search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Yediyurappa"

    • தனது மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக பெண் ஒருவர் புகார்.
    • புகார் அடிப்படையில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    கர்நாடகா முன்னாள் முதல்வர் எடியூரப்பா மீது பெங்களூரு போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

    இது தொடர்பாக எடியூரப்பா கூறியதாவது:-

    சில தினங்களுக்கு முன்னதாக பெண் ஒருவர் எனது வீட்டிற்கு வந்தார். அவர் அழுது கொண்டே சில பிரச்சனைகளை கூறினார். என்ன பிரச்சனை என்று அவரிடம் நான் கேட்டேன். அத்துடன் தனிப்பட்ட முறையில் போலீஸ் கமிஷனருக்கு போன் செய்து, இது தொடர்பாக பேசினேன். மேலும் அந்த பெண்ணிற்கு உதவுமாறு கேட்டுக்கொண்டேன்.

    பின்னர், அந்த பெண் எனக்கு எதிராக பேசத் தொடங்கிவிட்டார். இந்த விவகாரத்தை நான் போலீஸ் கமிஷனர் கவனத்திற்கு கொண்டு சென்றேன். நேற்று எனக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அடுத்து என்ன நடக்கிறது என்று பார்ப்போம். இதற்கு பின்னால் அரசியல் உள்நோக்கம் இருப்பதாக என்னால் கூற முடியாது.

    இவ்வாறு எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

    கடந்த பிப்ரவரி மாதம் 2-ந்தேதி தனது மகள் உடன் எடியூரப்பாவை கல்வி உதவித் தொகை தொடர்பாக சந்திக்க சென்றதாகவும், அப்போது தனது மகளை தனியாக அழைத்துச் சென்று பாலியல் தொந்தரவு செய்ததாகவும் பெண் ஒருவர் எடியூரப்பா மீது புகார் அளித்துள்ளார். அதனைத் தொடர்ந்து போலீசார் போக்சோ உள்ளிட்ட இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    • கல்வி உதவித்தொகை தொடர்பாக உதவி கேட்க சென்றபோது சம்பவம் நடைபெற்றதாக சிறுமியின் தாய் புகார்.
    • பெங்களூரு போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு

    கர்நாடகா மாநில முன்னாள் முதல்வர் எடியூரப்பா. இவர் பா.ஜனதா மூத்த தலைவர்களில் ஒருவராக இருக்கிறார். இவர் மீது 17 வயது சிறுமியின் தாயார் சதாஷிவநகர் காவல் நிலையத்தில் பாலியல் புகார் அளித்துள்ளார். இதன் அடிப்படையில் போலீசார் எடியூரப்பா மீது போக்சா சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    கடந்த பிப்ரவரி மாதம் 2-ந்தேதி தனது மகள் உடன் எடியூரப்பாவை கல்வி உதவித் தொகை தொடர்பாக சந்திக்க சென்றதாகவும், அப்போது தனது மகளை தனியாக அழைத்துச் சென்று பாலியல் தொந்தரவு செய்ததாகவும் அந்த சிறுமியின் தாயார் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.

    17 வயது சிறுமியின் தாயாரின் புகார் அடிப்படையில் பெங்களூரு போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    • ஒவ்வொரு முகக்கவசம் (Mask) 45 ரூபாய்தான். ஆனால், எடியூரப்பா அரசு 485 ரூபாய் என கணக்கு எழுதியது.
    • படுக்கைகளுக்கு கொடுத்த வாடகை பணத்தில் சொந்தமாக வாங்கியிருக்கலாம் எனக் குற்றச்சாட்டு.

    கொரோனா காலத்தில் முதல்வராக இருந்த எடியூரப்பா 40 கோடி ரூபாய் ஊழல் மோசடியில் ஈடுபட்டார் என பா.ஜனதா கட்சியின் எம்.எல்.ஏ. பகனாகவுடா பாட்டீல் யாத்னால் பரபரப்பான குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார்.

    விஜயபுரா தொகுதியில் இருந்து பா.ஜனதா சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், இது தொடர்பாக விசாரணை தேவை எனவும் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-

    எடியூரப்பா முதலமைச்சராக இருந்தபோது, கொரோனா காலத்தில் எத்தனை கோடி ரூபாய் ஊழல் நடந்தது என்று உங்களுக்கு தெரியுமா?. கொரோனா தலைவிரித்தாடிய காலத்தில் 40 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு முறைகேடு நடைபெற்றது.

    பா.ஜனதா அரசு மிகப்பெரிய மோசடியில் ஈடுபட்டது. இந்த குற்றச்சாட்டை நான் தெரிவிப்பதால் அவர்கள் நோட்டீஸ் அனுப்பி, என்னை கட்சியில் இருந்து நீக்க முயற்சித்தால், அவர்களின் மோசடியை வெளிப்படுத்துவேன்.

    ஒவ்வொரு முகக்கவசம் (Mask) 45 ரூபாய்தான். ஆனால், எடியூரப்பா அரசு 485 ரூபாய் என கணக்கு எழுதியது. பெங்களூருவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க 10 ஆயிரம் படுக்கைகள் தயார் செய்ததாக கூறினார்கள். அவைகள் அனைத்தும் வாடகைக்கு எடுக்கப்பட்டது.

    ஆனால் அவற்றை விலை கொடுத்து வாங்கினால் ஒரு நாள் வாடகைக்கான தொகையில் இரண்டு படுக்கைகள் (Beds) வாங்கியிருக்கலாம். ஒரு நாளைக்கு 20 ஆயிரம் ரூபாய் வாடகையாக செலுத்தினார்கள். அதற்கு இரண்டு நல்ல படுக்கைகளை வாங்கியிருக்கலாம். கொரோனா காலத்தில் ஒரு நாளைக்கு அவர்கள் எவ்வளவு செலவு செய்தார்கள் தெரியுமா?.

    இவ்வாறு தெரிவித்துள்ளார்.

    சொந்த கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ. ஒருவரே எடியூரப்பா மற்றும் கட்சி மீது ஊழல் மோசடி குறித்து வெளிப்படையாக குற்றம்சாட்டிய விவகாரம் கர்நாடக அரசில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த நிலையில் முதலமைச்சர் எடியூரப்பா, எம்.எல்.ஏ. பசனாகவுடா பாட்டீல் யாட்னால் அறிக்கை கொரோனா காலத்தில் நடைபெற்ற மிகப்பெரிய ஊழல் மோசடிக்கு காரணம் எனத் தெரிவித்துள்ளார்.

    கொரோனா வைரஸ் தொற்று காலத்தில் சிகிச்சை மற்றும் கட்டுப்படுத்துதல் பெயரில் எடியூரப்பா அரசு 4 ஆயிரம் கோடி அளவில் ஊழல் செய்ததாக காங்கிரஸ் எதிர்க்கட்சியாக இருந்தபோது ஆவணங்களுடன் குற்றம்சாட்டியதாகவும் தெரிவித்தார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கர்நாடகா மாடல் என மற்ற மாநிலங்களில் கூறி வரும் காங்கிரஸ், உத்தரவாத திட்டங்களை நிறைவேற்றுவதில் தோல்வி.
    • தெலுங்கானா மக்களை ஏமாற்றுவதற்கான 6 உத்தரவாத திட்டங்களை காங்கிரஸ் கட்சி அதன் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

    தெலுங்கானாவில் வருகிற 30-ந்தேதி தேர்தல் நடைபெறுகிறது. சந்திரசேகர ராவ் தொடர்ந்து 3-வது முறையாக ஆட்சியை பிடிக்க வியூகம் வகுத்துள்ளார். அவரிடம் இருந்து ஆட்சியை கைப்பற்ற காங்கிரஸ் நினைக்கிறது. இதற்கிடையே தெலுங்கானாவில் காலூன்ற பா.ஜனதா விரும்புகிறது.

    மூன்று கட்சிகளின் முக்கிய தலைவர்கள் தெலுங்கானாவில் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

    கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியை பிடித்ததில் இருந்து, கர்நாடக மாடல் என மற்ற மாநிலங்களிலும் பிரசாரம் செய்து வருகிறது.

    இந்த நிலையில் கர்நாடக மாநில முன்னாள் முதல்வரும், பா.ஜனதா தலைவரும்மான எடியூரப்பா தெலுங்கானாவில் பா.ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டார்.

    அப்போது எடியூரப்பா கூறியதாவது:-

    கர்நாடகாவில் நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு, ஐந்து முக்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம் எனத் தெரிவித்த காங்கிரஸ், அதை நிறைவேற்றாமல் கர்நாடக மக்களை ஏமாற்றியுள்ளது.

    கர்நாடகா மாடல் என மற்ற மாநிலங்களில் கூறி வரும் காங்கிரஸ், உத்தரவாத திட்டங்களை நிறைவேற்றுவதில் தோல்வியடைந்துள்ளது. இதன் மூலம் கர்நாடகா மக்களை ஏமாற்றியுள்ளது.

    தெலுங்கானா மக்களை ஏமாற்றுவதற்கான 6 உத்தரவாத திட்டங்களை காங்கிரஸ் கட்சி அதன் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் பொய்கள் மற்றும் வெற்று வாக்குறுதிகளால் ஏமாற வேண்டாம் என தெலுங்கானா மக்களை கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

    • 4-ந் தேதி சட்டசபைக்குள் எம்.எல்.ஏ.க்கள் போராட்டத்தில் ஈடுபடுவார்கள்.
    • விதானசவுதா வளாகத்தில் நான் தொடர் தர்ணாவில் ஈடுபடுவேன்.

    பெங்களூரு :

    பெங்களூரு மகாலட்சுமி லே-அவுட்டில் நடைபெற்ற பா.ஜனதா தொண்டர்கள் கூட்டத்தில் முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா பேசியதாவது:-

    காங்கிரஸ் கட்சி பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து ஆட்சிக்கு வந்துள்ளது. பொய் வாக்குறுதிகளை அளித்து மக்களை மோசம் செய்திருக்கிறார்கள். காங்கிரஸ் அரசு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் மாநில அரசை கண்டித்து பா.ஜனதா தீவிர போராட்டத்தில் ஈடுபடும் என்று ஏற்கனவே கூறி இருந்தேன்.

    அதன்படி வருகிற 4-ந் தேதி சட்டசபைக்குள் எம்.எல்.ஏ.க்கள் போராட்டத்தில் ஈடுபடுவார்கள். சட்டசபைக்கு வெளியே விதானசவுதா வளாகத்தில் நான் தொடர் தர்ணாவில் ஈடுபடுவேன். காங்கிரஸ் அரசுக்கு எதிராக ஒவ்வொரு நிலையிலும் போராட்டத்தை தொடர வேண்டும். இந்த போராட்டத்திற்கு அனைவரும் கைகோர்க்க வேண்டும். நம்மிடம் எம்.எல்.ஏ.க்கள் பலம் குறைவாக இல்லை. 66 எம்.எல்.ஏ.க்களின் பலம் உள்ளது. நான் ஒருவன் மட்டுமே எம்.எல்.ஏ.வாக இருந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளேன்.

    காங்கிரஸ் கட்சி கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால், இன்னும் ஒரு ஆண்டுக்குள் இந்த அரசை தூக்கி எறிய வேண்டும். காங்கிரசின் பொய்யான வாக்குறுதிகளை நம்பி மக்கள் மோசம் போனதால், பா.ஜனதாவால் 100 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற முடியாமல் போனது. காங்கிரசின் பொய் வாக்குறுதிகள் பற்றி பா.ஜனதாவினர் வீடு, வீடாக சென்று மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.

    எவ்வளவு சாத்தியமோ, அந்த வேகத்தில் இந்த அரசை தூக்கி எறிய வேண்டும். நாம் மனது வைத்தால் சட்டசபையை நடத்த முடியும். நாம் அரசு அமைக்கும் வரை மாநிலத்தில் பா.ஜனதா கட்சியை வளர்க்கலாம். அதற்கு முன்பாக நாடாளுமன்ற தேர்தலில் கர்நாடகத்தில் அதிக இடங்களில் பா.ஜனதாவை வெற்றி பெற வைக்க உழைக்க வேண்டும்.

    நாட்டில் தற்போது 14 மாநிலங்களில் பா.ஜனதா ஆட்சி அதிகாரத்தில் இருக்கிறது. மாநிலத்தில் 28 நாடாளுமன்ற தொகுதிகளிலும் வெற்றி பெற்று பிரதமர் மோடிக்கு பரிசளிக்க வேண்டும். மோடி மீண்டும் பிரதமர் ஆக வேண்டும். நான் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கட்சியை வளர்க்கும் பணியில் ஈடுபடுவேன்.

    நாடாளுமன்ற தேர்தலை போன்று, பெங்களூரு மாநகராட்சி தேர்தலில் பா.ஜனதா அதிக வார்டுகளில் வெற்றி பெற்று, மாநகராட்சியை கைப்பற்ற வேண்டும்.

    இவ்வாறு எடியூரப்பா பேசினார்.

    • வாக்குறுதி வழங்கிவிட்டு மத்திய அரசின் மீது பழி போடுவது மக்களுக்கு செய்யும் துரோகம்.
    • பெண்களுக்கான இலவச பேருந்து பயணம் எனும் திட்டத்தை மட்டுமே காங்கிரஸ் அரசாங்கம் நிறைவேற்றியிருக்கிறது.

    பெங்களூரு:

    கர்நாடகாவில் ஆளும் கட்சியான காங்கிரஸ், தனது தேர்தல் வாக்குறுதிகளில் முக்கியமான 5 வாக்குறுதிகளையும் முழுமையாக நிறைவேற்றவில்லை என்றால், சட்டசபையியின் உள்ளேயும், வெளியேயும் பா.ஜ.க. சத்தியாக்கிரக போராட்டம் நடத்தும் என பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவரான எடியூரப்பா எச்சரித்துள்ளார்.

    இதுதொடர்பாக எடியூரப்பா செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    மாநிலத்தின் "அன்ன பாக்யா" திட்டத்திற்காக அரிசி பெறுவதில் தேவையில்லாமல் மத்திய அரசை ஆளும் காங்கிரஸ் குற்றம் சுமத்துகிறது. ஏற்கெனவே 5 கிலோ அரிசியை மத்திய அரசாங்கம் இலவசமாக வழங்குவதால், இதற்கு மேலும் அரிசி வேண்டுமென்றால் அதை வினியோகிக்க ஏற்பாடுகளை மாநில அரசாங்கம் செய்து கொண்டு வாங்க வேண்டும்.

    மாநிலங்களுக்கு மேலும் அரிசி வழங்குவதாக மத்திய அரசு தெரிவிக்காதபோது, வாக்குறுதி வழங்கி விட்டு மத்திய அரசின் மீது பழி போடுவது மக்களுக்கு செய்யும் துரோகம். வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாவிட்டால் பதவி விலக வேண்டும்.

    5 வாக்குறுதிகளில் பெண்களுக்கான இலவச பேருந்து பயணம் எனும் திட்டத்தை மட்டுமே காங்கிரஸ் அரசாங்கம் பல இடைஞ்சல்களுடன் நிறைவேற்றியிருக்கிறது. மீதமுள்ள வாக்குறுதிகள் நிறைவேறும் அறிகுறிகள் இல்லை. அவற்றை நிறைவேற்றா விட்டால், சட்டசபையின் உள்ளேயும் வெளியேயும் பா.ஜ.க. போராட்டம் நடத்துவோம். கட்சியின் தலைவர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும் இதற்காக ஆலோசித்து போராட்டத்திற்கு திட்டமிடுவார்கள். கட்சியினர் அனைவரும் கலந்து கொள்வார்கள்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    கடந்த பா.ஜ.க.வின் ஆட்சிக் காலங்களில் நிதித்துறையை தன் வசம் வைத்திருந்த எடியூரப்பா, மேலும் தெரிவித்திருப்பதாவது:

    வாக்குறுதிகள் கொடுக்கும் முன்பு நிதி நிலைமையை கணக்கில் கொள்ள காங்கிரஸ் தவறி விட்டது. காங்கிரஸ் அளித்திருக்கும் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டால், வளர்ச்சி திட்டங்களுக்கான நிதி தட்டுப்பாடு தோன்றும். இப்பொழுதே மக்கள் மின்சார கட்டணம் உயர்த்தப்பட்டதற்கு எதிராக போராட்டம் நடத்துவதை காண்கிறோம். மக்களை துன்பத்திற்குள்ளாக்கி அதை ரசித்து வரும் காங்கிரஸின் போக்கு கண்டனத்திற்குரியது. இதற்கெல்லாம் மக்கள் தக்க பதிலளிப்பார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நீண்ட காலம் கர்நாடக முதல்-மந்திரியாக இருந்தவர் பட்டியலில் தேவராஜ அர்சு முதலிடத்தில் உள்ளார்.
    • கடிடல் மஞ்சப்பா 73 நாட்கள் மட்டுமே கர்நாடக முதல்வராக ஆட்சி செய்தார்.

    கர்நாடகாவின் புதிய முதல்வராக சித்தராமையா இன்று பதவி ஏற்கிறார். 2013 முதல் 2018 வரை 5 ஆண்டுகள் முதல்-மந்திரியாக ஆட்சி செய்த சித்தராமையாவின் 2-வது இன்னிங்ஸ் இதுவாகும். இதுவரை 2 முறைக்கு மேல் கர்நாடக முதல்-மந்திரியாக பலர் பொறுப்பேற்று உள்ளனர்.

    நீண்ட காலம் முதல்-மந்திரியாக இருந்த எடியூரப்பா மற்றும் ஹெக்டே ஆகியோரின் சாதனைகளை சித்தராமையா முறியடிக்க உள்ளார். 2 ஆண்டுகளுக்கு மேல் ஆட்சியில் இருந்தால் இந்த முறை கர்நாடகாவில் அதிக காலம் பதவி வகித்த முதல்-மந்திரிகளில் 3-வது இடத்திற்கு சித்தராமையா முன்னேறுவார். இந்த பட்டியலில் தற்போது சித்தராமையா 5-வது இடத்தில் உள்ளார்.

    நீண்ட காலம் கர்நாடக முதல்-மந்திரியாக இருந்தவர் பட்டியலில் தேவராஜ அர்சு முதலிடத்தில் உள்ளார். மாநிலத்தின் 9-வது முதல்வராக இருந்த தேவராஜ அர்சு, 2 முறை தனித்தனியாக 2,790 நாட்கள் மாநில முதல்-மந்திரியாக பணியாற்றினார்.

    இவருக்கு அடுத்தபடியாக 2,729 நாட்கள் மாநில முதல்வராக பணியாற்றியவர் நிஜலிங்கப்பா. 1,967 நாட்கள் முதல்வராக இருந்த ராமகிருஷ்ண ஹெக்டே, கர்நாடகாவில் அதிக காலம் ஆட்சி செய்தவர்களில் 3-வது இடத்தையும், 1,901 நாட்கள் முதல்வராக இருந்த எடியூரப்பா 4-வது இடத்தையும் பிடித்துள்ளனர்.

    கடந்த முறை சித்தராமையா 1,828 நாட்கள் பதவியில் இருந்தார். எனவே அவர் இந்த பட்டியலில் 5-வது இடத்தைப் பிடித்துள்ளார். சித்தராமையாவுக்குப் பிறகு, எஸ்.எம்.கிருஷ்ணா இந்தப் பட்டியலில் இடம்பெற்று 1,691 நாட்கள் முதல்வராக பதவி வகித்துள்ளார். கே.சி.ரெட்டி (1618 நாட்கள்), கெங்கல் ஹனுமந்தையா (1,603 நாட்கள்), பி.டி.ஜட்டி (1,393 நாட்கள்), வீரேந்திர பாட்டீல் (1,337 நாட்கள்) ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.

    கடிடல் மஞ்சப்பா 73 நாட்கள் மட்டுமே கர்நாடக முதல்வராக ஆட்சி செய்தார். பாதிக்கும் மேற்பட்ட முதல்-மந்திரிகள் 2 ஆண்டுகளுக்கும் குறைவாகவே ஆட்சி செய்துள்ளனர். கர்நாடகாவில் இதுவரை 9 லிங்காயத்துகள், 7 ஒக்கலிகர்கள் 3 பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், 2 பிராமணர்கள் மற்றும் 2 வேறு சமூகத்தினர் முதல்-மந்திரியாக பதவி வகித்துள்ளனர். 

    • இந்த தேர்தலில் லிங்காயத் சமுதாய மக்கள் காங்கிரசுக்கு ஆதரவு வழங்கினர்.
    • பா.ஜனதா மீதான நம்பிக்கையை லிங்காயத் மக்கள் இழந்துவிட்டனர்.

    பெங்களூரு :

    தார்வார்-உப்பள்ளி மத்திய தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. ஜெகதீஷ் ஷெட்டர். இவர் தனக்கு பா.ஜனதா டிக்கெட் கொடுக்காததால் அக்கட்சியில் இருந்து விலகி காங்கிரசில் சேர்ந்தார். தார்வார்-உப்பள்ளி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் களமிறங்கிய அவர் தோல்வி அடைந்தார். இந்த நிலையில் பெங்களூருவில் ஜெகதீஷ் ஷெட்டர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது கூறியதாவது:-

    லிங்காயத் தலைவரான எடியூரப்பா கடந்த பா.ஜனதா ஆட்சியில் முதல்-மந்திரியாக பதவி வகித்தார். ஆனால் அவரை வலுக்கட்டாயப்படுத்தி பா.ஜனதா பதவி விலக வைத்தது. மேலும் அவரை அக்கட்சி ஓரங்கட்டியது. எடியூரப்பாவை முதல்-மந்திரி பதவியில் இருந்து விலகியது ஏன் என்பதை உயர்மட்ட குழு கூற வேண்டும்.

    நான் காங்கிரசில் இணைந்ததால் தான் வடகர்நாடகத்தில் பா.ஜனதா வேட்பாளர்கள் தோல்வி அடைந்துள்ளனர். இந்த தேர்தலில் லிங்காயத் சமுதாய மக்கள் காங்கிரசுக்கு ஆதரவு வழங்கினர். தம்மய்யா, லட்சுமண் சவதி உள்பட பல லிங்காயத் தலைவர்களை பா.ஜனதா மதிக்கவில்லை. அவர்களை யாரும் சமாதானப்படுத்தவில்லை. பா.ஜனதா மீதான நம்பிக்கையை லிங்காயத் மக்கள் இழந்துவிட்டனர். பி.எல்.சந்தோஷ் பா.ஜனதா தனது கட்டுப்பாட்டில் வைக்க நினைக்கிறார். இதனால் என்னை ஓரங்கட்டினர். தற்போது என்னை குறிவைத்து பா.ஜனதாவினர் தோற்கடித்தனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கர்நாடக சட்டசபைக்கு நாளை தேர்தல் நடக்கிறது.
    • மத்திய அரசு கர்நாடகத்திற்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

    பெங்களூரு :

    கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

    கர்நாடக சட்டசபைக்கு நாளை (புதன்கிழமை) தேர்தல் நடக்கிறது. இதற்கான பிரசாரம் நிறைவடைந்து உள்ளது. இந்த தேர்தலில் பா.ஜனதா தனிப்பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடிக்கும் எங்கள் கட்சி 130 முதல் 135 தொகுதிகளில் வெற்றி பெறுவது உறுதி. வருணா தொகுதியில் சித்தராமையா தோல்வி அடைவார். அங்கு எங்கள் கட்சியின் வேட்பாளர் சோமண்ணா வெற்றி பெறுவது உறுதி.

    தேர்தல் முடிவடைந்த பிறகு நாம் மீண்டும் இங்கு சந்திப்போம். அப்போது நான் தற்போது என்ன சொல்கிறேனோ, அது உண்மை என்று தெரியவரும். மத்திய அரசு கர்நாடகத்திற்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. அதனால் தேர்தல் பிரசார கூட்டங்களில் பிரதமர் மோடி மத்திய அரசின் திட்டங்களை எடுத்து கூறியுள்ளார். அந்த திட்டங்களை மீண்டும் கூற தேவை இல்லை. கர்நாடகம் வளர்ச்சி பாதையில் எப்படி பயணிக்கிறது என்பது பிரதமருக்கு நன்றாக தெரியும்.

    முஸ்லிம்கள் வெற்றி பெறக்கூடிய வாய்ப்பு குறைவாக இருப்பதால் அந்த சமூகத்திற்கு நாங்கள் டிக்கெட் வழங்கவில்லை. வரும் காலத்தில் அத்தகைய சூழ்நிலை ஏற்பட்டால் முஸ்லிம் சமூகத்தினருக்கு டிக்கெட் வழங்கப்படும்.

    இவ்வாறு எடியூரப்பா கூறினார்.

    • கட்சிக்கு துரோகம் செய்தவருக்கு தோல்வி கொடுக்க வேண்டும்.
    • மே 13-ந்தேதியுடன் பா.ஜனதாவுக்கு இறுதிச்சடங்கு நடக்கும்.

    மைசூரு :

    கர்நாடக சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல்கட்சி தலைவர்கள் சவால் விடுவதும், குற்றச்சாட்டுகளை கூறும் சம்பவங்களும் நாள்தோறும் அரங்கேறி வருகிறது.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் உப்பள்ளியில் நடந்த வீரசைவ-லிங்காயத் சமுதாய தலைவர்கள் கூட்டத்தில் முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா பேசுகையில், சிலர் பா.ஜனதாவில் அனைத்து பதவிகளையும், அதிகாரத்தையும் பெற்றுக்கொண்டு வேறு கட்சிக்கு சென்றுள்ளனர். பா.ஜனதாவுக்கு துரோகம் செய்துவிட்டு சென்ற ஜெகதீஷ் ஷெட்டரை வெற்றி பெற விடக்கூடாது. அவருக்கு நாம் யார் என்று பாடம் புகட்ட வேண்டும். இனி அவரது பெயரை நான் குறிப்பிட மாட்டேன். துரோகி என கூறுவேன். கட்சிக்கு துரோகம் செய்தவருக்கு தோல்வி கொடுக்க வேண்டும். நான் எனது ரத்தத்தில் எழுதி தருகிறேன், கர்நாடகத்தில் இந்த முறை பா.ஜனதா தனி மெஜாரிட்டியுடன் ஆட்சிக்கு வரும் என்று பேசினார்.

    இந்த நிலையில் நேற்று காலை மைசூருவில் கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் எடியூரப்பாவின் பேச்சுக்கு பதிலடி கொடுத்து கூறியதாவது:-

    எடியூரப்பா இந்த முறை பா.ஜனதா ஆட்சியை பிடிக்கும் ரத்ததால் எழுதி தருவதாக கூறியுள்ளார். அந்த கட்சி 40 சதவீத கமிஷன் பெற்றுள்ளது. இதனால் 40 சதவீத கமிஷன் போல் 40 இடங்களில் பா.ஜனதா வெற்றி பெறும். கர்நாடகத்தில் இந்த தேர்தலில் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் என நான் எனது ரத்தத்தில் எழுதி கொடுக்கிறேன்.

    இரட்டை என்ஜின் அரசு இட ஒதுக்கீடு விவகாரத்தில் மோசடி நாடகத்தை அரங்கேற்றியுள்ளது. பா.ஜனதா ஒரு துரோக கட்சி என்பது சுப்ரீம் கோர்ட்டுக்கு தெரியும். தேர்தல் நேரத்தில் இடஒதுக்கீடு விவகாரத்தில் தேன் கூட்டில் கைவைத்து பா.ஜனதாவினர் ஏமாற்றியுள்ளனர்.

    அமித்ஷாவும், நீங்களும் இடஒதுக்கீடு விவகாரத்தில் உறுதியாக இருக்கிறீர்களா? அல்லது பொய் சொல்லி ஏமாற்றுகிறீர்களா?. லிங்காயத்துகளும், ஒக்கலிகர்களும் பிச்சைக்காரர்களா?. அந்த சமுதாயத்தினருக்கு தலா 2 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவதாக நீங்கள் நாடகமாடுகிறீர்கள்.

    வருகிற மே 13-ந்தேதியுடன் பா.ஜனதாவுக்கு இறுதிச்சடங்கு நடக்கும். அனைவருக்கும் சம பங்கீடு கொடுப்போம். இதையே நாங்கள் செய்வோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஆளும் பா.ஜனதா, காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதாதளம் ஆகிய கட்சிகள் களத்தில் இருப்பதால் 3 முனை போட்டி நிலவுகிறது.
    • 170 முதல் 180 வேட்பாளர்கள் அடங்கிய முதல் கட்ட பட்டியலில் வெளியிடப்படும்.

    224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு மே 10-ந்தேதி தேர்தல் நடக்கிறது. ஆளும் பா.ஜனதா, காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதாதளம் ஆகிய கட்சிகள் களத்தில் இருப்பதால் 3 முனை போட்டி நிலவுகிறது.

    காங்கிரஸ் கட்சி முதல்கட்டமாக 124 தொகுதிக்கும், 2-வது கட்டமாக 41 இடங்களுக்கும் வேட்பாளர்களை அறிவித்து இருந்தது. மதசார்பற்ற ஜனதாதளம் 93 தொகுதிக்கு வேட்பாளர்களை அறிவித்து இருந்தது. பா.ஜனதா இன்னும் வேட்பாளர்களை அறிவிக்கவில்லை.

    இந்நிலையில் கர்நாடகா சட்டசபை தேர்தலுக்கான பா.ஜனதா வேட்பாளர் பட்டியல் இன்று மாலை வெளியிடப்படும் என்று முன்னாள் முதல்-மந்திரியான எடியூரப்பா தெரிவித்துள்ளார். 170 முதல் 180 வேட்பாளர்கள் அடங்கிய முதல் கட்ட பட்டியலில் வெளியிடப்படும் என்று அவர் டெல்லியில் இன்று காலை நிருபர்களிடம் கூறினார்.

    பா.ஜனதா வேட்பாளர் பட்டியலை இறுதி செய்வதற்காக பிரதமர் மோடி தலைமையில் மத்திய தேர்தல் குழு கூட்டம் டெல்லியில் நேற்று நடந்தது.

    • கர்நாடக சட்டசபைக்கு ஒரே கட்டமாக மே 10-ம் தேதி தேர்தல் நடத்தப்படும்.
    • இந்த தேர்தலில் பா.ஜ.க. 100 சதவீதம் வெற்றி பெறும் என எடியூரப்பா தெரிவித்தார்.

    பெங்களூரு:

    முதல் மந்திரி பசவராஜ் பொம்மை தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடைபெறும் கர்நாடக மாநில சட்டசபையின் பதவிக்காலம் மே மாதம் 24-ம் தேதி முடிவடைகிறது.

    மொத்தம் 224 இடங்களைக் கொண்ட கர்நாடக சட்டசபைக்கு ஒரே கட்டமாக மே 10-ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என தலைமை தேர்தல் கமிஷனர் ராஜீவ் குமார் நேற்று அறிவித்தார்.

    இதற்கான வேட்புமனு தாக்கல் வரும் 13-ம் தேதி தொடங்கி 20-ம் தேதி வரை நடைபெறுகிறது. தேர்தலில் பதிவான வாக்குகள் மே 13-ம் தேதி எண்ணப்பட்டு, அன்று மாலையே அங்கு ஆட்சி அமைக்கப்போவது யார் என்று அறிவிக்கப்பட உள்ளது.

    ஆட்சியைத் தக்கவைக்க பா.ஜ.க.வும், இழந்த ஆட்சியை மீண்டும் கைப்பற்ற காங்கிரசும் தீவிர முனைப்போடு செயல்பட்டு வருகின்றன. ஜனதா தளம் (எஸ்) கட்சி 93 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்தது. காங்கிரஸ் கட்சி 124 தொகுதிகளுக்கான தனது முதல் வேட்பாளர் பட்டியலை கடந்த வாரம் வெளியிட்டுள்ளது. பா.ஜ.க. வேட்பாளர் தேர்வில் மும்முரமாக ஈடுபட்டுள்ளது.

    இந்நிலையில், கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதல் மந்திரியும், பா.ஜ.க. மூத்த தலைவருமான எடியூரப்பா செய்தியாளர்களிடம் பேசுகையில், பிரதமர் மோடியின் தலைமையில் நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வருவோம். காங்கிரஸ் கட்சியில் ஊழல் மலிந்துவிட்டது. அதனால்தான் அவர்கள் உண்மைக்கு மாறான குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றனர். பா.ஜ.க.வில் பிரதமர் மோடி, அமித்ஷா போன்ற தலைவர்கள் உள்ளனர். அவர்களை கர்நாடக மக்கள் வரவேற்கிறார்கள். எனவே கர்நாடக தேர்தலில் பா.ஜ.க. 100 சதவீதம் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் என கூறினார்.

    ×