search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Prakash Javadekar"

    காங்கிரஸ் என்றால் பொய் என்றும், ரபேல் என்றால் ராகுலின் தோல்வி என்றும் தெரிவிட்டதாக மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். #PrakashJavadekar #RahulGandhi #RafaleDeal
    புதுடெல்லி:

    ரபேல் ஒப்பந்த விவகாரத்தில் பிரதமர் பற்றி தனது பிரசாரத்துக்காக ராகுல் காந்தி வருத்தம் தெரிவித்தது குறித்து பா.ஜனதா தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் கூறும்போது, “இது ராகுல் காந்தியின் நம்பகத்தன்மைக்கு கிடைத்த அடி. பொதுவாழ்வில் மக்கள் சில நேரங்களில் உண்மையற்றதை சொல்வார்கள். ஆனால் அதையே திரும்பத் திரும்ப சொல்வது தான் வருத்தத்திற்குரியது. காங்கிரஸ் போன்ற தேசிய கட்சியின் தலைவர் பொய்யை மட்டுமே நம்பியுள்ளார் என்பது எனக்கு வருத்தத்தை அளிக்கிறது” என்றார்.

    மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர், “ராகுல் காந்தி வருத்தம் தெரிவித்துள்ளதுடன், தான் கூறியது பொய் என்றும் ஒப்புக்கொண்டுள்ளார். காங்கிரஸ் என்றால் பொய் என்றும், ரபேல் என்றால் ராகுலின் தோல்வி என்றும் அர்த்தமாகிறது” என்று கூறினார்.

    வழக்கு தொடுத்த மீனாட்சி லேகி எம்.பி. கூறும்போது, “ராகுல் காந்தி சொன்னது பொய் என்பது வெளியானதில் எனக்கு திருப்தி. ஆனாலும் இறுதி தீர்ப்புக்காக காத்திருக்கிறேன்” என்றார்.  #PrakashJavadekar #RahulGandhi #RafaleDeal
    மைசூருவில் தனது பிரச்சனையை தெரிவிக்க வந்த பெண்ணை கர்நாடக மாநில முன்னாள் முதல் மந்திரி அவமதித்த சம்பவத்துக்கு மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் கண்டனம் தெரிவித்துள்ளார். #PrakashJavadekar #Siddaramaiah
    புதுடெல்லி:

    கர்நாடக மாநில முன்னாள் முதல் மந்திரியும் காங்கிரஸ் கட்சியின் செயற்குழு உறுப்பினருமான சித்தராமையா இன்று மைசூரு நகரில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

    அவர் முன்னர் எம்.எல்.ஏ.வாக பதவி வகித்த மைசூரு சாமுண்டீஸ்வரி தொகுதியை சேர்ந்த ஒருபெண் ஒலிபெருக்கி மூலம் தனது பிரச்சனையை சித்தராமையாவுக்கு தெரியப்படுத்தினார். 

    அந்தப் பெண் ஆவேசமாக பேசியதை கேட்டு ஒருகட்டத்தில் பொறுமையை இழந்த சித்தராமையா, அவரது கையில் இருந்த மைக்கை பறிக்க முயன்றார். அப்போது, சித்தராமையாவின் கை அந்தப் பெண்ணின் துப்பட்டா மீது பட்டதால் மேலாடை லேசாக நழுவியது.

    ஒலிபெருக்கி பறிபோன நிலையிலும் சித்தராமையாவிடம் தனது குறைகளை அந்தப் பெண் ஆவேசமாக தெரிவித்தார். அவரது தோள்மீது கை வைத்து அமருமாறு சித்தராமையா எச்சரித்தார். 

    இந்த காட்சிகள் அனைத்தும் செய்தி நிறுவனங்கள் மூலம் பல்வேறு தலைப்புகளுடன் வீடியோவாக பதிவேற்றம் செய்யப்பட்டு வரும் நிலையில் இந்த சம்பவத்துக்கு பா.ஜ.க.வை சேர்ந்த மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக கருத்து தெரிவித்த பிரகாஷ் ஜவடேகர், ‘ அந்தப் பெண்ணை சித்தராமையா அவமதித்தது குற்றம். சித்தராமையாவை என்ன செய்யப் போகிறார்? என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திதான் தெளிவுப்படுத்த வேண்டும்.

    அவர்கள் பெண்களை அப்படித்தான் பார்க்கிறார்கள். ஒரு குடும்பத்தை சேர்ந்த பெண்ணைத்தவிர (சோனியா) வேறு பெண்களுக்கு காங்கிரசார் மதிப்பளிப்பதில்லை’ என குறிப்பிட்டுள்ளார். #PrakashJavadekar #Siddaramaiah 
    கிறிஸ்டியன் மைக்கேல் போல் நிரவ் மோடி, மல்லையா, சோக்சியும் இந்தியா கொண்டு வரப்படுவார்கள் என மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். #PrakashJavadekar #NiravModi #Mallya #Choksi
    ஜெய்ப்பூர்:

    மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் ஜெய்ப்பூரில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:-

    முந்தைய காங்கிரஸ் ஆட்சி காலத்தில் வங்கிகளில் கடன் வாங்கி விட்டு அதை திருப்பி செலுத்தாமல் தொழில் அதிபர்கள் விஜய் மல்லையா, நிரவ் மோடி, மெகுல் சோக்சி ஆகியோர் சுதந்திரமாக செயல்பட்டனர். அப்போது அவர்கள் வெளிநாடுகளுக்கு தப்ப முயற்சி செய்யவில்லை. ஆனால் பா.ஜனதா ஆட்சிக்கு வந்ததும் வேறுவழியின்றி அவர்கள் இந்தியாவை விட்டு வெளிநாடுகளுக்கு தப்பி ஓடி விட்டனர்.



    இந்தியாவில் உள்ள அவர்களின் சொத்துகளை முடக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதேபோல் வெளிநாடுகளில் உள்ள அவர்களின் சொத்துகளும் முடக்கப்படும்.

    ஹெலிகாப்டர் ஊழல் வழக்கில் இடைத்தரகராக செயல்பட்ட கிறிஸ்டியன் மைக்கேல் வெளிநாட்டில் இருந்து இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டு கைது செய்யப்பட்டார். அதே போல் வெளிநாடுகளில் தஞ்சம் புகுந்துள்ள நிரவ் மோடி, விஜய் மல்லையா, மெகுல் சோக்சி ஆகியோரும் இந்தியா கொண்டு வரப்படுவார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார். #PrakashJavadekar #NiravModi #Mallya #Choksi
    ‘வரும் பாராளுமன்ற தேர்தலில் மோடிக்கு மாற்று யார்?’’ என்று எதிர்க்கட்சிகளுக்கு பாரதீய ஜனதா கட்சி கேள்வி எழுப்பி உள்ளது. #BJP #PMModi #PrakashJavadekar
    புனே:

    விரைவில் பாராளுமன்ற தேர்தல் நடக்க உள்ள நிலையில் பாரதீய ஜனதா கட்சிக்கு எதிராக மம்தா பானர்ஜி ஏற்பாட்டில் நேற்று முன்தினம் (சனிக்கிழமை) கொல்கத்தாவில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடந்தது.

    இதில் 22 கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் அனைவரும் பிரதமர் மோடிக்கு எதிராக ஆவேச கருத்துக்களை வெளியிட்டனர்.

    இந்த நிலையில், மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரியும், பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவருமான பிரகா‌ஷ் ஜவடேகர், மராட்டிய மாநிலம் புனேயில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கொல்கத்தாவில் நேற்று (நேற்று முன்தினம்) எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து இருக்கின்றன. இந்த கட்சிகள் அனைத்தும் பிரதமர் பதவியில் இருந்து மோடியை வெளியேற்ற வேண்டும் என்று விரும்புவது நிரூபணமாகி உள்ளது. சரி. அப்படியென்றால் வரும் பாராளுமன்ற தேர்தலில் மோடிக்கு மாற்று யார் என்று சொல்லுங்கள்?

    அவர்களால் (எதிர்க்கட்சிகளால்) மாற்று என ஒரு தலைவரை வழங்க முடியாது. எனவே நாட்டின் நிலைமை, மோடி இல்லை என்றால் அராஜகம்தான் இருக்கும்.

    கடந்த காலத்தில் ஐ.கே.குஜ்ரால், சந்திரசேகர், தேவேகவுடா தலைமையிலான கூட்டணி அரசுகளை பார்த்திருக்கிறோம். அந்த பலவீனமான அரசுகளால் மக்கள் பாதிப்புக்கு ஆளானார்கள்.

    மற்றொரு பக்கம், பலம் வாய்ந்ததும், கொள்கைகளின் அடிப்படையிலானதுமான மோடி தலைமையிலான அரசினால் பல நன்மைகளை மக்கள் பார்த்து விட்டார்கள். எனவே வரக்கூடிய தேர்தலில், பலம் வாய்ந்த ஒரு அரசு வேண்டுமா அல்லது பலவீனமான அரசு வேண்டுமா என்பதை மக்கள் முடிவு செய்வார்கள்.



    கொல்கத்தா பொதுக்கூட்டம், எதிர்க்கட்சிகளின் பதற்றத்தை காட்டியது. அவர்களால் தேர்தல் அறிக்கையையோ அல்லது குறைந்தபட்ச செயல்திட்டத்தையோ தயாரிக்க ஒரு குழுவைக்கூட அமைக்க முடியவில்லை.

    ஆனால் மின்னணு வாக்கு எந்திரங்கள் தொடர்பான ஒரு குழுவை மட்டும் அமைத்துள்ளனர். இது, வரும் தேர்தலில் அடையப்போகிற தோல்விக்கு காரணம் சொல்வதற்கான ஒரு வாய்ப்பாகவே அவர்கள் கருதுவதாக தோன்றுகிறது. இதில் அவர்களின் பதற்றமும் தெரிகிறது.

    காங்கிரசும், பிற எதிர்க்கட்சிகளும் ஒரு பலவீனமான அரசையே விரும்புகின்றனர். அப்போதுதானே அவர்கள் ஊழல் செய்ய முடியும்? ஆனால் மக்களோ நிர்வாகத்தில் ஊழலை ஒழிக்கிற, ஊழலில் தொடர்புடைய யாரையும் விட்டு விடாத மோடி அரசைப் போன்ற பலம் வாய்ந்த அரசைத்தான் விரும்புகிறார்கள்.

    வரும் பாராளுமன்ற தேர்தலில், கடந்த பாராளுமன்ற தேர்தலில் பெற்றதை விட கூடுதல் இடங்களை பாரதீய ஜனதா கட்சி கைப்பற்றும். ஓட்டு விகிதாசாரமும் அதிகரிக்கும்.

    கடந்த தேர்தலில் பெற்ற 282 இடங்களை பாரதீய ஜனதா கட்சி தாண்டி விடும் என்று நான் சொல்லக்காரணம், மேற்கு வங்காளம், ஒடிசா, வடகிழக்கு மாநிலங்களில் கூடுதல் இடங்கள் கிடைக்கும் என்பதுதான்.

    அடுத்த 3 மாதங்களில் நாட்டின் ஒவ்வொரு வாக்குச்சாவடியையும் பாரதீய ஜனதா கட்சி சென்றடையும். கடந்த 4½ ஆண்டுகளில் பாரதீய ஜனதா கூட்டணி அரசு செய்த சாதனைகளை மக்களிடம் எடுத்துச்செல்வோம். எதிர்க்கட்சிகளின் வெற்று அரசியலை மக்களிடம் அம்பலப்படுத்துவோம்.

    இவ்வாறு அவர் கூறினார். #BJP #PMModi #PrakashJavadekar
    பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு வரும் கல்வியாண்டில் அனைத்து கல்வி நிறுவனங்களிலும் அமல்படுத்தப்படும் என மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். #PrakashJavadekar #GeneralCategoryQuota
    புதுடெல்லி:

    பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் சாதியினருக்கும் பொதுப்பிரிவில் 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும்  மசோதா பாராளுமன்றத்தில் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சமீபத்தில் ஒப்புதல் அளித்தார்.

    இந்நிலையில், பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு சட்டம், வரும் கல்வியாண்டில் அனைத்து கல்வி நிறுவனங்களிலும் அமல்படுத்தப்படும் என மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். இதன்மூலம் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் 2019 கல்வியாண்டு முதல் 10 சதவீத இடஒதுக்கீடு அமல்படுத்தப்பட உள்ளது. #PrakashJavadekar #GeneralCategoryQuota
    நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் எட்டாம் வகுப்பு வரை இந்தி மொழியை கட்டாயப் பாடமாக்க மத்திய அரசு தீர்மானித்துள்ளதாக வெளியான தகவலுக்கு மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் விளக்கம் அளித்துள்ளார். #PrakashJavadekar #Hindi #School
    புதுடெல்லி:

    நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் எட்டாம் வகுப்பு வரை இந்தி மொழியை கட்டாயப் பாடமாக்க மத்திய அரசு தீர்மானித்துள்ளதாக சமீபத்தில் சில ஊடகங்களில் செய்தி வெளியானது. இதற்கு பல்வேறு தரப்பினரிடையே எதிர்ப்பும் கிளம்பியது.



    இந்நிலையில், இவ்விவகாரம் தொடர்பாக மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் இன்று விளக்கம் அளித்துள்ளார்.

    தேசிய கல்விக் கொள்கையின்படி எந்த மொழியையும் கட்டாயப் பாடமாக்குவதற்கு இடமில்லை. ஊடகங்களில் வெளியான தகவல் தவறானது என அவர் குறிப்பிட்டுள்ளார். #PrakashJavadekar #Hindi #School
    காங்கிரஸ் ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களை விட, மோடி ஆட்சியில் 2 மடங்கு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். #PrakashJavadekar #PMModi #congress
    திருச்சி:

    திருச்சி தூய வளனார் கல்லூரியின் 175-வது ஆண்டு விழா மற்றும் திருச்சி என்.ஐ.டி.யில் உற்பத்தி மையம் திறப்பு விழா இன்று நடைபெற்றது.

    இதில் பங்கேற்க மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் இன்று காலை திருச்சி வந்தார். திருச்சி விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    திருச்சியில் நடைபெறும் முக்கியமான நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக இங்கு வந்துள்ளேன். திருச்சி தேசிய தொழில்நுட்ப வளாகத்தில் (என்.ஐ.டி.) இந்தியாவிலேயே முதன் முறையாக ரூ.190 கோடியில் உயர் ஆய்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது.

    ஒரே வளாகத்தில் 13 ஆய்வக கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளது சிறப்பாகும். இது என்ஜினீயரிங் கல்வி மேம்பாட்டுக்காக மட்டுமல்லாது, தொழிற்சாலை திறன் மேம்பாட்டையும் ஊக்குவிக்கும்.

    இதைத் தொடர்ந்து திருச்சி ஜோசப் கல்லூரி 150-வது ஆண்டு விழாவிலும் பங்கேற்கிறேன். மத்திய நரேந்திர மோடி அரசு அனைத்து துறைகளிலும் சிறப்பு மிக்க சாதனை செய்துள்ளது. இதற்கு முன்பு இருந்த ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களை விட, மோடி ஆட்சியில் 2 மடங்கு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.


    பொது மக்களுக்கு தேவையான குடிநீர், மின்சாரம், கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள், கியாஸ் இணைப்பு உள்ளிட்ட திட்டங்கள் முன்பு இருந்ததை விட கடந்த 4 ஆண்டுகளில் 2 மடங்கு கூடுதலாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

    தற்போது பெட்ரோல்- டீசல் விலை ரூ.5 வரை குறைக்கப்பட்டுள்ளது பொதுமக்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. ஏற்கனவே மத்திய அரசு ஒரு லிட்டருக்கு ரூ.2.50 பைசா குறைத்துள்ளது. பாரதிய ஜனதா ஆளும் 13 மாநிலங்களில் அந்த மாநில அரசுகளும் லிட்டருக்கு ரூ.2.50 பைசா குறைத்துள்ளது. இதன் மூலம் ரூ.5 குறைந்ததால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மத்தியில் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜனதா அரசு சிறப்பு வாய்ந்த சாதனைகளை செய்துள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார். #BJP #PrakashJavadekar #PMModi #Congress
    ஆண்டுக்கு 2 முறை ‘நீட்’ தேர்வு நடத்தும் முடிவையும், ஆன்லைனில் மட்டுமே தேர்வு நடத்தும் முடிவையும் மத்திய அரசு கைவிட்டுள்ளது. அதன்படி, ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே ‘நீட்’ தேர்வு நடத்தப்படும். #NEET #PrakashJavadekar
    புதுடெல்லி:

    மருத்துவம் மற்றும் பல் மருத்துவ படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கு தேசிய அளவில் ‘நீட்’ நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வை சி.பி.எஸ்.இ. நடத்தி வந்தது.

    இந்நிலையில், கடந்த மாதம், மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டார். புதிதாக அமைக்கப்பட்ட தேசிய தேர்வு முகமை (என்.டி.ஏ.) ‘நீட்’ தேர்வை இனிமேல் நடத்தும் என்றும், ஆண்டுக்கு 2 முறை ‘நீட்’ தேர்வு நடத்தப்படும் என்றும் அறிவித்தார்.



    மேலும், ‘நீட்’ தேர்வு, ஆன்லைன் முறையில் மட்டுமே நடத்தப்படும் என்றும் கூறினார்.

    அவரது அறிவிப்புக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆன்லைன் முறையில் மட்டுமே தேர்வு நடத்தினால், கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று கூறினர்.

    மேலும், மத்திய சுகாதார அமைச்சகமும் இந்த அறிவிப்புக்கு கடிதம் மூலம் அதிருப்தி தெரிவித்தது. ஆண்டுக்கு 2 முறை ‘நீட்’ தேர்வு நடத்தினால், தேர்வு அட்டவணை, மாணவர்களுக்கு கூடுதல் அழுத்தத்தை உருவாக்கும் என்றும், ஆன்லைன் முறை தேர்வால், கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்றும் சுகாதார அமைச்சகம் கூறியது.

    இந்த எதிர்ப்பை தொடர்ந்து, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் தனது முந்தைய முடிவுகளை கைவிட்டுள்ளது.

    வழக்கம்போல், ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே ‘நீட்’ தேர்வு நடத்தப்படும் என்றும், ஆன்லைன் தேர்வு முறை கிடையாது என்றும் நேற்று அறிவித்தது.

    இதுகுறித்து மனிதவள மேம்பாட்டு அமைச்சக உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    கடந்த ஆண்டு பின்பற்றிய முறையே இந்த ஆண்டும் தொடர வேண்டும் என்று மத்திய சுகாதார அமைச்சகம் வேண்டுகோள் விடுத்தது. அதன்படி, இந்த மாற்றம் செய்யப்படுகிறது. ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே ‘நீட்’ தேர்வு நடத்தப்படும்.

    ஆன்லைன் முறை அல்லாமல், பேனா, பேப்பர் முறையிலேயே தேர்வு நடத்தப்படும். கடந்த ஆண்டு நடத்தப்பட்ட மொழிகளிலேயே தேர்வு நடைபெறும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அடுத்த ‘நீட்’ தேர்வு, 2019-ம் ஆண்டு மே 5-ந் தேதி நடைபெறும் என்றும் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அறிவித்துள்ளது.  #NEET #PrakashJavadekar
    நாடாளுமன்ற மக்களவையில், தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் திருத்த மசோதாவை மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் நேற்று தாக்கல் செய்தார். #PrakashJavadekar #TeacherTrainingInstitution
    புதுடெல்லி:

    நாடாளுமன்ற மக்களவையில், தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் திருத்த மசோதாவை மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் நேற்று தாக்கல் செய்தார். மத்திய, மாநில அரசுகளின் நிதி உதவியுடன் செயல்படும் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள், தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் (என்.சி.டி.இ.) சட்டப்படி அங்கீகாரம் பெறாதபோதிலும், கடந்த 2017-2018-ம் கல்வி ஆண்டு வரை ஆசிரியர் பயிற்சி படிப்புகளை வழங்கி இருந்தால், அத்தகைய நிறுவனங்களுக்கு முன்தேதியிட்டு அங்கீகாரம் வழங்க இந்த மசோதா வகை செய்கிறது.

    இந்த மசோதாவால், இதுபோன்ற 20 ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் பலன் அடையும் என்று பிரகாஷ் ஜவடேகர் கூறினார். அ.தி.மு.க. உறுப்பினர் எம்.உதயகுமார், மசோதாவை ஆதரித்து பேசினார். 
    மருத்துவ படிப்புக்கான தகுதித்தேர்வாக நடத்தப்படும் நீட் மற்றும் ஜெ.இ.இ தேர்வுகள் ஆன்லைன் மூலம் வருடத்துக்கு 2 முறை நடத்தப்படும் என மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். #NEET #JEE #PrakashJavadekar
    புதுடெல்லி:

    மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் இன்று டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது நீட் மற்றும் ஜெ.இ.இ தேர்வுகள் ஆன்லைன் மூலம் வருடத்துக்கு 2 முறை நடத்தப்படும் என அறிவித்துள்ளார்.

    மேலும், இந்த தேர்வுகளை புதிதாக கட்டமைக்கப்பட்ட தேசிய தேர்வு நிறுவனம் எனும் நிறுவனம் நடத்தும் எனவும் அப்போது அவர் கூறியுள்ளார். வருடத்துக்கு இருமுறை என அறிவிக்கப்பட்ட தேர்வுகள் வெவ்வேறு தேதிகளில் நடத்தப்படும் எனவும் அறிவித்துள்ளார்.



    ஜனவரி மற்றும் ஏப்ரல் மாதங்களில் ஜெ.இ.இ தேர்வும், பிப்ரவரி மற்றும் மே மாதங்களில் நீட் தேர்வும் நடத்தப்படும் எனவும் மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

    மேலும் இந்த இரண்டு தேர்வுகள் மட்டுமின்றி, யு.ஜி.சி நெட் மற்றும் சி.எம்.ஏ.டி ஆகிய தேர்வுகளும் தேசிய தேர்வு நிறுவனத்தால் நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. #NEET #JEE #PrakashJavadekar
    மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர், வரும் ஆண்டு முதல் ஒரு மாவட்டத்தை சேர்ந்த மாணவர்கள் அவர்களுடைய மாவட்டத்திலேயே நீட் தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்படும் என கூறினார். #NEET #HRDMinister #PrakashJavadekar

    சென்னை:

    சென்னை ஐஐடியில் இன்று நடைபெற்ற ஒரு கலந்துரையாடலில் மத்திய  மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், வரும் ஆண்டு முதல் ஒரு மாவட்டத்தை சேர்ந்த மாணவர்கள் அவர்களுடைய மாவட்டத்திலேயே நீட் தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்படும் என கூறினார்.

    இதுகுறித்து அவர் கூறியதாவது:-

    வரும் ஆண்டு முதல் ஒரு மாவட்டத்தை சேர்ந்த மாணவர்கள் அவர்களுடைய மாவட்டத்திலேயே நீட் தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்படும். தேசிய கல்வி கொள்கை விரைவில் கொண்டு வரப்படும். மாநில அரசின் பாடத்திட்டத்திலும் நீட் கேள்விகள் கேட்கப்படும். தமிழில் கேள்வித்தாள்களை தயாரிக்க நல்ல தமிழ் மொழி பெயர்ப்பார்களை தமிழக அரசு அனுப்ப வேண்டும். 

    இவ்வாறு அவர் கூறினார். #NEET #HRDMinister #PrakashJavadekar
    கல்விப் பணியில் புரட்சிகர மாற்றங்களை ஏற்படுத்திய ஆசிரியர்கள் தேசிய விருதுக்கு நேரடியாக விண்ணப்பிக்கலாம் என மத்திய மனிதவள மேம்பாட்டு மந்திரி பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். #NationalAward #Teachers #Javadekar
    புதுடெல்லி:

    மத்திய மனிதவள மேம்பாட்டு மந்திரி பிரகாஷ் ஜவடேகர் டெல்லியில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    கல்விப் பணியில் புரட்சிகர மாற்றங்களை ஏற்படுத்திய மற்றும் தங்களுக்கே உரிய பாணியில் சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள் 50 பேருக்கு வழங்கப்படும் தேசிய விருதுகளை இந்த ஆண்டு முதல் நேரடியாக தேர்வு செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதுதொடர்பான வீடியோ பதிவுகளை ஆசிரியர்கள் ஆன்லைன் மூலம் நேரடியாக மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்துக்கு பதிவேற்றம் செய்து விண்ணப்பிக்கலாம்.

    ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்து 3 ஆசிரியர்களும், மாநிலத்தில் இருந்து 6 பேரும் இவர்களில் இருந்து இறுதியாக 50 ஆசிரியர்களும் தேசிய அளவில் தேர்ந்தெடுக்கப்படுவர்.

    அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், கேந்திரிய வித்யாலயா, நவோதயா, சைனிக், சி.பி.எஸ்.இ., சி.ஐ.எஸ்.சி.இ. மற்றும் பள்ளிகள் திபெத்தியர்களுக்கான மத்திய அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள் இந்த விருதுக்கு தகுதியானவர்கள்.

    விருதுக்குரிய ஆசிரியர்களை தேசிய அளவிலான நடுவர் ஒருவர் சுதந்திரமான முறையில் தேர்வு செய்வார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதுவரை மாநில அரசு பரிந்துரைக்கும் ஆசிரியர்களே தேசிய விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.  #NationalAward #Teachers #Javadekar #tamilnews 
    ×