search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Deve Gowda"

    • தேவகவுடா வீட்டில் இருந்தபடியே அரசியல் பணிகளை கவனித்து வருகிறார்.
    • தேவகவுடாவுக்கு லேசான மூச்சுத்திணறல் இருப்பது தெரியவந்து உள்ளது.

    பெங்களூரு:

    முன்னாள் பிரதமரும், ஜனதா தளம் (எஸ்) கட்சியின் தேசிய தலைவருமான தேவகவுடா (வயது 91) பெங்களூரு பத்மநாபநகரில் உள்ள தனது வீட்டில் வசித்து வருகிறார். அவர் வீட்டில் இருந்தபடியே அரசியல் பணிகளை கவனித்து வருகிறார்.

    இந்த நிலையில் அவர் நேற்று பத்மநாபநகரில் உள்ள தனது வீட்டில் இருந்தபோது அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. உடனடியாக அவரை அழைத்துச் சென்று பெங்களூரு எச்.ஏ.எல். விமான நிலைய ரோட்டில் உள்ள மணிப்பால் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

    அவருக்கு டாக்டர்கள் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டனர். அவருக்கு லேசான மூச்சுத்திணறல் இருப்பது தெரியவந்து உள்ளது. இதையடுத்து அவருக்கு டாக்டர்கள் குழுவினர் பரிசோதனை செய்து, மருத்துவ சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

    தேவகவுடாவின் உடல்நிலை சீராக இருப்பதாகவும், தொடர்ந்து சிகிச்சை அளிப்பதாகவும் டாக்டர்கள் தெரிவித்தனர்.

    • காங்கிரஸ்காரர்களிடம் இருந்து கட்சியைக் காப்பதற்காகவே பா.ஜ.க.விற்கு ஆதரவளித்தேன்.
    • காங்கிரஸ் கட்சியைப் பற்றி எனக்கு நன்றாகத் தெரியும் என தேவகவுடா குறிப்பிட்டார்.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற மாநிலங்களவையில் இருந்து ஓய்வுபெறும் உறுப்பினர்களுக்கான பிரியாவிடை நிகழ்ச்சியில் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி தலைவரும், முன்னாள் பிரதமருமான தேவகவுடா பங்கேற்றார்.

    அப்போது பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே , வாழ்நாளின் இறுதியில் தேவகவுடா தனது அரசியல் போக்கை மாற்றிக் கொண்டுள்ளார் என தெரிவித்தார்.

    இந்நிலையில், கார்கெவின் கருத்துக்கு பதிலளித்த முன்னாள் பிரதமர் தேவகவுடா கூறியதாவது:

    கர்நாடக முதல் மந்திரியாக மல்லிகார்ஜூன கார்கே பதவியேற்க வேண்டும் என நான் கூறியபோது, எனது மகன் குமாரசாமியை முதல் மந்திரியாக்க வேண்டும் என காங்கிரஸ் மேலிடம் வலியுறுத்தியது. ஆனால் 13 மாதங்களுக்குள் குமாரசாமியை நீக்கியது யார்? கார்கே அல்ல காங்கிரஸ் தலைவர்கள்.

    என் மகன் காங்கிரசால் நீக்கப்பட்ட போதுதான், நான் என் மகனை பா.ஜ.க.வுடன் இணையுமாறு வலியுறுத்தினேன். இந்த காங்கிரஸ் கட்சி உன்னை வளர அனுமதிக்காது என்று என் மகனிடம் கூறினேன்.

    மல்லிகார்ஜூன கார்கே அவர்களே, நீங்கள் இந்த நாட்டின் பிரதமராக விரும்புகிறீர்களா? அதை காங்கிரஸ் கட்சி பொறுத்துக் கொள்ளுமா? எனக்கு காங்கிரஸ் கட்சியைப் பற்றி நன்றாகத் தெரியும்.

    சுமார் 35-40 வருடங்கள் பணியாற்றிய அனுபவம் உள்ள தூய்மையான மனிதர் மல்லிகார்ஜூன கார்கே. ஆனால் பிரதமர் வேட்பாளருக்காக அவரது பெயரைக் குறிப்பிட்டபோது என்ன நடந்தது? அவரது சொந்த நண்பர்களே அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

    காங்கிரஸ்காரர்கள் சிலர் எனது கட்சியை அழிக்க நினைத்தபோது, கட்சியைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக எனது ஆதரவை பா.ஜ.க.வுக்கு வழங்க முடிவுசெய்தேன். அது ஒன்றே காரணம். தனிப்பட்ட நலனுக்காக நான் அப்படி செய்யவில்லை. இதற்கு பலனாக பிரதமர் மோடி காட்டிய அன்பும், பாசமும்தான் எனக்கு கிடைத்துள்ளது என தெரிவித்தார்.

    • பேசுவதற்கு என்னிடம் வலிமை உள்ளது.
    • பிரதமர் மோடி என்ன சொல்கிறாரோ அதை கேட்போம்.

    பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவது குறித்து முன்னாள் பிரதமர் ஹெச்.டி. தேவகவுடா கருத்து தெரிவித்து உள்ளார். 90 வயதானவரும், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவருமான தேவகவுடா பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட போவதில்லை என்றும், பிராசாரத்தில் மட்டும் ஈடுபடுவேன் என்றும் தெரிவித்து இருக்கிறார்.

    இது குறித்து பேசிய அவர், "நான் தேர்தலில் போட்டியிடவில்லை. எனக்கு 90 வயதாகிறது. எங்களுக்கு எத்தனை தொகுதிகள் கிடைத்தாலும், எங்கெல்லாம் தேவையோ, நான் அங்கு நிச்சயம் செல்வேன். பேசுவதற்கு என்னிடம் வலிமை உள்ளது. மேலும் எனக்கு நினைவு திறனும் எஞ்சியுள்ளது. இதை கொண்டு நான் பிரசாரத்தில் ஈடுபடுவேன்," என தெரிவித்தார்.

     


    தான் தேர்தலில் போட்டியிடவில்லை என்பதை தெளிவுப்படுத்திய தேவகவுடா ஹெச்.டி. குமாரசாமி தேர்தலில் போட்டியிடுவாரா என்ற கேள்விக்கு, அவர் தேர்தலில் போட்டியிடுவது குறித்து எந்த முடிவும் எட்டப்படவில்லை என்று தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், பிரதமர் மோடி என்ன சொல்கிறாரோ அதை கேட்போம் என்று தெரிவித்தார்.

    மேலும் ஜனவரி 22-ம் தேதி நடைபெற இருக்கும் ராமர் கோவில் கும்பாபிஷேகத்தில் தான் தனது மனைவியுடன் கலந்து கொள்ள இருப்பதாகவும் தேவகவுடா தெரிவித்து இருக்கிறார். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்தது. 

    • கட்சி வலுவாக உள்ள இடங்களில் வேட்பாளர்களை நிறுத்துவோம் என்றார் முன்னாள் பிரதமர் தேவகவுடா.
    • வரும் 2024 பாராளுமன்ற தேர்தலில் மதச்சார்பற்ற ஜனதா தளம் தனித்துப் போட்டியிடும் என்றார்.

    பெங்களூரு:

    கர்நாடகாவில் காங்கிரசை எதிர்க்க பா.ஜ.க.வுடன் இணைந்து செயல்பட போவதாக தேவ கவுடாவின் மகனும், மதச்சார்பற்ற ஜனதா தள தலைவருமான குமாரசாமி அறிவித்து இருந்தார். வரும் பாராளுமன்ற தேர்தலிலும் பா.ஜ.க.வுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் கூறியிருந்தார்.

    இந்நிலையில், கர்நாடக மாநிலம் பெங்களூரில் ஹெச்.டி.தேவகவுடா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    வரும் பாராளுமன்ற தேர்தலில் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி தனித்தே போட்டியிடும். எங்கள் கட்சி ஐந்து, ஆறு, மூன்று, இரண்டு அல்லது ஓர் இடத்தில் வெற்றி பெற்றாலும், இந்த மக்களவைத் தேர்தலில் கட்சி தனித்தே போட்டியிடும்.

    எங்கள் கட்சியினருடன் கலந்தாலோசித்த பின்னர் கட்சி வலுவாக உள்ள இடங்களில் வேட்பாளர்களை நிறுத்துவோம் என்று தெரிவித்தார்.

    குமாரசாமியின் கருத்துக்கு நேர்மாறாக தேவகவுடா கருத்து தெரிவித்துள்ளது கர்நாடக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • கடந்த 1962-ம் ஆண்டு நான் முதல் முறையாக கர்நாடக சட்டசபைக்குள் நுழைந்தேன்.
    • 1991-ம் ஆண்டு முதல் முறையாக பாராளுமன்றத்துக்குள் நுழைந்தேன்.

    பெங்களூரு :

    புதிய பாராளுமன்ற கட்டிட திறப்பு விழாவில் பங்கேற்ற முன்னாள் பிரதமர் தேவேகவுடா, அதுதொடர்பாக ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    கடந்த 1962-ம் ஆண்டு நான் முதல் முறையாக கர்நாடக சட்டசபைக்குள் நுழைந்தேன். 1991-ம் ஆண்டு முதல் முறையாக பாராளுமன்றத்துக்குள் நுழைந்தேன். அப்போது, பிரதமர் ஆவேன் என்றோ, இத்தனை காலம் பொது வாழ்க்கையில் நீடிப்பேன் என்றோ நினைத்ததே இல்லை.

    இன்னும் பெரிய ஆச்சரியம் என்னவென்றால், என் வாழ்நாளில் புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் அமர்வேன் என்று நினைத்து பார்க்கவில்லை. 91 வயதில் அதை சாதித்துள்ளேன்.

    இந்திய ஜனநாயக வரலாற்றின் மாபெரும் தருணத்தை பார்த்தது எனக்கு கிடைத்த அதிர்ஷ்டம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • புதிய பாராளுமன்ற கட்டிடத்தை ஜனாதிபதி திறந்து வைக்க கோரிய வழக்கை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது.
    • இந்த விழாவில் பங்கேற்க அனைத்துக் கட்சிகளுக்கும் மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.

    பெங்களூரு:

    தலைநகர் டெல்லியில் வரும் 28-ம் தேதி திறக்கப்படும் புதிய பாராளுமன்ற கட்டிட திறப்பு விழாவில் பங்கேற்க அனைத்துக் கட்சிகளுக்கும் மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. அதை ஏற்று பல கட்சிகள் இதில் பங்கேற்க முடிவு செய்துள்ளன.

    இதற்கிடையே, மதச்சார்பற்ற ஜனதா தள தலைவரும், முன்னாள் பிரதமருமான தேவகவுடாவும் இந்த விழாவில் பங்கேற்பதாக அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், புதிய பாராளுமன்ற திறப்பு விழாவில் நான் பங்கேற்கிறேன். இது நாட்டின் சொத்து. யாருடைய தனிப்பட்ட விஷயமும் அல்ல என தெரிவித்தார்.

    இதேபோல தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெறாத பகுஜன் சமாஜ், பிஜூ ஜனதாதளம், சிரோமணி அகாலிதளம் உள்ளிட்ட 7 கட்சிகளின் பிரதிநிதிகள், பா.ஜ.க. கூட்டணியை சேர்ந்த 18 கட்சிகள் என மொத்தம் 25 கட்சிகள் புதிய பாராளுமன்ற கட்டிட திறப்பு விழாவில் பங்கேற்கும் என எதிர்பார்க்கப்படுகின்றன.

    மேலும், புதிய பாராளுமன்ற கட்டிடத்தை ஜனாதிபதி திறந்து வைக்க கோரிய வழக்கை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது.

    இந்நிலையில், நாங்கள் ஒன்றும் காங்கிரசின் அடிமை இல்லை எனவும், பாராளுமன்ற திறப்பு விழாவில் பங்கேற்பது எங்கள் கட்சியின் முடிவு என மதச்சார்பற்ற ஜனதா தளம் தலைவர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறுகையில், நாங்கள் ஒன்றும் காங்கிரசுக்கு அடிமை இல்லை. புதிய பாராளுமன்ற கட்டிட திறப்பு விழாவில் பங்கேற்பது கட்சியின் சொந்த முடிவு. நாங்கள் காங்கிரசை ஏன் பின்தொடர வேண்டும் என ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார்.

    • அனைத்து கட்சிகளுக்கும் மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.
    • புதிய பாராளுமன்ற கட்டிட திறப்பு விழாவில் 25 கட்சிகள் பங்கேற்கும்.

    பெங்களூரு :

    டெல்லியில் 28-ந்தேதி திறக்கப்படும் புதிய பாராளுமன்ற கட்டிட திறப்பு விழாவில் பங்கேற்க அனைத்து கட்சிகளுக்கும் மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. அதை ஏற்று பல கட்சிகள் இதில் பங்கேற்க முடிவு செய்துள்ளன. அந்த வரிசையில் மதசார்பற்ற ஜனதாதள தலைவரும், முன்னாள் பிரதமருமான தேவகவுடாவும் இந்த விழாவில் பங்கேற்பதாக அறிவித்து உள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறுகையில், 'புதிய பாராளுமன்ற திறப்பு விழாவில் நான் பங்கேற்கிறேன். இது நாட்டின் சொத்து. யாருடைய தனிப்பட்ட விஷயமும் அல்ல' என தெரிவித்தார்.

    இதைப்போல தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெறாத பகுஜன் சமாஜ், பிஜூ ஜனதாதளம், சிரோமணி அகாலிதளம் உள்ளிட்ட 7 கட்சிகளின் பிரதிநிதிகள் விழாவில் பங்கேற்கின்றனர்.

    அத்துடன் பா.ஜனதா கூட்டணியை சேர்ந்த 18 கட்சிகளும் பங்கேற்க உள்ளதால் புதிய பாராளுமன்ற கட்டிட திறப்பு விழாவில் 25 கட்சிகள் பங்கேற்கும் என எதிர்பார்க்கப்படுகின்றன.

    • தேவகவுடா தனது கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.
    • இளைஞர்கள் எங்கள் கட்சியை ஆதரிக்க வேண்டும்.

    பெங்களூரு :

    கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி ஜனதா தளம்(எஸ்) கட்சியின் தேசிய தலைவரும், முன்னாள் பிரதமருமான தேவகவுடா தனது கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். அவர் நேற்று ராமநகரில் ஜனதா தளம்(எஸ்) கட்சி வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்தார். அங்கு நடைபெற்ற கட்சியின் தேர்தல் பிரசார கூட்டத்தில் அவர் கலந்து கொண்டு பேசியதாவது:-

    இந்த நாட்டில் விவசாயிக்கு ஓய்வூதியம் கொடுக்கிறேன் என்று சொல்லும் ஒருவர் இருக்கிறார் என்றால் அது குமாரசாமி தான். மக்களுக்கு கொடுக்கும் வாக்குறுதிகளை தவறாமல் நிறைவேற்றும் ஒரே தலைவர் குமாரசாமி தான். காங்கிரசின் கேலி-கிண்டல்களுக்கு மத்தியில் விவசாய கடன்களை குமாரசாமி தள்ளுபடி செய்தார். அதாவது ரூ.26 ஆயிரம் கோடி விவசாய கடனை தள்ளுபடி செய்தார். இந்த தேர்தலில் ஜனதா தளம்(எஸ்) கட்சி வெற்றி பெற்று குமாரசாமி முதல்-மந்திரி ஆவது உறுதி. இளைஞர்கள் எங்கள் கட்சியை ஆதரிக்க வேண்டும்.

    இவ்வாறு தேவேகவுடா பேசினார்.

    • சித்தராமையாவை எதிர்த்து எடியூரப்பா மகன் விஜயேந்திரா போட்டியிடுவார் என கூறப்பட்டது.
    • பஞ்சரத்ன யாத்திரை மூலம் எங்கள் கட்சிக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

    ராமநகர் :

    கர்நாடக முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி ராமநகர் மாவட்டம் சென்னப்பட்டணா தொகுதியில் போட்டியிடுகிறார். இ்ந்த நிலையில் குமாரசாமியை ஆதரித்து இக்களூருவில் நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில், அக்கட்சியின் தேசிய தலைவரும், குமாரசாமியின் தந்தையுமான தேவேகவுடா பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    பிரதமர் மோடி பேளூர், சென்னப்பட்டாவில் பிரசாரம் செய்கிறார். அது பற்றி எனக்கு தெரியும். சென்னப்பட்டணா குமாரசாமியின் கர்ம பூமி. மண்டியா மாவட்டத்தில் குமாரசாமி போட்டியிட வேண்டும் என்று மக்கள் கூறினர். ஆனால் குமாரசாமி, நான் எனது கர்ம பூமியான சென்னப்பட்டணாவில் தான் போட்டியிடுவேன் என்று கூறி தேர்தலில் நிற்கிறார். சென்னப்பட்டணா மக்களுக்காக எனது உயிரை கொடுப்பேன் என்று குமாரசாமி கூறி இங்கு போட்டியிடுகிறார்.

    குமாரசாமி முதல்-மந்திரியாக இருந்த போது பல திட்டங்களை செயல்படுத்தினார். அவர் அமல்படுத்திய திட்டங்கள் நாட்டில் வேறு எங்கும் கொண்டுவரப்படவில்லை. 60 வயதுக்கு மேற்பட்ட விவசாயிகளுக்கு ஓய்வூதியம் அறிவித்தவர், குமாரசாமி. கஷ்டப்பட்டு 2 முறை அவர் முதல்-மந்திரியாக இருந்தார். பா.ஜனதா, காங்கிரஸ் கட்சிகள் கொடுத்த அனைத்து வலிகளையும் தாங்கிக்கொண்டு ஆட்சி செய்தார்.

    சித்தராமையாவால் விவசாய கடன் தள்ளுபடியை செய்ய முடியவில்லை. ஆனால் குமாரசாமி கூட்டணி ஆட்சியில் விவசாய கடனை தள்ளுபடி செய்தார். இதனால் மக்கள் குமாரசாமியை கைவிட மாட்டார்கள். இந்த தேர்தலில் பா.ஜனதாவும், காங்கிரசும் கூட்டணி வைத்து செயல்படுகிறது. வருணா தொகுதியில் சித்தராமையாவை எதிர்த்து எடியூரப்பா மகன் விஜயேந்திரா போட்டியிடுவார் என கூறப்பட்டது.

    ஆனால் பா.ஜனதா மேலிடம் திடீரென்று வேட்பாளராக சோமண்ணாவை நிறுத்தியுள்ளது. சித்தராமையாவை எதிர்த்து விஜயேந்திராவை நிறுத்தாதது ஏன்?. நாங்கள் மேற்கொண்ட பஞ்சரத்ன யாத்திரை மூலம் எங்கள் கட்சிக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. நாங்கள் கூடுதல் இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைப்போம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • இன்று (வெள்ளிக்கிழமை) தனது பிரசாரத்தை தொடங்குகிறார்.
    • 90 வயதான தேவகவுடா வாரத்திற்கு ஒருமுறை மருத்துவ சிகிச்சை பெற வேண்டும்.

    பெங்களூரு :

    கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்கள். இதனால் கர்நாடக தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. பா.ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி, மத்திய மந்திரி அமித்ஷா, தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, மற்ற மாநில முதல்-மந்திரிகள் தீவிர பிரசாரம் செய்து வருகிறார்கள்.

    காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி, மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் வாக்கு சேகரித்து வருகிறார்கள். ஜனதாதளம்(எஸ்) வேட்பாளர்களை ஆதரித்து குமாரசாமி மாநிலம் முழுவதும் பிரசாரம் மேற்கொள்கிறார். இந்த நிலையில், ஜனதாதளம் (எஸ்) வேட்பாளர்களை ஆதரித்து முன்னாள் பிரதமர் 90 வயதான தேவகவுடா பிரசாரம் செய்ய உள்ளார்.

    அவர் இன்று (வெள்ளிக்கிழமை) தனது பிரசாரத்தை தொடங்குகிறார். இன்று முதல் வருகிற 8-ந்தேதி வரை 11 நாட்கள் மாநிலத்தில் 42 இடங்களில் ஜனதாதளம்(எஸ்) கட்சி வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிக்கிறார். 90 வயதான தேவகவுடா வாரத்திற்கு ஒருமுறை மருத்துவ சிகிச்சை பெற வேண்டும். இதனால் உடல் நிலையை கருத்தில் கொண்டு வாரத்தில் ஒருமுறை அவர் ஓய்வெடுப்பது வகையிலும் அவரது பிரசார பயண திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. தேவகவுடா பிரசாரம் மேற்கொள்ள உள்ளது ஜனதாதளம்(எஸ்) கட்சிக்கு சாதகமாக பார்க்கப்படுகிறது.

    • துமகூரு மாவட்டம் மதுகிரி தொகுதியில் தேவகவுடா கலந்துகொண்டு உருக்கமாக பேசினார்.
    • துமகூரு மாவட்டத்தில் 10 தொகுதிகளில் எங்களுக்கு வெற்றியை மக்கள் தர வேண்டும்.

    துமகூரு :

    துமகூரு மாவட்டம் மதுகிரி தொகுதி ஜனதாதளம் (எஸ்) கட்சி வேட்பாளரை ஆதரித்து டி.கைமாராவில் பொதுக்கூட்டம் நடந்தது. இதில் அக்கட்சிவேட்பாளரை ஆதரித்து அக்கட்சியின் தேசிய தலைவரும், முன்னாள் பிரதமருமான தேவகவுடா கலந்துகொண்டு உருக்கமாக பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    கடந்த 1995-ம் ஆண்டு நான் முதல்-மந்திரியாக இருந்தபோது துமகூரு மாவட்டத்தில் 9 இடங்களில் வெற்றியை இந்த மக்கள் வழங்கினார்கள். மாநிலத்தின் வளர்ச்சிக்காக பஞ்சரத்ன யோஜனா திட்டத்தைசெயல்படுத்த நினைக்கும் குமாரசாமி, இனி முதல்-மந்திரி ஆவார். துமகூரு மாவட்டத்தில் 10 தொகுதிகளில் எங்களுக்கு வெற்றியை மக்கள் தர வேண்டும்.

    ஜனதாதளம் (எஸ்) கட்சிக்கு ஒட்டு மொத்தமாக இந்த தேர்தலில் 20 இடங்கள் மட்டுமே கிடைக்கும் என்று காங்கிரஸ், பா.ஜனதாவினர் கூறிவருகிறார்கள். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் மூட்டு வலியால் எழுந்து கூட நிற்க முடியாத நிலையில் இருந்தேன். ஆனால் சிலர் என்னை துமகூரு நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும்படி வற்புறுத்தினர். இதனால் நான் இங்கு வந்து போட்டியிட்டேன்.

    ஆனால் தோல்வி அடைந்தேன். என்னை தேர்தலில் தோற்கடித்ததை நினைத்து நான் கண்ணீர்விட்டேன். என்னை அழவைத்தவர்களை இந்த தேர்தலில் ஜனதாதளம் (எஸ்) கட்சிக்கு வாக்களித்து அழ வைக்க வேண்டும். அப்போது தான் என் ஆன்மா சாந்தி அடையும்.

    இவ்வாறு அவர் உருக்கமாக பேசினார்.

    அதாவது, மதுகிரி காங்கிரஸ் வேட்பாளர் ராஜண்ணாவை வீழ்த்த தேவகவுடா மறைமுகமாக இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்.

    தேவகவுடாவை, தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர ராவ் சந்தித்து பேசினார். பின்னர் அவர் பா.ஜனதாவுக்கு எதிராக தேசிய அளவில் மெகா கூட்டணி அமைப்பது குறித்த சூசக தகவலை வெளியிட்டார்.
    பெங்களூரு

    முன்னாள் பிரதமர் தேவகவுடாவை பெங்களூரு பத்மநாபநகரில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர ராவ் நேரில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது, முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி, அவரது மகன் நிகில் குமாரசாமி உள்ளிட்டோர் உடன் இருந்தனர். அங்கு சந்திரசேகர ராவுக்கு மதிய உணவு பரிமாற்றப்பட்டது. சுமார் 2 மணி நேரம் நீடித்த இந்த சந்திப்பு முடிந்து சந்திரசேகர ராவ் விமானம் மூலம் ஐதராபாத்திற்கு புறப்பட்டு சென்றார். அவர் புறப்படும் முன்பு நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    முன்னாள் பிரதமர் தேவகவுடாவை சந்தித்தேன். நாட்டின் தற்போதையை நிலையை மாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். 2, 3 மாதங்களுக்கு பிறகு நீங்கள் பரபரப்பான செய்தியை பார்க்க போகிறீர்கள்.

    கடந்த 2018-ம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்கு முன்பு பெங்களூரு வந்திருந்தேன். குமாரசாமி முதல்-மந்திரி ஆவார் என்று கூறினேன். அது உண்மையானது. அரசியலில் தேசிய அளவில் மாற்றம் ஏற்படும். இந்த மாற்றத்தை யாராலும் தடுக்க முடியாது. நாட்டில் போதுமான வளங்கள் உள்ளன. ஆனால் நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆனாலும் குடிநீர், மின்சார பிரச்சினை ஏற்படுகிறது. இந்தியாவுடன் சுதந்திரம் அடைந்த நாடுகள் நம்மை விட முன்னேறி இருக்கின்றன. இனி எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் நாடு வளர்ச்சியில் ஒளிரும். இந்த நோக்கத்தில் நாட்டை கட்டமைப்பதில் ஒவ்வொரு கட்சியும் கைகோர்க்க வேண்டும். ஒளிமயமான இந்தியாவை உருவாக்க முயற்சி மேற்கொள்ள வேண்டும்.

    நாடு மோசமான நிலையை நோக்கி செல்வதால், நாம் நாட்டை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்ல வேண்டியது அவசியம். விவசாயிகள், ஆதிதிராவிடர்கள் என யாரும் மகிழ்ச்சியாக இல்லை. பிரதமர் மோடி பேசுவதை தவிர வேறு எதுவும் செய்வதில்லை. வெறும் வாக்குறுதிகள் மட்டும் கொடுக்கிறார்கள். தொழில் நிறுவனங்கள் மூடப்படுகின்றன. நாட்டின் வளர்ச்சி சரிவை சந்தித்து வருகிறது. பணவீக்கம் வேகமாக உயர்ந்து வருகிறது. பண மதிப்பு முழுமையாக சரிந்து வருகிறது. வரலாற்றில் பண மதிப்பு இவ்வாறு வீழ்ந்தது எப்போதும் நடக்கவில்லை.

    இவ்வாறு சந்திரசேகர ராவ் கூறினார்.

    சந்திரசேகரராவ், தேவேகவுடாவுடன் சந்தித்து இருப்பதன் மூலம் தேசிய அளவில் மெகா கூட்டணி அமையும் என்று கூறப்படுகிறது. இதை அவரும் சூசகமாக தெரிவித்துள்ளார்.

    குமாரசாமி கூறும்போது, 'அரசியல் உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து சந்திரசேகர ராவ் தேவேகவுடாவுடன் விவாதித்தார். 2, 3 மாதங்களில் நல்ல செய்தி கிடைக்கும். மாநில கட்சிகள் வளர்ந்து வருகின்றன. பா.ஜனதாவுக்கு எதிராக அனைத்து மாநில கட்சிகளும் தங்களின் கருத்து வேறுபாடுகளை மறந்து நாட்டின் நலனுக்காக ஓரணியில் திரள வேண்டும். காங்கிரஸ் பலவீனம் அடைந்து வருகிறது.

    சந்திரசேகர ராவ் மேற்கொண்டுள்ள முயற்சி நல்ல பலனை வழங்கும்' என்றார். இந்த சந்திப்பு குறித்து தேவேகவுடா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 'தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர ராவ் என்னை நேரில் சந்தித்து பேசினார். தேசிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு விஷயங்கள் குறித்து நாங்கள் கருத்துகளை பரிமாறி கொண்டோம். இந்த சந்திப்பு உண்மையாகவும், மனப்பூர்வமாகவும் அமைந்தது' என்று குறிப்பிட்டுள்ளார்.
    ×