மாரிகங்காணி தெருவை சேர்ந்த முருகேந்திரன்(35) ஆகிய 4 பேரையும் கைது செய்தனர்.

    கைது செய்யப்பட்ட இவர்கள் 4 பேரும் நாமக்கல் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சேலம் மத்திய ஜெயலிலில் அடைக்கப்பட்டனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன் விபரம் வருமாறு:-

    குட்டி என்கிற தமிழ்செல்வனின் தந்தை அன்பழகனை கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு நல்லுசாமி, பூபதி ஆகிய இருவரும் சேர்ந்து கொலை செய்து விட்டனர். இதற்காக நல்லுசாமி சிறை தண்டணை அனுபவித்து கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு வெளியில் வந்துவிட்டார். கரூரில் தங்கி இருந்து மரம் வெட்டும் வேலை செய்து வந்தார். பூபதி சில ஆண்டுகளுக்கு முன்பு மர்மநபர்களால் கொலை செய்யப்பட்டார்.

    இந்த நிலையில் தாதம்பட்டியில் குடியிருக்கும் தனது மகன் சுரேசை பார்க்க அவ்வப்போது நல்லுசாமி நாமக்கல் வந்து செல்வது வழக்கம். தனது தந்தையை கொலை செய்தவர்களைப் பழிதீர்க்கத்திட்டமிட்ட குட்டி, தனது நண்பர் குமாரிடம் நல்லுசாமி நாமக்கல் வரும்போது தனக்கு தகவல் தெரிவிக்கும்படி கூறியிருந்தார்.

    இந்த நிலையில் தான் சம்பவத்தன்று நாமக்கல்- போதுப்பட்டி ரோட்டில் உள்ள டாஸ்மாக் கடையில் மது குடித்துக்கொண்டிருந்த நல்லுசாமியை பார்த்த குமார், உடனே குட்டியை அங்கு அழைத்து வந்தார். அங்கு வைத்து நல்லுசாமிக்கு மது வாங்கி கொடுத்து மயக்கமடையச் செய்துள்ளனர்.

    பின்னர் குட்டி தனது நண்பர்களுடன் சேர்ந்து நல்லுசாமியை பரமத்திரோட்டில் உள்ள லாரி பட்டறைக்கு அழைத்துச் சென்று அரிவாளால் சரமாரியாக வெட்டிக்கொலை செய்தது தெரியவந்தது.

    கைது செய்யப்பட்ட குட்டி மீது நாமக்கல் போலீஸ் நிலையத்தில் ஏற்கனவே ஆள்கடத்தல் உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. மேலும் இவர் பெயர் ரவுடி பட்டியலில் உள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர். இந்த கொலை வழக்கில் தொடர்புடைய மேலும் சிலரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    25 ஆண்டுகளுக்கு முன்பு தனது தந்தை அன்பழகன் கொல்லப்பட்டத்தற்கு பழிக்குப்பழியாக மகன் தனது நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்த சம்பவம் நாமக்கல்லில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. #tamilnews
    திருச்செங்கோடு ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் விடிய, விடிய நடந்த லஞ்ச ஒழிப்பு சோதனையில் கணக்கில் வராத ரூ.3½ லட்சம் சிக்கியது.
    திருச்செங்கோடு:

    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே வரகூராம்பட்டியில் வட்டார போக்குவரத்து அலுவலகம் உள்ளது. இங்கு சிலர் லஞ்சம் வாங்குவதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து நேற்று மாலை நாமக்கல் லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயகுமார், இன்ஸ்பெக்டர் நல்லம்மாள் மற்றும் 10 பேர் கொண்ட குழுவினர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் அதிரடியாக புகுந்து சோதனை நடத்தினார்கள்.

    இச்சோதனையின் போது அலுவலகத்தில் இருந்த வட்டார போக்குவரத்து அதிகாரி ராமலிங்கம், மோட்டார் வாகன ஆய்வாளர் செந்தில்குமார் மற்றும் அலுவலர்கள், பணியாளர்கள், அலுவலகத்திற்கு வந்திருந்த பொதுமக்கள் ஆகியோர் வெளியே செல்ல அனுமதி மறுக்கப்பட்டது.

    இதனால் அவர்கள் அனைவரும் அலுவலகத்திலேயே அமர்ந்திருந்தனர். அலுவலகத்திற்கு அதிகாரிகள் பூட்டு போட்டனர். பின்னர் பூட்டிய அறைக்குள் சோதனை நடந்தது. அங்கிருந்த கோப்புகள், ஆர்.சி.புக், மேஜை அறை, உணவு பாக்ஸ் மற்றும் கழிப்பிடங்களை சோதனை செய்தனர்.

    மேலும் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் இருந்த அனைவரையும் தனித்தனியாக போட்டோ எடுத்து பதிவு செய்தனர். விடிய, விடிய இந்த சோதனை நடந்தது. இந்த சோதனையின்போது கட்டு, கட்டாக கணக்கில் வராத பணம் சிக்கியது. ஆர்.டி.ஓ. ஆபிசில் இருந்த அலுவலர்கள் மற்றும் அவர்களது இருக்கையில் இருந்த ரொக்கப்பணத்தை பறிமுதல் செய்தனர்.

    மேலும் ஆபீஸ் கழிவறையில் வீசப்பட்டிருந்த ரூபாய் நோட்டுகளையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்தனர். மொத்தம் 3½ லட்சம் ரூபாய் கைப்பற்றப்பட்டது. இது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் திருச்செங்கோடு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #tamilnews
    நாமக்கல் மாவட்டத்தில் கடந்த வாரம் உயிருடன் ரூ.180-க்கு விற்ற கறிக்கோழி ரூ.30 குறைந்து ரூ.150-க்கும் விற்பனையாகிறது.
    நாமக்கல்:

    நாமக்கல், திருப்பூர், கோவை, ஈரோடு, கரூர் மாவட்டங்களில் 27 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன.

    இந்த பண்ணைகளில் தினமும் 20 லட்சத்துக்கும் கூடுதலாக கறிக்கோழிகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இதில் நாமக்கல்லில் மட்டும் 1000-க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன.

    இந்த பண்ணைகளில் உள்ள கறிக்கோழிகள், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும், கேரளா, ஆந்திர பிரதேசம், கர்நாடகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும் விற்பனைக்காக தினமும் அனுப்பப்படுகின்றன.

    இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் 14-ந்தேதி முதல் தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம் தொடங்கியதால் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. இதனால் மீன்களின் வரத்து மார்க்கெட்டுகளில் வெகுவாக குறைந்தது. டேம் மற்றும் ஏரி மீன்கள் விற்பனைக்கு வந்தன. கடல் மீன்கள் இல்லாத காரணத்தினால் டேம் மற்றும் ஏரி மீன்கள் அதிக அளவில் விற்பனைக்கு வந்தது. ஆனால் அந்த மீன்களை விரும்பாதவர்கள் கறிக்கோழிகள் வாங்கினார்கள்.

    மேலும் கோடை விடுமுறை என்பதால் கறிக்கோழிகள் விற்பனை அதிகமானது. இதனால் அதன் விலை உயர தொடங்கியது. கடந்த மாதம் 1 கிலோ கறிக்கோழி உயிருடன் 180-க்கும், தோல் நீக்கிய கறிக்கோழி கிலோ ரூ.210-க்கும் விற்பனையானது.

    தற்போது கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதாலும், பல்வேறு இடங்களில் திருவிழா தொடங்கி இருப்பதாலும், முக்கியமாக 61 நாட்கள் நீடித்த மீன்பிடி தடைகாலம் நீங்கி இருப்பதாலும் கறிக்கோழியின் விற்பனை குறைந்ததால் விலை குறைய தொடங்கி உள்ளது.

    கடந்த வாரம் உயிருடன் ரூ.180-க்கு விற்ற கறிக்கோழி ரூ.30 குறைந்து ரூ.150-க்கும் விற்பனையாகிறது. இதுபோல் தோல் நீக்கிய கறிக்கோழி கிலோ ரூ.210-ல் இருந்து ரூ.20 குறைந்து ரூ.190-க்கு விற்பனையாகிறது. கறிக்கோழியின் விலை குறைந்துள்ளதால் கோழிப்பண்ணையாளர்கள் கவலை அடைந்துள்ளனர். #Tamilnews
    நாமக்கல்லில் வீட்டு முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் மற்றும் மொபட்டுக்கு தீ வைத்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    நாமக்கல், ஜூன். 2-

    நாமக்கல் பரமத்தி ரோட்டில் உள்ள இ.பி காலனியில் ஒரு வீட்டில் தாயும், மகளும் வசித்து வருகின்றனர். அந்த பெண்ணின் கணவர் வெளி நாட்டில் வேலை பார்த்து வருகிறார். நேற்று இரவு தாயும் மகளும் வழக்கம் போல் வீட்டின் முன்பு கார், மொபட்டை நிறுத்திவிட்டு தூங்க சென்றனர்.

    இன்று அதிகாலை திடீரென மொபட், காருக்கு மர்ம நபர்கள் யாரோ தீ வைத்து விட்டு தப்பி சென்றனர். தீ கார்-மொபடில் மளமளவென பரவி புகை மண்டலமாக காட்சி அளித்தது. இதை அக்கம் பக்கத்தினர் பார்த்து வீட்டில் தூங்கி கொண்டிருந்த தாய், மகளுக்கு தகவல் கொடுத்தனர். உடனே அவர்கள் வெளியே வந்து பார்த்த போது தீ எரிவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனே இது குறித்து தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை அனைத்தனர்.

    அதற்குள் கார், மொபட் முற்றிலும் எரிந்து சேதமானது. இது குறித்து நாமக்கல் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர். மர்ம நபர்கள் வீட்டு முன்பு நிறுத்தி வைக்கப்பட்ட வாகனங்களுக்கு எதற்காக தீயை வைத்தார்கள்? வேறு ஏதேனும் காரணமா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கார், மொபட்டுக்கு தீ வைத்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. * * * தீ வைத்து எரிக்கப்பட்ட கார் - மொபட்.

    நாமக்கலில் தனது மகனை கடித்த பாம்பை ஒரு பெண் துணிச்சலுடன் அடித்து கொன்று ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்த சம்பவம் மருத்துவமனையிலும், பொதுமக்கள் மத்தியிலும் நெகழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே உள்ள கொடுக்கால்புதூர் பகுதியை சேர்ந்தவர் விஜயராகவன். இவரது மனைவி ராணி. இவர்களது மகன் தர்‌ஷன் குமார் (வயது 6).

    இன்று காலையில் குழந்தை தர்சன் குமார் வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்தான். அப்போது அவனை வி‌ஷ பாம்பு ஒன்று திடீரென கடித்தது. இதனால் தர்‌ஷன்குமார் வலியால் சத்தம் போட்டு அம்மா... அம்மா என கதறி அழுதான்.

    மகனின் அழுகுரலை கேட்டு வீட்டிற்குள் இருந்த ராணி பதறி அடித்தப்படி வெளியே ஓடி வந்து பார்த்தார். மகனை பாம்பு கடித்தது தெரியவந்தது.

    இதையடுத்து அங்கு கிடந்த ஒரு கம்பை எடுத்து அந்த பாம்பை அடித்து கொன்று, அதனை ஒரு பிளாஸ்டிக் கவரில் போட்டு இறுக்கமாக கட்டினார். பின்னர் மகனை தோளில் தூக்கி போட்டுக் கொண்டு சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு விரைந்தார்.

    ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் தர்‌ஷன்.

    நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக மகனை கொண்டு வந்து சேர்த்தார். கடித்த பாம்பையும் ராணி தனது கையில் வைத்திருந்ததை பார்த்து மருத்துவமனையில் இருந்த நோயாளிகள் பயமும், அதிர்ச்சியும் அடைந்தனர்.

    பாம்பை பார்த்து பயந்து ஓடும் இந்த காலத்தில் ஒரு பெண் துணிச்சலுடன் பாம்பை அடித்து கொன்று தனது மகனை காப்பாற்றி ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்த சம்பவம் மருத்துவமனையிலும், பொதுமக்கள் மத்தியிலும் நெகழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. #Tamilnews

    ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதைக் கண்டித்து சேலம், நாமக்கல் மாவட்டத்தில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளது. #SterliteProtest #ThoothukudiFiring #DMKBandh
    சேலம்:

    தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்தும், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரியும், தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் இன்று தமிழகம் முழுவதும் முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

    அதன்படி சேலம் மாநகரில் செவ்வாய்ப்பேட்டை, லீ பாஜார், பால் மார்க்கெட், புதிய பஸ் நிலையம் வீரபாண்டியார் நகர், கோட்டை உள்பட பல பகுதிகளில் முழுவதுமாக கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.

    லீ பஜாரில் இன்று கடைகள் திறக்கப்படாது என அங்குள்ள சங்க அறிவிப்பு பலகையில் எழுதப்பட்டிருந்தது. இதனால் அந்த பகுதி ஆட்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.

    கடைவீதி, முதல் அக்ரஹாரம், புதிய பஸ் நிலையம், ஜங்சன், பழைய பஸ் நிலையம், அஸ்தம்பட்டி, கொண்டலாம்பட்டி, அம்மாப்பேட்டை, திருச்சி மெயின் ரோடு, 4 ரோடு, சாரதா கல்லூரி ரோடு உள்பட பல பகுதிகளில் ஓட்டல்கள், டீ கடைகள், துணி கடைகள் திறக்கப்பட்டிருந்தன. மக்கள் கூடும் இடங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    சேலம் திருமணிமுத்தாறு, வ.உ.சி. மார்க்கெட், உழவர் சந்தைகள் திறக்கப்பட்டிருந்தாலும் பொது மக்கள் கூட்டம் குறைவாகவே இருந்தது.

    சேலம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயங்கின. கிராமப்புற பஸ்கள் குறைவாக இயக்கப்பட்டன. பஸ் நிலையம் மற்றும் பஸ்களில் பயணிகள் கூட்டம் குறைவாக இருந்தது.

    பஸ் நிலையம், ரெயில் நிலையம் உள்பட மக்கள் கூடும் இடங்களில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் கலெக்டர் அலுவலகத்தில் போராட்டம் நடத்த வாய்ப்புள்ளதால் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். பழைய பஸ் நிலையத்தில் வஜ்ரா வாகனம் தயாராக நிறுத்தப்பட்டிருந்தது.

    ஓமலூர் நகர பகுதியில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. ஒரு சில கடைகள் மட்டுமே திறந்திருந்தன. அரசு பஸ்கள் ஒடின. தனியார் பஸ்கள் இயங்கவில்லை. பஸ் நிலையத்தில் மக்கள் கூட்டம் குறைவாக இருந்தது.

    மேட்டூர் பஸ் நிலைய பகுதியில் 70 சதவீத கடைகள் திறந்திருந்தன. ரெயில் நிலைய பகுதியில் 50 சதவீத கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. அரசு மற்றும் தனியார் பஸ்கள் ஓடினாலும் பயணிகள் கூட்டம் குறைவாக இருந்தது.

    எடப்பாடி பஸ் நிலையம் உள்பட நகர பகுதிகளில் பெரும்பாலான கடைகள் திறந்திருந்தன. காலை 6 மணிக்கு மேல் அரசு மற்றும் தனியார் பஸ்கள் ஓடின. சிறிய கிராமங்களுக்கு பஸ்கள் செல்லவில்லை. இதனால் அந்த கிராம மக்கள் தவித்தனர்.

    வாழப்பாடியில் பஸ் நிலையம் உள்பட அனைத்து பகுதிகளிலும் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. அரசு மற்றும் தனியார் பஸ்கள் ஓடின. பயணிகள் கூட்டம் குறைவாக இருந்தது.

    ஆத்தூரில் சில கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. பெரும்பாலான கடைகள் திறந்திருந்தன. அரசு மற்றும் தனியார் பஸ்கள் வழக்கம் போல இயங்கின.

    நாமக்கல் நகரில் இன்று பெரும்பாலான கடைகள் திறந்திருந்தன. ஒரு சில கடைகள் மட்டுமே அடைக்கப்பட்டு இருந்தன. உழவர் சந்தை இன்று காலை திறந்திருந்து.

    பரமத்திவேலூர் சாலையில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 250 பஸ்களும் இன்று காலையில் வழக்கம் போல் நாமக்கல் பஸ் நிலையத்தில் இருந்து இயங்கின. பஸ் நிலையத்தில் இருந்து சேலம், துறையூர், திருச்சி, ஈரோடு உள்ளிட்ட வெளியூர் பகுதிகளுக்கு பஸ்கள் சென்றன.

    உள்ளூர் பகுதிகளான வளையப்பட்டி, பெரியப்பட்டி, நல்லிப்பாளையம், முதலிப்பாளையம், வள்ளியூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு நகர பேருந்துகள் இயங்கின. அதுபோல் ஆட்டோக்கள் வழக்கம் போல் ஓடின. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை.

    நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் பஸ் நிறுத்தம் பகுதியில் பாலம் சாலை, திருச்செங்கோடு சாலை, சங்ககிரி சாலையில் பேக்கரி, ஓட்டல்கள் என பாதி கடைகள் அடைக்கப்பட்டு இருந்தது.

    பாதி கடைகள் திறக்கப்பட்டு இருந்தது. மொபைல் கடை, ரீசார்ஜ் கடை, டீக்கடை, ஓட்டல்கள் பெரும்பாலானவை திறக்கப்பட்டு இருந்தது.

    பள்ளிப்பாளையம் பஸ் நிலையத்தில் இருந்து வழக்கம் போல் ஈரோடு, சங்ககிரி, நாமக்கல், சேலம் உள்ளிட்ட பகுதிகளுக்கு பஸ்கள் இயங்கின. அதுபோல் தனியார் பஸ்களும் பள்ளிப்பாளையத்தில் இருந்து ஈரோடுக்கு இயங்கியது.

    திருச்செங்கோடு புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம், 4 ரதவீதி, கடைவீதி, சங்ககிரி சாலை மற்றும் சேலம் சாலைகளில் கடைகள் மூடப்பட்டு இருந்தது. 50 சதவீத கடைகள் திறந்திருந்தன.

    புதிய பஸ் நிலையம் அருகே உள்ள தினச்சரி மார்க்கெட் வழக்கம் போல் இயங்கியது. திருச்செங்கோடு புதிய பஸ் நிலையத்தில் இருந்து சேலம், ஈரோடு, நாமக்கல், ராசிபுரம், சங்ககிரி உள்ளிட்ட பகுதிகளுக்கு வெளியூர் பஸ்களும், உள்ளூர் பஸ்களும் புறப்பட்டு சென்றன.

    ராசிபுரம் பகுதியில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. ராசிபுரம் பஸ் நிலையத்தில் இருந்து பஸ்கள் இயங்கின. #SterliteProtest #ThoothukudiFiring #DMKBandh
    திருமணத்துக்கு முன் கர்ப்பம் ஆனதால் மகளுக்கு தந்தை பிரசவம் பார்த்ததில் குழந்தை இறந்தது. உடலை யாருக்கும் தெரியாமல் சுடுகாட்டில் புதைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம் பழைய பாளையத்தை சேர்ந்த 17 வயது மாணவி. அதே பகுதியை சேர்ந்த ஒருவரை காதலித்ததாக கூறப்படுகிறது. இதனால் அந்த மாணவி கர்ப்பமடைந்தார். இதை அவர் வீட்டிற்க்கு தெரியாமல் மறைத்து வந்தார் . இதனால் அந்த மாணவியின் வயிறு நாளுக்கு நாள் பெரிதானதால் தந்தைக்கு சந்தேகம் ஏற்பட்டது. இது குறித்து தந்தை மாணவியிடம் கேட்ட போது, நான் இந்த பகுதியில் உள்ள ஒருவரை காதலித்தேன் இதனால் கர்ப்பமடைந்தேன் என்று கூறினார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த தந்தை கர்ப்பம் ஆகி 8 மாதம் ஆகிவிட்டதால் கருவை கலைக்க முடியாது. இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்தார்.

    இந்நிலையில் அந்த மாணவிக்கு வயிறு வலி ஏற்பட்டது. யாருக்கும் தெரியாமல் அவரே மகளுக்கு பிரசவம் பார்த்தார். அப்போது அவளுக்கு குழந்தை இறந்து பிறந்தது. இதையடுத்து அந்த குழந்தையின் உடலை யாருக்கும் தெரியாமல் அங்குள்ள சுடுகாட்டில் புதைத்து விட்டார்.

    இந்த நிலையில் திடீரென அந்த மாணவிக்கு ரத்த போக்கு ஏற்பட்டு, உடல்நிலை பாதிக்கபட்டது. இதையடுத்து அவரை சிகிச்சைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவர் அங்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இந்த சம்பவம் குறித்து சுகாதார துறையினரும், காவல் துறையினரும் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் கூறினர்.

    நாமக்கல் அருகே போலி ஆவணங்கள் மூலம் நிலத்தை மோசடி செய்த விவசாயியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நாமக்கல்:

    நாமக்கல் அருகே உள்ள மணிக்கட்டிபுதூரை சேர்ந்தவர் நடராஜன். இவருக்கு சொந்தமான 1,204 சதுர அடி நிலத்தை கடந்த 2009-ம் ஆண்டு நடராஜனின் சித்தப்பா பொன்னுசாமி (வயது 70), கூட்டு பட்டாவை வைத்து, போலியாக பட்டா மற்றும் இதர ஆவணங்களை தயார் செய்து, நாமக்கல் இணை சார்பதிவாளர் அலுவலகத்தில் தூசூரை சேர்ந்த பாலசுப்பிரமணியம் என்பவரின் பெயருக்கு பத்திரபதிவு செய்து கொடுத்து உள்ளதாக கூறப்படுகிறது.

    அதே ஆண்டு தூசூர் பாலசுப்பிரமணியம், அய்யாவு என்பவருக்கு பத்திரத்தை மாற்றி பதிவு செய்து உள்ளதாக தெரிகிறது. அதன்பிறகு நடராஜன், அவருடைய நிலத்தை வங்கியில் அடகு வைக்க முயற்சித்து, பத்திரப்பதிவு அலுவலகத்தில் பரிசீலனை செய்தபோது, அந்த நிலம் பாலசுப்பிரமணியம் மற்றும் அய்யாவு என்பவர்கள் பெயரில் கிரயம் செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது.

    இது குறித்து நடராஜன் மாவட்ட பதிவாளரிடம் புகார் செய்தார். அதன்பேரில் அதிகாரிகள் நடத்திய விசாரணையில் போலி ஆவணங்கள் மூலம் நிலம் பத்திரபதிவு செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து பத்திரப்பதிவை ரத்து செய்ய அவகாசம் கொடுத்து, இருவருக்கும் நோட்டீசு அனுப்பினர். ஆனால் அவர்கள் ரத்து செய்யவில்லை என கூறப்படுகிறது.

    இதையடுத்து இந்த மோசடி சம்பவம் குறித்து இணை சார்பதிவாளர் பத்மினி நாமக்கல் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விவசாயி பொன்னுசாமியை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மோசடி செய்யப்பட்ட நிலத்தின் மதிப்பு சுமார் ரூ.7 லட்சம் இருக்கும் என போலீசார் தெரிவித்தனர். 
    ×