search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "JDS"

    கர்நாடகாவில் காங்கிரஸ்-ஜே.டி.எஸ் கூட்டணி மீது மக்களுக்கு அதிக நம்பிக்கை இருப்பதை உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் காட்டுகிறது என்று முதல்-மந்திரி குமாரசாமி கூறியுள்ளார்.
    பெங்களூரு:

    கர்நாடக மாநிலத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ்-ஜே.டி.எஸ். கூட்டணி பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அடுத்தாண்டு நடைபெறும் பாராளுமன்ற தேர்தலுக்கான முன்னோட்டமாக இந்த தேர்தல் பார்க்கப்பட்டதால் பொதுமக்கள் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

    இந்த தேர்தல் முடிவு குறித்து கர்நாடக முதல் மந்திரி குமாரசாமி கூறியதாவது:-

    வழக்கமாக நகர் பகுதிகளில் பாரதிய ஜனதா தான் அதிக இடங்களில் வெற்றி பெறும். ஆனால் இந்த தேர்தலில் அதிக இடங்களில் காங்கிரஸ்-ஜே.டி.எஸ் கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.

    காங்கிரஸ் மற்றும் ஜே.டி.எஸ். கூட்டணி மீது மக்களுக்கு அதிக நம்பிக்கை உள்ளது என்பதையே இந்த தேர்தல் முடிவுகள் காட்டுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கடந்த 2013-ம் ஆண்டு உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் 1960 இடங்களில் வெற்றி பெற்றது. பாரதிய ஜனதா மற்றும் ஜே.டி.எஸ். கட்சிகள் தலா 905 இடங்களில் வெற்றி பெற்றன.

    தற்போது நடந்த உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் கட்சி 982 இடங்களையும், பாரதிய ஜனதா 929 இடங்களையும், ஜே.டி.எஸ். கட்சி 373 இடங்களையும் பிடித்துள்ளன.

    சுயேட்சை வேட்பாளர்கள் 329 பேர் வெற்றி பெற்றுள்ளனர். இதன் மூலம் காங்கிரஸ்-ஜே.டி.எஸ். கூட்டணி ஒட்டுமொத்தமாக 1357 இடங்களை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றுள்ளது.

    இந்த வெற்றியின் மூலம் காங்கிரஸ்-ஜே.டி.எஸ். கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    கர்நாடகாவில் மைசூரு, தும்கூரு ஆகிய 2 மாநகராட்சிகளில் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி ஆதரவுடன் காங்கிரஸ் கட்சி மேயர் பதவிகளை கைப்பற்றுகிறது. #KarnatakaLocalBodyElections
    பெங்களூரு:

    கர்நாடக மாநிலத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ்-ஜே.டி.எஸ். கூட்டணி பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

    மைசூரு, தும்கூரு, சிவமொக்கா ஆகிய 3 மாநகராட்சிகளில் சிவமொக்கா மாநகராட்சியை பாரதிய ஜனதா பிடித்துள்ளது. இந்த மாநகராட்சியில் பாரதிய ஜனதா 23 இடங்களையும் காங்கிரஸ் 6 இடங்களையும், ஜே.டி.எஸ். 4 இடங்களையும், சுயேட்சைகள் 2 இடங்களையும் பிடித்துள்ளனர்.

    பாரதிய ஜனதா கவுன்சிலர் மேயராக உள்ளார். சிவமொக்கா மாநகராட்சியான பிறகு நடைபெற்ற முதல் தேர்தலில் பாரதிய ஜனதா மேயர் பதவியை கைப்பற்றி உள்ளது.

    மைசூரு மாநகராட்சியில் மொத்தம் உள்ள 68 இடங்களில் பாரதிய ஜனதா 22 இடங்களை கைப்பற்றி உள்ளது. காங்கிரஸ் 19 இடங்களையும், ஜே.டி.எஸ். 18 இடங்களையும், சுயேட்சைகள் 6 இடங்களையும் பிடித்துள்ளன.

    இந்த மாநகராட்சியில் மேயர் பதவியை பிடிக்க 33 கவுன்சிலர்களின் ஆதரவு தேவை. காங்கிரஸ்- ஜே.டி.எஸ். கட்சிகள் 37 இடங்களை பிடித்துள்ளன. இதனால் இந்த மாநகராட்சியில் காங்கிரஸ் சார்பில் மேயர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார். கூட்டணியில் எந்த கட்சி அதிக இடங்களை பெறுகிறதோ அந்த கட்சிக்கு தலைவர் பதவி கொடுக்கப்படும் என்று ஏற்கனவே காங்கிரஸ்- ஜே.டி.எஸ். ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு இருந்தது. அதன்படி மைசூரு மாநகராட்சியில் காங்கிரஸ் மேயர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்.

    இதேபோல தும்கூரு மாநகராட்சியிலும் காங்கிரசை சேர்ந்தவர் மேயராகிறார். இந்த மாநகராட்சியில் மொத்தம் உள்ள 35 இடங்களில் பாரதிய ஜனதா 12 இடங்களையும், காங்கிரஸ், ஜே.டி.எஸ். கட்சிகள் தலா 10 இடங்களையும் கைப்பற்றி உள்ளன. சுயேட்சைகள் 3 இடங்களை பிடித்துள்ளன. இந்த மாநகராட்சியில் தங்களுக்கு மேயர் பதவியை ஜே.டி.எஸ். விட்டுத்தர வேண்டும் என்று காங்கிரசார் கோரிக்கை விடுத்தனர். இதை ஜே.டி.எஸ். கட்சி ஏற்றுக்கொண்டது. #KarnatakaLocalBodyElections
    கர்நாடகா உள்ளாட்சி தேர்தலில் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி தனித்து போட்டியிடும் என்ற தேவேகவுடாவின் அறிவிப்பால் காங்கிரஸ் அதிர்ச்சியடைந்துள்ளது. #DeveGowda #JDS #Congress
    பெங்களூர்:

    மதச்சார்பற்ற ஜனதா தளம் தலைவர் தேவேகவுடா பெங்களூரில் நேற்று பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-

    கர்நாடகாவில் விரைவில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி அமைப்பது பற்றி மாநில காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவுடன் பேச்சு நடத்தினேன்.

    உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி வைத்தால் இரு கட்சி தொண்டர்களிடமும் குழப்பம் ஏற்படும் நிலை உள்ளது. எனவே உள்ளாட்சி தேர்தலில் மதச்சார்பற்ற ஜனதா தளம் தனித்து போட்டியிடும்.

    ஆட்சி செய்வதில் இரு கட்சிகளின் கூட்டணி நீடிக்கும். அதில் எந்தவித குழப்பமும் இல்லை. எனவே தனித்து போட்டியிடுவதால் ஆட்சிக்கு எந்த பிரச்சினையும் இல்லை.

    மதச்சார்பற்ற ஜனதா தளம் தனித்து போட்டியிடுவது பற்றி நிர்வாகிகளிடமும் கருத்து கேட்கப்பட்டுள்ளது. அவர்களது முடிவை அறிய நான் வருகிற 11-ந் தேதி தொடங்கி 4 நாட்கள் சுற்றுப் பயணம் செய்ய உள்ளேன். அதன் பிறகு உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் விபரம் வெளியிடப்படும்.



    நாங்கள் உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிடுவதை காங்கிரஸ் கட்சி புரிந்து கொள்ளும் என்று நம்புகிறேன். எனவே எங்கள் கூட்டணியில் எந்த பிளவும் ஏற்படாது.

    உள்ளாட்சி தேர்தலுக்காக மட்டுமே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு தேவேகவுடா கூறினார். #DeveGowda #JDS #Congress

    நாளை பதவியேற்க உள்ள கர்நாடக மந்திரிசபையில் காங்கிரஸ் கட்சிக்கு 22 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. அம்மாநில காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வரா துணை முதல்வராக பதவியேற்க உள்ளார். #Karnataka #Kumaraswamy #Congress
    பெங்களூர்:

    கர்நாடக சட்டசபை தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், காங்கிரஸ் - மஜத கட்சிகள் கூட்டணி ஆட்சி அமைக்க உள்ளன. மஜத தலைவர் குமாரசாமி நாளை முதல்வராக பதவியேற்க உள்ளார். மந்திரிசபையில் யாருக்கு எத்தனை இடம், துணை முதல்வர் பதவி உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக இன்று இரு கட்சியின் முக்கிய தலைவர்கள் ஆலோசனை நடத்தினர்.

    கூட்டத்தின் முடிவில், அம்மாநில காங்கிரஸ் தலைவராக உள்ள பரமேஸ்வரா துணை முதல்வராக தேர்வு செய்யப்பட்டார்.  குமாரசாமி, பரமேஸ்வரா தவிர 32 பேர் மந்திரிகளாக நாளை பதவியேற்க உள்ளனர். துணை முதல்வர் பதவி தவிர்த்து 21 மந்திரிகள் காங்கிரஸ் தரப்பிலும், முதல்வர் பதவி தவிர்த்து 11 மந்திரிகள் மஜத தரப்பில் பதவியேற்க உள்ளனர். சபாநாயகராக காங்கிரஸ் எம்.எல்.ஏ ரமேஷ் குமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபித்த பின்னர், மந்திரிகளுக்கான துறை ஒதுக்கீடு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. #Karnataka #Kumaraswamy #Congress
    கர்நாடக மாநில முதல்வராக பதவியேற்க உள்ள குமாரசாமி டெல்லியில் இன்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, சோனியா காந்தியை சந்தித்து மந்திரிசபை அமைப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தினார். #JDS_Cong_Alliance #Kumaraswamy
    புதுடெல்லி:

    காங்கிரஸ் கட்சி ஆதரவுடன் கர்நாடக முதல்வராக நாளை குமாரசாமி பதவியேற்க உள்ளார். மந்திரிசபையில் காங்கிரஸ் கட்சிக்கும் இடம் அளிக்கப்பட உள்ளது. இந்நிலையில், மந்திரிசபை தொடர்பாக டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மூத்த தலைவர் சோனியா காந்தியை இன்று சந்தித்து குமாரசாமி விவாதித்தார்.

    அப்போது, எந்தெந்த துறைகளை காங்கிரசுக்கு ஒதுக்குவது என்பது குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது. 40 நிமிட சந்திப்புக்கு பின்னர் வெளியே வந்த குமாரசாமி, “கர்நாடக மாநில காங்கிரஸ் பொதுச்செயலாளர் வேணுகோபால் உடன் மந்திரி சபை தொடர்பாக விவாதிக்க ராகுல் அனுமதி அளித்துள்ளார். உள்ளூர் தலைவர்களுடன் ராகுல் நாளை ஆலோசனை நடத்தி முடிவுகளை இறுதி செய்வார்” என தெரிவித்தார்.

    நாளை நடக்க உள்ள பதவியேற்பு விழாவுக்கு இருவரும் வருவதாக உறுதியளிப்பதாக தெரிவித்துள்ளனர் என்றும் அவர் கூறினார்.
    தேர்தலுக்கு பிறகு காங்கிரஸ்-மதசார்பற்ற ஜனதா தளம் கட்சிகள் சந்தர்ப்பவாத கூட்டணி அமைத்துள்ளனர் என்று மத்திய மந்திரி பிரகாஷ் ஜவ்டேகர் குற்றம் சாட்டியுள்ளார். #congress #jds #prakashjavadekar

    பெங்களூரு:

    பெங்களூரு மல்லேஸ் வராவில் உள்ள பாரதீய ஜனதா அலுவலகத்தில் மத்திய மந்திரி பிரகாஷ் ஜவ்டேகர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பாரதீய ஜனதாவை காங்கிரஸ் தோற்கடித்து விட்டதாக ராகுல்காந்தி கூறுகிறார். உண்மையில் கர்நாடகத்தில் பாரதீய ஜனதா தான் காங்கிரஸ் கட்சியை தோற்கடித்து உள்ளது. இதனை ராகுல் மாற்றி கூறியுள்ளார். 40 எம்.எல்.ஏ.க்கள் இருந்த பாரதீய ஜனதாவுக்கு தற்போது 104 எம்.எல்.ஏ.க்கள் கிடைத்துள்ளனர். ஆட்சியில் இருந்த காங்கிரசுக்கு 78 எம்.எல்.ஏ.க்கள் தான் கிடைத்துள்ளனர்.

    தேர்தலுக்கு பிறகு காங்கிரஸ்-மதசார்பற்ற ஜனதா தளம் கட்சிகள் சந்தர்ப்பவாத கூட்டணி அமைத்துள்ளனர்.

    தேர்தலுக்கு முன்பு மதசார்பற்ற ஜனதா தளத்தை பாரதீய ஜனதாவின் பீ டீம் என்று காங்கிரஸ் கூறியது. தேர்தலுக்கு பிறகு காங்கிரசின் பீ டீமாக மதசார்பற்ற ஜனதா தளம் செயல்படுகிறது என்ற உண்மையை மக்கள் புரிந்து கொண்டு விட்டனர்.


    இந்த புதிய கூட்டணியால் காங்கிரஸ் அரசின் ஊழல்கள் குறித்து விசாரணை செய்யப்படாமல் கோப்புகள் மூடப்படும். தேர்தலுக்கு முன்பு காங்கிரஸ் ஆட்சியில் ஊழல் செய்தவர்கள் சிறைக்கு அனுப்பப்படுவார்கள் என்று குமாரசாமி கூறியிருந்தார். இப்போது அவர் அதை செய்வாரா என்பதை மக்களுக்கு விளக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #congress #jds #prakashjavadekar

    கர்நாடக மாநிலத்தில் தற்காலிக சபாநாயகர் நியமனத்தை எதிர்த்து காங்கிரஸ் மற்றும் ஜே.டி.எஸ். சார்பில் உச்ச நீதிமன்றத்தில் இன்று இரவு இடைக்கால மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. #KarnatakaElection #FloorTest #ProtermSpeaker
    புதுடெல்லி:

    கர்நாடக சட்டப்பேரவையில் எடியூரப்பா அரசு மீது நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளதால் உச்சகட்ட பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆட்சியமைக்க 112 உறுப்பினர்கள் ஆதரவு தேவை என்ற நிலையில் பா.ஜ.க.விடம் 104 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். எனவே, வாக்கெடுப்பில் வெற்றி பெறுவதற்காக எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கு வலை விரித்துள்ளது. இதனால் தங்களிடம் இருக்கும் எம்.எல்.ஏ.க்களை தக்க வைப்பதில் காங்கிரஸ் மற்றும் ஜேடிஎஸ் கட்சிகள் கண்ணும் கருத்துமாக இருக்கின்றன. அதேசமயம் நம்பிக்கை வாக்கெடுப்பில் எடியூரப்பா அரசை வீழ்த்தவும் ஆயத்தமாகி வருகின்றன.

    இந்த சூழ்நிலையில் நாளை காலை 11 மணிக்கு சிறப்பு சட்டமன்றத்தை கூட்டும்படி ஆளுநர் வஜூபாய் வாலா உத்தரவிட்டுள்ளார். அத்துடன் சபையை வழிநடத்துவதற்கு தற்காலிக சபாநாயகராக கே.ஜி.போபையாவை நியமனம் செய்து பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

    போபையா நியமனத்திற்கும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள காங்கிரஸ், இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளது. போபையாவின் நியமனத்தை எதிர்த்து காங்கிரஸ் மற்றும் ஜேடிஎஸ் கட்சிகள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் இன்று இரவு இடைக்கால மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

    உச்ச நீதிமன்ற பதிவாளரை சந்திக்க அவர்களுக்கு முதலில் அனுமதி மறுக்கப்பட்டதால் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் பதிவாளரை சந்திக்க அனுமதி கிடைத்தது. பதிவாளிடம் மனுவை அளித்து, தங்கள் கோரிக்கையை முன்வைத்தனர். நாளை  நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்க உள்ளதால், தங்கள் மனுவை அவசர வழக்காக விசாரிக்கும்படி வேண்டுகோள் விடுத்தனர். #KarnatakaElection #FloorTest #ProtermSpeaker 
    கர்நாடக சட்டசபையில் நாளை மாலை 4 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. #KarnatakaCMRace #FloorTest
    புதுடெல்லி:

    கர்நாடகாவில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், அதிக இடங்கள் வென்ற கட்சி என்ற அடிப்படையில் எடியூரப்பா நேற்று முதல்வராக பதவியேற்றார். 15 நாட்களில் அவர் பெரும்பான்மையை நிரூபிக்க கவர்னர் உத்தரவிட்டார்.

    கவர்னரின் செயல்பாடு அரசியலமைப்புக்கு எதிரானது எனவே, எடியூரப்பா பதவியேற்றதை தடுக்க வேண்டும் என கவர்னர் அழைப்பு விடுத்த அன்றே இரவில், சுப்ரீம் கோர்ட்டில் காங்கிரஸ் மனு தாக்கல் செய்தது. நள்ளிரவில் இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், எடியூரப்பா பதவியேற்க தடையில்லை, எடியூரப்பா கவர்னரிடம் அளித்த கடித்தை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை இன்று தள்ளி வைத்தனர்.

    இதனை அடுத்து, மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத்மலானியும் கவர்னர் அழைப்பு விடுத்ததற்கு எதிராக மனு தாக்கல் செய்தார். இந்த இரு மனுக்களும் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. மத்திய அரசு சார்பில் தலைமை வழக்கறிஞர் வேணுகோபால், கர்நாடக பாஜக சார்பில் முகுல் ரோகித்கி, காங்கிரஸ் சார்பில் அபிஷேக் சிங்வி ஆஜராகினர்.


    வழக்கு விசாரணையின் போது, காங்கிரஸ் - மஜத கூட்டணிக்கு பெரும்பான்மை இருப்பதாக கூறிய நிலையில், பாஜகவை ஆளுநர் அழைத்தது ஏன்? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு, மஜதவின் அனைத்து எம்.எல்.ஏ.க்களும் குமாரசாமிக்கு ஆதரவாக கையெழுத்திடவில்லை எனவே நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட வேண்டும் என பாஜக தரப்பு வழக்கறிஞர் முகுல் ரோகித்கி பதிலளித்தார்.

    எடியூரப்பா நாளையே பெரும்பான்மையை நிரூபிக்க தயாரா? என நீதிபதிகள் கேட்டனர். காங்கிரஸ் - மஜத கூட்டணியை ஆட்சியமைக்க அழைக்க வேண்டும் என காங்கிரஸ் தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார். ஆளுநரின் முடிவை ஆய்வு செய்வது அல்லது நம்பிக்கை வாக்கெடுப்பு இரண்டில் எதாவது ஒன்றுதான் தீர்வு என நீதிபதி கருத்து தெரிவித்தார்.

    பெரும்பான்மையை நிரூபிக்க காங்கிரஸ் - மஜதவுக்கு முதலில் அழைப்பு விடுக்க வேண்டும் என காங்கிரஸ் தரப்பில் வாதிடப்பட்டது. அச்சமின்றி எம்.எல்.ஏ.க்கள் வாக்களிக்க வசதி செய்ய வேண்டும். ஓட்டெடுப்பு வீடியோ பதிவு செய்யப்பட வேண்டும் என கோரிக்கை விடப்பட்டது.

    ஆனால், பாஜக தரப்பில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த அவகாசம் கேட்கப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், பாஜகவின் கோரிக்கையை நிராகரித்தனர். நாளை மாலை 4 மணிக்கு கர்நாடக சட்டசபையில் எடியூரப்பா பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

    எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் நாளையே பதவியேற்க வேண்டும். மூத்த எம்.எல்.ஏ ஒருவர் தற்காலிக சபாநாயகராக செயல்பட வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவில் தெரிவித்தனர். எனினும், நம்பிக்கை வாக்கெடுப்பு ரகசியமாக நடக்காது என்பதை நீதிமன்றம் தெளிவு படுத்தியுள்ளது.

    ஓட்டெடுப்புக்கு வரும் எம்.எல்.ஏ.க்களுக்கு தகுந்த பாதுகாப்பு அளிக்க வேண்டும் என கர்நாடக டி.ஜி.பி.க்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    ஆங்கிலோ இந்தியன் எம்.எல்.ஏவை நியமித்த கர்நாடக கவர்னரின் உத்தரவுக்கும் நீதிபதிகள் தடை போட்டனர். பெரும்பான்மையை நிரூபிக்கும் வரை எந்த நியமனமும் இருக்க கூடாது. எடியூரப்பா கொள்கை ரீதியிலான எந்த முடிவும் எடுக்க கூடாது என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
    முன்னாள் பிரதமரும், மத சார்பற்ற ஜனதா தள தலைவருமான தேவகவுடா இன்று காலை குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்தார். #DeveGowda #HDDeveGowda #JDS #Tirupatitemple
    திருமலை:

    கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் 78 இடங்களையும் மத சார்பற்ற ஜனதா தளம் 38 இடங்களையும் கைப்பற்றியது. பா.ஜ.க. 104 இடங்களை பிடித்தது.

    காங்கிரஸ் , ஜே.டி.எஸ். கட்சிக்கு முதல்வர் பதவியை விட்டு கொடுத்து ஆட்சி அமைக்க கவர்னரிடம் மனு கொடுத்தனர்.

    ஆனால் கவர்னர் பா.ஜ.க.வை ஆட்சி அமைக்க அழைத்தார். நேற்று காலை எடியூரப்பா கர்நாடக முதல்வராக பதவியேற்றார்.

    முன்னாள் முதல்வர் சித்தராமையா, ஜனதாதள தலைவர் தேவகவுடா, அவரது மகன் குமாரசாமி உள்ளிட்ட கூட்டணி கட்சி எம்.எல்.ஏக்கள் சட்டசபை வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    எம்.எல்.ஏக்களை இழுக்க குதிரை பேரம் நடக்கலாம் என்பதால் காங்கிரஸ், மத சார்பற்ற ஜனதாதள எம்.எல்.ஏக்கள் ஐதராபாத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.


    இந்த பரபரப்பான சூழ்நிலையில் நேற்று இரவு ஏழுமலையானை தரிசிக்க தேவகவுடா திருப்பதிக்கு வந்தார். தேவஸ்தானம் சார்பில் அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

    நேற்றிரவு சாமி தரிசனம் செய்த தேவகவுடா பின்னர் பத்மாவதி தாயார் கெஸ்ட் அவுசில் தங்கினார்.

    இன்று காலை 4 மணிக்கு மீண்டும் கோவிலுக்கு சென்று நிஜபாத தரிசனத்தில் ஏழுமலையானை தரிசனம் செய்தார். அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் லட்டு பிரசாதம், சாமி படம் வழங்கப்பட்டது.

    பின்னர் வெளியே வந்த அவர் நிருபர்களிடம் தனது 86-வது பிறந்த நாளையொட்டி சாமி தரிசனம் செய்ய வந்ததாக கூறினார். மற்ற அரசியல் கேள்விகளுக்கு பதில் அளிக்க மறுத்து விட்டார்.  #DeveGowda #HDDeveGowda #JDS #Tirupatitemple
    கர்நாடக காங்கிரஸ் மற்றும் மஜத எம்.எல்.ஏ.க்கள் கொச்சிக்கு செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில், அவர்கள் ஐதராபாத் நகரில் உள்ள சொகுசு ஓட்டலுக்கு சென்றடைந்தனர். #KarnatakaCMRace
    ஐதராபாத்:

    கர்நாடகாவில் யாருக்கும் பெரும்பான்மை இல்லாத நிலையில் எடியூரப்பா நேற்று முதல்வராக பதவியேற்றார். 15 நாட்களில் பெரும்பான்மையை நிரூபிக்க கவர்னர் உத்தரவிட்டுள்ளார். இதற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் காங்கிரஸ் தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வர உள்ளது.

    இதற்கிடையே, எம்.எல்.ஏ.க்களை இழுத்து விடக்கூடாது என்பதற்காக மைசூரு சாலையில் உள்ள சொகுசு விடுதியில் காங்கிரஸ் மற்றும் மஜத எம்.எல்.ஏ.க்கள் தங்க வைக்கப்பட்டனர். எடியூரப்பா பதவியேற்ற நிலையில், விடுதிக்கு போடப்பட்டிருந்த போலீஸ் பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டது. இதனால், பாஜகவினர் அவர்களை எளிதில் தொடர்பு கொள்ளவோ, அங்கிருந்து எம்.எல்.ஏ.க்கள் தப்பிக்கவோ வழி உள்ளது.



    இதனால், எம்.எல்.ஏ.க்களை கேரளாவுக்கு இடம்மாற காங்கிரஸ், மஜத தலைமை திட்டமிட்டன. நேற்றிரவு, தனியார் விமானம் மூலம் கொச்சி செல்ல ஏற்பாடுகள் நடந்தன. ஆனால், விமான போக்குவரத்து அமைச்சகம் அதற்கு முட்டுக்கட்டை போட்டது. இதனால், இன்று காலை இரண்டு கட்சி எம்.எல்.ஏ.க்களும் ஐதராபாத்துக்கு பேருந்து மூலம் வந்தடைந்தனர்

    அவர்களுக்காக அங்கு இரண்டு சொகுசு ஓட்டல்கள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. விடுதியை சுற்றி பலத்த பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. #KarnatakaCMRace
    பா.ஜனதா பெரும்பான்மையை நிரூபிக்கும் வரை கவர்னர் கர்நாடக சட்டமன்றத்துக்கு ஆங்கிலோ இந்திய நியமன எம்.எல்.ஏ.வை நியமிக்கக்கூடாது என சுப்ரீம் கோர்ட்டில் காங்கிரஸ், ஜனதாதளம் (எஸ்) மனு தாக்கல் செய்தன. #KarnatakaCMRace #AngloIndianMLA
    புதுடெல்லி:

    கர்நாடக மாநிலத்தை சேர்ந்த காங்கிரஸ் மற்றும் ஜனதாதளம் (எஸ்) கட்சிகள் இணைந்து சுப்ரீம் கோர்ட்டில் ஒரு இடைக்கால மனு தாக்கல் செய்தன. அதில், பா.ஜனதா கட்சி பெரும்பான்மையை நிரூபிக்கும் வரை கவர்னர் வஜூபாய் வாலா கர்நாடக சட்டமன்றத்துக்கு ஆங்கிலோ இந்திய நியமன எம்.எல்.ஏ.வை நியமிக்கக்கூடாது.



    இது சட்டமன்றத்தில் பா.ஜனதா எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக எடுக்கப்படும் சட்டவிரோத முயற்சி. இது நியாயமற்றதும், ஜனநாயக நடைமுறையை கேலிக்கூத்தாக்குவதும் ஆகும் என்று கூறப்பட்டு இருந்தது.

    இந்த கட்சிகள் ஏற்கனவே எடியூரப்பா முதல்-மந்திரி பதவி ஏற்க தடை விதிக்கக்கோரி தாக்கல் செய்த மனுவுடன் சேர்த்து இன்று (வெள்ளிக்கிழமை) விசாரணைக்கு எடுக்கப்படுகிறது. முன்னதாக காலையில் நீதிபதி ஏ.கே.சிக்ரி தலைமையிலான அமர்வு எடியூரப்பா பதவி ஏற்க தடை விதிக்க மறுத்துவிட்டது. #KarnatakaCMRace #AngloIndianMLA
    கர்நாடகாவில் காங்கிரஸ், மஜத எம்.எல்.ஏ.க்கள் தங்கியுள்ள சொகுசு விடுதிக்கு போடப்பட்டிருந்த போலீஸ் பாதுகாப்பு வாபஸ் பெற பட்டுள்ளதால், கேரளாவுக்கு சென்று தங்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. #KarnatakaCMRace
    பெங்களூர்:

    கர்நாடகாவில் யாருக்கும் பெரும்பான்மை இல்லாத நிலையில் எடியூரப்பா இன்று முதல்வராக பதவியேற்றுள்ளார். 15 நாட்களில் பெரும்பான்மையை நிரூபிக்க கவர்னர் உத்தரவிட்டுள்ளார். இதற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் காங்கிரஸ் தொடர்ந்த வழக்கு நாளை விசாரணைக்கு வர உள்ளது.

    இந்நிலையில், மைசூரு சாலையில் உள்ள சொகுசு விடுதியில் காங்கிரஸ் மற்றும் மஜத எம்.எல்.ஏ.க்கள் தங்கியுள்ளனர். இன்று எடியூரப்பா பதவியேற்ற நிலையில், விடுதிக்கு போடப்பட்டிருந்த போலீஸ் பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டது. இதனால், பாஜகவினர் அவர்களை எளிதில் தொடர்பு கொள்ளவோ, அங்கிருந்து எம்.எல்.ஏ.க்கள் தப்பிக்கவோ வழி உள்ளது.



    இதனால், எம்.எல்.ஏ.க்களை கேரளாவுக்கு இடம்மாற காங்கிரஸ், மஜத தலைமை யோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
    ×