search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "gaja cyclone"

    கஜா புயல் தாக்குதலில் முன் எச்சரிக்கை நடவடிக்கையால் உயிர் சேதம் பெருமளவில் தடுக்கப்பட்டதாக சட்டசபையில் முதலமைச்ச் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். #TNAssembly #GajaCyclone #EdappadiPalaniswami
    சென்னை:

    சட்டசபையில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கஜா புயல் தாக்குவதற்கு முன்பாக அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து பேசியதாவது:-

    கஜா புயலால் பாதிக்கப்பட்ட போது எந்த அதிகாரியும் அந்தப் பகுதியிலே வரவில்லை என்ற ஒரு குற்றச்சாட்டை ஒரு உறுப்பினர் இங்கே பதிவு செய்துள்ளார். அது தவறானது. வருவாய்த்துறை அமைச்சர் சொன்னதைப்போல, கஜா புயல் வருவதற்கு முன்பாகவே, இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்த கருத்தின் அடிப்படையிலே, என் தலைமையிலே இருமுறை கூட்டம் கூட்டப்பட்டு, அந்தக் கூட்டத்திலே மூத்த அமைச்சர்கள், தலைமைச் செயலாளர், மூத்த இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகள் எல்லாம் கலந்து கொண்டு, புயல் ஏற்பட்டால் நாம் என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை எல்லாம் ஆலோசித்து, அந்த ஆலோசனையின்படி அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கும், புயலால் பாதிக்கப்படக்கூடிய அந்த மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு எல்லாம் அறிவுறுத்தப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது.

    அதுமட்டுமல்லாமல், வருவாய்த் துறை அமைச்சர் சொன்னதைப் போல, புயல் ஏற்படக்கூடிய அந்த மாவட்டங்களிலே, அந்த மாவட்ட அமைச்சர்கள் அங்கேயே தங்கியிருந்து, அந்தப் புயல் வருகின்ற போது, மக்கள் எந்தவிதத்திலும் பாதிக்கக்கூடாது அதற்கு முன் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.

    அவர்களுக்கு துணையாக மூத்த இந்திய ஆட்சிப் பணியாளர்களும் முன் கூட்டியே அனுப்பி வைக்கப்பட்டனர். முன்கூட்டியே அனுப்பி வைக்கப்பட்ட காரணத்தினாலே, அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்த காரணத்தினாலே, அனைத்து மின் இணைப்புகளும் புயல் அடிப்பதற்கு முன்பாக 6 மணிக்கு  மணிக்கே நிறுத்தப்பட்டு விட்டன.

    போக்குவரத்து இயக்கம் எல்லாம் நிறுத்தப்பட்டது. அதுமட்டுமல்லாமல், இந்த புயல் கடுமையாக பாதிக்கக்கூடும் என்று இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்த கருத்தின் அடிப்படையிலே, குடிசையில் வாழ்ந்த மக்கள், தாழ்வான பகுதியிலே வாழ்ந்த மக்களை எல்லாம், அதிகாரிகள் தான் அழைத்து வந்து பாதுகாப்பான முகாம்களில் தங்க வைத்திருக்கிறார்கள்.

    கோப்புப்படம்

    கிட்டத்தட்ட 81, 948 நபர்கள் 471 முகாம்களிலே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தங்க வைத்ததன் காரணமாக உயிர் சேதம் பெருமளவு தடுக்கப்பட்டு இருக்கிறது. ஆகவே, அதிகாரிகள் எல்லாம் வந்த காரணத்தினாலே தான் இந்த நடவடிக்கைகள் எல்லாம் எடுக்கப்பட்டு இருக்கிறது.

    ஆகவே, கஜா புயல் ஏற்பட்ட போது யாரும் வரவில்லை என்ற உறுப்பினரின் குற்றச்சாட்டு தவறு. வருவதற்கு முன்பாகவே, அங்கே இருக்கின்ற மாவட்ட அமைச்சர்கள், மூத்த இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகள், வருவாய் துறை அதிகாரிகள், மின்சாரத் துறை அதிகாரிகள், வேளாண் துறை அதிகாரிகள் இன்னும் பல்வேறு துறை சேர்ந்த அதிகாரிகள் எல்லாம் அங்கே அனுப்பி வைக்கப்பட்டு, புயல் ஏற்படுவதற்கு முன்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு, மக்களை காப்பாற்ற வேண்டுமென்ற அடிப்படையிலே, அரசு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு இருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார். #TNAssembly #GajaCyclone #EdappadiPalaniswami
    பாரபட்சமின்றி புயல் நிவாரணம் வழங்க வலியுறுத்தி திருத்துறைப்பூண்டி நகராட்சி அலுவலகம் முன்பு அரசியல் கட்சியினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் கஜா புயலின் தாக்கத்தால் பொதுமக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர். கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு தொகை வழங்கக்கோரி பொதுமக்கள் பல்வேறு இடங்களில் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் பல்வேறு அரசியல் கட்சியின் சார்பில் திருத்துறைப்பூண்டி நகராட்சி அலுவலகம் முன்பு தொடர் காத்திருப்பு போராட்டம் நேற்று நடந்தது. போராட்டத்திற்கு தி.மு.க. நகர செயலாளர் பாண்டியன் தலைமை தாங்கினார். மாவட்ட வக்கீல் அணி தலைவர் தர்மராஜன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் சந்திரராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், காங்கிரஸ், தமிழ் மாநில காங்கிரஸ், ம.தி.மு.க., மனித நேய மக்கள் கட்சி, பா.ம.க. உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

    அரசு ஓட்டு வீடு, கூரை வீடு, மாடி வீடு என பாரபட்சமின்றி அனைவருக்கும் நிவாரணத்தொகை வழங்க வேண்டும். அனைவருக்கும் அரசு வழங்கும் 27 நிவாரண பொருட்கள் வழங்க வேண்டும். நெற்பயிரை இழந்த விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் வழங்க வேண்டும். உயிரிழந்த மாடுகளுக்கு ரூ.30 ஆயிரம் வழங்க வேண்டும். ஆடுகளுக்கு ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும். ஒரு தென்னை மரத்திற்கு ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
    திருவாரூரில் இடைத்தேர்தல் நடத்த முடியுமா அல்லது முடியாதா என்பது குறித்து ஆய்வுசெய்து அறிக்கை அளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. #ECI #ThiruvarurByElection #CycloneGaja #TNElectionCommision
    புதுடெல்லி:

    திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலை நிறுத்துவது தொடர்பாக, இந்திய தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் ஆணையர்களை இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேசியச் செயலாளர் டி.ராஜா சந்தித்து பேசினார்.

    அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழக தலைமை தேர்தல் அதிகாரியை கலந்து பின்னர் முடிவு செய்வதாக தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் ஆணையர்கள் தெரிவித்தனர் என்றார்.

    மேலும், கஜா புயல் பாதிப்பு சீரமைப்பு பணிகள் நிலை பற்றி தமிழக தலைமை தேர்தல் அதிகாரி மற்றும் திருவாரூர் மாவட்ட ஆட்சியரிடம் கலந்தாலோசித்த பின்னர் முடிவெடுக்க வேண்டும் என தாம் வலியுறுத்தியதாகவும் அவர் தெரிவித்தார். 



    இதற்கிடையே, கஜா புயலால் பாதிக்கப்பட்ட திருவாரூரில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ளலாம் என தேர்தல் ஆணையம் இன்று அனுமதி அளித்துள்ளது.

    இந்நிலையில் திருவாரூரில் தேர்தலை நடத்த முடியுமா? முடியாதா? என்பது தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கையை தாக்கல் செய்ய தலைமை தேர்தல் அதிகாரிக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

    இதுதொடர்பாக, திருவாரூர் தொகுதியில் தேர்தல் நடத்துவதற்கான சூழ்நிலை எப்படி உள்ளது? என மாவட்ட தேர்தல் அதிகாரி விளக்கம் அளிக்க வேண்டும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ உத்தரவிட்டு உள்ளார். #ECI  #ThiruvarurByElection #CycloneGaja #TNElectionCommision
    திருவாரூர் தொகுதியில் கஜா புயல் நிவாரண பணிகளை தொடரலாம் என தமிழக அரசுக்கு இந்திய தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது. #ThiruvarurByElection #GajaCyclone #ECI #TNGovernment
    புதுடெல்லி:

    திருவாரூர் தொகுதிக்கு ஜனவரி 28-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் கடந்த சில தினங்களுக்கு முன் அறிவிப்பு வெளியிட்டது. இதையடுத்து, அதிமுக, திமுக, அமமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேலைகளை தொடங்கின.

    இந்நிலையில், தமிழக தலைமை செயலாளர் சார்பில் தலைமை தேர்தல் ஆணையத்துக்கு இன்று ஒரு கடிதம் அனுப்பப்பட்டது. அதில், திருவாரூரில் கஜா புயல் நிவாரண பணிகளை தொடருவதற்கு தமிழக அரசை அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.

    இதற்கு பதிலளித்துள்ள தலைமை தேர்தல் ஆணையம், திருவாருரில் நிவாரண பணிகளை தொடர தமிழக அரசுக்கு அனுமதி அளித்தது.

    நிவாரண பணிகளில் எந்த அரசியல் தொடர்பும் இருக்கக் கூடாது. தேர்தல் நன்னடத்தை விதிகள் முறையாக பின்பற்றப்பட வேண்டும். நிவாரண பொருட்கள் வழங்கும் பணியில் அரசியல் கட்சியினர் பங்கேற்கக் கூடாது எனவும் தெரிவித்துள்ளது. #ThiruvarurByElection #CycloneGaja #ECI #TNGovernment
    கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் விவசாய கடன்களை ரத்து செய்ய வேண்டும் என்று சட்டசபையில் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். #GajaCyclone #DMK #MKStalin #TNAssembly
    சென்னை:

    சட்டசபையில் இன்று கேள்விநேரம் முடிந்ததும் கஜா புயல் பாதிப்பு குறித்து சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் எடுத்துக் கொள்ளப்பட்டது. இதில் பல்வேறு கட்சிகள் சார்பில் எம்.எல்.ஏ.க்கள் பேசினார்கள். அதன்விவரம் வருமாறு:-

    துரை சந்திரசேகரன் (தி.மு.க.):-

    கஜா புயலினால் டெல்டா மாவட்டங்களும், சிவகங்கை, திண்டுக்கல் உள்ளிட்ட வேறு மாவட்டங்களும் பெருமளவில் பாதிக்கப்பட்டன. தமிழகத்துக்கே உணவு அளிக்கும் டெல்டா மாவட்ட விவசாயிகள் உணவுக்கு கையேந்தும் நிலை ஏற்பட்டது. அனைத்து பயிர்களும் சேதம் அடைந்தன.

    தென்னை, வாழை, கரும்பு அடியோடு நாசமாயின. ஏராளமான உயிரிழப்பும் ஏற்பட்டது. ஆனால் பிரதமர் இதைநேரில் வந்து பார்க்கவில்லை. இறந்தவர்களுக்கு அனுதாபமும் தெரிவிக்கவில்லை.

    இதை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் சுட்டிக்காட்டியுள்ளார். அவர் புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களை 3 நாட்கள் நேரில் சென்று பார்த்தார். 300 லாரிகளில் பொருட்களும் அனுப்பி வைக்க ஏற்பாடு செய்தார். தமிழக அரசு புயல் நிவாரண உதவியை அறிவித்துள்ளது. மத்திய அரசிடம் கேட்கப்பட்ட நிதியில் மிகக்குறைந்த அளவே கொடுக்க அவர்கள் முன் வந்திருக்கிறார்கள்.

    இன்றைய நிலையில் அங்குள்ள விவசாயிகள் 30 ஆண்டுகள் பின்னோக்கி சென்றுவிட்டார்கள். பெரும்பாலான தென்னை மரங்கள் விழுந்துவிட்டதால் அதைநம்பி இருந்த விவசாயிகள் ஒரேநாளில் ஏழையாகி விட்டார்கள்.

    ஒரு தென்னை மரத்துக்கு 600 ரூபாய் இழப்பீடு என்று அரசு அறிவித்துள்ளது. அவர்களுக்கு 8 வழிச் சாலைக்கு அறிவித்ததுபோல் தென்னை ஒன்றுக்கு ரூ.50 ஆயிரம் வழங்க அரசு முன்வர வேண்டும். பாதிக்கப்பட்ட அனைத்து பகுதிகளையும் முதல்-அமைச்சர் நேரடியாக பார்வையிட வேண்டும். மத்திய அரசிடம் கூடுதல் நிதியை வற்புறுத்தி பெற வேண்டும். விவசாயிகளுக்கு கூடுதல் இழப்பீடு வழங்க வேண்டும்.

    எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின்:-

    கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் விவசாயிகள் பெற்றுள்ள வங்கி கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என உறுப்பினர்கள் கோரிக்கை வைத்தனர். அதே கோரிக்கையை நானும் வலியுறுத்துகிறேன். விவசாயிகள் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மட்டுமின்றி கூட்டுறவு வங்கிகளிலும் வாங்கிய கடன்களை இந்த அரசு தள்ளுபடி செய்ய முன்வர வேண்டும்.

    அதுமட்டுமல்ல, மாணவர்கள் வங்கிகளில் வாங்கிய கல்விக் கடன்கள், பெண்கள், மகளிர் சுய உதவிக் குழுவினர் வாங்கிய வங்கிக்கடன்கள், மீனவர்கள் படகுகளுக்காக வாங்கிய வங்கிக்கடன்களையும் இந்த அரசு முழுமையாக ரத்து செய்ய முன்வர வேண்டும். முதல்-அமைச்சர் ரத்து செய்வார் என எதிர் பார்க்கிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதேபோல் காங்கிரஸ் எம்.எல்.ஏ. கே.ஆர்.ராமசாமி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் எம்.எல்.ஏ. அபுபக்கர், மனிதநேய ஜனநாயக கட்சி எம்.எல்.ஏ. தமிமுன் அன்சாரி ஆகியோரும் இதே கோரிக்கையை வலியுறுத்தி விரிவாக பேசினார்கள்.

    கே.ஆர்.ராமசாமி பேசும் போது, ‘‘சேலம்-சென்னை 8 வழிச்சாலை அமைக்க ஒரு தென்னை மரத்துக்கு ரூ.40 ஆயிரம் தருவதாக கூறினார்கள். ஆனால் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சாய்ந்த தென்னை மரத்துக்கு ரூ.1400 தருவதாக கேள்விப்படுகிறேன். ஏன் இந்த பாகுபாடு. இதற்கு ஒரு நீதி அதற்கு ஒரு நீதியா? இரண்டுக்கும் உள்ள வித்தியாசத்தை அரசு விளக்க வேண்டும்’’ என்றார். #GajaCyclone #DMK #MKStalin #TNAssembly
    கஜா புயலின் போது பாதிக்கப்பட்ட மீனவர்களின் படகுகளுக்கான நிவாரண தொகை ரூ.1லட்சத்து 50 ஆயிரமாக உயர்த்தப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். #GajaCyclone
    சென்னை:

    சட்டசபையில் இன்று கஜாபுயல் பாதிப்பு குறித்து சிறப்பு கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அதற்கு பதில் அளித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:-

    கஜாபுயல் காரணமாக டெல்டா மாவட்டங்கள் உள்பட 12 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இதில் பயிர்களும் மரங்களும் விழுந்தன. வீடுகள் பெரும் சேதம் அடைந்தன. 78 ஆயிரத்து 584 ஹெக்டேரில் தென்னை மரங்கள் சாய்ந்துவிட்டன. 23 ஆயிரத்து 141 ஹெக்டேர் பரப்பளவில் தோட்டப்பயிர்கள் பாதிக்கப்பட்டன.

    20 ஆயிரத்து 357 ஹெக்டேர் பரப்பளவில் வேளாண் பயிர்கள் பாதிக்கப்பட்டன. 5 லட்சத்து 5 ஆயிரத்து 742 குடிசைகள் சேதம் அடைந்தன. லட்சக்கணக்கான மின்கம்பங்கள் சாய்ந்துவிட்டன. இவை அனைத்தையும் சீரமைத்து மக்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் பணியை தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் செய்து வருகிறது.

    கஜா புயல் பாதிப்பு பற்றி அறிந்ததும் உறவினர்கள் மூலம் நான் அந்த பகுதிகளை பார்வையிட சென்றேன். மழை மற்றும் வானிலை காரணமாக சில இடங்களுக்கு செல்ல முடியவில்லை என்றாலும் பாதிப்பின் தாக்கத்தை என்னால் அறிய முடிந்தது. அந்த மக்களுக்கான உதவிகளை உடனடியாக செய்வதற்காக அரசு சார்பில் ரூ.1000 கோடி ஒதுக்கப்பட்டது.

    மின் இணைப்புகள் கொடுக்கும் பணி இரவு பகலாக நடந்தது. நிவாரண பணிகளில் தற்போது 99 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளன. மின் இணைப்பு வழங்கும் பணியில் 90 சதவீத பணிகள் முடிவடைந்திருக்கின்றன.

    பல்வேறு சூழ்நிலை காரணமாக இதில் தாமதம் ஏற்பட்டாலும் விரைவில் இந்த பணிகளை முடிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

    நிவாரண முகாமில் தங்கிய அனைவருக்கும் ரூ.5 ஆயிரம் வழங்கப்பட்டது. சரிந்த தென்னை மரங்களை அகற்றவும், விவசாயிகள் மறு சீரமைப்புக்காக சொட்டுநீர் பாசனம் உள்ளிட்ட அனைத்து உதவிகளும் அரசு மூலம் செய்யப்பட்டு வருகிறது. இதற்கு தேவையான பணம் ஒதுக்கப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன.

    11 லட்சத்து 66 ஆயிரம் பேர் இந்த புயலின் போது பாதிக்கப்பட்டனர். அவர்களுக்கு தகுந்த சிகிச்சை அளிக்கப்பட்டது. புயல் நிவாரணம் பாதிப்புக்கு தகுந்த நிதியை ஒதுக்க வேண்டும் என்று பிரதமரை நேரில் சந்தித்து கோரிக்கை வைத்தேன். மத்திய அரசின் குழுவும் உடனே வந்து கணக்கீடு செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டது. மத்திய அரசின் நிதி உதவியும் 5 ஆண்டுகளில் 3 லட்சம் வீடுகள் கட்டவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


    இந்த புயலின் போது பாதிக்கப்பட்ட மீனவர்களின் படகுகளுக்கான நிவாரணம் ரூ.85 ஆயிரத்தில் இருந்து ரூ.1லட்சத்து 50 ஆயிரமாக உயர்த்தப்படும்.

    இதுபோன்று விவசாயிகளுக்கும் தேவையான நிவாரண உதவியை வழங்க அரசு முழுமையாக நடவடிக்கை எடுக்கும்.

    கஜா புயலின் போது இரவு-பகலாக மீட்பு பணிக்கு உழைத்த அனைத்து பணியாளர்களுக்கும் அங்கேயே தங்கி இருந்து பணிகளை விரைவாக செய்ய உதவிய அமைச்சர்களுக்கும், நிவாரண நிதியாக நன்கொடை வழங்கியவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

    பாதிக்கப்பட்ட அனைவருக்கும் கணக்கீட்டின்படி உரிய நிவாரணம் வழங்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். #GajaCyclone #TNCM #EdappadiPalaniswami
    திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலை நடத்த தடையில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. #ThiruvarurByElection #MadrasHC
    சென்னை:

    திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலுக்கு தடைவிதிக்கக் கோரி சென்னை ஐகோர்ட்டில் வக்கீல் என்.ஜி. ஆர். பிரசாத் என்பவர் மனு தாக்கல் செய்தார்.

    அம்மனுவில் கூறியிருந்ததாவது:-

    திருவாரூர் எம்.எல்.ஏ.வாக இருந்த முன்னாள் முதல்அமைச்சர் கருணாநிதி மறைந்ததை தொடர்ந்து, அந்த தொகுதிக்கு வருகிற 28-ந் தேதி தேர்தல் நடத்த இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

    கஜா புயலினால், திருவாரூர் உள்ளிட்ட பல மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இங்கு நிவாரண பணிகள் நடந்து வருகிறது. புயலின் பாதிப்பில் இருந்து அப்பகுதி இன்னும் முழுமையாக மீளவில்லை.



    அதனால், திருவாரூர் தொகுதியில் நிவாரண பணிகளை தொடர்ந்து மேற்கொள்ள அரசுக்கு இந்திய தேர்தல் ஆணையம் அனுமதி வழங்குகிறது. இதனால் மிகப்பெரிய முறைகேடு நடைபெறும்.

    தேர்தலில் ஆளும் கட்சிக்கு சாதகமான சூழ்நிலை ஏற்படும். எனவே, திருவாரூர் தொகுதிக்கான தேர்தலை நடத்த தடை விதிக்கவேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

    இந்நிலையில் இன்று இவ்வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள்,  திருவாரூர் தொகுதியில் இடைத்தேர்தலை நடத்த தடையில்லை என்று கூறி, தேர்தல் அறிவிப்பாணைக்கு தடை கோரிய மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

    மேலும் திருவாரூர் தேர்தலுக்கு எதிரான மற்றொரு வழக்கில் தேர்தல் ஆணையம் பதிலளிக்க  உத்தரவிட்டு பிப். 7-தேதிக்கு  விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.  #ThiruvarurByElection #MadrasHC
    தஞ்சை அருகே இன்று கஜா புயல் நிவாரணம் கேட்டு கிராம மக்கள் திடீரென மறியல் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. #gajacyclone #relief

    தஞ்சாவூர்

    தஞ்சையை அடுத்துள்ள ரவுசாபட்டி கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இந்நிலையில் கடந்த நவம்பர் மாதம் வீசிய கஜா புயலால் இந்த கிராம மக்கள் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து புயல் நிவாரணம் வழங்க கோரி கிராம மக்கள், அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்து வந்தனர். மேலும் குண்டு குழியுமாக உள்ள மோசமான தார் சாலையை சீரமைத்து புதிய சாலை அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்தனர்.

    இந்த நிலையில் ரவுசாபட்டி கிராம மக்கள் 100-க்கும் மேற்பட்ட ஆண்களும், பெண்களும் தஞ்சை- புதுக்கோட்டை சாலையில் இன்று காலை 10 மணியளவில் திரண்டனர்.

    பின்னர் அவர்கள் திடீரென ரோட்டில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் அப்போது ரேசன், ஆதார் கார்டுகளை கைகளில் ஏந்தியப்படி அவர்கள் கோ‌ஷமிட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    மேலும் தஞ்சை- புதுக்கோட்டை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இருபுறமும் வாகனங்கள் செல்ல முடியாமல் அணிவகுத்து நின்றன.

    கிராம மக்களின் மறியல் போராட்டம் குறித்து தகவல் கிடைத்ததும் வல்லம் போலீஸ் டி.எஸ்.பி. ஜெயசந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அங்கு மறியல் செய்த கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அங்கு இருந்த பெண்கள் கூறும்போது, கஜா புயலால் பாதிக்கப்பட்ட எங்களுக்கு அரசு நிவாரண பொருட்கள் வழங்கப்படவில்லை.மேலும் தார் சாலையும் மோசமான நிலையில் உள்ளது. இதை உடனடியாக சீரமைக்க வேண்டும். இல்லாவிட்டால் ரேசன், ஆதார் கார்டுகளை கலெக்டரிடம் ஒப்படைத்து விட்டு அகதிகளாக வெளியேறுவோம் என்று ஆவேசத்துடன் தெரிவித்தனர்.

    இதை கேட்ட போலீசார் பொதுமக்களிடம் விரைவில் புயல் நிவாரணம் வழங்க அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர். இதை ஏற்று கிராம மக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    கிராம மக்களின் போராட்டத்தால் தஞ்சை- புதுக்கோட்டை சாலையில் சுமார் 1½ மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இந்த நிலையில் கஜா புயல் நிவாரணம் வழங்கக்கோரி தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு இன்று காத்திருப்பு போராட்டம் நடந்தது.

    இதில் இந்திய ஜனநாயக மாதர் சங்கம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் மற்றும் தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த கிராம மக்கள் கலந்து கொண்டனர். சுமார் 500-க்கும் மேற்பட்ட பெண்களும், ஆண்களும் கலெக்டர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. #gajacyclone #relief

    தமிழக சட்டசபையில் இருந்து தி.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தது ஏன்? என்று மு.க.ஸ்டாலின் பேட்டியளித்துள்ளார். #DMK #MKStalin #TNAssembly
    சென்னை:

    சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் பேசுவதற்கு அனுமதி கிடைக்காததால் கவர்னர் உரையை புறக்கணித்து வெளிநடப்பு செய்தார். அவருடன் தி.மு.க. எம்.எல்.ஏ.க்களும் வெளியேறினார்கள்.

    பின்னர் சட்டசபைக்கு வெளியே மு.க.ஸ்டாலின் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கஜா புயல் பேரிடர் 15.11.2018 நள்ளிரவில் நிகழ்ந்தது. மத்திய அரசிடமிருந்து பேரிடர் நிதியாக 15 ஆயிரம் கோடி ரூபாய் கேட்டும், கஜா பேரிடர் நிதியாக 46 நாட்கள் கழித்து - அதுவும் உயர்நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு மத்திய அரசு 1,146 கோடியே 12 லட்சம் ரூபாய் மட்டும் அளித்துள்ளது.

    பாதிக்கப்பட்ட காவிரி டெல்டா மக்களுக்கு இடைக்கால நிவாரணமாக கேட்ட 1500 கோடியைக் கூட பெற முடியாமல் அ.தி.மு.க. அரசின் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் ஆர்.வி.உதயகுமார் தோல்வி அடைந்துள்ளார்.

    இதைக் கேட்டு பெறுவதற்கான துணிச்சல் இல்லாமல் முதல்-அமைச்சர் நாற்காலியில் அமரத் தகுதி இல்லாதவராக எடப்பாடி பழனிசாமி ஆகி விட்டார். “அமைச்சரவையில் கொள்கை முடிவு எடுத்து ஸ்டெர்லைட் ஆலையை மூடத் தவறியதால் இன்றைக்கு தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் அ.தி.மு.க. அரசின் தொழில் துறை அமைச்சர் சம்பத் தோல்வி கண்டிருக்கிறார்.

    காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டு ஆறு மாதத்திற்கு மேலாகியும் அதற்கு நிரந்தர தலைவர் நியமிக்க மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க முடியாமல், தமிழக விவசாயிகளுக்கு பெரும் கேடு விளைவித்து, தமிழ்நாட்டை பாலைவனமாக்கும் கர்நாடக அரசின் மேகதாது அணை கட்டும் திட்டத்திற்கு இதுவரை தடை பெற முடியாமல்- மத்திய அரசு அனுமதியை திரும்பப் பெற வைக்க முடியாமலும் பொதுப்பணித்துறை அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தோல்வி அடைந்து இருக்கிறார்.

    புதிய எச்.ஐ.வி. தொற்றை தடுப்போம் என்று கூறிய அ.தி.மு.க. அரசு இன்றைக்கு அரசு மருத்துவமனையிலேயே எச்.ஐ.வி. ரத்தத்தை கர்ப்பிணிப் பெண்ணுக்கு செலுத்திய கொடுமை அரங்கேறி சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் படுதோல்வி அடைந்து இருக்கிறார்.

    கார்ப்பரேசன் ஆபிசா அல்லது கரெப்சன் ஆபிசா என்று உயர்நீதிமன்றமே கேள்வி கேட்கும் அளவிற்கு தாண்டவமாடும் ஊழலால் உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி தோல்வியடைந்து நிற்கிறார்.

    விளை நிலங்கள் வழியாக மின் கோபுரங்கள் அமைப்பதை எதிர்த்து போராடும் விவசாயிகளை அழைத்து பேசி தீர்வு காண முடியாமல் மின்துறை அமைச்சர் தங்கமணி தோல்வி அடைந்து விட்டார். துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு விசாரணையில் இருக்கிறது.


    இவர்களுக்கு எல்லாம் தலைமை வகிக்கும் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமியோ அரசு நிர்வாகத்தை நடத்த முடியாமல், மத்திய அரசிடம் மாநில உரிமையை பாதுகாத்திட முடியாமல், குட்கா ஊழல் வழக்கில் சி.பி.ஐ.யில் ஆஜரான அமைச்சர் விஜயபாஸ்கரைக் கூட நீக்க முடியாமல், சட்டம்-ஒழுங்கை அறவே காப்பாற்ற முடியாமல், டெண்டர் ஊழல் என்ற அளவில் முதல்-அமைச்சர் பொறுப்பிலேயே முற்றிலும் தோல்வி அடைந்து விட்டார். ஒரு நாட்டின் முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர், அமைச்சர்கள் என அனைவர் மீதும் பல்வேறு புகார்கள் எழுந்து நிற்கிறது.

    அரசியலமைப்புச் சட்டத்தின்பால் எடுக்கப்பட்ட பதவிப் பிரமாணத்துக்கு முரணான வகையில் செயல்பட்டு வருகிறது இந்த அமைச்சரவை. இவை அனைத்துக்கும் மேலாக தங்கள் கட்சித் தலைவரை இந்த நாட்டுக்கு முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதாவை காக்கத் தவறி இருக்கிறார்கள்.

    அவர் மரணத்தில் மர்மம் இருப்பதால் சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்று தான் அப்போதே சொன்னேன். இன்றைக்கு சட்ட அமைச்சராக இருக்கக் கூடிய சி.வி.சண்முகம், மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளான ராமமோகன்ராவ், தற்போதைய சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகிய இருவரையும் விசாரிக்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறார்.

    ஜெயலலிதாவையே காப்பாற்ற முடியாத இவர்கள், கோடிக்கணக்கான தமிழ்நாட்டு மக்களை எப்படிக் காப்பாற்ற போகிறார்கள்? இப்படி எல்லாத் துறைகளிலும் தோல்வி அடைந்து விட்ட அமைச்சர்களும், முதல்-அமைச்சரும் அடங்கிய அ.தி.மு.க. அரசின் ஆளுநர் உரையால் மக்களுக்கு எவ்வித நன்மையும் ஏற்படப் போவதில்லை.

    பதிலாக தமிழகத்தின் முன்னேற்றமும், வளர்ச்சியும் தான் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அதனால் அ.தி.மு.க. அரசின் இந்த ஆளுநர் உரையைக் கண்டித்து தி.மு.க. சார்பில் வெளிநடப்பு செய்துள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தி.மு.க. வெளிநடப்பு செய்ததை தொடர்ந்து காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் எம்.எல்.ஏ.வும் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்த னர்.

    வெளிநடப்பு செய்தது குறித்து சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் கே.ஆர்.ராமசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

    கஜா புயல் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. அங்குள்ள மக்கள் இன்னும் அதில் இருந்து மீண்டு வரவில்லை. புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசு உரிய வகையில் இழப்புத் தொகை வழங்கவில்லை. மத்திய அரசு மிகக் குறைந்த அளவுதான் நிதி வழங்கியுள்ளது. இது கடலில் பெருங்காயத்தை அளித்தது போன்றதாகும். விவசாயிகளுக்கான எந்த அறிவிப்பும் கவர்னர் உரையில் இல்லை. இவற்றை கண்டித்து நாங்கள் வெளிநடப்பு செய்திருக்கிறோம்.

    ஜெயலலதா மறைவுக்கு பிறகு அவரது மறைவு குறித்து சட்டத்துறை அமைச்சர் சந்தேகத்தை கிளப்பி இருக்கிறார். அவரது மரணத்தில் ஏதாவது காரணம் இருந்தால் ஆட்சி செய்த அ.தி.மு.க. அரசுதான் பொறுப்பு.

    இவ்வாறு அவர் கூறினார்.

    வெளிநடப்பு செய்த முஸ்லிம் லீக் எம்.எல்.ஏ. அபுபக்கர் நிருபர்களிடம் கூறுகையில், “கஜா புயலுக்கு மத்திய அரசு உரிய நிதி ஒதுக்கவில்லை. தமிழக அரசும் அதை பெற தகுந்த நடவடிக்கை எடுக்கவில்லை. ஸ்டெர்லைட் ஆலையை மூடுவது பற்றிய விவகாரத்தில் தமிழகஅரசு தகுந்த நடவடிக்கை எடுக்கவில்லை. இதைகண்டித்து வெளிநடப்பு செய்திருக்கிறோம் என்றார். #DMK #MKStalin #TNAssembly
    அறந்தாங்கியை அடுத்த சுப்பிரமணியபுரத்தில் கஜா புயல் நிவாரணம் வழங்காததை கண்டித்தும், நிவாரணம் வழங்ககோரியும், தி.மு.க. கூட்டணி கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    அறந்தாங்கி:

    அறந்தாங்கியை அடுத்த சுப்பிரமணியபுரத்தில் கஜா புயல் நிவாரணம் வழங்காததை கண்டித்தும், நிவாரணம் வழங்ககோரியும், தி.மு.க. கூட்டணி கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ஆலங்குடி எம்.எல்.ஏ., மெய்யநாதன் தலைமை தாங்கி பேசினார். இந்திய கம்யூனிஸ்டு மாவட்ட துணைச்செயலாளர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். 

    ஆர்ப்பாட்டத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணம் வழங்க வலியுறுத்தியும், பாரபட்சமாக நிவாரணம் வழங்கப்படுவதை கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் அறந்தாங்கி தெற்கு ஒன்றிய பொருளாளர் சண்முகநாதன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் சோமு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    கஜா புயல் நிவாரணமாக தமிழகத்துக்கு ஆயிரத்து 146 கோடி ரூபாய் நிதியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. #GajaCyclone
    புதுடெல்லி;

    கஜா புயல் காரணமாக தமிழகம் கடுமையாக பாதிக்கப்பட்டது. சுமார் 8 மாவட்டங்கள் கடும் பாதிப்பை சந்தித்தன. கஜா புயல் நிவாரணமாக தமிழக அரசு 15 ஆயிரம் கோடி ரூபாய் கேட்டு மத்திய அரசுக்கு அறிக்கை சமர்ப்பித்திருந்தது. இடைக்கால நிவாரணமாக தமிழக அரசு 1500 கோடி ரூபாய் கேட்டிருந்தது.

    இந்நிலையில், மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் தலைமையிலான உயர்நிலைக் கூட்டம் இன்று நடைபெற்றது. அதில், சமீபத்தில் கஜா புயல் நிவாரணத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட தமிழகத்துக்கு ஆயிரத்து 146 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளது மத்திய அரசு என தெரிவிக்கப்பட்டது.



    இந்த நிதி மத்திய பேரிடர் நிவாரண நிதி தொகுப்பில் இருந்து ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ஏற்கனவே, மத்திய அரசு சார்பில் தமிழக அரசுக்கு 353.70 கோடி ரூபாய் நிவாரணமாக நிதி ஒதுக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. #GajaCyclone
    முத்துப்பேட்டையில் பாரபட்சமாக நிவாரணம் வழங்குவதாக கூறி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் 5 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. #gajacyclone #relief

    முத்துப்பேட்டை:

    திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் சுமார் 7 ஆயிரம் குடும்ப அட்டைகள் உள்ளது. 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. புயல் பாதிப்பு ஏற்பட்டு 40 நாட்களை கடந்தும் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிக்கு நிவாரணம் வழங்கவில்லை. 

    இந்த நிலையில் 1-வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் மாடி வீடு உட்பட அனைவருக்கும் நிவாரணம் வழங்கப்பட்டது. 17,18-வது வார்டுகளுக்கு நிவாரண பொருட்கள் வழங்கிய போது மாடிவீடுகள், காலனி வீடுகளுக்கு பொருட்கள் கிடையாது என்று மக்களை வருவாய்த்துறையினர் திருப்பி அனுப்பினர்.

    இதனால் மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சாலை மறியல் மதியம் 12 மணிக்கு தொடங்கி மாலை 5மணிவரை நீடித்தது. தகவல் அறிந்து வந்த வருவாய்த்துறை மற்றும் முத்துப்பேட்டை இன்ஸ்பெக்டர் ராஜேஷ், சப்-இன்ஸ்பெக்டர் கணபதி ஆகியோர் இது குறித்து அதிகாரிகள் கவனத்திற்கு எடுத்து சென்று அனைவருக்கும் நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி கூறினர்.

    இதனையடுத்து போராட்டத்தை கைவிட்டு மக்கள் கலைந்து சென்றனர். இதனால் மன்னார்குடி- முத்துப்பேட்டை சாலையில் 5 மணிநேரம் போக்குவரத்து தடைப்பட்டது. #gajacyclone #relief 

    ×