search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Minister Jayakumar"

    இறந்தவர்களை வைத்து அரசியல் செய்வது நாகரிகமாக மாறிவிட்டது’ என்று மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயகுமார் கூறியுள்ளார். #MinisterJayakumar #ADMK
    சென்னை :

    சென்னையில் மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயகுமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தி.மு.க. தலைவர் ஸ்டாலினுக்கு இப்போது என்ன அவசரம், அவருக்கு குறுக்கு வழியில் ஆட்சியை பிடிக்க வேண்டும், இல்லையென்றால் இந்த ஆட்சியே இல்லாமல் தேர்தலை நடத்த வேண்டும் என்ற நிறைவேறாத ஆசை உள்ளது.

    ஸ்டாலின் தேர்தலை விரும்பினாலும் அவருடைய கட்சி எம்.எல்.ஏ.க்கள் தேர்தலை விரும்பவில்லை.

    பா.ஜ.க. அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று குருமூர்த்தி ஒரு பத்திரிக்கையாளராக இருந்து அவருடைய ஆசையை கூறி உள்ளார். பா.ஜ.க. கூட்டணி வைக்க விரும்பினாலும், நாங்கள் கூட்டணி வைக்க விரும்ப வேண்டும். செயற்குழு, பொதுக்குழு கூடி உரிய நேரத்தில் முடிவு அறிவிக்கப்படும்.



    கோடநாடு விவகாரத்தில் அரசுக்கு எந்த பின்னடைவும் இல்லை. இறந்தவர்களை வைத்து அரசியல் செய்வது தற்போது நாகரிகமாக மாறிவிட்டது. புழுதி வாரி தூற்றிப் பார்த்தார்கள் முடியவில்லை என்பதால் இப்போது கோடநாடு விவகாரத்தை உருவாக்கி கிளப்பிவிட்டுள்ளனர். தேர்தல் நெருங்கும் சமயத்தில் இன்னும் பல்வேறு திகில் காட்சிகளை வைத்து எதிர்கட்சிகள் அரசியல் செய்வார்கள். தி.மு.க. மற்றும் தினகரனிடம் இருந்து இன்னும் அதிகம் வரும்.

    பாராளுமன்ற தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கவில்லை. எனவே அ.தி.மு.க. பொதுக்குழுவை கூட்ட கால அவகாசம் உள்ளது. தேர்தல் தேதி அறிவித்த பின் சூடான காட்சிகள் வரும். கோடநாடு விவகாரத்தில் நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது.

    முதல்-அமைச்சருக்கு, ஆட்சிக்கு கெட்ட பெயர் உருவாக்க வேண்டும் என்று சதி நடைப்பெற்று வருகிறது. அது அவர்களின் நிராசையாக தான் முடியும்.

    இவ்வாறு அவர் கூறினார். #MinisterJayakumar #ADMK
    அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் மறைமுக கூட்டணி வைத்துள்ளதாக அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார். #AMMK #TTVDhinakaran #DMK #ADMK
    கும்பகோணம்:

    அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கும்பகோணம் அடுத்த திம்மங்குடியில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது அவரிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும் அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

    கேள்வி:- கொடநாடு பிரச்சனை பற்றி..?

    பதில்:-கொடநாடு விவகாரத்தில் தமிழக அரசு அவசர அவசரமாக நடந்து கொண்டுள்ளது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது குற்றம் சாட்டிய குற்றவாளிகளை கைது செய்ய டெல்லிக்கு காவல்துறையை அனுப்பி உள்ளனர். மேலும் கோர்ட்டில், குற்றவாளிகளை காவலில் எடுக்க ஆஜர்படுத்தியுள்ளனர். இதில் ஏதோ பதட்டமும், அவசரத்துடன் தமிழக அரசு செயல்பட்டதாகவே தெரிகிறது.

    கொடநாடு எஸ்டேட் 5 பேர் கொலையில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் வழக்கு விசாரணை வரும்போது சந்தித்து இருக்கலாம். ஆனால் அவசர அவசரமாக டெல்லிக்கு காவல்துறையை அனுப்பி செயல்படுகிறார்கள் என்பதால் சந்தேகம் ஏற்படுகிறது. இதற்கு காலம் தான் பதில் சொல்லும். அதுவரை பொறுத்திருக்க வேண்டும்.

    கேள்வி:- பாராளுமன்ற தேர்தலில் கூட்டணி குறித்து..?

    பதில்:- பாராளுமன்ற தேர்தலில் ஒருசில கட்சிகள் கூட்டணி குறித்து எங்களோடு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். தொகுதி பங்கீடு குறித்து ஏதேனும் முரண்பாடு ஏற்பட்டு சென்றால் கூட, கடந்த 2014-ம் ஆண்டில் ஜெயலலிதா தனியாக நின்றது போல் 40 தொகுதிகளிலும் அ.ம.மு.க. தனியாக போட்டியிடும்.

    மக்கள் ஆதரவு என்றும் முழுமையாக எங்களுக்கு உள்ளது. 40 தொகுதிகளிலும் எங்களது எம்.பி.க்கள் வெற்றி பெறுவர். இதில் எந்த சந்தேகமும் இல்லை.


    கேள்வி:- அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை விட தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் வசதியுடன் உள்ளார்கள் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறி உள்ளாரே?

    பதில்:- 60-40 என்ற வி‌ஷயத்தில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களும் தி.மு.க. எம்.எல்.ஏ.க்களும் ஒற்றுமையுடன் செயல்படுகிறார்கள். தி.மு.க.வினர் கேட்கும் டெண்டர்கள் உடனே வழங்கப்படுகிறது.

    மு.க.ஸ்டாலினும், தினகரனும் கூட்டணி என்று அமைச்சர் ஜெயக்குமார் புலம்பினார். ஆனால் இப்போது அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் மறைமுக கூட்டணி வைத்துள்ளனர். இதை அமைச்சர் ஜெயக்குமார் ஒத்துக்கொள்கிறாரா?

    கஜா புயல் பாதித்த நேரத்தில் டெல்டா மாவட்டங்களில் அ.தி.மு.க. - தி.மு.க.வினரை கிராம மக்கள் உள்ளே விடவில்லை. ஆளுங்கட்சியும், எதிர் கட்சியும் கூட்டணியாக உள்ளனர் என்பதால் தான் அவர்களை கிராமங்களுக்குள் செல்ல பொதுமக்கள் அனுமதிக்கவில்லை.

    திருவாரூரில் இடைத்தேர்தல் நடந்திருந்தால் எங்கள் கட்சி வேட்பாளர் காமராஜ் தான் வெற்றி பெற்றிருப்பார்.

    இவ்வாறு அவர் கூறினார். #AMMK #TTVDhinakaran #DMK #ADMK
    கொடநாடு விவகாரத்தில் அரசின் நற்பெயரை கெடுக்க திட்டமிட்டு சதி செய்யப்பட்டுள்ளது என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். #MinisterJayakumar #jayalalithaa #EdappadiPalanisamy
    நீலகிரி மாவட்டம் கொடநாடு எஸ்டேட்டில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான பங்களா உள்ளது.

    இங்கு காவலாளியாக பணியாற்றிய ஓம்பகதூரை படுகொலை செய்துவிட்டு, பங்களாவுக்குள் புகுந்து ஜெயலலிதாவுக்கு சொந்தமான 5 கைக்கெடிகாரங்கள், பளிங்கு கற்களால் ஆன அழகுசாதன பொருட்கள் ஆகியவற்றை ஒரு கும்பல் கொள்ளையடித்து சென்றது என போலீஸ் 2017 ஏப்ரலில் தெரிவித்தது.

    இவ்விவகாரத்தில் குற்றவாளி என கூறப்பட்ட ஜெயலலிதாவின் முன்னாள் கார் டிரைவர் கனகராஜ், சேலம் அருகே ஆத்தூரில் நடந்த சாலை விபத்தில் பரிதாபமாக இறந்தார். மற்றொரு குற்றவாளியான கனகராஜின் கூட்டாளி சயன் தனது மனைவி வினுப்பிரியா, மகள் நீது ஆகியோருடன் பாலக்காடு மாவட்டம் கண்ணடி அருகே சென்றபோது விபத்தில் சிக்கினார். அதில் அவருடைய மனைவி, மகள் பரிதாபமாக இறந்தனர். சயன் மட்டும் உயிர் தப்பின்னார். கொடநாடு எஸ்டேட்டின் சிசிடிவி பராமரிப்பாளராக இருந்த தினேஷ் குமார் தற்கொலை செய்து கொண்டார்.

    இவ்விவகாரம் தொடர்பாக வழக்கு நடைபெற்று வரும் நிலையில், புது சர்ச்சையொன்று வெடித்துள்ளது. இவ்விவகாரம் தொடர்பாக தெஹல்கா முன்னாள் ஆசிரியர் மாத்யூ சாமுவேலிடம் சயன் அளித்துள்ள வீடியோ வாக்குமூலத்தில், இந்தச் சம்பவங்களின் பின்னணியில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இருப்பதாக கூறியுள்ளார். இவ்விவகாரம் தமிழக அரசியலில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

    குற்றவாளிகளின் அரசு ஒரு நிமிடம் கூட நீடிக்கக்கூடாது என எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். எடப்பாடி பழனிசாமி நாட்டு மக்களுக்கு உடனடியாக விளக்கம் அளிக்க வேண்டும் என்றும்,  இவ்விவகாரத்தை அரசியலுக்குப் பயன்படுத்திக் கொள்ள எண்ணாமல், மத்திய அரசு சிபிஐ மூலம் விசாரணை நடத்த வேண்டும் எனவும் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.



    இந்நிலையில் அமைச்சர் ஜெயக்குமார் பேசுகையில், கொடநாடு விவகாரத்தில் அரசின் நற்பெயரை கெடுக்க திட்டமிட்டு சதி செய்யப்பட்டுள்ளது. முதல்வருக்கு கெட்டபெயரை ஏற்படுத்த உள்நோக்கோடு சதி அரங்கேறியிருக்கிறது. கொடநாடு விவகாரம் பற்றி வெளியானதகவல்கள் அனைத்தும் கற்பனையே.  கொடநாடு விவகாரத்தில் நீதிமன்றத்தில் வழக்கு இருக்கும்போது, பிரச்னை எழுப்ப காரணம் என்ன?  காரணமானவர்கள் யார் என்பதை கண்டறிந்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். வதந்தியை பரப்பியவர்கள் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.  அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தும் முயற்சிக்கு யாரும் துணை போகக்கூடாது என கூறினார். #MinisterJayakumar #jayalalithaa #EdappadiPalanisamy
    ஜெயலலிதா மரணம் பற்றி விசாரிக்க திமுக ஒருபோதும் ஆட்சிக்கு வராது. இவர்கள் ஆட்சிக்கு வந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். #MinisterJayakumar #Jayalalithaadeath
    ஆலந்தூர்:

    மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் இன்று காலை டெல்லி புறப்பட்டு சென்றார். அப்போது விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    டெல்லியில் இன்று நடைபெறும் ஜி.எஸ்.டி. கூட்டத்தில் பங்கேற்கிறேன். சில பொருட்களுக்கு வரி குறைப்பு, வரிவிலக்கு அளிக்க வேண்டும் என்று வலியுறுத்துவேன். ஜி.எஸ்.டி. தொகையினை மத்திய அரசு நிலுவையாக வைத்துள்ளது. அதனை தரவேண்டும் என்று வலியுறுத்துவேன்.

    பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேறி உள்ளது. 69 சதவீத இட ஒதுக்கீடு இந்தியாவிலேயே தமிழகத்தில் மட்டும் தான் பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு உள்ளது. அதில் எந்த ஒரு குறைவும் வராத அளவுக்கு மாநில அரசு நடவடிக்கை மேற்கொள்ளும். பொதுவாக ஒரு மசோதாவை நிறைவேற்றும் முன் மாநில அரசிடம் கருத்து கேட்பது வழக்கம். ஆனால் 10 சதவீத இட ஒதுக்கீடு மசோதாவிற்கு கருத்து கேட்கவில்லை.

    ஸ்டெர்லைட் ஆலையை அரசாணை இல்லாமல் மூட முடியாது. பாமர மக்களை திசை திருப்ப எதிர்க்கட்சிகள், அரசு கொள்கை முடிவு எடுக்கவில்லை என்று கூறி வருகின்றன. தூத்துக்குடி மக்களின் எண்ணம், தமிழக மக்களின் முடிவு. அதனால் தான் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டு இருக்கிறது. அதில் இருந்து அரசு பின்வாங்காது.



    ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருக்கிறது என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் சொல்லி இருக்கிறார். அவர் ஆட்சிக்கு வந்தால் சம்பந்தப்பட்டவர்களை சிறைக்கு அனுப்புவோம் என்று கூறியிருக்கிறார். தி.மு.க. ஒருபோதும் ஆட்சிக்கு வராது. இவர்கள் ஆட்சிக்கு வந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. இவர்களை காட்டிலும் அதிக அக்கறை எங்களுக்கு உண்டு. யார் தவறு செய்தாலும் நாங்கள் நடவடிக்கை எடுப்போம்.

    ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருக்கிறது என்று அவர் சசிகலா, டி.டி.வி. தினகரன் குடும்பத்தை மனதில் வைத்துதான் சொல்லி இருப்பார்.

    தினகரனும், மு.க.ஸ்டாலினும் நண்பர்கள். தற்போது ஒருவருக்கொருவர் உண்மை பேசி வருகிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார். #MinisterJayakumar #Jayalalithaadeath

    தமிழ்நாட்டில் 69 சதவீத இடஒதுக்கீட்டில் இருந்து பின்வாங்க மாட்டோம் என்று சட்டசபையில் அமைச்சர் ஜெயக்குமார் பதில் அளித்தார். #MinisterJayakumar
    சென்னை:

    சட்டசபையில் இன்று அமைச்சர் டி.ஜெயக்குமார் 10 சதவீத இடஒதுக்கீடு குறுத்து பேசியதாவது:-

    பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு பற்றிய செய்தியை நாங்களும் படித்தோம். அதைப்பற்றிய சட்டம் எதுவும் நிறைவேற்றப்படவில்லை.

    1921-ம் ஆண்டு முதல் தமிழ்நாட்டில் சமுதாய இடஒதுக்கீடு வழங்குவதில் தமிழகம் முன்னிலையில் இருக்கிறது. 50 சதவீத இட ஒதுக்கீடு முன்பு இருந்தது. பின்னர் தமிழகத்தில் 69 சதவீத இடஒதுக்கீடாக வழங்கப்பட்டது.

    அம்மா முதல்வராக இருந்தபோது டெல்லி சென்று அன்றைய பிரதமர் நரசிம்மராவை சந்தித்து 69 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவதை உறுதி செய்தார். அப்போது நான் பிற்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்தேன்.

    சமூகநீதி காத்த புரட்சித் தலைவியின் நடவடிக்கையை அனைத்து கட்சிகளும் பாராட்டின. திராவிட கழக தலைவர் கி.வீரமணி, சமூகநீதி காத்த வீராங்கனை என்று பாராட்டினார்.

    புரட்சித்தலைவி அமல்படுத்திய 69 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு எந்த பாதிப்பும் வராமல் தமிழக அரசு பாதுகாக்கும். மத்திய அரசின் கொள்கை முடிவு பற்றி அரசு ரீதியான எந்த தகவலும் வரவில்லை. அதை அறிந்த பிறகு எங்கள் கருத்தை தெளிவுபடுத்துவோம்.

    இவ்வாறு அவர் பேசினார். #MinisterJayakumar
    10-ம் வகுப்பு வரை படித்துள்ள மீனவ மாணவர்களுக்கு கடலோர காவல் படையில் வேலை கிடைப்பதற்கான பயிற்சி அளிக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
    சென்னை:

    சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின்போது எம். ஆர்.கே.பன்னீர்செல்வம் (தி.மு.க.) கேட்ட கேள்விக்கு அமைச்சர் ஜெயக்குமார் அளித்த பதில் வருமாறு:-

    கடலூர் பகுதியில் 72 கிலோ மீட்டர் தூரத்திற்கு தூண்டில் வளைவு அமைக்க அரசு ரூ.116 கோடி ஒதுக்கியுள்ளது. இது தவிர 10-ம் வகுப்பு வரை படித்துள்ள மீனவ மாணவர்களுக்கு கடலோர காவல் படையில் வேலை கிடைப்பதற்கான பயிற்சி அளிக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். வேலைக்கான பயிற்சியும் 20 மீனவ குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது என்றார்.
    ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் அரசுக்கு இதயம் போன்றவர்கள் என்றும் யாரையும் தனிப்பட்ட முறையில் குற்றம்சாட்ட வேண்டும் என்பது தங்களின் எண்ணம் இல்லை என்றும் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். #IASOfficers #MinisterJayakumar
    ராயபுரம்:

    சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் நுண் கதிரியல் துறையில் ‘கேத் லேப்’ மற்றும் ஆஸ்பத்திரி வளாகத்தில் அம்மா குடிநீர் விற்பனை நிலையத்தை அமைச்சர்கள் விஜயபாஸ்கர், ஜெயக்குமார், எம்.ஆர்.விஜய பாஸ்கர் ஆகியோர் திறந்து வைத்தனர்.

    பின்னர் அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

    இயற்கைக்கு இடர்பாடுகள் அளிக்கக்கூடிய மற்றும் சுகாதாரமற்ற நிலையை கொண்ட 14 பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    கணவன்-மனைவி போல் மக்களுடன் ஒன்றி இருந்த பிளாஸ்டிக் பொருட்களை விவாகரத்து செய்ய வேண்டும் என்கிற அளவுக்கு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

    ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் அரசுக்கு இதயம் போன்றவர்கள். அவர்களை அரசு மதிக்கிறது. எனவே யாரையும் தனிப்பட்ட முறையில் குற்றம்சாட்ட வேண்டும் என்பது எங்கள் எண்ணம் இல்லை.


    சட்ட அமைச்சர் குற்றம் சாட்டி உள்ளார். அதுகுறித்து உண்மை நிலை மக்களுக்கு தெரிய வேண்டும் என்று தான் விசாரணை வேண்டும் என்று தெரிவித்தோம். அமைச்சரவை, முதல்-அமைச்சரின் கட்டுக்குள்தான் உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அமைச்சர் விஜயபாஸ்கர் கூறும்போது, “நுண் கதிரியல் துறையில் ரத்தநாளங்களில் ஏற்படும் வீக்கம், ரத்தகசிவு, அடைப்பு, ரத்தநாள வெடிப்பு உள்ளிட்ட நோய்களுக்கு நுண்துளைகள் மூலம் அறுவை சிகிச்சை இல்லாமல் அதிநவீன சிகிச்சை வழங்க ரூ.6.5கோடி மதிப்பில் பிப்லேன் டிஜிட்டல் சப்ஸ்ட்ராக்சன் ஆஞ்சியோகிராம் கேத்லேப் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

    இந்த கருவி மூலம் மூளை, குடல் மற்றும் உள்ளுறுப்புகளில் ஏற்படும் ரத்த கசிவு, மற்றும் கல்லீரல் புற்றுநோய் உட்பட புற்றுநோய்களை தெளிவாக கண்டறிந்து, அறுவை சிகிச்சை இல்லாமல் சிகிச்சை வழங்கப்படும்.

    அதுமட்டுமின்றி குறைவான மருத்துவ செலவில் மக்களுக்கு சிகிச்சைகள் அளிக்க வேண்டும் என இத்திட்டம் துவக்கப்பட்டுள்ளது” என்றார்.

    நிகழ்ச்சியில் ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரி டீன் பொன்னம்பல நமச்சிவாயம், மருத்துவ நிலைய அதிகாரி ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். #IASOfficers #MinisterJayakumar
    கஜா புயல் பாதிப்பு நிவாரண பணிகளுக்கு மேலும் ரூ.13 ஆயிரம் கோடி தேவை என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். #MinisterJayakumar #GajaStorm
    திருவொற்றியூர்:

    சென்னையில் அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

    திருவாரூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அரசின் திட்டங்களை எடுத்துரைத்து மகத்தான வெற்றி பெறுவோம். சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகத்தின் கருத்துகளை உதாசீனப்படுத்த முடியாது. அவர் கூறியிருப்பது, ஜெயலலிதாவின் மரணத்தில் இருக்கும் சந்தேகத்தை தெளிவாக எடுத்துரைக்கிறது. ஜெயலலிதாவின் மரணத்தில் தொடர்புடையவர்களை கவனிக்க வேண்டிய விதத்தில் கவனித்தால்தான் உண்மை வெளிவரும்.

    ராஜீவ்காந்தி கொலைவழக்கில் சி.பி.ஐ. விசாரித்தபோது ஜெயின் கமிஷனும் விசாரித்தது. அதேபோல தமிழக அரசும் விசாரணை குழு அமைத்து சம்பந்தப்பட்டவர்களை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கவேண்டும். அப்போது தான் உண்மை வெளிவரும். இவர்களை அழைத்து வந்து வாக்குமூலங்களை மட்டும் வாங்குவதால் எந்த பிரயோசனமும் இல்லை. உண்மையும் வெளி வராது. அதனால் அவர்களுக்கு நல்ல ‘டிரீட்மெண்ட்’ கொடுக்கவேண்டும்.

    யாரெல்லாம் இதில் தொடர்புடையவர்கள், சம்பந்தப்பட்டவர்களோ வாக்குமூலம் அளித்தவர்கள் என அனைவரையும் போலீஸ் டிரீட்மெண்டில் விசாரிக்கப்படவேண்டும் மரணத்தில் எழும் சந்தேகத்தில் தமிழக அரசு தேவையென்றால் விசாரணை கமிஷன் அமைக்கும். தவறு செய்யவில்லை என்றால் நேரடியாக வந்து வாக்குமூலம் கொடுத்துவிட்டு செல்லட்டும். சட்டத்துறை அமைச்சர் கூறிய கருத்துக்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்கும்.



    ஜெயலலிதாவின் புகழுக்கு களங்கம் ஏற்படுவது என்று சொன்னால் ஒரே குடும்பம் சசிகலாவும் தினகரனும்தான். அவர்களால் மட்டுமே ஜெயலலிதாவிற்கு இழுக்கு ஏற்படுகிறது.

    கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மத்திய அரசிடம் ரூ.15,600 கோடி கேட்டதற்கு 1,146 கோடி கொடுத்துள்ளனர். இது யானை பசிக்கு சோளப்பொரி போல. கொஞ்சம் பெரியதாக தெரிகிறதே, தவிர யானை பசியை போக்குவதாக இல்லை. நிரந்தர தேவைக்கு ரூ.13 ஆயிரம் கோடி தேவைப்படுகிறது.

    தற்போது ஒதுக்கிய தொகையை உடனடி தேவைக்கு வேண்டுமானால் பயன்படுத்தலாம். தவிர நிரந்தர தேவைக்கு ரூ.13 ஆயிரம் கோடியை மத்திய அரசு கொடுப்பதற்கு அழுத்தம் தரவேண்டும். கண்டிப்பாக கொடுப்பார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.  #MinisterJayakumar #GajaStorm
    அமைச்சர் மீது புகார் கூறிய தாய் மற்றும் மகள் மீது சென்னை ஐகோர்ட்டு வக்கீல் வழக்கு தொடர்ந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    ராயபுரம்:

    பிராட்வே, பிரகாசம் சாலையைச் சேர்ந்தவர் சாந்தி. இவரது மகள் சிந்து.

    இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு அமைச்சர் ஜெயக்குமார் மீது சர்ச்சைக்குரிய புகார் தெரிவித்து இருந்தார். இது தொடர்பான வாட்ஸ்-அப் உரையாடலும் வெளியாகி இருந்தது.

    இந்த நிலையில் சென்னை ஐகோர்ட்டு வக்கீல் கண்ணன் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் சிந்து, அவரது தாய் சாந்தி ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    அவர் கொடுத்துள்ள புகாரில், “ஒரு வழக்கு சம்பந்தமாக சாந்தியும், சிந்துவும் என்னை சந்தித்தனர். இதற்கான செலவு பணத்தை தரவில்லை. இதனை கேட்ட போது எனக்கு கொலை மிரட்டல் விடுக்கின்றனர்” என்று தெரிவித்து உள்ளார்.

    இது தொடர்பாக முத்தியால்பேட்டை போலீசார் சாந்தி, சிந்து மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். அவர்கள் மீது கொலை மிரட்டல், மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இந்த புகார் மனு கடந்த செப்டம்பர் மாதம் கொடுக்கப்பட்டதாக தெரிகிறது.
    ஓ.பன்னீர்செல்வம் தம்பி கட்சியில் மீண்டும் சேர்த்துக்கொள்ளப்பட்டது ஏன்? என அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்து உள்ளார். #ADMK #OPSbrother #MinisterJayakumar
    சென்னை:

    சுனாமி நினைவு தினத்தை முன்னிட்டு சுனாமியில் உயிர் இழந்தவர்களுக்கு சென்னை காசிமேடு கடற்கரையில் அமைச்சர் டி.ஜெயக்குமார் அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    விருதுநகர் மாவட்டத்தில் கர்ப்பிணிக்கு எச்.ஐ.வி. கிருமி கலந்த ரத்தம் ஏற்றப்பட்டதற்கு காரணமான ரத்த வங்கி ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். கலெக்டர் வருத்தம் தெரிவித்து இருக்கிறார். மருத்துவ தொழில்நுட்பம் மூலம் எச்.ஐ.வி. கிருமியின் தாக்கம் அந்த பெண்ணின் உடலில் முழுமையான அளவு பாதிக்காத வகையில் என்ன நடவடிக்கை எடுக்க முடியுமோ? அந்த அளவுக்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது போன்ற சிக்கல்கள் மீண்டும் வராமல் இருக்க ரத்த வங்கிகளில் உள்ள அனைத்து ரத்தமும் மறுபரிசோதனை செய்யப்பட்டு, எச்.ஐ.வி. கிருமி கலக்காத ரத்தம் என்று குறிப்பிடுவதற்கு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

    ஒருவரை கட்சியில் இருந்தும் நீக்கம் செய்த மறுநாளே அவர் வருத்தம் தெரிவித்து கடிதம் வழங்கி, அது கட்சிக்கு திருப்தி அளித்தால் அவர் மீண்டும் சேர்த்துக் கொள்ளப்படுவார். இதில் காலக்கெடு எதுவும் கிடையாது. மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா காலத்தில் காலையில் நீக்கம் செய்யப்பட்டவர்கள் மாலையில் கட்சியில் சேர்க்கப்பட்டதாக அறிவிப்புகள் வந்திருக்கிறது. இதேபோல் எம்.ஜி.ஆர். காலத்திலும் நடைபெற்று இருக்கிறது.

    ஒருவர் தான் செய்த செயலுக்கு வருத்தம் தெரிவிக்கும் போது, அண்ணா சொன்னது போல் “மன்னிப்போம், மறப்போம்” என்ற அடிப்படையில் எதுவும் மன்னிக்கக்கூடியதும், மறக்கக்கூடியதும் தான். எனவே, ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி, ஓ.ராஜா வருத்தம் தெரிவித்ததை அடுத்து கட்சியில் சேர்த்துக் கொள்ளப்பட்டார். அவர் எதற்காக நீக்கம் செய்யப்பட்டார் என்பது உட்கட்சி விவகாரம். எல்லா கட்சியினரும் பின்பற்றுவதை தான் நாங்களும் பின்பற்றினோம். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா பின்பற்றியதை தான் நாங்கள் பின்பற்றி வருகிறோம்.



    உயர் மின்கோபுரம் அமைக்கும் விஷயத்தில் விவசாயிகளின் வாழ்வாதாரமும் முக்கியம். எல்லோருக்கும் மின்சாரம் வழங்குவதும் முக்கியம். எனவே பேச்சுவார்த்தை மூலம் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்காமல் நல்ல முடிவை அரசு எடுக்கும்.

    அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் இருந்து சசிகலா குடும்பத்தினரை தவிர யார் வந்தாலும் அ.தி.மு.க.வில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். டி.டி.வி.தினகரன் 10 ஆண்டுகளாக ஜெயலலிதாவால் விரட்டப்பட்டவர். ஜெயலலிதாவின் வீட்டுப்பக்கமும், நாடாளுமன்றம் பக்கமும் போகக்கூடாது என்று கூறி விரட்டப்பட்டார்.

    எதற்காக டி.டி.வி.தினகரன் ஜெயலலிதாவால் விரட்டப்பட்டார் என்பதை துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உரிய நேரம் வரும்போது சொல்கிறேன் என்று கூறியிருக்கிறார். டி.டி.வி.தினகரன் அன்றைய காலத்தில் ஜெயலலிதாவையே ஆட்சியில் இருந்து கவிழ்த்துவிட்டு ஆட்சிக்கு வரலாம் என்று நினைத்து ராஜதுரோகம் கூட செய்து இருக்கலாம். இது போன்ற அரசியல் துரோகிகளுக்கு என்றைக்குமே மன்னிப்பு கிடையாது.

    இவ்வாறு அவர் கூறினார்.  #ADMK #OPSbrother #MinisterJayakumar
    அ.தி.மு.க.வில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் சகோதரர் நீக்கம் வரவேற்கத்தக்கது என்று அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறினார். #MinisterJayakumar
    சென்னை:

    சென்னை அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் மீன்வளத் துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது கேட்கப்பட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

    கேள்வி:- துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தம்பி ஓ.ராஜா அ.தி.மு.க.வில் இருந்து திடீரென்று நீக்கப்பட்டது ஏன்?

    பதில்:- ‘அண்ணன் என்னடா? தம்பி என்னடா? இந்த அவசரமான உலகத்திலே’ என்கிற மாதிரி, கட்டுக்கோப்பான இயக்கத்தில் கட்சி விரோத நடவடிக்கையை யார் செய்தாலும் சரி, அவர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட வேண்டியவர்கள் தான்.

    இதில் அண்ணன், தம்பி உறவுக்கு இடம் இல்லை. எனவே அண்ணனாக இருந்தாலும், தம்பியாக இருந்ததாலும் தவறு என்றால் தவறு தான். எனவே அந்த அடிப்படையில் யார் தவறு செய்தாலும் சரி, நிச்சயம் நடவடிக்கை தொடரும் என்பதை இதன் மூலம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் உணர்த்தி இருக்கிறார்கள்.

    கேள்வி:- ஓ.ராஜா நீக்கத்துக்கு என்ன காரணம்?

    பதில்:- கட்சி விரோத நடவடிக்கைகள் குறித்து வெளியே சொல்ல முடியாது. தம்பி என்றும் பார்க்காமல் நடவடிக்கை எடுத்திருப்பது வரவேற்கத்தக்கது ஆகும். நல்ல விஷயம்.

    கேள்வி:- மத்திய அரசிடம் இருந்து தமிழகத்துக்கு கஜா புயல் நிவாரணத் தொகை எப்போது கிடைக்கும்?

    பதில்:- இந்த விஷயத்தில் மத்திய அரசின் செயல்பாடு மிகவும் மோசமாக உள்ளது. கண்டனத்துக்குரியது. முதல்-அமைச்சரே, பிரதமரை நேரில் சந்தித்து ரூ.15 ஆயிரம் கோடி கேட்டு இருக்கிறார். இதில் முதற்கட்டமாக ரூ.5 ஆயிரம் கோடி கொடுத்து இருக்கலாம். ஆனால் ரூ.352 கோடி கொடுத்திருக்கிறார்கள். கேட்பது மலை அளவு கொடுப்பது எலுமிச்சை பழ அளவு போல் உள்ளது. தமிழ்நாட்டின் நிதியை வாங்கி தருவதற்கு அனைத்து நடவடிக்கைகளையும் ஜனநாயக ரீதியில் கையாளுவோம்.

    இவ்வாறு அவர் கூறினார். #MinisterJayakumar
    கருணாநிதி சிலை திறப்பு பொதுக்கூட்டத்திற்கான மின்சாரம் முழுவதும் ஜெனரேட்டர் மூலமே எடுக்கப்பட்டது என்று அமைச்சர் ஜெயக்குமாருக்கு தி.மு.க. பதில் அளித்துள்ளது. #DMK #TNMinister #Jayakumar
    சென்னை:

    கருணாநிதி சிலை திறப்பு விழா, பொதுக்கூட்ட கட்- அவுட்டுக்கு கொக்கி போட்டு மின்சாரம் திருடப்பட்டதாக அமைச்சர் ஜெயக்குமார் நேற்று குற்றம் சாட்டி இருந்தார்.

    இதற்கான ஆதாரமாக வாட்ஸ்-அப் வீடியோ ஒன்றையும் அவர் வெளியிட்டார்.

    இதற்கு தி.மு.க. மறுப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் ஜெ.அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    கருணாநிதி சிலை திறப்பு பொதுக்கூட்டத்திற்கான மின்சாரம் முழுவதும் ஜெனரேட்டர் மூலமே எடுக்கப்பட்டது. இது அனைவருக்கும் தெரியும்.


    சிலை திறப்பு விழா மாபெரும் வெற்றி பெற்றதால் பொதுமக்களின் ஆதரவு தி.மு.க.வுக்கு பன்மடங்காக அதிகரித்து வருவதால் இதை பொறுத்துக் கொள்ள முடியாத அமைச்சர் ஜெயக்குமார் விழாவுக்கு களங்கம் ஏற்படுத்த பத்திரிகையாளரிடம் மின் திருட்டு என வாட்ஸ்அப்பில் வந்த தகவலை செய்தியாக காண்பித்து குற்றம் சுமத்துகிறார்.

    வாட்ஸ்அப்பில் வந்ததை எல்லாம் ஆதாரமாக எடுத்துக் கொண்டு பேசினால் அமைச்சர் மீதும் எவ்வளவோ குற்றம் சாட்டலாம். ஆனால் தி.மு.க.வினர் என்றைக்கும் தரம் தாழ்ந்த செயல்களில் ஈடுபட மாட்டார்கள்.

    அமைச்சரின் பேச்சில் என்ன தெரியவருகிறது என்றால் கருணாநிதி சிலை திறப்பு விழாவை பார்த்து ஆளுங்கட்சி ஆட்டம் கண்டு அஞ்சி நடுங்கி போய் இருப்பது தெரிகிறது.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார். #DMK #TNMinister #Jayakumar
    ×