search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kumbabhishekam"

    • சோழவந்தான் சித்தி விநாயகர் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது.
    • சோழவந்தான் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடு செய்திருந்தனர்.

    சோழவந்தான்

    சோழவந்தான் வாடிப்பட்டி ரோடு நகரி சாலை பிரிவில் உள்ள ராகு கேது சமேத சித்தி விநாயகர் வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேம் நடைபெற்றது. முரளி கிருஷ்ணா அய்யங்கார் தலைமையில் 2 நாள் யாக பூஜை நடைபெற்றது. காலை 9 மணி அளவில் குடங்களை எடுத்து வந்து மூலவர் கோபுரத்தின் கலசத்திற்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின் விநாயகர் உள்பட பரிகார தெய்வங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது

    இவ்விழாவில் சோழ வந்தான் ஜெனகை மாரி யம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல், லட்சுமி, அருணாச்சலம், அருணா, அருணாசலம், குருசாமி, சொக்கலிங்கம், சுற்றுலாத் துறை அலுவலர் பால முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். கும்பாபிஷேக ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்திருந்தனர் சோழவந்தான் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடு செய்திருந்தனர்.

    • கோபுர கலசத்தில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது
    • இந்தியா உலக கோப்பையை வெல்ல சிறப்பு பூஜை

    மேட்டுப்பாளையம்,

    அன்னூர் அருகே செம்மாணி செட்டிபாளையம் கிராமத்தில் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ ராயர் பெருமாள் கோவில் உள்ளது.

    இந்த கோவிலை பராமரித்து பணிகள் மேற்கொண்டு கும்பாபிஷேகம் நடத்த கோவில் நிர்வாகம் சார்பில் முடிவு செய்யப்பட்டது. தற்போது கோவில் புனரமைப்பு பணிகள் முடிந்து கும்பாபிஷேக விழா தொடங்கியது.

    கடந்த 18-ந் தேதி மாலை 3 மணிக்கு பெருமாள் ஆஞ்சநேயர் நூதன விக்ரகம், பட்டினப்பிரவேசம், தீர்த்தக்குடம், முளைப்பாரி ஊர்வலம் நடந்தது. மாலை 4 மணி முதல் 9 மணி வரை ஆசார்ய வர்ணம், அங்குரா ர்ப்பனம், மருத்சங்கரணம் ஹோமம், திவ்யபிரபந்த சேவாகாலம் சாற்றுமுறையும் நடந்தது. தொடர்ந்து இன்று காலை யாக சாலைகள் சிறப்பு கேள்விகள் அமைத்து பூஜைகள் நடத்தப்பட்டன.

    அதன்பின் காலை 8.30 மணி முதல் 9:30 மணிக்குள் கோவில் கோபுர கலசத்தில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. இதில் காட்டம்பட்டி, கணேஷ்புரம், குன்னத்தூர், செட்டிபாளையம், அன்னூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதியில் இருந்து சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். இதில் பங்கேற்ற பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

    கும்பாபிஷேகம் முடிந்து இந்தியா உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற வேண்டி கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. கும்பாபிஷேகத்தை காரமடை ஸ்ரீ வேதவ்யாச சுதர்சன பட்டர் சுவாமிகள் நடத்தி வைத்தனர்.

    • 13-ம் நூற்றாண்டில் கட்டபட்ட சிவாலயத்திற்கு கும்பாபிஷேகம் நடத்த வேண்டும்.
    • அரசுக்கு அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே ராமநாதபுரம் சமஸ்தானத்திற்கு பாத்தியமான முடுக்கன்குளம் சிவகாமி அம்மன் சமேத அம்பல வாண சுவாமி கோவில் 13-ம் நூற்றாண்டில் அப்போதைய மன்னர் மாறவர்மன் சுந்தரபாண்டியன் என்பவரால் கட்டப்பட்டது என்பது வரலாறு. இந்த கோவில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.

    இந்த கோவிலில் முற்கால பாண்டியர்கள் காலத்தில் கட்டப்பட்டதை உறுதி செய்யும் வகையில் கோவி லில் முன் மீன் சின்னங்கள் காணப்படுகின்றன. மேலும் ராவணன் மனைவி மண்டோதரி தன்னுடைய திருமணத் தடை நீங்குவ தற்காக தாமரைகள் நிறைந்த குளத்தினைக் கொண்ட, இந்த சிவனை தரிசித்ததால் அவருடைய திருமணம் சிறப்பாக நடைபெற்ற இடம் என்ற பெருமையை உடைய கோவிலாகும்.

    இவ்வாறாக மிகவும் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற தலமாக விளங்கி வரும் அம்பலவாணர் கோவிலில் கும்பாபிஷேகம் விழா நடத்தி பல வருடமாகி விட்டது.தற்போது இந்து சமய அறநிலைத்துறை கட்டுப் பாட்டில் உள்ள முடுக்கன் குளம் பழமை வாய்ந்த அம்பலவாணர் கோவிலுக்கு மகா கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    • 24-ந் தேதி நடக்கிறது
    • 18-ந் தேதி காலை விக்னேஸ்வர பூஜை, பூர்ணாஹூதி, 19-ந் தேதி புண்யாஹாவாசனம், பஞ்சகவ்யம், நவக்கிரக ஹோமம், அஷ்டபந்தன மருந்து சாற்றுதல் நடக்கிறது.

    புதுச்சேரி:

    புதுவை சின்ன சுப்புராயப்பிள்ளை வீதியில் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. பிரசித்தி பெற்ற இக்கோவிலில் திருப்பணிகள் முடிவடைந்து கும்பாபிஷேக விழா வருகிற 24-ந் தேதி நடக்கிறது.

    இதையொட்டி நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) மாலை 6 மணிக்கு விக்னேஸ்வர பூஜையுடன் விழா தொடங்குகிறது. 18-ந் தேதி காலை விக்னேஸ்வர பூஜை, பூர்ணாஹூதி, 19-ந் தேதி புண்யாஹாவாசனம், பஞ்சகவ்யம், நவக்கிரக ஹோமம், அஷ்டபந்தன மருந்து சாற்றுதல் நடக்கிறது.

    20-ந் தேதி மூர்த்தி ஹோமம், திசா ஹோமம், மாலையில் வாஸ்துசாந்தி, அங்குரார்ப்பணம் நடக்கி றது. 21-ந் தேதி மாலை முதல்கால யாக பூஜை, 22-ந் தேதி காலை 2-ம் கால யாகபூஜை, மாலையில் 3-ம் கால யாக பூஜை, 23-ந் தேதி 4-ம் கால யாக பூஜை மாலை 5-ம்கால யாக பூஜை நடக்கிறது.

    24-ந் தேதி அதிகாலை 5 மணிக்கு 6-ம் கால யாக பூஜை, பரிவார மூர்த்திக ளுக்கு பூர்ணாஹூதி, கடம்புறப்பாடு நடக்கிறுது. 8.30 மணிக்கு அம்மன் ராஜகோபுரம், விமானங்கள், பரிவார மூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. தொடர்ந்து அம்மனுக்கு மகா அபி ஷேகம், தீபாராதனை நடக்கிறது.

    விழாவில் முதல்-அமைச்சர் ரங்கசாமி, திருப்பணிக்குழு கவுரவ தலைவர் அமைச்சர் லட்சுமி நாராயணன், சபாநாயகர் ஏம்பலம் செல்வம் மற்றும் அமைச்சர்கள்,

    எம்.எல்.ஏ.க்கள் பங்கேற் கின்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஆர்.எஸ்.எஸ்., தேசிய செயற்குழு கூட்டம், குஜராத் மாநிலம், புஜ் நகரில் நவம்பர் 5-ந் தேதி முதல் 7-ந் தேதி வரை நடந்தது.
    • அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம், ஜனவரி 22-ந் தேதி நடக்க உள்ளது.

    சென்னை:

    ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் மாநில தலைவர் குமாரசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    ஆர்.எஸ்.எஸ்., தேசிய செயற்குழு கூட்டம், குஜராத் மாநிலம், புஜ் நகரில் நவம்பர் 5-ந் தேதி முதல் 7-ந் தேதி வரை நடந்தது.

    ஆர்.எஸ்.எஸ்., நுாற்றாண்டையொட்டி, ஜாதி வேறுபாடுகளை களைந்து, சமுதாய நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது, குடும்ப அமைப்பை பாதுகாப்பது, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, சுதேசி வாழ்க்கை முறை, சமூக ஒழுக்கத்தை ஏற்படுத்துவது ஆகிய ஐந்து முக்கிய விஷயங்கள் குறித்து முடிவெடுக்கப்பட்டது.

    அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம், ஜனவரி 22-ந் தேதி நடக்க உள்ளது. அதை முன்னிட்டு ஜனவரி 1 முதல் 15-ந் தேதி வரை, வீடு, வீடாகச் சென்று ஸ்ரீராம ஜென்மபூமி படம், அயோத்தியில் பூஜிக்கப்பட்ட அட்சதையுடன் அழைப்பிதழ் கொடுக்க முடிவு செய்துள்ளோம்.

    உலகம் தழுவிய அமைப்பாக, ஆர்.எஸ்.எஸ்., வளர்ந்துள்ளது. தமிழகத்தில் பயிற்சி பெற்ற ஊழியர்கள், 20 ஆயிரத்திற்கும் அதிகமாக உள்ளனர்.

    ஆர்.எஸ்.எஸ்., அணி வகுப்புக்கு, கருணாநிதி முதல்-அமைச்சராக இருந்தபோது அனுமதி அளித்தார். ஐகோர்ட்டு, சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின் படி, கடந்த ஆண்டு ஆர்.எஸ்.எஸ்., அணிவகுப்பு நடந்தது.

    இந்த ஆண்டு காவல் துறை அனுமதி மறுத்ததால் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் படி, வருகிற 19-ந் தேதி அணிவகுப்பு நடக்கவுள்ளது. இது தொடர்பாக, டி.ஜி.பி.,யை சந்தித்து பேசியுள்ளோம்.

    ஆகம பயிற்சி பெற்றவர்கள் யாராக இருந்தாலும், எந்த ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்பதுதான் ஆர்.எஸ்.எஸ்.,சின் நிலைப்பாடு. ஆனால், அவர்கள் முறையான ஆகம பயிற்சி பெற்றவர்களாக இருக்க வேண்டும்.

    அதுபோல, கலப்பு திருமணத்தையும் ஆதரிக்கிறோம். ஆனால், திருமணத்தை ஒரு கருவியாகப் பயன்படுத்தி, மதமாற்றம் போன்ற செயல்களில் ஈடுபடுவதை எதிர்க்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது, ஆர்.எஸ்.எஸ்., மாநிலச் செயலாளர் ஜெகதீசன், மாநில செய்தித் தொடர்பாளர் நரசிம்மன் ஆகியோர் உடனிருந்தனர்.

    • புனித நீர் கொண்டு பூஜைகள் நடைபெற்று வந்தது.
    • விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை நகரில் பழமைவாய்ந்த ஸ்ரீ சித்தி விநாயகர் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயில் இந்து சமய அறநிலை துறைக்கு சொந்தமானது. தாலுகா அலுவலகம், நகராட்சி அலுவலகம் ஆகியவற்றின் நடு மையத்தில் அமைந்துள்ள இந்த சித்தி விநாயகர் என்று அழைக்கப்படும். இந்தகோயிலின் கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு யாக சாலை அமைக்கப்பட்டு அதில் புனித நீர் கொண்டு பூஜைகள் நடைபெற்று வந்தது.

    தொடர்ந்து நேற்று நான்காம் கால யாகசாலை பூஜை முடிவுற்று மஹா பூர்ணாஹூதி நடைபெற்று, யாகசாலை பூஜைகள் நிறைவடைந்து மங்கல வாத்தியங்கள் முழங்க கடம் புறப்பாடு நடைபெற்றது. சிவாச்சாரியார் கடங்க ங்களை சுமந்து வந்து மல்லாரி இசைக்கப்பட்டு வேத மந்திரங்கள் முழங்க ஸ்ரீசித்தி விநாயகருக்கு கோபுரகலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைப்பெற்றது. பின்னர் கருவரையில் உள்ள வினாயகர் சிலைக்கு புனித நீரை ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    ஸ்ரீ சித்தி விநாயகர் மற்றும் பலிபீடம் ஆகிய இடங்களில் கலச நீர் கொண்டு அபிஷேகம் மற்றும் மகா தீபாரதனை காட்டப்பட்டது. விழாவில் மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதி, தருமபுரம் ஆதீனம் 27-வது குருமா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரி யார் சுவாமிகள். இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர் ஆரோக்கியமதன், விழா ஒருங்கிணைப்பாளர் விஜயகுமார், நகர மன்ற தலைவர் குண்டாமணி ஆகியோர் பங்கேற்று தரிசனம் செய்தனர். விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

    • ஆஞ்சநேயர் கோவில் சுமார் 1500 ஆண்டுகள் பழமையான கோவில்.
    • சாந்த சொரூபியாக ஸ்ரீ ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்.

    நாமக்கல்:

    நாமக்கல் நகரின் மையப்பகுதியில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் அமைந்துள்ளது. இங்கு ஒரே கல்லால் ஆன 18 அடி உயரத்தில் நின்ற கோலத்தில் ஆஞ்சநேயர் அருள்பாலித்து வருகிறார். உலக பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவிலுக்கு வெளிமாநிலம், மாவட்டங்களில் இருந்து தினமும் ஏராளமான பக்தர்கள் தரிசனத்துக்கு வந்து செல்கின்றனர். ஆண்டு முழுவதும் கட்டளைதாரர்கள் மூலம் வடமாலை அபிஷேகம் நடைபெற்று வருகிறது.

    இக்கோவிலில் கடைசியாக 2009-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது. இதற்கிடையே நடப்பாண்டில் கும்பாபிஷேக விழா நடத்த முடிவு செய்யப்பட்டு, ரூ.64 லட்சத்து 60 ஆயிரம் செலவில் பணிகள் முடிக்கப்பட்டன.

    மகா கும்பாபிஷேகம்

    இதையடுத்து 14 ஆண்டுகளுக்கு பிறகு இன்று (1-ந்தேதி) ஆஞ்சநேயர் கோவில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதை யொட்டி கோவில் முன்பு வாழை, செங்கரும்பு, காய்,கனிகளால் தோரணங்கள் கட்டி அலங்காரம் செய்யப்பட்டது. மேலும் கோவில் வளாகத்தில் அலங்கார பந்தலுடன் யாகசாலை அமைக்கப்பட்டு, நேற்று முன்தினம் யாகசாலை பூஜை தொடங்கி நடைபெற்று வந்தது.

    இதையடுத்து இன்று (புதன்கிழமை) காலை 7.15 மணி அளவில் வருண தீர்த்தம், புனித படுத்துதல் அனுதின ஹோமம், ஆழ்வார்கள் அருளிய தமிழ் திவ்ய பிரபந்த வேள்வி, தாரா ஹோமம், வேள்வியை நிறைவு செய்தல், தமிழ் திவ்ய பிரபந்த சமர்ப்பணம், திருவாராதனம், சக்தி சங்கரஹணம், காலை 9.10 மணிக்கு யாத்ராதானம், கும்பப்ரயாணம் நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    காலை 9.30 மணி முதல் 10.30 மணிக்குள் திருக்குட நன்னீராட்டு எனும் மகா கும்பாபிஷேக பெருவிழா, மகா சம்ப்ரோஷணம் கோலாகலமாக நடை பெற்றது. ஆஞ்சநேயர் சாமி மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்க ளுக்கு அருள்பாலித்தார்.

    அதனை தொடர்ந்து 10.45 மணிக்கு தசதரிசனம், சிறப்பு திருவாராதனம், தமிழ் திவ்ய பிரபந்த சமர்ப்பணம், பிரம்ம ேகாஷம், அருட்பிரசாதம், தீர்த்த பிரசாதம் வழங்குதல், ஆச்சார்ய பஹுமானம், காலை 11.45 மணிக்கு ஸர்வ தரிசனம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    கும்பாபிஷேக விழாவில் வனத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன், கே.ஆர்.ராஜேஷ்குமார் எம்.பி., கலெக்டர் உமா, இந்து சமய அறநிலைய துறை சிறப்பு அதிகாரி குமரகுருபரன், நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் ராமலிங்கம், அறங்காவல் குழு தலைவர் நல்லுசாமி, அறங்காவலர்கள் சீனிவாசன், மல்லிகா குழந்தைவேல், ரமேஷ்பாபு, செல்வசீராளன், போலீஸ் சூப்பிரண்டு ராஜேஸ்கண்ணன், நகராட்சி தலைவர் கலாநிதி, துணைதலைவர் பூபதி, நகர்மன்ற உறுப்பினர் டி.டி. சரவணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு ஆஞ்சநேயரை தரிசனம் செய்தனர்.

     பக்தர்கள் குவிந்தனர்

    கும்பாபிஷேகத்தை யொட்டி கோவிலில் குவிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பக்தி பரவசம் முழங்க ஆஞ்சநேயரை வழிபட்டனர். பக்தர்கள் சிரமம் இன்றி சாமி தரிசனம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. ஆயிரகணக்கான பக்தர்கள் குடும்பத்துடன் நீண்ட நேரம் நின்று வரிசையில் இரும்பு தடுப்புகள் வழியாக சென்று சாமி தரிசனம் செய்தனர். கும்பாபிஷேக விழாவை காண அகன்ற திரை அமைக்கப்பட்டிருந்தது.

    கோவில் மற்றும் கோவில் வளாகம் பக்தர்கள் வெள்ளத்தால் நிரம்பி வழிந்தது. விழாவில் பக்தர்களின் பாதுகாப்பிற்காக கோவில் வளாகம் மற்றும் அதை சுற்றியுள்ள தெருக்களில் 100-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்களை பொருத்தப்பட்டு கோவில் அலுவலகம் அருகில் அமைக்கப்பட்டு உள்ள கட்டுப்பாட்டு அறையில் இருந்து போலீசார் கண்காணித்தனர். இதேபோல் கண்காணிப்பு கோபுரம் அமைத்தும் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

    பக்தர்களின் கூட்டத்தை முறைப்படுத்த சேலம், நாமக்கல் மாவட்டங்களை சேர்ந்த சுமார் 1,000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். போலீஸ் சூப்பிரண்டு ராஜேஸ்கண்ணன், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் பாதுகாப்பு ஏற்பாடுகளை தொடர்ந்து கண்காணித்தப்படி இருந்தனர்.

    பக்தர்களுக்கு பல்வேறு குழுவினர் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.

     தீயணைப்பு, சுகாதாரம், வருவாய், போக்குவரத்துதுறை, நகராட்சி, இந்து சமய அறநிலையத்துறை உள்ளிட்ட அரசுத்துறைகள் சார்பில் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்யப்பட்டிருந்தது.

    • கலசங்களுக்கு கணபதி பூஜை, ஆலய கருவறை நிலவு பூஜை நடத்தப்பட்டது.
    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம்

    அருவங்காடு,

    குன்னூர் இந்திரா நகர் பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் ஆலயத்தில் மங்கள இசையுடன் கலசங்களுக்கு கணபதி பூஜை, துவார பூஜை, ஆலய கருவறை நிலவு பூஜை நடத்தப்பட்டது.

    மேலும் நூற்றுக்கணக்கான பெண்கள் தீர்த்த குடம் எடுத்து கோவில் வந்தடைய ஆலயத்தின் கோபுரத்தில் உள்ள கலசத்திற்கு தீர்த்த நீரை ஊற்றி பூஜைகள் செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது.

    ஆலயத்தில் முத்துமாரி அம்மனுக்கு அபிஷேகங்கள் நடத்தப்பட்டு அலங்கார பூஜை நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.  

    • திரளான பக்தர்கள் வழிபாடு
    • பெண் பக்தர்களுக்கு நினைவு பரிசுகள்

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம், குன்னுர் தாலுகாவுக்கு உட்பட்ட மேலூர் ஊராட்சியில் மகாவிநாயகர் கோவில் அமைந்து உள்ளது. இது 33 ஊர்களுக்கு பாத்தியப்பட்ட கோவில் ஆகும்.மேலூர் விநாயகர் கோவிலில் மகாகும்பாபிஷேகம் நடைப்பெற்றது.

    இதில் ஊர்தலைவர் அர்ஜீனன், கொத்துகார கௌடர் சிவக்குமார், மேக்குநாடு பார்பத்தி கிருஷ்ணன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் குண்டன், சாந்தி ராமு, தொழிலதிபர் ராஜேந்திரன், மேக்குநாடு படுகர் நல சங்க தலைவர் தாத்தன், செயலாளர் ராமன், பாலகொலா ஊராட்சி துணைத்தலைவர் மஞ்சை வி.மோகன் மற்றும் ஆயிரக்கணக்கான பொது மக்கள் திரளாக வந்திருந்து சுவாமியை தரிசனம் செய்தனர்.தொடர்ந்து அனை வருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும் பெண் பக்தர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன.

    • வேடியப்பன் கோவிலுக்கு உடையாப்பட்டி கருமாரியம்மன் கோவில் வளாகத்தில் இருந்து தீர்த்தக்குடம் மற்றும் முளைப்பாரி எடுத்து அழைத்து வருதல் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • தனூர் லக்னத்தில் யாத்ராதானம், கடம் புறப்பாடு, வேடியப்பன் சாமி மற்றும் பரிவார தெய்வங்கள் அனைத்திற்கும் மகாகும்பாபிஷேகம் எனும் நன்னீராட்டு பெருவிழா நடைபெற்றது.

    சேலம்:

    சேலம் உடையாப்பட்டி குபேர கணபதி, சப்த கன்னிமார்கள், திரவுபதி அம்மன், சப்த முனியப்பன்கள், அம்சாரம்மன் சமேத வேடியப்பன் ஆலய ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் விழா இன்று (வெள்ளிக் கிழமை) நடைபெற்றது.

    இவ்விழாவை முன்னிட்டு கடந்த 18-ந்தேதி (புதன்கிழமை) காலை மகாகும்பாபிேஷக முகூர்த்தகால் நடப்பட்டது.

    தொடர்ந்து நேற்று காலை வேடியப்பன் கோவிலுக்கு உடையாப்பட்டி கருமாரியம்மன் கோவில் வளாகத்தில் இருந்து தீர்த்தக்குடம் மற்றும் முளைப்பாரி எடுத்து அழைத்து வருதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

    மாலை 5 மணிக்கு வாஸ்து சாந்தி பிரவேச பலி, மாலை 6.30 மணிக்கு கலாகர்ஷனம், யாகசாலை பிரவேசம், முதற்கால யாக பூஜைகள், இரவு 8.30 உபசார பூஜை, 9.30 பஞ்சலோகம், நவரத்தினம், அஷ்டபந்தன மருந்து சாற்றுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    இதையடுத்து இன்று காலை உடையாப்பட்டி கருமாரியம்மன் கோவில் வளாகத்தில் இருந்து மேளதாளங்கள் முழங்க பால் குடம் எடுத்து அழைத்து வருதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதையடுத்து 2-ம் கால யாக பூஜைகள், வேதபாராயணம், மூலமந்திர ஹோமங்கள் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    இதனை தொடர்ந்து காலை 9.30 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் தனூர் லக்னத்தில் யாத்ராதானம், கடம் புறப்பாடு, வேடியப்பன் சாமி மற்றும் பரிவார தெய்வங்கள் அனைத்திற்கும் மகாகும்பாபிஷேகம் எனும் நன்னீராட்டு பெருவிழா நடைபெற்றது. அதன் பிறகு மகா அபிஷேகம், அலங்காரம், கோ பூைஜ, மகா நெய்வேத்தியம், மகா தீபாராதனை ஆசீர்வாதம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    இவ்விழாவில் ஊர் பொதுமக்கள், பக்தர்கள், குல பங்காளிகள் தங்கள் குடும்பத்தினருடன் திரளாக பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

    • திருப்பதி வேங்கடமுடையான் சுவாமிக்கு இணையாக பாடப்பெற்ற கோவிலாகும்.
    • கோவிந்தா.. கோவிந்தா.. பக்தி கோஷம் விண்ணை பிளக்க பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

    திருநாகேஸ்வரம்:

    கும்பகோணம் அடுத்த நாச்சியார்கோயிலில் சீனிவாச பெருமாள் கோவில் உள்ளது. 108 திவ்யதேசங்களில் 14-வது திவ்யதேச கோவிலாகும். இங்கு எழுந்தருளியிருக்கும் கல்கருட பகவான் மிகவும் பிரசித்தமானவர். இக்கோவில் மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றிலும் சிறப்புடையது. திருமங்கையாழ்வாரால் 100 பாசுரங்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட தலமாகும். திருப்பதி வேங்கடமுடையான் சுவாமிக்கு இணையாக பாடப்பெற்ற கோவிலாகும்.

    மேலும் பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இக்கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு திருப்பணிகள் நடைபெற்று வந்தன. பணிகள் முடிவடைந்த நிலையில் இன்று காலை கும்பாபிஷேகம் நடந்தது.

    முன்னதாக கடந்த 23-ந் தேதி மாலை முதற்கால யாகசாலை பூஜைகள் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து, 24, 25, 26-ந் தேதிகளில் காலை, மாலை யாகசாலை பூஜைகள் நடைபெற்று வந்தது. இதற்காக ஆகம பட்டாச்சாரியார் கண்ணன், கோனேரிராஜபுரம் சம்பத் பட்டாச்சாரியார், கோவில் அர்ச்சகர்கள் லட்சுமி நரசிம்ம பட்டாச்சாரியார், வாசுதேவ பட்டாச்சாரியார், கோபி பட்டாச்சாரியார் ஆகியோர் தலைமையில் யாகசாலை பூஜைகளை நடைபெற்று வந்தது.

    தொடர்ந்து, இன்று காலை 8-ம் கால யாகசாலை பூஜைகள் முடிவடைந்து கடம் புறப்பாடு நடைபெற்றது. கோவிலின் செயல் அலுவலர் பிரபாகரன் மூலவர் விமானத்திலிருந்து பச்சைக்கொடி அசைக்க அனைத்து விமானங்களுக்கும் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு கோவிந்தா.. கோவிந்தா.. பக்தி கோஷம் விண்ணை பிளக்க தரிசனம் செய்தனர். தொடர்ந்து, பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது.

    விழாவில் ராமலிங்கம் எம்.பி, அரசு தலைமை கொறடா கோவி. செழியன், அ.தி.மு.க. கிழக்கு மாவட்ட செயலாளர் பாரதிமோகன், மாநில ஜெயலலிதா பேரவை இணை செயலாளர் ஏ.வி.கே.அசோக்குமார், தெற்கு ஒன்றிய செயலாளர் முத்துகிருஷ்ணன், தே.மு.தி.க மாவட்ட செயலாளர் சுகுமார், தே.மு.தி.க. தெற்கு ஒன்றிய செயலாளர் வி.எஸ்.ஆர்.மகேஷ், வசந்த மாளிகை பாத்திர கடை நெல்லை ரமேஷ் கண்ணன், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    பாதுகாப்பு பணியில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டிருந்தனர். விழா ஏற்பாடுகளை தக்கார் கிருஷ்ணகுமார், செயல் அலுவலர் பிரபாகரன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்

    • ஸ்ரீதேவி, பூதேவி சமேத உலகளந்த பெருமாளுக்கு திருக்கல்யாண வைபவம்
    • ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரளாக கலந்துகொண்டு சாமி தரிசனம்

    கவுண்டம்பாளையம்,

    கோவை துடியலூர் அடுத்த பன்னீர்மடையில் கிருஷ்ணசாமி கோவில், உலகளந்த பெருமாள் மற்றும் செல்வ விநாயகர் கோவில்கள் அமைந்து உள்ளன. இந்த கோவில்களில் கும்பாபிஷேகம் நாளை மறுநாள் (27-ந் தேதி) வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது.

    நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த கோவில்களில் கடந்த சில நாட்களுக்கு மராமத்து பணிகள், புதுப்பித்தல் போன்ற பல்வேறு திருப்பணிகள் நடைபெற்றன. தொடர்ந்து இன்று காலை 9 மணி அளவில் மகா கணபதி பூஜையுடன் விழா தொடங்கியது. பின்னர் வாஸ்து ஹோமம், பூர்ணாஹூதி, தீபாராதனை நிகழ்ச்சிகள் நடந்தன. மாலை 5 மணி அளவில் தர்மராசா கோவிலில் இருந்து முளைப்பாரி எடுத்து வருதல், புற்றுமண் எடுத்து பூஜை செய்தல், யாகசாலை பிரவேசம், முதல் கால யாக வேள்வி பூஜை, பரிவார கலசபூஜை கள் நடை பெறுகின்றன.

    தொடர்ந்து நாளை காலை 6 மணியளவில் 2-ம்காலயாக வேள்வி பூஜை தொடங்குகிறது. அப்போது கலசபூஜை, தீபாராதனை, ஹோமம், சுவாமிக்கு அஷ்டபந்தன மருந்து சாத்துதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுகி ன்றன.

    27-ந்தேதி (வெள்ளிக்கிழமை) காலை 3-வதுகால வேள்வி பூஜைகள் நடக்கின்றன. காலை 9 மணி முதல் விழாவின் முக்கிய நிகழ்வான மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.

    இந்த நிகழ்வை பேரூராதீனம் சாந்தலிங்கம் மருதாசலஅடிகளார், சிரவை ஆதினம் குமரகுருபர சுவாமிகள், கெளமார சிரவையாதீனம் ராமானந்த குமரகுருபரசுவாமிகள், ஆனைகட்டி லலிதாம்பிகை பீடம் சுவாமி ஜகதாதமானந்தஸ்ரஸ்அதி, பழனியாதீனம் சாதுசண்முக அடிகளார் ஆகியோர் நடத்தி வைக்கின்றனர். தொடர்ந்து மகா அன்னதானம் நடைபெறுகிறது.

    மதியம் 12 மணியளவில் அலங்கார பூஜைகள் நடைபெறும். அன்று மாலை கிருஷ்ணசுவாமி மற்றும் ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீ உலகளந்த பெருமாளுக்கு திருக்கல்யாண வைபவம் நடைபெறுகிறது. இதில் பன்னீர் மடை மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்ய உள்ளனர்.

    கும்பாபிஷேக விழாவுக்கான ஏற்பாடுகளை கிருஷ்ணசாமி கோயில் இறை வழிபாட்டு மன்றத்தினர், ஊர் பொதுமக்கள், இளைஞர்கள், நண்பர்கள் உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.

    ×