search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சேலத்தில் கடைகள் அடைக்கப்பட்டுள்ள காட்சி.
    X
    சேலத்தில் கடைகள் அடைக்கப்பட்டுள்ள காட்சி.

    சேலம்-நாமக்கல் மாவட்டத்தில் கடைகள் அடைப்பு: பஸ்கள் வழக்கம் போல் ஓடின

    ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதைக் கண்டித்து சேலம், நாமக்கல் மாவட்டத்தில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளது. #SterliteProtest #ThoothukudiFiring #DMKBandh
    சேலம்:

    தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்தும், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரியும், தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் இன்று தமிழகம் முழுவதும் முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

    அதன்படி சேலம் மாநகரில் செவ்வாய்ப்பேட்டை, லீ பாஜார், பால் மார்க்கெட், புதிய பஸ் நிலையம் வீரபாண்டியார் நகர், கோட்டை உள்பட பல பகுதிகளில் முழுவதுமாக கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.

    லீ பஜாரில் இன்று கடைகள் திறக்கப்படாது என அங்குள்ள சங்க அறிவிப்பு பலகையில் எழுதப்பட்டிருந்தது. இதனால் அந்த பகுதி ஆட்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.

    கடைவீதி, முதல் அக்ரஹாரம், புதிய பஸ் நிலையம், ஜங்சன், பழைய பஸ் நிலையம், அஸ்தம்பட்டி, கொண்டலாம்பட்டி, அம்மாப்பேட்டை, திருச்சி மெயின் ரோடு, 4 ரோடு, சாரதா கல்லூரி ரோடு உள்பட பல பகுதிகளில் ஓட்டல்கள், டீ கடைகள், துணி கடைகள் திறக்கப்பட்டிருந்தன. மக்கள் கூடும் இடங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    சேலம் திருமணிமுத்தாறு, வ.உ.சி. மார்க்கெட், உழவர் சந்தைகள் திறக்கப்பட்டிருந்தாலும் பொது மக்கள் கூட்டம் குறைவாகவே இருந்தது.

    சேலம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயங்கின. கிராமப்புற பஸ்கள் குறைவாக இயக்கப்பட்டன. பஸ் நிலையம் மற்றும் பஸ்களில் பயணிகள் கூட்டம் குறைவாக இருந்தது.

    பஸ் நிலையம், ரெயில் நிலையம் உள்பட மக்கள் கூடும் இடங்களில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் கலெக்டர் அலுவலகத்தில் போராட்டம் நடத்த வாய்ப்புள்ளதால் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். பழைய பஸ் நிலையத்தில் வஜ்ரா வாகனம் தயாராக நிறுத்தப்பட்டிருந்தது.

    ஓமலூர் நகர பகுதியில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. ஒரு சில கடைகள் மட்டுமே திறந்திருந்தன. அரசு பஸ்கள் ஒடின. தனியார் பஸ்கள் இயங்கவில்லை. பஸ் நிலையத்தில் மக்கள் கூட்டம் குறைவாக இருந்தது.

    மேட்டூர் பஸ் நிலைய பகுதியில் 70 சதவீத கடைகள் திறந்திருந்தன. ரெயில் நிலைய பகுதியில் 50 சதவீத கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. அரசு மற்றும் தனியார் பஸ்கள் ஓடினாலும் பயணிகள் கூட்டம் குறைவாக இருந்தது.

    எடப்பாடி பஸ் நிலையம் உள்பட நகர பகுதிகளில் பெரும்பாலான கடைகள் திறந்திருந்தன. காலை 6 மணிக்கு மேல் அரசு மற்றும் தனியார் பஸ்கள் ஓடின. சிறிய கிராமங்களுக்கு பஸ்கள் செல்லவில்லை. இதனால் அந்த கிராம மக்கள் தவித்தனர்.

    வாழப்பாடியில் பஸ் நிலையம் உள்பட அனைத்து பகுதிகளிலும் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. அரசு மற்றும் தனியார் பஸ்கள் ஓடின. பயணிகள் கூட்டம் குறைவாக இருந்தது.

    ஆத்தூரில் சில கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. பெரும்பாலான கடைகள் திறந்திருந்தன. அரசு மற்றும் தனியார் பஸ்கள் வழக்கம் போல இயங்கின.

    நாமக்கல் நகரில் இன்று பெரும்பாலான கடைகள் திறந்திருந்தன. ஒரு சில கடைகள் மட்டுமே அடைக்கப்பட்டு இருந்தன. உழவர் சந்தை இன்று காலை திறந்திருந்து.

    பரமத்திவேலூர் சாலையில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 250 பஸ்களும் இன்று காலையில் வழக்கம் போல் நாமக்கல் பஸ் நிலையத்தில் இருந்து இயங்கின. பஸ் நிலையத்தில் இருந்து சேலம், துறையூர், திருச்சி, ஈரோடு உள்ளிட்ட வெளியூர் பகுதிகளுக்கு பஸ்கள் சென்றன.

    உள்ளூர் பகுதிகளான வளையப்பட்டி, பெரியப்பட்டி, நல்லிப்பாளையம், முதலிப்பாளையம், வள்ளியூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு நகர பேருந்துகள் இயங்கின. அதுபோல் ஆட்டோக்கள் வழக்கம் போல் ஓடின. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை.

    நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் பஸ் நிறுத்தம் பகுதியில் பாலம் சாலை, திருச்செங்கோடு சாலை, சங்ககிரி சாலையில் பேக்கரி, ஓட்டல்கள் என பாதி கடைகள் அடைக்கப்பட்டு இருந்தது.

    பாதி கடைகள் திறக்கப்பட்டு இருந்தது. மொபைல் கடை, ரீசார்ஜ் கடை, டீக்கடை, ஓட்டல்கள் பெரும்பாலானவை திறக்கப்பட்டு இருந்தது.

    பள்ளிப்பாளையம் பஸ் நிலையத்தில் இருந்து வழக்கம் போல் ஈரோடு, சங்ககிரி, நாமக்கல், சேலம் உள்ளிட்ட பகுதிகளுக்கு பஸ்கள் இயங்கின. அதுபோல் தனியார் பஸ்களும் பள்ளிப்பாளையத்தில் இருந்து ஈரோடுக்கு இயங்கியது.

    திருச்செங்கோடு புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம், 4 ரதவீதி, கடைவீதி, சங்ககிரி சாலை மற்றும் சேலம் சாலைகளில் கடைகள் மூடப்பட்டு இருந்தது. 50 சதவீத கடைகள் திறந்திருந்தன.

    புதிய பஸ் நிலையம் அருகே உள்ள தினச்சரி மார்க்கெட் வழக்கம் போல் இயங்கியது. திருச்செங்கோடு புதிய பஸ் நிலையத்தில் இருந்து சேலம், ஈரோடு, நாமக்கல், ராசிபுரம், சங்ககிரி உள்ளிட்ட பகுதிகளுக்கு வெளியூர் பஸ்களும், உள்ளூர் பஸ்களும் புறப்பட்டு சென்றன.

    ராசிபுரம் பகுதியில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. ராசிபுரம் பஸ் நிலையத்தில் இருந்து பஸ்கள் இயங்கின. #SterliteProtest #ThoothukudiFiring #DMKBandh
    Next Story
    ×