search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    சிவமொக்கா விமான நிலையத்திற்கு எடியூரப்பா பெயர்: பசவராஜ் பொம்மை அறிவிப்பு
    X

    சிவமொக்கா விமான நிலையத்திற்கு எடியூரப்பா பெயர்: பசவராஜ் பொம்மை அறிவிப்பு

    • இந்த விமான நிலையத்தை பிரதமர் மோடி 27-ந் தேதி தொடங்கி வைக்கிறார்.
    • வளர்ச்சி பணிகள் என்பது தொடர்ச்சியாக நடைபெறும் ஒரு நடைமுறை.

    பெங்களூரு :

    சிவமொக்காவில் வளர்ச்சி திட்ட பணிகள் தொடக்க விழா நேற்று நடைபெற்றது. இதில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கலந்துகொண்டு பணிகளை தொடங்கி வைத்து பேசியதாவது:-

    சிவமொக்கா மாவட்டத்தில் எங்கு பார்த்தாலும் வளர்ச்சி பணிகள் நடைபெற்று வருகின்றன. இன்று (நேற்று) மட்டும் ரூ.1,000 கோடிக்கு பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன. சிவமொக்கா விமான நிலையத்திற்கு எடியூரப்பா பெயரை சூட்ட மந்திரிசபை முடிவு செய்துள்ளது. இதுகுறித்து மத்திய அரசுக்கு ஒரு வரைவு அறிக்கை அனுப்பி வைக்கப்படும். இந்த விமான நிலையத்தை பிரதமர் மோடி வருகிற 27-ந் தேதி தொடங்கி வைக்கிறார்.

    ஷராவதி அணையில் நீரில் மூழ்கிய நிலங்களின் விவசாயிகளுக்கு மறுவாழ்வு வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க அரசு உறுதி பூண்டுள்ளது. இதுகுறித்து ஒரு அறிக்கை மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்படும். அதன் பிறகு வேறு இடங்களில் குடியமர்த்தப்பட்ட மக்களுக்கு தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்படும். சிவமொக்கா-சிகாரிபுரா-ராணிபென்னூர் ரெயில் பாதை திட்டத்திற்கு மத்திய அரசு ரூ.500 கோடி நிதி ஒதுக்கியுள்ளது.

    இதற்கு பிரதமர் மோடி சமீபத்தில் அடிக்கல் நாட்டினார். வளர்ச்சி பணிகள் என்பது தொடர்ச்சியாக நடைபெறும் ஒரு நடைமுறை. குடிசை பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வீட்டு உரிமை பத்திரம் வழங்கப்பட்டுள்ளது. சிவமொக்காவின் வளர்ச்சிக்கு இருபெரும் தலைவர்களான எடியூரப்பாவும், ஈசுவரப்பாவும் நிறைய திட்டங்களை கொண்டு வந்துள்ளனர்.

    இவ்வாறு பசவராஜ் பொம்மை பேசினார்.

    Next Story
    ×