search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    வெப்ப அலையால் முருங்கைக்காய் விளைச்சல் பாதியாக சரிவு
    X

    வெப்ப அலையால் முருங்கைக்காய் விளைச்சல் பாதியாக சரிவு

    • 7291 ஏக்கர் அந்த வகையில் நடப்பு ஆண்டில் 7,291 ஏக்கர் நிலப்பரப்பில் 9 ஆயிரம் விவசாயிகள் முருங்கை சாகுபடி செய்தனர்.
    • மகாத்மா காந்தி 100 நாள் வேலைத்திட்டத்தை பெரும்பாலான கூலித் தொழிலாளர்கள் விரும்புகிறார்கள்.

    கரூர்:

    தமிழகத்தில் முருங்கை சாகுபடியில் கரூர் மாவட்டம் புகழ்பெற்று விளங்குகிறது. இங்குள்ள பருவநிலை மற்றும் மண்ணின் தன்மை முருங்கைக்கு உகந்ததாக உள்ளது. இங்கு உற்பத்தி செய்யப்படும் முருங்கைக்காய் ருசியாகவும், சதை பிடிப்பு அதிகமாகவும் இருக்கும்.

    இந்த முருங்கைக்காய்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு மட்டுமல்லாமல் கேரளா, ஆந்திரா, கர்நாடகா போன்ற அண்டை மாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

    இங்கு அரவக்குறிச்சி, மூலனூர், சின்னதாராபுரம், பள்ளப்பட்டி, க. பரமத்தி ஆகிய பகுதிகளில் அதிகம் முருங்கை சாகுபடி செய்யப்படுகிறது. ஒரு வருடத்தில் கிட்டத்தட்ட 6 மாதங்கள் முருங்கைக்காய்கள் அறுவடை செய்ய இயலும் என்பதால் விவசாயிகளும் முருங்கை சாகுபடி செய்ய அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    7291 ஏக்கர் அந்த வகையில் நடப்பு ஆண்டில் 7,291 ஏக்கர் நிலப்பரப்பில் 9 ஆயிரம் விவசாயிகள் முருங்கை சாகுபடி செய்தனர். வறட்சியை தாங்கும் பயிராக கருதப்படும் முருங்கைக்காய் கூட கடந்த இரண்டு மாதங்களாக மழை பெய்யாததாலும், வரலாறு காணாத வெப்பத்தாலும் விளைச்சல் பாதியாக குறைந்துள்ளது. இது விவசாயிகளை கவலையடைய செய்துள்ளது.

    இதுபற்றி அரவக்குறிச்சி ஈசநத்தம் பகுதியைச் சேர்ந்த முருங்கை விவசாயி செல்வராஜ் கூறும்போது, நான் 2 ஏக்கர் நிலத்தில் முருங்கை பயிரிட்டேன். வழக்கமாக மார்ச் முதல் ஜூன் வரையிலும் அக்டோபர் முதல் நவம்பர் வரையிலும் நல்ல மகசூல் கிடைக்கும். ஆனால் இந்த முறை மழை இல்லாத காரணத்தினால் விளைச்சல் 70 சதவீதம் சரிந்து விட்டது. ஒரு சில மரங்கள் ஓரளவு மகசூல் கொடுத்தாலும் தரம் குறைந்து விட்டதால் விலை கிடைக்கவில்லை என்றார்.

    கரூர் லிங்கம நாயக்கன்பட்டியை சேர்ந்த விவசாயி பாலசுப்ரமணியன் கூறும்போது, அமராவதி மற்றும் குடகனாறு தண்ணீரை நம்பி நாங்கள் விவசாயம் செய்து வருகிறோம். ஆனால் இந்த இரண்டு ஆறுகளும் இந்த ஆண்டு வறண்டு விட்டன.

    எனவே நிலத்தடி நீரை பயன்படுத்தி பயிர்களுக்கு நீர் பாசனம் செய்து முயற்சி செய்து பார்த்தோம். ஆனால் மரங்களை பாதுகாக்க முடியவில்லை. இந்த முறை எல்லா மரங்களும் பலன் தரவில்லை. பொதுவாக நல்ல மகசூல் காலத்தில் ஒரு ஏக்கருக்கு ஒன்றரை டன் முருங்கை கிடைக்கும். ஆனால் தற்போது கோடை வெப்பத்தால் 60 சதவீத இழப்பை சந்தித்துள்ளோம்.

    ஒரு பருவத்தில் ஒரு மரத்திலிருந்து 300 முதல் 400 வரை முருங்கைக்காய் கிடைக்கும். சுவை மற்றும் சதைப்பற்று அடிப்படையில் விலை கிடைக்கும். ஆனால் இப்போது சதைப் பற்று சுருங்கி விட்டது. இதனால் விலையும் குறைந்து விட்டது. மகாத்மா காந்தி 100 நாள் வேலைத்திட்டத்தை பெரும்பாலான கூலித் தொழிலாளர்கள் விரும்புகிறார்கள்.

    இதனால் வேலை ஆட்களுக்கும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அதே போன்று மயில் மற்றும் பூச்சிகளின் தாக்கமும் அதிகம் உள்ளது. வெப்ப காலங்களைத் தவிர விவசாயிகளுக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்துவதற்கு இவையும் ஒரு காரணமாக உள்ளது என்றார்.

    அரவக்குறிச்சி மொத்த முருங்கை விற்பனை வியாபாரி கே.ஆர்.கே.குப்புசாமி கூறும்போது, இந்த ஆண்டு விளைச்சல் குறைந்ததால் சந்தைக்கு முருங்கைக்காய் வரத்து மிகவும் மோசமாக உள்ளது. அரவக்குறிச்சியில் இருந்து கேரளா, சத்தீஸ்கர், ஐதராபாத், பெங்களூரு போன்ற இடங்களுக்கு இந்த சீசனில் மார்ச் முதல் ஜூன் வரை நாங்கள் முருங்கைக்காய் கொண்டு செல்வோம். இருப்பினும் குறைந்த அளவு கிடைப்பதால் எங்களால் வணிகத்தை வழக்கம்போல் நடத்த முடியவில்லை.

    பொதுவாக சந்தைகளுக்கு ஒரு நாள் 300 டன் முருங்கை வரும். ஆனால் இந்த ஆண்டு 150 முதல் 200 டன்னாக குறைந்துள்ளது என்றார்.

    வேளாண் வணிகம் மற்றும் சந்தைப்படுத்துதல் துறையின் அதிகாரி ஆர்.கண்ணன் கூறும்போது, பருவநிலை மாற்றத்தால் இந்த ஆண்டு விவசாயிகளுக்கு 70 சதவீதம் வரை மகசூல் இழப்பு ஏற்ப ட்டுள்ளது. அரவக்குறிச்சி பகுதியில் முருங்கை பவுடர் தயாரிக்கும் தொழிற்சாலையை அமைக்க வேண்டும் என விவசாயிகள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர். இப்போது ரூ. 4 கோடி செலவில் முருங்கை பவுடர் தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.

    கிட்டத்தட்ட இந்த பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளது. மகசூல் அதிகமாகும்போது பச்சை முருங்கைக்காய்க்கு குறைந்த விலை கிடைப்பதால், மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களாக உற்பத்தி செய்வதற்கான விருப்பங்களை ஆராய விவசாயிகளை ஊக்குவித்து வருகின்றோம் என்றார்.

    Next Story
    ×