search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Durai Vaiko"

    • தமிழ்நாடு அரசு தமிழ்நாட்டைப் பேரிடர் பாதித்த மாநிலமாக அறிவிக்க கோரி இருக்கிறது.
    • ம.தி.மு.க. முதன்மை செயலாளர் துரை வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறிஇருப்பதாவது:-

    ம.தி.மு.க. முதன்மை செயலாளர் துரை வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறிஇருப்பதாவது:-

    கடந்த 4-ந்தேதி வீசிய மிச்சாங் புயலால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. கடந்த 17, 18 ஆகிய தேதிகளில் தென் மாவட்டங்களான நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் பெய்த பெருமழையால் மீள முடியாத துயரத்தில் தென்மாவட்ட மக்கள் சிக்கி இருக்கிறார்கள். வாழ்வாதாரத்தை முற்றிலும் இழந்து தவிக்கிறார்கள்.

    எனவே தமிழ்நாடு அரசு தமிழ்நாட்டைப் பேரிடர் பாதித்த மாநிலமாக அறிவிக்க கோரி இருக்கிறது. ஆனால் மத்திய பா.ஜ.க. அரசு அதனை ஏற்காமல் போதிய நிதியும் ஒதுக்கீடு செய்யாமல் தமிழ்நாட்டை வஞ்சித்து வருகிறது. அவ்வாறு தமிழ்நாட்டை வஞ்சித்து வரும் ஒன்றிய பா.ஜ.க. அரசு கண்டித்து தமிழ்நாட்டை பேரிடர் பாதித்த மாநிலமாக அறிவிக்கக் கோரி இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை எனது தலைமையில் விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் காமராஜர் சிலை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அமலாக்கத்துறையின் தற்போதைய நடவடிக்கைகள் அதிர்ச்சி அளிக்கிறது.
    • ரூ.400 ஆக இருந்த சிலிண்டர் விலை 10 வருடத்தில் ரூ.1100 வரை உயர்ந்துள்ளது.

    திண்டுக்கல்:

    ம.தி.மு.க. முதன்மை செயலாளர் துரை வைகோ இன்று திண்டுக்கல் வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது,

    லஞ்சம், ஊழலை ஒழிக்கவே அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, சி.பி.ஐ. ஆகியவை உருவாக்கப்பட்டது. ஆனால் மத்திய பா.ஜ.க. அரசு எதிர்க்கட்சிகள் ஆளுகின்ற மாநிலங்களில் அமலாக்கத்துறையை பயன்படுத்தி பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடுகின்றது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு ராஜஸ்தானில் லஞ்சம் வாங்கிய அமலாக்கத்துறை அதிகாரியை போலீசார் கைது செய்தனர்.

    இந்த நிலையில் தற்போது திண்டுக்கல்லில் டாக்டரை மிரட்டி பணம் பறித்த அமலாக்கத்துறை அதிகாரியை தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்துள்ளனர். அமலாக்கத்துறையின் தற்போதைய நடவடிக்கைகள் அதிர்ச்சி அளிக்கும் வகையில் உள்ளது. பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை தமிழக அரசியல்வாதிகளுக்கு முதிர்ச்சியில்லை என கூறுகிறார். மத சாயம் பூசி தவறான தகவல்களை தெரிவிப்பதுதான் முதிர்ச்சியா என்பதை அவர் விளக்க வேண்டும்.

    மேலும் தற்போது கவர்னர்கள் பா.ஜனதா, ஆர்.எஸ்.எஸ்., விஸ்வ இந்து பர்ஷித் ஆகியவற்றின் கொள்கை பரப்பு செயலாளர்கள் போல் செயல்படுகின்றனர். மத்திய பிரதேச தேர்தலில் வெற்றிபெற ரூ.12 ஆயிரம் கோடி வரை பா.ஜனதாவினர் செலவழித்துள்ளனர். தமிழகத்தில் விலைவாசி உயர்ந்துள்ளதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

    இதற்கு அடிப்படை காரணமே மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலை உயர்வாகும். தேர்தல் நேரங்களில் மட்டும் டீசல், பெட்ரோல், சிலிண்டர்களின் விலையை குறைக்கின்றனர். ரூ.400 ஆக இருந்த சிலிண்டர் விலை 10 வருடத்தில் ரூ.1100 வரை உயர்ந்துள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது திண்டுக்கல் மாவட்ட செயலாளர் செல்வராகவன் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

    • மணிப்பூர் கலவரத்தில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழப்பு ஏற்பட்டது.
    • தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை ஒரு சராசரி அரசியல்வாதி தான். சில சமயங்களில் தரம் தாழ்ந்து நடந்து கொள்கிறார்.

    மதுரை:

    மருதுபாண்டியர்கள் 224-வது நினைவு நாளையொட்டி திருப்பத்தூர் செல்வதற்காக ம.தி.மு.க. முதன்மைச் செயலாளர் துரை வைகோ சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்தார். தொடர்ந்து மதுரை விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் நீட் தேர்வை பா.ஜ.க.வைத் தவிர அனைத்து கட்சிகளும் எதிர்க்கிறது. அதில் ம.தி.மு.க.வும் ஒன்று என்பதில் மாற்று கருத்து இல்லை. நீட் தேர்வுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக தி.மு.க. கையெழுத்து இயக்கம் துவங்கியுள்ளது. அதற்கு ம.தி.மு.க. சார்பாக முழு ஆதரவு உண்டு.

    தொடர்ந்து தி.மு.க.வுடன் சேர்ந்து அனைவரும் குரல் கொடுத்து வருகிறோம். ஒரு வருடத்திற்கு மேலாகவே சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு கவர்னர் கையெழுத்துக்காக காத்திருந்தது. பல போராட்டத்திற்கு பிறகு ஜனாதிபதிக்கு அனுப்பி உள்ளார். கவர்னரால்தான் இந்த ஒரு ஆண்டு கால தாமதம் ஏற்பட்டது. நீட் விலக்கு தமிழ்நாட்டிற்கு வரும் என்கிற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.

    மணிப்பூர் கலவரத்தில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழப்பு ஏற்பட்டது. அதுபோல நாட்டில் பல்வேறு பிரச்சினைகள் உள்ளது. இதற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் இருக்கும் என்கிற நம்பிக்கை உள்ளது.

    நடிகர் விஜய்யும், அவருடைய தந்தையும் உழைப்பால் உயர்ந்தவர்கள் என்பதில் சந்தேகம் இல்லை. அவரும் அரசியல் வருவதற்கு உரிமை உள்ளது. ஆனால் அதை முடிவெடுக்க வேண்டியது மக்கள்தான். அவர்கள் வரக்கூடாது என்று நினைப்பதற்கு வேறு யாருக்கும் உரிமை கிடையாது. அவர்களை எங்கு வைக்க வேண்டும் என்பதை மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.

    ஐந்து மாநில தேர்தலை ஒட்டி அந்தந்த மாநிலங்களில் வேலை நடைபெறுகிறது. சட்டமன்றத் தேர்தல் வேறு, பாராளுமன்ற தேர்தல் வேறு. பாராளுமன்றத் தேர்தலை பொருத்தவரை அனைத்து கட்சிகளும் ஒன்றுபட்டு செயல்படுகிறது. ஜாதிவாரி கணக்கெடுப்பை தி.மு.க., ம.தி.மு.க. என அனைவரும் வலியுறுத்துகிறோம்.

    பீகாரரைப் போல மாநில அரசு ஜாதிவாரி கணக்கெடுப்பை எடுக்கலாம் என்று கூறினாலும், தேசிய ஜனத்தொகையுடன் ஜாதி வாரி கணக்கெடுப்பு சேர்ந்து எடுக்கும்போது பல நன்மைகள் உள்ளது. மத்திய அரசு காலம் தாழ்த்தினால் தமிழக அரசு ஜாதி வாரி கணக்கு எடுப்பை நடத்தும்.

    தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை ஒரு சராசரி அரசியல்வாதி தான். சில சமயங்களில் தரம் தாழ்ந்து நடந்து கொள்கிறார். அவருக்காக சட்டப்படி நடவடிக்கை எடுப்பதற்கு ஒரு மாதிரி பேசுகிறார், மாற்றுக் கட்சி கைதுக்கு வேறு மாதிரி அறிக்கை கொடுக்கிறார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஒரு ஆண்டுக்கு மத்திய அரசு 2. 70 லட்சம் கோடி ரூபாயை 100 நாள் வேலை திட்டத்திற்கு ஒதுக்க வேண்டும்.
    • தமிழக அரசும் தொடர்ந்து கர்நாடகாவில் இருந்து காவிரி நீர் பங்கீடு பெறுவதற்கு சட்டரீதியாகவும் பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது.

    திருச்சி:

    திருச்சியில் இன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க வருகை தந்த துரை வைகோ நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    காவரி நீர் பங்கீட்டில் கர்நாடக அரசு உரிய நீரை வழங்காததால் தமிழகம் முழுவதும் சுமார் 3 லட்சம் ஏக்கர் குறுவை பயிர்கள் தண்ணீர் இல்லாமல் கருகி உள்ளது. எனவே மத்திய அரசு உரிய இழப்பீட்டை தமிழகத்திற்கு வழங்க வேண்டும்.

    அதேபோல் தமிழகத்தில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் என்பது நாளுக்கு நாள் பின்னோக்கி சென்று கொண்டிருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தை நம்பி 16 கோடி பெண்கள் பதிவு செய்து அதிலிருந்து கிடைக்கும் வருமானத்தை நம்பி வாழ்ந்து வருகின்றனர்.

    ஒரு ஆண்டுக்கு மத்திய அரசு 2. 70 லட்சம் கோடி ரூபாயை இந்த 100 நாள் வேலை திட்டத்திற்கு ஒதுக்க வேண்டும். ஆனால் ஒவ்வொரு ஆண்டும் இத்திட்டத்திற்கான நிதியை மத்திய அரசு தொடர்ந்து குறைத்துக் கொண்டே வருகிறது.

    கடந்த ஆண்டு 72 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்த மத்திய அரசு நடப்பாண்டில் 21 சதவீத விழுக்காடு குறைவாக 60 ஆயிரம் கோடி ரூபாய் மட்டுமே நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. தமிழக அரசும் தொடர்ந்து கர்நாடகாவில் இருந்து காவிரி நீர் பங்கீடு பெறுவதற்கு சட்டரீதியாகவும் பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது.

    இருப்பினும் அவர்கள் நம்முடைய முயற்சிக்கான எந்த பலனையும் வழங்காமல் இருக்கிறார்கள். எனவே உச்சநீதிமன்றம் மற்றும் மத்திய அரசு முன்வந்து கர்நாடக அரசு மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    அதேபோல் பயிரிடப்பட்டுள்ள குறுவை கருகிய நிலையில் இழப்பீடு தொகையாக ஏக்கருக்கு 13 ஆயிரம் ரூபாய் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் மாநில அரசு அதை 20,000 ரூபாயாக உயர்த்தி வழங்கிட வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைக்கிறோம்.

    வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க.வுடன் உரிய பேச்சுவார்த்தை நடத்தி கொடுக்கும் சீட்டின் அடிப்படையில் எப்போதும் பம்பரம் சின்னத்தில் தான் போட்டியிடுவோம். வருகின்ற பாராளுமன்றத் தேர்தலில் யார் ஆட்சிக்கு வரக்கூடாது என்பதில் நாங்கள் ஒரே கொள்கையில் இருக்கிறோம். மீண்டும் பா.ஜ.க. ஆட்சிக்கு வரக்கூடாது என்ற நோக்கத்திற்காக கூட்டணியில் உள்ள அனைவரும் இணைந்து பணியாற்றி வருகிறோம்.

    கடந்த 5 ஆண்டுகளில் அ.தி.மு.க சிறுபான்மை மக்களுக்கு எதிராக என்னென்ன செய்தார்கள் என்பது அவர்களுக்கு தெரியும். அதனால் தேர்தலில் யாருக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்பது சிறுபான்மை மக்களுக்கு நன்றாக தெரியும்.

    இவ்வாறு துரை வைகோ கூறினார்.

    • தமிழ்நாட்டில் இருந்து மதவாத சக்தியான பா.ஜ.க.வை வேரோடும், வேரடி மண்ணோடும் அகற்ற வேண்டும்.
    • பா.ஜ.க.வை விட்டு விலகுவது என்ற முடிவை அ.தி.மு.க. எடுத்தால் தமிழகத்தில் உள்ள அனைத்து திராவிட இயக்கங்களும் வரவேற்கும்.

    கோவில்பட்டி:

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் ம.தி.மு.க. முதன்மை செயலாளர் துரை வைகோ நிருபர்களிடம் கூறியதாவது:-

    என்னை பொறுத்தவரை திராவிட இயக்கங்கள் அனைத்தும் ஒன்று சேர்ந்து தமிழ்நாட்டில் இருந்து மதவாத சக்தியான பா.ஜ.க.வை வேரோடும், வேரடி மண்ணோடும் அகற்ற வேண்டும்.

    பா.ஜ.க.வை விட்டு விலகுவது என்ற முடிவை அ.தி.மு.க. எடுத்தால் தமிழகத்தில் உள்ள அனைத்து திராவிட இயக்கங்களும் வரவேற்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கடையநல்லூர் ஆலங்குளம் , கீழப்பாவூர் ஆகிய ஒன்றியப் பகுதிகளை வறட்சிப் பகுதியாக அறிவித்துள்ளதை வரவேற்கிறேன்.
    • சங்கரன்கோவில் ஒன்றியப் பகுதிகளை ஒட்டியுள்ள குருவிகுளம் ஒன்றியப் பகுதி எப்போதுமே வறட்சியான பகுதிதான்.

    ம.தி.மு.க. முதன்மை செயலாளர் துரை வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தென்காசி மாவட்டத்தின் பெரும் பகுதி வானம் பார்த்த பூமி ஆகும். இம்மாவட்டம் வறட்சி நிலவும் பகுதிகளாகத்தான் விளங்குகின்றன. அதனடிப்படையில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை கணக்கெடுத்து சங்கரன்கோவில், மேலநீலிதநல்லூர், கடையநல்லூர் ஆலங்குளம் , கீழப்பாவூர் ஆகிய ஒன்றியப் பகுதிகளை வறட்சிப் பகுதியாக அறிவித்துள்ளதை வரவேற்கிறேன்.

    அதே நேரத்தில் மேலநீலதநல்லூர் சங்கரன்கோவில் ஒன்றியப் பகுதிகளை ஒட்டியுள்ள குருவிகுளம் ஒன்றியப் பகுதி எப்போதுமே வறட்சியான பகுதிதான். நாட்டின் சராசரி நிலத்தடி நீர் மட்டத்தை விட நிலத்தடி நீர் மட்டம் ஆழமாக போய்விட்டதன் காரணமாக குருவிகுளம் ஒன்றியத்தில் ஆழ்துளை கிணறு தோண்ட தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் குருவிகுளம் ஒன்றியமும் வறட்சியான பகுதி தான் என்பதை உணரலாம். தவிர, வருவாய் நிர்வாக ஆணையரும் குருவிகுளம் ஒன்றியத்தை மிதமான வேளாண் வறட்சி மாவட்டமாக அறிவித்திட முன்மொழிவு அனுப்பி உள்ளார். அதனை ஏற்றும், உண்மை நிலையை கருத்திற் கொண்டும் குருவிகுளம் ஒன்றியத்தையும் மிதமான வேளாண் வறட்சி ஒன்றியமாக அறிவித்திட வேண்டும் என வருவாய் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரனிடம் அலைபேசியில் தொடர்பு கொண்டு வலியுறுத்தினேன்

    கடிதத்தில் தெரிவித்த அரசாணை நகலையும் அமைச்சரின் பார்வைக்கு இணைத்து உள்ளேன். எனது கருத்தில் உள்ள நியாயத்தை உணர்ந்த அமைச்சர் ஆவன செய்வதாக உறுதி அளித்தார்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • ம.தி.மு.க. கட்சியில் இருப்பவர்கள் எங்களுக்கும் காலம் வரும் என்ற நம்பிக்கையோடு இருக்கிறார்கள்.
    • வைகோவையும், அவரது மகன் துரை வைகோவையும் மன்னர்களாக சித்தரித்து சமூக வலைத்தளங்களில் உலாவவிட்டு உற்சாகமடைந்து வருகிறார்கள்.

    ம.தி.மு.க. அரசியலில் மிகப்பெரிய வெற்றியை ஈட்டாவிட்டாலும் அந்த கட்சியில் இருப்பவர்கள் எங்களுக்கும் காலம் வரும் என்ற நம்பிக்கையோடு இருக்கிறார்கள்.

    இப்போது வைகோவையும், அவரது மகன் துரை வைகோவையும் மன்னர்களாக சித்தரித்து சமூக வலைத்தளங்களில் உலாவவிட்டு உற்சாகமடைந்து வருகிறார்கள். பரவாயில்லை இப்படியாவது தங்கள் ஆசையை நிறைவேற்றி கொள்கிறார்களே... சபாஷ்

    • ம.தி.மு.க. சார்பில் நடைபெற்று வரும் கையெழுத்து இயக்கத்திற்கு தி.மு.க. உள்ளிட்ட எங்களின் கூட்டணி கட்சிகள் அனைவரும் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.
    • எங்களுக்குள் எந்தவொரு பிரச்சனையும் இல்லை.

    திருச்சி:

    தமிழ்நாடு கவர்னர் பொறுப்பில் இருந்து ஆர்.என்.ரவியை பதவி நீக்கம் செய்யுமாறு இந்திய குடியரசு தலைவரை கேட்டுக்கொள்ளும் வகையில், ம.தி.மு.க. சார்பில், திருச்சி சிந்தாமணி அண்ணாசிலை அருகில் இன்று கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.

    இதனை ம.தி.மு.க. முதன்மைச் செயலாளர் துரை வைகோ தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். அண்ணா சிலையிலிருந்து சிங்காரத்தோப்பு, பூம்புகார் விற்பனை நிலையம் வரை அவர் நடந்து சென்று பொதுமக்களிடையே கையெழுத்து வாங்கினார். பின்னர் துரை வைகோ நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழக கவர்னரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி ம.தி.மு.க. சார்பில் நடைபெற்று வரும் கையெழுத்து இயக்கத்திற்கு தி.மு.க. உள்ளிட்ட எங்களின் கூட்டணி கட்சிகள் அனைவரும் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். எங்களுக்குள் எந்தவொரு பிரச்சனையும் இல்லை.

    நாட்டில் நிலவும் விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், மணிப்பூர் கலவரம் இதற்கெல்லாம் பதில் கூறாமல், மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்துவதற்காக பா.ஜ.க.வினர் பொது சிவில் சட்டம் குறித்து இப்போது பேசுகிறார்கள்.

    நான் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவது குறித்தும், எந்த தொகுதியில் போட்டியிட வேண்டும் என்பது குறித்தும் எங்கள் கட்சி தலைமையும், கூட்டணி கட்சி தலைமையும் முடிவு செய்யும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் வியக்க தகுந்த வெற்றியை துரை வைகோ தென் மாவட்டங்களில் பெற்றுத் தந்தார்.
    • களத்தில் இறங்கி போராடும் கடைக்கோடி தொண்டர்களின் கண்ணீரில் கலந்தவர் துரை வைகோ என்று ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.ரமேஷ் கூறியுள்ளார்.

    கோவில்பட்டி:

    தூத்துக்குடி வடக்கு மாவட்ட ம.தி.மு.க. செயலாளர் ஆர்.எஸ். ரமேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கொரோனா காலத்தில் அடையாறு புற்றுநோய் சிகிச்சை மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களை ம.தி.மு.க. தலைமை கழக செயலாளர் துரை வைகோ தனது காரில் காலை - மாலை என 2 வேளைகளிலும் ஏற்றி இறக்கி விட்டார். மாமனிதன் வைகோ என்னும் வரலாற்று ஆவணப்படத்தை தந்து அனைத்து தரப்பு மக்களையும் அவர் கவனிக்க செய்தார்.

    தொடர்ந்து 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் வியக்க தகுந்த வெற்றியை தென் மாவட்டங்களில் பெற்றுத் தந்தார். களத்தில் இறங்கி போராடும் கடைக்கோடி தொண்டர்களின் கண்ணீரில் கலந்தவர் துரை வைகோ. ஆனால் அவருக்கு எதிராக கட்சியின் அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமி பேசி உள்ளார்.

    துரை வைகோவின் அளப்பரிய சேவையை அவர் பாராட்ட தவறி உள்ளார். தலைவர் வைகோவுக்கு பொன்விழா எடுக்க முனைந்த போது அதை எதிர்த்தார். ஒரு வார்டு தேர்தலில் கூட தமது கட்சியினர் வெற்றி பெற்றுவிடக் கூடாது என்பதில் அவர் கவனமாக இருந்தார்.

    கடந்த 30 வருடங்களாக தொழிற்சங்க பொதுச்செயலாளர் பதவியில் இருந்து கொண்டு, அதே தொழிற்சங்க சொத்தை கட்சி தொழிற்சங்கத்தில் சேர்க்க மனம் இல்லாத அவர் தற்போது துரை வைகோவை ஏளனமாக பேசுகிறார். அனைத்துக்கும் காலம் பதில் சொல்லும்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    • ம.தி.மு.க. தொடங்கிய 30 ஆண்டுகளில் அதன் தனித்தன்மையுடன் செயல்பட்டு வருகிறது.
    • உட்கட்சி தேர்தலிலும் துரைசாமி தனது பதவியை இழந்து வருகிறார்.

    சென்னை:

    ம.தி.மு.க.வுக்குள் நிலவி வரும் உட்கட்சி மோதலால் தொண்டர்கள் ஏமாந்தது போதும். இனி ம.தி.மு.க.வை தாய் கழகமான தி.மு.க.வுடன் இணைத்து விடுவது நல்லது என்று அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமி வைகோவுக்கு கடிதம் எழுதினார். இதனால் கட்சிக்குள் பரபரப்பு ஏற்பட்டது.

    இது தொடர்பாக ம.தி.மு.க. தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ பதில் அளித்தார். அதில் கட்சியில் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிப்பதாக குற்றம்சாட்டினார்.

    ஆனால் துரை வைகோ சின்ன பையன் அவருக்கெல்லாம் நான் பதில் அளிக்க முடியாது. வைகோ சொல்லட்டும் நான் பதில் அளிக்கிறேன் என்றார் துரைசாமி.

    இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக துரை வைகோ கூறியதாவது:-

    கடந்த சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட ம.தி.மு.க. முடிவு செய்தது. அப்போது அதை எதிர்த்தவர் திருப்பூர் துரைசாமி. இப்போது அவரே ம.தி.மு.க.வை தி.மு.க.வுடன் இணைக்க வேண்டும் சொல்கிறார். ஏதோ ஒரு உள்நோக்கத்துடன்தான் அவர் இவ்வாறு பேசுகிறார்.

    ம.தி.மு.க. தொடங்கிய 30 ஆண்டுகளில் அதன் தனித்தன்மையுடன் செயல்பட்டு வருகிறது. எதிர்காலத்திலும் அப்படியே செயல்படும்.

    துரைசாமி தொழிற்சங்க நிர்வாகி. மறுமலர்ச்சி தொழிலாளர் முன்னணி அமைப்பை தனது சுய லாபத்துக்காக பயன்படுத்துகிறார். கட்சியை தனது பாதுகாப்பு கேடயமாக வைத்துக்கொண்டார்.

    கட்சியை தி.மு.க.வுடன் இணைக்கும் பேச்சுக்கே இடமில்லை.

    2021 சட்டமன்ற தேர்தலில் கட்சி நலன்களுக்கு எதிராக செயல்பட்டதாக கட்சி தொண்டர்கள் புகார் கூறினார்கள். ஆனால் வைகோ தான் துரைசாமியின் அனுபவம், வயது ஆகியவற்றை கருத்தில் கொண்டு எதுவும் செய்யவில்லை.

    இப்போது உட்கட்சி தேர்தலிலும் துரைசாமி தனது பதவியை இழந்து வருகிறார்.

    இதற்கிடையே அவரது சொந்த ஊரான திருப்பூரிலேயே அவரது கட்சி விரோத செயல்களை கட்சி தொண்டர்கள் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள் என்றார்.

    பேரறிவாளன் விடுதலை என்பது காலம் கடத்தி வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு. அவரது விடுதலையை காங்கிரஸ் எதிர்ப்பது அந்த கட்சியின் தனிப்பட்ட கொள்கை என துரை வைகோ கூறியுள்ளார்.
    சென்னை:

    பிரதமர் மோடி சென்னை வரும்போதெல்லாம் ‘கோ பேக் மோடி’ கோஷம் டிரெண்டிங் ஆகும். ம.தி.மு.க. ஆவேசமாக இந்த குரலை கையில் எடுக்கும். ஆனால் இந்த முறை அமைதியாக இருந்தது பற்றி ம.தி.மு.க. தலைமை கழக செயலாளர் துரை வைகோவிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் கூறியதாவது:-

    கடந்த கால சூழ்நிலை வேறு. அப்போது நீட் எதிர்ப்பு தலைதூக்கி நின்றது. தமிழகத்துக்கு எதிராக பல பிரச்சினைகளும் தலைதூக்கி நின்றன.

    ஆனால் இந்த முறை தமிழக மக்கள் நலனுக்காக 31,500 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைக்க வந்தார். முழுக்க முழுக்க தமிழக மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை தொடங்கி வைக்க வந்தார். இந்த சூழ்நிலையில் ‘கோ பேக் மோடி’ என்பது நியாயமல்ல. முறையல்ல.

    அமித் ஷா, தமிழக மக்களிடம் மோடி மீது அன்பும், ஆதரவும் பெருகி இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். அதே தேர்தல் வரும் போதுதான் பார்க்க வேண்டும்.

    சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது, கொலைகள் அதிகரித்து விட்டது என்பது சரியல்ல. கடந்த ஆட்சியிலும் கொலைகள் நடந்தது. ஆனால் இப்போது குற்றவாளிகளை உடனே பிடிக்கிறார்கள். நடவடிக்கை எடுக்கிறார்கள்.

    பேரறிவாளன் விடுதலை என்பது காலம் கடத்தி வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு. அவரது விடுதலையை காங்கிரஸ் எதிர்ப்பது அந்த கட்சியின் தனிப்பட்ட கொள்கை.

    மோடி நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசியல் செய்ததாக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை கூறி இருக்கிறார். அவர் அரசியல் செய்யவில்லை. அண்ணாமலைதான் அவதூறு பரப்புகிறார். அவரது பெயரையே நான் அவதூறு அண்ணாமலை என்றுதான் கூறுவேன்.

    இவ்வாறு அவர்கூறினார்.

    முன்னதாக ம.தி.மு.க. அலுவலகத்தில் தலைமை கழக செயலாளருக்கான அறை திறப்பு விழா நடந்தது. கம்யூனிஸ்டு மூத்த தலைவர் நல்ல கண்ணு திறந்து வைத்தார். அவருக்கு துரைவைகோ ஆளுயரமாலை அணிவித்தார். அதே போல் துரைவைகோவுக்கு ஆளுயர மாலை அணிவித்து நல்லகண்ணு வாழ்த்தினார்.

    தமிழக அரசுக்கு இடையூறாக இருந்துவிடக்கூடாது என்பதற்காக நினைவேந்தல் நிகழ்ச்சியில் ம.தி.மு.க. பொதுச் செயலர் வைகோ கலந்து கொள்ளவில்லை.

    கோவில்பட்டி:

    கோவில்பட்டி அருகே உள்ள இளையரசனேந்தலில் ம.தி.மு.க. தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    வணிகர்கள் பொருட்களுக்கு தரும் தள்ளுபடி போல பெட்ரோல், டீசலுக்கான கலால் வரியை ஏற்றிவிட்டு தற்போது குறைந்துள்ளதாக மத்திய அரசு கூறுகிறது.

    அடிப்படை கலால் வரியில் மட்டும் தான் வருவாய் மாநில அரசுக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது. மற்ற கலால் வரி வருவாய் மத்திய அரசுக்கு தான் செல்கிறது. 50 சதவீதம் இருந்த அடிப்படை கலால் வரியை ஒன்றிய அரசு 4 சதவீதமாக குறைத்துள்ளது

    பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை புள்ளிவிவரங்களுடன் மக்களை குழப்புவதற்காக அவதூறு அண்ணாமலையாக கிளம்பியுள்ளார்.

    தமிழகத்தை வஞ்சிக்கும் வகையில் நீட் தேர்வு, தொழிற் கல்விக்கு நுழைவுத்தேர்வினை ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ளது.

    புதிய கல்விக் கொள்கையில் தமிழகத்தை வஞ்சிக்கும் அம்சங்கள் உள்ளது. தமிழகத்தை வஞ்சிக்கும் போக்கினை ஒன்றிய அரசு மாற்ற வேண்டும். இல்லையென்றால் மக்களை திரட்டி தமிழக பா.ஜ.க. தலைமையகமான கமலாலயம் முன்பு காந்தி வழியில் போராட்டம் நடத்துவோம்.

    பிரதமர் மோடி தமிழகத்துக்கு வரவுள்ள நிலையில் ஈழ நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்தக்கூடாது என்று ஒன்றிய அரசின் கீழ் உள்ள சில அமைப்புகள் காவல்துறைக்கு அழுத்தம் கொடுத்துள்ளனர்.

    இந்த நேரத்தில் தமிழக அரசுக்கு இடையூறாக இருந்துவிடக்கூடாது என்பதற்காக நினைவேந்தல் நிகழ்ச்சியில் ம.தி.மு.க. பொதுச் செயலர் வைகோ கலந்து கொள்ளவில்லை.

    தமிழ் ஈழம் குறித்த விழிப்புணர்வு பிரசாரத்தில் தொடர்ந்து ஈடுபடுவோம் என்பதில் மாற்றம் கிடையாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×