என் மலர்
நீங்கள் தேடியது "அசோக் கெலாட்"
- காங்கிரஸ் எதிர்காலத்தில் மற்றொரு பெரிய பிளவை சந்திக்க நேரிடும்- பிரதமர் மோடி.
- பிரதமர் மோடி, தனது சொந்த வீட்டை ஒழுங்கமைக்க வேண்டும்- கெலாட் பதிலடி.
பீகார் சட்டசபை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. இந்த கூட்டணி 202 இடங்களில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியை தொடர்ந்து டெல்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் பிரதமர் மோடி, பாஜக தொண்டர்களை சந்தித்து வெற்றியை அவர்களுடன் கொண்டாடினார். அப்போது அவர்கள் மத்தியில் பேசும்போது, "காங்கிரஸ் எதிர்காலத்தில் மற்றொரு பெரிய பிளவை சந்திக்க நேரிடும்" எனக் குறிப்பிட்டிருந்தார்.
இதற்கு அசோக் கெலாட் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கெலாட் எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
காங்கிரஸ் கட்சி பிளவு படும் என பிரதமர் மோடி கனவு கண்டு கொண்டிருக்கிறார். அவருடைய கருத்து முற்றிலும் அடிப்படை ஆதாரமற்றவை. காங்கிரஸ் கட்சி பற்றி கருத்து கூறுவதற்கு முன், பிரதமர் மோடி, தனது சொந்த வீட்டை ஒழுங்கமைக்க வேண்டும். ஏறக்குறைய இரண்டு ஆண்டுகள் ஆன நிலையில் கூட, பாஜக கட்சியால் அதன் புதிய தேசிய தலைவரை தேர்ந்தெடுக்க முடியாமல் உள்ளது. இதற்கு பாஜக- ஆர்எஸ்எஸ் இடையிலான மோதல்தான் காரணம்.
காங்கிரஸ் கட்சி ஒற்றுமையாக உள்ளது. தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசாங்கம் நாட்டிற்கு முன் உருவாக்கிய சவால்களை கட்சியின் மூத்த தலைவர்களும் இளம் தலைவர்களும் எதிர்கொள்ளும் திறன் கொண்டவர்களாக உள்ளனர்.
இவ்வாறு கெலாட் தெரிவித்து்ளளார்.
- காங்கிரஸ் - ஆர்ஜேடி கூட்டணி 35 இடங்களில் மட்டுமே வெற்றியை பதிவு செய்தது.
- பண பலம் இந்த தேர்தலில் விளையாடி உள்ளது.
பீகார் சட்டசபை தேர்தல் நடந்து முடிந்த நிலையில் பாஜக-ஜேடியுவின் தேசிய ஜனநாயக கூட்டணி 202 இடங்களில் வெற்றி பெற்று அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியை தக்கவைத்துள்ளது.
காங்கிரஸ் - ஆர்ஜேடி கூட்டணி 35 இடங்களில் மட்டுமே வெற்றியை பதிவு செய்தது. பீகார் தேர்தலிலும் வாக்கு மோசடி நடந்துள்ளதாக கர்நாடக முதல்வர் சித்தராமையா, சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், காங்கிரஸ் தேசிய செய்தி தொடர்பாளர் பவன் கேரா உள்ளிட்டோர் குற்றம்சாட்டியுள்ளனர்.
இந்நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவரும் ராஜஸ்தான் முன்னாள் முதல்வருமான அசோக் கெலாட் தேர்தல் ஆணையம் மீது குற்றம்சாட்டியுள்ளார்.
பீகாரில் தேர்தலுக்கு முன்னதாக மகளிர் தொழில்வளர்ச்சி திட்டம் என்ற பெயரில், 75 லட்சம் பெண்களின் வாங்கிக்கணக்குக்கு 10,000 ரூபாய் வழங்கப்பட்டது. கடந்த செப்டம்பர் 26ல் இந்த திட்டத்தை பிரதமர் மோடி துவங்கி வைத்தார்.
இதை விமர்சித்து செய்தியாளர்களிடம் அசோக் கெலாட் பேசுகையில், பீகார் சட்டமன்றத் தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன் பெண்களுக்கு, 10,000 ரூபாய் நிதி விடுவிக்கப்பட்டது. இதை தேர்தல் ஆணையம் தடுக்காமல் வேடிக்கை பார்த்தது. ராகுல் கூறிய வாக்கு திருட்டு இது தான். பண பலம் இந்த தேர்தலில் விளையாடி உள்ளது.
இதனால் மட்டுமே தேசிய ஜனநாயக கூட்டணி வென்றிருக்கலாம். ஆனால், காங்கிரசின் சித்தாந்தம் நாட்டிற்கு நன்மை பயக்கும் ஒன்று" என்று தெரிவித்தார்.
- லாலு பிரசாத் மற்றும் தேஜஸ்வி யாதவ் ஆகியோருடன் நல்ல விதமான ஆலோசனையில் ஈடுபட்டேன்.
- தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எதிராக இந்தியா கூடடணியில் உள்ள அனைத்து கட்சிகளும் ஒற்றுமையாக போட்டியிடும்.
பீகார் சட்டசபை தேர்தலில் இந்தியா கூட்டணியில் ஏற்பட்ட குழப்பம் இன்னும் முடிவுக்கு வரவில்லை. இந்த கூட்டணியில் முக்கிய அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சியும், ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியும் கடைசி வரை தொகுதி பங்கீடு செய்யவில்லை.
இதனால் குறிப்பிட்ட தொகுதிகளில் அவர்களுக்கு இடையே போட்டி ஏற்பட்டு உள்ளது. இந்த பிரச்சினை மேலும் விரிசலை ஏற்படுத்தாமல் இருப்பதற்காக ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவர் தேஜஸ்வி யாதவை காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான ராஜஸ்தான் முன்னாள் முதல்-மந்திரி அசோக் கெலாட் சந்தித்து பேசினார்.
சந்திப்புக்குப்பின் அசோக் கெலாட் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
லாலு பிரசாத் மற்றும் தேஜஸ்வி யாதவ் ஆகியோருடன் நல்ல விதமான ஆலோசனையில் ஈடுபட்டேன். தற்போதுள்ள சூழ்நிலை குறித்து மீடியாக்களுக்கு தெரிவிக்க நாளை பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடத்துவோம். தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எதிராக இந்தியா கூடடணியில் உள்ள அனைத்து கட்சிகளும் ஒற்றுமையாக போட்டியிடும்.
இந்தியா கூட்டணியில் எல்லாம் நன்றாக உள்ளது. மீடியாக்களில் என்னவெல்லாம் சொல்லப்படுகிறதோ, அது சரியானது அல்ல. கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு இடையில் நட்பு ரீதியிலான போட்டி ஐந்து முதல் ஏழு தொகுதிகளில் ஏற்பட்டுள்ளது. இதை வேறுவிதமான எடுத்துக் கொள்ளக் கூடாது.
ராகுல் காந்தி, தேஜஸ்வி யாதவ் விரைவில் தேர்தல் பிரசாரத்தை இணைந்து தொடங்குவார்கள். பீகாரில் 243 இடங்கள் உள்ளன. மற்ற மாநிலங்களிலும் நட்பு ரீதியிலான போட்டி நிகழ்ந்துள்ளது. மகாகூட்டணி உறுதியாக உள்ளது. பாஜக மற்றும் ஐக்கிய ஜனதா தளத்திற்கு எதிராக ஒன்றுமையாக போட்டியிடும்.
இவ்வாறு அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.
- 2020 ஆம் ஆண்டு ராஜஸ்தான் காங்கிரசில் விரிசல் ஏற்பட்டது.
- முதல்வர் பதவி கெலாட்டுக்குச் சென்றதிலிருந்தே பைலட் - கெலாட் இடையேயான பகைமை தொடங்கியது
ராஜஸ்தான் காங்கிரஸ் அரசியலில் நீண்டகாலமாக நடந்து வந்த அரசியல் மோதலுக்கு ஒரு திருப்புமுனையாக, காங்கிரஸ் பொதுச் செயலாளர் சச்சின் பைலட், முன்னாள் மாநில முதல்வர் அசோக் கெலாட்டை நேற்று ஜெய்ப்பூரில் சந்தித்தார்.
இந்த சந்திப்பு இரு தலைவர்களுக்கும் இடையிலான வேறுபாடுகளை முடிவுக்குக் கொண்டு வந்து நல்லிணக்கத்திற்கான சாத்தியக்கூறுகள் குறித்த விவாதத்துக்கு வலு சேர்த்துள்ளது.
சச்சின் பைலட், தனது தந்தை, மறைந்த மத்திய அமைச்சர் ராஜேஷ் பைலட்டின் 25வது நினைவு தின நிகழ்வில் கலந்துகொள்ள அசோக் கெலாட்டை தனிப்பட்ட முறையில் அழைப்பு விடுத்தார். இந்த நினைவு நிகழ்ச்சி வரும் ஜூன் 11 ஆம் தேதி ராஜேஷ் பைலட்டின் முன்னாள் நாடாளுமன்றத் தொகுதியான தௌசாவில் நடைபெறுகிறது.
2020 ஆம் ஆண்டு ராஜஸ்தான் காங்கிரசில் வெடித்த அரசியல் நெருக்கடிக்குப் பிறகு நடைபெறும் முதல் சந்திப்பு இது என்பதால், இது முக்கியத்துவம் பெறுகிறது.
2018 சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்ற பிறகு முதல்வர் பதவி கெலாட்டுக்குச் சென்றதிலிருந்தே பைலட் - கெலாட் இடையேயான பகைமை தொடங்கியது. 2020இல் பைலட் தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன் இந்த மோதலை உச்சத்திற்குக் கொண்டு சென்றது. இந்தச் சூழலில் இந்தச் சந்திப்பு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
- மோடிக்கு எதிரான சவால் மிகப் பெரியது என்று நான் உணர்கிறேன்.
- மல்லிகார்ஜூன கார்கே பதவியேற்பு விழாவில் கலந்து கொண்ட அசோக் கெலாட் பேட்டி.
டெல்லியில் காங்கிரஸ் தலைவராக மல்லிகார்ஜூன கார்கே பதவி ஏற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட், பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:

ராகுல் காந்தி மீண்டும் காங்கிரஸ் தலைவராக வர வேண்டும் என்று நாங்கள் விரும்பினோம், ஏனெனில் அவர் மட்டுமே பாஜக மற்றும் பிரதமர் நரேந்திர மோடிக்கு சவால் விட முடியும். அன்பு, பாசம் கலந்த அரசியல் இருக்க வேண்டும், வெறுப்பு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்ற செய்தியை ராகுல்காந்தியின் யாத்திரை நாட்டுக்கு தெரிவித்துள்ளது. விலைவாசி உயர்வு, வேலையில்லாத் திண்டாட்டம் போன்ற பிரச்னைகளையும் அவர் எழுப்பியுள்ளார்.
சோனியாகாந்தி குடும்பம் அல்லாத கட்சித் தலைவர் இருக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்ட பிறகு கார்கே பொறுப்பேற்றார். சவால் மிகப் பெரியது என்று நான் உணர்கிறேன். சோனியாகாந்தி என்ன முடிவு எடுத்தாலும் அது மதிக்கப்படும் மற்றும் அவரது கரங்கள் பலப்படுத்தப்படும் என்பதை நாங்கள் அனைவரும் உறுதி செய்வோம். நாடு பெரிய சவால்களை எதிர்கொள்ளும் நேரத்தில் காங்கிரஸுக்கு இது ஒரு புதிய தொடக்கம். சோனியாகாந்தி அரசியலுக்கு வந்த போது அவருக்கு எதிராக இருந்தவர்கள் அவரது அபிமானிகளாக மாறினார்கள்.
இன்று காங்கிரஸ் தலைவர் பதவியை சோனியா காந்தி ராஜினாமா செய்தது அனைத்து காங்கிரஸ்காரர்களுக்கும் ஒரு உணர்ச்சிகரமான தருணம். சோனியா காந்தியின் வழிகாட்டுதல் கட்சிக்கு விலைமதிப்பற்றது. 2004 மற்றும் 2009 ஆம் ஆண்டுகளில், பாஜகவை தோற்கடித்து மத்தியில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசை காங்கிரஸ் அமைத்தது. சோனியா பிரதமர் பதவியையும் துறந்து, காங்கிரஸை ஒரு குடும்பம் போல் நடத்தினார். இந்த தியாகம், பாசம் மற்றும் சொந்தம் ஆகியவற்றின் காரணமாக, அவரது தலைமையின் கீழ் கட்சி ஒன்றுபட்டது மற்றும் பல கட்சிகளுடன் கூட்டணி அமைத்து ஐக்கிய முற்போக்கு கூட்டணியை உருவாக்கியது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
- சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 13 மாதங்கள்தான் உள்ளன.
- கட்சியின் சட்ட திட்டங்களும், விதிகளும் எல்லோருக்கும் ஒன்றுதான்.
ஜெய்ப்பூர் :
காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு ராஜஸ்தான் மாநில முதல்-மந்திரி அசோக்கெலாட் போட்டியிட விரும்பினார். ஒருவருக்கு ஒரு பதவி என்பதில் காங்கிரஸ் மேலிடம் உறுதியாக இருப்பதால், அவர் கட்சித்தலைவர் பதவிக்கு போட்டியிட்டால், அங்கு முதல்-மந்திரியை மாற்றி விடலாம் என முடிவுக்கு வந்தது. குறிப்பாக நீண்ட காலமாக அந்தப் பதவி மீது கண் வைத்துள்ள சச்சின் பைலட்டை முதல்-மந்திரி ஆக்க முடிவு எடுத்தது. இதற்காக ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடத்தி புதிய முதல்-மந்திரியை தேர்வு செய்ய மேலிடம் மல்லிகார்ஜூன கார்கேயையும், அஜய் மக்கானையும் ராஜஸ்தான் அனுப்பியது.
ஆனால் முதல்-மந்திரி பதவியை விட்டுக்கொடுக்க அசோக் கெலாட் முன்வரவில்லை. எனவே மேலிட முடிவுக்கு எதிராக அசோக் கெலாட் ஆதரவாளர்கள் போர்க்கொடி தூக்கியதுடன், எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தை புறக்கணித்தனர். மேலும் போட்டி கூட்டமும் நடத்தினர். இது கட்சி விரோத செயலுக்காக பார்க்கப்பட்டது.
இதையொட்டி மந்திரிகள் சாந்தி தாரிவால், மகேஷ் ஜோஷி, ராஜஸ்தான் சுற்றுலா வளர்ச்சி கழக தலைவர் தர்மேந்திர ரத்தோர் உள்ளிட்டோருக்கு காங்கிரஸ் மேலிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது.
ஆனால் அசோக் கெலாட், சோனியா காந்தியை சந்தித்து பேசி தனது ஆதரவாளர்களின் செயல்களுக்கு தார்மீகப்பொறுப்பேற்று மன்னிப்பு கேட்டதுடன், காங்கிரஸ் தலைவர் போட்டியில் இருந்து பின்வாங்கினார். இத்துடன் இந்த விவகாரம் முடிவுக்கு வந்து விட்டது என கருதப்பட்டது.
ஆனால் அது நீறுபூத்த நெருப்பாக தொடர்கிறது.
இந்த விவகாரத்தில் இப்போது சச்சின் பைலட் போர்க்கொடி தூக்கி உள்ளார். காங்கிரஸ் தலைமையின் முடிவுக்கு எதிராக செயல்பட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளார். இதுபற்றி அவர் கூறியதாவது:-
கட்சி விரோத நடவடிக்கைக்காக நோட்டீஸ் அனுப்பப்பட்டவர்கள் மீது கட்சித்தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 13 மாதங்கள்தான் உள்ளன. காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் போன்று என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அதை விரைவாக எடுக்க வேண்டும்.
கட்சியின் சட்ட திட்டங்களும், விதிகளும் எல்லோருக்கும் ஒன்றுதான். இந்த விவகாரத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே விரைவாக முடிவு எடுக்க வேண்டும்.
ஒரு நிகழ்ச்சியின்போது ராஜஸ்தான் முதல்-மந்திரி அசோக் கெலாட்டை பிரதமர் மோடி புகழ்ந்துள்ளார். இதை எளிதாக எடுத்துக்கொண்டு விட முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த விவகாரத்தில் சச்சின் பைலட்டின் போர்க்கொடி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு தலைவலியை ஏற்படுத்தி உள்ளது.
- ஒரு பொதுவான நபரை அனைத்து எதிர்க்கட்சிகளும் இணைந்து முடிவுசெய்யும்.
- ஆம் ஆத்மி கட்சி மக்களை தவறாக வழிநடத்துவதாக அசோக் கெலாட் குற்றச்சாட்டு
சிம்லா:
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ராஜஸ்தான் முதல்-மந்திரியுமான அசோக் கெலாட் கூறியதாவது:-
முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் 'இந்திய ஒற்றுமை பயணம்' மூலம் முன்னிலைப்படுத்தி வரும் விஷயங்கள் பொது மக்களுடன் தொடர்புடையவை. அவரது செய்தி நாட்டின் ஒவ்வொரு வீட்டிற்கும் சென்றடைகிறது. அடுத்த ஆண்டு நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடிக்கு சவால் விடக்கூடிய தகுதி ராகுல் காந்திக்கு உள்ளது. ஆனால் ஒரு பொதுவான நபரை அனைத்து எதிர்க்கட்சிகளும் இணைந்து முடிவுசெய்யும்.
குஜராத், இமாச்சல பிரதேசம் ஆகிய இரு மாநிலங்களிலும் அரசுக்கு எதிரான அலை உள்ளது. காங்கிரஸ் வேகமாக முன்னேறி வருகிறது. இமாச்சலப் பிரதேசத்தில் காங்கிரஸ் முழுப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். குஜராத் மாநிலத்தில் இப்போதுதான் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. 175 சட்டமன்றத் தொகுதிகளைக் கடந்து ஐந்து யாத்திரைகளை நாங்கள் மேற்கொண்டுள்ளோம். நாங்கள் சிறப்பாகச் செயல்படுவோம் என்று நம்புகிறேன்.
இவ்வாறு அசோக் கெலாட் கூறினார்.
குஜராத்தில் ஆம் ஆத்மியின் தாக்கம் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், "ஆம் ஆத்மி கட்சி மக்களை தவறாக வழிநடத்துகிறது. ஊடகங்களைக் கைப்பற்றியுள்ளது. இதைத் தவிர வேறு எதுவும் இல்லை" என்று அசோக் கெலாட் தெரிவித்தார்.
தற்போது நடைபெறும் சட்டமன்றத் தேர்தல்களில் ராகுல் காந்தி பிரசாரம் செய்யாதது தொடர்பாக எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த கெலாட், "ராகுல் காந்தியின் பாதயாத்திரை பயணம் இருப்பதால் பல மாநிலங்களுக்கு செல்ல முடியவில்லை. காரணமே இல்லாமல் அதை பிரச்சனை ஆக்க பார்க்கிறார்கள்" என்றார்.
- ஆளும் கட்சியின் ஏமாற்று வித்தை குஜராத் அரசியலில் இனி பலிக்காது.
- இந்த முறை குஜராத்தில் ஆச்சரியமான தேர்தல் முடிவுகள் இருக்கும்.
சூரத்:
குஜராத்தில் சட்டசபைத் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ள நிலையில், பிரதமர் மோடி, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா உள்பட பாஜக தலைவர்கள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டுள்ளனர். மூன்றாவது நாளாக இன்று குஜராத்தில் மூன்று பொதுக்கூட்டங்களில் பிரதமர் உரையாற்றுகிறார்.
மற்றொருபுரம் ஆம்ஆத்மி தொண்டர்களை ஆதரித்து அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவாலும் தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார். இந்நிலையில் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து ராகுல் காந்தி இன்று தனது முதல் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேச உள்ளதாக அக்கட்சி தெரிவித்துள்ளது. சூரத் மாவட்டத்தில் உள்ள மஹுவாவில் மற்றும் ராஜ்கோட் பகுதிகளில் நடைபெறும் பொதுக் கூட்டங்களில் ராகுல் காந்தி பங்கேற்று பேசுவார் என கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் குஜராத்தில் ஆளும் பாஜகவுக்கு எதிராக மக்கள் கொந்தளிப்பில் உள்ளதாக ராஜஸ்தான் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான அசோக் கெலாட், தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளதாவது:
பொதுமக்களின் மனநிலை பாஜகவுக்கு எதிராக இருப்பதால், குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் 125 இடங்களில் வெற்றி பெறும். மோர்பி பாலம் விபத்து சம்பவம் குறித்து உயர்நீதிமன்ற நீதிபதி அல்லது ஓய்வு பெற்ற நீதிபதி மூலம் நியாயமான விசாரணை நடத்த வேண்டும் என்று நாங்கள் கோரிக்கை வைத்தோம், ஆனால் அது நடக்கவில்லை. தற்போது குஜராத் உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரணை நடத்துகிறது.
குஜராத்தில் கள்ளச் சாராயத்தால் ஏராளமான மக்கள் உயிரிழந்தது உள்ளிட்ட முக்கிய விவகாரங்களில் ஆளும் கட்சியின் ஏமாற்று வித்தை இனி பலிக்காது. இந்த முறை ஆச்சரியமான தேர்தல் முடிவுகள் இருக்கும். மோடியும், அமித்ஷாவும் வாரந்தோறும் குஜராத்திற்கு வந்தால் என்ன அர்த்தம்? அவர்களின் பலவீனமான நிலையை அது காட்டுகிறது. அதனால் இருவரும் இங்கு முகாமிட்டுள்ளனர்.
ராகுல் காந்தி, பாத யாத்திரைக்கு முன்னுரிமை அளித்து வருவதால் இதுவரை இங்கு வரவில்லை, ஆனால் அவர் எழுப்பும் பிரச்சினைகள் இங்குள்ள ஒவ்வொரு வீட்டாருக்கும் தெரியும். இமாச்சல பிரதேச தேர்தலில் பிரச்சாரத்தை ஆம் ஆத்மி திடீரென வாபஸ் பெற்றது குறித்து கேஜ்ரிவாலைக் கேட்க வேண்டும். அவர்கள் இங்கிருந்து வெளியேறினால் யாருக்குத் தெரியும்? அவர்கள் பாஜகவுடன் கூட்டுச் சேர்கிறார்களா? அவர்களின் நம்பகத்தன்மை குறைந்து விட்டது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- சச்சின் பைலட் 2020-ம் ஆண்டு காங்கிரசுக்கு எதிராக கொடி பிடித்தவர்.
- பைலட் காங்கிரசுக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டதில் அமித்ஷாவுக்கு தொடர்பு உள்ளது.
புதுடெல்லி :
ராஜஸ்தான் காங்கிரஸ் கட்சியில் முதல்-மந்திரி அசோக் கெலாட்டுக்கும், அங்கு முதல்-மந்திரியாக துடிக்கிற சச்சின் பைலட்டுக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கு உள்ளது.
இந்த நிலையில், அசோக் கெலாட் செய்தி சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
சச்சின் பைலட் 2020-ம் ஆண்டு காங்கிரசுக்கு எதிராக கொடி பிடித்தவர். எனது அரசை கவிழ்க்க முயன்றார். துரோகியான அவரை ராஜஸ்தான் முதல்-மந்திரி ஆக்க முடியாது.
பைலட் காங்கிரசுக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டதில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவுக்கு தொடர்பு உள்ளது. அவருக்கு ஆதரவான எம்.எல்.ஏ.க்களை ஒரு மாதத்துக்கும் மேலாக குருகிராமில் ஒரு விடுதியில் தங்க வைத்தனர். மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் அவர்களை சந்தித்தார். பைலட் உள்ளிட்ட அந்த எம்.எல்.ஏ.க்களுக்கு ஒவ்வொருவருக்கும் ரூ.10 கோடி கொடுக்கப்பட்டதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது. அடுத்த ஆண்டு நடக்க உள்ள சட்டசபை தேர்தலுக்கு உதவும் என கட்சித்தலைமை கருதினால், என்னை மாற்றட்டும். பைலட் தவிர்த்து 102 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களில் யாரை வேண்டுமானாலும் முதல்-மந்திரி ஆக்கட்டும். கட்சியின் தலைவர், தனது சொந்த கட்சியின் அரசை கவிழ்க்க முயற்சித்த உதாரணத்தை ஒருவரும் கண்டிருக்க முடியாது.
இதுவரை அவர் எம்.எல்.ஏ.க்களிடம் மன்னிப்பு கேட்டதில்லை.
அவர் மன்னிப்பு கேட்டிருந்தால், நான் (சோனியாவிடம்) மன்னிப்பு கேட்க வேண்டி வந்திருக்காது.
கட்சித்தலைமை பைலட்டை முதல்-மந்திரியாக்க முடிவு எடுத்தால், என்ன செய்வீர்கள் என கேட்கிறீர்கள்.
இது அனுமானத்தின் அடிப்படையிலானது. இது எப்படி நடக்கும்? அது நடக்காது.
ராஜஸ்தானுக்கு காங்கிரஸ் தலைமை நீதி வழங்கும் என்று நம்புகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- அசோக் கெலாட்டுக்கும், சச்சின் பைலட்டுக்கும் இடையிலான மோதல் முற்றி உள்ளது.
- காங்கிரசால் மட்டுமே பா.ஜனதாவை தோற்கடிக்க முடியும்.
புதுடெல்லி :
ராஜஸ்தான் மாநில முதல்-மந்திரி அசோக் கெலாட்டுக்கும், அம்மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏ. சச்சின் பைலட்டுக்கும் இடையிலான மோதல் முற்றி உள்ளது. சச்சின் பைலட் ஒரு துரோகி, அவர் முதல்-மந்திரி ஆக முடியாது என்று அசோக் கெலாட் கூறியிருந்தார்.
இதற்கு சச்சின் பைலட் பதில் அளித்துள்ளார். ஒரு தனியார் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:-
அசோக் கெலாட் என்னை குறிவைத்து பேசி இருப்பதை பார்த்தேன். என்னை 'துரோகி', 'உபயோகம் இல்லாதவன்' என்றெல்லாம் அவர் கூறி இருக்கிறார்.
இத்தகைய அவதூறு வார்த்தைகளை பேசுவது நீண்டகால அனுபவம் வாய்ந்த, ஒரு மூத்த தலைவருக்கு அழகல்ல. அவர் சொல்வது அடிப்படையற்ற குற்றச்சாட்டுகள்.
நீண்ட காலமாகவே அசோக் கெலாட் என் மீது குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார். இந்த நேரத்தில் நாம் பா.ஜனதாவுக்கு எதிராக ஒற்றுமையாக போராட வேண்டும்.
அசோக் கெலாட் மூத்த பார்வையாளராக உள்ள குஜராத் சட்டசபை தேர்தலில் வெற்றி பெறுவதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். பாதயாத்திரை மேற்கொண்டுள்ள ராகுல்காந்தியின் கரத்தையும், கட்சியையும் வலுப்படுத்த முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.
இது, பா.ஜனதாவை தோற்கடிக்க ஒன்றுபட்டு போராட வேண்டிய நேரம். ஏனென்றால், காங்கிரசால் மட்டுமே பா.ஜனதாவை தோற்கடிக்க முடியும். இந்த நேரத்தில் மாறி மாறி சேறு வாரி வீசுவது, எந்த பயனையும் அளிக்காது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையே, அசோக் கெலாட்-சச்சின் பைலட் மோதல் தீர்த்து வைக்கப்படும் என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
இதுகுறித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறியிருப்பதாவது:-
அசோக் கெலாட், அனுபவம் வாய்ந்த, மூத்த அரசியல் தலைவர். தனது இளைய சகா சச்சின் பைலட்டுடன் அவருக்கு என்ன கருத்து வேறுபாடு இருந்தாலும், கட்சிக்கு வலுவூட்டும்வகையில் அதற்கு தீர்வு காணப்படும்.
இந்த நேரத்தில் பாதயாத்திரைக்கு வடமாநிலங்களிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவதுதான் ஒவ்வொரு காங்கிரசாரின் கடமையாக இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- சமூக ஊடகங்களில் மட்டுமே பாத யாத்திரைக்கு அமோக ஆதரவு கிடைத்து வருகிறது.
- அத்வானி யாத்திரை குறித்து தேசிய ஊடகங்கள் பெரிய அளவில் செய்திகள் வெளியிட்டன.
ஜாலாவர்:
கன்னியாகுமரியில் இருந்து கடந்த செப்டம்பர் 7ஆம் தேதி தொடங்கிய காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பாதயாத்திரை, மத்திய பிரதேச மாநிலத்தை கடந்து ராஜஸ்தான் மாநிலத்திற்குள் நுழைந்துள்ளது. இது குறித்து நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அம்மாநில முதலமைச்சர் அசோக் கெலாட் கூறியுள்ளதாவது:

தேசிய செய்தி ஊடகங்களின் ஆசிரியர்கள் மற்றும் ஊடகங்களின் உரிமையாளர்கள் மீது அழுத்தம் கொடுக்கப் படுகிறது. இதனால் முக்கிய தேசிய ஊடகங்கள் பாத யாத்திரை குறித்த செய்திகளை புறக்கணித்து விட்டன. ஜனநாயகத்தின் நான்காவது தூணாக இருக்கும் ஊடகங்கள் கடமையை நிறைவேற்ற முழுமையாகத் தவறி விட்டன.
வரலாறு அவர்களை மன்னிக்காது. நாடு முழுவதிலும் சமூக ஊடகங்களில் யாத்திரைக்கு அமோக ஆதரவு கிடைத்து வருகிறது. லட்சக்கணக்கான மக்கள் பாத யாத்திரையில் இணைகிறார்கள். ஆனால் தேசிய ஊடகங்கள் அதற்கு ஆதரவளிக்கவில்லை. சமூக நோக்கத்திற்கும. அவர்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை. 1
1990-ல் பாஜக மூத்த தலைவர் லால் கிருஷ்ண அத்வானி யாத்திரை சென்ற போது ஊடகங்கள் அதை பெரிய அளவில் செய்தியாக்கவில்லையா? நடந்ததைச் சொல்வது ஊடகங்களின் கடமை. ராகுல் காந்தி நேர்மறை சிந்தனையுடன் பயணம் செய்கிறார், இது நேர்மறை யாத்திரை, வன்முறை இல்லை, வெறுப்பு இல்லை. இந்த யாத்திரையை எடுத்து கூறி நீங்கள் உங்கள் கடமையைச் செய்யவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- மத்தியில் பாஜக ஆட்சிக்கு வருவதற்கு முன்பு வரை சிலிண்டர் ரூ.410க்கு விற்கப்பட்டடதாக அசோக் கெலாட் பேச்சு
- ராஜஸ்தானில் அடுத்த ஆண்டு இறுதியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.
ஜெய்ப்பூர்:
காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தான் மாநிலத்தில் அடுத்த ஆண்டு முதல் பொதுமக்களுக்கு சமையல் எரிவாயு சிலிண்டரை 500 ரூபாய்க்கு வழங்க முடிவு செய்துள்ளது. வறுமைக் கோட்டுககு கீழ் உள்ளவர்களுக்கு வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் 500 ரூபாய்க்கு கேஸ் சிலிண்டர் வழங்கப்படும் என முதல்வர் அசோக் கெலாட் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக இந்திய ஒற்றுமை பயண பொதுக்கூட்டத்தில் அசோக் கெலாட் பேசுகையில், 'ஏழைகள் மற்றும் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங்கள் மற்றும் உஜ்வாலா யோஜனா திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளவர்கள் குறித்து ஆய்வு செய்து வகைப்படுத்தப்படும். பின்னர், ஏப்ரல் 1ம் தேதி முதல் 500 ரூபாய்க்கு அவர்களுக்கு சிலிண்டர் வழங்கப்படும். இது தொடர்பாக வரும் பட்ஜெட்டில் கூடுதல் தகவல்கள் வெளியிடப்படும். மேலும் பல்வேறு திட்டங்களும் அறிவிக்கப்படும்' என்றார்.
மத்தியில் பாஜக ஆட்சிக்கு வருவதற்கு முன்பு 2014-ஆம் ஆண்டு வரை ரூ.410க்கு விற்கப்பட்ட சமையல் எரிவாயு சிலிண்டர், இப்பாது ரூ.1,040க்கு விற்கப்படுகிறது என்று பிரதமர் நரேந்திர மோடியையும் அசோக் கெலாட் விமர்சனம் செய்தார்.
ராஜஸ்தானில் அடுத்த ஆண்டு இறுதியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளை காங்கிரஸ் தொடங்கியுள்ள இந்த நேரத்தில், ஏழைகளுக்கு ரூ.500க்கு சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வழங்கப்படும் என்று கெலாட் வாக்குறுதி அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.






