search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "sworn"

    தமிழகத்தில் 22 சட்டமன்ற தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில் 13 இடங்களில் தி.மு.க.வினர் வெற்றி பெற்றனர். அவர்கள் சபாநாயகர் முன்னிலையில் இன்று பதவி ஏற்கின்றனர்.
    சென்னை:

    தமிழகத்தில் 22 சட்டமன்ற தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில் 13 இடங்களில் தி.மு.க.வும், 9 இடங்களில் அ.தி.மு.க.வும் வெற்றி பெற்றன. இவர்கள் பெயர்கள் அரசிதழில் வெளியிடப்பட்டன.

    இந்நிலையில், 28-ந்தேதி (இன்று) காலை 11 மணிக்கு எம்.எல்.ஏ.க்களாக பதவி ஏற்பதாக சட்டசபை செயலகத்திடம் தி.மு.க. தெரிவித்து இருந்தது. இதற்கு சபாநாயகர் ப.தனபால் அனுமதி அளித்திருந்தார்.

    அதை தொடர்ந்து தி.மு.க. சார்பில் வெற்றி பெற்ற 13 பேரும் சபாநாயகர் முன்னிலையில் எம்.எல்.ஏ.க்களாக இன்று பதவி ஏற்கின்றனர். இந்நிகழ்ச்சியில் எதிர்க்கட்சி தலைவரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகிகள் பங்கேற்க உள்ளனர்.
    மலேசியாவின் 16-வது மன்னராக தேர்ந்தெடுக்கப்பட்ட சுல்தான் அப்துல்லா சுல்தான் அஹமது ஷா இன்று பதவியேற்றார். #Malaysiaking #Malaysiakingabdicates #SultanAbdullah
    கோலாலம்பூர்:

    மலேசிய மன்னராக கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் மாதம் பதவியேற்ற மன்னர் ஐந்தாம் சுல்தான் முஹம்மது, தனது பதவிக்காலம் முடிவதற்கு முன்பாகவே கடந்த 6-ம் தேதி பதவி விலகினார். ரஷ்ய அழகியை அவர் திருமணம் செய்துகொண்டதால்தான் ராஜினாமா செய்ததாகத் தகவல்கள் வெளியாகின. ஆனால் அதுகுறித்து அரண்மனை கருத்து தெரிவிக்கவில்லை.

    இஸ்லாமிய மன்னர்களின் ஆளுகையின் கீழ் உள்ள மலேசியாவில், 9 மாநிலங்களில் அரச பரம்பரையினர் ஆட்சி செய்கின்றனர். இந்த மாநிலங்களில் உள்ள மன்னர் குடும்பத்தில் உள்ளவர்கள், சுழற்சி முறையில் ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை தேர்வு செய்யப்பட்டு மன்னராக முடிசூட்டப்படுகின்றனர்.



    அவ்வகையில், மன்னர் ஐந்தாம் சுல்தான் முஹம்மது பதவி விலகியதைத் தொடர்ந்து, பஹாங் மாநிலத்தின் தலைவரான சுல்தான் அப்துல்லா சுல்தான் அஹமது ஷா (வயது 59), கடந்த 24-ம் தேதி புதிய மன்னராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் நாட்டின் 16வது மன்னர் ஆவார்.

    இதையடுத்து கோலாலம்பூரில் உள்ள அரண்மனையில் புதிய மன்னர் பதவியேற்பு விழா இன்று நடைபெற்றது. அப்போது நாட்டின் 16-வது மன்னராக சுல்தான் அப்துல்லா பதவியேற்றுக்கொண்டார். இதேபோல் பெரேக் மாநில தலைவரான சுல்தான் நஸ்ரின் ஷா, துணை மன்னராகப் பொறுப்பேற்றுக்கொண்டார். விழாவில் பிரதமர் மகாதீர் முகமது மற்றும் அரச குடும்பத்தினர் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.

    விளையாட்டில் அதீத ஆர்வம் கொண்ட சுல்தான் அப்துல்லா, உலக கால்பந்து அமைப்பான பிபா உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு அமைப்புகளில் பொறுப்பு வகித்து வருவது குறிப்பிடத்தக்கது. #Malaysiaking #Malaysiakingabdicates #SultanAbdullah
    வங்காளதேசத்தில் சமீபத்தில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற ஷேக் ஹசினா, மீண்டும் பிரதமராக பதவியேற்றுக் கொண்டார். #SheikhHasina
    டாக்கா:

    வங்காளதேசத்தில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் ஷேக் ஹசினா தலைமையிலான அவாமி லீக் கட்சி மற்றும் முன்னாள் பிரதமர் கலிதா ஜியா தலைமையிலான வங்காளதேச தேசியவாத கட்சிகள் மோதின.

    மொத்தமுள்ள 300 தொகுதிகளில் ஷேக் ஹசினாவின் அவாமி லீக் கட்சி பெரும்பான்மை இடங்களை கைப்பற்றி அறுதிப் பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சி அமைத்தது. அவாமி லீக் கட்சி 281 இடங்களை கைப்பற்றியது. இதன்மூலம் மூன்றாவது முறையாக வங்காளதேச பிரதமராக ஷேக் ஹசினா ஆட்சி அமைக்கவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில், வங்காளதேச பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற ஷேக் ஹசினா, இன்று பிரதமராக மீண்டும் பதவியேற்றுக் கொண்டார். அவருடன் 46 மந்திரிகள் கொண்ட அமைச்சரவையும் பதவியேற்றுக் கொண்டது. #SheikhHasina
    ராஜஸ்தானில் 13 கேபினட் மந்திரிகள் மற்றும் 10 இணைமந்திரிகள் இன்று பதவியேற்றுக்கொண்டனர். அவர்களுக்கு கவர்னர் கல்யாண்சிங் பதவி பிரமாணம் செய்து வைத்தார். #AshokGehlot #Sachinpilot
    புதுடெல்லி:

    ராஜஸ்தான் சட்டசபைக்கு நடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. முதல்-மந்திரியாக அசோக் கெலாட், துணை முதல்-மந்திரியாக சச்சின் பைலட் பதவி ஏற்றனர்.

    இதையடுத்து ராஜஸ்தானில் புதிய மந்திரிசபை அமைப்பதற்கான ஆலோசனைகள் நடந்தன. 200 சட்டசபை தொகுதிகள் கொண்ட ராஜஸ்தானில் 15 சதவீதம் கணக்குபடி 30 எம்.எல்.ஏ.க்களை மந்திரிகளாக நியமனம் செய்ய முடியும்.

    அந்த அடிப்படையில் புதிய மந்திரிகள் நியமனத்திற்கான பட்டியலை முதல்-மந்திரி அசோக் கெலாட் தயாரித்தார். அந்த பட்டியலில் 40 பேர் பெயர் இடம் பெற்று இருந்தது.

    அந்த பட்டியலுடன் அசோக் கெலாட்டும், சச்சின் பைலட்டும் டெல்லி சென்றனர். அங்கு காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியுடன் ஆலோசனை நடத்தினார்கள். அப்போது முதல் கட்டமாக மந்திரிசபையில் 23 பேருக்கு இடம் அளிக்க தீர்மானிக்கப்பட்டது.



    அதில் 22 பேர் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ஆவார்கள். ஒருவர் ராஷ்டீரிய லோக் தளம் கட்சியைச் சேர்ந்தவர். இவர்களது பெயர் பட்டியலுடன் அசோக் கெலாட்டும், சச்சின் பைலட்டும் நேற்று இரவு டெல்லியில் இருந்து ராஜஸ்தான் திரும்பினார்கள்.

    இன்று மதியம் 12 மணியளவில் தலைநகர் ஜெய்ப்பூரில் புதிய மந்திரிகள் பதவி ஏற்பு விழா நடந்தது. 23 எம்.எல்.ஏ.க்கள் மந்திரிகளாக பதவி ஏற்றனர். அவர்களுக்கு கவர்னர் கல்யாண்சிங் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

    23 மந்திரிகளில் 13 பேர் காபினெட் அந்தஸ்து மந்திரிகள் ஆவார்கள். 10 பேர் ராஜாங்க மந்திரிகள் ஆவார்கள்.

    புதிதாக பதவி ஏற்ற 23 மந்திரிகளும் இன்றே தங்களது அலுவலகம் சென்று பணிகளை தொடங்கினார்கள். ராஜஸ்தானில் 2-ம் கட்டமாக மேலும் ஒரு சில மந்திரிகள் பதவி ஏற்பார்கள் என்று கூறப்படுகிறது.

    ராஜஸ்தான் மந்திரிசபையில் இளைஞர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்பதில் சச்சின் பைலட் மிகவும் தீவிரமாக இருந்தார். 50 சதவீத மந்திரி பதவிகளை கேட்டார். ஆனால் அசோக் கெலாட் அனுபவம் வாய்ந்தவர்களையே மந்திரிகளாக நியமிக்க வேண்டும் என்று போராடி வெற்றி பெற்று உள்ளார்.

    இதனால் ராஜஸ்தானில் சச்சின் பைலட் ஆதரவாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

    காங்கிரஸ் வெற்றி பெற்ற மத்தியபிரதேசம், சத்தீஸ்கர் மாநிலங்களில் நாளை புதிய மந்திரிகள் பதவி ஏற்க உள்ளனர். #AshokGehlot #Sachinpilot
    சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியாக இருந்த இந்திரா பானர்ஜி, வரும் 7ம் தேதி சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக பதவியேற்க உள்ளார். #IndiraBanerjee #SupremeCourt
    புதுடெல்லி:

    சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, ஒரிசா ஐகோர்ட் தலைமை நீதிபதி வினீர் சரண் மற்றும் உத்தரகாண்ட் ஐகோர்ட் தலைமை நீதிபதி கே.எம்.ஜோசப் ஆகியோரை சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக நியமனம் செய்ய கொலிஜியம் மத்திய அரசுக்கு சமீபத்தில் பரிந்துரை செய்தது. 
    கொலிஜியத்தின் பரிந்துரை அனைத்தையும் மத்திய சட்ட அமைச்சகம் மற்றும் பிரதமர் அலுவலகம் ஏற்றுக்கொண்டது. புதிதாக நியமிக்கப்பட்டவர்களோடு சேர்த்து சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளின் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது.

    இந்நிலையில், சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியாக இருந்த இந்திரா பானர்ஜி, வரும் 7ம் தேதி சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக பதவியேற்க உள்ளார். அன்றைய தினம் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா இவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்.

    இந்திரா பானர்ஜி நியமனத்தால் சுப்ரீம் கோர்ட்டில் உள்ள பெண் நீதிபதிகளின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது. ஏற்கனவே பானுமதி மற்றும் இந்து மல்கோத்ரா ஆகிய பெண் நீதிபதிகள் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளாக பதவி வகிக்கின்றனர். எனினும், 6 நீதிபதிகள் பணியிடங்கள் அங்கு இன்னும் காலியாக உள்ளன. 

    கடந்த 2002-ம் ஆண்டு கொல்கத்தா ஐகோர்ட் நீதிபதியாக நியமிக்கப்பட்ட இந்திரா பானர்ஜி, பின்னர் டெல்லி ஐகோர்ட் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். தொடர்ந்து, கடந்த 2017-ம் ஆண்டு சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியாக அவர் நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. #IndiraBanerjee #SupremeCourt
    பாராளுமன்ற தேர்தலில் அதிக இடங்களை பிடித்துள்ள தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி தலைவர் இம்ரான் கான் சுதந்திர தினமான ஆகஸ்ட் 14-ம் தேதிக்குள் பாகிஸ்தான் பிரதமராக பதவி ஏற்கிறார். #ImranKhan #ImranasPakPM
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் பாராளுன்றத்துக்கு கடந்த 25-ம் தேதி நடந்த தேர்தலில் 116 தொகுதிகளில் இம்ரான் கானின் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி வெற்றி பெற்றது. முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரிப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி 64 தொகுதிகளிலும், மறைந்த முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோவின் மகன் பிலாவல் பூட்டோ தலைமையிலான பாகிஸ்தான் மக்கள் கட்சி 43 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.

    முத்தாஹிதா மஜ்லிஸ் அமல் வேட்பாளர்கள் 12 இடங்களிலும், பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (காயிதே ஆஸம் பிரிவு), பலூசிஸ்தான் தேசிய கட்சி, பாகிஸ்தான் முத்தாஹிதா குவாமி இயக்கம், பலூசிஸ்தான் அவாமி கட்சி, அவாமி தேசிய கட்சி, அவாமி முஸ்லிம்  லீக், பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சானியத் மற்றும் ஜம்ஹூரி வட்டான் ஆகிய கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள் தலா ஒரு இடங்களில் வென்றுள்ளனர். ஆக உதிரி கட்சிகளிடம் தற்போது 20 எம்.பி.க்கள் உள்ளனர். இதுதவிர 14 தொகுதிகளில் சுயேட்சை வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.

    பாகிஸ்தானில் ஆட்சி அமைக்க மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட 137 எம்.பி.க்களின் ஆதரவு தேவை என்ற நிலையில், இந்த தேர்தலில் போதிய பெரும்பான்மையை எந்த கட்சியும் பெறவில்லை. அதிக இடங்களை பெற்ற கட்சி என்ற வகையில் கூட்டணி அரசு அமைக்க இம்ரான் கான் கடந்த இருநாட்களாக சில தலைவர்களுடன் மும்முரமாக பேசி வருகிறார்.



    இதற்கிடையில், 5 பாராளுமன்ற தொகுதிகளில் போட்டியிட்ட இம்ரான் கான், அவை ஐந்திலுமே வெற்றி பெற்றுள்ளார். இம்ரான் கட்சியின் சார்பில் கைபர் பக்துங்கவா மாகாணத்தின் முதல் மந்திரியாக முன்னர் பொறுப்பேற்றிருந்த பர்வேஸ் கட்டாக் என்பவர் இந்த தேர்தலில் பாராளுமன்றத்துக்கும் கைபர் பக்துங்கவா சட்டசபைக்கும் போட்டியிட்டு இரண்டிலுமே வெற்றி  பெற்றுள்ளார்.

    இதுமட்டுமின்றி, கைபர் பக்துங்கவா மாகாணத்தில் 66 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி அங்கு மீண்டும் ஆட்சி அமைக்கவுள்ளது. முதல் மந்திரியாக  பர்வேஸ் கட்டாக்-கை மீண்டும் நியமிக்க இம்ரான் கான் தீர்மானித்துள்ளார்.

    பாகிஸ்தான் முஸ்லிம் லீக் வேட்பாளராக போட்டியிட்ட முன்னாள் உள்துறை மந்திரி நிசார் அலி கான் சவுத்ரியை எதிர்த்து போட்டியிட்ட இம்ரான் கட்சி வேட்பாளரான குலாம் சர்வார் கான் இந்த தொகுதியில் வெற்றி பெற்றதுடன் மேலும் ஒரு பாராளுமன்ற தொகுதியிலும் வென்றுள்ளார்.

    எனவே, தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி சார்பில் குலாம் சர்வார் கான் ஒரு தொகுதியில் தனது எம்.பி.பதவியை ராஜினாமா செய்ய வேண்டியுள்ளது. இதேபோல், பக்துங்கவா மாகாண முன்னாள் முதல் மந்திரி பர்வேஸ் கட்டாக் தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்யவுள்ளார்.

    மேலும், 5 தொகுதிகளில் வெற்றிபெற்ற இம்ரான் கான் 4 தொகுதிகளில் ராஜினாமா செய்ய வேண்டியுள்ளது. இதனால், தற்போது 116 ஆக இருக்கும் இம்ரான் கான் கட்சியின் பலமானது, 6 எம்.பி. தொகுதி உறுப்பினர்களின் ராஜினாமாவுக்கு பின்னர் 110 ஆக மாறும் நிலை ஏற்பட்டுள்ளது.

    எனவே, 27 எம்.பி.க்களின் தயவுடன்தான் இம்ரான் கானின் பிரதமர் நாற்காலி கனவு மெய்ப்பட வேண்டும் என்னும் சூழல் உருவாகியுள்ளது.

    எந்த நிலையிலும், பாகிஸ்தான் முஸ்லிம் லீக் அல்லது பாகிஸ்தான் மக்கள் கட்சியின் ஆதரவை நாட மாட்டேன் என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ள இம்ரான் கான் சிறிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து ஆட்சியை பிடிக்கும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார். பாராளுமன்ற தேர்தலில் சுயேட்சைகளாக போட்டியிட்டு வெற்றிபெற்ற 14 எம்.பி.க்களிடமும் அவர் ஆதரவு கேட்டுள்ளார்.

    இந்நிலையில், பாகிஸ்தான் சுதந்திர தினமான ஆகஸ்ட் 14-ம் தேதிக்குள் இம்ரான் கான் பிரதமராக பதவி ஏற்று விடுவார் என தெஹ்ரீக் இ இன்சாப் கட்சியின் மேலிட தலைவர் நயீனுல் ஹக் குறிப்பிட்டுள்ளார். #ImranKhan #ImranasPakPM  
    பாகிஸ்தானில் நாடாளுமன்ற தேர்தலையொட்டி, இடைக்கால பிரதமராக நீதிபதி நசிருல் முல்க் பதவி ஏற்றார். #Pakistan #PrimeMinister #NasirulMulk
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானில் அடுத்த மாதம் 25-ந் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடக்க உள்ளது. இதையடுத்து அங்கு புதிய அரசு பதவி ஏற்கிறவரையில் இடைக்கால அரசு செயல்படும். அதன் பிரதமராக ஓய்வுபெற்ற நீதிபதி நசிருல் முல்க் (வயது 67), கடந்த வாரம் நியமிக்கப்பட்டார்.

    இஸ்லாமாபாத்தில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் முன்னாள் பிரதமர் அப்பாசி முன்னிலையில் எதிர்க்கட்சி தலைவர் குர்ஷித் ஷா, இடைக் கால பிரதமராக நீதிபதி நசிருல் முல்க் ஆளுங்கட்சியாலும், எதிர்க்கட்சியாலும் ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டு உள்ளதாக அறிவித்தார்.

    அங்கு இருந்து வந்த அப்பாசி தலைமையிலான பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சியின் ஆயுள், நேற்று முன்தினம் (வியாழக்கிழமை) முடிந்தது. பாகிஸ்தானில் இதுவரை 3 அரசுகள் மட்டுமே 5 ஆண்டு பதவிக்காலத்தை முழுமையாக நிறைவு செய்து உள்ளன. அதுவும், ஜனநாயக ரீதியிலான தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் அரசு என்றால், அப்பாசியின் அரசு அத்தகைய இரண்டாவது அரசு என்பது குறிப்பிடத்தக்கது.

    பாகிஸ்தான் நாடாளுமன்றம் கடந்த 16 ஆண்டுகளில் 7 பிரதமர்களை தேர்வு செய்து உள்ளது.

    இடைக்கால பிரதமர் பதவி ஏற்பு விழா, இஸ்லாமாபாத்தில் நேற்று நடந்தது. அவருக்கு ஜனாதிபதி மம்னூன் உசேன் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இவர் நாட்டின் 7-வது இடைக்கால பிரதமர் என்ற பெயரைப் பெறுகிறார்.

    பதவி ஏற்பு விழாவில் முன்னாள் பிரதமர் அப்பாசி, படை தளபதிகள், செனட் சபை தலைவர் சாதிக் சஞ்ச்ரானி மற்றும் உயர் அதிகாரிகள், அரசியல் தலைவர்கள் கலந்துகொண்டனர்.

    பதவி ஏற்பு விழா முடிந்ததும், இடைக்கால பிரதமர் நீதிபதி நசிருல் முல்குக்கு அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது.

    நீதிபதி நசிருல் முல்க், 1950-ம் ஆண்டு, ஆகஸ்டு மாதம் 17-ந் தேதி கைபர் பக்துங்குவா மாகாணத்தில் மிங்கோரா என்ற இடத்தில் பிறந்தவர். லண்டனில் பாரிஸ்டர் படிப்பு (சட்டப்படிப்பு) படித்து தேர்ச்சி பெற்றார். வக்கீலாக பணி ஆற்றி, பின்னர் பெஷாவர் ஐகோர்ட்டு நீதிபதியாக, அதன் தலைமை நீதிபதியாக, சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக, பின்னர் 2014-ம் ஆண்டு அதன் தலைமை நீதிபதியாக பதவி வகித்து உள்ளார். நல்ல நிர்வாகி என்று பெயர் பெற்று உள்ளார்.

    முஷரப் ஆட்சிக்காலத்தில் நெருக்கடி நிலை பிரகடனம் செய்யப்பட்டபோது, அதற்கு எதிராக தீர்ப்பு அளித்த 7 நீதிபதிகளில் ஒருவராக இருந்து, வீட்டுக்கு அனுப்பப்பட்டவர் என்பது நினைவுகூரத்தக்கது.

    நீதிபதி நசிருல் முல்க் தலைமையிலான இடைக்கால அரசு முக்கிய முடிவுகள் எதையும் எடுக்க முடியாது.

    நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட காலத்திற்கும், புதிய அரசு பதவி ஏற்கும் காலத்திற்கும் இடைப்பட்ட காலத்தில் அரசு நிர்வாகத்தை கவனிக்கிற பணியை மட்டும் செய்யும்.  #Pakistan #PrimeMinister #NasirulMulk #Tamilnews 
    குமாரசாமி பதவி ஏற்பு விழாவில் பங்கேற்க புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி நாளை மறுநாள் (புதன்கிழமை) பெங்களூரூ செல்கிறார்.

    புதுச்சேரி:

    கர்நாடக முதல் மந்திரியாக குமாரசாமி நாளை மறுநாள் பெங்களூரூவில் பதவி ஏற்கிறார். தனது பதவி ஏற்பு விழாவில் பங்கேற்க நாடு முழுவதும் உள்ள பல்வேறு கட்சிகளின் தலைவர்களுக்கு குமாரசாமி அழைப்பு விடுத்து வருகிறார்.

    அதுபோல் புதுவை முதல்- அமைச்சர் நாராயணசாமியையும் போனில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது தன்னுடைய பதவி ஏற்பு விழாவில் பங்கேற்க வருமாறு அழைப்பு விடுத்தார்.

    அப்போது குமாரசாமிக்கு வாழ்த்து தெரிவித்த நாராயணசாமி பதவி ஏற்பு விழாவில் பங்கேற்க வருவதாகவும் தெரிவித்தார்.

    எடியூரப்பா ராஜினாமா செய்த நிலையில் ஆட்சி அமைக்க உரிமை கோரி இன்றிரவு கவர்னரை சந்தித்த குமாரசாமி வரும் 21-ம் தேதி கர்நாடக முதல் மந்திரியாக பதவி ஏற்பதாக தகவல் வெளியாகியுள்ளது. #kumaraswamy #karnatakacmrace
    பெங்களூரு:

    கர்நாடக மாநிலத்தில் ஆட்சியை தக்கவைத்து கொள்ள சட்டசபையில் இன்று போதுமான பெரும்பான்மையை நிரூபிக்க முடியாததால் முதல் மந்திரி எடியூரப்பா தனது முதல் மந்திரி பதவியை ராஜினாமா செய்தார்.

    இதையடுத்து, ஏற்கனவே காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுடன் சேர்த்து 117 உறுப்பினர்களின் ஆதரவை பெற்ற தன்னை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என உரிமை கோரி இருந்த குமாரசாமிக்கு இன்று மாலை கவர்னர் அழைப்பு விடுத்தார்.

    இன்றிரவு, சுமார் 7.15 மணியளவில் ராஜ் பவனுக்கு சென்ற குமாரசாமி கவர்னர் வஜுபாய் வாலாவை சந்தித்தார். வரும் 21-ம் தேதி பிற்பகல் 12.30 மணியளவில் கர்நாடக மாநில முதல் மந்திரியாக குமாரசாமி பதவி ஏற்பார் என ராஜ் பவன் வட்டாரங்களை மேற்கோள் காட்டி பிரபல செய்தி நிறுவனங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. #kumaraswamy #karnatakacmrace
    கர்நாடக சட்டசபையில் நாளை மாலை 4 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. #KarnatakaCMRace #FloorTest
    புதுடெல்லி:

    கர்நாடகாவில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், அதிக இடங்கள் வென்ற கட்சி என்ற அடிப்படையில் எடியூரப்பா நேற்று முதல்வராக பதவியேற்றார். 15 நாட்களில் அவர் பெரும்பான்மையை நிரூபிக்க கவர்னர் உத்தரவிட்டார்.

    கவர்னரின் செயல்பாடு அரசியலமைப்புக்கு எதிரானது எனவே, எடியூரப்பா பதவியேற்றதை தடுக்க வேண்டும் என கவர்னர் அழைப்பு விடுத்த அன்றே இரவில், சுப்ரீம் கோர்ட்டில் காங்கிரஸ் மனு தாக்கல் செய்தது. நள்ளிரவில் இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், எடியூரப்பா பதவியேற்க தடையில்லை, எடியூரப்பா கவர்னரிடம் அளித்த கடித்தை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை இன்று தள்ளி வைத்தனர்.

    இதனை அடுத்து, மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத்மலானியும் கவர்னர் அழைப்பு விடுத்ததற்கு எதிராக மனு தாக்கல் செய்தார். இந்த இரு மனுக்களும் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. மத்திய அரசு சார்பில் தலைமை வழக்கறிஞர் வேணுகோபால், கர்நாடக பாஜக சார்பில் முகுல் ரோகித்கி, காங்கிரஸ் சார்பில் அபிஷேக் சிங்வி ஆஜராகினர்.


    வழக்கு விசாரணையின் போது, காங்கிரஸ் - மஜத கூட்டணிக்கு பெரும்பான்மை இருப்பதாக கூறிய நிலையில், பாஜகவை ஆளுநர் அழைத்தது ஏன்? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு, மஜதவின் அனைத்து எம்.எல்.ஏ.க்களும் குமாரசாமிக்கு ஆதரவாக கையெழுத்திடவில்லை எனவே நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட வேண்டும் என பாஜக தரப்பு வழக்கறிஞர் முகுல் ரோகித்கி பதிலளித்தார்.

    எடியூரப்பா நாளையே பெரும்பான்மையை நிரூபிக்க தயாரா? என நீதிபதிகள் கேட்டனர். காங்கிரஸ் - மஜத கூட்டணியை ஆட்சியமைக்க அழைக்க வேண்டும் என காங்கிரஸ் தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார். ஆளுநரின் முடிவை ஆய்வு செய்வது அல்லது நம்பிக்கை வாக்கெடுப்பு இரண்டில் எதாவது ஒன்றுதான் தீர்வு என நீதிபதி கருத்து தெரிவித்தார்.

    பெரும்பான்மையை நிரூபிக்க காங்கிரஸ் - மஜதவுக்கு முதலில் அழைப்பு விடுக்க வேண்டும் என காங்கிரஸ் தரப்பில் வாதிடப்பட்டது. அச்சமின்றி எம்.எல்.ஏ.க்கள் வாக்களிக்க வசதி செய்ய வேண்டும். ஓட்டெடுப்பு வீடியோ பதிவு செய்யப்பட வேண்டும் என கோரிக்கை விடப்பட்டது.

    ஆனால், பாஜக தரப்பில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த அவகாசம் கேட்கப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், பாஜகவின் கோரிக்கையை நிராகரித்தனர். நாளை மாலை 4 மணிக்கு கர்நாடக சட்டசபையில் எடியூரப்பா பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

    எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் நாளையே பதவியேற்க வேண்டும். மூத்த எம்.எல்.ஏ ஒருவர் தற்காலிக சபாநாயகராக செயல்பட வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவில் தெரிவித்தனர். எனினும், நம்பிக்கை வாக்கெடுப்பு ரகசியமாக நடக்காது என்பதை நீதிமன்றம் தெளிவு படுத்தியுள்ளது.

    ஓட்டெடுப்புக்கு வரும் எம்.எல்.ஏ.க்களுக்கு தகுந்த பாதுகாப்பு அளிக்க வேண்டும் என கர்நாடக டி.ஜி.பி.க்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    ஆங்கிலோ இந்தியன் எம்.எல்.ஏவை நியமித்த கர்நாடக கவர்னரின் உத்தரவுக்கும் நீதிபதிகள் தடை போட்டனர். பெரும்பான்மையை நிரூபிக்கும் வரை எந்த நியமனமும் இருக்க கூடாது. எடியூரப்பா கொள்கை ரீதியிலான எந்த முடிவும் எடுக்க கூடாது என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
    கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க. தனிப்பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியமைக்கும் சூழல் உள்ளது. முதலமைச்சராக எடியூரப்பா 17-ம் தேதி பதவியேற்க உள்ளார். #KarnatakaElections #KarnatakaVerdict #Yeddyurappa
    பெங்களூரு:

    கர்நாடக மாநிலத்தில் கடந்த 12-ம்தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. மொத்தம் உள்ள 224 தொகுதிகளில் 2 இடங்கள் தவிர 222 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இந்த தேர்தலில் 72.36 சதவீத ஓட்டுகள் பதிவான நிலையில், இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.

    தொடக்கத்தில் காங்கிரஸ் - பாஜக இடையே கடும் போட்டி நிலவியது. இரு கட்சிகளும் மாறிமாறி முன்னிலை பெற்றன. 9 மணிக்குப் பிறகு நிலைமை மாறியது. ஆட்சியமைக்க 112 இடங்கள் தேவை என்ற நிலையில், பா.ஜ.க அந்த மேஜிக் எண்ணை நெருங்கியது. 11.30 மணி நிலவரப்படி பா.ஜ.க. 114 தொகுதிகளில் முன்னிலை பெற்றது. இதன்மூலம் பா.ஜ.க. அதிக தொகுதிகளை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்கிறது. கர்நாடகா முதலமைச்சராக எடியூரப்பா பதவியேற்க உள்ளார்.

    தேர்தல் அன்றே செய்தியாளர்களை சந்தித்த எடியூரப்பா, கர்நாடகாவில் பா.ஜ.க. ஆட்சி அமைக்கும் என்று நம்பிக்கை தெரிவித்திருந்தார். 17-ம் தேதி பதவியேற்பு விழா நடைபெறும் என்றும், விழாவிற்கு பிரதமர் மோடியை அழைப்பதற்காக 15ம் தேதி டெல்லி செல்ல உள்ளதாகவும் கூறினார்.



    அவர் கூறியபடி இன்று தேர்தல் முடிவுகள் பா.ஜ.க.வுக்கு சாதகமாக உள்ளதால் எடியூரப்பா மிகுந்த உற்சாகத்தில் உள்ளார்.  தனது இல்லத்தில் வழிபாடு நடத்திய அவர், நிருபர்களிடம் கூறும்போது, 17-ம் தேதி பதவியேற்பு விழா நடக்கும் என்று தகவல் தெரிவித்து உள்ளார். பதவியேற்பு விழாவுக்காக கன்டீராவா ஸ்டேடியத்தை முன்பதிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிகின்றன. #KarnatakaElections #KarnatakaVerdict #Yeddyurappa
    ×