search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "increase"

    • தக்காளி விலை உயர்வு மற்றும் தென் மேற்கு பருவ மழை துவங்கியதால் தக்காளி சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டினர்.
    • மே - ஜூன் மாதங்களில் நடவு செய்த தக்காளி, தற்போது அறுவடை செய்யப்பட்டு வருகிறது.

    குடிமங்கலம்:

    உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் பகுதிகளில் தக்காளி சாகுபடி பிரதானமாக உள்ளது. ஏறத்தாழ 30 ஆயிரம் ஏக்கர் சாகுபடி செய்யப்பட்டு விளையும் தக்காளியை உடுமலை நகராட்சி சந்தைக்கு விவசாயிகள் கொண்டு வந்து ஏல முறையில் விற்பனை செய்து வருகின்றனர்.

    கேரள மாநிலம் மூணாறு, மறையூர் மற்றும் சென்னை, மதுரை, விருதுநகர் உட்பட பல்வேறு மாவட்டங்களிலிருந்து வியாபாரிகள் வந்து தக்காளி கொள்முதல் செய்து வருகின்றனர்.நடப்பாண்டு கோடை மழை குறைந்ததோடு, தக்காளி விலை கிலோ 5 ரூபாய் என்ற அளவில் சரிந்ததால் தக்காளி சாகுபடி பரப்பு பெருமளவு குறைந்தது.

    வழக்கமாக ஏப்ரல்- மே மாதங்களில் நடவு செய்து, ஜூன், ஜூலை மாதங்களில் சராசரியாக ஒரு லட்சம் பெட்டிகள் வரை வரத்து காணப்படும்.நடப்பாண்டு தக்காளி சாகுபடி பரப்பு குறைந்ததால் கடந்த ஜூலை மாதம் தக்காளி விலை உச்சத்தை தொட்டது. அதிக பட்சமாக 14 கிலோ கொண்ட பெட்டி 2,400 ரூபாய் வரை ஏலம் போனது. மொத்த விலையில் கிலோ 180 ரூபாய் வரை விற்றது.

    இந்நிலையில் தக்காளி விலை உயர்வு மற்றும் தென் மேற்கு பருவ மழை துவங்கியதால் தக்காளி சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டினர். தற்போது இயல்பை விட கூடுதல் பரப்பளவில் தக்காளி சாகுபடியாகி வருகிறது. மே - ஜூன் மாதங்களில் நடவு செய்த தக்காளி, தற்போது அறுவடை செய்யப்பட்டு வருகிறது. இதனால் உடுமலை சந்தைக்கு தக்காளி வரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது. இதனால் விலையும் தொடர்ந்து சரிந்து வருகிறது. அதிகப்பட்சமாக ஒரு பெட்டி 1,200 ரூபாய்க்கு ஏலம் போனது. ஒரு கிலோ தக்காளி, 60 ரூபாய் வரை விலை நிலவியது.

    • கே.ஆர்.எஸ். மற்றும் கபினி அணைகளில் இருந்து தமிழகத்திற்கு 13 ஆயிரத்து 938 கன அடி தண்ணீர் தற்போது திறக்கப்பட்டுள்ளது.
    • ஒகேனக்கல்லில் கடந்த ஒரு வாரமாக 1000 கனஅடியாக வந்த நீர்வரத்து இன்றும் அதே அளவில் தொடர்ந்து நீடித்து வந்து கொண்டிருக்கிறது.

    தருமபுரி:

    கர்நாடக மாநிலத்தில் பருவ மழை தீவிரம் அடைந்து வருகிறது. இதன்காரணமாக குடகு, ஆசன், மைசூர், மாண்டியா, பெங்களூரு ஊரகம், சாமராஜ்நகர் மாவட்டங்களில் சாலைகளில் தண்ணீர் ஆறாக ஓடுகிறது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக கபினி மற்றும் கே.எஸ்.ஆர். அணைகளுக்கும் நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது.

    கர்நாடக மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக ஹேமாவதி, ஹாரங்கி அணைகள் முழு கொள்ளளவு எட்டியதை தொடர்ந்து அங்கிருந்து உபரி நீர் திறந்து விடப்படுகிறது.

    இன்று காலை 8 மணி நிலவரப்படி மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்ணா தாலுகாவில் உள்ள கே.ஆர்.எஸ். அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது.

    இதைத்தொடர்ந்து அணைக்கு நேற்று 44ஆயிரத்து 436 கனஅடியாக வந்த நீர்வரத்து இன்று காலை சற்று அதிகரித்து 48 ஆயிரத்து 25 கனஅடியாக அதிகரித்து உள்ளது. அணையில் இருந்து இன்று 2688 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    கே.ஆர்.எஸ். அணையின் மொத்த கொள்ளளவு 124.80 அடியாகும். தற்போது அணையின் நீர்மட்டம் 100 அடியை தாண்டி உள்ளது.

    இதேபோல் நீர்வரத்து தொடர்ந்து நீடித்தால் அடுத்த ஒரு சிலதினங்களுக்குள் அணை முழு கொள்ளவை எட்டி விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    கேரள மாநிலம் வயநாடு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் கபினி அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்துள்ளது.

    இன்று காலை 8 மணி நிலவரப்படி அணையில் 80.51 அடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

    கபினிஅணைக்கு நீர்வரத்து 25 ஆயிரத்து 896 கனஅடியாக உள்ளதால், அணையின் பாதுகாப்பு கருதி உபரிநீராக 11250 கன அடி நீர் காவிரி ஆற்றில் வெளியேற்றப்படுகிறது.

    கே.ஆர்.எஸ். மற்றும் கபினி அணைகளில் இருந்து தமிழகத்திற்கு 13 ஆயிரத்து 938 கன அடி தண்ணீர் தற்போது திறக்கப்பட்டுள்ளது.

    இந்த உபரி நீரானது நாளை கர்நாடக-தமிழக எல்லையான பிலிகுண்டுலு வழியாக தமிழகத்திற்கு வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இரு அணைகளில் இருந்து திறந்து விடப்பட்டுள்ள தண்ணீர் கர்நாடக-தமிழக எல்லையான பிலிக்குண்டுலு வழியாக தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு வந்தடைகிறது. கடந்த இரு தினங்களுக்கு முன்பு திறந்து விடப்பட்டுள்ள 5 ஆயிரம் கனஅடி தண்ணீர் தற்போது மெல்ல மெல்ல பிலிக்குண்டுலுவுக்கு வர தொடங்கியுள்ளது.

    ஒகேனக்கல்லில் கடந்த ஒரு வாரமாக 1000 கனஅடியாக வந்த நீர்வரத்து இன்றும் அதே அளவில் தொடர்ந்து நீடித்து வந்து கொண்டிருக்கிறது.

    இதன்காரணமாக ஒகேனக்கல்லில் மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் சீறிபாய்ந்து செல்கிறது. தற்போது பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதால், சுற்றுலா பயணிகள் வருகை குறைந்துள்ளது.

    கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் நாளை ஒகேனக்கல்லுக்கு வந்தடையும். இதன் காரணமாக மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து பிலிக்குண்டுலுவில் பரிசலில் சென்று நீர்வரத்தை கண்காணித்து வருகின்றனர். 

    • தரம் குறைந்த மஞ்சள் உற்பத்தியாவதால் வியாபாரிகளுக்கும் நிறுவனங்களுக்கும் தரமான மஞ்சள் அங்கு கிடைக்கவில்லை.
    • மஞ்சள் ஓராண்டு பயிர் என்பதால் அடுத்த ஆண்டு உற்பத்தியை கணக்கிட்டு மஞ்சள் விலை நிர்ணயிக்கப்படுகிறது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு மற்றும் பெருந்துறை ஒழுங்குமுறை விற்பனை கூடம், ஈரோடு மற்றும் கோபி சொசைட்டி என 4 இடங்களில், திங்கள் முதல் வெள்ளி வரை மஞ்சள் ஏலத்தின் மூலம் விற்பனை செய்யப்படுகிறது. சராசரியாக நாள்தோறும் 5 ஆயிரம் மூட்டை வரை மஞ்சள் இங்கு விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது.

    கடந்த மாதங்களில் ஒரு குவிண்டால் மஞ்சள் ரூ.6 ஆயிரத்து 500 முதல் ரூ.7 ஆயித்து 500 ரூபாய்க்கு விற்பனையானது. வடமாநிலங்களில் அதிக மழையால் மஞ்சள் விளைச்சல் பாதிக்கப்பட்டு தரம் குறைந்த மஞ்சள் உற்பத்தியாவதால் வியாபாரிகளுக்கும் நிறுவனங்களுக்கும் தரமான மஞ்சள் அங்கு கிடைக்கவில்லை. குறிப்பாக மகாராஷ்டிரா, ஆந்திரா, தெலுங்கானா போன்ற மாநிலங்களில் தரம் குறைந்த மஞ்சளே அதிகம் கிடைப்பதால் வியாபாரிகள் ஈரோடு பகுதி மஞ்சளை அதிகம் வாங்க தொடங்கியுள்ளனர்.

    தமிழகத்தில், ஈரோடு, சேலம் பகுதி மஞ்சள் தரமாக உள்ளதால் படிப்படியாக விலை அதிகரித்து வருகிறது. இந்த மாத தொடக்கத்தில் 8,500 ரூபாயாக இருந்த ஒரு குவிண்டால் மஞ்சள் கடந்த வாரம் 10 ஆயிரம் ரூபாயை எட்டியது. கிட்டத்தட்ட 12 வருடங்களுக்கு பிறகு மஞ்சள் குவிண்டால் ரூ. 10 ஆயிரத்தை எட்டியது. கடந்த வெள்ளியன்று 10,500 ரூபாயாக உயர்ந்தது. இந்நிலையில் இன்று மேலும் 2 ஆயிரம் ரூபாய் உயர்ந்து, முதல் தர மஞ்சள் அதிகபட்சமாக 12,600 ரூபாய்க்கு விற்பனையானது.

    கடந்த 6 மாதங்களில் இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் மஞ்சளின் அளவு 25 சதவீதம் உயர்ந்துள்ளதாலும், வட மாநிலங்களில் பெய்த மழையினாலும் ஈரோடு சந்தையில் மஞ்சள் விலை உயர்ந்துள்ளதாக கூறும் வணிகர்கள், இன்னும் விலை உயரும் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் பலரும் மஞ்சளை இருப்பு வைத்துள்ளதாக தெரிவித்தனர்.

    மஞ்சள் ஓராண்டு பயிர் என்பதால் அடுத்த ஆண்டு உற்பத்தியை கணக்கிட்டு மஞ்சள் விலை நிர்ணயிக்கப்படுகிறது. மராட்டியத்தில் மஞ்சள் மொத்த சாகுபடி பரப்பு அடுத்த மாதம் தெரியவரும் என்றும், அப்போது விலையில் மாற்றம் ஏற்படலாம், அதுவரை இதே விலை நீடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் வியாபாரிகள் தெரிவித்தனர்.

    மஞ்சள் விலை 3 மாதங்களில் குவிண்டாலுக்கு சுமார் 5 ஆயிரம் ரூபாய் வரை உயர்ந்திருப்பது விவசாயிகளிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஈரோடு மஞ்சளுக்கு திடீர் கிராக்கி ஏற்பட்டுள்ளதால் வெளி மாநில வியாபாரிகள் ஈரோடு நோக்கி படையெடுக்க தொடங்கியுள்ளனர்.

    • தமிழகத்தின் முதல் வந்தே பாரத் ரெயில் சேவையான இந்த ரெயிலில் மொத்தம் 8 பெட்டிகள் உள்ளன.
    • நேரம் பெருமளவில் குறைவதும், இந்த ரெயிலுக்கான வரவேற்பை அதிகரிக்கச் செய்துள்ளது.

    திருப்பூர்:

    இந்தியாவின் 14வது வந்தே பாரத்ரெயில் சேவை சென்னை-கோவை இடையே கடந்த ஏப்ரல் 8-ந்தேதி சென்னையில் பிரதமர் மோடியால் தொடங்கி வைக்கப்பட்டது. தமிழகத்தின் முதல் வந்தே பாரத் ெரெயில் சேவையான இந்த ரெயிலில்,7 ஏ.சி. பெட்டிகள், ஒரு எக்ஸிகியூட்டிவ் பெட்டி என மொத்தம் 8 பெட்டிகள் உள்ளன. இதில் 500க்கும் அதிகமானவர்கள் பயணம் செய்ய முடியும்.

    புதன்கிழமை தவிர வாரத்தில் 6 நாட்கள் இயக்கப்படும் இந்த ெரயிலில் கட்டணம் அதிகம் என்பதால் எல்லா நாட்களிலும் இது நிரம்புமா என்ற கேள்வி எழுந்தது. ஆனால் கடந்த ஏப்ரல் 8-ந்தேதியில் இருந்து இப்போது வரையிலும் ஒரு நாள் விடாமல் இந்த வண்டியில் இடம் கிடைக்காத அளவுக்கு கூட்டம் நிரம்பி வழிகிறது. இந்த மாதம் 15-ந் தேதி வரையிலுமே ஒரு இடம் கூட இல்லாத அளவுக்கு ஹவுஸ்புல் ஆகியுள்ளது.

    வந்தே பாரத் ரெயில்  ரெயில்யில் சேவை துவக்கப்பட்ட நாளில் இருந்து 100 நாட்கள் வரையிலும் புல் ஆகி இருப்பது கோவைக்கும், சென்னைக்கும் இடையிலான ெரயில் தேவையை உணர்த்துவதாக உள்ளது. இதற்கு இந்த ரெயிலில் உள்ள வசதிகளும், சேவையும் முக்கியக் காரணமாக இருப்பதுடன் நேரம் பெருமளவில் குறைவதும், இந்த ரெயிலுக்கான வரவேற்பை அதிகரிக்கச் செய்துள்ளது.

    இந்த ரெயிலுக்கு பெரும் வரவேற்பு கிடைத்திருப்பது போலவே கோவையிலிருந்து பெங்களூருக்கு வந்தே பாரத் ெரயிலை இயக்கினால் அமோக வரவேற்பு கிடைக்குமென்ற வாதமும் வலுத்துள்ளது. கோவையில் கேரள மக்கள் அதிகமிருப்பதால் திருவனந்தபுரம், மங்களூருக்கும் வந்தே பாரத் ரெயில்களை இயக்க வேண்டுமென்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.

    வேகத்தைப் பொறுத்தவரையில் முதல் 14 வந்தே பாரத்ரெயில்களில் சென்னை-கோவை வந்தே பாரத் ரெயிலின் வேகம் மூன்றாவது இடத்தில் உள்ளது.டில்லி-வாரணாசி வந்தே பாரத் 96.37 கி.மீ., வேகத்திலும், நிஜாமுதீன்- ராணி கம்லாபதி வந்தே பாரத் 95.89 கி.மீ., வேகத்திலும் இயக்கப்படும் நிலையில், இந்த ரெயிலின் சராசரி வேகம் தற்போது 90.36 கி.மீ., என்ற அளவில் உள்ளது.

    ஜோலார்பேட்டையிலிருந்து கோவை வரையிலான 280 கி.மீ., தூரத்துக்கு வேகத்தை அதிகரிப்பதற்கான கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்பப் பணிகள் நடந்து வருகின்றன.ஈரோட்டில் காவிரி ஆற்றின் மேலே பாலத்தை பலப்படுத்தும் பணியும் நடக்கிறது.இந்தப் பணிகள் முடிந்தபின்பு, சென்னை-கோவை வந்தே பாரத் ரெரயிலின் வேகம், 110 கி.மீ.,லிருந்து 130 கி.மீ., வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

    இதன் காரணமாக இப்போது 5:50 மணி நேரமாகவுள்ள பயண நேரம் மேலும் 20ல் இருந்து 30 நிமிடங்கள் வரை குறையும் என ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • கடந்த ஏப்ரல் மாத இறுதியில் தக்காளி விலை சரிந்து, 10 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
    • திருப்பூர் வடக்கு மற்றும் தெற்கு உழவர் சந்தை, தென்னம்பாளையம் தினசரி மார்க்கெட்டுக்கும் தக்காளி வரத்து பாதியாக குறைந்துள்ளது.

    திருப்பூர்:

    தக்காளி விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் விரைவில் ஒரு கிலோ விலை 100 ரூபாயை எட்டும் என்ற நிலை உருவாகியுள்ளது.

    ஒரே நேரத்தில் உள்ளூர், வெளிமாநில வரத்து என இரண்டும் குறைந்ததால் திருப்பூர் வடக்கு மற்றும் தெற்கு உழவர் சந்தை, தென்னம்பாளையம் தினசரி மார்க்கெட்டுக்கும் தக்காளி வரத்து பாதியாக குறைந்துள்ளது. தெற்கு உழவர் சந்தைக்கு வழக்கமாக 35 முதல் 38 டன் தக்காளி வரும் நிலையில் தற்போது 25 முதல் 30 டன் தக்காளி மட்டுமே வருகிறது.

    வடக்கு உழவர்சந்தைக்கு 8 டன் வரும் நிலையில், 4 டன் தக்காளி வருவதே அரிதாகியுள்ளது. திருப்பூருக்கான தக்காளி வரத்து தொடர்ந்து குறைந்து வருவதால் 26 கிலோ தக்காளி டிப்பர் 2,000 ரூபாய்க்கும், 14 கிலோ சிறிய டிப்பர் 1,000 ரூபாய்க்கும் விற்றது. மொத்த விலையில் தக்காளி 70 முதல் 80 ரூபாய்க்கும், சில்லறை விலையில் கிலோ 80 முதல் 85 ரூபாய்க்கும் தக்காளி விற்றது. இதனால் மளிகை கடைகளில் 250 கிராம் தக்காளி 20 முதல் 30 ரூபாய், கிலோ 90 ரூபாய் என விற்கப்படுகிறது.

    தக்காளி விலை திடீர் உயர்வு குறித்து உழவர் சந்தை அலுவலர்கள் கூறியதாவது:-

    கடந்த ஏப்ரல் மாத இறுதியில் தக்காளி விலை சரிந்து, 10 ரூபாய்க்கு விற்கப்பட்டது. செலவு அதிகரித்து வரும் சூழலில் நஷ்டம் ஏற்பட்டு விடுமோ என எண்ணிய விவசாயிகள் பலர் தக்காளி பயிரிடுவதை குறைத்தனர். இதனால் வரத்து குறைந்து தட்டுப்பாடு ஏற்பட்டு விலை உயர்ந்துள்ளது என்றனர்.

    • முட்டை உற்பத்தி குறைந்த நிலையில் தேவை அதிகரித்துள்ளதால் தொடர்ந்து விலை உயர்ந்து வருவதாக பண்ணையாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • 141 ரூபாயாக இருந்த கறிக்கோழி விலை 143 ரூபாயாக உயர்ந்தது.

    நாமக்கல்:

    நாமக்கல் மண்டலத்தில் 8 கோடிக்கு அதிகமான முட்டை கோழிகள் வளர்க்கப்படுகின்றன. இதன் மூலம் 6 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

    இந்த முட்டைகள் உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதற்கான விலை நாமக்கல்லில் தினமும் நிர்ணயம் செய்யப்படுகிறது.

    இந்நிலையில் நேற்று முட்டை உற்பத்தியாளர்கள் மற்றும் வியாபாரிகள் ஆலோசனை கூட்டம் நாமக்கல்லில் நடந்தது. இதில் முட்டையின் தேவை, உற்பத்தி குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. பின்னர் முட்டை விலையை மேலும் 5 காசுகள் உயர்த்த முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி 525 காசுகளாக இருந்த முட்டை விலை 530 காசுகளாக உயர்ந்தது. முட்டை உற்பத்தி குறைந்த நிலையில் தேவை அதிகரித்துள்ளதால் தொடர்ந்து விலை உயர்ந்து வருவதாக பண்ணையாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதேபோல பல்லடத்தில் கறிக்கோழி உற்பத்தியா ளர்கள் வியாபாரிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில் கறிக்கோழி விலையை மேலும் 2 ரூபாய் உயர்த்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி 141 ரூபாயாக இருந்த கறிக்கோழி விலை 143 ரூபாயாக உயர்ந்தது.

    முட்டை கோழி விலை எந்த மாற்றமும் இல்லாமல் 95 ரூபாயாக நீடிக்கிறது.

    • ஏற்காடு பகுதியில் விளிம்பிப்பழம் என்ற ழைக்கப்படும் நட்சத்திர பழம் விளைச்சல் அதிக ரித்துள்ளது.
    • மே மாதம் முதல் 3 மாதங்கள் வரை மகசூல் கிடைக்கிறது.

    சேலம்:

    ஏற்காடு பகுதியில் விளிம்பிப்பழம் என்ற ழைக்கப்படும் நட்சத்திர பழம் விளைச்சல் அதிக ரித்துள்ளது. தனியார் தோட்டங்களிலும், சாலை யோரத்திலும் பரா மரிக்கப்பட்டு வரும் விளிம்பு மரங்களில் இருந்து இந்த பழங்கள் கிடைக்கிறது.

    மே மாதம் முதல் 3 மாதங்கள் வரை மகசூல் கிடைக்கிறது. மரத்தில் தானாக பழுத்து கீழே விழும் பழங்களை சேகரித்து விற்பனைக்காக வியாபாரி கள் சேலத்திற்கு கொண்டு வருகின்றனர்.

    மருத்துவ குணம்

    மருத்துவ குணம் அதிகம் கொண்ட இந்த பழத்தில் வைட்டமின் பி,சி மற்றும் பொட்டாசியம், இரும்பு சத்து, நார்சத்து உளளது. இப்பழங்கள் நோய் எதிர்ப்பு சக்தி மிகுந்தது.

    இந்த பழம் கிலோ ரூ.200 வரை விற்பனை செய்யப்ப டுகிறது. ஏற்காடுக்கு சுற்றுலா வருபவர்கள் இந்த பழத்தை ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர்.

    • பவானி சாகர் நீர் பிடிப்பு பகுதி களான தெங்குமரகடா, பில்லூர், குந்தா, அப்பர் பவானி பகுதிகளில் மழை பெய்ததால் மாயாற்றில் தண்ணீர் அதிகளவில் சென்றது. இதனால் பவானிசாகர் அணைக்கு 1600 கனஅடிக்கு மேல் தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.
    • பவானிசாகர் அணை யின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 82.66 அடியாக இருந்தது.

    சத்தியமங்கலம்:

    சத்தியமங்கலம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று காலை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது.

    இதையடுத்து மதியம் 3 மணிக்கு மேக மூட்டமாக காணப்பட்டது. தொடர்ந்து சத்தியமங்கலம், பண்ணாரி, அரியப்பம் பாளையம், ஓட்டை குட்டை, புளியம் கோம்பை, வட வள்ளி, பண்ணாரி, சிக்கரசம் பாளையம், ராஜன் நகர் உள்பட பல்வேறு இடங்களில் இடி- மின்னலுடன் பலத்த மழை பெய்தது. தொடர்ந்து இரவு வரை மழை தூறி கொண்டே இருந்தது.

    இதனால் ரோடுகளில் மழை தண்ணீர் பெருக் கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி நின்றன. பரவலாக மழை பெய்ததால் விவசாய நிலங்கள் பசுமையாக காட்சி அளித்தது.

    இதே போல் திம்பம், தாளவாடி, ஆசனூர், தொட்டகாஜனூர் உள்பட வனப்பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.

    மேலும் பவானிசாகர், புளியம்பட்டி, புங்கர்பள்ளி, நல்லூர், காவிலிபாளையம் உள்ளிட்ட பகுதிகளிலும் இடி- மின்னலுடன் பரவ லாக மழை பெய்தது.

    பவானி சாகர் நீர் பிடிப்பு பகுதி களான தெங்குமரகடா, பில்லூர், குந்தா, அப்பர் பவானி பகுதிகளில் மழை பெய்ததால் மாயாற்றில் தண்ணீர் அதிகளவில் சென்றது. இதனால் பவானிசாகர் அணைக்கு 1600 கனஅடிக்கு மேல் தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.

    தொடர்ந்து மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு அதிகரித்துள்ளது.

    பவானிசாகர் அணை யின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 82.66 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 1667 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.

    அணையில் இருந்து அரக்கன்கோட்டை- தடப்பள்ளி வாய்க்காலுக்கு 950 கனஅடியும், ஆற்றுக்கு குடிநீருக்கு 100 கனஅடியும், எல்.பி.பி. வாய்க்காலுக்கு 5 கனஅடி என மொத்தம் 1055 கனஅடி தண்ணீர் வெளி யேற்றப்பட்டு வருகிறது. 

    • கொரோனா பாதிப்பு சற்று அதிகரிக்க தொடங்கி உள்ளது.
    • தற்போது 7 பேர் கொரோனா சிகிச்சையில் உள்ளனர்.

    திருப்பூர் : 

    திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று தினசரி பாதிப்பு இல்லாத நிலையில் தற்போது கொரோனா பாதிப்பு சற்று அதிகரிக்க தொடங்கி உள்ளது. தினசரி பாதிப்பு 1 என்று இருந்த நிலையில் நேற்று மாவட்டத்தில் 3 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. தற்போது 7 பேர் சிகிச்சையில் உள்ளனர்.இதுவரை மாவட்டத்தில் 1 லட்சத்து 29 ஆயிரத்து 950 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 1 லட்சத்து 28 ஆயிரத்து 891 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 1,052 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.

    • மகாராஷ்டிரா, டில்லி உள்ளிட்ட மாநிலங்களில் தினசரி பாதிப்பு 3 இலக்கத்தில் பதிவாகி வருகிறது.
    • கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டுமென சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர் .

    திருப்பூர்:

    தமிழகத்துக்கு வேலைவாய்ப்புக்களை தேடி, பீகார், ஒடிசா, ராஜஸ்தான், உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து வடமாநிலத்தினர் ரெயில் மூலம் வருகின்றனர்.தமிழகத்தில் இயங்கும் சூப்பர்பாஸ்ட், எக்ஸ்பிரஸ் ெரயில்களில் பெரும்பாலும் பயணிப்பவராக வட மாநிலத்தவரே உள்ளனர். நாட்டில் ஆயிரத்துக்கும் கீழ் குறைந்திருந்த ஒரு நாள் தொற்று, மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது.

    குறிப்பாக மகாராஷ்டிரா, டில்லி உள்ளிட்ட மாநிலங்களில் தினசரி பாதிப்பு 3 இலக்கத்தில் பதிவாகி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 8,582 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இது கடந்த 93 நாட்களில் இல்லாத அளவாகும்.இருப்பினும் ரெயில்களில் வடமாநிலத்தினர் எண்ணிக்கை சற்றும் குறையவில்லை. நேற்று முன்தினம் திருப்பூர் ரெயில் நிலையம் வந்த ரப்திசாகர், ஆலப்புழா, கேரளா எக்ஸ்பிரஸ் ரெயிலில் 1,500க்கும் அதிகமான வடமாநிலத்தினர் வந்திறங்கினர்.

    ரெயில் டிக்கெட் முன்பதிவு மைய அதிகாரிகள் கூறுகையில், வடமாநிலத்தினர் ரெயில் டிக்கெட் முன்பதிவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பிற மாநிலங்களில் இருந்து தமிழகம் வருவோர் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இங்கிருந்து முன்பதிவு செய்து தினமும் பலர் பயணிக்கின்றனர்.கொரோனா மூன்றாவது அலை முடிவுக்கு வந்த பின் நடப்பாண்டு துவக்கத்தில் இருந்த நிலை தற்போதும் தொடர்கிறது. வடமாநிலங்களில் கொரோனா பரவல் அதிகரிப்பால், ரெயிலில் பயணிப்போர் எண்ணிக்கை குறையவில்லை. வழக்கம்போல் உள்ளது என்றனர். இதனிடையே கொரோனா பரவலை தடுக்க திருப்பூர் ரெயில் நிலையத்தில் வடமாநில பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டுமென சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    உடன்குடி வட்டார பகுதியில் தற்போது கருப்பட்டி உற்பத்தி தீவிரமாக நடந்து வருகிறது. மேலும் கருப்பட்டி விலை கிடுகிடு என உயர்வடைந்துள்ளது.
    உடன்குடி:

     உடன்குடி வட்டார பகுதியில் தற்போது கருப்பட்டி உற்பத்தி தீவிரமாக நடந்து வருகிறது. செட்டியாபத்து, மாதவன்குறிச்சி, ஆதியாகுறிச்சி, லட்சுமிபுரம், நங்கை மொழி, குதிரைமொழி, பரமன்குறிச்சி வெள்ளாளன்விளை, மாநாடு தண்டுபத்து, நயினார்பத்து, குலசேகரன்பட்டினம் ஆகிய ஊராட்சி மன்ற பகுதியில் உள்ள சுமார் 50 கிராமங்களில் சுமார் 500 குடும்பத்தினர் பனைமரத்தில் பதனீர் எடுத்து அதை பக்குவப்படுத்தி காய்ச்சி கருப்பட்டியும், பனங் கற்கண்டும் உற்பத்தி செய்து வருகின்றனர்.

    இங்கு உற்பத்தியாகும் கருப்பட்டி தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியாவில் பிற மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் உடன்குடி கருப்பட்டி என்று ஊர் பெயரோடு செல்கிறது. வெளியூர்களில் உடன்குடி கருப்பட்டி இங்கு கிடைக்கும் என்று ஊர் பெயரோடு எழுதி வைத்து விற்பனை செய்வது வழக்கம்.

    ஏராளமான வியாபாரிகள் உடன்குடிக்கு வந்து தங்கியிருந்து எந்த கலப்படமும் இல்லாத ஒரிஜினல் புது கருப்பட்டியை வாங்குவதற்கு உற்பத்தியாகும் இடத்திற்குச் சென்று கொள்முதல் செய்கின்றனர்.

    முன்பு ரூ.200-க்கு கொள்முதல் செய்த கருப்பட்டி தற்போது  உயர்ந்து ஒரு கிலோ ரூ.240 வரையில் கொள்முதல் செய்கின்றனர். இதுபற்றி உடன்குடியில் முகாமிட்டவியாபாரி ஒருவர் கூறுகையில்,   புகழ்பெற்ற உடன்குடி கருப்பட்டி மருத்துவ குணமும், நோய் எதிர்ப்பு சக்தியும் கொண்டதாகும், இவைகளை எந்த கலப்படமும் இல்லாமல் ஒரிஜினலாக வாங்குவதற்காகவே நாங்கள் இங்கு முகாமிட்டு உள்ளோம். அதனால் கூடுதல் விலை கொடுத்து வாங்கி அனுப்புகிறோம் என்றார்.

    அதனால் தற்போது எந்த கலப்படமும் இல்லாத உடன்குடி புதுகருப்பட்டி திடீர் என விலை உயர்ந்து, ஒரு கிலோ கருப்பட்டி ரூ.280 வரை சில்லரைக்கு விற்பனை செய்யப்படுகிறது. முன்பு பழைய கருப்பட்டி ரூ.300-க்கு விற்பனை செய்தனர். தற்போது ஒரு கிலோ ரூ.380-க்கு விற்பனை செய்யபடுகிறது.
    மத்திய அரசின் காப்பீட்டு திட்டங்களுக்கு பிரீமியம் தொகை அதிகரிப்பு சேலம் மாவட்டத்தில் பல ஆயிரம் பேர் பயனடைந்தனர்.
    சேலம்:

    இந்திய அரசு ரூ.2 லட்சத்துக்கான ஆயுள் காப்பீடு வழங்கும் பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா, பிரதான் மந்திரி சுரக்‌ஷா பீமா ேயாஜனா ஆகியவற்றை செயல்படுத்தி வருகிறது.

    இதில் ஜீவன் ேஜாதி காப்பீடு திட்டத்தில் வங்கி அல்லது தபால் நிலைய சேமிப்பு கணக்கு வைத்துள்ள 18 வயது முதல் 50 வயது வரையிலானோர் சேர்ந்து கொள்ளலாம்.   அதே போல் சுரக்‌ஷா திட்டத்தில் 18 வயது முதல் 70 வயது  வரையிலானோர் இணைந்து கொள்ளலாம் என வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    இந்த திட்டங்களில் தினமும் பல ஆயிரம் பேர் சேர்ந்து வருகிறார்கள். அதுமிட்டுமின்றி ஒவ்வொரு வருடமும் பல லட்சம் குடும்பங்கள் இந்த திட்டங்களினால் பயனடைந்து வருகின்றனர்.

    குறிப்பாக சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, ஈரோடு, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த பல லட்சம் பேர்  தபால் மற்றும் வங்கிகள் மூலமாக மேற்கண்ட திட்டங்களில் சேர்ந்து உள்ளனர்.  ஜீவன் ேஜாதி திட்டத்துக்கான பிரீமியம் தொகை ஆண்டுக்கு ரூ. 330 ஆக இருந்த நிலையில் தற்போது ரூ.436 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேபோல் சுரக்‌ஷா காப்பீடு திட்டத்துக்கான ஆண்டு பிரீமியம் தொகையும் ரூ.12-ல் இருந்து ரூ.20 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

    பிரீமியம் மூலமாக கிடைக்கும் வருவாயை விட காப்பீட்டாளர்களுக்கு வழங்கப்படும் தொகை அதிகமாக இருப்பதாக நிறுவனங்கள் ெதரிவித்து வந்த நிலையில் பிரீமியம் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் புதிய விதிகள் இன்று (புதன்கிழமை) முதல் நடைமுறைக்கு வந்துள்ளன.

    கடந்த மார்ச் மாதம் 31-ந்தேதி நிலவரப்படி ஜீவன் ேஜாதி திட்டத்தில் 6.4 கோடி பேரும், சுரக்‌ஷா திட்டத்தில் 22 கோடி பேரும் இணைந்துள்ளனர்.  இந்த 2 திட்டங்களின் கீழும் காப்பீடு தொகை கோருவோருக்கு நேரடியாக வங்கிக் கணக்கிலேயே வரவு வைக்கப்பட்டு வருகிறது.
    ×