search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "namakkal"

    நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க செயற்குழு கூட்டம் நாளை காலை நாமக்கல்- திருச்சி சாலையில் உள்ள மாவட்ட தி.மு.க அலுவலகத்தில் நடைபெறுகிறது. #DMK
    நாமக்கல்:

    நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க பொறுப்பாளர் காந்தி செல்வன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க செயற்குழு கூட்டம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 11 மணிக்கு நாமக்கல்- திருச்சி சாலையில் உள்ள மாவட்ட தி.மு.க அலுவலகத்தில் மாவட்ட அவைத்தலைவர் உடையப்பன் தலைமையில் நடைபெறுகிறது. சொத்து பாதுகாப்புக்குழு தலைவர் பொங்கலூர் பழனிசாமி, முன்னாள் எம்.எல்.ஏவும், தேர்தல் பணிக்குழு செயலாளருமான எஸ்.ஆர்.பார்த்திபன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

    இதில் மாநில, மாவட்ட நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், முன்னாள் சட்டபேரவை உறுப்பினர்கள், நகர, ஒன்றிய பேரூர் செயலாளர்கள், மாவட்ட சார்பு அணி அமைப்பாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார். #DMK
    நாமக்கல்லில் கறிக்கோழி விலை ஒரே வாரத்தில் ஒரு கிலோவுக்கு 50ரூபாய் வரை உயர்ந்துள்ளது அசைவ பிரியர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
    நாமக்கல்:

    தமிழகத்தில் பல்லடம், நாமக்கல், ஈரோடு ஆகிய பகுதிகளில் 25ஆயிரம் கறிக்கோழி உற்பத்தி பண்ணைகள் மூலம் தினமும் 30 லட்சம் கிலோ கறிக்கோழிகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்த கறிக்கோழிகள் தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

    இந்த நிலையில் கறிக்கோழி விலை ஒரே வாரத்தில் ஒரு கிலோவுக்கு 50ரூபாய் வரை உயர்ந்துள்ளது அசைவ பிரியர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. கடந்த வாரம் உயிருடன் ஒரு கிலோ கோழி 80 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இந்த வாரம் 130 ரூபாயாக உயர்ந்து உள்ளது. அதேபோல 170 ரூபாய்க்கு விற்கப்பட்ட உரித்த கோழி 220 ரூபாயாக உயர்ந்துள்ளது.

    இதுகுறித்து கறிக்கோழி சில்லறை விற்பனையாளர்களிடம் கேட்டபோது, கேரளாவில் கனமழையால் கோழிப் பண்ணைகள் அழிந்ததால் கேரளாவிற்கு அதிகளவில் கறிக்கோழிகள் அனுப்பி வைக்கப்படுகிறது.

    மேலும் புரட்டாசி விரதம் முடிந்ததாலும், தசரா பண்டிகைக்கு வெளி மாநிலத்திற்கு அதிக அளவில் கோழிகள் விற்பனை செய்யப்பட்டதாலும் கொள்முதல் விலை உயர்ந்து உள்ளது. தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால் இந்த விலை உயர்வு மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.
    சேலம், நாமக்கல் மாவட்டங்களில் கன மழை பெய்ததையடுத்து சுமார் 100-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் இரவு முழுவதும் பொதுமக்கள் தூங்க முடியாமல் தவித்தனர்.
    சேலம்:

    தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.

    இந்த நிலையில் நேற்று இரவு 8 மணிக்கு தொடங்கிய மழை சேலம் மாவட்டம் முழுவதும் பலத்த சூறைக்காற்றுடன் பெய்ய தொடங்கியது. இந்த மழை சுமார் 2 மணி நேரம் இடைவிடாமல் இடி, மின்னலுடன் கொட்டித் தீர்த்தது. அதன் பிறகு லேசான தூறல் விழுந்தது.

    இதனால் சேலம் காந்திசிலை, 4 ரோடு, 5 ரோடு உள்பட பல சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இந்த வெள்ளம் சாலையோர கடைகளுக்குள்ளும் புகுந்தது. சீத்தாராமன் ரோட்டில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் மழை வெள்ளம் சூழ்ந்தது. ஒரு சில இடங்களில் மின் தடையும் ஏற்பட்டது.

    4 ரோடு, செவ்வாய்ப்பேட்டை, செரிரோடு, சங்கர் நகர், அரிசிப்பாளையம், நாராயணநகர், புதிய பஸ் நிலையம், சினிமாநகர், சத்திரம், பழைய பஸ்நிலை யம், அம்மாப்பேட்டை பச்சப்பட்டிஏரி, கிச்ச்சிப் பாளையம், குகை, பஞ்சந்தாங்கி ஏரி போன்ற தாழ்வான பகுதிகளில் இருக்கும் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. சுமார் 100-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் இந்த தண்ணீர் புகுந்ததால் இரவு முழுவதும் பொதுமக்கள் தூங்க முடியாமல் தவித்தனர்.

    நாராயணன் நகர், 5 ரோடு ஸ்ரீராம்நகர், தமிழ்ச் சங்க சாலை போன்ற பகுதிகளில் வீடுகளில் புகுந்த தண்ணீரை பொதுமக்கள் அகற்றினார்கள். அதிக அளவில் தண்ணீர் புகுந்த இடங்களில் மாநகராட்சி ஊழியர்கள் தண்ணீர் டேங்க் லாரிகளை கொண்டு வந்து மோட்டாரை வைத்து மழைநீரை அகற்றினார்கள். சாக்கடை கால்வாயில் ஏற்பட்ட அடைப்புகளை நீக்கி, சாலைகளில் உள்ள தண்ணீர் அதில் செல்ல வழிவகை செய்தனர்.

    4 ரோடு பகுதியில் மேம்பாலம் பணி நடைபெறுவதால் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஒருவழி பாதையில் சென்றதால் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் மழையில் நனைந்தபடி சென்றனர்.

    சேலம் மாவட்டத்தில் பெய்த மழை அளவு விபரம் மில்லி மீட்டரில் வருமாறு:-

    சேலம்-72.20 மி.மீ
    ஆத்தூர்-3.60
    ஏற்காடு-30.40
    மேட்டூர்-15.20
    வாழப்பாடி-8.30
    கெங்கவல்லி-5.40
    எடப்பாடி-47.60
    தம்மம்பட்டி-7.20

    நாமக்கல்லில் நேற்று மாலையில் சுமார் 1 மணி நேரம் இடைவிடாமல் மழை பெய்தது. அதுபோல் திருச்செங்கோடு, ராசிபுரம், குமாரபாளையம், பள்ளிப்பாளையம், பரமத்திவேலூர், கொல்லிமலை, சேந்தமங்கலம் உள்ளிட்ட பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. இதனால் தென்னை, பாக்குமரம், வாழை போன்றவை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    நாமக்கல் அருகே 9 கிராமங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.
    நாமக்கல்:

    நாமக்கல் அருகே உள்ள வீசாணம், மரூர்பட்டி, ராசாகவுண்டனூர், செங்காளி கவுண்டனூர், கொண்டம்பட்டி, செம்பாறைபுதூர், கரடிப்பட்டி, பொட்டணம், செல்லிப்பாளையம் ஆகிய 9 கிராமங்களுக்கு மின்சாரம் செல்லும் மின்பாதையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு திடீரென கோளாறு ஏற்பட்டது.

    இதன் காரணமாக அந்த கிராமங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. எனவே பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர். இதையடுத்து நேற்று முன்தினம் காலையில் மின்வாரிய ஊழியர்கள் பழுதை சரிசெய்து, மின் வினியோகத்தை சீரமைத்தனர்.

    ஆனால் நேற்று முன்தினம் இரவு பெய்த மழையால் மீண்டும் 9 கிராமங்களுக்கும் மின்சார வினியோகம் துண்டிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து மின்வாரிய ஊழியர்கள் நேற்று மின்பாதையில் ஏற்பட்ட கோளாறை சரிசெய்து, மீண்டும் மின்சாரம் வழங்கினர். இதுபோன்ற பிரச்சினை அடிக்கடி ஏற்படாமல் இருக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். 
    குட்கா ஊழல் தொடர்பாக தமிழக அரசை கண்டித்து நேற்று நாமக்கல்லில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    நாமக்கல்:

    குட்கா ஊழல் தொடர்பாக தமிழக அரசை கண்டித்தும், அதில் தொடர்புடைய அனைவரும் பதவி விலக வலியுறுத்தியும் நேற்று தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் நாமக்கல் அண்ணாசிலை அருகில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு முன்னாள் மத்திய மந்திரியும், மாவட்ட பொறுப்பாளருமான காந்திசெல்வன் தலைமை தாங்கி பேசினார்.

    அப்போது அவர் தமிழகத்தில் எந்தெந்த துறைகளில் ஊழல் குற்றச்சாட்டு எழுந்து உள்ளது என்பது குறித்தும், ஊழலில் தொடர்புடைய அனைவரும் பதவி விலக வலியுறுத்தியும் பேசினார். இந்த ஆர்ப்பாட்டத்துக்கு நகர பொறுப்பாளர் மணிமாறன் முன்னிலை வகித்தார்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட தி.மு.க.வினர் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும், ஊழல் குற்றச்சாட்டு எழுந்துள்ள அமைச்சர்கள், அதிகாரிகள் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியும், மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர். இதில் மாவட்ட அவைத்தலைவர் உடையவர், மாநில மகளிர் அணி துணை அமைப்பாளர் ராணி, சட்டதிட்ட திருத்தக்குழு உறுப்பினர் நக்கீரன், முன்னாள் மாவட்ட பொறுப்பாளர் பார். இளங்கோவன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் கே.பி.ராமசாமி, பொன்னுசாமி, பழனியம்மாள், சரஸ்வதி, மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் கே.ஆர்.என். ராஜேஸ்குமார், மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் மோகன் மற்றும் பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள், சார்பு அணிகளின் நிர்வாகிகள், நகர, ஒன்றிய, பேரூர் செயலாளர்கள், நகர பொறுப்புக்குழு உறுப்பினர்கள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர். 
    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி காவிரி வெள்ளப்பகுதிகளை நாளை பார்வையிடுகிறார். நாளை காலை அவர் ஈரோடு, நாமக்கல், கரூர் மாவட்டத்தை பார்வையிடுகிறார். #TNCM #EdappadiPalaniswami
    சென்னை:

    காவிரியில் வெள்ளம் 3 லட்சம் கன அடி அளவுக்கு பாய்ந்தோடுகிறது. இதனால் தமிழகத்தில் காவிரி கரையோரப் பகுதியில் வெள்ளம் புகுந்துள்ளது. அங்கு வசித்த மக்கள் மீட்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி காவிரி வெள்ளப்பகுதிகளை நாளை பார்வையிடுகிறார். இதற்காக இன்று அவர் சேலம் செல்கிறார்.

    நாளை காலை அவர் ஈரோடு, நாமக்கல், கரூர் மாவட்டத்தை பார்வையிடுகிறார். பவானியில் தொடங்கி காளிங்கராயன் பாளையம், குமாராபாளையம், பள்ளிபாளையம் ஆகிய இடங்களையும், பின்னர் கரூர் மாவட்டத்தில் வெள்ளப் பகுதிகளையும் பார்வையிடுகிறார்.

    நாளை மாலை ஈரோட்டில் வெள்ள நிவாரண பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளையும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்குகிறார். #TNCM #EdappadiPalaniswami

    நாமக்கல்லில் சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசிய கொடியை ஏற்றிய மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம், 185 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 36 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
    நாமக்கல்:

    சுதந்திர தினவிழா நேற்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. நாமக்கல் மாவட்ட நிர்வாகம் சார்பில் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில் சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது. மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம், சரியாக காலை 9.20 மணிக்கு தேசிய கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

    பின்னர் அவர் திறந்த ஜீப்பில் சென்று போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். தொடர்ந்து வெண் புறாக்களையும், வண்ண பலூன்களையும் வானில் பறக்க விட்டார்.

    அதை தொடர்ந்து கலெக்டர், விழாவில் பங்கேற்ற சுதந்திரப் போராட்ட தியாகிகள் மற்றும் அவர்களது வாரிசுகளுக்கு சால்வை அணிவித்து கவுரவித்தார். பின்னர் சிறப்பாக பணியாற்றிய காவல்துறை அதிகாரிகள் மற்றும் போலீசாருக்கு பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்களையும், பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய அரசுத்துறை அலுவலர்களுக்கு, அவர்களது பணியினை பாராட்டி நற்சான்றிதழ்களையும் வழங்கினார்.

    பின்னர் வருவாய்த்துறையின் சார்பில் 123 பயனாளிகளுக்கு ரூ.35 லட்சத்து 67 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் உள்பட மொத்தம் 185 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 36 லட்சத்து 71 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.

    விழாவை முன்னிட்டு தொப்பப்பட்டி வாணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, கீரம்பூர் கொங்கு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, பொம்மைகுட்டைமேடு காமராஜர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, அணியாபுரம் லிட்டில் ஏஞ்சல்ஸ் மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி, பொட்டணம் தி சைல்டு பிளான் அகாடமி பள்ளி, நாமக்கல் எம்.எஸ். உதயமூர்த்தி ஸ்கூல் ஆப் எக்ஸலன்ஸ் பள்ளி, பாண்டமங்கலம் ஆர்.என்.ஆக்ஸ்போர்டு பள்ளி, எருமப்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி என 8 பள்ளிகளைச் சேர்ந்த 618 மாணவ, மாணவிகள் பங்கேற்ற கண்கவர் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.

    இதேபோல் புதியதாக இந்த ஆண்டு செவந்திப்பட்டி அரசு பள்ளி உள்பட 5 பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகளின் யோகா நிகழ்ச்சியும் நடைபெற்றது. நிறைவாக சுதந்திர தின விழாவில் பங்கேற்ற பள்ளிகளுக்கு சுழற்கேடயமும், குழந்தைகளுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன.

    விழாவில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருளரசு, மாவட்ட வன அலுவலர் டாக்டர் காஞ்சனா, நாமக்கல் சப்-கலெக்டர் கிராந்திகுமார், ஊரக வளர்ச்சித்துறை திட்ட இயக்குனர் மாலதி, முதன்மை கல்வி அதிகாரி உஷா உள்பட அரசுதுறை அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் முன்னாள் பிரதிநிதிகள், கூட்டுறவாளர்கள், சுதந்திர போராட்ட தியாகிகள் மற்றும் அவர்தம் வாரிசுகள், பயனாளிகள், பள்ளி மாணவ, மாணவிகள், ஆசிரிய, ஆசிரியைகள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். 
    நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நாமக்கல் கோர்ட்டில் யுவராஜ் நேற்று ஆஜர்படுத்தப்பட்டார். அவரிடம் விசாரணை நடத்திய மாஜிஸ்திரேட் தனபால் இந்த வழக்கை வருகிற 24-ந் தேதிக்கு ஒத்திவைத்தார். #Yuvaraj
    நாமக்கல்:

    சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்தவர் என்ஜினீயர் கோகுல்ராஜ் (வயது 23). இவர் கடந்த 2015-ம் ஆண்டு ஜூன் மாதம் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக நாமக்கல் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீரன்சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ் உள்ளிட்ட 17 பேரை கைது செய்தனர்.

    இந்த வழக்கு விசாரணைக்காக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 19-ந் தேதி யுவராஜை போலீசார் நாமக்கல் மாவட்ட முதன்மை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அப்போது கோர்ட்டில் நீதிபதிக்கு எதிராக ஆவேசமாக பேசியதாக யுவராஜ் மீது கோர்ட்டு தரப்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.

    இந்த வழக்கு நேற்று நாமக்கல் முதலாவது மாஜிஸ்திரேட் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. இதையடுத்து திருச்சி சிறையில் அடைக்கப்பட்டு உள்ள யுவராஜை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். இதை தொடர்ந்து வழக்கு விசாரணையை மாஜிஸ்திரேட் தனபால் வருகிற 24-ந் தேதிக்கு ஒத்திவைத்தார்.

    இதையடுத்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் யுவராஜ் திருச்சி சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார். யுவராஜ் வருகையை முன்னிட்டு நாமக்கல் கோர்ட்டு வளாகத்திலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. 
    நாமக்கல்லில் விநாயகர் சதுர்த்தியின்போது விற்பனை செய்ய 18 வகையான விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. #VinayagarSathurthi
    நாமக்கல்:

    நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா செப்டம்பர் மாதம் 13-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நாமக்கல் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் அரசு அனுமதி பெற்று விநாயகர் சிலைகளை வைத்து பக்தர்கள் வழிபாடு நடத்துவது வழக்கம். இதற்கிடையே விநாயகர் சதுர்த்தி விழாவிற்காக விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் தற்போது தொடங்கி மும்முரமாக நடந்து வருகிறது.

    அதன் ஒரு பகுதியாக நாமக்கல் டவுன், பரமத்தி ரோட்டில் ஏ.டி.சி. டிப்போ அருகில் சந்தைப்பேட்டை புதூரை சேர்ந்த பிரபாகரன் தலைமையில் 8 பேர் கொண்ட குழுவினர் விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளனர். ½ அடி முதல் 3 அடி வரை மண் சிலையாகவும், 3 அடிக்கு மேல் 12 அடி வரை கிழங்குமாவு மற்றும் பேப்பர் கூலை கொண்டும் சிலைகளை தயாரித்து வருகின்றனர்.

    மேலும் தண்ணீரில் எளிதில் கரையக்கூடிய வாட்டர் கலர் பெயிண்டை கொண்டு பல வண்ணங்களில் சிலைகளை உருவாக்கி வருகின்றனர். இங்கு மான் விநாயகர், வேட்டை விநாயகர், கருட விநாயகர், சிங்க விநாயகர் என 18 வகையான விநாயகர் சிலைகள் பல வண்ணங்களில் தயாரிக்கப்பட்டு வருகிறது. மண் சிலைகள் குறைந்தபட்சம் 20 ரூபாயில் இருந்து 2 ஆயிரம் ரூபாய் வரையிலும், 3 அடிக்கு மேல் 12 அடி வரை உள்ள சிலைகள் குறைந்தபட்சம் ரூ.3 ஆயிரத்து 500 முதல் ரூ.22 ஆயிரம் வரையிலும் விற்பனை செய்யப்பட்ட உள்ளதாக சிலை தயாரிப்பாளர்கள் தெரிவித்தனர். 
    நாமக்கல்லில் சாலையோர கடைக்குள் லாரி புகுந்து மோதியதில் தி.மு.க. பிரமுகர் பரிதாபமாக இறந்தார்.
    நாமக்கல்:

    கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து மதுரைக்கு டிராக்டர் உதிரி பாகங்களை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று நாமக்கல் வழியாக சென்று கொண்டு இருந்தது. இந்த லாரியை திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரை சேர்ந்த டிரைவர் பாலகிருஷ்ணன் (வயது 49) என்பவர் ஓட்டி வந்தார்.

    இந்த லாரி நேற்று முன்தினம் இரவு 11 மணி அளவில் நாமக்கல் அருகே வந்தது. வள்ளிபுரம் பைபாஸ் சாலை அருகே வந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோரத்தில் இருந்த பேக்கரியுடன் இணைந்த டீக்கடைக்குள் புகுந்தது.

    இந்த விபத்தில் கடையில் டீ குடித்து கொண்டு இருந்த கீரம்பூரை சேர்ந்த கண்ணன் (31) சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மேலும் கடையின் முன்பு நிறுத்தப்பட்டு இருந்த மோட்டார் சைக்கிள் மற்றும் கடையில் இருந்த பொருட்கள் சேதம் அடைந்தன. கடையின் முன்புற கட்டிடமும் சேதம் அடைந்தது. இதை நேரில் பார்த்த அப்பகுதி பொதுமக்கள் டிரைவரை சரமாரியாக தாக்கினர். தகவல் அறிந்ததும் அங்கு விரைந்து சென்ற நல்லிப்பாளையம் போலீசார் லாரி டிரைவரை மீட்டு விசாரணை நடத்தினர்.

    மேலும் இந்த விபத்து குறித்து கண்ணனின் மனைவி ஷீலா கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து, டிரைவர் பாலகிருஷ்ணனை கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் லாரி டிரைவரின் தூக்கமே விபத்துக்கு காரணம் என்பது தெரியவந்து உள்ளது. தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    விபத்தில் இறந்த கண்ணன் ஒன்றிய தி.மு.க. இளைஞர் அணி அமைப்பாளராக இருந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 
    25 ஆண்டுகளுக்கு முன்பு தந்தை கொல்லப்பட்டத்தற்கு பழிக்குப்பழியாக மகன் தனது நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்த சம்பவம் நாமக்கல்லில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
    நாமக்கல்:

    நாமக்கல்-சேந்தமங்கலம் ரோட்டில் உள்ள தாதம்பட்டிமேடு பகுதியை சேர்ந்தவர் நல்லுசாமி (வயது 50). மரம் வெட்டும் தொழிலாளி. கடந்த 10-ந்தேதி இவர் பரமத்திரோடு காவேட்டிப்பட்டியில் உள்ள ஒரு லாரி பட்டறை அருகே அரிவாளால் வெட்டி கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார்.

    இது குறித்து அவரது மகன் சுரேஷ்(26) நாமக்கல் போலீசில் புகார் செய்தார். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து தலைமறைவாக இருந்த போதுப்பட்டி காலனியை சேர்ந்த குட்டி என்கிற தமிழ் செல்வன்(39), அவரது நண்பர்கள் லட்சுமி நகரை சேர்ந்த குமார் என்கிற ஜெயக்குமார்(42), போதுப்பட்டி காலனியை சேர்ந்த வினோத்குமார்(32) மற்றும் மாரிகங்காணி தெருவை சேர்ந்த முருகேந்திரன்(35) ஆகிய 4 பேரையும் கைது செய்தனர்.

    கைது செய்யப்பட்ட இவர்கள் 4 பேரும் நாமக்கல் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சேலம் மத்திய ஜெயலிலில் அடைக்கப்பட்டனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன் விபரம் வருமாறு:-

    குட்டி என்கிற தமிழ்செல்வனின் தந்தை அன்பழகனை கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு நல்லுசாமி, பூபதி ஆகிய இருவரும் சேர்ந்து கொலை செய்து விட்டனர். இதற்காக நல்லுசாமி சிறை தண்டணை அனுபவித்து கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு வெளியில் வந்துவிட்டார். கரூரில் தங்கி இருந்து மரம் வெட்டும் வேலை செய்து வந்தார். பூபதி சில ஆண்டுகளுக்கு முன்பு மர்மநபர்களால் கொலை செய்யப்பட்டார்.

    இந்த நிலையில் தாதம்பட்டியில் குடியிருக்கும் தனது மகன் சுரேசை பார்க்க அவ்வப்போது நல்லுசாமி நாமக்கல் வந்து செல்வது வழக்கம். தனது தந்தையை கொலை செய்தவர்களைப் பழிதீர்க்கத்திட்டமிட்ட குட்டி, தனது நண்பர் குமாரிடம் நல்லுசாமி நாமக்கல் வரும்போது தனக்கு தகவல் தெரிவிக்கும்படி கூறியிருந்தார்.

    இந்த நிலையில் தான் சம்பவத்தன்று நாமக்கல்- போதுப்பட்டி ரோட்டில் உள்ள டாஸ்மாக் கடையில் மது குடித்துக்கொண்டிருந்த நல்லுசாமியை பார்த்த குமார், உடனே குட்டியை அங்கு அழைத்து வந்தார். அங்கு வைத்து நல்லுசாமிக்கு மது வாங்கி கொடுத்து மயக்கமடையச் செய்துள்ளனர்.

    பின்னர் குட்டி தனது நண்பர்களுடன் சேர்ந்து நல்லுசாமியை பரமத்திரோட்டில் உள்ள லாரி பட்டறைக்கு அழைத்துச் சென்று அரிவாளால் சரமாரியாக வெட்டிக்கொலை செய்தது தெரியவந்தது.

    கைது செய்யப்பட்ட குட்டி மீது நாமக்கல் போலீஸ் நிலையத்தில் ஏற்கனவே ஆள்கடத்தல் உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. மேலும் இவர் பெயர் ரவுடி பட்டியலில் உள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர். இந்த கொலை வழக்கில் தொடர்புடைய மேலும் சிலரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    25 ஆண்டுகளுக்கு முன்பு தனது தந்தை அன்பழகன் கொல்லப்பட்டத்தற்கு பழிக்குப்பழியாக மகன் தனது நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்த சம்பவம் நாமக்கல்லில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. #tamilnews
    திருச்செங்கோடு ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் விடிய, விடிய நடந்த லஞ்ச ஒழிப்பு சோதனையில் கணக்கில் வராத ரூ.3½ லட்சம் சிக்கியது.
    திருச்செங்கோடு:

    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே வரகூராம்பட்டியில் வட்டார போக்குவரத்து அலுவலகம் உள்ளது. இங்கு சிலர் லஞ்சம் வாங்குவதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து நேற்று மாலை நாமக்கல் லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயகுமார், இன்ஸ்பெக்டர் நல்லம்மாள் மற்றும் 10 பேர் கொண்ட குழுவினர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் அதிரடியாக புகுந்து சோதனை நடத்தினார்கள்.

    இச்சோதனையின் போது அலுவலகத்தில் இருந்த வட்டார போக்குவரத்து அதிகாரி ராமலிங்கம், மோட்டார் வாகன ஆய்வாளர் செந்தில்குமார் மற்றும் அலுவலர்கள், பணியாளர்கள், அலுவலகத்திற்கு வந்திருந்த பொதுமக்கள் ஆகியோர் வெளியே செல்ல அனுமதி மறுக்கப்பட்டது.

    இதனால் அவர்கள் அனைவரும் அலுவலகத்திலேயே அமர்ந்திருந்தனர். அலுவலகத்திற்கு அதிகாரிகள் பூட்டு போட்டனர். பின்னர் பூட்டிய அறைக்குள் சோதனை நடந்தது. அங்கிருந்த கோப்புகள், ஆர்.சி.புக், மேஜை அறை, உணவு பாக்ஸ் மற்றும் கழிப்பிடங்களை சோதனை செய்தனர்.

    மேலும் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் இருந்த அனைவரையும் தனித்தனியாக போட்டோ எடுத்து பதிவு செய்தனர். விடிய, விடிய இந்த சோதனை நடந்தது. இந்த சோதனையின்போது கட்டு, கட்டாக கணக்கில் வராத பணம் சிக்கியது. ஆர்.டி.ஓ. ஆபிசில் இருந்த அலுவலர்கள் மற்றும் அவர்களது இருக்கையில் இருந்த ரொக்கப்பணத்தை பறிமுதல் செய்தனர்.

    மேலும் ஆபீஸ் கழிவறையில் வீசப்பட்டிருந்த ரூபாய் நோட்டுகளையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்தனர். மொத்தம் 3½ லட்சம் ரூபாய் கைப்பற்றப்பட்டது. இது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் திருச்செங்கோடு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #tamilnews
    ×