search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விளைச்சல் பாதிப்பு"

    • பருவநிலை மாறுபாடு காரணமாக திடீரென பனிப்பொழிவு காணப்படுகிறது.
    • சில நேரங்களில் பூவை பறிக்காமலேயே விட்டு விடுகிறோம்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே கருப்பம்புலம், ஆயக்காரன்புலம், மருதூர், நெய்விளக்கு, பஞ்சநதிக்குளம் உள்ளிட்ட 20 கிராமங்களில் 4 ஆயிரம் ஏக்கரில் முல்லைப்பூ சாகுபடி நடைபெற்று வருகிறது.

    இந்த பகுதியில் ஆண்டுதோறும் மார்ச் மாதம் தொடங்கி அக்டோபர் மாதம் வரை முல்லைப்பூ சீசன் காலமாகும்.

    இந்த சீசன் காலத்தில் நாள் ஒன்றுக்கு 15 முதல் 20 டன் முல்லைப்பூக்கள் விளையும்.

    இங்கிருந்து பட்டுக்கோட்டை, திருவாரூர், தஞ்சாவூர், காரைக்கால் உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு முல்லைப்பூ விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

    தற்போது வேதாரண்யம் பகுதியில் பருவநிலை மாறுபாடு காரணமாக திடீரென பனிப்பொழிவு காணப்படுகிறது.

    இதனால் முல்லைப்பூ செடிகளின் இலைகள் உதிர்ந்து பூ விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கிறார்கள்.

    நாள் ஒன்றுக்கு 1 டன் முதல் 2 டன் வரை மட்டுமே வெளியூர்களுக்கு பூக்கள் அனுப்பி வைக்கப்படுகிறது.

    இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-

    சீசன் காலத்தில் முல்லைப்பூ கிலோ ரூ.50-க்கு மட்டுமே கொள்முதல் செய்யப்படுகிறது. சீசன் இல்லாத நவம்பர் முதல் பிப்ரவரி வரை கிலோ ரூ.1000 வரை விற்பனை ஆகிறது.

    தற்போது கிலோ ரூ.500 முதல் ரூ.700 வரை விற்பனையாகிறது. பனிப்பொழிவால் முல்லைப்பூ அதிகம் விளையாததால் விலை ஏற்றம் ஏற்பட்டுள்ளது.

    விளைச்சல் அதிகமான காலங்களில் பூ பறிப்பதற்கான கூலிக்கு கூட கட்டுப்படியாகாத விலை கிடைக்கிறது.

    இதனால் சில நேரங்களில் பூவை பறிக்காமலேயே விட்டு விடுகிறோம்.

    இந்த நிலையில் தற்போது எதிர்பாராத வேளையில் பனிப்பொழிவு ஏற்பட்டு விளைச்சல் பாதிக்கப்பட்டு இருப்பது வேதனை அளிக்கிறது.

    இவ்வாறு விவசாயிகள் கூறினர்.

    • தரம் குறைந்த மஞ்சள் உற்பத்தியாவதால் வியாபாரிகளுக்கும் நிறுவனங்களுக்கும் தரமான மஞ்சள் அங்கு கிடைக்கவில்லை.
    • மஞ்சள் ஓராண்டு பயிர் என்பதால் அடுத்த ஆண்டு உற்பத்தியை கணக்கிட்டு மஞ்சள் விலை நிர்ணயிக்கப்படுகிறது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு மற்றும் பெருந்துறை ஒழுங்குமுறை விற்பனை கூடம், ஈரோடு மற்றும் கோபி சொசைட்டி என 4 இடங்களில், திங்கள் முதல் வெள்ளி வரை மஞ்சள் ஏலத்தின் மூலம் விற்பனை செய்யப்படுகிறது. சராசரியாக நாள்தோறும் 5 ஆயிரம் மூட்டை வரை மஞ்சள் இங்கு விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது.

    கடந்த மாதங்களில் ஒரு குவிண்டால் மஞ்சள் ரூ.6 ஆயிரத்து 500 முதல் ரூ.7 ஆயித்து 500 ரூபாய்க்கு விற்பனையானது. வடமாநிலங்களில் அதிக மழையால் மஞ்சள் விளைச்சல் பாதிக்கப்பட்டு தரம் குறைந்த மஞ்சள் உற்பத்தியாவதால் வியாபாரிகளுக்கும் நிறுவனங்களுக்கும் தரமான மஞ்சள் அங்கு கிடைக்கவில்லை. குறிப்பாக மகாராஷ்டிரா, ஆந்திரா, தெலுங்கானா போன்ற மாநிலங்களில் தரம் குறைந்த மஞ்சளே அதிகம் கிடைப்பதால் வியாபாரிகள் ஈரோடு பகுதி மஞ்சளை அதிகம் வாங்க தொடங்கியுள்ளனர்.

    தமிழகத்தில், ஈரோடு, சேலம் பகுதி மஞ்சள் தரமாக உள்ளதால் படிப்படியாக விலை அதிகரித்து வருகிறது. இந்த மாத தொடக்கத்தில் 8,500 ரூபாயாக இருந்த ஒரு குவிண்டால் மஞ்சள் கடந்த வாரம் 10 ஆயிரம் ரூபாயை எட்டியது. கிட்டத்தட்ட 12 வருடங்களுக்கு பிறகு மஞ்சள் குவிண்டால் ரூ. 10 ஆயிரத்தை எட்டியது. கடந்த வெள்ளியன்று 10,500 ரூபாயாக உயர்ந்தது. இந்நிலையில் இன்று மேலும் 2 ஆயிரம் ரூபாய் உயர்ந்து, முதல் தர மஞ்சள் அதிகபட்சமாக 12,600 ரூபாய்க்கு விற்பனையானது.

    கடந்த 6 மாதங்களில் இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் மஞ்சளின் அளவு 25 சதவீதம் உயர்ந்துள்ளதாலும், வட மாநிலங்களில் பெய்த மழையினாலும் ஈரோடு சந்தையில் மஞ்சள் விலை உயர்ந்துள்ளதாக கூறும் வணிகர்கள், இன்னும் விலை உயரும் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் பலரும் மஞ்சளை இருப்பு வைத்துள்ளதாக தெரிவித்தனர்.

    மஞ்சள் ஓராண்டு பயிர் என்பதால் அடுத்த ஆண்டு உற்பத்தியை கணக்கிட்டு மஞ்சள் விலை நிர்ணயிக்கப்படுகிறது. மராட்டியத்தில் மஞ்சள் மொத்த சாகுபடி பரப்பு அடுத்த மாதம் தெரியவரும் என்றும், அப்போது விலையில் மாற்றம் ஏற்படலாம், அதுவரை இதே விலை நீடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் வியாபாரிகள் தெரிவித்தனர்.

    மஞ்சள் விலை 3 மாதங்களில் குவிண்டாலுக்கு சுமார் 5 ஆயிரம் ரூபாய் வரை உயர்ந்திருப்பது விவசாயிகளிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஈரோடு மஞ்சளுக்கு திடீர் கிராக்கி ஏற்பட்டுள்ளதால் வெளி மாநில வியாபாரிகள் ஈரோடு நோக்கி படையெடுக்க தொடங்கியுள்ளனர்.

    • சேலம் மாவட்டத்தில், விவசாயிகளால் பரவலாக தக்காளி சாகுபடி செய்யப்படுகிறது.
    • கடந்த ஆண்டு பெய்த மழை காரணமாக ஏரி, குளங்கள் உள்ளிட்ட நீர் நிலைகள், கிணறுகள் ஆகியவற்றில் நீர் அதிகமாக இருந்தது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில், விவசாயிகளால் பரவலாக தக்காளி சாகுபடி செய்யப்படுகிறது. குறிப்பாக, மேச்சேரி, கருமந்துறை மலை கிராமங்கள், வாழப்பாடி, தலைவாசல், மேட்டூர், கொளத்தூர், எடப்பாடி உள்பட பல இடங்களில் தக்காளி அதிகமாக பயிரிடப்படுகிறது.

    கடந்த ஆண்டு பெய்த மழை காரணமாக ஏரி, குளங்கள் உள்ளிட்ட நீர் நிலைகள், கிணறுகள் ஆகியவற்றில் நீர் அதிகமாக இருந்தது. இதனை பயன்படுத்தி, கோடை காலத்துக்கு முன்னர் பயிரிடப்பட்ட தக்காளி செடிகள், கடந்த சில மாதங்களாக அதிகளவில் விளைச்சல் கொடுத்து வந்தன.

    இதனால் சேலம் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக தக்காளி விலை கிலோ ரூ.20-க்கும் குறைவாகவே இருந்து வந்தது.

    இந்த நிலையில் கோடை வெப்பத்தின் தாக்கம் மற்றும் சாகுபடி செய்யப்பட்ட தக்காளி செடிகளின் ஆயுட்காலம் முடிவுக்கு வந்ததால், விளைச்சல் குறைய தொடங்கி, சந்தைக்கு தக்காளி வரத்து சரிய தொடங்கியது. இதனால் தக்காளி விலை உயர தொடங்கியுள்ளது.

    தற்போது உழவர் சந்தைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.34 முதல் ரூ.38 வரையிலும், தினசரி மார்க்கெட் மற்றும் காய்கறி கடைகளில் ரூ.40-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    இது குறித்து வேளாண்மை அதிகாரிகள் கூறியதாவது:-

    சேலம் மாநகரில் உள்ள உழவர் சந்தைகளில் நாளொன்றுக்கு சுமார் 30 டன் தக்காளியை மக்கள் வாங்கிச் செல்கின்றனர். தக்காளி தட்டுப்பாடு இல்லாமல் கிடைத்திட விவசாயிகளிடம் இருந்தும், மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் உழவர் உற்பத்தி யாளர் நிறுவனங்கள் மூலம் உழவர் சந்தைக்கு தக்காளி கொண்டு வரப்பட்டு, விற்பனை செய்யப்படுகிறது.

    தக்காளி விளைச்சல் அதிகம் உள்ள தருமபுரி மாவட்டம் அரூர் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து, உழவர் உற்பத்தி யாளர் நிறுவனங்கள் மூலம், தேசிய மின்னணு சந்தை மூலம், சேலம் மாவட்டத்துக்கு கடந்த 2 மாதங்களில் 900 டன் தக்காளி கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்பட்டது.

    தற்போது சேலம் மாவட்டத்தில் தக்காளி விளைச்சல் குறைந்துள்ளது. புதியதாக பயிரிடப் பட்டுள்ள தக்காளி செடிகளில் மகசூல் கிடைத்திட ஒரிரு வாரங்கள் ஆகும்.

    எனவே தக்காளி தேவையை பூர்த்தி செய்திட, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து உழவர் உற்பத்தி யாளர் நிறுவனங்கள் மூலம் தேசிய மின்னணு சந்தையை பயன்படுத்தி தக்காளி கொள்முதல் செய்திட திட்டமிட்டுள்ளோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • ஈரப்பதம் காரணமாக சேதமடைந்து, சந்தைகளுக்கு வெங்காய வரத்து குறைந்தது.
    • ஒரு கிலோ ரூ.75 முதல் ரூ.80, 90 ரூபாய் வரை விற்கப்படுகிறது.

    தருமபுரி,

    தருமபுரியை அடுத்த முத்து கவுண்டன் கொட்டாய் சவுளூர், செல்லியம்பட்டி, பாலக்கோடு, கம்பைநல்லூர், இருமத்தூர், சோகத்தூர், அதக்கபாடி, இண்டூர், கிருஷ்ணாபுரம், பாப்பாரப்பட்டி மற்றும் நல்லம்பள்ளி பகுதிகளில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கருக்கு மேல் சின்ன வெங்காயம் பயிரிடப்பட்டு, சென்னை, சேலம், ஈரோடு, கோயம்புத்தூர், மற்றும் பிற மாவட்டங்களில் உள்ள சந்தைகளுக்கு பொதுவாக ஏற்றுமதி செய்யப்படுகிறது.

    இந்த ஆண்டு, அதிகளவு மழை பெய்ததால், பல வயல்களில் பயிர்கள் பாதிக்கப்பட்டு, பயிர்கள் கருகின. மேலும் மழைக்குப் பின்பு தொடர்ந்து கடும் பனிப்பொழிவு இருந்து வருவதால் வயல்களில் வெங்காய பயிர்கள் கருகி வளர்ச்சி இன்றி அழிந்து வருகிறது. சேமித்து வைக்கப்பட்டிருந்த வெங்காயம் கூட ஈரப்பதம் காரணமாக சேதமடைந்து, சந்தைகளுக்கு வெங்காய வரத்து குறைந்தது.

    இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில்:-

    இரண்டு மாதங்களாகவே சின்னவெங்காயம் விலை அதிகரித்து வருகிறது. ஆனால், விளைச்சல் இழப்பு காரணமாக இந்த விலை உயர்வால் விவசாயிகளுக்கு எந்த பலனும் இல்லை. ஆறு மாதங்களாக தொடர் மழை பெய்து வந்தது. இதனால், விளைநிலங்களில் தண்ணீர் தேங்கி, சின்ன வெங்காயம் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது.மேலும், வெங்காயத்தை மழையில் இருந்து பாதுகாப்பது மிகவும் கடினம் என்பதால், சேமித்து வைக்கப்பட்டிருந்த வெங்காயமும் ஈரப்பதத்தால் அழுகி வருகிறது.

    மார்க்கெட்டுகளுக்கு கொண்டு வரப்படும் பெரும்பாலான வெங்காயத்தை, சில்லரை சந்தைகளில், ஒரு கிலோ ரூ.75 முதல் ரூ.80, 90 ரூபாய் வரை விற்கப்படுகிறது. ஆனால், ஏப்ரல் மாத முதல் அக்டோபர் மாதம் வரை 20 முதல் 30 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    இன்று உழவர் சந்தையில் கிலோ வெங்காயம் 75 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

    ×