search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Karnataka election"

    • காங்கிரஸ் பெரும்பான்மையை கடந்து 119 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது.
    • பாஜக 75 தொகுதிகளிலும், மஜத 25 தொகுதிகளிலும், மற்றவை 8 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளன.

    கர்நாடக மாநிலத்தில் கடந்த 10ம் தேதி நடைபெற்ற சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. பெங்களூருவில் உள்ள 28 தொகுதிகளுக்கான ஓட்டு எண்ணிக்கை 6 மையங்களிலும், மற்ற தொகுதிகளுக்கான ஓட்டு எண்ணிக்கை மாநிலத்தில் உள்ள 30 வாக்கு எண்ணும் மையங்களிலும் நடைபெற்று வருகிறது.

    ஒட்டுமொத்தமாக மாநிலம் முழுவதும் 36 மையங்களில் ஓட்டு எண்ணிக்கை நடைபெறுகிறது. காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்கிய நிலையில், மதியம் 2 மணிக்குள் பெரும்பாலான தொகுதிகளின் முடிவுகள் வெளியாகிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    வாக்குப்பதிவின் போது 73.19 சதவீத ஓட்டுகள் பதிவாகி இருந்தது. இந்நிலையில், கர்நாடகாவில் பாஜகவை பின்னுக்கு தள்ளி காங்கிரஸ் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகிறது.

    அதன்படி, காங்கிரஸ் பெரும்பான்மையை கடந்து 119 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. தொடர்ந்து பாஜக 75 தொகுதிகளிலும், மஜத 25 தொகுதிகளிலும், மற்றவை 8 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளன.

    இதனால், கர்நாடகவில் காங்கிரஸ் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடிக்கும் சூழலில் உள்ளதால் அக்கட்சி தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

    • கர்நாடக சட்டசபை தேர்தலுக்கான ஓட்டு எண்ணிக்கை இன்று நடக்கிறது.
    • ஆட்சியை கைப்பற்ற போவது யார் என்பது மதியத்திற்குள் தெரிந்து விடும்.

    பெங்களூரு:

    கர்நாடக சட்டசபைக்கு கடந்த 10-ம் தேதி தேர்தல் நடைபெற்றிருந்தது. மொத்தம் 224 தொகுதிகளுக்கு இந்த தேர்தலில் ஒட்டுமொத்தமாக 2,615 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். பா.ஜ.க. சார்பில் 224 வேட்பாளர்களும், காங்கிரஸ் சார்பில் 223 வேட்பாளர்களும், ஜனதா தளம் (எஸ்) கட்சி சார்பில் 207 வேட்பாளர்களும், ஆம் ஆத்மி சார்பில் 217 வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர். ஒட்டு மொத்தமாக 184 பெண்களும், ஒரு திருநங்கையும் சட்டசபை தேர்தலில் போட்டியிட்டனர்.

    கடந்த 10-ம் தேதி நடைபெற்ற வாக்குப்பதிவின் போது 73.19 சதவீத ஓட்டுகள் பதிவாகி இருந்தது. தேர்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் சீல் வைக்கப்பட்டு, அந்தந்த மாவட்டங்களில் உள்ள வாக்கு எண்ணும் மையங்களில் வைக்கப்பட்டுள்ளது.

    வாக்கு எண்ணும் மையங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் 24 மணி நேரமும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். கண்காணிப்பு கேமராக்ககளும் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், கர்நாடக சட்டசபை தேர்தலில் பதிவான ஓட்டுகள் இன்று எண்ணப்பட உள்ளது. காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்கி நடைபெற உள்ளது.

    பெங்களூருவில் உள்ள 28 தொகுதிகளுக்கான ஓட்டு எண்ணிக்கை 4 இடங்களும், மற்ற தொகுதிகளுக்கான ஓட்டு எண்ணிக்கை மாநிலத்தில் உள்ள 30 வாக்கு எண்ணும் மையங்களிலும் நடைபெற உள்ளது. ஒட்டுமொத்தமாக மாநிலம் முழுவதும் 34 மையங்களில் ஓட்டு எண்ணிக்கை நடைபெறுகிறது. காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்குவதால், மதியம் 2 மணிக்குள் பெரும்பாலான தொகுதிகளின் முடிவுகள் வெளியாகி விடும்.

    • கர்நாடகத்தில் மொத்தம் 5 கோடியே 31 லட்சத்து 33 ஆயிரத்து 54 வாக்காளர்கள் உள்ளனர்.
    • பதற்றமான வாக்குச்சாவடிகளில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    பெங்களுரு:

    224 தொகுதிகளை உள்ளடக்கிய கர்நாடக சட்டசபைக்கு இன்று தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் ஆளும் பா.ஜ.க, காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம் (எஸ்) கட்சிகள் இடையே மும்முனை போட்டி நிலவுகிறது.

    தேர்தல் களத்தில் மொத்தம் 2,615 வேட்பாளர்கள் உள்ளனர். சட்டசபை தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது. மாலை 6 மணி வரை ஓட்டுப்பதிவு நடைபெறுகிறது.

    கர்நாடகத்தில் மொத்தம் 5 கோடியே 31 லட்சத்து 33 ஆயிரத்து 54 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்கள் 2 கோடியே 67 லட்சத்து 28 ஆயிரத்து 53 பேரும், பெண் வாக்காளர்கள் 2 கோடியே 64 லட்சத்து 74 பேரும், 3-ம் பாலினத்தவர்கள் 4 ஆயிரத்து 927 பேரும் உள்ளனர். இந்த வாக்காளா்கள் வாக்களிக்க வசதியாக 58 ஆயிரத்து 282 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

    இதில் 11 ஆயிரத்து 617 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்று கண்டறியப்பட்டுள்ளது. அந்த வாக்குச்சாவடிகளில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சில வாக்குச்சாவடிகளில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், துணை ராணுவ படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    • கோவா அரசின் இந்த முடிவிற்கு எதிர்கட்சிகளிடம் இருந்து எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
    • அண்டை மாநிலங்களில் தேர்தல் நடக்கும் போது விடுமுறை அளிப்பது வழக்கம்.

    அண்டை மாநிலமான கர்நாடகாவில் நாளை சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில், கோவாவில் உள்ள கர்நாடகாவை சேர்ந்த வாக்காளர்கள் தேர்தலில் வாக்களிப்பதற்காக, மே 10ம் தேதி (நாளை) அன்று ஊதியத்துடன் கூடிய விடுமுறையை கோவா அரசு அறிவித்துள்ளது.

    இது தனியார் நிறுவனங்கள் மற்றும் தொழில்துறை தொழிலாளர்களுக்கும் உள்ளடக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், கோவா அரசின் இந்த முடிவிற்கு எதிர்கட்சிகளிடம் இருந்து எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

    இதுகுறித்து கோவா மாநில தொழில்துறை சங்கத் தலைவர் தாமோதர் கோச்கர், இது மாநில அரசின் அபத்தமான முடிவு என்று கூறினார்.

    மேலும் அவர் கூறுகையில், "கோவாவில் உள்ள தொழில்துறையினர் இது முற்றிலும் அபத்தமான மற்றும் முட்டாள்தனமான முடிவாக கருதுகிறார்கள். மாநில அரசின் இத்தகைய ஒருதலைப்பட்ச முடிவுகளுக்கு எதிராக சட்டப்பூர்வ தீர்வுகளை பரிசீலித்து வருகிறோம்" என்றார்.

    இந்நிலையில், விடுப்பு குறித்து கோவா முதல்வர் அலுவலக மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், "அண்டை மாநிலங்களில் தேர்தல் நடக்கும் போது விடுமுறை அளிப்பது வழக்கம். கடந்த ஆண்டு கோவாவில் தேர்தல் நடந்த அன்று கர்நாடகாவில் விடுமுறை அறிவிக்கப்பட்டது" என்றார்.

    • ஒரேநாளில் கர்நாடகத்தில் 11,461 பேர் வீட்டில் இருந்த படியே வாக்களித்து ஜனநாயக கடமையாற்றி இருந்தனர்.
    • வருகிற சட்டசபை தேர்தலில் அனைத்து குடிமகன்களும் தங்களது வாக்குகளை கட்டாயம் செலுத்த வேண்டும் என்றும் மகாதேவ மகாலிங்க மாலி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    பெங்களூரு:

    கர்நாடக சட்டசபைக்கு வருகிற 10-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் நாட்டிலேயே முதல் முறையாக 80 வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள் வீட்டில் இருந்தபடியே வாக்களிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

    அதன்படி, கடந்த மாதம் (ஏப்ரல்) 29-ந் தேதியில் இருந்து முதியவர்கள், நோயாளிகள், மாற்றுத்திறனாளிகள், தங்கள் வீடு தேடி வந்து வாக்கு சேகரிக்கும் தேர்தல் அதிகாரிகள் கொண்டு வரும் வாக்குப்பெட்டிகளில் வாக்குச்சீட்டை பயன்படுத்தி வாக்களித்து வருகிறார்கள்.

    வருகிற 6-ந் தேதி வரை வாக்களிக்க வசதிகள் செய்யப்பட்டுள்ளது. கர்நாடகத்தில் 99 ஆயிரத்து 529 பேர் வீட்டில் இருந்தபடியே ஓட்டுப்போட விண்ணப்பித்துள்ளனர்.

    அவர்களிடம் இருந்து வாக்குகளை பெறும் பணிக்காக 250 குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது. அந்த குழுவினர் வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கு சென்று வாக்கு பெற்றனர். நேற்று ஒரேநாளில் கர்நாடகத்தில் 11,461 பேர் வீட்டில் இருந்த படியே வாக்களித்து ஜனநாயக கடமையாற்றி இருந்தனர்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு பெலகாவி மாவட்டம் சிக்கோடியை சேர்ந்த 103 வயது முதியவரான மகாதேவ மகாலிங்க மாலி என்பவர் வீட்டில் இருந்து வாக்களித்திருந்தார். தள்ளாத வயதிலும் தனது ஜனநாயக கடமையை ஆற்றி அந்த முதியவருக்கு, இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் போனில் தொடர்புகொண்டு பேசினார். அப்போது 103 வயதிலும் வீட்டில் இருந்து ஓட்டளித்த அவரை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் பாராட்டியதுடன் நன்றி தெரிவித்துக்கொண்டார்.

    அதுபோல் முதியவர் மகாதேவ மகாலிங்க மாலி, தன்னை போன்ற முதியவர்கள் வீட்டில் இருந்தே வாக்களிக்க அனுமதி வழங்கிய இந்திய தேர்தல் ஆணையத்துக்கு பாராட்டையும், நன்றியையும் ராஜீவ்குமாரிடம் பகிர்ந்துகொண்டார். அத்துடன் இந்த நடைமுறை வருவதற்கு முன்பு தான் வீட்டில் இருந்து சிரமத்துடன் சக்கர நாற்காலியில் வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களித்தது பற்றியும், வருகிற சட்டசபை தேர்தலில் அனைத்து குடிமகன்களும் தங்களது வாக்குகளை கட்டாயம் செலுத்த வேண்டும் என்றும் மகாதேவ மகாலிங்க மாலி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    • கர்நாடக காங்கிரஸ் தலைவரின் சகோதரர் வீட்டில் வருமான வரித்துறை இன்று சோதனை நடத்தியது.
    • சோதனையின் போது வீட்டின் மரத்தில் மறைத்து வைக்கப்பட்டு இருந்த ரூ. 1 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    கர்நாடக மாநிலத்தில் நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலில் புத்தூர் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் தலைவர் அசோக் குமார் ராயின் சகோதரர் சுப்ரமணிய ராயின் மைசூரு இல்லத்தில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது.

    தேர்தல் நடைபெற இருப்பதை அடுத்து மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இதுபோன்ற சோதனைகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. அந்த வகையில், இன்று நடத்தப்பட்ட சோதனையில் சுப்ரமணிய ராயின் வீட்டில் கட்டுக்கட்டாக பணம் அடுக்கி மரத்தில் மறைத்து வைக்கப்பட்டு இருப்பதை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

     

    தேர்தல் நடத்தல் விதிகள் அமலில் உள்ளதை அடுத்து கர்நாடக மாநிலத்தில் இதுவரை ரூ. 110 கோடியை அதிகாரிகள் ரொக்கமாக பறிமுதல் செய்துள்ளனர். இது தொடர்பாக இதுவரை 2 ஆயிரத்து 346 முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

    கர்நாடக மாநிலத்தில் மே 10 ஆம் தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது. மே 13 ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

    • நான் காங்கிரஸ்கட்சிக்கு எனது ஆதரவை தெரிவித்துள்ளேன். எனக்கு யாரும் அழுத்தம் கொடுக்கவில்லை.
    • பிரசாரம் செய்தும் எதிர்பார்த்த அளவு எனக்கு அக்கட்சி சார்பில் ஆதரவு கிடைக்கவில்லை. அதனால் தேர்தல் போட்டியில் இருந்து விலகுகிறேன்.

    பெங்களூரு:

    கர்நாடக தேர்தலில் விஜயாப்புரா நகர தொகுதியில் பா.ஜனதா சார்பில் தற்போதைய எம்.எல்.ஏ. பசனகவுடா பட்டீல் யத்னால், காங்கிரஸ் சார்பில் அபிதுல் ஹமீது முஷ்ரிப், ஜனதாதளம் (எஸ்) கட்சி சார்பில் பத்தேனவாஸ் மகாபரி போட்டியிடுகின்றனர்.

    இந்நிலையில் ஜனதாதளம் (எஸ்) கட்சி வேட்பாளர் பத்தேனவாஸ் மகாபரி திடீரென்று காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு தெரிவிப்பதாகவும், போட்டியில் இருந்து விலகுவதாகவும் அறிவித்துள்ளார். அவர் கூறுகையில், விஜயாப்புரா தொகுதியில் ஜனதாதளம் (எஸ்) கட்சிக்கு அமைப்பு, நிர்வாகிகள், தொண்டர்கள் இல்லை. நான் பிரசாரம் செய்தும் எதிர்பார்த்த அளவு எனக்கு அக்கட்சி சார்பில் ஆதரவு கிடைக்கவில்லை. அதனால் தேர்தல் போட்டியில் இருந்து விலகுகிறேன்.

    நான் காங்கிரஸ்கட்சிக்கு எனது ஆதரவை தெரிவித்துள்ளேன். எனக்கு யாரும் அழுத்தம் கொடுக்கவில்லை. நான் முழுக்க முழுக்க எனது சொந்த விருப்பத்தின் பேரில் இந்த முடிவை எடுத்துள்ளேன் என்றார்.

    • கார்கே தன்னை விஷப்பாம்புடன் ஒப்பிட்டு பேசியது குறித்து பிரதமர் மோடி சமீபத்திய பிரசார கூட்டத்தில் பேசினார்.
    • கடந்த மூன்று ஆண்டுகளாக கர்நாடக மக்களுக்கு என்ன செய்தீர்கள் என்பதை சொல்ல வேண்டும்.

    பெங்களூரு:

    கர்நாடகாவில் வரும் 10ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தலைவர்களின் பிரசாரம் தீவிரமடைந்துள்ளது. பிரதமர் மோடி மற்றும் பாஜக தலைவர்களை எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சனம் செய்து பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளது. இதற்கு பாஜக தலைவர்களும் பதில் கருத்துக்களை கூறி பிரசாரம் செய்கின்றனர். இதேபோல் கருத்து மோதல், வார்த்தை போருக்கும் பஞ்சம் இல்லை.

    அவ்வகையில், காங்கிரஸ் கட்சியினர் தன் மீது தொடர்ந்து விமர்சனங்களை முன்வைப்பது குறித்தும், தன்னை விஷப்பாம்புடன் ஒப்பிட்டு கார்கே பேசியது குறித்தும் பிரதமர் மோடி சமீபத்திய பிரசார கூட்டத்தில் பேசினார். காங்கிரஸ் கட்சி தன்னை ஒரு முறை இரு முறையல்ல 91 முறை அவமதித்துள்ளது என்றார். பிரதமரின் இந்த பேச்சுக்கு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பதில் அளித்துள்ளார்.

    தும்கூரு மாவட்டம் துருவகெரே நகரில் இன்று நடைபெற்ற பிரசார கூட்டத்தில் ராகுல்காந்தி பேசியதாவது:-

    நீங்கள் (மோடி) கர்நாடகாவில் தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்தீர்கள். ஆனால் கர்நாடகத்தைப் பற்றி பேசாமல், உங்களைப் பற்றியே பேசுகிறீர்கள். கடந்த மூன்று ஆண்டுகளாக கர்நாடக மக்களுக்கு என்ன செய்தீர்கள் என்பதை சொல்ல வேண்டும். அடுத்த ஐந்து ஆண்டுகளில் என்ன செய்யப் போகிறீர்கள், இளைஞர்கள், கல்வி, சுகாதாரம் மற்றும் ஊழலுக்கு எதிராக என்ன செய்யப் போகிறீர்கள்? என்பதைப் பற்றியும் நீங்கள் பிரசார கூட்டங்களில் பேச வேண்டும்.

    இந்த தேர்தல் உங்களைப் பற்றியது அல்ல, இது கர்நாடக மக்கள் மற்றும் மாநிலத்தின் எதிர்காலத்தைப் பற்றியது. காங்கிரஸ் உங்களை 91 முறை அவமதித்தது என்று சொல்கிறீர்கள், ஆனால் நீங்கள் கர்நாடகாவிற்கு என்ன செய்தீர்கள் என்பது பற்றி பேசவே இல்லை. உங்கள் அடுத்த பிரசாரத்தின்போது, நீங்கள் என்ன செய்தீர்கள், அடுத்த ஐந்து ஆண்டுகளில் என்ன செய்வீர்கள் என்பதைப் பற்றி பேசவேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • கர்நாடக காவல்துறையில் மத அடிப்படைவாதம் மற்றும் பயங்கரவாதத்திற்கு எதிரான சிறப்புப் பிரிவு ஏற்படுத்தப்படும்.
    • விதவை பெண்களுக்கான ஓய்வூதியம் தற்போதைய ரூ.800ல் இருந்து ரூ.2,000 ஆக உயர்த்தப்படும்.

    பெங்களூரு:

    கர்நாடக சட்டசபைக்கு வருகிற 10-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலை முன்னிட்டு ஜனதாதளம் (எஸ்) கட்சி தனது தேர்தல் அறிக்கையில் 3 இலவச கியாஸ் சிலிண்டர்கள் உள்ளிட்ட பல வாக்குறுதிகளை அளித்துள்ளது.

    காங்கிரஸ் கட்சியும் தேர்தல் அறிக்கை வெளியிடாமல் 200 யூனிட் இலவச மின்சாரம், பெண்களுக்கு ரூ.2 ஆயிரம், அரசு பஸ்களில் பெண்களுக்கு இலவச பயணம் உள்பட 5 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. ஆளும் பா.ஜனதா கட்சி தொகுதியில் உள்ள நிபுணர்கள், அனுபவசாலிகள் உள்ளிட்டோரின் கருத்துகளை சேகரித்து தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டது.

    இதை தொடர்ந்து பெங்களூருவில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று காலை 11 மணிக்கு முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை மற்றும் கட்சியின் மூத்த தலைவர் எடியூரப்பா முன்னிலையில் பா.ஜ.க. தலைவர் ஜே.பி. நட்டா தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். அதில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-

    யுகாதி, விநாயக சதுர்த்தி மற்றும் தீபாவளி மாதங்களில் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு 3 கியாஸ் சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும்.

    கர்நாடக காவல்துறையில் மத அடிப்படைவாதம் மற்றும் பயங்கரவாதத்திற்கு எதிரான சிறப்புப் பிரிவு ஏற்படுத்தப்படும்.

    போஷன் யோஜனா திட்டத்தின் கீழ் அரை லிட்டர் நந்தினி பால் வழங்கப்படும். ஏழைகளுக்கு 10 கிலோ தானியங்கள் வழங்கப்படும்.

    உயர்மட்டக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் கர்நாடகாவில் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும்.

    விதவை பெண்களுக்கான ஓய்வூதியம் தற்போதைய ரூ.800ல் இருந்து ரூ.2,000 ஆக உயர்த்தப்படும்.

    திருப்பதி, அயோத்தி, காசி மற்றும் பிற இடங்களுக்கு புனித யாத்திரை செல்ல ஏழைக் குடும்பங்களுக்கு ஒருமுறை 25 ஆயிரம் ரூபாய் மானியம் வழங்கப்படும்.

    மாநிலம் முழுவதும் உள்ள பழமையான கோவில்களை சீரமைக்கவும், பராமரிக்கவும் ரூ.1,000 கோடி ஒதுக்கப்படும்.

    ஆயுஷமான் பாரத் யோஜனா திட்டத்தின் கீழ் காப்பீட்டுத் தொகை தற்போதுள்ள ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சமாக உயர்த்தப்படும்.

    அனைத்து தாலுகாக்களிலும் கீமோதெரபி மற்றும் டயாலிசிஸ் மையங்கள் அமைக்கப்படும்.

    மாநிலம் முழுவதும் மலிவு மற்றும் தரமான உணவை வழங்க ஒவ்வொரு மாநகராட்சியின் ஒவ்வொரு வார்டிலும் அடல் ஆஹாரா கேந்திரா அமைக்கபப்டும். 'சர்வாரிகு சுரு யோஜனே' திட்டத்தின் கீழ் வீடற்றவர்களுக்கு 10 லட்சம் வீடுகள் கட்டப்படும்,.

    கர்நாடக அடுக்குமாடி குடியிருப்பு உரிமைச் சட்டம், 1972-ஐ சீர்திருத்தவும், குறை தீர்க்கும் வழிமுறையை நவீனப்படுத்தவும் கர்நாடக குடியிருப்போர் நல ஆலோசனைக் குழுவை அமைக்கும்.

    மூத்த குடிமக்களுக்கு இலவச வருடாந்திர முதன்மை சுகாதார பரிசோதனை நடத்தப்படும். பெங்களூருவை 'மாநில தலைநகர் மண்டலமாக' நியமித்து, விரிவான, தொழில்நுட்பம் சார்ந்த நகர மேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்படும்.

    மேற்கண்டவை உள்பட பல்வேறு முக்கிய அம்சங்கள் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன. தொடர்ந்து முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறுகையில், இந்த தேர்தல் அறிக்கையை மக்கள் ஏற்றுக் கொள்வார்கள், மேலும் மாநிலத்தில் ஆட்சியமைக்க மீண்டும் ஒரு வாய்ப்பை வழங்குவார்கள் என்று நான் நம்புகிறேன் என்றார்.

    காங்கிரஸ் கட்சி இலவசம் என்ற பெயரில் அளித்த வாக்குறுதிகளை விமர்சித்த பா.ஜ.க. தற்போது வாக்காளர்களை கவர பல திட்டங்களை அறிவித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வேட்பாளர்கள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
    • பிரதாப் கவுடா பட்டீலை தோற்கடிக்க காங்கிரஸ் கட்சி அவரை போல் முகதோற்றம் கொண்ட ஈஷப்பாவை இறக்கிவிட்டு இருப்பதாக பா.ஜனதாவினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

    பெங்களூரு:

    கர்நாடக சட்டசபைக்கு வருகிற 10-ந்தேதி தேர்தல் நடக்கிறது. இதையொட்டி வேட்பாளர்கள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

    இதில் ராய்ச்சூர் மாவட்டம் மாஸ்கி தொகுதியில் பா.ஜ.க. சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ. பிரதாப் கவுடா பட்டீல் (வயது 68) போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் பசவனகவுடா துர்விகால் களமிறங்கியுள்ளார். மேலும் இதே தொகுதியில் ஈஷப்பா என்பவர் சுயேச்சையாக போட்டியிடுகிறார்.

    அவர் தனது பெயரையும் ஈஷப்பா கவுடா பட்டீல் என மாற்றியுள்ளார். இவர் பிரதாப் கவுடா பட்டீல் போல் தோற்றத்தில் நெற்றியில் திருநீரு பூசி இருப்பதுடன் அவரை போல் மீசையும் வைத்துள்ளார்.

    பிரதாப் கவுடா பட்டீலை தோற்கடிக்க காங்கிரஸ் கட்சி அவரை போல் முகதோற்றம் கொண்ட ஈஷப்பாவை இறக்கிவிட்டு இருப்பதாக பா.ஜனதாவினர் குற்றம்சாட்டியுள்ளனர். ஒரே தோற்றம் கொண்ட 2 வேட்பாளர்களால் வாக்காளர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

    • வேட்புமனு தாக்கலையொட்டி தேர்தல் அலுவலகங்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
    • இதுவரை இல்லாத வகையில் முதல் நாளிலேயே 4 மந்திரிகள் உள்பட மொத்தம் 221 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.

    பெங்களூரு:

    கர்நாடக சட்டசபைக்கு வருகிற மே மாதம் 10-ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் நேற்று தொடங்கியது.

    தேர்தலையொட்டி ஆளும் பா.ஜனதா 212 தொகுதிகளுக்கும், காங்கிரஸ் 166 தொகுதி களுக்கும், ஜனதா ளம் (எஸ்) 93 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்துள்ளன. மீதமுள்ள வேட்பாளர்களை ஓரிரு நாளில் இந்த கட்சிகள் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    வேட்புமனு தாக்கலையொட்டி தேர்தல் அலுவலகங்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 100 மீட்டர் தொலைவில் போலீசார் தடுப்பு வேலிகளை அமைத்து கண்காணிப்புகளை மேற்கொண்டுள்ளனர்.

    முதல் நாளில் பீலகி தொகுதியில் தொழில்துறை மந்திரி முருகேஷ் நிரானி, தேர்தல் அதிகாரியிடம் தனது மனுவை தாக்கல் செய்தார். சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் சிக்பள்ளாப்பூர் தொகுதியிலும், கூட்டுறவுத்துறை மந்திரி எஸ்.டி.சோமசேகர் யஷ்வந்த புரா தொகுதியிலும், பொதுப்பணித்துறை மந்திரி சி.சி.பட்டீல் கதக் மாவட்டம் நரகுந்து தொகுதியிலும் மனுதாக்கல் செய்தனர்.

    மனு தாக்கல் தொடங்கிய முதல் நாளிலேயே 221 பேர் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். இதில் ஆண்கள் 197 பேரும், பெண்கள் 24 பேரும் அடங்குவர். இதில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளான ஆளும் பா.ஜனதாவை சேர்ந்த 27 பேரும், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 26 பேரும், ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த 10 பேரும், பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் ஒருவரும், ஜனதா தளம் (எஸ்) சார்பில் 12 பேரும் மனு தாக்கல் செய்துள்ளனர்.

    பொதுவாக வேட்பு மனு தாக்கல் தொடங்கினாலும் முதல் நாளில் மனு தாக்கல் செய்ய வேட்பாளர்கள் ஆர்வம் காட்டமாட்டார்கள். ஆனால் கர்நாடக தேர்தல் வரலாற்றில், இதுவரை இல்லாத வகையில் முதல் நாளிலேயே 4 மந்திரிகள் உள்பட மொத்தம் 221 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர். இதில் பதிவு செய்யப்பட்ட மற்றும் பதிவு செய்யப்படாத கட்சிகளை சேர்ந்த 100 பேர் அடங்குவர்.

    எந்த கட்சியையும் சாராத 45 பேர் சுயேச்சையாக மனு தாக்கல் செய்துள்ளனர். இதன் மூலம் வேட்பாளர்கள் முதல் நாளிலேயே மனு தாக்கல் செய்ய ஆர்வம் காட்டியுள்ளனர். வரும் நாட்களில் இன்னும் அதிகமான எண்ணிக்கையில் வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    அம்பேத்கர் ஜெயந்தியை முன்னிட்டு இன்று (வெள்ளிக்கிழமை) கர்நா டகத்தில் அரசு விடுமுறை ஆகும். அதனால் இன்று வேட்புமனு தாக்கல் செய்ய அனுமதி இல்லை என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. நாளை (சனிக்கிழமை) வழக்கம் போல் மனு தாக்கல் நடைபெறும்.

    20-ந் தேதி மதியம் 3 மணிக்கு மனுதாக்கல் நிறைவடைகிறது. மனுக்களை வாபஸ் பெற 24-ந் தேதி கடைசி நாள் ஆகும். போட்டியில் இருந்து விலகி கொள்ள விரும்பும் வேட்பாளர்கள் அன்றைய தினம் மதியம் 3 மணிக்குள் மனுக்களை வாபஸ் பெற வேண்டும். அதன் பிறகு இறுதி வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும்.

    மே மாதம் 10-ந் தேதி காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை ஓட்டுப்பதிவு நடைபெறும். வாக்குகள் எண்ணிக்கை 13-ந் தேதி நடக்கிறது. அரசியல் கட்சி தலைவர்கள் தேர்தல் அறிக்கை மற்றும் தேர்தல் பிரசாரம் மேற்கொள்வதில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

    • தேசிய தலைநகரில் உள்ள கட்சி தலைமையகத்தில் பாஜக தலைமைத் தேர்தல் கமிட்டி (சிஇசி) கூட்டம் நடைபெற்றது.
    • கர்நாடக தேர்தலுக்கான ஒட்டுமொத்த பட்டியல் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல்.

    கர்நாடக மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. கர்நாடக மாநில சட்டசபையின் பதவிக்காலம் மே மாதம் 24-ம் தேதி முடிவடைகிறது.

    மொத்தம் 224 இடங்களைக் கொண்ட கர்நாடக சட்டசபைக்கு ஒரே கட்டமாக மே 10-ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என தலைமை தேர்தல் கமிஷனர் ராஜீவ் குமார் நேற்று அறிவித்தார்.

    இதற்கான வேட்புமனு தாக்கல் வரும் 13ம் தேதி தொடங்கி 20ம் தேதி வரை நடைபெறுகிறது. தேர்தலில் பதிவான வாக்குகள் மே 13ம் தேதி எண்ணப்பட்டு, அன்று மாலையே அங்கு ஆட்சி அமைக்கப்போவது யார் என்று அறிவிக்கப்பட உள்ளது.

    ஆட்சியைத் தக்கவைக்க பா.ஜ.க.வும், இழந்த ஆட்சியை மீண்டும் கைப்பற்ற காங்கிரசும் தீவிர முனைப்போடு செயல்பட்டு வருகின்றன.

    ஜனதா தளம் (எஸ்) கட்சி 93 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்தது. காங்கிரஸ் கட்சி 124 தொகுதிகளுக்கான தனது முதல் மற்றும் 2வது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.

    பா.ஜ.க. வேட்பாளர் தேர்வில் மும்முரமாக ஈடுபட்டுள்ளது. இந்நிலையில், இன்று நடைபெற்ற பாஜக தலைமைத் தேர்தல் கமிட்டி கூட்டம் முடிந்ததும் கர்நாடக சட்டசபைத் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை ஓரிரு நாட்களில் கட்சி அறிவிக்கும் என்று முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.

    தேசிய தலைநகரில் உள்ள கட்சி தலைமையகத்தில் பாஜக தலைமைத் தேர்தல் கமிட்டி (சிஇசி) கூட்டம் நடைபெற்றது. பாஜக மூத்த தலைவர்கள் பங்கேற்ற இந்த கூட்டத்தில் வேட்பாளர் பட்டியல் வெளியிடுவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், "கர்நாடக சட்டசபைத் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை ஓரிரு நாளில் கட்சி அறிவிக்கும் என்று முதல்வர் பசவராஜ் பொம்மை" கூறினார்.

    இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், "கர்நாடக தேர்தலுக்கான ஒட்டுமொத்த பட்டியல் குறித்து ஆலோசித்தோம். ஒருவேளை நாளை மீண்டும் கூட்டம் நடத்தலாம். பட்டியல் நாளை அல்லது நாளை மறுநாள் அறிவிக்கப்படும். நான் ஷிகாவ்ன் தொகுதியில் போட்டியிடுகிறேன்" என்றார்.

    ×