search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Karuppatti"

    உடன்குடி வட்டார பகுதியில் தற்போது கருப்பட்டி உற்பத்தி தீவிரமாக நடந்து வருகிறது. மேலும் கருப்பட்டி விலை கிடுகிடு என உயர்வடைந்துள்ளது.
    உடன்குடி:

     உடன்குடி வட்டார பகுதியில் தற்போது கருப்பட்டி உற்பத்தி தீவிரமாக நடந்து வருகிறது. செட்டியாபத்து, மாதவன்குறிச்சி, ஆதியாகுறிச்சி, லட்சுமிபுரம், நங்கை மொழி, குதிரைமொழி, பரமன்குறிச்சி வெள்ளாளன்விளை, மாநாடு தண்டுபத்து, நயினார்பத்து, குலசேகரன்பட்டினம் ஆகிய ஊராட்சி மன்ற பகுதியில் உள்ள சுமார் 50 கிராமங்களில் சுமார் 500 குடும்பத்தினர் பனைமரத்தில் பதனீர் எடுத்து அதை பக்குவப்படுத்தி காய்ச்சி கருப்பட்டியும், பனங் கற்கண்டும் உற்பத்தி செய்து வருகின்றனர்.

    இங்கு உற்பத்தியாகும் கருப்பட்டி தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியாவில் பிற மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் உடன்குடி கருப்பட்டி என்று ஊர் பெயரோடு செல்கிறது. வெளியூர்களில் உடன்குடி கருப்பட்டி இங்கு கிடைக்கும் என்று ஊர் பெயரோடு எழுதி வைத்து விற்பனை செய்வது வழக்கம்.

    ஏராளமான வியாபாரிகள் உடன்குடிக்கு வந்து தங்கியிருந்து எந்த கலப்படமும் இல்லாத ஒரிஜினல் புது கருப்பட்டியை வாங்குவதற்கு உற்பத்தியாகும் இடத்திற்குச் சென்று கொள்முதல் செய்கின்றனர்.

    முன்பு ரூ.200-க்கு கொள்முதல் செய்த கருப்பட்டி தற்போது  உயர்ந்து ஒரு கிலோ ரூ.240 வரையில் கொள்முதல் செய்கின்றனர். இதுபற்றி உடன்குடியில் முகாமிட்டவியாபாரி ஒருவர் கூறுகையில்,   புகழ்பெற்ற உடன்குடி கருப்பட்டி மருத்துவ குணமும், நோய் எதிர்ப்பு சக்தியும் கொண்டதாகும், இவைகளை எந்த கலப்படமும் இல்லாமல் ஒரிஜினலாக வாங்குவதற்காகவே நாங்கள் இங்கு முகாமிட்டு உள்ளோம். அதனால் கூடுதல் விலை கொடுத்து வாங்கி அனுப்புகிறோம் என்றார்.

    அதனால் தற்போது எந்த கலப்படமும் இல்லாத உடன்குடி புதுகருப்பட்டி திடீர் என விலை உயர்ந்து, ஒரு கிலோ கருப்பட்டி ரூ.280 வரை சில்லரைக்கு விற்பனை செய்யப்படுகிறது. முன்பு பழைய கருப்பட்டி ரூ.300-க்கு விற்பனை செய்தனர். தற்போது ஒரு கிலோ ரூ.380-க்கு விற்பனை செய்யபடுகிறது.
    ×