search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாச்சியார்கோயில் சீனிவாச பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்
    X

    கோபுர கலசத்தில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. தரிசனம் செய்ய குவிந்த பக்தர்கள் கூட்டத்தின் ஒருபகுதி.

    நாச்சியார்கோயில் சீனிவாச பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்

    • திருப்பதி வேங்கடமுடையான் சுவாமிக்கு இணையாக பாடப்பெற்ற கோவிலாகும்.
    • கோவிந்தா.. கோவிந்தா.. பக்தி கோஷம் விண்ணை பிளக்க பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

    திருநாகேஸ்வரம்:

    கும்பகோணம் அடுத்த நாச்சியார்கோயிலில் சீனிவாச பெருமாள் கோவில் உள்ளது. 108 திவ்யதேசங்களில் 14-வது திவ்யதேச கோவிலாகும். இங்கு எழுந்தருளியிருக்கும் கல்கருட பகவான் மிகவும் பிரசித்தமானவர். இக்கோவில் மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றிலும் சிறப்புடையது. திருமங்கையாழ்வாரால் 100 பாசுரங்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட தலமாகும். திருப்பதி வேங்கடமுடையான் சுவாமிக்கு இணையாக பாடப்பெற்ற கோவிலாகும்.

    மேலும் பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இக்கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு திருப்பணிகள் நடைபெற்று வந்தன. பணிகள் முடிவடைந்த நிலையில் இன்று காலை கும்பாபிஷேகம் நடந்தது.

    முன்னதாக கடந்த 23-ந் தேதி மாலை முதற்கால யாகசாலை பூஜைகள் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து, 24, 25, 26-ந் தேதிகளில் காலை, மாலை யாகசாலை பூஜைகள் நடைபெற்று வந்தது. இதற்காக ஆகம பட்டாச்சாரியார் கண்ணன், கோனேரிராஜபுரம் சம்பத் பட்டாச்சாரியார், கோவில் அர்ச்சகர்கள் லட்சுமி நரசிம்ம பட்டாச்சாரியார், வாசுதேவ பட்டாச்சாரியார், கோபி பட்டாச்சாரியார் ஆகியோர் தலைமையில் யாகசாலை பூஜைகளை நடைபெற்று வந்தது.

    தொடர்ந்து, இன்று காலை 8-ம் கால யாகசாலை பூஜைகள் முடிவடைந்து கடம் புறப்பாடு நடைபெற்றது. கோவிலின் செயல் அலுவலர் பிரபாகரன் மூலவர் விமானத்திலிருந்து பச்சைக்கொடி அசைக்க அனைத்து விமானங்களுக்கும் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு கோவிந்தா.. கோவிந்தா.. பக்தி கோஷம் விண்ணை பிளக்க தரிசனம் செய்தனர். தொடர்ந்து, பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது.

    விழாவில் ராமலிங்கம் எம்.பி, அரசு தலைமை கொறடா கோவி. செழியன், அ.தி.மு.க. கிழக்கு மாவட்ட செயலாளர் பாரதிமோகன், மாநில ஜெயலலிதா பேரவை இணை செயலாளர் ஏ.வி.கே.அசோக்குமார், தெற்கு ஒன்றிய செயலாளர் முத்துகிருஷ்ணன், தே.மு.தி.க மாவட்ட செயலாளர் சுகுமார், தே.மு.தி.க. தெற்கு ஒன்றிய செயலாளர் வி.எஸ்.ஆர்.மகேஷ், வசந்த மாளிகை பாத்திர கடை நெல்லை ரமேஷ் கண்ணன், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    பாதுகாப்பு பணியில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டிருந்தனர். விழா ஏற்பாடுகளை தக்கார் கிருஷ்ணகுமார், செயல் அலுவலர் பிரபாகரன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்

    Next Story
    ×