search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சுடுகாடு"

    • மக்கள் பலமுறை வட்டாட்சியர், மாவட்ட கலெக்டருக்கு கோரிக்கை மனு அளித்து இருந்தனர்.
    • சுடுகாட்டு பிரச்சினை தொடர்பாக விரைவில் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணப்படும் என்று உறுதி அளித்தனர்.

    பொன்னேரி:

    பொன்னேரி அடுத்த காவல்பட்டியில் கிராமத்திற்கு செல்லும் சாலை அருகே சுடுகாடு உள்ளது. இங்கு இறந்தவர்கள் உடலை எரிப்பதற்கும், புதைப்பதற்கும் ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

    இதுதொடர்பாக அப்பகுதி மக்கள் பலமுறை வட்டாட்சியர், மாவட்ட கலெக்டருக்கு கோரிக்கை மனு அளித்து இருந்தனர். ஆனால் இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கப்ப டவில்லை என்று தெரிகிறது.

    இந்நிலையில் அப்பகுதியை சேர்ந்த மணி என்பவர் இறந்து போனார். அவரது உடலை சர்ச்சைக்குரிய சுடுகாட்டில் புதைத்து சென்றனர்.

    இதுபற்றி அறிந்ததும் எதிர்ப்பு தெரிவித்து வந்த தரப்பை சேர்ந்த பெண்கள் உள்பட சுமார் 50-க்கும் மேற்பட்டோர் அங்கு திரண்டு வந்தனர்.

    அவர்கள் சுடுகாட்டில் உடல்களை புதைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொன்னேரி -பழவேற்காடு சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். காவல்பட்டியில் இருந்து உப்பளம் வரை ஏராளமான வாகனங்கள் சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் அணி வகுத்து நின்றன. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    தகவல் அறிந்ததும் மெதூர் ஊராட்சி மன்ற தலைவர் சீனிவாசன், திருப்பாலைவனம் வருவாய் ஆய்வாளர் பகுருதீன் மற்றும் போலீசார் விரைந்து வந்து பேச்சு வார்த்தை நடத்தினர். சுடுகாட்டு பிரச்சினை தொடர்பாக விரைவில் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணப்படும் என்று உறுதி அளித்தனர்.

    இதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்ட வர்கள் கூறும்போது, கிராமத்திற்குள் வரும் சாலை அருகே சுடுகாடு உள்ளதால் அவ்வழியாக செல்லும் பள்ளிகுழந்தைகள், பெண்கள் சிரமம் அடைந்து வருகிறார்கள். எனவே மாற்று சுடுகாட்டில் உடல்களை அடக்கம் செய்ய ஏற்பாடு செய்யவேண்டும் என்றனர்.

    • 37 மயானங்களில் தூய்மை பணி நடைபெற்று வருகிறது.
    • மாடுகளுக்கு விதிக்கப்படும் அபராத தொகையை அதிகரிக்க இருக்கிறோம்.

    சென்னை:

    சென்னை மாநகராட்சி ஆணையர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் கிருஷ்ணாம்பேட்டை சுடுகாட்டுக்கு சென்று அங்கு குவிந்து கிடந்த குப்பைகளை அள்ளினார். அவருடன் மாநகராட்சி ஊழியர்களும் தூய்மை பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது ஆணையாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் கூறியதாவது:-

    சென்னையில் 42 மயானங்கள் உள்ளன. இவற்றை தூய்மையாக வைக்க துப்பரவு பணி செய்து வருகிறோம். செடி கொடிகள் குப்பைகளை அகற்றி வருகிறோம். கிருஷ்ணாம்பேட்டை மயான பூமியில் மேற்கொள்ளப்படும் சீரமைப்பு பணிகளில் ஊக்கம் அளிக்கும் வகையில் நாங்களும் இணைந்து தூய்மை பணிகளை மேற்கொண்டோம். 37 மயானங்களில் தூய்மை பணி நடைபெற்று வருகிறது.

    சென்னையில் போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித்திரியும் 358 மாடுகள் பிடிக்கப்பட்டுள்ளது. மாடுகளுக்கு விதிக்கப்படும் அபராத தொகையை அதிகரிக்க இருக்கிறோம்.

    சென்னையில் ஆங்காங்கே நீண்ட நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களை அப்புறப்படுத்தும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    இவ்வாறு ராதாகிருஷ்ணன் கூறினார்.

    • சிதிலமடைந்த உடல்கள் சுடுகாட்டில் சிதறி கிடக்கிறது.
    • பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அழுகிய உடல்கள் மீட்கப்பட்டு மீண்டும் புதைக்கப்பட்டது.

    திருப்பூர்:

    திருப்பூர் மாநகராட்சி 40-வது வார்டு இடுவம்பாளையம் பகுதியில் 7 சென்ட் நிலத்தில் பொது சுடுகாடு செயல்பட்டு வருகிறது. கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு இங்கு 200 குடும்பங்கள் மட்டுமே வசித்து வந்த நிலையில் தற்போது 3000 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். வாரத்தில் 4,5 உடல்கள் இந்த சுடுகாட்டில் புதைக்கப்படும்.

    இந்தநிலையில் அங்கு உடல்களை புதைக்க இடம் இல்லாததால் ஏற்கனவே அடக்கம் செய்யப்பட்ட உடல்களை வெளியே எடுத்து போட்டு புதிய உடலை புதைத்து வருகின்றனர். இதன் காரணமாக சிதிலமடைந்த உடல்கள் சுடுகாட்டில் சிதறி கிடக்கிறது. இதனை நாய்கள் கவ்வி இழுத்து செல்கின்றன.

    அழுகிய நிலையில் உள்ள உடல்களை நாய்கள் பொதுமக்கள் வாழும் பகுதிக்கு இழுத்து செல்வதால் அந்தப்பகுதியில் துர்நாற்றம் ஏற்பட்டு சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன் பெண்கள்- குழந்தைகளிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அழுகிய உடல்கள் மீட்கப்பட்டு மீண்டும் புதைக்கப்பட்டது. இந்த சம்பவம் திருப்பூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • சமீப காலமாக பலர் நூதன முறையில் திருமண விழாக்களை வடிவமைக்க விரும்புகிறார்கள்.
    • சிலர் கடலில் கூட திருமணம் செய்து கொள்கிறார்கள்.

    மும்பை :

    கோவில்களில் நடந்த திருமணங்கள் மண்டபங்களுக்கு மாறிய நிலையில், சமீப காலமாக பலர் நூதன முறையில் திருமண விழாக்களை வடிவமைக்க விரும்புகிறார்கள். சிலர் கடலில் கூட திருமணம் செய்து கொள்கிறார்கள். இந்தநிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் சுடுகாட்டில் வினோத திருமணம் அரங்கேறி உள்ளது.

    அகமதுநகர் மாவட்டம் ரகாதா பகுதியை சேர்ந்தவர் கங்காதர் கெய்க்வாட். இவர் 20 ஆண்டுகளாக ரகாதாவில் உள்ள சுடுகாட்டில் வேலை செய்து வருகிறார். இவரது மகள் மயூரி திருமணம் தான் அவர் வேலை செய்து வரும் சுடுகாட்டிலேயே நடந்து உள்ளது. திருமணத்தில் குடும்பத்தினர், ஊர் மக்கள், சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டு மணமக்களை மனதார வாழ்த்தினர்.

    மகளின் திருமணத்தை சுடுகாட்டில் நடத்தியது குறித்து கங்காதர் கெய்க்வாட் கூறுகையில், "நான் 20 ஆண்டுகளாக இங்கு தான் உள்ளேன். எனது மகள் இங்கு தான் வளர்ந்தாள். இங்கு இருந்து தான் படித்தாள். எங்களுக்கு எல்லாவற்றையும் கொடுத்தது இந்த சுடுகாடு தான். எனவே தான் இங்கேயே திருமணத்தை நடத்தினோம்" என்றார்.

    இதற்கிடையே அகமதுநகரில் சுடுகாட்டில் நடந்த திருமணம் மூடப்பழக்கத்துக்கு எதிராக விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அமைந்து இருப்பதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்து உள்ளனர்.

    மனிதர்கள் தங்கள் பயணத்தை முடித்து கொள்ளும் சுடுகாட்டில் இருந்து இந்த தம்பதி இல்லற வாழ்க்கையை தொடங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • இரப்பனையில் இறந்தவர்களை தகனம் செய்யும் கட்டிடம் சேதமடைந்து காணப்படுகிறது
    • கட்டிடம் இடிந்து விழுந்தால் உயிர்சேதம் ஏற்பட வாய்ப்புள்ளது.

    கடையம்:

    கடையம் - தென்காசி சாலையில் இரப்பனையில் நாடார் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட இறந்தவர்களை தகனம் செய்யும் கட்டிடம் அமைந்துள்ளது. இந்த கட்டிடம் சேதமடைந்து பெயர்ந்த நிலையில் மிகவும் மோசமான நிலையில் காணப்படுகிறது. மிக பழமை வாய்ந்த இக்கட்டிடத்தால் தகனம் செய்யும் போது, இடிந்து விழுந்தால் பெரும் ஆபத்தான சூழ்நிலை ஏற்பட வாய்ப்புள்ளது. இறந்தவர்களை தகனம் செய்யும் நேரத்தில் பலர் அப்பகுதி அருகே நிற்கின்றனர். இந்த நிலையில் கட்டிடம் இடிந்து விழுந்தால் பல உயிர்சேதத்தை ஏற்படுத்தக் கூடிய நிலை காணப்படுகிறது. எனவே பொதுமக்களின் நலன் கருதி புது மயான கட்டிடம் கட்ட சம்பந்தபட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • நெல்லை சந்திப்பு சிந்துபூந்துறையில் கடந்த 2006-2011 மாநகராட்சி சார்பில் எரிவாயு தகனமேடை அமைக்கப்பட்டது.
    • எரிவாயு தகனமேடையில் சடலங்களை எரிப்பதற்காக ரூ.2000 வசூலிக்கப்பட்டு வருகிறது.

    நெல்லை:

    நெல்லை, பாளை ஆகிய இரட்டை நகரங்களை உள்ளடக்கியதாக நெல்லை மாநகராட்சி உள்ளது. இங்கு வசிப்போர், இறந்தவர்களின் இறுதிச்சடங்குகளை தாமிர பரணி நதிக்கரையோரங்களில் செய்து வந்தனர்.

    இதனால் ஏற்படும் சுகாதார கேடுகளை தடுக்கும் வகையில் நவீன எரிவாயு தகன மேடை அமைக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டது.

    அதன்படி, நெல்லை சந்திப்பு சிந்துபூந்துறையில் கடந்த 2006-2011 தி.மு.க ஆட்சியின் போது அப்போதைய தச்சை மண்டல சேர்மன் சுப்பிர மணியன் முயற்சியில் மாநகராட்சி சார்பில் எரி வாயு தகனமேடை அமைக்கப்பட்டது. அங்கு காத்திருப்போர் கூடம், பூங்கா உள்ளிட்டவை தாமிர பரணி நதிக்கரையோரம் அமைக்கப்பட்டதால் பொதுமக்கள் மிகுந்த பலன் அடைந்து வருகின்றனர். அதனை ஒப்பந்த அடிப் படையில் இந்திய செஞ்சிலுவை சங்கத்தினர் பராமரித்து வந்தனர்.

    அங்கு இறந்தவர்களின் சடலங்களை எரிப்பதற்காக ரூ.2000 வசூலிக்கப்பட்டு வருகிறது. காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை தினமும் குறைந்தது 5 முதல் 7 உடல்கள் வரை இங்கு எறியூட்டப்பட்டு வருகிறது.

    பராமரிப்பு மோசம்

    இங்குள்ள அதிநவீன எந்திரங்களில் 2000 பாரன்ஹீட் வெப்பம் உருவாக்கி சுமார் 1 மணி நேரத்தில் சடலங்களை எரித்து வந்தனர். இந்நிலையில் இந்த எரிவாயு தகன மேடையில் சடலங் களை எரியூட்டுவதற்கு ரூ.2000 மட்டுமல்லாமல், கூடுதலாக வும் ரூ.2 ஆயிரம் பணம் வசூலிக்கப்படுவதாக இறந்த வர்களின் உறவினர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

    நேற்று கூட ஒரு சடலத்தை எரிப்பதற்கு கூடு தலாக பணம் கேட்டதாக கூறி அங்கே இறந்தவர்களின் உறவினர்கள் திரண்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் தியான மண்டபம் போல் செயல்பட்ட இந்த எரிவாயு தகன மேடையில் பூங்காக்கள் சிதிலமடைந்து உள்ளது. அங்கு காம்பவுண்டு சுவர்கள் இடிந்த நிலையில் காணப்படுவதால் அதனை பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், கூடுதல் கட்டணம் வசூலிக் கப்பட்டால் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மாநகராட்சி கமிஷனருக்கு மாநகர பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • ஆரணி ஆற்றில் நவம்பர், டிசம்பர் மாதங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும்.
    • பருத்தி மேனிகுப்பம் கிராமத்தில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் சுடுகாடு ஒன்று அமைத்து தர வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்த வண்ணம் உள்ளனர்.

    பெரியபாளையம்:

    திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், தும்பாக்கம் ஊராட்சியை சேர்ந்த பருத்தி மேனி குப்பம் கிராமத்தில் சுமார் 200 குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

    இந்த கிராம மக்களுக்கு என்று தனியாக சுடுகாடு இல்லை. இங்கு வசிப்பவர்களில் யாராவது? இறந்து போனால் ஆரணி ஆற்றைக் கடந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் நடந்து சென்று கீழ் மாளிகை பட்டு கிராமத்தில் உள்ள சுடுகாட்டில் அவர்களது உடலை அடக்கம் செய்து வருகின்றனர்.

    இந்நிலையில் ஆரணி ஆற்றில் நவம்பர், டிசம்பர் மாதங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும். அந்த காலகட்டங்களில் யாராவது? இறந்து போனால் உயிரை பணயம் வைத்து ஆற்றுநீரை கடந்து சென்று இறந்தவர்களின் உடலை கிராம மக்கள் அடக்கம் செய்து வருகின்றனர்.

    நேற்று முன்தினம் இக்கிராமத்தைச் சேர்ந்த மோகனா(வயது55) என்பவர் அகால மரணம் அடைந்தார். இதனால் பருத்தி மேனி குப்பம் கிராம மக்கள் அவரது உடலை இடுப்பு அளவு தண்ணீரில் ஆரணி ஆற்றை கடந்து சென்று கீழ் மாளிகை பட்டு கிராமத்தில் அடக்கம் செய்தனர். எனவே, பருத்தி மேனிகுப்பம் கிராமத்தில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் சுடுகாடு ஒன்று அமைத்து தர வேண்டும் என இப்பகுதி மக்கள் பல ஆண்டு காலமாக வட்டாட்சியர், மாவட்ட நிர்வாகம், தமிழக அரசு உள்ளிட்டோருக்கு கோரிக்கை விடுத்த வண்ணம் உள்ளனர்.

    இந்நிலையில் இப்பகுதி மக்களின் மிக முக்கிய தேவையான சுடுகாடு வசதியை செய்து தர ஊராட்சி மன்ற தலைவர் மாலா, ஒன்றிய கவுன்சிலர் புஷ்ப முருகன், மாவட்ட கவுன்சிலர் சித்ரா முனுசாமி, சட்டமன்ற உறுப்பினர் டி.ஜே.கோவிந்தராசன் ஆகியோர் போர்க்கால அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுத்து பருத்தி மேனி குப்பம் கிராம மக்களின் கோரிக்கையை நிறைவேற்றுவார்களா? என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

    • காந்தி தினசரி மார்க்கெட் கடைகளை அருகில் உள்ள சுடுகாடு பகுதிக்கு மாற்றம் செய்யப்படும் என நகராட்சி நிர்வாகம் சார்பில் கூறப்பட்டுள்ளது.
    • மார்க்கெட் கடைகளை சுடுகாட்டுப் பகுதிக்கு மாற்றம் செய்யப்படுவதால் சுப நிகழ்ச்சிக்கு காய்கறிகள் வாங்க வருபவர்கள் வர மாட்டார்கள். இதனால் வியாபாரம் பாதிக்கும் என்று வைகுண்டராஜன் கூறினார்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் காந்தி தினசரி மார்க்கெட் பஸ் நிலையம் அருகில் செயல்பட்டு வருகிறது. தற்போது அந்த இடத்தில் அரசு அலுவலகங்கள் அமைய உள்ளது.

    மார்க்கெட் இடமாற்றம்

    எனவே அங்குள்ள கடைகளை அருகில் உள்ள சுடுகாடு பகுதிக்கு மாற்றம் செய்யப்படும் என நகராட்சி நிர்வாகம் சார்பில் கூறப்பட்டுள்ளது.

    தகனமேடை உள்ளதால் அந்த இடத்தில் வியாபாரம் செய்வதற்கு இடையூறாக இருக்கும். போதுமான அளவுக்கு வியாபாரம் நடைபெறாது என கூறி அந்த இடத்திற்கு செல்ல மறுத்து வருகின்றனர்.

    மேலும் அதற்கு பதிலாக தகுந்த உரிய இடம் தேர்வு செய்து புதிய இடம் கட்டி தரும் வரை பழைய இடத்திலிருந்து வியாபாரம் செய்வோம் என்று கூறி வருகின்றனர்.

    தகுந்த இடம்

    இந்நிலையில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மண்டல தலைவர் வைகுண்டராஜன் திருச்செந்தூர் காய்கறி மார்க்கெட்டில் ஆய்வு செய்து நிருபர்களிடம் கூறியதாவது:-

    மார்க்கெட் கடைகளை சுடுகாட்டுப் பகுதிக்கு மாற்றம் செய்யப்படுவதால் வியாபாரம் செய்வற்கு இடையூறாக இருக்கும்.சுப நிகழ்ச்சிக்கு காய்கறிகள் வாங்க வருபவர்கள் வர மாட்டார்கள். இதனால் வியாபாரம் பாதிக்கும்.

    தற்போது மார்க்கெட்டில் 216 கடைகளுக்கு ரசீது போட்டு வியாபாரம் செய்து வருகிறார்கள். ஆனால் நகராட்சி சார்பில் 140 கடைகள் மட்டும் கட்டுவதாக தெரிகிறது.

    எனவே அனைத்து வியாபாரிகளுக்கும் தகுந்த பாதுகாப்பான இடத்தில் கடைகள் கட்டி தந்தால் மட்டுமே இங்கு இருக்கும் வியாபாரிகள் அந்த இடத்திற்கு செல்வார்கள்.அதுவரை இதே இடத்தில் தொடர்ந்து வியாபாரம் செய்வார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தூத்துக்குடி தெற்கு மாவட்ட தலைவர் காமராசு நாடார், திருச்செந்தூர் காந்தி மார்க்கெட் வியாபாரிகள் சங்கத் தலைவர் திருப்பதி, தமிழ்நாடு வணிக சங்கங்கள் பேரமைப்பு தூத்துக்குடி மாவட்ட இளைஞரணி செயலாளர் கவாஸ்கர் நாடார், நிர்வாகி சோடா ரவி உள்பட பலர் உடனிருந்தனர்.

      நாகர்கோவில்:

      நாகர்கோவில் அருகே உள்ள தம்மத்துக்கோணம் சாஸ்தான் கோவில் தெரு வைச் சேர்ந்த மக்கள் இன்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து ஒரு மனு அளித்தனர். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

      நாங்கள் சாஸ்தான் கோவில் தெருவில் தலை முறை தலை முறையாக அரசு நிர்வாகத்தால் பட்டா வழங்கப்பட்டு கூட்டு குடும்பமாக வசித்து வருகிறோம்.

      இந்த நிலையில் சாஸ்தான் கோவிலுக்கு உட்பட்ட ஊர் நிர்வாகத்தினர் எங்கள் குடியிருப்பு அருகில் கோவில் பயன்பாட்டுக்கு என்று கூறி இடத்தை வாங்கி சுடுகாடு அமைத்துள்ளனர்.

      தற்போது அங்கு இறுதி சடங்கும் நடந்து உள்ளது. திடீரென அமைக்கப்பட்டு உள்ள சுடுகாடு பகுதியில் பல தரப்பட்ட குடும்ப மக்களின் கோவில்கள் உள்ளது.

      சுடுகாட்டை ஒட்டிய பகுதியில் முதியோர்கள், குழந்தை கள், பச்சிளங்குழந்தைகள் வசித்து வருகின்றனர். மேலும் சுடுகாட்டிற்கு வழிப்பாதை ஏதும் இல்லை. பொதுமக்கள் வசிக்கும் பகுதியில் சுடுகாடு அமைக்கப்படக்கூடாது.

      குடியிருப்பு இல்லாத பகுதியின் ஒதுக்குப்புறத்தில் தான் அமைக்கப்பட வேண்டும் என்ற சட்டங்கள் உள்ளன. ஆனால் அதை மதிக்காமல் சட்டத்திற்கு புறம்பாக சுடுகாடு அமைக்கப்பட்டுள்ளது. எனவே சுடுகாட்டை அகற்ற வேண்டும்.

      இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

      • குடியிருப்பு பகுதியில் அமைய உள்ள மின் மயானத்தை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
      • அந்த மின்மயான சுடுகாட்டை தெம்மாபட்டு பகுதிக்கு மாற்ற திட்டமிட்டனர்.

      திருப்பத்தூர்

      சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் அச்சுக்கட்டு பகுதியில் அமைந்துள்ள அரசு பொது மயானத்தில் ரூ.1.50 கோடி செலவில் மின் மயானம் அமைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

      மின்மயானம் அமைப்பதற்கு அந்த சுடுகாட்டை பயன்படுத்தி வரும் குறிப்பிட்ட சமூகத்தி னரிடம் இருந்து எதிர்ப்பு வந்த நிலையில் பேரூராட்சி செயல் அலுவலர், பேரூராட்சி தலைவர் கோகிலாராணி ஆகியோர் உடனடியாக அந்த மின்மயான சுடுகாட்டை தெம்மாபட்டு பகுதிக்கு மாற்ற திட்டமிட்டனர்.

      இதனையடுத்து அந்தப்பகுதியில் மின்மயானம் அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அங்கும் எதிர்ப்பு கிளம்பவே, அந்த திட்டத்தை அமல்படுத்துவதில் தொய்வு ஏற்பட்டது.

      2 நாட்களுக்கு முன்பு தென்மாபட்டில் உள்ள மற்றொரு பகுதியில், அரசு பள்ளி மற்றும் குடிநீர் குளம் அருகில் பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில் மின்மயானம் அமைக்கும் பணியை ஆரம்பித்தது.

      இங்குள்ள மக்களும் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு பேரூராட்சி செயல் அலுவலரிடம் மின் மயா னத்தை பள்ளி அருகே அமைக்கக்கூடாது, வேறு இடத்திற்கு மாற்றக்கோரி மனு அளித்தனர். அப்போது செயல் அலுவலர் ராதாகிருஷ்ணன், இது அரசு உத்தரவின் பேரில் கொண்டு வந்த திட்டம். நிச்சயமாக இந்த இடத்தில் மின்மயானம் அமைக்கப்படும் என்று தெரிவித்தாராம்.

      மின் மயான திட்டத்திற்கு முதன்முதலாக எந்த இடத்தை தேர்வு செய்தீர்களோ அந்த இடத்தில் அமையுங்கள் என பொதுமக்கள் கூறவே, அங்கு விவாதம் ஏற்பட்டது. பின்பு அங்கிருந்து புறப்பட்டு சிவகங்கை மாவட்ட கலெக்டரை சந்தித்து மனு கொடுத்தனர்.

      சுடுகாட்டில் கட்டிட பணிகள் மேற்கொள்ள தொழிலாளர்கள் அச்சப்பட்ட நிலையில், அவர்களின் அச்சத்தை போக்க தெலுங்கு தேசம் கட்சி எம்.எல்.ஏ சுடுகாட்டில் உண்டு, அங்கேயே கட்டில் போட்டு தூங்கியுள்ளார்.
      அமராவதி:

      ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள பாலகோல் சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் நிம்மல ராம நாயுடு. தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த இவர், தனது தொகுதியில் உள்ள பாலகோல் புறநகர் பகுதியில் இருக்கும் சுடுகாடு ஒன்றில் நேற்று முன்தினம் இரவு உணவு சாப்பிட்டு அங்கேயே கட்டில் போட்டு தூங்கியுள்ளார்.

      அந்த சுடுகாடு கடந்த பல ஆண்டுகளாக யாரும் பயன்படுத்தாமல் சிதிலமடைந்து இருந்துள்ளது. இதனை அடுத்து, ராம நாயுடுவின் கோரிக்கையை ஏற்று மாநில அரசு சுடுகாட்டை புரணமைக்க ரூ.3 கோடி ஒதுக்கியது. ஆனாலும், இந்த திட்டத்திற்கு யாருமே டெண்டர் எடுக்கவில்லை.

      திட்டம் இழுபறியாக கிடந்த நிலையில், ஒரு ஒப்பந்தக்காரர் முன்வந்தார். பணிகள் தொடங்கிய நிலையில், அங்கு பேய், பிசாசு உலவுவதாக வந்த வதந்தியை அடுத்து தொழிலாளர்கள் யாரும் பணி செய்ய முன்வரவில்லை. இதனால், கடுப்பான எம்.எல்.ஏ ராம நாயுடு, நேற்று முன்தினம் கட்டிலுடன் சுடுகாட்டுக்கு வருகை தந்தார்.

      அங்கேயே இரவு உணவை முடித்த அவர், இரவு முழுவதும் அங்கேயே தூங்கினார். அவருடன் ஒரே ஒரு உதவியாளர் உடனிருந்ததாக கூறப்படுகிறது. மறுநாள் காலையில் தனது வீட்டுக்கு ராம நாயுடு புறப்பட்டுச்சென்றார். அவரது இந்த அதிரடிக்கு பலனாக 50 தொழிலாளர்கள் வேலை செய்ய தொடங்கினர்.

      இதனால், மகிழ்ச்சி அடைந்த ராம நாயுடு, “பேய், பிசாசு பயத்தை போக்கவே இங்கு தூங்கினேன். இனி மேலும் பலர் பயமில்லாமல் வேலை செய்ய வருவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. அனைத்து வசதிகளும் கொண்ட நவீன சுடுகாடாக இது மாற்றப்படும்.” என கூறியவர், கொசுக்கடி மட்டும் அதிகமாக இருந்தது என புகார் தெரிவித்துள்ளார். 
      ×