search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "minister Udhayakumar"

    முக்கொம்பு அணை உடைப்புக்கு கண் திருஷ்டியே காரணம் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியுள்ளார். #TNMinister #Udhayakumar #Mukkombu
    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டத்தில் அரசின் சாதனைகளை விளக்கி அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் ஜெயலலிதா பேரவையினர் மற்றும் இளைஞர்கள் சைக்கிள் பேரணி நடத்தி வருகிறார்கள்.

    அருப்புக்கோட்டையில் நிறைவு பெற்ற சைக்கிள் பேரணியில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ராதாகிருஷ்ணன் எம்.பி. முன்னிலை வகித்தார். அமைச்சர்கள் ஆர்.பி.உதய குமார், கே.டி.ராஜேந்திர பாலாஜி ஆகியோர் 214 பயனாளிகளுக்கு ரூ.1.21 கோடி மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

    விழாவில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது:-

    ஏழை-எளிய மக்களுக்காகவே தனது வாழ்நாளை அர்ப்பணித்தவர் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா. அவர் மக்களுக்காக சிந்தித்து செயல்படுத்திய அனைத்து திட்டங்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமிழக மக்களுக்கு தொடர்ந்து கொண்டு செல்லும் பணியினை சிறப்பாக செய்து வருகிறார்.

    காவிரி உரிமை, எய்ம்ஸ் மருத்துவமனை, ஜல்லிக்கட்டு போன்ற முக்கிய உரிமைகளை அ.தி.மு.க. அரசு சட்டப்போராட்டம் நடத்தி பெற்று தந்துள்ளது.

    தமிழகம் முழுவதும் நீர்நிலைகளில் குடிமராமத்து பணிகள் சிறப்பாக செய்யப்பட்டு வருகின்றன. உழைக்கும் மகளிருக்கு அம்மா இரு சக்கர வாகன திட்டத்தின் கீழ் வாகனங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் உழைக்கும் பெண்கள் பணிச்சுமை வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது.


    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி விவசாயியின் மகன் என்பதால் எளிதில் அணுகக்கூடிய சாமானிய முதல்வராக இருந்து வருகிறார். திட்டங்கள் உடனுக்குடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    தமிழகத்தில் முக்கிய அணையான மேட்டூர் அணை கடந்த சில வாரங்களுக்கு முன்பு வறண்டு கிடந்தது. இந்த அணை நிரம்புமா? விவசாயத்திற்கு தண்ணீர் கிடைக்குமா? என்றெல்லாம் விவசாயிகள் ஏங்கினர்.

    ஆனால் கடந்த மாதத்தில் மட்டும் 4 முறை மேட்டூர் அணை நிரம்பி வழிந்துள்ளது. மேட்டூர் அணை மட்டுமல்ல, கன்னியாகுமரி பக்கம் சென்றாலும் பேச்சிப்பாறை நிரம்பி வழிகிறது. அதுபோல வைகை, பவானி சாகர், பெருஞ்சாணி உள்ளிட்ட அத்தனை அணைகளும் நிரம்பி வழிகின்றன.

    பக்கத்து மாநிலங்களில் நாம் தண்ணீர் கேட்காமலேயே அவர்களே திறந்து விடுறார்கள். நீங்கள் எவ்வளவு வேண்டுமானாலும் திறந்து விடுங்கள் நாங்கள் அதை பெற்றுக்கொள்கிறோம் என்ற அளவிலே தமிழகத்தில் உள்ள பல்வேறு அணைகள், நீர் நிலைகள் நிரம்பி உள்ளன.

    முதல்-அமைச்சருக்கு தண்ணீர் ராசி என்று நினைக்கிறேன். இங்கே பேசிய அமைச்சர் மற்றும் நிர்வாகிகளும் எடப்பாடி பழனிசாமிக்கு தண்ணீர் ராசி இருக்கிறது என்று குறிப்பிட்டார்கள்.

    முக்கொம்பு அணை உடைப்புக்குக்கூட கண்திருஷ்டியே காரணமாக இருக்கலாம். அந்த அளவுக்கு மக்கள் நலப்பணிகளை முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி விரைவுபடுத்தி சிறப்பாக செய்து வருகிறார்.

    ஜெயலலிதா வழியில் செயல்படும் இந்த அரசுக்கு தமிழக மக்கள் துணை நிற்பார்கள். இனிவரும் அனைத்து தேர்தல்களிலும் அ.தி.மு.க. அமோக வெற்றி பெறும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அதிகாரி உதயகுமார் மற்றும் அ.தி. மு.க. நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். #TNMinister #Udhayakumar  #Mukkombu
    அ.தி.மு.க. ஆட்சி கவிழும் என நினைத்த எதிர்கட்சிகளின் கனவு பலிக்காமல் 17 மாத காலமாக ஆட்சி சிறப்பாக நடைபெறுகிறது என்று அமைச்சர் உதயகுமார் பேசினார். #ADMK #TNMinister #Udhayakuamr
    ஆரணி:

    திருவண்ணாமலை வடக்கு, தெற்கு மாவட்ட அ.தி.மு.க. ஜெயலலிதா பேரவை சார்பில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோரின் 17 மாத ஆட்சி குறித்து சாதனை விளக்க 3-வது கட்ட சைக்கிள் பேரணி ஆரணியில் தொடங்கியது.

    இதன் தொடக்க நிகழ்ச்சி ஆரணி-சேவூர் பைபாஸ் சாலையில் உள்ள அம்மா திடலில் நடந்தது. அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் வரவேற்றார். அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமை தாங்கி சைக்கிள் பேரணியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-


    முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதாவிற்கு பிறகு இந்த ஆட்சி கவிழ்ந்துவிடும் என்று எதிர்க்கட்சியினர் கனவு கண்டனர். புதிய முதல்-அமைச்சர்கள் நாங்கள்தான் என்று கூறினர். அவர்களுடைய கனவு பலிக்காமல் 17 மாத காலமாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் சிறப்பாக ஆட்சி நடத்தி நம்மை வழிநடத்திசெல்கின்றனர்.

    தொடர்ந்து நீதிமன்றம் மூலம் ஆட்சியை கவிழ்த்து விடலாம் என நினைத்து வருகிறார்கள். அது நடக்காது. அ.தி.மு.க.வின் 1½ கோடி தொண்டர்கள் வீறுகொண்டு எழுவார்கள்.

    திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளிலும் 1, 250 இளைஞர்கள் சீருடை அணிந்து அரசின் சாதனைகளை விளக்கும் வகையில் இந்த சைக்கிள் பேரணியில் கலந்து கொண்டுள்ளனர். தினமும் இந்த சைக்கிள் பேரணி காலை 7 மணிக்கு தொடங்கும். சில பகுதிகளில் மரக்கன்றுகள் நடப்படும். ஒரு சில பகுதிகளில் பள்ளி மாணவர்களிடத்தில் வாசிப்புத் திறன் மேற்கொள்ளப்படும். நீங்கள் சைக்கிள் ராஜாவாக இனியும், எப்போதும் உலா வருவீர்கள்.

    இந்த சைக்கிள் பயணம் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளிலும் 300 கி.மீ. தொலைவிற்கு நடக்கிறது. நிறைவு நிகழ்ச்சி இதே இடத்தில் 28-ந் தேதி நடக்கிறது என்றார்.

    நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே.சி.வீரமணி, நிலோபர்கபில் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர். #ADMK #TNMinister #Udhayakuamr
    தி.மு.க.வில் தொலைத்த முகவரியை மு.க. அழகிரி தேடுகிறார் என்று அமைச்சர் உதயகுமார் கூறினார். #TNMinister #Udhayakumar #DMK #MKAzhagiri
    மதுரை:

    அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மதுரையில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    மு.க.அழகிரி தி.மு.க.வில் முகவரி இல்லாமல் இருக்கிறார். தி.மு.க.வில் அடைக்கப்பட்ட ததவுகளை திறக்கவே அழகிரி தொண்டர்களை சந்திக்கிறார்.

    2011-க்கு பிறகு அ.தி.மு.க. இருக்காது என்று கூறிய அழகிரி தி.மு.க.விலேயே காணாமல் போய்விட்டார். அவர் உருவாக்கிய திருமங்கலம் பார்முலாவும் காணாமல் போய் விட்டது.


    ரஜினிகாந்த் மேடைக்கு தகுந்தாற்போல் ஆட்டம் ஆடுபவர். அதனால் தான் கலைஞர் இரங்கல் கூட்டத்தில் முதல்வரை விமர்சித்தும், எம்.ஜிஆர். மற்றும் கலைஞர் படங்களை ஒரே மேடையில் வைக்க வேண்டும் என்று பேசியுள்ளார்.

    தமிழகத்தில் வெள்ள நிவாரண பணிகள் முழு வீச்சில் நடைபெறுகிறது. திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி உறுதி.

    மேற்கண்டவாறு அவர் கூறினார். #TNMinister #Udhayakumar #DMK #MKAzhagiri
    காவிரியில் இருந்து விநாடிக்கு 4 லட்சம் கனஅடி உபரி நீர் வெளியேற்றும் திறன் உள்ளதால் மக்கள் அச்சப்பட தேவையில்லை என்று அமைச்சர் உதயகுமார் வேண்டுகோள் விடுத்துள்ளார். #TNMinister #Udhayakumar
    திருமங்கலம்:

    திருமங்கலம் தொகுதி கள்ளிக்குடியில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட வட்டாட்சியர் அலுவலகத்தில் அமைச்சர் உதயகுமார் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    வைகை அணை நீர் மட்டம் நேற்று 87.15 அடியாக இருந்தது. ஆதலால் முதற்கட்ட எச்சரிக்கை விடப்பட்டது. இதனைத் தொடர்ந்து இன்று 60 அடி கொள்ளளவு வந்துள்ளதால் இன்று இரண்டாம் கட்ட எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

    மேலும் 69 அடி கொள்ளளவு வந்தவுடன் ஆற்றில் உபரி தண்ணீர் திறந்து விடப்படும். இதனால் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. யாரும் ஆற்றில் இறங்கி குளிக்கக்கூடாது. கால்நடைகளை குளிப்பாட்டக் கூடாது. குறிப்பாக ஆற்றங்கரையில் செல்பி எடுக்கக்கூடாது.

    திருவிழா காலங்களில் முளைப்பாரி கரைக்கக்கூடாது. தாழ்வான பகுதிகளில் சிறுவர்கள் பெரியவர்கள் யாரும் நீச்சல் அடிக்கக்கூடாது. 13 ஆண்டுகளுக்குப் பின் வைகை அணை ஒரு போக சாகுபடிக்காக திறக்கப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பை முதல்வர் வெளியிடுவார்.

    தண்ணீர் திறக்கப்பட்டால் மொத்தம் 5 மாவட்டங்களில் உள்ள 1 லட்சம் ஏக்கர் நிலங்கள் நீர்பாசன வசதி பெறும். குறிப்பாக கம்பம் பள்ளத்தாக்கு 18 கால்வாய் பி.டி. ஆர். கால்வாய் பெரியார் மற்றும் திருமங்கலம் பிரதான கால்வாய் ஆகிய கால்வாயில் நீர் திறந்துவிடப்படும்.

    கிருஷ்ணராஜசாகர் கபினி அணைகள் திறந்துவிடப்பட்ட உபரிநீர் மேட்டூர் அணைக்கு வந்து சேர்ந்தது கர்நாடக அணைகளில் இருந்து திறந்துவிடப்படும். உபரி நீரும் தமிழகத்தில் பவானி அமராவதி திருமூர்த்தி அணைகள் உள்ளிட்ட அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட நீரும் சேர்த்து மொத்தம் காவேரியில் மொத்தம் 2 லட்சம் கன அடி நீர் உபரி நீராக வெளியேறி வருகிறது.

    காவிரியில் விநாடிக்கு 4 லட்சம் கனஅடி உபரி நீர் வெளியேற்றும் திறன் உள்ளதால் மக்கள் அச்சப்பட தேவையில்லை. சேலம், தர்மபுரி, ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களில் தண்டோரா போட்டு ஒலி பெருக்கி மூலம் மக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

    தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் மீட்கப்பட்டு 33 முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு உணவு உறைவிடம் தண்ணீர் உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டு வருகிறது. #TNMinister #Udhayakumar
    திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் டி.டி.வி. தினகரன் வெற்றி பெற முடியாது என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார். #RBUdhayakumar #TTVDhinakaran
    மதுரை:

    மதுரை மாவட்டத்தில் ஜெயலலிதா பேரவை சார்பில் அ.தி.மு.க.வைச் சேர்ந்த நலிவுற்ற குடும்பங்களுக்கு அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் நிதி உதவி வழங்கி வருகிறார்.

    அதன்படி திருமங்கலம் அருகே உள்ள கள்ளிக்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அ.தி.மு.க.வைச் சேர்ந்த நலிவுற்ற 170 குடும்பத்தினர் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் இன்று நிதி உதவி வழங்கினார்.

    ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் தலா ரூ.10 ஆயிரம் என 170 குடும்பங்களுக்கு ரூ.17 லட்சம் நிதி உதவியை அமைச்சர் வழங்கினார். நிதி உதவி பெற்ற அ.தி.மு.க.வினர் குடும்பத்துடன் அவருக்கு நன்றி தெரிவித்தனர்.

    பின்னர் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், நிருபர்களிடம் கூறியதாவது:-

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் அம்மா வழியில் நல்லாட்சி நடத்தி வருகிறார்கள்.

    அ.தி.மு.க. அரசு சாதனைகளை விளக்கும் வகையில் ஜெயலலிதா பேரவை சார்பில் கடந்த 15-ந் தேதி மதுரை மாவட்டத்தில் சைக்கிள் பேரணி நடைபெற்றது.

    முதற்கட்டமாக 10 சட்டமன்றத்தொகுதிக்கு உட்பட்ட பொதுமக்களை சந்தித்து அரசின் சாதனைகளை எடுத்துக் கூறினோம்.

    2-வது கட்டமாக சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் சைக்கிள் பேரணி நடந்தது. இதன் மூலம் லட்சக்கணக்கான மக்களை நேரடியாக சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.

    3-வது கட்டமாக வருகிற 17-ந் தேதி திருவண்ணாமலை, வேலூர் மாவட்டங்களில் சைக்கிள் பேரணி நடக்கிறது. 24-ந் தேதி வரை நடக்கும் இந்த பேரணியில் மக்களை சந்தித்து அரசின் சாதனைகளை எடுத்துக் கூறுவோம்.

    இதனைத் தொடர்ந்து வருகிற 30-ந் தேதி முதல் அடுத்த மாதம் 14-ந் தேதி வரை தூத்துக்குடி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் சைக்கிள் பேரணி நடத்தப்படும்.

    திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் எப்போது நடந்தாலும் அ.தி.மு.க. அமோக வெற்றி பெறும். அந்த தொகுதியில் துணைக்கோள் நகரம், எய்ம்ஸ் மருத்துவமனை உள்ளிட்ட வளர்ச்சிப்பணிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதன் காரணமாக மக்கள் அ.தி.மு.க.வுக்கு வாக்களித்து வெற்றி பெற தயாராகி விட்டார்கள்.


    டி.டி.வி.தினகரன் திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்று கூறியுள்ளார்.

    அவர் தாய் வீட்டை பிரிந்து தனிக்குடித்தனம் சென்று விட்டார். திருப்பரங்குன்றம் தொகுதி இரட்டை இலையின் கோட்டை ஆகும். எனவே டி.டி.வி.தினகரன் அங்கு வெற்றி பெற முடியாது.

    இவ்வாறு அவர் கூறினார். #ADMK #RBUdhayakumar #TTVDhinakaran
    திருப்பத்தூரில் ஜெயலலிதா பேரவை சார்பில் தமிழக அரசின் சாதனை விளக்க சைக்கிள் பேரணி அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் நடைபெற்றது.
    திருப்பத்தூர்:

    திருப்பத்தூரில் ஜெயலலிதா பேரவை சார்பில் தமிழக அரசின் சாதனை விளக்க சைக்கிள் பேரணி அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் நடைபெற்றது.

    தேவகோட்டையில் இருந்து புறப்பட்டு காரைக்குடி வழியாக திருப்பத்தூர் வந்தது. இதில் சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்நாதன், சிவகங்கை மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் அசோகன் ஆகியோர் அமைச்சர் உதயகுமாருடன் சைக்கிளை ஓட்டி வந்தனர். இதில் சுமார் 1000-க்கும் மேற்பட்ட தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

    அண்ணா சிலை அருகே அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதில் அமைச்சர் பாஸ்கரன் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

    அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசுகையில், இந்த பேரணியால் எதிர்க்கட்சியினர் மிரண்டு போய் உள்ளனர். பல ஆயிரம் கோடி ரூபாயில் பல திட்டங்களை ஜெயலலிதாவைப்போல் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கி வருகிறார்.

    17 மாதங்களில் 32 ஆயிரம் போராட்டங்களை கண்டு தளர்ந்து விடாமல் சோதனைகளை உடைத்தெறிந்து சாதனைகளாக மாற்றியுள்ளார் என்றார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட இளைஞரணி செயலாளர் பிர்லா கணேசன், ஒன்றிய செயலாளர் ராமலிங்கம், துணைச் செயலாளர் முருகேசன், நகர செயலாளர் இப்ராகிம் ஷா, துணைச் செயலாளர் ரவிச்சந்திரன், முன்னாள் ஒன்றிய செயலாளர் நாகராஜன், சிதம்பரம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
    ரஜினி ஆதரவு அளித்துள்ளதால் 8 வழிச்சாலை சூப்பர் வழிச்சாலையாக அமையும் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார். #Rajinikanth #Udhayakumar #ChennaiSalemGreenExpressway
    மதுரை:

    அ.தி.மு.க. அரசின் ஓராண்டு சாதனையை விளக்கும் வகையில் ஜெயலலிதா பேரவை சார்பில் சைக்கிள் பேரணி மதுரையில் தொடங்கி உள்ளது.

    நேற்று மாலை நடைபெற்ற விழாவில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் பேரணியை தொடங்கி வைத்தனர்.

    இன்று காலை கொட்டும் மழையில் நனைந்தபடி அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் 1,000 இளைஞர்கள் சைக்கிள் பேரணியில் புறப்பட்டனர்.

    மதுரை மாவட்டம் முழுவதும் 5 நாட்கள் அரசின் சாதனைகளை விளக்கி சைக்கிள் பேரணி நடைபெறுகிறது.

    பேரணியில் சென்ற அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியதாவது:-

    மறைந்த முதல்- அமைச்சர் ஜெயலலிதாவின் வழிகாட்டுதலின்படி அ.தி.மு.க. அரசு தமிழக மக்களுக்கு தொடர்ந்து சிறப்பான திட்டங்களை தந்து வருகிறது.

    மக்கள் உரிமைகளை பெற்றுத்தருவதில் அ.தி.மு.க. அரசு என்றைக்கும் சளைக்காமல் செயல்பட்டு வருகிறது.

    காவிரி நதிநீர் பிரச்சனை, முல்லை பெரியாறு பிரச்சனை உள்ளிட்ட தமிழகத்தின் ஜீவாதார உரிமைகள் பேணி பராமரிக்கப்பட்டு வருகின்றன.

    மத்திய அரசுடன் அ.தி.மு.க. அரசு இணக்கமாக செயல்படுவதால் பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் தமிழகத்தில் செயல்படுத்தப்படுகிறது.

    எய்ம்ஸ் மருத்துவமனை, சேலம்-சென்னை 8 வழிச்சாலை திட்டம் பெரும்பாலான மக்கள் பயன் அடைகின்ற மகத்தான திட்டமாகும்.


    8 வழிச்சாலை திட்டத்திற்கு பல்வேறு தரப்பினர் ஆதரவு தெரிவித்து இருந்தாலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தும் இந்த திட்டத்திற்கு ஆதரவு அளித்துள்ளார். இதன் மூலம் சூப்பர் வழிச்சாலையாக இது அமையும்.

    தமிழகம் வந்த பாரதிய ஜனதா தலைவர் அமித் ஷா ஊழல் தொடர்பாக பேசியது அவரது கட்சி தொண்டர்களை உற்சாகப்படுத்துவதற்கு தான். பாரதிய ஜனதா கூட்டத்தில் அ.தி.மு.க. அரசின் சாதனைகளை அமித் ஷா பேச மாட்டார்.

    பாரதிய ஜனதா தொண்டர்களை ஊக்கப்படுத்துவதற்காக அவர் பேசுவதை பெரிதாக எடுத்துக் கொள்ளத்தேவையில்லை.

    ஜெயலலிதா பேரவை சார்பில் தொடங்கப்பட்டுள்ள இந்த சைக்கிள் பேரணி வருகிற நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தின் தொடக்கம் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

    அது போல இந்த அரசின் சாதனைகளை மக்களிடம் எடுத்துச் சொல்லி அ.தி.மு.க. மகத்தான வெற்றி பெற ஜெயலலிதா பேரவை தொடர்ந்து பாடுபடும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சைக்கிள் பேரணியில் சரவணன் எம்.எல்.ஏ., வெற்றிவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.  #Rajinikanth #TNMinister #Udhayakumar #ChennaiSalemGreenExpressway
    பேரிடர் ஒத்திகையில் மாணவி உயிரிழந்த சம்பவத்தில் கல்லூரி நிர்வாகம் கவனக்குறைவாக செயல்பட்டுள்ளதால் அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் உதயகுமார் கூறினார்.
    மேலூர்:

    கோவையில் நடந்த பேரிடர் ஒத்திகையின் போது கல்லூரி மாணவி லோகேஸ்வரி பலியானார்.

    இதுகுறித்து அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மதுரை மேலூர் அருகே பூஞ்சுத்தியில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    கோவையில் நடந்த பேரிடர் மேலாண்மை நிகழ்ச்சியின் போது கவனக் குறைவாகவும், விதிமுறைகளை பின்பற்றாததாலும் விபத்து ஏற்பட்டு கல்லூரி மாணவி உயிரிழந்துள்ளார்.

    அனுபவம் வாய்ந்த பயிற்சியாளர்களை வைத்துதான் இதுபோன்ற ஒத்திகைகளை மேற்கொள்ள வேண்டும். கல்லூரி நிர்வாகம் கவனக்குறைவாக இருந்துள்ளது. இது தொடர்பாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.


    இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க பேரிடர் மேலாண்மை துறை செயலாளர் மூலம் அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார். #CoimbatoreStudent #Logeshwari #Udhayakumar
    மதுரைக்கு எய்ம்ஸ் வந்து விட்டதால் எனது பதவி காப்பாற்றப்பட்டு விட்டதாக திருப்பரங்குன்றத்தில் நடைபெற்ற கூட்டத்தில் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பேசினார்.
    மதுரை:

    காவிரி நதிநீர் மீட்பு போராட்ட வெற்றி விளக்க பொதுக்கூட்டம் திருப்பரங்குன்றத்தில் நடந்தது. கூட்டத்தில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது:-

    தமிழகத்தில் எய்ம்ஸ் அறிவிக்கப்பட்ட நாள் முதல், புரட்சித்தலைவி ஜெயலலிதா ஆசியுடன் எய்ம்ஸ் மதுரையில் அமைக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு தொடர்ந்து போராடி வந்தது.

    மேலும், மதுரையில் எய்ம்ஸ் அமையாவிட்டால் எனது அமைச்சர் பதவியைக் கூட துறக்கத் தயார் என பல பொதுக்கூட்டங்களில் நான் பேசினேன்.

    மத்திய அரசு தமிழகத்தில் மதுரை, தஞ்சை என 5 இடங்களில் எய்ம்ஸ் அமைக்க இடத்தை ஆய்வு மேற்கொண்டு இறுதியாக மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் அமைப்பதற்கு அனைத்து வசதிகளும் நிறைந்த இடமாக உள்ளது என தீர்மானித்து, தோப்பூரில் எய்ம்ஸ் அமைக்க ஆணை பிறப்பித்ததை, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களால் ஆணையை வெளிப்படுத்தியது மேலும், இங்கு அமைக்க 5 நிபந்தனை ( குடிநீர், மின்சாரம், தேசிய நெடுஞ்சாலைகள் இணையும் இடமாகவும், நில மீட்பில் சிக்கலின் மை உள்ளிட்ட )களையும் மத்திய அரசு அறிவித்தது. இதற்கெல்லாம் உகந்த இடமாக மதுரை தோப்பூர் அமைந்துள்ளது. இதனால் இனி பதவியை ராஜினாமா செய்ய தேவையில்லை. எனது அமைச்சர் பதவி காப்பாற்றப்பட்டு விட்டது.

    இந்த மருத்துவமனை அமைந்தால், ஏழை எளிய மக்களுக்கு எட்டாக்கனியாக இருந்த எய்ம்ஸ் மருத்துவமனையால், தமிழகத்தில் கடைக்கோடியில் இருப்பவர்களும் இங்கு வந்து எளிதில் பயன்பெறும் வகையில் அமையும்.

    மேலும், சேலம் சென்னை 8 வழிச்சாலையால் எந்த ஒரு விவசாயிக்கும் பாதிப்பு இருக்காது, விவசாயிகளுக்கு பாதுகாப்பும் அவர்களது வளர்ச்சிக்கும் என்றென்றும் உறுதுணையாக அ.தி.மு.க. செயல்பட்டு வரும். சிலர் அரசியல் காழ்ப்புணர்ச்சியாலும் சுயநலத்திற்காகவும் மக்களை தூண்டி போராட்டத்தில் ஈடுபட வைக்கின்றனர். அது எடுபடாது.

    சேலம் சென்னை 8 வழிச்சாலை அமைந்தால் ஒரு உயிர் கூட விபத்தில் பலியாகாது என்பதை, சேலம் மக்களுக்கு சத்தியம் செய்கிறேன். மேலும், மதுரை மாவட்டத்திற்கு பஸ்போர்ட் அமைப்பதற்கு முதலிடம் வகிப்பது திருப்பரங்குன்றம் தொகுதி. அதற்கான ஆயத்த பணிகள் நடைபெற்று வருகிறது.

    மேலும் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மதுரையில் பறக்கும் சாலை திட்டமும் வெகு விரைவில் வருவதற்கு அதற்கான பணிகளும் நடைபெற்று வருகிறது. இது போன்ற வியக்கத்தக்க திட்டங்கள் அனைத்தும் ஜெயலலிதா அறிவித்த திட்டங்கள், இதனால் தமிழக மக்களுக்கு மிகப்பெரிய கவுரவம் கிடைத்துள்ளது

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் மாவட்டச் செயலாளர் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ., எம்.எல்.ஏ.க்கள் சரவணன், நீதிபதி, மாணிக்கம், பெரிய புள்ளான், நிர்வாகிகள் வெற்றிவேல், வக்கீல் ரமேஷ், நிலையூர் முருகன், பன்னீர்செல்வம், முத்துக்குமார், முனியாண்டி, மாரிச்சாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். #Tamilnews
    எய்ம்ஸ் மருத்துவமனை மதுரை தோப்பூரில் அமைக்கப்படுவதற்கான ஆரம்ப கட்டப்பணிகள் விரைவில் தொடங்க உள்ளன. இதன் மூலம் 17 மாவட்ட மக்கள் பயனடைகிறார்கள். #AIIMS #AIIMSinMadurai
    மதுரை:

    நாட்டின் சிறந்த மருத்துவமனையாக கருதப்படும் எய்ம்ஸ் மருத்துவமனையை தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் அமைக்க மத்திய பட்ஜெட்டில் கடந்த 2015-ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது.

    தமிழகத்தில் செங்கல்பட்டு, புதுக்கோட்டை, தஞ்சாவூர், ஈரோடு, மதுரை ஆகிய 5 மாவட்டங்களில் இதற்கான இடங்கள் தேர்வு செய்யப்பட்டன. அந்த இடங்களை மத்திய அரசின் தேர்வுக்குழு பார்வையிட்டு ஆய்வு நடத்தியது.

    மதுரை தோப்பூர், தஞ்சை செங்கிப்பட்டி உள்ளிட்ட இடங்களில் அதற்கான வசதிகள் இருப்பதாக தேர்வுக்குழுவினர் கண்டறிந்தனர்.

    ஆனால் மதுரை தான் எய்ம்ஸ் அமைக்க தகுதியான இடம் என்று தேர்வு செய்யப்பட்டது. ஆனாலும் அறிவிக்கப்படாததால் எங்கு அமையும்? என்பதில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வந்தது.


    தஞ்சை செங்கிப்பட்டியில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பிரதமரை சந்தித்து மனு அளித்தார்.

    மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் உதயகுமார் உள்ளிட்ட எம்.எல்.ஏக்கள் மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையாவிட்டால் பதவியை ராஜினாமா செய்வோம் என்று பகீரங்கமாக அறிவித்தனர். இதனால் எய்ம்ஸ் அமைவது தொடர்ந்து இழுபறியாகவே இருந்து வந்தது.

    இந்த நிலையில் மதுரை ஐகோர்ட்டிலும் இது தொடர்பாக வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை கடந்த வாரம் வந்தபோது, மத்திய அரசு சார்பில் ஆஜரான வக்கீல் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவிடம் குறித்து 3 மாதத்தில் முடிவு செய்து அறிவிப்பதாக தெரிவித்தார்.

    இதனிடையே எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மதுரை தோப்பூரை தேர்வு செய்துள்ளதாக எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர் சஞ்சய்ராய், தமிழக அரசுக்கு தகவல் அனுப்பி உள்ளது தெரியவந்துள்ளது.

    இதன் மூலம் மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவது உறுதியாகி உள்ளது. இதனால் எய்ம்ஸ் இடம் தேர்வில் இருந்து வந்த சிக்கல் தீர்ந்துள்ளது.

    தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்காக மத்திய சுகாதாரத்துறை, தமிழக அரசிடம் 4 திட்டங்களை உடனடியாக நிறைவேற்றித் தரும்படியும் கேட்டுள்ளது.

    * எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் இடத்தில் 4 வழிச்சாலையை இணைக்க வேண்டும்.

    * 20 மெகாவாட் மின் வசதி செய்ய வேண்டும். குறைந்த உயரத்தில் செல்லும் மின் இணைப்பு கம்பங்களை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும்.

    * போதிய குடிநீர் வசதி ஏற்படுத்தித்தர வேண்டும்.

    * எண்ணை குழாய் பதித்துள்ள இந்தியன் ஆயில் நிறுவனத்திடம், எய்ம்ஸ் கட்டுமானம் குறித்த ஒப்பந்தம் மேற்கொள்ள வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

    மதுரை தோப்பூரில் சுமார் 300 ஏக்கர் பரப்பளவில் ரூ. 100 கோடி செலவில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் 750 படுக்கை வசதிகளுடன் கூடிய உயர்தர சிகிச்சை அரங்குகள், மேலும் 100 மருத்துவ படிப்புக்கான வசதி மற்றும் மருத்துவ ஆராய்ச்சி படிப்புகள், நர்ஸிங் படிப்புகள் ஆகியவை இங்கு இடம் பெறுகிறது.

    இதனால் மதுரை, தேனி, திண்டுக்கல், திருச்சி, தஞ்சை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட 17 மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 3 கோடி மக்கள் பயனடைகிறார்கள்.


    இது தொடர்பாக மதுரை மேலூரில் நேற்று நடைபெற்ற அ.தி.மு.க. பொதுக்கூட்டத்தில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசுகையில், தனது கைப்பேசியில் மத்திய மக்கள் நல்வாழ்வுத்துறை இயக்குநர் சஞ்சய்ராய் அனுப்பிய குறுந்தகவலை படித்துக் காட்டினார்.

    அதில், மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ளதாகவும், அதற்காக சில கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தித்தர தமிழக அரசிற்கு மத்திய அரசு கோரிக்கை அனுப்பி உள்ளதையும் உறுதிப்படுத்தினார்.

    இதையடுத்தே எய்ம்ஸ் மருத்துவமனை தொடர்பான இடம் தேர்வு உறுதி செய்யப்பட்டது.

    இது குறித்து அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மேலும் கூறுகையில், தென் மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வந்த எய்ம்ஸ் மருத்துவமனையை மதுரை தோப்பூரில் அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

    டெல்லியில் கிடைக்கக் கூடிய உயர் ரக சிகிச்சை மதுரையிலும் இனி கிடைக்கும். இந்த அறிவிப்பு தென் மாவட்ட மக்களின் வயிற்றில் பால் வார்த்துள்ளது என்றார். #AIIMS #AIIMSinMadurai #Thoppur #RBUdhayakumar
    தூத்துக்குடியில் அமைதி திரும்பி வருவதாக திருப்பதியில் சாமி தரிசனம் செய்ய வந்த அமைச்சர் உதயகுமார் கூறினார். #TNMinister #Udhayakumar #Tirupati
    திருமலை:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்ய அமைச்சர் உதயகுமார் தனது குடும்பத்தினருடன் மலைப்பாதை வழியாக திருமலைக்கு நடந்து வந்தார். தேவஸ்தான அதிகாரிகள் அவரை வரவேற்றனர்.

    அப்போது அவர் நிருபர்களிடம் கூறுகையில்:- தமிழகத்தில் அமைதி நிலவவும், வளர்ச்சி பெறவும் தமிழக மக்கள் நலமுடனும் இருக்க வேண்டுமென நடை பயணமாக ஏழுமலையானை தரிசிக்க வந்தேன்.

    தூத்துக்குடியில் அமைதி திரும்பி வருகிறது. பஸ்கள் இயக்கப்படுகின்றன. வியாபாரிகளும் பொது மக்களும் அரசுக்கு முழு ஒத்துழைப்பு அளித்து வருகின்றனர் என்றார்.

    இரவு பத்மாவதி விடுதியில் தங்கிய அமைச்சர் உதயகுமார் இன்று அதிகாலை 5 மணிக்கு தனது குடும்பத்திருடன் சென்று ஏழுமலையானை தரிசனம் செய்தார். தேவஸ்தான அதிகாரிகள் அவருக்கு லட்டு மற்றும் தீர்த்த பிரசாதங்களை வழங்கினர். #TNMinister #Udhayakumar #Tirupati
    மதுரையில் எய்ம்ஸ் ஆஸ்பத்திரி அமையாவிட்டால் பதவியை ராஜினாமா செய்வேன் என்று அமைச்சர் உதயகுமார் அறிவித்துள்ளார். #AIIMS #TNMinister #Udhayakumar
    திருமங்கலம்:

    மதுரை மாவட்டம், திருமங்கலத்தில் நடைபெற்ற கோவில் விழாவில் அமைச்சர் உதயகுமார் கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மதுரை தோப்பூரில் ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை அமையவில்லை என்றால் ராஜினாமா செய்வேன் என்று ஏற்கனவே கூறினேன். என் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. மதுரையில் எய்ம்ஸ் ஆஸ்பத்திரி அமையும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

    18 மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில் மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் ஆஸ்பத்திரி அமைவது தான் சிறப்பாக இருக்கும்.

    திருமங்கலம் மக்களின் நீண்டநாள் கோரிக்கையான வெளியூர் பஸ் நிலையம் ரூ.22 கோடி செலவில் அமைய உள்ளது. விரைவில் திருமங்கலம் நகர்பகுதிக்கு பாதாளசாக்கடை திட்டத்தையும் கொண்டு வருவேன்.

    மத்திய அரசு பஸ்போர்ட் அமைய 3 இடங்களை தேர்வு செய்துள்ளது. அவை சேலம், கோவை, மதுரை ஆகிய பகுதிகளில் அமைய இருக்கிறது.

    மதுரையில் பஸ்போர்ட் அமைய 65 ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது. அதற்கான இடத்தை தேர்வு செய்ய இருக்கிறோம். அனைத்து வசதிகள் நிறைந்த பஸ்போர்ட்டை திருமங்கலம் பகுதிக்கு கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்வேன்.

    ரூ. 3 கோடி மதிப்பீட்டில் நவீன டிஜிட்டல் எக்ஸ்ரே கருவியை திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு வழங்க மக்கள் நல்வாழ்வுதுறை அமைச்சர் பரிந்துரை செய்துள்ளார்.

    மேலும் பல்வேறு நலத்திட்டங்களை திருமங்கலத்திற்கு கொண்டு வந்து 234 தொகுதிகளில் திருமங்கலம் தொகுதியை தன்னிறைவு பெற்ற தொகுதியாக மாற்றுவேன்.

    மேற்கண்டவாறு அவர் கூறினார். #AIIMS #TNMinister #Udhayakumar
    ×