search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சேலம், நாமக்கல் மாவட்டங்களில் கன மழை - 100 வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது
    X

    சேலம், நாமக்கல் மாவட்டங்களில் கன மழை - 100 வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது

    சேலம், நாமக்கல் மாவட்டங்களில் கன மழை பெய்ததையடுத்து சுமார் 100-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் இரவு முழுவதும் பொதுமக்கள் தூங்க முடியாமல் தவித்தனர்.
    சேலம்:

    தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.

    இந்த நிலையில் நேற்று இரவு 8 மணிக்கு தொடங்கிய மழை சேலம் மாவட்டம் முழுவதும் பலத்த சூறைக்காற்றுடன் பெய்ய தொடங்கியது. இந்த மழை சுமார் 2 மணி நேரம் இடைவிடாமல் இடி, மின்னலுடன் கொட்டித் தீர்த்தது. அதன் பிறகு லேசான தூறல் விழுந்தது.

    இதனால் சேலம் காந்திசிலை, 4 ரோடு, 5 ரோடு உள்பட பல சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இந்த வெள்ளம் சாலையோர கடைகளுக்குள்ளும் புகுந்தது. சீத்தாராமன் ரோட்டில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் மழை வெள்ளம் சூழ்ந்தது. ஒரு சில இடங்களில் மின் தடையும் ஏற்பட்டது.

    4 ரோடு, செவ்வாய்ப்பேட்டை, செரிரோடு, சங்கர் நகர், அரிசிப்பாளையம், நாராயணநகர், புதிய பஸ் நிலையம், சினிமாநகர், சத்திரம், பழைய பஸ்நிலை யம், அம்மாப்பேட்டை பச்சப்பட்டிஏரி, கிச்ச்சிப் பாளையம், குகை, பஞ்சந்தாங்கி ஏரி போன்ற தாழ்வான பகுதிகளில் இருக்கும் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. சுமார் 100-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் இந்த தண்ணீர் புகுந்ததால் இரவு முழுவதும் பொதுமக்கள் தூங்க முடியாமல் தவித்தனர்.

    நாராயணன் நகர், 5 ரோடு ஸ்ரீராம்நகர், தமிழ்ச் சங்க சாலை போன்ற பகுதிகளில் வீடுகளில் புகுந்த தண்ணீரை பொதுமக்கள் அகற்றினார்கள். அதிக அளவில் தண்ணீர் புகுந்த இடங்களில் மாநகராட்சி ஊழியர்கள் தண்ணீர் டேங்க் லாரிகளை கொண்டு வந்து மோட்டாரை வைத்து மழைநீரை அகற்றினார்கள். சாக்கடை கால்வாயில் ஏற்பட்ட அடைப்புகளை நீக்கி, சாலைகளில் உள்ள தண்ணீர் அதில் செல்ல வழிவகை செய்தனர்.

    4 ரோடு பகுதியில் மேம்பாலம் பணி நடைபெறுவதால் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஒருவழி பாதையில் சென்றதால் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் மழையில் நனைந்தபடி சென்றனர்.

    சேலம் மாவட்டத்தில் பெய்த மழை அளவு விபரம் மில்லி மீட்டரில் வருமாறு:-

    சேலம்-72.20 மி.மீ
    ஆத்தூர்-3.60
    ஏற்காடு-30.40
    மேட்டூர்-15.20
    வாழப்பாடி-8.30
    கெங்கவல்லி-5.40
    எடப்பாடி-47.60
    தம்மம்பட்டி-7.20

    நாமக்கல்லில் நேற்று மாலையில் சுமார் 1 மணி நேரம் இடைவிடாமல் மழை பெய்தது. அதுபோல் திருச்செங்கோடு, ராசிபுரம், குமாரபாளையம், பள்ளிப்பாளையம், பரமத்திவேலூர், கொல்லிமலை, சேந்தமங்கலம் உள்ளிட்ட பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. இதனால் தென்னை, பாக்குமரம், வாழை போன்றவை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    Next Story
    ×