என் மலர்
இந்தியா

நட்புரீதியான போட்டியை முரண்பாடாக பார்க்கக் கூடாது: லாலு, தேஜஸ்வியை சந்தித்த பின் அசோக் கெலாட் பேச்சு
- லாலு பிரசாத் மற்றும் தேஜஸ்வி யாதவ் ஆகியோருடன் நல்ல விதமான ஆலோசனையில் ஈடுபட்டேன்.
- தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எதிராக இந்தியா கூடடணியில் உள்ள அனைத்து கட்சிகளும் ஒற்றுமையாக போட்டியிடும்.
பீகார் சட்டசபை தேர்தலில் இந்தியா கூட்டணியில் ஏற்பட்ட குழப்பம் இன்னும் முடிவுக்கு வரவில்லை. இந்த கூட்டணியில் முக்கிய அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சியும், ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியும் கடைசி வரை தொகுதி பங்கீடு செய்யவில்லை.
இதனால் குறிப்பிட்ட தொகுதிகளில் அவர்களுக்கு இடையே போட்டி ஏற்பட்டு உள்ளது. இந்த பிரச்சினை மேலும் விரிசலை ஏற்படுத்தாமல் இருப்பதற்காக ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவர் தேஜஸ்வி யாதவை காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான ராஜஸ்தான் முன்னாள் முதல்-மந்திரி அசோக் கெலாட் சந்தித்து பேசினார்.
சந்திப்புக்குப்பின் அசோக் கெலாட் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
லாலு பிரசாத் மற்றும் தேஜஸ்வி யாதவ் ஆகியோருடன் நல்ல விதமான ஆலோசனையில் ஈடுபட்டேன். தற்போதுள்ள சூழ்நிலை குறித்து மீடியாக்களுக்கு தெரிவிக்க நாளை பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடத்துவோம். தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எதிராக இந்தியா கூடடணியில் உள்ள அனைத்து கட்சிகளும் ஒற்றுமையாக போட்டியிடும்.
இந்தியா கூட்டணியில் எல்லாம் நன்றாக உள்ளது. மீடியாக்களில் என்னவெல்லாம் சொல்லப்படுகிறதோ, அது சரியானது அல்ல. கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு இடையில் நட்பு ரீதியிலான போட்டி ஐந்து முதல் ஏழு தொகுதிகளில் ஏற்பட்டுள்ளது. இதை வேறுவிதமான எடுத்துக் கொள்ளக் கூடாது.
ராகுல் காந்தி, தேஜஸ்வி யாதவ் விரைவில் தேர்தல் பிரசாரத்தை இணைந்து தொடங்குவார்கள். பீகாரில் 243 இடங்கள் உள்ளன. மற்ற மாநிலங்களிலும் நட்பு ரீதியிலான போட்டி நிகழ்ந்துள்ளது. மகாகூட்டணி உறுதியாக உள்ளது. பாஜக மற்றும் ஐக்கிய ஜனதா தளத்திற்கு எதிராக ஒன்றுமையாக போட்டியிடும்.
இவ்வாறு அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.






